சிகிச்சை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 13, 2022
பார்வையிட்டோர்: 5,081 
 
 

(1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆவலோடு எதிர்பார்க்கப்படும் அம்சத்தின் வருகையை சமீபத்தில் காட்டும் அறிகுறி போலவும், ஒரு விளங்காத முன்னெச்சரிக்கை போலவும், வைகறையொளி பரவுவதற்கும் முன்பே, முதல் காகத்தின் கரைதல் ஒலி கேட்டது. பொழுது மிகத் தயக்கத்துடன் புலர்ந்தது.

இரவு முழுவதும் மன நிம்மதியின்றி ஒவ்வொரு கணத்தையும் கணக்கிட்டுக் கழித்துக் கொண்டிருந்த சீனுவுக்கு மனசின் பாரம் கொஞ்சம் குறைந்தது போலிருந்தது. தன் பக்கத்தில் படுத்துக் கிடந்த தன் மனைவி கமலாவைப் பார்த்தான். இரவெல்லாம் மூடாத தன் கண்களை அவள் சிறிது மூடி உறங்குவதுபோல அயர்ந்து கிடந்தாள். சிறிது தூரத்தில் அவர்களது ஒரு வயதுக் குழந்தையும், வீட்டு வேலைக்காரக் கிழவியும் படுத்திருந்தார்கள், விளக்கு மங்கலுற்று எரிந்து கொண்டிருந்தது.

இரண்டு நாளாகக் கொஞ்சம் தலைவலி கடுப்பு ஜுரமாக இருந்ததை கமலா அலட்சியமும் செய்ய வில்லை. அதிகப்படுத்தவுமில்லை. தன்னுடைய கணவன் மனதை மிகப் பாதிக்கவிடக்கூடாதென்று சாதாரணத் தோற்றத்துடனிருக்க முயன்றாள். ஆனால், முந்தின மாலையிலிருந்து தேக அசௌக்கியம் தனக்கு மிஞ்சி விடவே, படுக்கையில் படுக்க நேர்ந்தது. சுரத்துடனும் முக்கலும், முனகலும் அதிகரித்தது.

அவர்களிருவரும் மணவாழ்க்கை நடக்க ஆரம்பித்து மூன்று வருஷமேயாயினும், இவர்களிடையே தோன்றிய அன்னியோன்னியம் காலத்தின் கட்டை மீறியதாக இருந்தது.

சீனு நன்றாகப் படித்தவன், சிறிது கருப்பாக இருப்பான். நெட்டையான மெல்லிய சரீரமுடையவன், படிப்பு முடிந்தவுடன் மாதம் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் அவனுக்கு ஒரு உத்தியோகம் கிடைத்தது. இதற்குப் பிறகு இவர்கள் ஒன்று சேர்ந்து மணவாழ்க்கை நடத்த ஆரம்பித்தார்கள்.

இவர்களுடைய இல்வாழ்க்கை, சதையுணர்ச்சி இன்பம் என்ற அஸ்திவாரத்தின் மேல் பூச்சு. காதல் சுவை கொண்டதல்ல. சிற்சில சமயம் இருவரும் ஒருவருக் கொருவர், சம்பந்தமற்ற தனி ஜீவன்கள் போலத் தோன்றுவது அவர்களது மிகமிக மர்மமான ஒற்றுமை வாழ்க்கையின் ஒருவிதத் தோற்றந்தான். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த போது சீனுவின் முகம் கறுத்தது. கர்ம வாழ்க்கையின் கடமையினால் பலமாகத் தாக் குண்டான் போலும்! தன் மனைவியிடம் அவனுக்கு இருந்த அன்பு முன்னிலுமதிகமாக இறுகியது.

கமலாவிற்கோ சதா தன் குழந்தை ஞாபகமும், சீனுவின் ஞாபகமுந்தான். தன்னை அறியாமலே ஆனந்த முற்று, மெய்மறந்து போவாள். வாய்விட்டுச் சிற்சில சமயம் குழந்தையுடன் கொஞ்சுவதும், அப்போது சீனு வந்தால் அவனுடன் பேசுவதும், பிறரிடம் பொறாமையை எழுப்புவதாக இருக்கும். தன் ஜீவிய லட்சியமும், வாழ்க்கைப் பயனும் இவ்வகை ஆனந்தத்தில் எல்லையை எட்டி விட்டதென்ற ஓர் எண்ணம் அவள் மனதில் எழும். அப்போது மரண பயத்தை வென்றவளாகப் புன்முறுவல் கொள்வாள்.

காலை கண்டவுடன், சீனு புழக்கடை சென்று, பல்தேய்த்து முகங்கழுவி, உள்ளே வந்தான். கண்மூடிய வண்ணமே கமலா சிறிது அங்குமிங்கும் புரண்டுவிட்டு மெதுவாகக் கண்ணை விழித்தாள். தன் எதிரில் நின்று கொண்டு குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்டு இருந்த தன் கணவனைப் பார்த்தாள். “இரவெல்லாம் தூக்க மில்லையே உங்களுக்கு…. சிறிது படுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லியவள், “குழந்தை?” என்றதும், சிரமத்துடன் எழ முயன்றாள்.

அவளைத் தடுத்து சீனு “குழந்தை அதோ தூங்கு கிறது… பேசாமல் படுத்துக்கொள். நான் காப்பி சாப்பிட்டு விட்டு யாரையாவது டாக்டர் ஒருவரை அழைத்து வருகிறேன். ஒத்தாசைக்கு அம்மாவுக்கு சொல்லி அனுப்புகிறேன்…….” என்றான்.

கமலா மௌனமாக அவனைப் பார்த்தாள். அவனும் ஒருகணம் பார்த்துவிட்டுச் சென்றான். அப்பார்வையின் அர்த்தமே மிகத் தெளிவானது போன்றும், அவர்கள் பேசுவது சாதாரண உலக நடப்பு சௌகரிய சாதகத்திற்குத் தான் போலும் இருந்தது.

2

மிஸ் கோமதி வைத்தியக் கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், காலியாக இருந்த அவ்வூர்ப் பெண்கள் ஆஸ்பத்திரி தலைமை டாக்டராக நியமனம் பெற்று வந்து சேர்ந்தவள். முற்போக்கான கொள்கைகளுடைய ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவள். கல்லூரியிலும், மற்றும் சென்னையில் அவளை அநேகமாக முக்கியஸ்தர் எல்லோருக்குமே தெரியும். நான்கு பேர்கள் தன்னைக் கவனிப்பதில் அவளுக்கு கொஞ்சம் பிரியம் உண்டு. கடற்கரையிலோ, மற்றும் ஐந்து பேர்கள் கூடியிருக்கு மிடத்திலேயோ அந்தக் கூட்டத்தின் மத்தியிலில்லா விட்டாலும், சிறிது எட்டி அவள் நின்றிருப்பது ‘என்னைப் பார் என்பது போலத்தான் பிறருக்குத் தோன்றும்.

நவீன நாகரீகத்தை அணிந்து நாணத்தை வீட்டில் வைத்து வெளிக்கிளம்பும் அநேக பெண்களைப் போல அவளும் வாலிபருடைய பார்வைக் காதலுக்கு, ஆளானாள்.

கோமதி பாலிய முதல் செருக்கும் மமதையும் கொண்டவள். கிட்ட நெருங்கினால், அவள் பார்வையில் ஒரு வெடு வெடுப்புத் தெரியும். அது அவளுடைய இயற்கை சுபாவமா அல்லது செயற்கை மேலணியா என்பதை யாரும் கண்டு கொள்ளமுடியாத வகையில்தான் எல்லோரிடமும் எட்டி நின்று ஒட்டாமலே பழகுவாள். தன்னுடைய படிப்பின் காரணமாயும், வனப்பின் மிகுதி என்ற எண்ணத்தினாலும் மிகுந்த சுயப்பிரக்ஞை உடையவளானாள். தன்னை மெச்சுபவர்களின் வியப்பை எண்ணி ஆனந்தம் கொள்ளு வதைவிட, அவர்களை புறக்கணிப்பதினால் அவர்கள் அடையும் மனோநிலையைக் கண்டு களிப்பது கோமதிக்கு அதிகப் பிரியமாக இருந்தது.

தன்னால் உணரப் படாததாயினும், உணர முடியாத தாயினும், பிறர் தன்னிடம் காட்டும் மதிப்பு, தன்னைக் கண்டவுடன் அடையும் வியப்பும், மயக்கமும் எதற்காக என்பதை அவள் புரிந்து கொண்டிருந்தால், அந்த நவீன வாலிபர்கள் எத்தகைய கேவலத் தன்மையை அடையத் தான் காரண கர்த்தாவாக ஆகிறாள் என்பது அவளுக்குப் புலப்பட்டிருக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக கோமதியின் மனதில் ஆடவரை வெறுக்கும் சுபாவம் நன்றாய் வேரூன்றிவிட்டது. உண்மையோ, பொய்யோ, ‘பெண்கள் வெகுவாக மண வாழ்க்கையில் ஆடவரால் அடிமைப்படுத்தப் படுகிறார்கள்’ என்ற தனது மனதிற்கிசைந்த காரணத்தையும் காட்டிக் கொண்டாள். நாளடைவில் இவளுடைய ‘காதலுக்காகவும், இவளை மணப்பதற்கும் நெருங்கிய வாலிபர்களின் தொகை தானாகக் குறைந்துவிட்டது.

மூக்கில் அழகிய சிறு கண்ணாடி அணிந்து, அதிக ஆடம்பரமற்ற ஆபரணம் பூண்டு, உடம்போடு ஒட்டிய துல்லிய ஒற்றை வர்ணப் புடவை அணிந்து ஒரு கொடிபோல அவள் கடற்கரையில் நடப்பது, ஆடவர் மனதின் அமைதியைக் குலைப்பதாக இருக்கும். ஆயினும் அவளுடைய இறுகிய வாயும், கடுகடுத்த பார்வையும், ஆடவரை அவளிடம் நெருங்கவொட்டாது தடுத்ததுமன்றி, மானசீகமாகவே அவளைப் பூஜிக்கவும் செய்தன.

தன்னுடைய பிற்கால வாழ்க்கையைப் பற்றி கோமதிக்கு நிச்சயமான திட்டங்கள் ஏதும் கிடையாது. முடியுமானால், மேல் படிப்பிற்காக சீமைக்குப் போகலாம் என்ற உத்தேசம் கொஞ்சம் உண்டு, – கோமதி காலையில் காப்பி அருந்திவிட்டு, அன்றையப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தாள். சீனு அப்போது உள்ளே நுழைந்தான். இவனைப் பார்த்ததும் அலட்சியம் நிறைந்த மரியாதையோடு ‘என்ன வேண்டும்? என்றாள்.

“ஒரு நோயாளியைப் பார்க்க என் வீட்டிற்கு வரவேண்டும்” என்றான்.

“உங்கள் அட்ரஸ் வைத்துவிட்டுப் போங்கள். சிறிது நேரம் சென்று வந்து விடுகிறேன்” என்றாள் கோமதி.

சீனு வீடு சேர்ந்து பத்து நிமிஷங்களுக்குள் கோமதி வந்துவிட்டாள். கமலாவின் கரம் தணியும் குறியேயின்றிக் கடுமையாகவே இருந்தது. ஆனால், தன் கணவரது கவலையை அதிகரிக்கவும், அதைரிய மூட்டவும் காரணமாகி விடக் கூடாதென்று தன் வேதனையை, வெளிக்காட்டிக் கொள்ளாது சிரமப்பட்டுக் கொண்டு படுத்து இருந்தாள். சீனுவின் மனம் வெடித்துவிடும் போல் இருந்தது. கட்டுக் கடங்காத துக்கத்தை அடக்கி வைப்பதன் சிரமம் முழுவதையும் அவன் அனுபவித்தான். வாய்விட்டு அலறி அமைதியை நாடுவதை ‘எதற்காக இப்போது?’ என்ற எண்ணம் குறுக்கிட்டு தடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் அதற்கும் மேலே, தனியாக, கமலாவின் உடம்பு அசௌக்கியம் என்ற நினைவையும் தாண்டி, அவன்

மனதில் ஏதோ ஒரு தாங்கமுடியாத சுமையின் பாரம் அழுத்துவது போன்ற ஒரு உணர்ச்சியும் வளர்ந்து கொண்டிருந்தது. வானக்கூரை இவன் தலையை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக நழுவி இறங்குவது போன்ற ஒரு பிரக்ஞை வளர்ந்து கொண்டிருந்தது.

டாக்டரைத் தன் மனைவியிடம் அழைத்துச் சென்றான். டாக்டர் சீனுவையும் கமலாவையும் இரண்டொருதரம் மாறிமாறிப் பார்த்துவிட்டு “இவள்?” என்றதும், “என் மனைவி என்று பதிலளித்தான். எத்தனை நாளாக?” எனக் கேட்டுக் கொண்டே டாக்டர் நோயாளியைப் பரிசோதிக்க ஆரம்பித்தாள். பரிசோதனை முடிந்தவுடன், மருந்து எழுதிக் கொடுத்துவிட்டு சாயந்திரம் நிலைமையை வந்து தெரிவிக்கும்படி சீனுவிடம் சொன்னாள். மற்றும் அவசியமானால் தான் வருவதாகவும் சொல்லிச் சென்றாள்.

கமலாவின் தோற்றமும் பார்வையும் கோமதி மனதில் சங்கடம் கொடுத்தது. கமலாவைப் பார்த்ததும், கணவ னுக்கு அடிமைப்படுதல் என்பதான மணவாழ்க்கையைப் பற்றிய தனது வியாக்யானம் பிசகு என்பது போன்ற ஒரு எண்ணம் அவள் மனதில் எழுந்தது. இந்த எண்ணம், தன் மனதில் திடமாக வேரூன்றி விட இடம் கொடுக்க அவள் இஷ்டப்படவில்லை. கமலாவின் சுரமும்கூட அவள் மனதைப் பாதிக்கவில்லை . அவள் பக்கத்தில் ஒரு ஆடவன் மிகுந்த பாத்தியத்துடன் நின்றிருப்பதும், முகத்தினாலும், ஒருவகை உணர்ச்சியையும் தெரிவிக்காது இவளுக்கு விளங்காத ஒரு பாஷையில் பேசுவது போன்ற பார்வை யாலும், இருவரும் பேசிக்கொண்டது போன்ற தோற்றமும் கோமதிக்குக் கோபத்தையும், வருத்தத்தையும் கொடுத்தது.

கோமதி திரும்பிப் போகுமுன் மற்றொரு முறை கமலாவைத் திரும்பிப் பார்த்தாள். அவள் சாந்தமே உருக்கொண்டது போலத் தோன்றியது கோமதிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளுடைய நோய் கடுமை யானது என்பது கோமதியின் டாக்டர் மனதுக்குத் தெரியும், இருந்தும் எதனால் அவள் அவ்வளவு ஆறுதலோடு சாந்தி நிறைந்து விளங்கினாள் என்பதுதான் டாக்டருக்குப் புரிய வில்லை. அவளுக்கே அவள் நோயின் கடுமை தெரியாது என்று நினைப்பதற்குமில்லை. அவள் முகம் அவளுடைய புத்திசாலித்தனத்தை நன்கு எடுத்துக் காட்டியது. இந்த யோசனைகளெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். அவ்விடம் விட்டகன்றதும் அவ்வளவும் அவள் சிந்தனைக்கு வெகு தூரத்தில் சென்று மறைந்தன. வாசலில் வண்டியேறும்போது கையினால் மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டபோது மூளையை யும் சஞ்சலம் நிறைந்த எண்ணங்களினின்றும் விடுவித்துச் சரிசெய்து கொண்டாள்.

3

அன்று மாலை ஐந்து மணிக்கு கோமதி நாசுக்காக உடை தரித்து, தேயிலைப் பானம் அருந்திக் கொண்டிருந் தாள். அப்போது சீனு வந்தான். அவனைப் பார்த்த போது கோமதிக்கு மனதில் கொஞ்சம் ஆத்திரம் பிறந்தது. கமலா இவனுக்கு அடிமைப்பட்டு விட்டாள் என்பதனால் போலும்! ஆனால், சீனுவைப் பார்க்கும்போது பிறரை அடக்கியாளும் சுபாவஸ்தன் என்று தோன்றவேயில்லை. ஆனால், ஏதோ மனதில் தோன்றித் தோன்றி ஒரு உருவிலாத சஞ்சலத்தைக் கொடுத்து மறைவதைத்தான் கண்டாள்.

“ஏதாவது விசேஷம் உண்டோ ?” என்றாள் சாதாரணமாக.

“நிலைமை அப்படியேதான் இருக்கிறது. ரொம்ப சோர்வடைந்து இருக்கிறாள்; மூச்சு திணறுகிறது………” என்று சொல்லி அவளைக் கூட்டிப் போக வந்திருப்பதாகத் தெரிவித்தான். “சரி, கொஞ்சம் உட்காருங்கள். தேத் தண்ணீர் அருந்திவிட்டுப் போகலாம்” என்று சொல்லி அவனை உட்கார வைத்தாள். அவள் எதிரில் உட்கார்ந்து இருக்கும்போது அவன் தோற்றம் உணர்ச்சியற்ற சிலை முகமாக விளங்கியது.

“அதிகமாக பயப்பட வேண்டாமாயினும் உங்கள் மனைவியின் நோய் கொஞ்சம் கடுமையானதுதான். என்னால் ஆவதைச் செய்கிறேன். இரண்டு நாள் பார்த்து விட்டு அவசியமானால் பட்டணம் போக நான் பெரிய டாக்டருக்கு லெட்டர் தருகிறேன்” என்றாள்.

“சரி, ஆகட்டும்” என்று சாதாரணமாக பதில் சொன்னான் சீனு. “நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. நோய் கடுமையானதுதான். இப்போது அதிகமாகாது பார்த்துக் கொள்ளுவதைத் தவிர வேறு செய்வதற்கு ஒன்றுமில்லை . தானாகவே சரியாகிவிட வேண்டும்……. இப்போது தெரிந்து கொள்ளுவதில் உங்களுக்கு துன்பமதிகமானாலும் விஷயம் கையை மீறிய பிறகு தெரிந்துகொள்ளுவது இன்னும் அதிகக் கஷ்டமாக இருக்கும் என்று தான் இப்போதே சொல்லுகிறேன்” என்று, ஏன் இவ்விதம் பேசுகிறோம் என்பது புரியாமலே பேசினாள் கோமதி.

சீனு “சரி; வரப்போவது எதுவும் எனக்கு ஆச்சரியமா யிராது. எதுவானாலும் எப்படியும் நடக்கப் போவது தானே; சரி புறப்படலாமா?” என்றான்.

கோமதி கெட்டிக்காரிதான். ஆயினும் சீனுவுடன் ஒப்பிட்டால் அவள் வெகு மந்தம். அவன் அதிகமாகப் பேசாவிட்டாலும் பேசின கொஞ்சமும் அவளுக்குப் புரியவில்லை. பேச்சிற்கு அடிப்படையான அவன் மனோபாவத்தை அறிந்தால் தான் அவன் பேச்சின் அருத்தம் விளங்கும். அவன் எதிரில் மட்டும் தன்னுடைய மதிப்பு மட்டுப்பட்டுப் போனது என்ற ஒரு எண்ணம் நடுநடுவே அவள் மனதில் பிறந்தது. தனக்குத்தானே “தடிக் கழுதைகள் இவ்வாடவர்கள்; இவர்களிடம் பெண்கள் படும் சிரமம்!” என்று சொல்லி மனதைக் கொஞ்சம் தேற்றிக் கொண்டாள்.

கமலாவிற்கு சுரம் கடுமையாக இருந்தது. டாக்டருக்கு நம்பிக்கை மிகக் குறைந்துவிட்டது. தன்னுடைய முழு வன்மையையும் காட்டி கமலாவை சொஸ்தப்படுத்த வேண்டுமென்ற ஆத்திரம் கொண்டாள். ஏன் இவ்வகை மனோபாவம் கொண்டாள் என்பது அவளுக்கே புரிய வில்லை. கமலா சாதாரணத் தோற்றத்திலேயே விளங்கினாள். தான் இறப்பினும் தன் ஜீவிய ஞாபகத்தை ஒரே பார்வையில் பதித்துச் செல்ல முயலுவது போன்று தன் கணவனை மிக ஆறுதலாகப் பார்த்துக் கொண் டிருந்தாள். சீனுவிற்கு மூளை சுழல ஆரம்பித்தது. ஒருபோதும் இருவரும் இவ்வளவு நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை. அவன் கண்கள் ஈரமுற்றன. கமலா சிறிது பரிகாசம் தோன்ற “ஏன் கவலை? பைத்தியம் பிடித்து விட்டது போல இருக்கிறீர்களே. குழந்தையைப் பாருங்கள்; விளையாடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ”

*ஆம் கமலா; உனக்குப் பிறகு?”

“நீங்கள் ஜீவித்து இருங்கள். நம்முடைய குழந்தை இல்லையா? என்னுடைய நியாபகம் இல்லையா?”

“பரிகாசம் செய்கிறாயே உன் நிலைமை உனக்குத் தெரியாது. தெரிந்தாலும் இப்படித்தான் இருப்பாய். என்னைக் கண்டாலே உனக்குப் பரிகாசம்தானே. கமலா உன்னைப் பிரிந்து வாழ முடியாது என்று நான் சொல்லவில்லை. என்னைப் பொருத்தவரை உனக்கு அழிவில்லை . எப்படி வாழ்வது என்பதுதான் புரியவில்லை . எவ்வகை யோசனையாலும் அதை நிதானிக்க முடிய வில்லையே, கமலா” என்றான் சீனு.

“என்ன என்னவோ சொல்லுகிறீர்களே நீங்கள், நான் இறக்கும் முன் சாக வைத்துவிட்டீர்களே! நீங்கள் பெரிய அசடு, உங்களோடு வாழ்ந்து பட்ட கஷ்டம் போதும்” என்று கமலா சிறிது சிரித்த வண்ணம் “கிட்டே வாருங்கள்; ஒரு ரகசியம் சொல்லுகிறேன்” என்றாள்.

அவள் அருகில் சீனு தலையைக்கொண்டு போன வுடன் அவன் முகத்தில் ஒரு முத்தம் அளித்தாள். “இப்போது தெரிந்ததா உங்களுக்கு பின்னால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்குமென்று?” ஒரு நீண்ட முத்தத்தில் கழியும் போலும்!

டாக்டர் அருகில் நின்று இருந்தாலும் அவளை இருவரும் கவனிக்கவில்லை.

“ஆம் கமலா, நான் பைத்தியம்தான். இப்போது உனக்கு உடம்பு எப்படி இருக்கிறது?” என்று சீனு கேட்ட போது டாக்டர் கமலா அருகில் வந்து அவளைப் பரிசோதிக்க ஆரம்பித்தாள். கோமதியால் கமலாவை நன்கு உற்றுநோக்க முடியவில்லை. அவளுடைய ஜீவிய ஆனந்தத்தை எண்ணும்போது தன்னுள் அடங்கிய ஒரு குறை நன்றாகத் தலைகாட்டுவது போல இருந்தது அவளுக்கு, கமலாவிடம் பொறாமை கொண்டாள். அவள் ஆனந்தத்திற்கு சீனு காரணமென்று கருதிய கோமதிக்கு அப்போதைய நிலைமையில், சீனுவிடம் ஒரு அநுதாபம் ஏற்படலாயிற்று.

டாக்டர் பரிசோதனையில் தெரிந்து கொண்டவை, அவள் மனநிலைக் கேற்றவையாகவே இருப்பது போலிருந்தது. கமலாவின் நிலை மிக சந்தேகமாக இருந்தது. அவள் அநேகமாக இறந்துவிடுவாள் என்ற எண்ணமும் பலப்படலாயிற்று. டாக்டர் தன்னை வெகு நேரம் ஊான்றிப் பரிசோதித்தது கமலாவிற்கு ஒருவிதமாக இருந்தது. தான் இறப்பது நிச்சயம் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளத் தான் இந்த ஆழ்ந்த பரிசோதனை என்பதாகத் தோன்றியது. ‘ஏன்’ என்று நினைக்கும்போதும், டாக்டரும் ஒரு பெண் என்பதை எண்ணும்போதும், கமலாவின் மனதில் பட்டவை அவளுக்கு சஞ்சலமுண்டாக்கின. மற்றும் தன்னுடைய வாழ்நாள் குறுகிவிட்ட தென்பதும் உறுதியடைந்தது.

தன்னுடைய கணவனையும் கோமதியையும் மாறி மாறிப் பார்த்தாள். கணவன் முகத்திலும் மனதிலும் துக்கத்தைக் கண்டாள். டாக்டரிடமும் துக்கச் சாயையைப் பார்த்தாள்.

கமலாவின் நெஞ்சம் நேர்மை நிறைந்தது; உண்மை யின் மேல் வளர்ந்தது. விரிந்த மனசு. உலகத்தையே ஆட்கொள்ளக்கூடிய பெரும் புத்தி படைத்தவள்.

அதனால் தானே அந்த துக்கத்திலிருந்து இருவரும் ஆனந்தம் பெறுவர் என்று கமலா நினைத்தாள். ஏன் அப்படி நினைத்தாளென்பதும் அவளுக்கே விளங்கவில்லை.

கமலாவிடம் சுர மூளையில் இவ்வகை எண்ணங்கள் வெகு வேகமாகப் பதியலுற்றன. அவள் முகம் பிரகாச மடைந்தது. தன்னை இழந்த தன் கணவனின் பிற்கால வாழ்க்கையைக் காண ஆவலுற்றவளே போன்று அவள் கண் ஓடி வெகு அப்பாலே எட்டிய வெற்று வெளியிற் சென்று பதிந்தது. தன் குழந்தை விளையாடுவதைப் பார்த்தாள். டாக்டரை வெகு அன்போடு நோக்கினாள். குழந்தையைத் தவிர மற்றையோரெல்லாம் இவளை நேராகப் பார்க்க முடியவில்லை. தாங்கமுடியாத துக்கத்தி னால் வாய் அடைக்கப்பெற்று தலைகுனிந்து நின்ற சீனுவின் முகம் களை குன்றியது.

“கமலா! குழந்தையையும் என்னையும் அழைத்துக் கொண்டு போ; யார் எனக்கு இருக்கிறார்கள்? கமலா! ஏன் எப்போதும் தூர இருந்தே என்னோடு கலக்கிறாய்? என்னையும்கூட” சீனுவின் மனதில் நிச்சயமாகத் தன் மனைவியை இழந்துவிடப் போகிறோம் என்ற எண்ணம் உண்டாகிவிட்டது.

டாக்டர் சிறிது கூர்ந்து கவனித்தவள் திடீரென வியப்படைந்தாள்; ஸ்தம்பித்து சீனுவைப் பார்த்தாள். கமலாவினுடைய நிலைமை சிறிது சிறிதாக மாறிக் கேவல மாகியது. திடீரென எழுந்து “நான் போய் வருகிறேன்” என்றுசொல்லி வெளியேறிவிட்டாள் கோமதி,

ஒருமணி நேரத்திற்குப் பிறகு கமலா சவமானாள். சீனுவின் மனதைப் பிளக்கும் துக்கமும் அவன் நெஞ்சி லேயே அடைப்பட்டு வெளிவரவும் இயலாது புழுங்கியது.

4

மறுநாள் சாயந்திரம் சீனு யோசனையற்ற யோசனை களில் ஆழ்ந்தவனாக, தன் குழந்தைக்குப் பால் ஊட்டிக் கொண்டு இருக்கும்போது டாக்டர் கோமதி உள்ளே வந்தாள். இவன் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண் டிருக்கும் தோற்றம் அவள் மனதில் நன்றாகப் பதிந்தது.

“ஐயா, என்னுடைய வருகை என் வழக்கத்திற்கும் தொழிலுக்கும் பொருத்தமல்ல. ஆயினும் உங்களைப் பார்த்து என் ஆறுதலைத் தெரிவித்துப் போக வந்தேன்” என்றாள். பதிலொன்றும் தோன்றாமல் மௌனமாக அவளைப் பார்த்தவண்ணம் இருந்தான். குழந்தை தவழ்ந்துகொண்டு கோமதி காலருகில் சென்று அவள் புடவையைப் பிடித்து இழுத்தது. கோமதி குனிந்து அதைத் தூக்கி முத்தமிட்டாள்.

சீனு, “எவ்வகை நிகழ்ச்சியும் விநோதமாகத் தோன்றாமல் போவதில்லை. எதுவானாலும் மனோகற்பித மான அனுபவத்திற்கு அகப்பட்டாலும், அனுபவபூர்வமாக நிகழ்ச்சிகளை உணருவது வேறு மாதிரியாகத் தான் இருக்கிறது. நடந்ததைப் பற்றியோ, நடக்கப் போவதைப் பற்றியோ, நான் ஒன்றும் யோசிக்கவில்லை. களையின்றி எல்லாம் ஏதோ கனவு போலத் தான் தெரிகிறது. உங்கள் சிரமத்திற்கு -” என்று எப்போதையும் விடக் கொஞ்சம் அதிகமாகவே பேசினான்.

“இல்லை, ஐயா, உங்கள் மனைவியைப் போன்ற வளை இழப்பது உங்களை மட்டுமல்ல, சிறிது நேரப் பழக்கமேயுள்ள என்னையும் பாதித்துவிட்டது என்றாள்.

குழந்தை இதற்குள் அவளிடம் வெகு ஆர்வமாகக் கொஞ்சலுற்றது. “ஐயா, குழந்தையை நினைக்கும்போது வெகு கவலையாக இருக்கிறது. குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேனே. நீங்கள் அடிக்கடி வந்து பார்க்கலாம் ” என்றாள்.

சீனுவுக்குக் கொஞ்சம்கூட அர்த்தமாகவில்லை. அவன் பழக்க நிமித்தம் சொல்லும் ‘சரி என்னும் வார்த்தை வாயைவிட்டு வெளிவந்தது. அவ்வளவுதான், கோமதியும் குழந்தையுடன் வெளியேறிவிட்டாள்.

அன்றிரவு சீனுவுக்குத் தூக்கமில்லை. முதல் நாள் நிகழ்ந்த சம்பவம் அவன் மனதை அன்று பாதிக்கவில்லை. ஆனால், அன்றிரவு அவன் உலகில் தனிப்பட்டவனாகி விட்டதாக எண்ணினான்.

5

கோமதி மேல் படிப்புக்காக சீமை சென்று திரும்பி வந்து ஒரு வருடமாகிறது. சீனுவின் குழந்தை சின்னப் பையாவுக்கு ஏழு வயதாகிறது. கோமதியின் வீட்டிலேயே அவன் செல்வமாக வளர்க்கப்பட்டு வந்தான். சமீப ஐந்தாறு வருஷங்களில் கோமதி எப்படி மாறிவிட்டாள் என்பது ஒரு தனி அத்தியாயந்தான்.

சீனுவிற்கும் கோமதிக்கும் ஆடம்பரமின்றி சென்னை யில் மணம் நடந்தது. மணம் முடிந்த அன்று மாலை சீனுவும் கோமதியும் தோட்டத்தில் தனியாக உலாவி வரும் போது இருவரும் உணர்ச்சி மிகுதியாலோ உணர்ச்சி யற்றதாலோ ஒன்றும் பேசாமலே கொஞ்சம் தூரம் நடந்தார்கள். கோமதி அடிக்கடி சுற்றிச் சுற்றித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தாள். கமலாவைத் தேடிச் சுற்றி சூழ கவனிப்பது போலவும், தன்னை அவள் ஆட்கொண்டு அவள் அடைந்த அமைதியை தனக்கும் கொடுக்க வேண்டுவது போன்றும் இருந்தது அவளுடைய தோற்றம்.

உலகத்தின் மாலை மங்கல் ஒளி அதிகமாகவே மயங்கித் தோட்டத்திடையே சிறிது இருட்டாக இருந்தது. மனதில் வாய்விட்ட குதூகலம் காணாவிட்டாலும், வசீகரமான ஒரு புன்முறுவலைக் கண்டதாக எண்ணினாள். ஏதோ ஒன்றை எதிர்பார்த்ததை எங்கும் காண முடியாதவள் போல ஒரு பெருமூச்செறிந்தாள்.

தன்னை யாரோ பின் தொடருவதாக ஒரு உணர்ச்சி தோன்றித் திரும்பினாள். சின்னப்பையா குதித்து ஓடி வருவதைக் கண்டாள். கமலாவின் ஞாபகம் எங்கும் நிரம்பியது. சீனுவை கோமதி பார்த்தபோது அவனும் திரும்பித் தன் மகனைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். உணர்ச்சியற்று, ஆனால் பிறரது உணர்ச்சிகளை மாத்திரம் தன்னிடம் பிரதிபலிக்கச் செய்யும் கண்ணாடி போன்று ஸ்வச்சமாக இருந்தான் சீனு. கோமதி கமலாவைப் பற்றி பிரக்ஞையில் கலந்து நிற்கும் சீனுவைத் தான் அப்போது பார்த்தாள். அவ்வகையிலே அவனைக் காண வேண்டுமென்பதுதான் அவள் ஆசை. அவன் புறம் திரும்பி “உங்களைத் தனியாக உங்களுக்காகவே நான் உங்களை மணக்கவில்லை. என்னுடைய மனதைக் கவர்ந்து ஆட்கொண்ட கமலாவின் நினைவு ததும்பி இருக்கும் உங்களைத் தான் நான் காதலித்து மணம் செய்துகொண்டேன்” என்று சொல்லி அவன் கன்னத்தில் ஒரு செல்ல அடிகொடுத்து ஒரு முத்தமும் கொடுத்தாள். அருகில் நின்ற சின்னப்பையா வெட்கம் கொண்டு வெளியே ஓடினான்.

– ஹனுமான் மலர் 1937

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *