அணையில்லாத ஆறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 13, 2022
பார்வையிட்டோர்: 2,413 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“டேய்..சின்னக்கண்ணா…என்னடா…எங்க…ஏய்…பொக்கைக் கெழவா…தோ…அப்பாவப் பாரு…”. அந்த சின்ன வடிவிலான, மெத்தென்ற பஞ்சுக் குழந்தையை ராம்நாத், தூக்கிக் கொஞ்சினார். பிள்ளையில்லை என்று ஊர் சொல்லாத நிலையில் வந்து பிறந்தான் ராஜு. ஆறு மாதங்கள் ஆன அந்த அமுதசுரபியை, இனித் தினமும் எட்டுமணி நேரம் பிரிய வேண்டிய சூழ்நிலையில் இஷா இருக்கிறாள்.

“இஷா, நீ அடுத்த வாரத்துலயிருந்து ஆஃபீஸ் போணுமே…ராஜூவை எங்க விட்டுட்டுப் போறது? நம்ம சர்வண்ட் கிட்டயே விட்டுடலாமா?”

“எப்டிங்க முடியும்? அவ ரொம்பச் சின்னப்பொண்ணுங்க. எங்கியாவது ‘க்ரீச்’ இருக்குமான்னுதான் பாக்கணும். ஆனா நெறய ‘க்ரீச்சஸ்’ பணத்தைக் கொள்ளையடிக்கிற எடங்களாதான் இருக்குங்க. கொழந்தைங்களுக்குக் குடுக்கறது எல்லாத்தையும் அவங்களே எடுத்துகிட்டு, பட்டினி போடுறாங்க! இப்டிலாம் நடந்தா என்னங்க ஆவுறது?” துணியை நனைச்சுட்டு நிக்கற குழந்தையை கவனிக்கறதுல்ல. கவனிச்சாலும் ‘பட்பட்’டுன்னு ரெண்டு போட்டு அழவிட்டு அழுது மிரட்டி…”

“அய்யய்யோ..அப்ப வேணாம்மா…ராஜூவை அதைவிட நான் ஒரு நாள், நீ ஒரு நாள்னு லீவு போட்டுட்டுப் பாத்துக்கலாம்”

குழந்தை மீதுள்ள அளவிட முடியாத பாசத்தால், ராம்நாத் மனம் துன்பப்பட்டார்.

“எப்படிங்க முடியும்? பாத்துக்கிறதாம்? எத்தனை நாளைக்கி அப்படி பாத்துக்கிறதாம்?. எம் ஃப்ரண்ட் மோனிகா, அண்ணாநகர்ல ஒரு ‘க்ரீச்’ இருக்குன்னு சொன்னா! ரொம்ப நல்லார்க்காம்…ஃபாரின்லருந்து ஒரு நிறுவனம் ஸ்பான்ஸர் பண்ணுதாம். அங்கர்ந்து சில பொண்ணுங்க வந்து நல்லா பாத்துக்கறாங்கன்னா…பணம்தான் கொஞ்சம் அதிகம்…காலைல எட்டு மணிலேர்ந்து சாய்ந்தரம் அஞ்சு மணி வரைக்கும் பாத்துப்பாங்களாம்…”

“பரவால்லியே….அப்டின்னா அங்கயே விட்டுடலாம். ஆனா.. ” என்று இழுத்தான்.

“என்னங்க ஆனா?” என்றவளிடம், “நாம இருக்குறது ஷெனாய் நகர். தினமும் அங்க போய் விடுறது முடியுமா? ன்னுதான் யோசிக்கறேன்” என்றான்.

“எனக்கும் அந்த யோசனை வந்தது. அதுக்கு டிரான்ஸ்போர்ட்டும் வச்சிருக்காங்களாம். கவலையை விடுங்க. என்ன இருந்தாலும் வேலை செய்யற எடத்துக்குப் பக்கத்துலயே அந்தந்த கம்பெனிங்க ஒரு க்ரீச் வச்சுட்ருந்தா எவ்ளவ் நல்லார்க்கும்? ம்…” என்றாள் அவள்.

குழந்தைக்குத் தேவையான பால், பிஸ்கட்டுகள், விளையாட்டுச் சாமான்களை எடுத்துக்கொண்டு, “வரேங்க” எனக் கணவனிடம் சொல்லிவிட்டுச் சென்றவள், வழியெலாம் குழந்தையைக் கொஞ்சிக்கொண்டே செல்கிறாள்.

“டிரிங்…டிரிங்..”

“ஏம்மா…பாத்துப்போம்மா…கொழந்தயை வச்சுகிட்டு இப்டியா வர்றது? ஏதாவது ஆகப்போகுது” சைக்கிள்காரன் திரும்பிப்பார்த்துச் சொல்லிவிட்டுப் போனான்.

“க்வா…க்வா…யே…..” குழந்தைகள் ஸ்வரங்களில் சில நேரங்களில் சுகஸ்வரமும் நேரங்களில் அபஸ்வரமும் எழுப்பிக் கொண்டிருக்கும் ஸ்ரீரமணா க்ரீச் சிற்கு வருகிறாள், இஷா. அங்குள்ள பெண்ணிடம் குழந்தையையும் கூடையையும் தந்துவிட்டு, ஒம்பது மணிக்குக் கொஞ்சம் ஃபாரக்ஸ் குடுங்க…. அப்றம் வெளையாட விடுங்க. அதுக்கப்றம், அந்த பிஸ்கட்டை குடுங்க..டிரஸ் மூணுசெட் வச்சிருக்கேன். கொஞ்சம் பாத்துக் கவனிங்கங்க” கொடுக்க வேண்டிய ஆர்டர்களைப் பணிவாகத் தந்துவிட்டு, .

“ராஜூ, நான் வரேண்டா…’இச்’ என முத்தம் கொடுத்துவிட்டு ஏக்கத்துடன் மெல்ல அவனைப் பார்த்தவாறு, பின்பக்கம் பார்க்காமலே பின்புறமாக நடக்கிறாள். ‘டாடா’ சொல்கிறாள். அவளுக்கு அங்கேயே முகம் சிறியதாகி விடுகிறது. குழந்தையையும் முழங்கால் போட்டுக்கொண்டு தலையை மெல்ல உயர்த்திக் கண்களால் அந்தத் தாயைப் பார்க்கிறது. சொல்ல முடியவில்லை…ஆனால் கண்களிலே தாயைப் பிரிகிற தவிப்பு மின்னுகிறது.

அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருப்பாள். திடீரென நிர்வாகி வந்தால் ஏதோ கற்பனையில் ஆழ்ந்திருப்பாள். “என்னம்மா இஷா, கற்பனையா?”

“ஆ…ஆமா சார்…ஆனா வேலையெல்லாம் முடிச்சுப்புட்டேன் ராஜூவைப் பத்திக் கொஞ்சம் யோசிச்சிட்ருந்தேன்…ளவ்…. எவ்தான் ஸார்.. ஸாரி ஸார்” தாய்மை, பணிவுடன் பதில் கூறும்.

அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. என்னபண்றது…. இந்த எட்டுமணி நேர பந்தத்துல ஆயுள்காலத்துக்கும் நமக்குத் தேவையான சொந்தத்தை யாராலம்மா மறக்க முடியும்? அதுவும் ஆறு ஏழு மாசக்கொழந்தையை வச்சிட்ருக்கற நீ எப்டிதான் பாக்காம இருக்கியோ ஓ……யு வார் கிரேட்”. பாசமுள்ளவர் அங்கு குழந்தையாகச் சிறுத்து விடுகிறார். இஷா மனத்துக்குள் மகிழ்கிறாள். எதிர் வரிசையில் உள்ளவர்கள் எல்லாம் பொறாமையால் இவளைப் பார்க்கின்றனர்.

மதியம், லஞ்ச் டைமிலும், “ஏய்…எங்கொழந்தையையை என்னோட கண் தேடுதுடீ… ச்சீ நான் ரொம்பப் பாவம் பண்ணினவ….அ…தான் இப்டி ஒரு தண்டனை…கடவுள் வேண்டிய அளவு வசதியத் தந்துருந்தா இப்டி ஆயிருக்காதுல்ல…என்னதான் இருந்தாலும் படிக்காதவங்க, வேலைக்குப் போவாத அம்மாக்கள்லாம் குடுத்துவச்சவங்கம்…அந்தக் கொழந்தயோட முகத்தை, நிமிஷத்துக்கு நிமிஷம் ரசிக்கறது இருக்குதே….ஓ…நத்திங் ஈஸ் ஈக்வல் ஃபார் தட் பிளஷர்”.

“சரிடி…சாப்டு….ஒங் கொழந்தை நல்லா வளர்வான். பின்னால் ஒன்னவிட்டுப் போவவே…மாட்டான்….பெண்டாட்டி வந்தாக்கூட ஒங்காலத்தான் சுத்திச் சுத்தி வருவான்” மோனிகா பதில்தர, மகிழ்ச்சியில் நெஞ்சு புடைத்துப் போவாள்.

இப்படி மகிழ்ச்சியில் பூரிக்கும் போதெல்லாம், நெஞ்சில் அந்த அமுதம் பெருக்கெடுக்கிறது. கழிவறையில், குழந்தைக்கு உதவாததை, மனவருத்தத்துடன் வெளியேற்றிவிட்டு வருகிறாள். இப்படிச் சோகத்துக்குள் சுகத்தைத் தேடியவள் மாலையில் ஆபீஸ் விட்டதும், ஓடி வருவாள். அங்குப் பிடித்த ஓட்டம் ‘க்ரீச்’சின் உள்வாசலில் வந்துதான் நிற்கும்.

இவளுக்குமுன் இவள் குழந்தை பாய்ந்து ஓடிவருவான். “இச்..ச்…இ…” எத்தனை முத்தங்கள் கொடுக்க முடியுமோ அத்தனை முத்தங்களை வாரி வழங்குவாள். பதிலுக்கு அதுவும், தன் நாக்கை நீட்டி, அங்கங்கே எச்சிற்கோலத்தை இவள் மேல் போடும். இதை மற்றக் குழந்தைகள் சற்று ஏக்கத்துடன் பார்க்கும். நம் அம்மாவும் வரவில்லையே என்று.

ராம்நாத் சீக்கிரம் வந்தாலும் இதே நிலைதான்…எதிரில் பெண்கள், குழந்தைகள் இருக்கிறார்களே என்பதையெல்லாம் மறந்துவிட்டு, குழந்தையுடன் ஓர் அன்புக்காதலை அமைதியாக அரங்கேற்றுவான்.

வீட்டுக்கு ‘வேகுவேகெ’ன்று வேகமாக வந்தவள், கூடத்திற்குள் வருவாள். அவ்வளவுதான். உடனே, “இவனை வச்சுக்குங்க நான்…சமயல் பண்ணிட்டு வந்துட்றேன்” கொடுத்துவிட்டு, புடவையை இழுத்துச்செருகிக்கொண்டு சமையலறைக்குள் செல்வாள்.

“இஷா…நீயே செய்ய வேணாம்…நானும் செய்றேன். அதேசமயம் இவன் பெரிசாவ்ற வரைக்கும் நீ கஞ்சி சாதம் போட்டாக்கூட நான் எதுவும் சொல்லமாட்டேன்”.

“அப்டியாங்க!” நெகிழ்ந்து போவாள் இஷா.

இரவு உறங்கும்வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவும் பார்க்காமல், ராஜாவுடன் நேரத்தைக் கழிப்பார்கள். தாங்கள் தூங்கும்போது அவனைப் பார்க்க முடியவில்லை என்று வருந்துவார்க்ள். சிலசமயம் இவர்கள் விழித்திருக்கும்போது, ராஜா தூங்கினால், இருவருக்கும் பொறுக்காது. “நான் எழுப்பட்டுமா? அவங்கூட. கொஞ்சம் வெளயாடலாம்” எனப் போட்டிப் போட்டுக்கொண்டிருப்பார்கள்.

அன்று ராஜாவுக்கு நட்சத்திரப்படி பிறந்தநாள். இந்த உலகத்துக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. அதனால் வீட்டில் இவர்கள் இருவர் மட்டும் இணைந்து அவனுக்கு விழா கொண்டாடுவதாக இருந்தார்கள். ஆங்கிலத்தேதிப்படி இரண்டு நாள் கழித்துப் பெரிய விழா வைத்துக் கொள்ளலாம் என்று இருந்தனர்.

காலையிலேயே, அனைவரும் சீக்கிரமாக எழுந்தனர். தூங்கிய ராஜாவையும் ராம் எழுப்பி, குளிக்க வைத்து, இஷாவின் பிரியமான துணிப் பரிசைப் போட்டு விட்டான். இஷா சமையல் செய்தாள். அன்று முதல் ராஜூவுக்குப் பருப்பு தால், காய்கறி மசியல் கொடுத்துச் சாப்பிட வைக்க ஆரம்பித்தனர். முருகன் கோவிலுக்குச் சென்று, குழந்தையின் நட்சத்திரத்துக்குப் பூஜை செய்தனர். அலுவலகம் கிளம்ப நேரமானது.

“ராம் நான் இன்னிக்கு லீவ் போடலாம்னு நெனச்சேன்……. நாளைக்கு செண்ட்ரல் ஆபீஸ்லருந்து மேனேஜிங் டைரக்டர் வராறாம். அதனால் இன்னிக்கு வேலைக்கு கட்டாயம் போவணும்…. ஆனா சாய்ந்தரம் அஞ்சரைக்கெல்லாம் வந்துட்றேன். சின்ன கேக் ஒன்னு வெட்டிட்டு, எங்கயாவது வெளியே ‘அவுட்டிங்’ போவலாம்… நீங்களும் சீக்கிரம் வந்துடுங்க” என்றாள்.

“நான்……இன்னிக்கு ராஜாவோட இருக்கப்போறேன். நானே அவனை தூக்கிட்டு போய் விட்டுட்டு வர்றேன். நீ கூடைல எல்லாப் பொருளையும் எடுத்துவை” ராம் நெஞ்சு நிறைய மகிழ்ச்சியுடன் கூறினார்.

“சரிங்க” இன்று ‘கிரீச்’ வரை கூட அவனுடன் செல்ல முடியவில்லை. அவனுக்குப் பால் புகட்டிவிட்டு, நேசத்துடன் பீறிட்டெழும் பாசத்தில், முத்தங்களைப் பொழிந்துவிட்டு, ‘டாடா’ சொல்லியவாறு ஆபீஸ் கிளம்பினாள். வழியில் பலர், இவள் வழக்கமாகக் கொண்டு செல்லும் குழந்தை இல்லாமல் செல்வதைப் பார்த்தவாறே சென்றனர்.

என்றைக்குமில்லாமல் இன்றைக்கு அவளது கற்பனை பரந்து விரிந்த நிலையில் இருந்தது. மேலும், மகனுக்கு எப்படியெல்லாம் புதிய உணவுகளை அறிமுகப்படுத்துவது, இப்போது ராம் யானை வெளயாட்டெல்லாம் அவனோட வௌயாடுவாரே!” என்றெல்லாம் யோசித்தாள். மானேஜர் இன்று நிச்சயம் திட்டுவார் என்பதால் பக்கத்தில் இருந்தவர்கள் “மேனே… மேனேஜர்” என்று சொல்லியது கேட்டு வேலையில் ஆழ்ந்தாள்.

மதிய உணவின்போது கூட, “ஏய்…… கொழந்தைக்கு இன்னிக்கு நட்சத்திரப்படி பர்த்டே இந்தாங்க………பயத்தம்பருப்பு பாயசம்….. நாந்தான் டிரஸ் எடுத்து குடுத்தேன்….. ஈவ்னிங் அவர் வாங்கின டிரஸ் போட்டுக்குவான்……ரொம்ப அழகா இருக்கான்…… அய்யோ எங்கண்ணே பட்டுடும் போலருக்கு…… கடவுளே எதுவும் ஆகக்கூடாது” அடுக்கிக்கொண்டே போனவளின் எண்ணத்தொடரை, ராதா தற்காலிகமாக நிறுத்தினாள். “சாப்டும்மா…… அப்புறம் கற்பனை செய்யலாம்”. அவளும் சொல்லிச்சொல்லி அலுத்துவிட்டாள். ஆனால் கோபப்படாததுதான் அவளது சிறப்பம்சம்.

மதியத்துக்கு மேல் சுமார் பத்து கோப்புகளையாவது பார்த்திருப்பாள். ஒரு ஃபைலை முடித்துவிட்டு, ‘அவ்ளவ்தான்” என்று நிமிர நினைக்கையில், “நிமிராதே” என்பது போல் அடுத்த கோப்பு வரும். அவளால், ராஜூவை, மருந்துக்குக்கூட நினைக்க முடியவில்லை. சிலநேரம் பாசத்தால் தனை மறந்து ஆனந்தக்கண்ணீர் விடுகையில் கோப்பில் உள்ள எழுத்துக்கள் மறையும். அழியாத மையினால் எழுதப்பட்டிருப்பதால், கண்ணீர்த்துளி விழுந்து எழுத்துகள் அழியா. ஆனால், ராஜூவின் முகம் அதில் தெரியும்.

மாலை மணி நான்கரையாயிற்று. தனது கைப்பையில் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டாள். கிளம்ப எழுந்தாள். அப்போது,

“இஷா, ….ப்ளீஸ்மா….இன்னுங்கொஞ்சம் இருக்கும்மா.. பாத்துடும்மா… ஓ.டி (OT) மாதிரி வச்சுக்கோம்மா… நாளைக்கு டைரக்டர் வர்றதாலதாம்மா… எல்லாரும் வேலை செய்றாங்க பாரும்மா…” இவ்வாறு கேட்டது அந்த மானேஜர் தவிர வேறு யாராவதாக இருந்தால் அவள் ஓர் அறை அறைந்திருப்பாள்.

“ஓ… பாவி மனுஷா….அவ்வளவு கற்பனையையயும் சுக்கு நூறாகப் பொடி செய்துட்டியே….” வருத்தத்துடன், மனத்துக்குள், “அவங்கல்லாம் வேலை செஞ்சா…? எனக்கு மாதிரி சின்னக் கொழந்த இருந்தா அவங்களும் செய்யமாட்டாங்க… எங்கொழந்த இந்நேரம் என்னை எதிர்பாத்துட்டிருக்கும்” கவலைப்பட்டுக்கொண்டே, தலையாலேயே “சரி” என்றாள். மானேஜர் புன்னகையுடன் நகர்ந்தார்.

நேரம் ‘உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே’ என்பதுபோல வேகமாக ஓடியது.

“சே…. கடவுள் இப்படியா தண்ட னை தரணும்…. ஒரு ஃபைலைப் பாக்றதுக்கே ஒரு மணிநேரம் ஆவுதே…. எவ்ளவ் மிஸ்டேக்ஸ் இருக்கு….” கவலைப்பட்டுக்கொண்டே கையைத் திருப்புகிறாள். மணி ஐந்து இருபத்தைந்து.

“அய்யோ … ராம்நாத் வேற காத்துட்ருப்பாரே…. சொல்லியிருந்தா அவராவது ‘க்ரீச்’சுக்குப் போயித் தூக்கிட்டு வந்துடுவாரே… கடவுளே” அவள் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தாய்ப்பாசத்தில் தடாகமாகிப் போனாள்.

அதே நேரம், ‘க்ரீச்’சில்,

ராஜூ ….க்ரீச்சின் ஜன்னல்கம்பிகளை மெல்லப் பிடித்துக்கொண்டே, “எல்லாப் பசங்களும் எப்டி ஜாலியா போறாங்க… அந்தப் பாப்பாவை அவுங்கம்மா எப்டிலாம் கொஞ்சுறாங்க… தோ இந்தப்பையன் நம்மளவிடப் பெருசா இருந்தாக் கூட அவுங்கப்பா அப்டியே தலைக்கு மேல தூக்கிக் கொஞ்சுறாரு….” என்று கண்ணாலேயே தன்னவர்களை வழிமேல் விழிவைத்துப் பார்க்கிறான். வயது குறைவு என்றாலும் அறிவில் பெரியவனாக அவன் சிந்திக்கிறான். இதுதானே இந்த இருபதாம் நூற்றாண்டின் வியத்தகு விந்தை!

“அப்பா …..பசிக்குது…” அழுத நான்கு வயது பையனிடம், அவனது தந்தை சிறிய சில்வர் டப்பாவிலிருந்து பிஸ்கட்டை எடுத்துத் தருகிறார். அதையும் பார்க்கிறான், ராஜூ.

“அம்மான்னா …இச்…னு ஒரு முத்தம் தருவாங்க. ஆனா, இங்க, நான் துணிய நனைச்சிட்டா இவுங்கல்லாம் கண்ணாலேயே மொறைக்கிறாங்களே…அம்மான்னா, “என்னடா கண்ணா ….” என்று சிரித்தபடி, என் டிரெஸ்ஸை அவுத்துச் சுத்தம் செய்வாங்க…அம்மா அம்மா ….” மழலையில் சிந்தித்தபடி கண்ணாலேயே பேசினான் ராஜூ அவன் பேசுவதை யாரும் புரிந்து கொள்ளவும் முடியாது; புரிந்தாலும் பதில் சொல்லவும் இயலாது.

அவனது தவிப்பைக் கண்ட ஆசிரியை ஒருவர், “என்ன ராஜூ…அம்மா வல்லியா…. வந்துடுவாங்க…..” என்றபடி தன் கடிகாரத்தைப் பார்த்தார்.

“ஹப்பா …கடைசியா முடிஞ்சுது….எமன் மாதிரி வந்து என் உயிரை எடுத்துவிட்டது” என்று கடைசி நேர வேலையையும் கோப்பையும் முடித்துவிட்டு, கொடுக்க வேண்டியவரிடம் கொடுத்துவிட்டு வெளியே ஓடி வருகிறாள். வெளியே வந்தவள் பஸ்ஸில் தென்படும் பயங்கரக் கூட்டத்தைக் காண்கிறாள். எல்லா பஸ்களும் தொங்கும் தோட்டங்களாகவே செல்கின்றன.

“சரி…பக்கத்துல இருக்கிற ஸ்டேஷனுக்குப் போயி, இலெக்ட்ரிக் ட்ரெய்ன்ல போவலாம்” திட்டமிட்டபடி ஓடுகிறாள். போனவள், 5.48-க்கான மின்சார ரயிலில் ஏறுகிறாள்.

“அட…காலியா இருக்கே… இப்படி ஸீட் கிடைப்பது ரொம்ப அதிசயம். மழை பொத்துண்டு வரப்போறது. இனிமே, ரயில்லதான் போகணும்னு பகவான் கணக்குப் போட்டுருக்காரோ என்னமோ” அந்த நிலையிலும் கடவுளைப் பற்றி எண்ணினாள். இருக்கையில் அமர்ந்தவள், உடனடியாகத் தன்னை மறந்தாள். மகனிடம் ஓடிவிட்டாள்.

“டே…. ராஜூ …நான் லேட்டாத்தான் வருவேன்; அம்மாவைப் பாத்துட்டே இருப்பல்ல……. என்னடா பண்றது… கடமையைக்கூடச் சிலநேரம் தவற விடுற நிலை. என் ராஜா…பசிக்குதா…. தோ ஒரு நிமிஷம்!” சிந்தித்தவளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ரயில் வேகமாகச் செல்கிறது. விரைவில் மகனைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை அதிகரிக்கிறது.

“என்ன இவ?… இவ்ளவ்நேரமாவுது ..இன்னும் வரலியா…நானே கூட்டிட்டு வந்துட்றேன்னாளே…. ஒரு சமயம் ‘க்ரீச்’ல பேசிட்ருப்பாளோ…… இல்ல ‘க்ரீச்’லருந்து பஸ்ல வரணும்னு நெனைச்சிருப்பாளோ? என்னைவிட ரொம்பப் பாசமாச்சே….சரி…. எப்டியும் வருவாங்க…. இன்னுங் கொஞ்சநேரம் பாப்போம்…” ராம் மனத்தைத் தேற்றிக் கொள்ள,

“டங்… டங்…. டமால்….” ரயிலின் முன்பெட்டிகள் ‘கடகட’வென்று உருண்டன; மகனின் முகத்தைக் கற்பனையில் பார்த்துக் கொண்டிருந்தவள், திடீர்த் தடங்கலால் திடுக்கிட்டு வெளியே எட்டிப் பார்க்கிறாள். தலை வலிக்கிறது. இருந்தும் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறாள்.

“எவனோ சாவுறதுக்குத் தண்டவாளத்துல படுத்திட்ருந்தானாம்… டிரைவர் பிரேக் போடப் போனதுல, இந்த ட்ரெய்ன் தடம் பொறண்டுடுச்சி…” ஒருவர் சத்தமாகப் பேசியது இவளுக்குக் கேட்டது; மனம் சுருண்டது.

“அடக்கடவுளே… இது என்ன….. சோதனையே தானா? இன்னிக்கு யார் மொகத்துல முழிச்சேனோ? சரி… இங்கருந்து எப்டிக் கெளம்புறதுன்னு பாக்கலாம்…” இறங்கிப் போகிறாள். போனால், அங்கே இவளது தூரத்து உறவினர். தடம்புரண்ட ரயில் சந்திக்க வழி செய்திருக்கிறது. கல்யாணத்தின் போது அவளைப் பார்த்திருக்கிறார். அடிபட்டு மயங்கிக் கிடக்கிறார். நெஞ்சில் அதிர்ச்சி…அட… இவர், எங்கப்பாவோட ஒண்ணுவிட்ட சித்தப்பால்லியோ…. உடனே, பையில் தண்ணீர் பாட்டிலில் மிச்சமிருந்த தண்ணீ ரை எடுத்து, அவர் மேல் தெளித்து, கை காலில் உள்ள இரத்தைத்தைக் கைக்குட்டையால் துடைத்து ஒருவழியாக அவர் கண் விழிக்க வழி செய்தாள். இவரைப் போலப் பலர் ரயில் போட்ட ஆட்டத்தில் அவதிப்படுவதை நடைபாதை முழுதும் கண்களை ஓடவிட்டபோது, பார்த்தாள். விழித்தவர், முனகினார்.

“இ….சா…வா… எப்டிம்மா?” என்றபடி அவர் சற்று ஒருவழியாக, உறவுமுறையைப் புதுப்பித்துக்கொண்டு, சுகதுக்கங்களைப் பரிமாறிய பின், அங்கே வந்த ‘ஆம்புலன்ஸ்’ மூலம் அவரையும் அவரைப் போன்ற பலரையும் ஏற்றியபோது, “நல்லா இரும்மா” என்று அந்த நிலையிலும் அவளை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார்.

“ஆமா…நல்லா இரும்மா! பெரீய்ய நல்லாயிரும்மா! ….யாராவது சீக்கிரம் வீடு போம்மா!…னு சொல்றாங்களா…என் தவிப்பு எனக்கில்ல தெரியுது…என் வீட்ல ஒரு போன் இருந்தா இந்நேரம் ராமுக்காவது சொல்லியிருப்பேன்…பகவானே!…ஏந்தான் இப்டி சோதனை செய்யுறியோ…..” என்றவள், மகனைப் பார்க்கிறாள். மனத்தில்தான். இதற்கிடையில்,

“ரயில் இப்பக் கெளம்பாது…ரெண்டு பேர் அவுட்டாம்…. கேஸ் ஆயிடுச்சாம்…” எவனோ அசரீரி போல் கூறியதைக் கேட்டவள், மீண்டும் ரயிலைப் பார்க்கவிரும்பாமல், அருகிலிருந்த ஒற்றைவாடைத் தெரு வழியாக முக்கியச் சாலைக்கு வர முடிவெடுக்கிறாள். உடல் வலிக்கிறது. எனினும் தன் கௌரவம் பார்க்காமல், கண்மண் தெரியாமல் ஓடிவருகிறாள். தெருவில் ஆங்காங்கே சிறுவர்கள் தண்டவாளத்தின் அருகிலிருந்து கொண்டுவந்து போட்ட கருங்கற்கள் காலில் குத்தும்போது, ‘ஸ்’ என்று மட்டும் வலியைப் பொறுத்துக்கொண்டு ஓடுகிறாள். கண்களோ, வழியில் ஆட்டோ கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டே வருகிறது. இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை என்பதுபோல, ஆட்டோ இல்லாவிட்டாலும் ரிக்ஷா ஒன்று வருவதைப் பார்த்து அதில் ஏறினாள்.

குட்டி போட்ட பூனையாய் வீட்டுக்கும் வெளியிலும் நடைபயிலும் ராம்நாத், “என்னாச்சு…இவ்ளவ் நேரமாச்சே… நம்மளே போய்ப் பாத்துட்டு வருவமா…

வழியில ஏதாவது ஆக்ஸிடெண்ட்டா … எதுக்கும் போய்ப் பாத்துட்டு வர்லாம்… என்ன இது? சோதனைமாதிரி இன்னைக்கு வெளிய போக முடியாது போலருக்கே” மனத்தில் பேசிக்கொண்டே, பூட்டை எடுத்து கதவைப் பூட்டிவிட்டுக் கிளம்பினார்.

ராஜூவோ, ஜன்னலைப் பிடித்தவாறு நிற்க முடியாமல், கால் வலிக்கும்போது அவ்வப்போது உட்கார்ந்து கொள்வான். செருப்புச் சத்தம் ‘சரக்…சரக்’கென்று கேட்கும்போதெல்லாம் எம்பிப் பார்ப்பான். பிறகு, மனம் சுருண்டு தரையில் உட்கார்ந்து மெல்ல அழுவான்; அல்லது ஏங்குவான். அவனது பார்வைக்கு உரிய விடையைத் தர யாரும் இப்போது முயலவில்லை. எல்லாரும் அவனை அழைத்துச்செல்ல யாராவது வருவார்களா என்பதை எதிர்பார்த்தனர். அப்போது, அங்கே கூட்டி மெழுகி வேலைபார்க்கும் பெண், பிஸ்கட் ஒன்றை அவனது கூடையிலிருந்து எடுத்துத் தருகிறாள். அதை அப்படியே தூக்கி எறிந்து விட்டான். சுருங்கிப் போன மஸ்லின் துணி போல அந்தப் பிஞ்சு முகம் துவண்டிருக்கிறது.

ராம்நாத் ‘க்ரீச்’சுக்கு வந்து விட்டார்….. வழக்கமான செருப்புச் சத்தத்தைக் கேட்டவன், “ப்பா…ப்பா….ஆ….. ஆ” என்கிறான். வேகமாக அவரை நோக்கித் தத்தித் தத்தி ஓடுகிறான். என்ன இன்னும் அம்மா வரலியா என்பதுபோல, “ம்மா…ம்மா…?” என்கிறான். மனத்துள் பாசமும் கவலையும் சேர்ந்து கொள்ள, ஆசையுடன் தூக்கிக் கொஞ்சுகிறார், தந்தை. மனைவி வராததைப் புரிந்துகொண்டு கவலையுடன்,

“இவங்கம்மா வந்தா நான் கூட்டிட்டுப் போய்ட்டேன்னு சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு, வழியெல்லாம் குழந்தையுடன் குழந்தையாக அவரும் கொஞ்சிக் கொண்டே சென்றார். ஆனால், “இஷா ஏன் வரலை……?” என்ற சிந்தனை நிமிடத்துக்கு நிமிடம் அவரை உறுத்திக் கொண்டேயிருந்தது.

“ஆங்…. இங்கதான் நிறுத்துப்பா …. இந்தா …மீதிய நீயே வச்சுக்கோ” மகனது பிறந்தநாளை முன்னிட்டுப் பேரம் ஏதும் பேசாமல் பத்து ரூபாயை ரிக்ஷாக்காரரின் கையில் வைத்துவிட்டு நகர்ந்தாள்.

“அப்பாடீ…எப்டியோ குறுக்குவழியில் ராஜூ இருக்குற இடத்துக்குப் பக்கத்துல வந்தாச்சி… மேம்பாலம் ஏறி எறங்குனா ‘க்ரீச்’ வந்துடும்…. அய்யோ என் ராஜூ எப்டிலாம் கஷ்டப்பட்ருப்பானோ? கடவுளே? ஒனக்குக் கண்ணில்லையா? இப்டியா சோதிக்கிறது? என்னால தாங்க முடியலப்பா?” மகனின் பாசம் நெஞ்சைப் புடைக்க, வியர்த்துக் கொட்டுகிறது அவளுக்கு. எத்தனை வேகமாக நடந்தாலும் நடப்பதென்னவோ வழக்கமான வேகம் போலவே அமைகிறது. மனம்தான் இப்போது வேகமாக அடிக்கிறது.

ஒருவழியாக மேம்பாலத்தைக் கடந்துவிட்டாள். சற்றுத் தூரத்தில் ஏதோ கூட்டம் வருவதுபோல் தெரிந்தது. “என்ன……. யாரையாவது நுங்கம்பாக்கத்துக்கு எடுத்துட்டுப் போவாங்க. இங்க சிலர், எறந்தவங்களுக்குக் கூட ஆட்டம்பாட்டத்தோட சவ ஊர்வலம் நடத்துவாங்க” என்று தனக்குள் பேசிக்கொண்டவள், சற்று நேரத்தில் தான் எண்ணியது தவறு என உணர்ந்தாள்,

“உழைப்பவர்க்கு வேலை கொடு; மாணவர்களை வருத்தாதே” கோஷம் போட்டுக் கொண்டு வந்தவர்களைக் காவல் துறை தடுத்தது. அவ்வளவுதான்… பக்கத்தில் உள்ள சோடா பாட்டில் கடை காலியானது. பாட்டில்கள் சில்சில்லாய் மாறின. ஒருசில், வேகமாக வந்த இஷாவின் இடப்புற நெற்றியில் பட்டுக் குத்திட்டு நின்றது.

“ஆ…….அய்யோ …. ராஜு” அலறினாள். அவளைப் பொறுத்தவரை எல்லாம் ராஜூதான். வேறு எதுவும் இல்லை . மென்மையான அவளது நெற்றியில் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாத கண்ணாடிச் சில் கீழே விழுந்தது. இரத்தம் கண்களைக் கடந்து கன்னத்தில் வழிந்தது. வலி சற்று அதிகமாக இருந்தது. எனினும் ராஜூவை நினைக்கும்போது அவனைப் பற்றிய எண்ணமே அதிகமாக வலித்தது. ஆனால் இவளுக்கு அடிப்பட்டது பற்றி யாருக்கும் கவலையில்லை. எல்லாரும் அவர்களது போராட்டத்தில் மும்முரமாக இருந்தனர். “இதற்காக நின்றால், நீ தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் உன் ராஜூ அழுவான்; தேம்புவான்; அம்மா அம்மாவென்று விசும்புவான்; ஓடு ஓடு ஓடு….” என்று உள்ளம் ஓங்கரித்தது.

‘க்ரீச்’சுக்கு ஓடினாள். எல்லோரும் அவளை வியப்புடன் பார்த்தனர்.

“அவர் கூட்டிட்டுப் போயிட்டார்மா”

அவ்வளவுதான்…. மீண்டும் ஓடினாள்; ஓடினாள்; ஓடியவள் வீட்டின் ‘கேட்’டைத் திறக்கும்வரை அதைத் தொடர்ந்தாள். ஓரே அடியில் உள்ளே நுழைந்தாள். மனம் கொள்ளாத பாசத்தோடு இவள் மகனைத் தேட, முகம் கொள்ளாத சிரிப்போடு “அம்மா” என்று அழைத்துக்கொண்டு தத்தித்தத்தி நடந்து வந்தான் குழந்தை. கண்களில் கண்ணீ ர் ஓட, அவனை வாரி எடுத்து முகம் உடல் எல்லாம் இச்…ச்…இச்… என அன்பு மழை பொழிந்தாள்; இதை எத்தனை முறை தொடர்ந்தாலும் போதாது எனுமளவுக்கு அன்பெனும் அமுதசுரபி அவளுள் சுரந்தது. அதற்குச் சாட்சியாக நெற்றியின் ரத்தம் குழந்தையின் முகத்தையும் கோலம் செய்தது… வெள்ளை மாவிட்ட கோலத்துக்குக் காவி தீட்டியது போல… அங்கே தாயும் மகனும் கண்களில் பல கதைகள் பேசினர். அவர்கள் உலகம் தனி உலகமானது.

– 1986, கண்ணாடி நினைவுகள், முதற் பதிப்பு: ஜூன் 2001, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *