மாட்டாள்.மனசுக்கு நன்றாகத் தெரிந்தது. இருந்தும் அது – அதாவது மனசு அவனைச் சும்மாவிடவில்லை.முதல் சந்திப்பு திருச்செந்தூர் மூலவர் அருகே. ஒரே ஒரு பார்வைதான். அது தனக்குத்தானா? தெரிந்துகொள்ளச் சுற்றிலும் பார்த்தான். அவன் பார்த்தவரை செந்திலை யாரும் பார்க்கவில்லை. சரண்யாவின் மயில்நடை கூட்டத்தில் எல்லோரையும் சும்மா விட்டுவிடுமா என்ன? இரண்டு கண்கள் அவளது ஒவ்வொரு நகர்வையும் பின்தொடர்ந்துகொண்டே இருந்தன.
வலது புறத்தில் இருந்த வள்ளி கோயிலில்தான் அந்த ஒரு பார்வையில் சரண்யா செந்திலைச் சிறைப்பிடித்தாள்.‘பார்வையா அது! ஏழேழு ஜென்மத்துக்கும் நீ தாண்டா என் அடிமை’ என்று சாசனம் எழுதி வாங்கிய பார்வை. சூரன் மார்பில் முருகன் செருகிய வேல் போல் அவனுள் இறங்கிவிட்டது. கூடவே அவளுடைய அப்பா என்று அவள் கூப்பிட்ட நம்பிராஜன் இருந்தார். மேலே சட்டை இல்லை. திறந்த மார்பில் பட்டை பட்டையாக சந்தனப்பூச்சு. புஜங்களில், நெற்றியில், நெஞ்சுக் குழியில் பளிச்சிட்ட சந்தனப்பூச்சு. வெற்றிலையால் சிவந்த வாய்.
ஏனோ செந்திலுக்குசாண்டோ சின்னப்பத்தேவர் நினைவு வந்தது. செந்தில் அவருக்குக் கைகூப்பி வணக்கம் செலுத்தினான். ‘‘ஐயாவை எங்கியோ பார்த்திருக்கேன்…’’ என்று இழுத்தான். சரண்யாவிடமிருந்து மயில்தோகை கண்வீச்சு. ‘சும்மா ரீல் சுத்தாதே! ஒரு லிங்க் வச்சுக்கிறதுக்காக முயற்சிக்கறே! வேஸ்ட் ஆஃப் டைம்’.இவ்வளவு சொன்னது அந்தக்கண். என்ன இடுப்புடா சாமி! ‘இடுப்போடே மட்டுமே ஏண்டா நிக்கறே முண்டம்?’ சரண்யா கண்வீச்சு மீண்டும் பேசியது.
‘‘இங்கேதான் பார்த்திருப்பீங்க…’’ நம்பிராஜன்.‘‘இல்லே… வேற எங்கியோ!’’ தலை சொறிந்தான்.‘‘சரண்யா… தம்பிக்கு ஒரு சந்தனாதித் தைலம் வாங்கிக் கொடுப்போமா?’’‘‘ஹிஹி…’’ அது பெரிய ஜோக் என்று செந்தில் சிரித்து வைத்தான். விட்டபாடில்லை சரண்யா மயக்கம். அவள் செந்திலைக் கயிறு கட்டி இழுத்துச் செல்வது போல் எங்கெங்கோ இழுத்துச் சென்றாள்.
அங்கேயே செந்தூர் ஷண்முக விலாசத்தில் இருந்து நேர் எதிரே இருக்கும் நாழிக்கிணற்றில், நுழைவுக் கட்டணம் செலுத்தி, படிகள் வழியாகக் கீழே இறக்கி கிணற்றில் நுழையவிட்டு, பின்னே மேலே ஏறி சந்தனமலைக்கு இழுத்துப்போய் வள்ளிக் குகை வரை ‘வாடா வா’ என்று இழுத்துச் செல்லும்போதே சரண்யா அவ்வளவு சுலபமில்லை கண்ணா என்று பேசாமல் பேசிக்கொண்டு போனாள்.
நம்பிராஜன் ஓரிருமுறை திரும்பிப்பார்த்துவிட்டு ஏதோ நாய்க்குட்டி பின்தொடர்வதைப் பார்ப்பது போல் அவள் காதருகே ஏதோ ரகசியம் சொல்ல அவள் தலையையே திருப்பாமல் குனிந்து அசைத்துவிட்டு நடந்தாள்.பின்தொடர்வது பற்றிய சைகைப் பரிவர்த்தனையோ? இருக்கும். ஒரு சந்தேகம் வந்தது. இவர் என்ன தந்தை? இப்படி இடைவிடாமல் ஃபாலோ செய்கிறான் ஒருவன். கண்டுகொள்ளாமல் போகிறாரே! அப்பாவே இல்லையோ?
இரண்டாவது சந்திப்புதான் கொஞ்சம் அதிகம் இழுத்தடித்து விட்டது. கோயில் பிராகாரத்தை விட்டு வெளியே வந்து ஒரு ரவுண்டு. அடுத்து ஒரு ஜூஸ் குடிப்பு. வேண்டுமென்றே செந்திலுக்கு கடுப்படிப்பது போல் அக்கம்பக்கம் ஒரு கண்ணோட்டம்.
கடைசியாக சரண்யா கூலிங் க்ளாஸைப் போடுகிற ஸ்டைலில் ஒரு ஸைட் க்ளான்ஸ் லுக் விட்டு ஒரு சென்டிமீட்டர் சிரிப்பைச் சிந்திவிட்டு தன் ஹாண்ட்பேக்கை தேவையில்லாமல் திறந்தாள். கைநழுவியது போல் ஒரு விசிட்டிங் கார்டை கீழே நழுவவிட்டாள். ‘மாக்கான் பார்க்கிறானா இல்லையா’ என்று ஒரு புடவைத்தலைப்பு வீச்சில் பார்த்துவிட்டுப் போனாள். போய்க்கொண்டே இருந்தாள். அது ஒரு குறிப்புரைக் குறுஞ்செய்தி. சுருக்கமாக வரவேற்பு.
அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டு அந்த விசிட்டிங் கார்டை எடுக்கிற மாதிரி இருக்கக்கூடாது என்பதற்காக செருப்பை வேகமாக அந்தக் கார்டு பக்கம் குறிபார்த்து விசிறி விட்டான். பின் ஒற்றை வெறுங்காலோடு நடந்து சென்று செருப்போடு அந்தக் கார்டையும் எடுத்தான். அவன் பார்த்தவரை செந்திலை யாரும் பார்க்கவில்லை.அதே இரண்டு கண்கள் அவனது ஒவ்வொரு நகர்வையும் பின்தொடர்ந்துகொண்டே இருந்தன.
அந்த விசிட்டிங் கார்டு மணி ஐயர் ஹோட்டல் கார்டு. இதை ஏன் நழுவவிட்டுப் போகிறாள்?
செந்தில் அதைத் திரும்பிப் பார்த்தான்.இடது பக்க விளிம்பின் ஓரத்தில் பெண் கையெழுத்தில் சிறியதாக ஒரு செல் நம்பர்.
அதைக்கண்டதும் வைகுண்ட வாசல் திறந்த ஆசுவாசம்.மீண்டும் ஒருமுறை செந்தில் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தன் பாக்கெட்டிலிருந்து செல்லை எடுத்தான்.
அந்த எண்ணை செல்லில் டைப் செய்யும்போது அவனையே கண்காணித்துக்கொண்டிருந்த அந்த இரு கண்கள் ஒரு செல்லை எடுத்தது. செந்தில் கவனிக்கவில்லை.
‘‘ஹலோ… ஹலோ…’’
பதிலுக்கு ஒரு கிளுகிளு சிரிப்பு.
‘‘ஹலோ… ஹலோ…’’
‘‘எதிர்பார்த்தேன்… கொஞ்சம் லேட்!’’
‘‘போய்ட்டியா?’’
‘‘நோ… நோ… மரியாதை… மரியாதை.
நாம்ப ஒண்ணும் அவ்வளவு குளோஸ் ஆயிடலே…’’
‘‘சாரி… போய்ட்டீங்களா ஹோட்டலுக்கு?’’
‘‘அஞ்சு நிமிஷம் ஆச்சு!’’
‘‘நான் வரலாமா?’’
‘‘யார் வேணும்னாலும் மணி ஐயர் ஹோட்டலுக்கு வரலாமே!’’
‘‘ஐ மீன்… உங்க டாடி கூடவே இருப்பாரா?’’
‘‘உங்கள மாதிரி ரசிக சிகாமணிகள் வருவாங்கன்னு அவருக்குத் தெரியும். ஸோ, அவரை ரசிக்க வந்திருக்கிற ரசிகை சிகாமணிகளைச் சந்திக்கக் கிளம்பிட்டார்…’’
செந்திலுக்கு ஒரு விசிலடிக்கிற ஆர்வம் மேலோங்கியது. கூடாது. விசிலடிச்சான் குஞ்சு என்று நினைத்துவிடுவாள்.
‘‘…’’
திடீரென்று போன் கட்டாயிற்று. அது கட்டல்ல; குறுக்கீடு என்பது செந்திலைக் கண்காணித்த இரண்டு கண்கள் வைத்திருந்த செல்லுக்கும் செந்திலோடு பேசிக்கொண்டிருந்த மற்றொரு செல்லுக்கும் மட்டுமே தெரியும். செந்தில் பேச்சு பதிவு செய்யப்படுகிறது என்பது செந்திலோடு பேசிக்கொண்டிருந்த மற்றொரு செல்லுக்கு மட்டுமே தெரியும்.
அவன் மீண்டும் செல்லை அழுத்தினான்.
‘‘ஹலோ… ஹலோ…’’
‘‘கேக்குது… சொல்லுங்க…’’
‘‘ மணி ஐயர் ஹோட்டல் எங்கே இருக்கு?’’
‘‘ட்ராவலர்ஸ் பங்களா பக்கமா வந்தா அஞ்சு நிமிஷ டிரைவ்…’’
அந்த அஞ்சு என்ற உச்சரிப்பில் அவள் குரல் கொஞ்சியது.
‘‘இதோ இப்பவே வந்துடறேன். ரிசப்ஷன்லே என்னன்னு கேக்கணும்?’’
‘‘உங்க பேரு என்ன?’’
‘‘என் பேர் எதுக்கு? உங்க ரூம் நம்பர் சொல்லுங்க. இல்லே, உங்க பேர் சொல்லுங்க…’’
‘‘இல்லே, உங்க பேர் சொல்லணும். சொன்னா போதும். வழிகாட்டுவாங்க…’’
‘‘செந்தில்…’’
‘‘அரோகரா!’’
‘‘என்னங்க?’’
‘‘இல்லே… செந்தில் வடிவேலனுக்கு அரோகரா சொல்லிப்பார்த்தேன்!’’
‘‘எனக்கு இல்லியே?!’’
‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’
‘‘நீங்கள் வேண்டும்!’’
‘‘தந்தா போச்சு… வந்தா தெரியும்!’’
‘‘எல்லாமா?’’
‘‘எல்லாம்தான்! எல்லாத்துக்கும் மேலே…’’
செல் கண்டுபிடித்தவனை மனதார வாழ்த்தினான் செந்தில்.இப்படி சிருங்கார சரச சல்லாபப் பகிர்வுகளுக்கு ஒலிப்பாலம் தந்த மேதையை வாழ்த்திவிட்டுப் புறப்பட்டான்.
கோயிலுக்கு வெளியே அர்ச்சனைத் தட்டு வாங்கிய இடத்தில் வைத்திருந்த பிரீஃப் கேஸை எடுத்துக்கொண்டு ஆட்டோ பிடித்து மணி ஐயர் ஹோட்டலை நெருங்கும்போது அவனது செல் கிணுகிணுத்தது.எடுத்துக்கேட்டான்.‘‘ஓகே!’’ என்று பதில் சொல்லி பிரீஃப் கேஸை ரிசப்ஷன் டெஸ்க் மேல் வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தான்.
அவர் ‘‘சொல்லுங்க…’’ என்றார்.அவன் ‘‘செந்தில்…’’ என்றான்.அவர் பஸ்ஸரை அழுத்தி ரூம் பாயை அழைத்து ‘‘சாரை 234க்குக் கூட்டிட்டுப் போ…’’ என்றார்.போனான். 234 கதவு திறந்தே இருந்தது. சரண்யா கட்டிலில் அமர்ந்திருந்தாள். நைட்டியில் ஜகஜ்ஜோதியாகச் சிரித்தாள்.
அவள் கைகாட்டிய நாற்காலியைத் தவிர்த்துவிட்டு சரண்யா பக்கத்தில் போய் அமர்ந்து பல்லைக்காட்டினான் செந்தில்.
அவள் ‘‘கழட்டிக் கொடுங்க…’’ என்றாள்.
‘‘வெய்ட்…’’ என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த சிங்க்கில் பல்செட்டுகள் இரண்டையும் நன்கு கழுவி டிஷ்யூ பேப்பரில் ஒரு முறை துடைத்து தன் பாண்ட் பையில் கைவிட்டு ஒரு வெல்வெட் கர்ச்சீப் எடுத்து துடைத்துவிட்டு அவளிடம் கொண்டு வந்து நீட்டினான்அவற்றைக் கையில் வாங்கித் திரும்பிப் பார்த்துவிட்டு ‘‘உங்களோட பல்செட் எங்கே?’’ என்றாள்.‘‘இதோ…’’அவன் தன் பிரீஃப் கேஸைத் திறக்கப்போகும்போது கதவை மூடிக்கொண்டு அவனைக் கோயிலில் இருந்தே கண்காணித்த இரு கண்களோடு ஒரு ரிவால்வரை நீட்டியபடி உள்ளே வந்தான் ஒரு மொட்டைத் தலையன்‘‘மரியாதையா பிரீஃப் கேஸை கொடுத்துட்டு வெளியேறு… இது சைலன்ஸர் பொருத்திய ரிவால்வர். சுட்டா சவுண்ட் கேட்காது…’’
செந்தில் திரும்பி சரண்யாவைப் பார்த்தான்.
அவள் சிரித்தாள்.‘‘ஃபாரெவர் வைரம் கடத்த இது நல்ல மெத்தட்தான் பிரதர். ஆனா, இப்படி நெறைய ரிஸ்க் வரும். மீட் பண்ணணும்…’’
அவள் மீண்டும் சிரித்தாள்.அவன் பயப்படாமல் சிரித்தான்.‘‘இனிமே நீ சிரிக்க முடியாது சிஸ்டர்! வைரக் கடத்தலுக்கு வணக்கம் சொல்லு…’’ என்று கூறிவிட்டு சடாரென்று பிரீஃப் கேஸைத் திறந்து ஒரு கைவிலங்கை எடுத்து அவள் கையில் மாட்டினான்.தப்பி ஓட நினைத்த மொட்டைத் தலையனை வெளியில் இருந்து பாய்ந்து வந்த நான்கு காவல்துறையினர் மடக்கி கைக்குக் காப்பு மாட்டினர்அவள் கையிலிருந்த தனது பல்செட்டைப் பிடுங்கி வாயில் மாட்டிக்கொண்ட செந்தில், ‘‘சரண்யா சரண்யா… சரணடைந்து விடு. ஜெயில் களி வேண்டாம்!’’ என்றான்.
– 13 Dec 2019