சஸ்பென்ஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 9,251 
 
 

கடந்த சிலமாதங்களாகவே அவன் தன் அப்பாவிடம் ஒரு மாற்றத்தை கவனிக்கிறான். தனக்கு விவரம் தெரிந்த பின்னான இத்தனை ஆண்டுகளிலும் அவரிடம் இதுவரை பார்க்காத ஒரு மாற்றம். அவர் ஏனோ திடீரென்று ஒரு ஆனந்த தவிப்பில், உணர்வின் எழுச்சியில் இருப்பது போல் தோன்றியது அவனுக்கு. ஆனாலும் கவனிக்காதது போலவே இருந்தான், அவரும் அவனிடம் சொல்ல முயற்சிக்கிறார் என்று தோன்றவில்லை.

எல்லா ஆண் குழந்தைகளைப் போலவே அவனுக்கும் அவன் முதல் நாயகன் அப்பாவே. அவன் அப்பா கடினமான பொருளாதாரச் சூழலுக்கிடையே பள்ளிப்படிப்பை நன்றாக முடித்து, கிடைத்த சிறப்பான மதிப்பெண்களையும், அவர் தந்தை வேலை செய்த முதலாளியின் உதவியிலும் சென்னையின் பெரும் பல்கலையில் பட்டம் முடித்து சில வருடங்களில் அமெரிக்காவிற்கு வேலைக்காக வந்து, அங்கேயே மேல்படிப்பு, திருமணம், குழந்தைகள் என்று செட்டில் ஆனவர், மூன்று வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவின் பெரிய தொலைதொடர்பு நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர், இதுவரை எவ்வளவு பெரிய இன்ப மற்றும் துன்ப நிகழ்வுகளிலும் பெரிய அளவில் உணர்ச்சிவசப்படாத அவருக்கு, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இதுவரை பார்க்காத ஒரு உணர்வுகள் ஏன் என்று எவ்வளவு யோசித்தாலும் அவனுக்கு விளங்கவில்லை.

அடுத்த வாரம் அவர் இந்தியா செல்ல இருப்பது குறித்து இருக்கலாம் என்றாலும், அது இப்போதெல்லாம் இரண்டாண்டுக்கு ஒருமுறை நடக்கும் சடங்கு என்ற அளவிற்கு சரளமாகிவிட்டிருந்ததால் அவனுக்கு அதையும் யூகிக்க இயலவில்லை.

வார இறுதியில், கொஞ்சம் ஓய்வு கிடைத்ததும் அவரிடம் பேச நினைத்தான் “அப்பா, அப்படியே கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாமா? எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும், இந்த வாரம் ஃபுல்லா கடிச்சிட்டானுங்க” என்றான்.

அந்நிய மண்ணிலேயே பிறந்து வளர்ந்தாலும் ஓரளவு அவன் இன்னும் சொந்த நாட்டின் மரபுகளை கடைபிடிப்பவனாகவே இருந்தான். ஆனால் அமெரிக்கத்தனமாக எதைச் செய்தாலும் உடனே தன் அப்பாவிடம் வந்து சொல்லிவிடும் அளவுக்கு நல்ல நண்பனாகவே இருந்தார் அவர். வார இறுதிகளில் மாதம் ஒருமுறையாவது இவர்கள் இருவர் மட்டும் ஷாப்பிங் மால் அல்லது பார்க் சென்று நேரத்தை கடத்திட்டு வருவது எப்போதும் செய்வதே. அவர்கள் இருவருக்கு மட்டுமேயான தருணங்கள் என்று அவன் சிறுவனாக இருந்தபோது ஆரம்பித்த பழக்கம் என்பதால் அவன் அம்மாவோ, அவன் மனைவியோ மட்டுமல்லாது அவன் குழந்தை கூட அவர்களை தொந்தரவு செய்வதில்லை என்பது அவனுக்கே ஆச்சர்யம்.

வீட்டில் இருந்து பத்து நிமிட நடையில் இருந்த பூங்காவிற்கு அருகில் இருந்த அந்த அமெரிக்க காபி நிலையத்தில் வழக்கம்போல் கடும் கசப்பு காப்பியை வாங்கிக் கொண்டு பூங்காவிற்குள் சென்று அமரும் வரை அவன் பேசிக்கொண்டே வந்தான். அந்த வார அலுவலக நிகழ்வுகளில் இருந்து, அடுத்த அதிபர் தேர்தல், பொருளாதாரம், திரைப்படங்கள், புதிதாய் சேர்ந்த வேலைக்கு சேர்ந்த எகிப்திய பெண்ணின் அழகு என்று எல்லாவற்றையும் பேசிக் கொண்டே இருந்தான், அவன் அப்பா புன்னகையுடன் கேட்டுக் கொண்டே வந்தார். ஒவ்வொருமுறையும் அவனுக்கே தோன்றும், பலமுறை அவரிடமே அவன் சொல்வதுண்டு “நான் பேசுறதை அதிகமா கேக்குறது நீங்கதான்பா, அதேமாதிரி நீங்க அதிகமா கேக்குறதும் நான் பேசுறதைத்தான் இல்லப்பா?” என்பான். பதில் சொல்லாமல் வாய்விட்டு சிரிப்பார், சிரிப்பான்.

பூங்காவில் ஆட்கள் அதிகம் இல்லாத ஒரு பகுதியில் ஒன்றிரண்டு மஞ்சள் இலைகள் உதிர்ந்து கிடந்த நாற்காலியில் உட்கார்ந்ததும், சில நிமிடங்கள் சற்று தொலைவில் எதிரில் இருந்த குளத்தையும் அதில் இருந்த வாத்துகளையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அவர் பக்கம் திரும்பாமல் முன்னால் பார்த்தவாறே தெளிவாக ஆரம்பித்தான் “லெட் மீ ப்ரேக் த ஐஸ்.. சொல்லுங்கப்பா, என்ன நடக்குது, ஏன் திடீர்னு இப்ப கொஞ்ச நாளா ரொம்ப நிலைகொள்ளாம தவிக்குறீங்க.. நீங்க ஒருமாதிரி சந்தோசமா இருக்குறமாதிரி தோணுது, அம்மாவுக்கும், ஷைலுவுக்கும் கூட எதோ வித்தியாசம் தோணுதுன்னு சொன்னாங்க, சொல்ல வேணாம்னா கேக்கலை, ஆனா ரொம்ப க்யூரியஸா இருக்குப்பா” என்றான்.

சிறிது நேரம் எந்த பதிலும் வராது போகவே அவர் புறம் திரும்ப, அவர் கைகளை தலைக்கு பின்னால் கட்டிக் கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். முகம் முழுதும் சந்தோச அலைகள், கேட்டவுடன் பொம்மை கிடைத்த குழந்தை போல, காதலியிடம் முதல் முத்தம் வாங்கிய இளைஞனைப் போல, பிறந்தவீட்டில் இருந்து பட்டுப்புடவை கிடைத்த பெண்ணைப்போல.

அன்றைய மாலையில் முதல்முறையாக வாய்திறந்தார். “உனக்கு சஸ்பென்ஸ் நாவல், படம் எல்லாம் புடிக்கும்ல” என்றார்.

’நான் கேட்டது என்ன இவர் என்ன சொல்றாரு’ என்று குழம்பியவாறே “ம்ம்ம்… உங்களுக்கு தெரியாதாப்பா, ரொம்ப” என்றான்.

“உன்னால எவ்ளோ நேரம் சஸ்பென்ஸ் தாங்க முடியும்?”

“தெரியலைப்பா, எனக்கெல்லாம் ஒருநாளே அதிகம், டிஜிட்டல் ஃபோர்ட்ரெஸ் புக் சஸ்பென்ஸ் தாங்காம முழுநைட்டும் படிச்சிட்டு மறுநாள் ஸ்கூல்ல போயி தூங்கி வழிஞ்சேனே நினைவில்லையா? அதுல இருந்து சஸ்பென்ஸ் த்ரில்லர் எல்லாம் வீக் எண்ட்ஸ் மட்டும்தான் படிக்கணும்னு சொல்லிட்டீங்களே, என்கிட்ட போயி இந்த கேள்வி கேக்கலாமா?” என்றான் சிரிப்புடன், அந்த நிகழ்வுகளை அசை போட்டவாறே.

”சரி, உன்னால ஒரு சீக்ரெட்டை எத்தனை நாளைக்கு சீக்ரெட்டா வெச்சிக்க முடியும்?”

“ம்ம்ம்… யோசிக்குறேன், கஷ்டம்பா.. யார்கிட்டயாவது சொல்லிடுவேன். ரொம்ப சீக்ரெட்டா இருந்தாலும் ஆபிஸ்ல யாராவது அந்த சீக்ரெட்டுக்கு சம்பந்தமேபடாத ஆளுங்ககிட்ட டீடெய்ல்ஸ் சொல்லாம அப்படி இப்படின்னு சொல்லிடுவேன், என்கிட்ட எல்லாம் சீக்ரெட்ஸ் தாங்காது”

அடுத்த சில நிமிடங்கள் அவர் பேச காத்திருந்தான். சிறிது நேரத்திற்கு பிறகு அவரே கேட்டார்.

“என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் எல்லார்லயும் எனக்கு ரொம்ப நெருக்கமான ரெண்டு பேர் யாருன்னு உன்னால சொல்ல முடியுமா?” என்றார்

“உடனே சொல்லுவேன், ஆர் சி அங்கிளும் என் பிரியமான மாமனாரும்தான்.. எனக்குத் தெரிஞ்சி என் சின்ன வயசுல இருந்து உங்க மூணுபேரையும் வேற வேற ஆளுங்கன்னு பிரிச்சே பார்க்க முடியலை” என்றான்

“அது தப்புன்னு சொன்னா ஒத்துக்குவியா?”

“வாட்?”

“நிஜம்தாண்டா.. சேலத்துல படிப்பை முடிச்சிட்டு உன் தாத்தா அப்ப வேலை செஞ்ச கடை முதலாளி புண்ணியத்துல சென்னைக்கு படிக்க வர வரைக்கும் நான் சேலத்தை விட்டு அதிகம் வெளிய போனதில்லை. சென்னை புதுசா இருந்தாலும் ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டு இருந்த எனக்கு எல்லாமே புதுசுதான். படிப்பு படிப்புன்னு வெளி உலகம் தெரியாம எந்நேரமும் இருந்தவனை ஒரு இயல்பான மனுசனா மாத்துனது என்னோட ரெண்டு ஃப்ரெண்ட்ஸும்டா, பார்த்தசாரதி, பாசான்னு கூப்பிடுவோம், மணிகண்டன், மணிம்போம்”

“இதுவரைக்கும் இவங்க ரெண்டுபேரைப் பத்தியும் சொன்னதே இல்லையே, உங்க காலேஜ் குரூப் ஃபோட்டோ காட்டுனப்பகூட இவங்களை அடையாளம் காட்டுனதே இல்லையே”

இவனுக்கு பதில் சொல்லாமல் அவர் தொடர்ந்தார் “டீனேஜ்ல கிடைக்குற எந்த ஒரு புது மனிதர்களோட உறவும் சாகும் வரைக்கும் மறக்க முடியாதுடா, பெரும்பாலானவங்க அந்த வயசுல வர்ற காதலி அல்லது காதலனை மட்டுமே மறக்க முடியுறதில்லைன்னு நினைச்சிட்டு இருக்காங்க, ஆனா உண்மையில அப்ப கிடைக்குற உறவுகள் அது நண்பர்களா இருக்கலாம், காலேஜ் ப்ரொஃபசர்களா இருக்கலாம், டெய்லி சாப்பிடுற மெஸ் ஓனரா இருக்கலாம், ரெகுலரா போற பஸ் கண்டக்டரா இருக்கலாம், எல்லாமே நம்ம மனசோட ஒரு மூலையில இருந்துகிட்டே இருப்பாங்க”

“ம்ம்ம்… தத்துவமா?” என்று சிரித்தான்.

அவரும் சிரித்தவாறே “பாசாவும் மணியும் நானும் ஒரே க்ளாஸ், ஆனா ஹாஸ்டல்ல ஒரே ரூம் இல்ல, ரெண்டாவது வருசம் படிக்குறப்ப கேட்டு மாத்திகிட்டு ஒரே ரூமுக்கு வந்தோம். எப்படி அமைஞ்சதுன்னு தெரியலை சொல்லி வெச்ச மாதிரி மூணு பேருக்கும் ஒரே ரசனை, ஒரே யோசனை.. பசங்க எல்லாம் எங்களை மும்மூர்த்திகள்னு கிண்டலடிப்பாங்க. ஒருதடவை எங்க ப்ரொஃபசர் ஒருத்தர் மும்மூர்த்திகளாவது ஆக்கல், காத்தல், அழித்தல்னு வேற வேற தொழில் செய்யுறாங்க, இவங்க மூணுபேரும் காலேஜ் முடிச்சி வேலைக்குக் கூட ஒரேமாதிரிதான் போவாங்கன்னு நினைக்குறேன்னு சொல்ற அளவுக்கு இருந்தோம்”

“ம்ம்ம்”

”மூணு பேரும் வேற வேற ஊர்ல இருந்து வந்தவனுங்க, பாசா உள்ளூர்க்காரன், அப்பா நல்ல பணக்காரர், அப்பவே பாரிஸ் கார்னர்ல ஹோல்சேல் துணிக்கடை வெச்சிருந்தாரு, ஆனாலும் அவன் வீட்டுல இருந்தா படிக்கமாட்டான்னு ஹாஸ்டல்ல விட்டுட்டாரு, மணி மதுரைக்காரன். என்னை மாதிரியேத்தான் சுமாரான குடும்பப்பிண்ணனி.”

அவர் பேசும்போது அவரிடம் இருந்த மகிழ்ச்சி இதுவரை அவன் அவரிடம் காணாதது.

“நாலு வருசம் ஒண்ணா இருந்தோம், ஒரே ரூம்ல தங்கி, ஒரே க்ளாஸ்ல தண்ணியடிச்சி, நம்ப முடியல இல்ல, நடுவுல ஒருவருசம் தண்ணியடிச்சி எல்லாம் இருந்திருக்கேன், ஒரே பொண்ணை சைட் அடிச்சி, எக்ஸாமுக்கு முந்தின ஒருவாரம் குரூப் ஸ்டடி நைட்டு நைட்டா படிச்சின்னு என்னோட ஒவ்வொரு நிமிசத்துலயும் அவனுங்க இருந்திருக்கானுங்க”

திடீரென்று அமெரிக்க பல்கலையில் அவன் தங்கிப் படித்த ஹாஸ்டல் நினைவுக்கு வந்து அவர் மீது பொறாமையாக வந்தது அவனுக்கு.

“ஒவ்வொரு லீவுக்கும் ஒருவாரம் அவனுங்க சேலம் வருவானுங்க, ஒருவாரம் மதுரை போவோம், நினைச்சப்ப எல்லாம் மெட்ராஸ்ல பாசா வீட்டுக்கு போவோம், மூணு வீடுகள்லயும் நாங்க மூணுபேருமே போடாத ஆட்டம் இல்ல.”

”ம்ம்ம்”

“ரொம்ப ஆச்சர்யமான விசயம் எல்லா விசயத்துலயும் நாங்க மூணுபேரும் ஒரே மாதிரி திங்க் பண்ணுவோம், பசங்க எதாவது பிரச்சினைன்னா எங்ககிட்ட வருவானுங்க, சொல்லிவெச்ச மாதிரி நாங்க மூணு பேர் குடுக்குற சொல்யூசனும் ஒரே மாதிரி இருக்கும். அதை வெச்சி நிறைய காமெடி பண்ணிட்டு இருப்பானுங்க எங்க செட் பசங்க” சிரித்துவிட்டு சில நிமிடம் அமைதியானார்.

”லாஸ்ட் இயர்ல காலேஜ் முடிக்க இன்னும் மூணுமாசம் இருக்குன்னு ஆனப்பத்தான் ஒருமாதிரி உறைக்க ஆரம்பிச்சது” அவர் குரல் முழுக்க மாறி இருந்தது. ”என்னதான் நாலு வருசம் ஒண்ணுக்குள்ளா ஒண்ணா இருந்தாலும் வெளிய போய் வேலை தேடி, செட்டில் ஆகணும்குறது பெரிய விசயமா தோணினது. பாசாவுக்கு பிரச்சினை இல்லை, அவனே வேலைக்கு போக நினைச்சாலும் முடியாது, வீட்டுக்கு ஒரே பையன், அவன் அப்பாவுக்கு அப்புறம் பிசினஸை அவன் மட்டுமே பாத்தாகணும், நானும் மணியும் வேலை தேடி அலைஞ்சாகணும். அதுக்கு நடுவுல எப்படி மூணு பேரும் பாத்துக்காம, பேசிக்காம இருக்க முடியும்னு நெனச்சுக் கூட பார்க்க முடியலை. மூணு பேருக்குமே ஒருமாதிரி பைத்தியம் புடிச்ச மாதிரிதான் இருந்தது. சொல்லப்போனா இவனுங்க கூட பழகாமே இருந்திருக்கலாமோன்னு கூட யோசிச்சேன்னா பாத்துக்கா. ”

அமைதியாக அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான்.

“காலேஜோட கடைசி வாரத்துலதான் ஒருநாள் மணி அந்த ஐடியா குடுத்தான். காலேஜை விட்டு வெளிய போனா எப்படி இருந்தாலும் வாழ்க்கையோட சூழல் ஒவ்வொருத்தனையும் ஒவ்வொரு மாதிரி இழுக்கத்தான் போகுது. என்னதான் திறமை இருந்தாலும் அடுத்த நான்கைந்து வருடங்கள் ரொம்ப கஷ்டப்படணும், அதுக்கப்புறம் குடும்பம், குழந்தைகள்னு செட்டில் ஆக வேண்டி இருக்குகும். அதுக்கு நடுவுல எங்களுக்குள்ள பாத்துக்கறது ரொம்ப சிரமமாத்தான் இருக்கப்போகுது. அதனால அடுத்த கொஞ்ச வருசத்துக்கு நாங்க மீட் பண்ணாமயே இருந்தா என்னன்னு கேட்டான்?”

”ம்ம்ம்… இண்ட்ரெஸ்டிங்”

“எத்தனை வருசம்னு பேசுறப்பதான் மூணு பேரும் ஒரே மாதிரி ஒரு முப்பது நாப்பது வருசம் கழிச்சு பாத்தா எப்படி இருக்கும்னு சொல்லிகிட்டோம். கடைசியில நாப்பது வருசம் கழிச்சி மீட் பண்ணலாம்னு முடிவாச்சு. இந்த நாப்பது வருசமும் அடுத்தவன் எப்படி இருப்பான், வேலை கிடைச்சிருக்குமா, கல்யாணம் ஆகி இருக்குமா, எத்தனை குழந்தைகள்னு எந்த விசயத்தையும் கம்யூனிக்கேட் பண்ணிக்கலை. இத்தனை நாளா ஒவ்வொரு நாளும் அவங்களை நினைச்சிகிட்டே இருந்தாலும் அவங்களைப் பத்தி எதுவுமே எனக்குத் தெரியாது”

“ஏன் இப்ப நெட்ல தேடக்கூடாதாப்பா?”

“இல்ல, அதுதான் ரூல்ஸே. முதல்ல சஸ்பென்ஸ், அடுத்தவனைப் பத்தி தெரிஞ்சுக்கக்கூடாது, தெரிஞ்சுக்க முயற்சி பண்ணவும் கூடாது. ரெண்டாவது சீக்ரெட். 40 வருசம் கழிச்சி நாங்க சந்திக்கப்போற கடைசி மாதம் வரை யாருக்கும் சொல்லக்கூடாது. ஆர் சிக்கும் நந்துவுக்குமே போன வாரம்தான் சொன்னேன். நேத்து நைட்டுதான் உங்கம்மாட்ட சொன்னேன், யாராலயும் நம்ப முடியலை. இத்தனை நாளா இப்படி ஒரு விசயத்தை அவங்ககிட்ட சொல்லாம நான் வெச்சிருக்கமுடியும்னே நம்பமாட்டேங்குறாங்க” என்று சிரித்தார்.

“என்னாலயே நம்ப முடியலைப்பா, அவ்ளோ க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸை ஒவ்வொரு நாளும் இப்பவும் நினைச்சிட்டு இருக்குறவங்களை பாக்காம எப்படிப்பா இத்தனை வருசம் இருந்தீங்க?” என்றான்

“லைஃப்ல எதாவது சஸ்பென்ஸ் வேணாமா? நாப்பது வருச காத்திருப்பு… ஐ’ம் சோ எக்ஸைட்டட்ரா” என்றார்.


அடுத்த ஒருவாரம் வேகமாக ஓடியதாகப்பட்டது. அவன் அப்பாவும் அம்மாவும் இந்தியாவுக்கு சென்றனர். அப்பா சந்திப்பு நடக்கும் என்ற சொல்லியிருந்த நாளை எண்ணிக்கொண்டே இருந்தான். அவன் அப்பாவை விட அவன் அந்த சந்திப்பை அதிகம் எதிர்நோக்கி இருப்பதாக தோன்றியது அவனுக்கு. அவன் மனைவியும் “என்னமோ நீங்க உங்க கேர்ள் ஃப்ரெண்டை பாக்க போறமாதிரி தவிக்குறீங்க” என்று கிண்டல் அடித்ததையும் பொருட்படுத்தாமல் அதையே பேசிக்கொண்டிருந்தான்.

அந்த நாள் கடந்ததும் அவன் அப்பாவின் தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருந்தான். வார இறுதியில் அவர் அழைத்ததும் அவசரமாக கேட்டான் “அப்பா, என்னாச்சி, மீட் பண்ணினீங்களா?” என்றான்

அவன் அப்பா எந்த உணர்ச்சியும் காட்டியதாக தெரியவில்லை “நேர்ல சொல்றேன்டா, எப்படி இருந்தாலும் அடுத்த வாரம் அங்க வரத்தானே போறேன்” என்றார்.

“அப்பா, பாத்தீங்களா, இல்லையா? அதையாவது சொல்லுங்க, எனக்கு மண்டை வெடிச்சிடும் போல இருக்கு” என்றான்

“நான் நாப்பது வருசம் காத்திருந்திருக்கேன், நீ இன்னும் நாலு நாள் காத்திருக்க முடியாதா? நேர்ல சொல்றேன், அது வரைக்கும் சஸ்பென்ஸாவே இருக்கட்டும்” என்றார். குழப்பத்தில் ஆழ்ந்தான்.


அடுத்த ஒரு வாரமும் என்ன யோசித்தும் அவனால் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. அப்பாவின் குரலில் மகிழ்ச்சி இல்லை என்று கொண்டாலும், அவர் சோகமாகவும் இல்லை. அதனால விவகாரமாக எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே பட்டது. அவர் வருகைக்காக காத்திருந்தான்.

அடுத்த வார இறுதியில் அப்பாவும் அம்மாவும் வந்தனர். வழக்கம் போல வீட்டில் நுழைந்ததுமே பெட்டி பிரிக்கப்பட்டு ”இது உனக்கு, இது உனக்கு” என்று இந்திய பொருட்கள் பங்கு பிரிக்கப்பட்டன. எல்லாம் முடிந்து அவரவர் அறைக்கு சென்றதும், அப்பாவும் அவனும் மட்டும் வரவேற்பறையில் தனித்திருந்தனர்.

தவிப்புடன் கேட்டான் “இப்பவாவது சொல்லுவீங்களாப்பா?”

அவன்புறம் திரும்பியவர் முகத்தில் எந்த உணர்ச்சிகளும் இல்லை.

“நீங்க மீட் பண்ணினீங்களா இல்லையா?”

அமைதியாக சொன்னார் “இல்ல”

“வாட்… ஏன்பா, என்னாச்சி”

“நான் போகலை” என்றார்.

“பைத்தியமாப்பா உங்களுக்கு, ஏன் போகலை” சற்று சத்தமாகவே கேட்டார். படுக்கையறைக் கதவைத் திறந்து அவன் மனைவி எட்டிப் பார்த்தாள்.

சிலவிநாடிகள் அமைதிக்கு பின் அவன் முகம் பார்க்காமல் அவர் மெல்லிய குரலில் சொன்னார் “நாப்பது வருசம்ன்றது ரொம்ப ரொம்ப பெரிய காலகட்டம். அப்ப விளையாட்டுத்தனமா பேசிகிட்டு வைராக்கியமா இருந்துட்டாலும், நாப்பது வருசம் கழிச்சி அங்க போக, உண்மைய சொன்னா பயமா இருந்தது. இந்த நாப்பது வருசமும் நான் எப்படி அவனுங்கள நினைச்சிட்டு இருந்தேனோ அதேமாதிரிதான் அவனுங்களும் என்னை நினைச்சிட்டு இருந்திருப்பானுங்க, இப்ப நான் எக்ஸைட் ஆனேனே அதேமாதிரிதான் எக்ஸைட் ஆகி இருப்பானுங்க, உலகத்தோட எந்த மூலையில இருந்தாலும் அந்த ஒரு நாளுக்காக ஊருக்கு வந்திருப்பானுங்க”

அவர் குரல் உடையத் தொடங்கியது, கண்களில் லேசான கண்ணீர் தென்பட்டதாக தோன்றியது.

“ஒருவேளை நான் அங்க போயி, பாசாவோ மணியோ ரெண்டு பேர்ல ஒருத்தனோ அல்லது ரெண்டு பேருமோ வராம போனா அதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும், என்னால அதை தாங்கமுடியும்னு தோணலைடா”

அவர் அப்படியே நிறுத்த, பேச நா எழாமல் அவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சி செய்துக் கொண்டிருந்தார். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, கண்களை துடைத்துவிட்டு எழுந்து அவர் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

“அப்பா” என்றான்

அவர் திரும்பினான், ”ஏம்பா நீங்க இப்படி யோசிக்கலை, ஒருவேளை அவங்க ரெண்டு பேருமோ அல்லது ஒருத்தரோ வந்திருந்தா, நீங்க வராததை வெச்சி என்ன முடிவுக்கு வந்திருப்பாங்க?” என்றான்.

அவர் முகம் மீண்டும் மாறியது, இந்த முறை அவரது உதடுகள் அகன்று முகம் புன்னகை பூத்தது, புன்னகையுடன் தலையை இடவலமாக ஆட்டியவாறு அவர் அறைக்கு திரும்பி நடக்க ஆரம்பித்தார்.

– ஜனவரி 10th, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *