சிதம்பரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 10,047 
 
 

அந்த ப்ரசித்தி பெற்ற கோவிலின் அவ்வளவாக ப்ராதான்யமாக இல்லாத கோபுர வாசல் அருகே பஸ் எங்களை இறக்கி விட்டு சென்றது.கோவில்களுக்கு உரித்தான கடைகள் எதுவும் இல்லாமல் ஒரு பழைய இரும்பு கடை,ஜெராக்ஸ் கடை,எலக்டிரிகல் சாமன்கள் கடை,

ஸ்டேஷனரி கடை என்று பல பட்டரையாக இருந்த கடைகளை கடந்து கோபுர வாசலை அடைந்தோம்.பெரிய கல் பாவிய படிகளுடன் கூடிய இரண்டு, மூன்று நிலைகளை கடந்தவுடந்தான் தோன்றியது” அடடா ! செருப்பு போடும் இடம் எதுவும் இருப்பதாக தெரியவில்லையே”என்று.

“பரவாயில்லை! நீ இங்கயே இரு. நான் ஏதாவது இடத்தை பாத்து போட்டுட்டு வரேன் “என்று என் பதிலை எதிர் பார்க்காமல் திரும்பி நடந்தார் ராம்.நான் பக்கத்தில் இருந்த ஒரு சிமென்ட் மேடை மீது அமர்ந்தேன்.எதிர் புரத்தில் கோவில் நந்தவனத்தின் மதிற்சுவருக்கப்பால் செம்பருத்தி,நந்தியாவட்டை,பவழமல்லி ,செவ்வரளி பொன்னரளி என பசுமையும் வண்ணமும் கண்ணை நிறைத்தது.தென்னை மரத்தின் மெல்லிய தலைஆட்டல்,சாய தொடங்கியிருந்த அந்தி பொழுது,கோவிலுக்குள் எங்கோ தொலை தூரத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த தேவார பாடல், ஓதுவார் குரலில் இருந்த பக்தியும், கனிவும், கம்பீரமும், சுற்றிலும் திரையாக இறங்கிக் கொண்டிருந்த அமைதி எல்லாம் சேர்ந்து என்னை ஒரு தியான நிலையில் ஆழ்த்தி,மோனப் பெருவெளியில் கரைத்து கொண்டிருந்தது.காலம், இடம் எல்லாம் அதன் பொருளையும் உருவையும் இழந்த நிலை.

“சரி போலாமா” என்ற குரலைக் கேட்டு யார் இந்த அன்னியன் என்ற புருவ சுளுக்கல் ஒரு வினாடிக்கும் குறைவான நேரம்.யாராக இருந்தாலும் மண்ணுக்கு வந்தேதானே தீர வேண்டும், மூச்சு இருக்கும் காலக் கணக்கு வரை. வந்தேன் ராம் குரலைக் கேட்டு.

ஏறும் பொழுது எப்படி ஏறினேன் என்று தெரியவில்லை,இறங்கும்பொழுது மேடையின் உயரமும்முழங்கால் வலியும் என்னை தயங்க செய்தன.அதற்குள் இவர் “வா வா நான் இறக்கி விடரேன் “என்று கை பிடித்து இறக்கி விட்டார்.கோபுர வாசலை கடக்கும் சமயத்தில்”ஏம்மா கால் வலிக்குதா” கனிவே குரலாய் வந்தது,70,75 வயது மதிக்க தக்க பெரியவர்,சுருள் சுருளான நரைத்த தலை,அதே மாதிரி சுருள் தாடி,காவி கலர் வேட்டி,வெள்ளை சட்டை,கையில் ஒரு பெரிய துணிக்கடை பை,தடித்த கண்ணாடிக்குள் சிரிக்கும் கண்கள்”.அய்யா கை கொடுத்து இறக்கி விட்டதை பாத்தேன் ,அதான் கேட்டேன்,”

“ஆமாங்க, கால் வலிதான், கஷ்ட படுத்துது” யாரோ பார்த்து விட்டாரே யென்று,கொஞ்சம் வெக்கமாகவும் இருந்ததால் குரல் கொஞ்சம் தழைந்தது.

“கொஞ்சம் இருங்க” என்று படியிலேயே உட்கார்ந்து ,துணிப்பைக்குள் கையை விட்டு தேடத் தொடங்கினார்.’இது யேதடா புதுக் கஷ்டம்,

மூலிகை வைத்யம் பண்ணிப் பாருங்க,இந்த கஷாயத்தைஒரு 40 நாள் சப்பிடுங்க அல்லது இந்த எண்ணையை ஒரு மண்டலம் பூசி பாருங்க,இல்லையின்னா இந்த,தாமரை மணி மாலை,ஸ்படிக மாலை எதையாவது போட்டுண்டால் நல்ல குணம் தெரியும் என்று எதையோ தலையில் கட்டி காசு பிடுங்கற வேலையாக இருக்குமோ’ என்ற தவிப்பில் இவர் முகத்தை பார்தேன்.வழக்கமான பொறுமையின்மை இன்றி பேசாமல் நின்று கொண்டிருந்தார்.எனக்குஇவரின் பொறுமை பற்றிய ஆச்சரியத்தை விட பெரியவரின் நிதானம் பதற்றத்தைக் கொடுத்தது.பெரியவர் நிதானமாக தேடி” ஹாங் ! இதோ இருக்குது பாருங்க!” ஒரு விசிட்டிங் கார்டு மாதிரி ஒன்றைக் கொடுத்தார்.

கடைத் தெருவிலே அபிராமி மெடிகல்ஸ்க்கு மேல இந்த புது மாதிரி வைத்ய முறை பண்ற இடம் இருக்கும்மா.ஒன்னும் இல்ல,வலி இருக்கற இடத்துல வழ வழன்னு கூழாங்கல் மாதிரி பெரிய சைசு கல்லை,ஒரு நாலு ,அஞ்சு வைச்சு அது மேல வெப்பக் கதிர்களை பாய்ச்சறாங்க,ஒரு பத்து ,இருவது நிமஷத்துக்கு.,இது மாதிரி ஒரு ,வாரம்,பத்து நாள் பண்ணினாலே வலி நல்லா குறையுதும்மா .எதொ கொரிய நாட்டு வைத்ய முறை போல இருக்கு.இதை ஒரு ஆராய்ச்சி மாதிரி செய்யறதுனாலே நம்மக் கிட்டே பணம் எதுவும் வாங்கறது இல்ல.நான் கூட செஞ்சு கிட்டேன்,நல்ல குணம் தெரியுது.போய் செஞ்சுக்கம்மா”என்று நீளமாக பேசியவர் இடை வெளி விட்டு,”வெளியூர் மாதிரி தெரியுதே,எந்த ஊரு?”

“பெங்களுர்”

“இங்க போய் விசாரியுங்க, இன்னிக்கு இங்க செஞ்சுக்கிட்டு, உங்க ஊருல எங்க இருக்குன்னு இவங்ககிட்டேயே கேட்டுக்கிடுங்க, அவ்வளவுபெரிய ஊருல நிச்சயம் இருக்கும்” எழுந்தவர், “இன்னிக்கு இங்க இருப்பிங்க இல்ல” என்றார்.

“இல்ல! கோவிலை பாத்துட்டு உடனே போகணும்”

“அப்பிடியா “முகவாயை சொறிந்தவர்“சரி! சாமி தரிசனம் பண்ணிட்டு ஏழு மணிக்குள்ளே போய்டுங்க!பாத்துட்டே ஊருக்கு போங்க”

நடந்துகொண்டே”எனக்கு எழுவந்தஞ்சு வயசாகுது, வலிக்கறது நியாயம், நீங்க சின்ன குழந்தே, உங்களுக்கு வலிக்கறதாவது”

உள்ளுக்குள் ஏதோ மளுக்கென்று முறிந்தது.தொண்டைக்குள் கல் பந்து.

குழந்தே! குழந்தே! என்னை குழந்தே என்றா சொன்னார்?

என்னை குழந்தை என்று யாராவது அழைத்தோ நினைத்தோ எத்தனை வருஷம் ஆயிற்றோ நினைவில்லை.

என்னை குழந்தை என்று அழைத்த அந்த தாய்மையை,என் வலிக்ககாக பரிந்த அந்த கருணையை,கண்டிப்பா பாத்துட்டு போங்க என்ற அந்த சுவாதீனத்தை, நினைக்க நினைக்க ,இது பணம் புடுங்கற வழி என்று சந்தேகித்த என் சிறுமை விஸ்வரூபம் எடுத்தது. என்னை இன்னும் இன்னும் கேவலமாக உணரச் செய்தது.சக மனித நேயத்தை சந்தேகிக்கற,வணிக நோக்கங்கள் இல்லாத உறவுகளின் சாத்தியங்களை நம்ப மறுக்கிற என்னை நானே வெறுத்த அந்த கணங்கள்!

“ரொம்ப நன்றிங்க” கம்மிய தொண்டையோடு அவர் முதுகுக்கு பின்னால் கத்திச் சொல்ல முயன்றேன்.

கலங்கிய கண்களையும், கம்மிய குரலையும் கண்டு “என்ன?” என்றார் ராம்.

நான் தலையை மெல்ல அசைத்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *