கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 22, 2024
பார்வையிட்டோர்: 2,726 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இவர் கையில் அருட்பா பிரித்த படி இருந்தது.

அன்றாடம் இதைப் படிப்பதும். பாராயணம் செய்வது வழக்கமாகிவிட்டது.

‘இது நல்ல தருணம்-அருள்செய்ய இது நல்ல தருணம்’ என்ற பல்லவியின் முணுமுணுப்பு உள்ளுமெல்லாம்.

அநேகமாக அருட்பா முழுவதும் இவருக்குப் பாராயணம். அருட்பா அருணாசலம் என்ற பெயரும் ஏற்பட்டுவிட்டது.

அந்த நாளில் தங்சோங் பகாரில் துறைமுகத் தொழிலாளியாக. விடலைப் பிள்ளையாக வாழ்க்கையை ஆரம்பித்த காலத்திலிருந்தே இவர் தனிப்பிறவி கொள்கை. கோட்பாடு என்ற எல்லைக் கோடுகளை வரைந்து கொண்டு இலட்சிய புருஷனாக நடைபோட்டவர். இன்றளவும் பிசகவில்லை.

ஓய்வு பெற்று மூன்றாண்டுகள் நெளிந்துவிட்டன. என்னென்ன நடக்கவேண்டுமோ எல்லாமே நடந்து ஓய்ந்து விட்டது போல் ஏகாந்த நிலையில் நாட்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்.

பரபரப்பாக, இயந்திர வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சிங்கப்பூரில் இவர் ஒருவர்தான் எந்த வேகத்தையும் பொருட்படுத்தாமல் இயற்கைக்குப் புறம்பாக எதிர் நீச்சல் போடாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வைராக்கியம், விடாப்பிடி என்பதெல்லாம் இவருடைய உடன்பிறப்பாக ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்றும் சொல்லிப்பார்த்து ஆளைக் கொஞ்சம் மாற்றப் படாதபாடுபடுகிறார்கள். வேண்டியவர்கள்.

‘இல்லை… நான் பிடிவாதக்காரன் இல்லை. பிடிக்காத வற்றிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறேன் பிடிக்காதவர்களை ஒதுக்கி வைக்கிறேன்’ என்கிறார் இவர்.

அப்படித்தான் பாலகுமாரை இவர் ஒதுக்கி வைத்திருக்கிறார். ஒரே மகன். அறிவாளிப் பிள்ளை. அழகிய வாலிபன்.

சரியாக மூன்று வருடம் ஆகிவிட்டது. காலில் விழாத குறையாகக் கெஞ்சிய மகளுக் கண்ணெடுத்துப் பார்க்க மறுத்து விட்டார். மருமகள் என்று அவனுடன் வந்த பெண்ணை அங்கீகரிக்க மறுத்துவிட்டார். அப்பெண் நெட்டையா, குட்டையா என்பதுகூட இவருக்குத் தெரியாது.

‘ரொம்ப நல்ல பெண்ணாக இருக்கிறாள். உன் பையனுக்கு இவ்வளவு அழகான பெண் கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் தான். படித்தவளாக இருக்கிறாள் பார்ப்பதற்கு ரொம்ப ரொம்ப அடக்கமாக இருக்கிறாள்…’

எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள் வேண்டியவர்கள். இவர் இரண்டு கண்களையும் இறுக மூடிக் கொண்டார் மேற்கொண்டு யாராவது ஏதாவது பேசினால் நெற்றிக் கண்ணைத் திறந்துவிடுவார் போல் அத்துணை ஆத்திரம். சீற்றம் கொந்தளிப்பு.

அம்மையும் அப்பனுமாக இருந்து கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து ஆளாக்கி விட்ட பிள்ளை தன்னிச்சையாக ஒரு சீனப் பெண்ணை மணந்து கொண்டு விட்டானே என்ற சீற்றம் எரிமலையாகிவிட்டார்இவர், அந்த உணர்வுகள் இன்றுவரை அக்கினிக் குழம்பாக கொதித்துக் கொண்டிருக்கின்றன் உள்ளத்தில்.

இப்பொழுதும் அருட்பாவை இவர்முணுமுணுக்கிறார். ஆனால் மனம் அதில் பதியவில்லை.

மூன்று வருடப் புயலும் எரிமலையும் தணியுமா? எத்தனை முறை பாலகுமார் அப்பாவுக்குத் தூது விட்டான். நண்பர்கள்இவரைக்கரைக்க முயன்றார்கள். கல்லாக இல்லை பாறையாக அல்லவா ஆகியிருக்கிறார்.

மகன் செய்தது பிழையோ தவறோ அல்ல மாகபாதகம் என்று நினைக்கிறார். மனத்துக்குப் பிடித்தவளை அவன் மணந்து கொண்டிருப்பதில் என்ன தப்பு என்று பார்த்தார்கள் வேண்டியவர்கள்.

வாதப் பிரதிவாதமெல்லாம் உங்களோடு இருக்கட்டும், என் வைராக்கியத்தைக் குலைத்துவிட முடியாது உங்களால் ‘ என்று கரிபூசிவிட்டார் இவர்.

தான் வகுக்கும் பாதையில் பாலகுமார் நடைபோட வேண்டும் என்பது இவர் திட்டம். தாய் இல்லாத பிள்ளை தாயக இருந்து வீட்டில்விளக்கேற்றக்கூடிய ஒரு பெண்ணை மணந்து கொள்ள, வேண்டும். தன்னைத் தந்தை போல் ஆதரவாக அவள்நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணக் கோட்டைகள். ஆசார அனுஷ்டானமுள்ள மருமகளை எதிர்பார்த்திருந்த தன் தலையில் குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டானே என்ற கூக்குரல் கொதிப்பு குமுறல்.

பாலா என்றைக்குத் திருமணப் பேச்சை எடுத்தானோ அன்றே நீ எனக்கு அந்நியன் என்று சொல்லிவிட்டார். இனி உன் வழியும் என் வழியும் வேறு என்றும் ஆணி அறைந்தது போல் கூறிவிட்டார். அந்தப் பெண் நல்லவள். இவருக்கு மிகவும் பிடித்த மருமகளாக இருப்பாள் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்க வில்லை. கண்ணைத் திருப்பிக் கொண்டவர். செவிகளையும் இறுக மூடிக்கொண்டார்

மூன்று வருடங்கள் முறிந்து விட்டது.

மறுபடியும் மகனின் தூது நண்பர் இரத்தினவேல் வந்திருக்கிறார்.

‘நீங்கள் இனியும் தனியாக இருப்பது நியாயமில்லை உங்கள் பிள்ளை உத்தமன்…’ என்றார் இவரைத் தேடி வந்தவர். ‘இல்லைஅப்பனைக் குப்பையாக வீசி எறிந்து விட்டுப் போன அதர்மன் அவன்’.

‘சன்னலை மூடிவிட்டு ஆகாசத்தைப் பார்க்க முடியாது அருணாசலம்… கண்ணைத் திறந்து தான் காட்சிகளைப் பார்க்க வேண்டும். மூடிய கண்ணால் எதைப் பார்க்கலாம் என்கிறீர்கள்?’

‘எது வேண்டுமானாலும் பேசுங்கள்… அவன் தவிர!’ என்று பிடிவாதம் பிடிக்கிறார் இவர்.

‘உங்களைப் போல் பாராயணம் பண்ணிக் கொண்டு பாலாவும் உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது தான் ஆசையா? அவன் சமூகத்தில் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற ஆசை இல்லையா? நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டா லும்அவன்பெரிய மனிதன்தான்முப்பது வயதுக்குள்பெரிய கம்ப்யூட்டர் நிபுணர் என்ற பெயர் பாலாவுக்கு.. நீங்கள் பெருமைப்படாவிட்டாலும் உங்கள் நண்பர்களான நாங்கள் அவனுக்காகப் பெருமைப்படுகிறோம்…”

நண்பர் இரத்தினம் என்னதான் சொல்லியும் இவர் இறுகிய பாறையாகவே இருக்கிறார்.

அருட்பா இன்னமும் திறந்திருக்கிறது.

‘பொது நல்ல நடம் வல்ல புண்ணியரே கேளும் பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன்’ என்ற அனுபல்லவியை இப்பொழுது முணுமுணுக்கிறார்.

‘நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையொ நான் சொல்வதெல்லாம் மெய்… பாலாவும் அந்தச் சீனப் பெண்ணும் லட்சிய தம்பதியாய் இருக்கிறார்கள்… அவள் சேலை கட்டிக் கொள்கிறாள். நெற்றி நிறையத் திலகம் வைத்துக் கொள்கிறான்… பார்த்தால் கண்பூத்துப் போவீர்கள். கரைந்து உருகிப் போவீர்கள்!’

‘இரத்தினம் விடுவதாக இல்லை. இவரும் இறங்கி வருவதாக இல்லை.

‘இது நல்ல தருணம் என்று வந்தேன்… ஏனென்றால் நீங்கள் தாத்தா ஆகியிருக்கிறீர்கள். பேரப்பிள்ளையை நீங்கள் வந்து பார்த்து ஆசிர்வதிக்க வேண்டும் என்று மகனும் மருமகளும் விரும்புகிறார்கள்.’

இவர் திரும்பிப் பார்த்தார்.

‘அந்தப் பெண் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்ததிலிருந்து உங்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறாள்… அதனால் நானும் பாலகுமாரும் வந்தோம்… உங்களுக்கு பயந்து கொண்டு ஒரு மணி நேரமாக பாலா வாசலிலேயே நிற்கிறான்…’

மறுபடியும் இர்த்தினத்தைப் பார்த்தார் இவர்,

அருட்பாவை நோட்டமிட்டார்.

இப்பொழுது சரணங்களில் கண்ணும் மனமும் சரணமாயின.

‘கொதித்த லோகசாரக் கொதிப்பெலாம் ஒழிந்தது’ என்று முணுமுணுத்தார் கொஞ்சம் கொதிப்பு அடங்கியது போன்ற உணர்வு.

இரத்தினம் சொல்வது உண்மைதானா? பாலகுமார் வாசலில் நிற்கிறானா? பேரன் பிறந்திருக்கிறானா? குழந்தையைத் தாம் வந்து பார்க்க வேண்டும் என்று அந்தப் பெண் விரும்புகிறாளா?

அடுத்த சரணம்…

‘கரையா எனது மனக்கல்லும் கரைந்து… பொய்படாக் காதல் ததும்பி மேல் பொங்கிற்று…’

கல்லுக்குள் ஈரக்கசிவு.

மூன்று வருட எரிமலை தணிந்து குளிர்ந்து போன மாயம் புரியவில்லை.

பேரனைத் தம் மனம் போல் அள்ளி அணைத்து ஆளாக்கலாம் என்று நினைப்பு அரும்பாக. போதாக மலராக விரிவது போன்ற ஆனந்த நிலை.

’இது நல்ல தருணம்- அருள்செய்ய இது நல்ல தருணம்’ என்ற அருட்பா ஆனந்தக் கும்மி கொட்டியது. இரத்தினத்தை ஏறிட்டுப் பார்த்தார் இவர்.

‘என் மகனைக் கூப்பிடு’ என்றார் மனம் கரைந்தது.

– அந்த நாள்…(சிங்கப்பூர் சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *