சிறகொடிந்த பறவைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 20, 2013
பார்வையிட்டோர்: 10,303 
 

“பேச்சுக்குப் பேச்சு வழக்காடாதே. இந்தச் சந்தர்ப்பத்தையும் கோட்டை விடாமல் படித்து உருப்படுவதைக் கவனி”

“எனக்குத் தெரியும். அதையே சொல்லிச் சொல்லி வெறுப்பேத்த வேண்டாம்.”

“தெண்டம் அழுவுவது நாந்தானே”.

“அது உங்கள் கடமை. என் திறமை இவ்வளவுதான். அதை மழுங்க அடித்து விட வேண்டாம்”.

“திறமை இருக்கு, திமிரும் இருக்கு. அதனால்தான் சொல்வது காதில் ஏறமாட்டேங்குது”. டைனிங் டேபிளில் முதலில் கடுவன் பூனையாக இருந்த இருவரையும் ருசி மிக்க உணவு மாற்றி விட்டது. அவரைக்காய்க் கூட்டை ஒரு கை பார்ப்பவள், விரலால் கிண்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தவர் கண்கலங்கி விட்டார். அதை ஓரக் கண்ணால் பார்த்தவள் அழுதே விட்டாள்.

“சரி, சரி பாசம் பொத்துக்கிட்டது போதும். எலியும் பூனையுமா இருக்கிறது, அப்புறம் அழுது வடியறது” வித்யாவின் அம்மா சகுந்தலா

இருவரும் மனம் விட்டுச் சிரிக்க மன அழுத்தம் குறைந்தது. “வித்யா! வேதாசலத்தைப் பார்க்கணும்டா. நீ என்ன செய்யப்போறே?” கோபால்

“நுழைவுத் தேர்வுக்கு குரூப் ஸ்டடி இருக்குப்பா”.

அகமும், முகமும் மலர டைனிங் டேபிளுக்கு விடை கொடுத்தார்கள்.

வேதாச்சலம், மனோதத்துவ டாக்டர். இருவரும் மேல் நிலைப் பள்ளி வரை இணை பிரியா நண்பர்கள். கோபால் கூத்தும் கும்மாளமுமாக மாணவப் பருவத்தை அனுபவித்ததால் மதிப்பெண் குறைந்து பி.காமில் சேர வேண்டியதாயிற்று. புத்திசாலியும், திறமையும் உள்ள மகனை டாக்டராக்கிப் பார்க்கும் அவரது பெற்றோரத் கனவு நனவாகவில்லை. கோபால் சார்ட்டட் அக்கௌண்டண்ட் ஆனார். சாகும் வரை அப்பாவின் குமுறலைக் கேட்க வேண்டியதாயிற்று.

காலம் இப்போது அதே நிழ்ச்சியை மகள் மூலம் திருப்பி விட்டு விட்டது. நண்பன் வேதாசலத்தைப் போல மகள் வர ஆசைப்பட்டார். நுழைவுத் தேர்வு மதிப்பெண்தான் கனவை நனவாக்க வேண்டும். முப்பது, நாற்பது லட்சம் கொடுத்து சீட் வாங்க முடியாது.

“என்னடா மைனர் செயின்லே டாலர் மாதிரிக் கோத்துப் போட்டிருக்கே.”

“இது லேட்டஸ்ட் மாடல் செல்போன்டா. செயின் 5 பவுன். அதாவது 40 கிராம் வெயிட். போன் 5 கிராம்தான். வாட்டர் ப்ரூஃப். கழட்ட வேண்டிய அவசியமே இல்ல. இந்த பட்டனை அமுக்கினா 4 மடங்கு பெரிசாயிடும். ரொம்ப லேட்டஸ்ட்டாம்”.

“தாலி செயின் போல இருக்கு. புதுசு எது வந்தாலும் கண்டுபிடிச்சு வாங்கிடறே”.

“ஒரு சூப்பர் டென்ஷன் கேஸ் வந்தது. அந்த பார்ட்டி கொடுத்த கிஃப்ட்பா இந்த செல்லும், செயினும்”.

“விவரமா சொல்லேன்”.

“வீனஸ் குரூப் ஆஃப் ஹாஸ்பிடல்ஸ் அதிபர் டாக்டர் துக்காராமின் மகன் மனோஜ். அப்பா அம்மா டார்ச்சர் தாங்காம போதை மருந்துக்கு ஆளாயிட்டான். அவனைத் திருத்த ட்ரீட்மென்ட் கொடுக்கிறேன். அவன்தான் இதைக் கொடுத்தான்”.

ஒரே பையனைத் தங்கள் காலத்திற்குப் பின் டாக்டராக்கி நிறுவனத்தை ஒப்படைக்கத் தணியாத வெறி துக்காராமுக்கும் அவர் மனைவிக்கும். பையனுக்கோ மருந்து டப்பாவின் வாடையே பிடிக்காமல் சரித்திரம் படிக்க ஆர்வம். முரண்பாடுகள் முற்றி ரகளைகள் ஏற்பட்டு பையன் கெட்ட சிநேகிதங்களால் போதை மருந்துக்கு அடிமை ஆகிவிட்டான். இப்போது சித்திரம் வேண்டாம், சுவர் இருந்தால் போதும் என்றாகி விட்டது. பணத்தைக் கொட்டி மனத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்..”

“அப்போ, நன்றாகப் படிச்சு நல்ல நிலைமைக்கு நம்ம குழந்தைகள் வரணும்னு எதிர்பார்ப்பது தப்பா?”.

“அவர்களுக்கு உடன்பாடு இருந்தால் சரி. இல்லாதவர்களை நிர்பந்தம் செய்தால் இப்படித்தான். வெறுப்பின் அளவு ஆளுக்கு ஆள் வேறுபடும். அளவுக்கு மேல் வெறுப்பவர்களை அமுக்கினால் மனோஜ் கதைதான். நானே ஒரு சிறகொடிந்த பறவைதான்.”

“என்னப்பா சொல்கிறாய்? இந்தப் பட்டணத்தில் நீதானப்பா லீடிங் மனோதத்துவ டாக்டர்”.

“வெளி உலகத்துக்கு அப்படி. என் அப்பா கட்டாயத்தால் டாக்டரானேன். ஆனால் என் ஆர்வம் இன்ஜினியர் ஆகவேண்டும் என்பதுதான். மனதிருப்தி இல்லாமல் கடமையாக இந்தச் தொழிலைச் செய்து கொண்டிருக்கிறேன். நான் விரும்பிய துறை கிடைத்திருந்தால் என் வளர்ச்சி இதைவிடப் பன்மடங்கு இருந்திருக்கலாம். பெரிய பிஸினெஸ் மாக்னெட்டாக வாலிப வயதில் கனவு கண்டேன். இப்பொழுது ஆத்ம திருப்தி இல்லாமல் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறேன்”.

வீட்டில் நுழைந்தவருக்கு ஓர் அதிர்ச்சி. மகளின் வலது கையில் பேண்டேஜ் இருக்கப் பதறிப் போனார். ஸ்கூட்டர் விபத்தில் அடிபட்டுக் கைக்கட்டுடன் தந்தையைக் கண்டவுடன் அழ ஆரம்பித்தாள்.

“நுழைவுத் தேர்வு எழுத முடியாமல் போச்சுப்பா. குரூப் ஸ்டடி முடிந்து வரும் போது வேன் மோதிடுச்சு. எழும்பு முறிவு இல்லை, ஆனால் ஒரு மாதம் கட்டை அவுக்கக் கூடாதாம்”.

“தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு விடு. நீ ஆசைப்பட்ட படியே லா படி. வியாதியஸ்தர்களையே பார்த்துப் பார்த்து உன் வாழ்நாள் கழிய வேண்டாம்”.

மகளைப் பாசத்துடன் அணைத்துக் கொண்டார்.

வித்யாவிற்குக் கை வலியும், கோபாலுக்கு மன வலியும் மாயமாய் மறைந்தன.

– ஜூலை 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *