சின்னாம்பும் சிறுவாணியும்…….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 6,643 
 
 

ஆறு மணி காலை. அடுப்பில் சுகமாய்த் தூங்கிய வெள்ளைப் பூனை விழித்து எழுந்து சோம்பல் முறித்து ‘மியாவ்!’ என்று கத்தி சாம்பல்; உதறி நடந்தது.

மண் சுவரோரம் கிழிந்த பாயில் வலது காலில் தொடைவரை பெரிய கட்டுடன் நாறுந்தோலுமாய் முகத்தில் தாடி மீசையுடன் படுத்திருந்த ஜெயபால் இம்சையில் முணகினான்.

அருகில் படுத்திருந்த சிறுவாணிக்கும் அப்போது விழிப்பு வர…துடித்து எழுந்தாள். சூரிய தரிசனம் ஓலைக்குடிசையின் பொத்தல் வழியே புள்ளியடிக்கத் திடுக்கிட்டாள்.

‘ஆத்தாடி! எவ்வளவு நேரம் தூங்கிப் புட்டோம் ! ‘ அவளே முணகி……பரபரப்புடன் எழுந்து கொண்டை போட்டாள்.

பத்து வயது மகன் இ;ன்னொரு கிழிந்த பாயில் இவள் பழஞ்சேலையைச்  சுற்றிக்கொண்டு சுருண்டு படுத்திருந்தான்.

”சின்னாம்பு ! சின்னாம்பு !” சிறுவாணி அவனை உலுக்கினாள்.

”ம்ம்….ம்ம்…” அவன் முணகி புரண்டு படுத்தானேயொழிய விழிக்கவில்லை.

”எந்திரிய்யா…!” மீண்டும் அசக்கினாள்.

”தூக்கமா இருக்கும்மா…..”

”என் கண்ணு இல்லே. ராசா இல்லே…” சிறுவாணி பையனைக் கொஞ்சி தாஜா செய்து தாடையைத் திருப்பினாள்.

”……………………………..”

”கண்ணத்தொற…. பொழுது விடிஞ்சு நேரமாகிடுச்சு வேலைக்குப் போகனும்.” அசைத்தாள்.

”நான் வர்ல..”

”அப்புடி சொல்லாத கண்ணு. நீயும் வந்து நாலு காசு சம்பதிச்சாதான் நம்ம வயிறு நனையும்.”

”எனக்கு சோறு வேணாம்.”

”என் அப்பா! கண்ணு! அப்படிச் சொல்லாதப்பா. அப்பா கால் ஒடைஞ்சி படுத்தப்படுக்கையாய்க் கெடக்காரில்லே.  அவருக்கு வைத்தியம் பார்க்கனுமில்லையா ? ” தூக்கினாள்.

அப்பா ! வார்த்தை காதில் விழுந்ததும்தான்  சின்னாம்புவிற்கு சூடு பட்டது போல் சுருக்கென்று விழிப்பு வந்தது. நிமிர்ந்து  அமர்ந்தான். அப்பா என்றால் அவனுக்கு அத்தனை உயிர், அன்பு, ஆசை.

ஒரு மாத காலமாய்க் கால் ஒடிந்து படுத்தப் படுக்கையாய்க் கிடப்பதில் அவனுக்கு ஏகப்பட்ட வருத்தம். அம்மாவுடன் சேர்ந்து தானும் கொஞ்சம் காசு சம்பாதித்தால்தான் அப்பாவைக் காப்பாற்ற முடியும் நினைப்பு. படித்துக் கொண்டிருந்தவனை அப்படிச் சொல்லித்தான் சிறுவாணியும் அவனை அழைத்துப் போகிறாள். அப்படி செய்யவில்லை என்றால் மாதக்கணக்கில் படுத்தவருக்கு வைத்தியம் பார்க்கவும் வயிறு நனைக்கவும் எப்படி முடியும் ?

”கிளம்பிட்டேன்ம்மா ! ”பாயைச் சுருட்டி மூலையில் வைத்து சுறுசுறுப்பாக எழுந்தான்.

சிறுவாணி முந்தானை முடிச்சை அவிழ்த்து அதில் இருந்த இருந்த 20ரூபாயை எடுத்து, ”ஓடிப்போய் அப்பாவுக்குப் பீடி, பொறை ரொட்டி, நமக்கு டீ வாங்கி வா.” சொல்லி அப்படியே தூக்குவாளியையும் கொடுத்தாள்.

அவன் வெளியே வந்து வாசல் பானையில் உள்ள நீரில் முகம் கழுவிக்கொண்டு தாறுமாறாக கலைந்திருந்த தலை, சட்டையுடன் சென்றான்.

ஜெயபால் வலியில் முணகினான்.

”என்னய்யா மூத்திரம், ஆய் போறீயா ? ”

”ம்ம்…”

அடுத்த விநாடி அவன் சூத்துக்கும் சிறுநீருக்கும் வாகாய் மண் சட்டிகள் வைத்தாள். மகன் வருவதற்குள் கணவன் காலைக்கடன் வேலையை முடித்து, கொட்டி… உடல் முழுவதையும் நனைந்த துணியால் துடைத்து சுத்தம் செய்தாள். இது அவளின் அன்றாட வேலை. சமயத்தில் தாய்க்கு மகனும் உதவுவான். இவர்கள் வேலைக்குச் செல்லுமுன் இந்த வேலையை முடித்துச் சென்றால்தான் நிம்மதி. இல்லையென்றால் இதே நினைப்பு, உறுத்தல் வேலை ஓடாது.

சின்னாம்பு……நுழைந்தான். அப்பா அருகில் தூக்கு வாளி, பொறை ரொட்டிகளை வைத்தான். சிறுவாணி தயாராய் குவளைகள் எடுத்து கழுவி அமர்ந்தாள். அப்படியே தன் கைத்தாங்கலில்  கணவனை மண் சுவரில் சாய்த்தாள்.

சின்னாம்பு குவளையில் டீ ஊற்றி பொறை ரொட்டி நனைத்து..”..தின்னுப்பா !” வாயில் ஊட்டினான். இரண்டு தின்றதுமே ஜெயபால் ஒதுக்கினான்.

”டீ ! ”

”வேணாம்ப்பா நான் சாப்பிட்டுக்கிறேன்.”

”குடிய்யா.”

”நான் குடிக்கிறேன். கிளம்பு.”

தாயும் மகனும் ஆளுக்கு இரண்டு பொரை ரொட்டிகளைச் சாப்பிட்டு  டீ குடித்தார்கள்.

சிறுவாணி அடுப்பு மேல் சட்டியிலிருந்த பழைய சோற்றை எடுத்து அது மூடி இருந்த தட்டில் இரண்டு பட்டைமிளகாயை வைத்து கணவன் அருகில் வைத்தாள்.

”ஒரு சீவன் படுக்கப்போய்…. எவ்வளவு கஷ்டம்!  ” ஜெயபால் கலங்கினான்.

”அட! விடுய்யா. வேணும்ன்னா விழுந்தே.? கால நேரம். நீ ஆயுசுக்கும் படுத்துக் கிடந்தாலும் நானும் என் புள்ளையும் காப்பாத்தறோம். ” சொன்னாள்.

ஜெயபால் கண்களைத் துடைத்தான்.

”நீன்னா பாரு. இன்னும் ஆறு மாசத்துல நீங்க எழுந்து சம்பாரிச்சுப் போடுவே.” சொல்லி எழுந்தாள்.

”ஆமாம்ப்பா….” சின்னாம்பும் தகப்பன் கண்களைத் துடைத்தாள்.

தாயும் மகனும்  வெளியே வந்து வேகமாய் நடந்தார்கள்.

அது பத்தடுக்குக் கட்டிடம். முழுதும் சாரம் கட்டி உள்ளுக்கும் உச்சியிலும் வேலை நடந்து கொண்டிருந்தது. எதிரில் சிமெண்ட் கொட்டகை, சுற்றிலும் மணல், செங்கல் அடுக்குகள்,  கருங்கல் ஜல்லி வகை குவியல்கள்.

”இன்னா சிறுவாணி ! இன்னிக்கும் பையனா ?! ” வாசல்லேயே அம்பது வயசு மேஸ்திரி வழியை மறித்தார்.

”ஆமாண்ணே ! வயித்துப்பாடு.” இவள் குரல் கெஞ்சலாக வந்தது.

”எனக்குத் தெரியுது. உன் நிலை….பரிதாபப்படுறேன். அரசாங்கத்து ஆளுங்க சின்னப்புள்ளைங்களை வேலைக்கு வைக்கக்கூடாதுன்னு அலையுறாங்களே. பையனை உள்ளே விட்டுட்டு வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு நிக்க வேண்டியதாய் இருக்கு.” அவர் கஷ்டத்தைச் சொன்னார்.

”தயவு பண்ணுங்கண்ணே… !”

”சரி போ.” அவளை அனுப்பிய….மேஸ்திரி, ”பையா வா.” அழைத்தார்.

அருகில் சென்றான்.

”நீ வழக்கமா இந்த சந்துல யாருக்கும் தெரியாம கல்லுடை.”

”சரி சார்.” சின்னாம்பு .இரு கட்டிடங்களுக்கு இடையில் சென்றான். கட்டிடத்தின் மறைவில் குவியலுக்கருகில் கல்லுடைக்க அமர்ந்தான்.

சிறுவாணி பூசப்படாத கட்டிடத்திற்குள் நுழைந்து மாடிப் படி ஏறினாள். வேலை நடக்கும் கடைசி அடுக்கிற்குச் சென்றாள்.

கொஞ்ச நேரத்தில்… அடுத்த கல் குவியலுக்கு கல்லுடைக்க…வாயில் வெற்றிலை மணக்க குப்பாத்;தாள் வந்தாள். சிறு வயசு. அதே சாரியில் அடுத்த செங்கல் அடுக்கில் குப்பன் இருந்தான். அவன் கற்களைப் பத்துப் பத்தாக அடுக்கி கட்டாயம் போட்டு தலையில் சுமந்து உள்ளே கொண்டு சேர்க்கும் வேலை. அவனும் இவள் வயதுதான். நல்ல கட்டுடல். அவனும் அவளும் அவ்வப்போது காணாமல் போவார்கள். சிரித்துப் பேசுவார்கள். ஒன்றாக அமர்ந்து இவள் வெற்றிலையைப் போடுவார்கள். அவள் முந்தானையை உரிமையுடன் இழுத்து முடிச்சவிழ்த்து குப்பன் சர்வ சாதாரணமாக வெற்றிலைப் போடுவான்.

சின்னாம்புவிற்கு அதெல்லாம் புரியாது. சுத்தியலால் செங்கற்களை உடைத்த அவனுக்கு ஒரு மணி நேரத்திற்கெல்லாம் பசி வயிற்றைக் கிள்ளியது.

‘பத்தரை, பதினோரு மணி அளவில் வழக்கமாய் வரும் வடை, பூரி, டீ காணோமே!’ நினைத்தான்.

”சின்னா ! டீ, பூரி வந்துச்சா ? ” குப்பன் அங்கிருந்து குரல் கொடுத்தான்.

”இன்னும் இல்லேண்ணே ! ”

”போய் வாங்கி வர்றீயா ? ”

”மேஸ்திரி வைவார்ண்ணே !”

”வஞ்சா நான் பதில் சொல்றேன். நீ போறீயா ? அப்படியே குப்பத்தாளுக்கு வெத்திலை சீவலும் வேணும்.”

”வேணாம்ண்ணே!” இவன் சொல்லி முடிக்கவும் வழக்கமாய் எல்லோருக்கும் டீ, பூரி, வடை வினியோகம் செய்யும் பதினைந்து வயது மருதன் எல்லாவற்றையும் எடுத்து வருவதற்கும்; சரியாக இருந்தது.

அவன் நேராக குப்பாயிடம்தான் செல்வான். அங்குதான் குப்பன், சின்னாம்பு எல்லாரும் உட்கார்ந்து பெற்று இளைப்பாறுவார்கள்.

டீயும் பூரியும் தின்னும்போது சின்னாம்பு அன்னாந்து பார்த்தான். உச்சி சாரத்தில் தாய் தலையில் கலவை சட்டியுடன் நிற்பது தெரிந்தது.

”இந்த உயரத்திலிருந்துதானே அப்பா விழுந்திருப்பார் !”  நினைக்க….உடல் நடுங்கியது.

‘அம்மாவும் விழக்கூடாது !’ நினைத்து கலங்கி தலையைக் குனிந்து டீ, பூரியைத் தின்று விட்டு தன் இடத்திற்கு வந்து வேலையைத் தொடங்கினான். குப்பன் குப்பாயி இன்;னும் வேலையைத் தொடவில்லை. அவன் தொட…அவள் நெளிய….ஏதோ சரசசல்லாபத்தில் வெற்றிலைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். குப்பாயின் சிரிப்பு என்னவோ அசிங்கமாய் இவனுக்குப் பட்டது,

மதிய சாப்பாட்டிற்கு அம்மா வழக்கம்போல் தயிர் பட்டை வாங்கி வந்தாள். தாயும் மகனும் கீழ் தளத்தில் அமர்ந்து பசியாறினார்கள். வெளியில் வெயில் நன்றாக அடித்தாலும் காற்று ஜிலுஜிலுவென்று அடித்தது.

மாலை  மணி மூன்று. வேலை நேரத்தில் மேஸ்திரி வந்து இவனை அழைத்தார்.

”இந்தா! ஒரு பாக்கெட் பன் வாங்கிக்கோ. கொட்டாய்ல இருக்கிற சொம்பை எடுத்துக்கிட்டுப் போய் அஞ்சு ரூவாய்க்கு டீ வாங்கி கொட்டாய்க்கு வா. இது உனக்கும் எனக்கும்தான் ! ” சொல்லி ஐம்பது ரூபாய்ப் பணத்தைக் கொடுத்தார்.

மேஸ்திரிக்கு நல்ல மனசு. நினைத்துக் கொண்டால் இப்படி டீ பன் வாங்கிக் கொடுப்பார். அவருக்கு இவன் மேல் ரொம்ப அனுதாபம்.

”உன் அப்பன் நல்லா வேலை செய்யிறவன். என் கண் முன்னாலேயே விழுந்தான்.!” வருத்தப்படுவார்.

”நீ படிக்கனும்ன்டா புள்ள. நேரம் காலம்.” தலை கவிழ்வார்.

சின்னாம்பு பணத்தைப் பெற்றுக்கொண்டு கதவு ஒருக்களித்து திறந்திருந்த சிமெண்ட் கொட்டகையில் சொம்பை எடுத்துக் கொண்டு சென்றான்.

திரும்பி வரும்போது கட்டிட இடைவெளியில் கார் நின்றது.

பேண்ட் சட்டைப் போட்ட யாரோ இருவரிடம் மேஸ்திரி கைகட்டி பேசிக் கொண்டிருந்தார்.

இவன் டீ பன் பாகெட்டுடன் அருகில் சென்று நின்றான்.

”குழந்தைப் புள்ளைங்களை வேலைக்கு வைக்கலே சொன்னே. இவன் யாரு ? ” ஒருத்தர் மேஸ்திரியைப் பார்த்து அதிகாரமாகக் கேட்டார்.

”அவன்… அவன்…..” அவர் ஏதோ சொல்ல வாயெடுத்தார்.

”எந்த சால்சாப்பும் வேணாம். பையா ! அதை அப்படியே வைச்சிட்டு ஜீப்ல ஏறு.” இன்னொருத்தர் அதட்டினார்.

வந்தவர்கள் யாரென்று தெரிய….சின்னாம்பு மலங்க மலங்க விழித்தான்.

”இதுதான் கடைசி தடவை. இனி ஒருதரம் குழந்தைத் தொழிலாளர்களை இங்கே பார்த்தா கண்டிப்பா நடவடிக்கை எடுப்பேன்.!” என்று மேஸ்திரியை எச்சரித்தார் ஒருத்தர்.

”டேய் பையா ! இனி எங்கேயும் வேலை செய்யக்கூடாது. படிக்கத்தான் போகனும். வேற எங்காவது இப்படிப் பார்த்தேன்…..ஜீப்ல ஏத்திக்கிட்டுப் போய் ஜெயில் போட்டுடுவேன் சரியா ?”  இன்னொருத்தர் எச்சரித்து…… இருவரும் ஜீப்பில் ஏறிச் சென்றார்கள்.

மேஸ்திரி அவனைப் பரிதாபமாகப் பார்த்தார்.

சின்னாம்புக்கு  அப்பாவை நினைக்க….. அழுகை வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *