சிவா தனது மனைவி கலாவின் சின்னம்மா தேவராணியை அன்று பினனேரம் சென்று பார்ப்பதாக முடிவு கட்டிய விடயம் அவனது நண்பன் ஒருத்தனின் எதிர்பாராத வருகையால் தடைபட்டுக் கொண்டிருக்கிறது.
வந்திருந்த நண்பனுக்குத் தேனீர் கொண்டு வந்த கலாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைச் சிவா அவதானித்தபோது தர்மசங்கடமாகவிருக்கிறது.கலா,இலங்கைக்கு விடுதலைக்கு வரத்திட்டமிட்ட உடனேயே இந்தத் தடவையாவது தனது சின்னம்மாவைப் போய்ப் பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையைத் தனது கணவனிடம் மிகவும் அழுத்தமாகச் சொல்லி விட்டாள்.
சிவா தனது குடும்பத்துடன் நீண்ட நாளைக்குப் பின் லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்திருக்கிறான். தனது இளவயதில் சின்னம்மா தன்னை அன்புடன் பார்த்துக் கொண்டதை,கலா பல தடவைகள் அவனுக்குச் சொல்லியிருக்கிறாள். தங்கள் தகப்பன் லண்டனுக்கு வந்த காலத்தில் தங்களுடன் வாழ்ந்த தனது சின்னம்மா கலாவின் இளவயது ஞாபகங்களுடன் இணைந்திருப்பது சிவாவுக்குத் தெரியும்.
கலாவின் தாய் ஒரு ஆசிரியை, அப்போது தங்களைத் தங்கள் சின்னம்மா தனது குழந்தைகள் மாதிரிப் பராமரித்த விடயத்தைக் கலா சிவாவுக்குச் சொல்லும்போது அவள் கண்களின் நீர் கட்டும்.
கலா,இலங்கையின் போர் காலத்தில் பிறந்து வளர்ந்தவள். சாதாரண வாழ்க்கைமுறை தெரியாத அசாதாரண வாழக்கையுடன் வளர்ந்த தமிழ்க் குழந்தைகளில் ஒருத்தி.
இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை ஒட்டு மொத்தமாக வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் ஊசலாடிக்கொண்டிருந்த கால கட்டமது.போருக்காகப் பல இளவயதுத் தமிழ்க்; குழந்தைகளின் எதிர்காலம் சூறையாடப்பட்ட கொடிய நேரமது. உலகம் புரியாத வயதில், எதிரியுடன் போராட துப்பாக்கி தூக்கி இறப்பதை விட அன்னிய நாட்டில் கடினவேலை செய்து பிழைக்க ஓடிவந்தவர்கள் பலர்.
அப்படி வெளியில் தங்கள் பெண்பிளை;ளைகளை அனுப்ப விருப்பமற்ற அல்லது அனுப்ப வசதியற்ற பல பெற்றோர் தங்கள் இளம் மகள்களை எப்படியும் திருமணம் கொடுத்து,அவர்கள் போர்முனைக்கு இழுத்துச் செல்லப்படாமல்; காப்பாற்றப் பார்த்தார்கள். கலாவின் குடும்பம் அவர்களின் தந்தை வழிச் சொந்தம் வெளிநாட்டில் இருந்ததால் வெளியில் சென்ற முயன்று கொண்டிருந்தார்கள்.ஆனால் கலாவின் தாயின் குடும்பத்தில் வெளிநாட்டில் அப்போது யாரும் இருக்கவில்லை.
அதனால் கலாவின் சின்னம்மா, தேவராணிக்குப் பதினெட்டு வயதாக இருக்கும்போது அவளுக்குத் திருமணம் நடந்ததாம். தேவராணியின் மேற்படிப்பு படிக்க வேண்டும், டாக்டராக வரவேண்டும் என்ற ஆசை தவிடு பொடியானது.
இலங்கை அரசாங்கம் ஒரு பக்கம், விடுதலைப் புலிகள் இன்னொரு பக்கம்,’இயக்கப்’ பிரச்சினைகளைக் காரணம்காட்டி தமிழ் இளைஞர்களை வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள்.
தேவராணியின் கணவர்,அவர்களுக்குத் தூரத்து உறவினரான மாதவன் என்ற இருபத்தி ஐந்து ஆசிரியர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இயக்கத்துடன் தொடர்பிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பாடசாலையிலிருந்து வீடுதிரும்பும்போது கொலை செய்யப் பட்டார்.அப்போது தேவராணிக்குப் பத்தொன்பது வயது. வயிற்றில் மூன்று மாதக்குழந்தை. கண்மூடித்தியப்பற்குள்,ஒரு தமிழ் உயிர் புலிகளின் குண்டடிபட்டுத் தெருவில் சுருண்டு விழுந்தது. தேவராணி விதவையாக்கப்பட்டாள்.
அதன் பின் தேவராணி தனது தமயன்,தமக்கையின் உதவியில் வாழ்ந்ததாகவும் அவளின் மகனுக்குப் பதினெட்டு வயதாக இருக்கும்போது வெளி நாட்டில் வாழும் ஒரு மாமாவின் உதவியுடன் அவன் சென்று விட்டதாகவும்,சின்னம்மா தனியாக வாழ்வதாகவும் கலா அவனுக்குச் சொல்லியிருக்கிறாள்.
சிவாவுக்கு இந்தக் கதையெல்லாம் அவன் மனைவி சொல்லக் காரணம் என்னவென்றால்,அவனும் கலாவும் உறவினர்களல்லர். ஒருத்தரின் குடும்பத்தினரை மற்றக் குடும்பத்திற்குத் தெரியாது.அவனின் குடும்பம் லண்டனிலிருக்கிறது.அவளின் குடும்பம் ஸ்கொட்லாந்தில்; இருக்கிறது.அத்துடன் அவர்கள்; இலங்கையின் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள்.
கலா ஸ்காட்லாந்திலிருந்து லண்டனுக்குப் படிக்கவந்தவள்.சிவாவை லண்டனில் அவளுடன் படிக்கும் சினேகிதியின் பிறந்த தின விழாவில் சந்தித்த தொடர்பால் காதல் பிறந்தது. வளர்ந்தது. அவர்களின் பெற்றோர்களான இரு வீட்டாரும் இதை எதிர்பார்த்தார்களா என்பதை அவர்கள் பெரிதாக ஆய்வு செய்து கொண்டிருக்கவில்லை.
தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம் என்ற தங்கள் விருப்பத்தை இருவீட்டாருக்கும் அறிவித்தார்கள்.’எந்த ஊர்?’;,(என்ன சமயம் என அறிந்து கொள்ள உதவும் கேள்வியது.) ‘ஊரில் எந்தப் பகுதி?'(சாதியைத் தெரிந்து கொள்வதற்கான கேள்வி அது) என்ற கேள்விகள் கலா வீட்டாரிடமிருந்து வந்தபோது,’அவன் இலங்கைப் பூர்வீகத்தைக் கொண்ட தமிழ்ப் பையன்’என்று கலா தனது தாய் தகப்பனுக்குச் சொன்னாள்.
ஏனென்றால் ‘ நாங்கள் பார்க்கும் மாம்பிள்ளையை நீ செய்தால் சந்தோசப் படுவோம். அப்படியில்லை என்றால்,எப்படியும் எங்கள் மொழி பேசும் பையனைப் பார்’ என்று தாய் தகப்பன் அவளிடம் சாடையாக வற்புறுத்திச் சொல்லி வைத்திருந்தார்கள். அவள் ஒரு கறுப்பனையோ,வெள்ளையனையோ காதலித்திருந்தால் அவர்களால் அதைத் தாங்க முடியாது என்றும் வெளிப்படையாகச் சொல்லியிருந்தார்கள்.
அவனின் குடும்பம் அவனிடம்’ நீ சந்தோசமாகவிருந்தால் அதுபோதும்.அதற்கேற்றாற்போல் ஒரு துணையைப் பார்’; என்று சொல்லி விட்டார்கள்.அவனின் தகப்பன் பகுத்தறிவுவாதி,மகனுக்குத் தன் எதிர்காலத்தைக் கொண்டு நடத்தும் அறிவைச் சொல்லிக் கொடுத்திருந்தார்.
லண்டனில் அவர்களின் திருமணம் நடந்ததால் அவர்களுடைய ஒட்டு மொத்தச் சொந்தங்களும்; திருமணத்திற்கு வரமுடியவில்லை; இருவரினதும் குடும்பங்களும் பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் மாதிரி,இலங்கை கனடா, ஐரோப்பா லண்டன் என்று பல நாடுகளில் சிதறி வாழ்கிறார்கள்.
அவர்களுக்குத் திருமணமான காலத்தில் இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தது.அதன் பின் சிவா தனது மேல்படிப்பு காரணமாக சில வருடங்கள் பெரிய பிரயாணங்களைத் தவிர்த்தான்.அதன்பின் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தனா.
இப்போது இலங்கை வந்தபோது, கலா யாழ்ப்பாணத்திலுளடள தனது உறவினர்களைப் பார்க்கப் போவது அவளுக்கு மிக முக்கியமான விடயமாகவிருந்தது. இருவரும் இளவயதில் இலங்கையை விட்டுப் போனவர்கள். ஆனால் அவர்களின் குடும்பங்கள் இலங்கையின் பல இடங்களிலும் இருக்கிறார்கள்.
சிவா, இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரில் பிறந்து வளர்ந்தவன். சிவா சிறு வயதில் தனது உறவினர்களைப் பார்க்க யாழ்ப்பாணம் சென்றிருக்கிறான். ஆனாலும் யாழ்ப்பாணம் அவனுக்கு அவ்வளவு பரிச்சயமில்லை.
இப்போது அவர்கள் யாழ்ப்பாணத்தில் கலாவின் தகப்பனின் சொந்தக் காரர் வீட்டில் தங்கியிருக்கிறார்கள்.லண்டனிலுள்ள சிவாவின் லண்டன் சினேகிதனும் விடுமுறையில் யாழ்ப்பாணம் வந்து நிற்கிறான். இன்று சிவாவைப் பார்க்கவந்தான். பேசிக் கொண்டிருந்ததால் சின்னம்மா வீட்டுக்குப் பின்னேரம் போகவேண்டியது தடைப்பட்டது.
குறிப்பிட்ட நேரத்திற்கு அவன் கலாவின் சின்னம்மாவைப் பார்க்க முடியாததால்,கலாவின் முகத்தில் கோபம் படர்ந்து விரிந்திருந்தது. கலா எதையும் சரியான நேரத்திற்குச் செய்யும் பெண்.வெளிநாட்டில்; வாழ்வதால் வரும் பல நல்ல பழக்க வழக்கங்களில் அதுவும் ஒன்று. ஓரு இடத்திற்குச் சொன்ன நேரத்திற்குப் போகாவிட்டால் அது அவர்களை அழைத்தவர்களை அவமானம் செய்வது என்று கருத்தாகும்.
‘கலா டார்லிங் ஐ யம் சாரி, உனது சின்னம்மாவுக்கு நாங்கள் ஏன் குறிப்பிட்ட நேரத்திற்கு வரமுடியவில்லை என்று சொன்னால் புரிந்து கொண்வார் இல்லையா?’ சிவா குற்ற உணர்வுடன் முணுமுணுத்தான்.
‘உங்களுக்கு எனது சின்னம்மாவைத் தெரியாது’ அவள் பட்டென்று சொன்னாள்.
‘ ஆமாம் இதுவரையும் உனது சின்னம்மாவை நான் காணவில்லை என்று உனக்குத் தெரியும்தானே’ அவனுக்கு இப்போது கோபம் வரத் தொடங்கியது.அவன் வேண்டுமென்றே நேரத்தைத் தவறவிடவில்லை என்று அவளுக்குத் தெரியும்,ஆனாலும் அவனிடம் அவள் கோபப் படுவது நியாயமாகப் படவில்லை.
கலாவுடன் தர்க்கம் செய்யாமல் தனது பார்வையை அவர்கள் சென்ற வழி நெடுகவிருந்த வானம் பார்த்த பனை, தென்னை மரங்களிலும்.கொத்தாகத் தொங்கும் மலர்க் கொடிகளிலும் தவழவிட்டான்.
இலங்கையில் போர் முடிந்து பல ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனாலும் இடிந்த வீடுகளும்,மதில்களும் போரின் வடுக்களைத் தாண்டி ஆங்காங்கே தென்பட்டன.
யாழ்ப்பாண நகரத்தில்; தங்கி நிற்கும்போது முடிந்தவரை நடந்து சென்றுதான் கலாவின் உறவினர்களைப் பார்ப்பேன் என்று அவன் சொல்லியிருந்தான்.யாழ் நகரின் இயற்கை. செயற்கை அழகை அவசரமான வாகன ஓட்டத்தில் தவறவிட அவன் தயாராகவில்லை.அவனின் சிறுவயதில் யாரோ ஒரு சொந்தக்காரரின் திருமணத்திற்கு யாழ்ப்பாணம் வந்தது ஞாபகமிருக்கிறது. அப்போது,யாழ்ப்பாணத்தின் மரங்கள,; பூக்கள்,செடிகொடிகள் அவனைக் கவர்ந்து விட்டன.
இலங்கையின் பெரிய நகரான கொழும்பு நகரின் ஆரவாரம்,அவசரம், இடைவிடாத சத்தங்கள் என்பன யாழ் நகரிற் கிடையாது பெரும்பாலான குடியிருப்புக்களில் அமைதி நிலவும்.
அழகிய மாலைநேர இளம் தென்றல் பண்ணைக் கடற்கரைதாண்டி வந்து அவர்களின் கன்னங்களில் முத்தமிட்டுச் சென்றது. அவ்வப்போது சில வாகனங்கள் அவர்களைக் கடந்து சென்றன.
கலா அவனுடன் பேசாமல் விறுவிறுவென்று நடந்து கொண்டிருந்தாள் அவளின் கோபம் அவனுக்கு அளவுக்கு மீறியதாகவிருந்தது. அவளின் மௌனம் எரிச்சலையுண்டாக்கியது.
‘வட் இஸ் த மட்டர் கலா? நான் வேண்டுமென்றே நேரம் கடத்திமாதிரி கோபப் படுகிறாய’அவன் அவளைக் கோபத்துடன் கேட்டான்.
‘நாங்கள் போன தடவை வந்தபோது சின்னம்மாவைப் பார்க்க முடியவில்லை என்பதால் அவர் பட்ட துக்கம் எனக்குத் தெரியும்’ கலா தனக்குள் பேசுவதுமாதிரி சொல்லிக் கொண்டாள்.
‘கலா போனதடவை எங்களால் யாழ்ப்பாணம் வரமுடியவில்லையே’ அவனுக்குக் கலாவைப் புரியவில்லை.
‘உங்களுக்குச் சின்னம்மாவைத் தெரியாது’ அவள் எரிந்து விழுந்தாள்.
சிவா தனது மனைவியின் சின்னம்மாவை நேரில் பார்த்தது கிடையாது. பழைய படங்களில் கண்டிருக்கிறான். அந்தப் படங்களில் இளமையும் மிகவும் அழகானதுமான ஒரு இளம் பெண்ணின் சோகம் கவிழ்ந்தமுகம் அவனைத் துன்பப் படுத்தியது.தேவராணி பத்தொன்பது வயதில் விதவையாகியவள்.அதன்பின்னர் தனது மகனுக்காக உழைத்து வாழ்ந்தவள்.குடும்பத்திலுள்ள பெரும்பாலனவர்கள் தங்கள் உயிரைப்பாதுகாக்க வெளிநாடுகளுக்குச் சென்றபோது’அவருடன் வாழ்ந்த வீட்டை’ விட்டு விலகமாட்டேன் என்ற பிடிவாதத்துடன் அந்தப் பழைய வீட்டில் தனிமையாக இன்னும் வாழ்பவள்.
அவளின் வாழ்க்கையின் முதுமை எட்டிப் பார்க்கிறது. வெளிநாட்டிலிருக்கும் மகன் எவ்வளவோ கெஞ்சியும் ‘அவருடன் வாழ்ந்த’ வீட்டை விட்ட அகலமாட்டேன் என்று பிடிவாதமாகவிருப்பவள்.இப்படியான விடயங்களைத்தான் கலா தனது சின்னம்மா பற்றிச் சொல்லியிருந்தாள். அதற்குமேலாக அவனுக்கு எதுவும் தெரியாது. ‘எனக்குத் தெரியாத விடயங்களை நீ சொல்லியிருக்கலாமே’ அவன் முணுமுணுத்தான்.
‘இலங்கையில் நடந்த போருக்கு முன்னாலே உங்கள் குடும்பம் வெளியில் போய்விட்டது.நாங்கள் போர் நடந்துகொண்டிருந்தபோது நாட்டைவிட்டுப் போய்விட்டோம். ஆனால் ஆரம்பத்திலிருந்து போரையும் துயரையும் தவிர எதையும் காணாத சின்னம்மா போன்றவர்களின் துக்கத்தையோ மனச்சிக்கல்களையோ உங்களால் புரிந்து கொள்ளமுடியாது’ கலாவின் குரல் மிகவும் கலங்கிப்போயிருந்தது.
கலா அவளின் கைகடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துக்கொண்டாள். ‘ஆட்டோ எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம்’ கலா தர்மசங்கடத்துடன் சொன்னாள்.யாழ்ப்பாணத்தில் அவர்கள் தங்கியிருக்கும் சொந்தக்காரர் விட்டுக்கும் சின்னம்மா தேவராணி வீட்டிற்கும் இருபது நிமிட நடைதான் என்று அவள் சொல்லியிருந்தாள்.
நேரம் மங்கத் தொடங்கியது. கலா கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாகச் சென்றாள். ‘கலா ஏன் இந்த அவசரமான நடை. நாங்கள் அங்கு வருவதாகச் சொன்ன நேரத்தைவிடச் கொஞ்ச நேரம் பிந்திப் போகிறோம், அதற்கான காரணத்தைச் சொன்னால் எனது சின்னம்மா கோபிக்கமாட்டார்’ அவன் அவளைச் சமாதானம் பண்ணும் தொனியிற் சொன்னான்.
+அவள் பட்டென்று திரும்பினாள்.
சின்னம்மாவின் ‘அவர்’ வரமுதல் நாங்கள் அங்கு போகவேண்டும்’ கலாவின் குரல் உயர்ந்து ஒலித்தது.
‘சின்னம்மாவின் அவரா?’ சின்னம்மாவைப் பின்னேரங்களில் வந்து பார்க்கும் ‘ஒருத்தர்’ இருப்பதாக அவனுக்குத் தெரியாது.
‘சின்னம்மாவின் அவரா?’ அவன் வாயைப் பிழந்தான்.அவள் அவனை ஏற இறங்கப் பார்த்தாள். ‘என்ன நடு வழியில் வைத்து சின்னம்மாவின் ‘அவர்’; பற்றிக் கேட்கப்போகிறீர்களா’?
அவள் வேகமாக நடந்தாள். சிவாவுக்கு கலா சொன்ன விடயம் குழப்பமாகவருந்தது. இதுவரை சின்னம்மாவுக்கு ‘ஒருத்தர்’; இருப்பதைப் பற்றி அவன் மனைவி சொன்னதேயில்லை. அவன் தனக்குள் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டு அவளைப் பின் தொடர்ந்தான்.
அவனின் மனதில் உதித்த கேள்விகளுக்கு மனைவியிடம் பதில் கிடைக்கவேண்டும் என்ற அவன் எதிர்பார்த்தான். ஆனால் கலா விரைவாக நடந்து கொண்டிருந்தாள்.
ஒரு சில நிமிடங்களில் கலா ஒரு வீட்டுக் கேட்டின் மணியை அழுத்தினாள். ஒரு நிமிடத்தில் கதவு திறந்தது. ஒரு அழகிய புன்முறுவலுடன் கலாவின் சின்னம்மா தேவராணி கதவைத் திறந்தாள்.கலாவின் முகச் சாயல் தெளிவாக அவளின் சின்னம்மாவில் பதிந்திருந்தது.நடுத்தரவயது என்று சொல்ல முடியாத உடற்கட்டு.அவளின் தோற்றம் ஒரு பெண்துறவியை ஞாபகப்படுத்தியது..
‘வாங்கோ தம்பி’ தேவராணி தனது மருமகனை வரவேற்றாள். அவளின் அழகிய முகம்போல் குரலும் கணிரென்று அழகாகவிருந்தது. ‘கொஞ்ச நேரம் பிந்தி வந்ததற்கு மன்னிக்கவும’ சிவா பணிவுடன் சொன்னான். சின்னம்மா அதற்குப் பதிலாக ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் அவளைப் பின் தொடர்ந்தார்கள்.
பெரிய பழையவீடு. அடர்த்தியான வாழைத்தோட்டத்தின் நடுவில் அமைதியாகக் காட்சி தந்தது.
உள்நுழைந்ததும் கோயிலுக்கள் நுழைந்ததொரு பிரமை. மிகவும் அமைதியாகவும், அதிக சாமான்கள் இல்லாத முன்னறை.சுவரில் மாட்டியிருந்த ஒரு கல்யாணப்படம் அவனின் பார்வையைக் கவர்ந்தது.
அழகான இளம் தம்பதிகளாகத் தேவராணியும் அவளின் மறைந்த கணவன் மாதவனும்; புன்னகையும் பூமாலைகளுடனும் படமாகப் பதிந்திருந்தார்கள். படத்திற்கு பூமாலை போடப்பட்டிருந்தது.
அவர்கள் பேசத் தொடங்க முதலே,தேவராணி அவர்களை அடுத்த நாள் மதிய சாப்பாட்டுக்கக் கட்டாயம் வரவேண்டும் என்றும் தற்போது,அவர்களுக்கு இரவுச் சாப்பாடு செய்யத் தனக்கு நேரமில்லை என்றும் சொன்னாள். அதாவது அவள் இப்போது இவர்களுடன் நேரம் செலவளிக்க முடியாது என்று சொல்கிறாள் என்று அவன் புரிந்துகொண்டான்.
அவள் குரலில் இவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குத் தன்னிடம் வரவில்லை என்று கோபத்தின் பிரதிபலிப்பு ஒன்றும் கிடையாது. இவர்களுக்காகச் செய்து வைத்திருந்த பலகாரங்களைக்கொண்டு வந்தாள். அதைத் தொடர்ந்து தேனீர் வந்தது.
சிவா,கலா தம்பதிகளின் இருகுழந்தைகளும் சிவாவின் பெற்றோர்களுடன் கொழும்பில் இருப்பதாகத் தனது சின்னம்மாவுக்குச் சொன்னாள் கலா. அந்த விடயத்தை டெலிபோனில் சில தினங்களுக்கு முன் கலா தேவராணிக்கு டெலிபோனிற் சொன்னது சிவாவுக்குத் தெரியும்.அதுபற்றிக் கலா அவளது சின்னம்மாவுக்கு இன்றும்; சொன்னபோது,
‘அதற்கென்ன அடுத்த தரம் பிள்ளைகளையும் கூட்டிவாருங்கள்’ தேவராணி எழுந்தாள். அதாவது தங்களைப் புறப்படச் சொல்கிறாள் என்று சிவா உணர்ந்துகொண்டான்.அவனுக்குத் தர்ம சங்கடமாகவிருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் பிரித்தானியர் மாதிரி தேவராணியும் கோபப்படுகிறாளோ என்று அவனுக்குப் புரியவில்லை.
சின்னம்மா வெளிக் கதவு வரையும் வந்தாள். அவர்கள் வாழைத்தோட்டத்தைக் கடந்து வரும்போது பெருவாழை இலைகளால் மறைக்கப்பட்டிருந்த இடைவெளியினூடாகத் தூரத்தில் வீட்டின் வேலியருகே படர்ந்திருந்த வேப்ப மரமும் அதனடியிலிருந்த ஒரு பெரும் பாம்புப் புற்றும் பட்டென்று சிவாவின் கண்களில் பட்டு மறைந்தன.. இந்தப் பெண்மணி இந்தப் பெரிய பாம்புப் புற்று இருக்கும் வீட்டில் இருக்கிறாளே? அவன் தனக்குள் ஆச்சரியப்பட்டுக் கொண்டான்..
இவர்கள் வீட்டைக் கடந்ததும் சின்னம்மா கேட்டைப் பூட்டிவிட்டு வீட்டை நோக்கி நடப்பது கேட்டது. கேட்டது.
கலா சில அடிகள் நடந்துவிட்டுத் தன் நடையை மேலே நகர்த்தாமல் அப்படியே நின்றாள். ‘சின்னம்மாவின் அவர் வரும் நேரம்’ கலா சிவாவின் காதுகளில் முணுமுணுத்தாள்.
‘வாட்’ அவன் வாயெடுக்கமுதல் அவனின் வாயைப் பொத்தினாள் கலா.
‘பேசாமலிருங்கள்’
துறவி மாதிரியிருக்கும் இந்தப் பெண்ணுக்கு ஒரு ‘அவரா?’அவன் தனது மனைவியை ஏற இறங்கப்பார்த்தான்.
‘இருந்தாலும் அது பெரியவிடயமில்லை. பத்தொன்பது வயதில் விதவையாகிய ஒரு தமிழ்ப்பெண் கடைசி காலத்தில் தனக்கு ஒரு துணையைத்தேடுவது நல்லதுதானே’
அவன் வாய்விட்டுச் சொல்லவில்லை ஆனால் ஒரு தாராளவாதியாக நினைத்துக்கொண்டான்.ஆனால் சின்னம்மாவின்,அமைதியும்,சாந்தமும்,கருணைபடிந்த குணமுள்ள துறவி மாதிரியான தோற்றமும் அவனைக் குழப்பியது.
அவன் மனதில் எத்தனையோ கேள்விகள் வரும் என்று கலாவுக்குத் தெரியும் என்ற அவனுக்கும் தெரியும். மனைவியைக் கேள்விக் குறியுடன் பார்த்தான்.
‘இலங்கையில் தொடர்ந்த இந்தப் போர் எத்தனை மனிதர்களை இபபடி ஆக்கியிருக்கிறது தெரியுமா?’ கலா அவனைக் கேட்டாள்..அவள் குரல் சோகமாகவிரந்தது. கண்கள் கலங்கியிருந்தன.
‘அவளை உலகத்திற்குப் புரியாமலிருக்கலாம் ஆனால் என்னைப் பொறுத்தவரையில் எனது சின்னம்மா ஒரு புனிதமான பிறவி,பைத்தியமல்ல’ கலா தனக்குத்தானே மெல்லமாகப் பேசிக் கொண்டாள்.
‘ஒரு கணவன் இறந்தால் இன்னொரு துணை தேடுவதில் என்ன பிழை?’என்று கேட்க அவன் வாயெடுத்தபோது அருகில் ஏதோ சர சரவென்று ஏதோ ஊர்வது போலிருந்தது.அவன் பயத்துடன் அங்கும் இங்கும் பார்த்தான்.
கலா அவனின் கைகளைப் பிடித்துக்கொண்டு சின்னம்மாவின் கேட் அருகில் நகர்ந்தாள். ஓரு பிரமாண்டமான நாகம் சின்னம்மா வீட்டுக்கு ஊர்ந்து போவது கேட்டின் அடியிலிருந்த சிறு இடைவெளியால் தெரிந்தது.
‘இதுதான் சின்னம்மாவின் அவர்’ கலா கணவனின் கண்களை நேரே பார்த்தபடி சொன்னாள்,.சிவா திகைப்பில் சிலையாக நின்றான்.
‘சின்னம்மாவின் கொலை செய்யப்படு; இறந்தபின் சில நாட்கள் அவள் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை.அவருடைய எட்டாம் நாள் சடங்கு செய்த அன்று வேப்ப மரத்தடியில் ஒரு புற்று வந்திருந்தது. அதை எனது அம்மா கொத்தி அழித்து விட்டார்.சில நாட்களுக்கப் பின் அதே புற்று வளர்ந்திருந்தது. அம்மா அங்கு சென்றபோது ஒரு பாம்பு படமெடுத்தபடி ஆடிக்கொண்டிருந்தது.
‘யாரையும் கூப்பிட்டு இந்தப் பாம்பை அடிக்க வேண்டும்’ என்ற அம்மா சொன்னா. அதுவரையும் யாருடனும் பேசாமலிருந்து சின்னம்மா ஓடி வந்தார். ‘வேண்டாம். அவரை அடிக்க வேண்டாம் என்றாள்’. அவளின் மனநிலை குழம்பிப் போயிருந்தபடியால் அவள் பாம்பு உருவில் கணவன் வந்திருப்பதாக நினைக்கிறாள் என்று எல்லோரும் நினைத்தார்கள்.
‘என்னையும் எங்கள் பிள்ளையையும்; இனி அவர் பார்த்துக்கொள்வார்’ என்று சின்னம்மா கதறினாள்.
வயிற்றில் குழந்தையுடன் விதவையாக ஒரு பத்தொன்பது வயது இளம் பெண் நின்ற கதறும்போது அவளுக்கு எதிராக யாரும் எதுவும் சொல்லவிலலை’
சிவா தனது மனைவி அவளின் சின்னம்மாவைப் பற்றி இதுவரை அவனிடம் சொல்லாத விடயங்கள் இவை.
‘தமிழர்களுக்காகப் போராடுவதாகப் புறப்பட்ட தமிழ் இயக்கங்கள் எதிரியான சிங்கள இராணுவம் செய்த கொடுமையைவிடப் பயங்கரமாகவிருக்கிறதே?
அவன் பெருமூச்சுவிட்டான். யதார்த்ததிற்க அப்பால் வாழும் சின்னம்மாவின் சிதைந்த வாழ்க்கைக்கு; காரணமானவர்களை அவன் மனம் சாபமிட்டது.
கலா,சின்னம்மா பற்றிய தனது விளக்கத்தால் குழம்பிப்போன அவனது கைகளை அன்புடன் கோர்த்துக் கொண்டாள்.’உங்களுக்கு அப்படியேதும் நடந்தால் நான் உடனே உயிரை விட்டிருப்போன் ஆனால் சின்னம்மா,அதன் பின் யாரையும் அந்தப் புற்று அருகில் போகவிடவில்லை. தினமும் பாம்புக்கு பால் வைப்பார்.அடுத்த கணம் தனது கணவனுக்குப் பூஜை செய்வார்.’
மாலை இருள் பரவத் தொடங்கியது. கலா விம்முவது அவனுக்குப் புரிந்தது. சின்னம்மாவில் கலாவுக்கு ஏன் அத்தனை பாவம், பரிதாபம், மதிப்பு என்று அவனுக்கு இப்போது தெளிவாகப் புரியத் தொடங்கியது.
கலா மெல்லிய குரலில் சின்னம்மா பற்றிய கதையைத் தொடர்ந்தாள்.
‘காலம் பறந்தது நாங்கள் அத்தனைபேரும் இந்த வீட்டை விட்டு ஒவ்வொருத்தராக வெளியேறி விட்டோம். சுpன்னம்மாவின் மகனையும் வெளிநாடு அனுப்பி விட்டாள். எனது வாழ்க்கையை அழித்தவர்களின் வாழ்க்கை நிர்மூலமாவதை நான் காண்பேன் என்று சாபம் போட்டாள்..
போர் முடிந்தது. போரைத் தொடங்கிக் கொலை வெறியாட்டம் போட்டவர்கள் ஒரு சூறாவழியில் தொலைந்த இலைகளாக மறைந்து விட்டார்கள்.’வானத்தில் இளம் நிலா எட்டிப்பார்த்தது. இந்த நிலவில் தனது குழந்தையுடன் கணவனுடன் சந்தோசமாக வாழ்க்கையைத் தொடராமல்போன சின்னம்மாவின் துயர் சிவாவின் மனதை நெருடியது.மனைவியை அணைத்துக் கொண்டான். யாழ்ப்பாணப் பட்டினம் கோயில் அணி ஓசைகளால் நிறையத் தொடங்கியது.
சின்னம்மா இப்போது இறந்து விட்ட கணவருக்குப் பூஜை செய்து கொண்டிருப்பாள் என்று நினைத்தபோது அவனால் தனது வாழ்க்கையைத் தமிழ்ப் பயங்கரவாதத்தால் இழந்த பவித்திரமான பெண்மைக்குக் கலங்கியது. கணவனின் மனதில் ஓடி;கொண்டிருக்கும் சிந்தனையைப் புரிந்தவளானக் கலா அவளை அணைத்துக் கொண்டாள். கலா பெருமூச்சு விட்டாள்.
‘சின்னம்மா தனியாகப் பாம்புடன் வாழ்கிறார். இந்தப் பாம்புக்கு எத்தனை வயதோ தெரியாது. அல்லது ஒரு பாம்பு இறந்தால் இன்னொரு பாம்பு வருமோ தெரியாது..ஏதோ ஒரு நல்ல பாம்பு அடிக்கடி வரும். தன்னுடைய ‘அவர்’; பாம்பு உருவில் தன்னைப் பாதுகாப்பதாகச் சின்னம்மா நினைக்கிறாள். அந்தப் பாம்பு பின்னேரத்திற்தான் வரும்.அதற்காகச் சின்னம்மா யாரையும் பின்னேரங்களில் வீட்டுக்கு வர அனுமதிப்பதில்லை’.
மாதவனை அழித்தவர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டார்கள். மாதவன் பாம்பாகத் தன் அருமை மனைவியைப் பாதுகாக்கிறானா? சிவா தனது கேள்வியைத் தனக்குள் புதைத்துக் கொண்டான்.அவன் விஞ்ஞானம் படித்தவன்,ஆனாலும் சின்னம்மா போன்றோரின் மனித சிந்தனையின் நம்பிக்கைகளுக்குக் காரணம் அவனுக்குத் தெரியாது.
வானத்தில் இளம் நிலா எட்டிப்பார்த்தது. இந்த நிலவில் தனது குழந்தையுடன் கணவனுடன் சந்தோசமாக வாழ்க்கையைத் தொடராமல்போன சின்னம்மாவின் துயர் சிவாவின் மனதை நெருடியது.மனைவியை அணைத்துக் கொண்டான். யாழ்ப்பாணப் பட்டினம் கோயில் அணி ஓசைகளால் நிறையத் தொடங்கியது.