சமூகத்தீ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 7,726 
 

சில்லென்ற காலைப் பொழுது ஆங்காங்கே பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டே பறந்தன. இதமான குளிர் காலை ஆலமரத்தின் அடியில் அஜந்தா ஓவியம் போல் அழகான ஒரு குடிசை வீடு. உள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது ஏ …சின்னப் பொண்ணு அங்க என்ன செய்ற ….என்றது, வேறு யாருமில்லை சின்னப்பொண்ணுவின் அம்மாவினது குரல்தான் அக்குரல். நான் வாசலில் கோலம் போடறேம்மா என்றாள். சரி, சரி, கோலம் போட்டது போதும் உள்ளே பாத்திரம் வேற கழுவாம இருக்குது. எல்லாம் அப்படியே போட்ட இடத்தில் இருக்குது. இதெல்லாம் பார்க்க மாட்டியா? சீக்கிரமா கழுவிப் போடு என்றாள். சொல்லிக்கொண்டே தன் இடுப்புப் பையில் உள்ள வெற்றிலை பாக்கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். சின்னப்பொண்ணு உடனே எழுந்து சென்று தன் பாவாடையை மேலே தூக்கிக்கட்டிக் கொண்டு பாத்திரத்தைக் கழுவப் போனாள். இப்படி வீட்டில் உள்ள எந்த ஒரு வேலையும் இவளே செய்து முடிப்பாள்.

வீட்டின் வாசலில் இருந்து ஜானகி ஜானகி என்று சொல்லிக்கொண்டே தன் தோளில் உள்ள கலப்பை எடுத்து கீழே வைத்தார் இராமன். என்னங்க உடம்பெல்லாம் வேர்க்குது என்றாள் ஜானகி. அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ போய் வெந்நீர் போடு என்றார். உடனே ஜானகி வழக்கம் போல அங்கும் இங்கும் சில வேலைச் செய்து கொண்டிருந்தாள். இதைப் பார்த்த ராமன் நான் என்ன சொன்னன்… நீ இப்படி மெதுவா வேற எதுவோ வேலைப் பார்க்கிற என்று கோபமாகப் பேசினார். சரிங்க நான் போய் வெந்நீர் போடுறேன்னு என்று சொல்லிக்கொண்டே செல்லும் வழியில் கலப்பையைத் தெரியாமல் உதைத்து விட்டாள் ஜானகி. அதைக் கண்ட இராமன் அத ஏன்? இப்படி எட்டி உதைக்கிற… என்று கேட்டார். தெரியாம உதைச்சிட்டேன்,,, நான் சரியாப் பாக்கலீங்க என்றாள். சரி சரி போ என்று தன் கோபத்தை அடக்கிக்கொண்டு கூறினார்.

இராமன் குளித்துவிட்டு சாப்பிட்டார். அப்போதுதான் நல்ல நேரம் என்று எண்ணிக்கொண்டே ஜானகி பேசலானாள். ஏங்க அடுத்த திங்கட்கிழமை தீபாவளி வருதுங்க அதனால் எனக்கு ஒரு சேலை, சின்னப்பொண்ணுக்கு ஒரு பாவாடை சட்டை…என்று இழுத்தாள்… சரி வேணாம் சின்னப்பொண்ணுக்கு வேற வயசாயிடுச்சு அதனால ஒரு தாவணிசெட், உங்களுக்கு ஒரு வேட்டி சட்டை எல்லாம் எடுக்கணுங்க என்று கூறினாள்.

இராமன் அதற்கு… நான் இப்ப சாப்பிடனுமா? இல்ல வேணாம என்று கூறினார். என்னங்க இப்படிச் சொல்றீங்க என்றாள் ஜானகி. உமக்கேத் தெரியும் கையில வேற காசே இல்ல, இருந்த பணத்தை எல்லாம் வயலில் போட்டுட்டேன். இப்பப் பார்த்து துணி எடுன்னு சொன்னா? நான் எப்படி எடுப்பேன் என்றார்.

சரி வேணாங்க நம்ம சின்னப்பொண்ணுக்காவது ஒரு துணியை எடுத்துத் தாங்க என்றாள். ராமன் சற்று கோபமாக பார்த்தார். இப்படி பேசிக் கொண்டிருப்பது தன் மகளின் காதில் விழுந்தது. ஐய்யாயா அப்படின்னா நமக்கு ஒரு தாவணிசெட் கிடைக்குமென்று தன் மனத்திற்குள்ளேயே நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தாள்.

ராமன் எப்போதும் விடிய விடிய தன் வயலுக்குச் சென்று பார்ப்பது வழக்கம். அதைப்போலவே அன்றும் சென்றார். அங்கே இருந்ததைப் பார்த்து அதிர்ந்தார். காரணம் வயலில் உள்ள ஒருபகுதி நெல்மணிகளை இரவோடு இரவாக யாரோ அறுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அதனை நினைத்து நினைத்து கண் கலங்கினார்.

வீட்டிற்கு வந்து நடந்ததைச் சொன்னார். ஜானகியும் சின்னப்பொண்ணுவும் அழுதார்கள். நீண்டநேரமாகியும் சின்னப்பொண்ணு அழுகையை நிறுத்தவிலை. ஏனென்றால் வயலில் அதிக வேலை செய்தவள் அவள்தான். இராமனாலும் அதை மறக்க முடியவில்லை. கஷ்டப்பட்டு வேலை செய்தும் பயனின்றி போய்விட்டது என்று புலம்பினார்.

சரி மிச்சமிருப்பதாவது சரியாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணியவாறு இரவிலும் வயலிலேயே இருக்க ஆரம்பித்தார். இப்படி காவல் காத்து காப்பாற்றியது அறுவடையில் ஓரளவு பலனைத் தந்தது. இப்படியாக அவர்கள் குடும்பம் வறுமையில் வாடியது. இராமனுக்கு வேறு எந்த வேலையும் செய்யத் தெரியாது. பிறந்தது முதற்கொண்டு விவசாயம் மட்டுமே செய்யத் தெரியும்.

ஜானகி எப்போதும் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை பாக்கை எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டு அரைத்துக் கொண்டே இருப்பாள். தன் அம்மாவிடம் சின்னப்பொண்ணு தயங்கித் தயங்கி வந்து தூணைப்பிடித்துக் கொண்டே அம்மா என்றாள்,,, பக்கத்து ஊர் தியேட்டர்ல ஒரு நல்ல படம் வந்துருக்குமா அதனால நானும் பக்கத்து வீட்டில் இருக்கும் ருக்கு, லட்சுமி எல்லாம் போய் பாத்துட்டு வரட்டுமா? என்றாள்.

இதனைச் சொன்னவுடன் ஜானகி ஒண்ணும் வேணா…. போய் வேலையைப் பாரு என்று கண்டித்துச் சொல்லிவிட்டாள். இப்படி சின்னப்பொண்ணுவின் ஒவ்வொரு ஆசையும் நிராசையாகவே போகும். அவள் வீட்டிலுள்ள மாடுகளிடம் அன்பாகப் பழுகுவாள்.

இன்னும் சொல்லப்போனால் பசுமாடு என்றால் அவளுக்கு உயிர். ராமன் வந்தார். ஏ சின்னப்பொண்ணு அந்த மாட்டை விக்கப் போறன் என்றார். அதற்கு அவள் என்னப்பா சொல்றீங்க என்றாள். ஆமா அதை விக்கணும், ஏன்னா கையில காசு இல்ல. நாளைக்கு வேற வயலில் ஏர் ஓட்ட வேண்டும் என்றார். அதுக்குப் பணம் வேணும் அதனாலதான் என்றார். சின்னப்பொண்ணுவிற்கு எந்தத் துன்பம் வந்தாலும் அம்மாட்டின் பக்கத்தில் உட்கார்ந்து தன் குறைகளைக் கூறி அழுவாள். அப்படி தனக்கு ஆதரவாக இருந்த பசுமாட்டை விக்கப் போறாங்க என்றதும் கண்கலங்கினாள். இப்படியாக அவள் தன் வீட்டில் மகிழ்ச்சி இல்லாமல் வாழ்ந்தாள்.

சரி நாம கல்யாணம் பண்ணிக்க போற இடமாவது நல்ல இடமாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வாள். நம் இஷ்டப்படி நடந்து கொள்ளலாம் என்று ஆசை கொண்டாள். அவளுக்கு இருந்த இரண்டு தாவணியும் கிழிந்துபோய்விட்டது. சரி நம்ம அம்மாவிடம் சொல்லி ஒன்று அல்லது இரண்டு வாங்கிக் கொள்ளலாம் என்று மகிழ்ச்சி அடைந்தாள். ஒரு சந்தேகம் அம்மா எடுத்துத் தருவாங்களோ? அல்லது தரமாட்டாங்களோ என்று நினைத்தவுடன் அவளது மகிழ்ச்சி திடீரென காணாமல் போனது.

இராமன் சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்துக் கொண்டே வந்தார். அவர் மனதில் தன் மகளை ஒரு நல்ல குடும்பத்தில் ஒருவருக்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

ஒருநாள் தன் வயலில் வேலையெல்லாம் செய்து முடித்து வீட்டிற்கு வந்தார். இரவு படுக்கப் போனார். அப்போது ஜானகி ராமன் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு எப்போதும் இல்லாதபடி அன்பாக பேசினாள். என்னடி இன்னைக்கு உபச்சாரம் அதிகமா இருக்கு என்று கேட்டார். ஜானகி ஒன்னும் இல்ல நம்ம மகளுக்கு வேற வயசாகிட்டே போவது அக்கம்பக்கத்தில் இருக்கறவங்க யாரும் எதுவும் பேசரதுக்கு முன்னே ஒரு நல்ல வரனுக்கு கட்டிக் கொடுத்துடனும் என்றாள். என்னம்மா …நீ… நினைப்பதற்கு முன்பே நான் நம்ப புரோக்கர் கிட்ட சொல்லி இருக்கேன். அதனால சீக்கிரமா மகளுக்குக் கல்யாணம் பண்ணிவிடலாம் என்று ஆறுதல் கூறினார்.

ஜானகி உனக்கு ஒன்னு தெரியுமா? நான் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணம் இப்போது எப்படி நம்ம சின்னப்பொண்ண கட்டிக் கொடுப்பதற்கு உதவுவது பார்த்தியா என்று சொல்லிக் கொண்டே சிரித்தார் இராமன்.

இப்படியாக நாள்கள் ஓராண்டு சென்றது. புரோகிதர் வீட்டிற்கு வந்தார். ஒரு நல்ல வரன் வந்திருக்கு என்றார். அது ஒரு நல்ல குடும்பம் என்றும் நிறைய சொத்துக்கள் எல்லாம் இருக்குது என்றும் கூறினார். ஆனால் என்ன வருத்தமான செய்தி என்றால் அவர்கள் கொஞ்சம் பணம், நகை எதிர்பார்ப்பார்கள் என்றும் கூறினார். சரி இருக்கட்டும் நம் மகள் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று பெற்றோர் இருவரும் ஒத்துக் கொண்டனர். மாப்பிள்ளை வீட்டார் வந்து சின்னப்பொண்ணுவைப் பார்த்தனர் அவர்களுக்குப் பிடித்து போனது. என்னம்மா சின்னப்பொண்ணு உனக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா என்று அவரது தந்தை கேட்டதற்கு வெட்கத்தால் நாணி ஓடினால் ஓடிச்சென்று அறையில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டாள். அவள் மனதில் பட்டாம்பூச்சியும் மலர்களும் பறக்கவும் மலரவும் தொடங்கின.

அவள் மனதில் இப்படி நினைத்தாள். பரவாயில்லை நமக்கு நகை புதுத்துணிமணி , நல்ல செருப்பு எல்லாம் வரும் என்று மகிழ்ந்து கொண்டாள். மாப்பிள்ளை வீட்டில் கேட்டதற்கெல்லாம் இராமனும் ஜானகியும் ஒத்துக்கொண்டனர். எப்படியோ தன் வீட்டில் இருந்த பணத்தை வைத்துக்கொண்டு சிலரிடம் கொஞ்சம் பணம் கடன் வாங்கியும் பொருட்கள் துணிகள் எல்லாம் வாங்கினார்கள்.

திருமணம் நடக்கும் முன் இன்னும்கூட 5 சவரன் நகை போட்டுக் கொடுக்கனும் மாப்பிள்ளை வீட்டார் சொன்னார்கள். அதற்கு ராமனும் ஜானகியும் இப்ப திடீர்னு கேட்டா நாங்க என்ன பண்ணுவோம் என்றனர். அதனால நீங்க முதல்ல சொன்ன நகையை எல்லாம் இப்ப போடுகிறோம் என்றனர். அதெல்லாம் முடியாது நான் சொன்னா அதுதான் முடிவு என்று மணியின் அம்மா கூறினார்.

சரி ம்மாமா திருமணம் முடிந்தவுடன் ஒரு மாதத்தில் நீங்க சொன்ன மாதிரி நகையை போடுகிறோம் என்றனர். இப்போது கல்யாணம் நடக்கட்டும் என்றனர். சரி கண்டிப்பாக ஒரு மாதத்தில் நகை போட்டுவிட வேண்டும் என்றார் சம்மந்தி.

கல்யாணம் நன்றாக மிகப்பெரிய அளவில் தான் நடந்தது. கையிலிருந்த பணத்தை எல்லாம் வைத்து தன்னுடைய மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்துவிட்டார் ராமன் என்று அனைவரும் பாராட்டினார்கள். யோவ் இராமா நீ பெரிய ஆளுதான் ஓய்ய்…உம் பொண்ணு கல்யாணத்த நல்லா சிறப்பா முடிச்சிட்ட என்று மேலும் சிலர் புகழ்ந்து பேசினார். இதைக்கேட்டு அவனுக்குள்ளும் சிறு புன்னகை பூத்தது. இப்படி பேச கேட்ட ஜானகியும் மகிழ்ச்சியோடு இருந்தார்.

சின்னப்பொண்ணு அப்பா அம்மாவை விட்டுப் பிரிவதை நினைத்து வருந்தினாள். இருந்தாலும் தான் போகும் இடத்தில் நம் பேச்சுக்கு மரியாதை இருக்கும் என்று நினைத்து ஆறுதல் அடைந்தாள். மேலும் சுதந்திரமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு கனவில் மிதந்தாள்.

மாப்பிளையும் அவளை மகிழ்ச்சியாகத்தான் வைத்திருந்தார். என்ன செய்வது அம்மாவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும். இவன் அம்மா சொல்லை வேத வாக்காக கருதுபவன். இப்படி ஒரு மாதம் ஒருநாள் போல் ஓடின. மிகவும் மகிழ்ச்சியாகத்தான் சின்னப்பொண்ணு இருந்தாள். அம்மகிழ்ச்சியில் இடி ஒன்று இறங்க சந்தர்ப்பமாக அந்த ஐந்து சவரன் நகை அமைந்தது. சம்பந்தியம்மா கோபமாக கத்தினார். உங்க வீட்டில் ஒரு மாதத்தில் மீதி நகை போடுறன் சொன்னாங்க? ஒரு மாதம் ஆகிவிட்டது ஆனால் இது வரைக்கும் அவுங்க வரவில்லையே? நீ போய் நகையை வாங்கிட்டு வா என்றார்.

அத்தை உங்களுக்கேத் தெரியும் எங்க அப்பா அம்மா எப்படி கஷ்டப்பட்டு என்னைக் கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க என்று எடுத்துச்சொல்லிக் கெஞ்சினாள். இப்படி சொன்னமாதிரியே 5 சவரன் வேணும்னா எப்படி என்றாள். அதற்கு சம்பந்தியம்மாள் மணி …மணி என்ன இவ.. என்னமோ கதைச் சொல்றா… நீ இவளைக் கூட்டிக்கொண்டு அவ வீட்ல விட்டுட்டு வா என்றார்.

அவுங்க வீட்டில் நகை கொடுத்தாங்கன்னா இவள கூட்டிக்கொண்டு வா இல்லைனா அங்கேயே விட்டுவிட்டு வந்துடு என்று சொன்னார். அவன் மனதில் கஷ்டம் தான் இருப்பினும் அம்மாவிற்கு ஆமாம் சாமி போட வேண்டும் அல்லவா மணியும் அதற்கு ஒத்துக் கொண்டான். சின்னபொண்ணணுவுடன் அவளது கிராமத்து வீட்டிற்குச் சென்றனர். இருவரையும் பார்த்த இராமனும் ஜானகியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அவர்களுடன் மணி பேசிப் பார்த்தான் அதற்கு அவர்கள் இப்போ முடியாது மாப்பிள்ளை என்று கூறினார்கள். சரி நான் சின்னப்பொண்ணுவ இங்கேயே விட்டுட்டு போயிட்டு வரேன். அப்பறமா நீ வா என்று சொல்லி அவன் கிளம்பிவிட்டான். வீட்டின் உள்ளே வந்த மணியைப் பார்த்து அவனது அம்மா எங்கே? உன் பொண்டாட்டியைக் காணோம் என்றாள். இல்லமா கொஞ்ச நாள் நாள் கழிச்சு அவளே வருவதாக சொன்னார் என்றான்.

நான் உங்கிட்ட என்ன சொல்லி அனுப்பினேன்? நீ என்ன பண்ணிட்டு வந்திருக்க என்று கேட்டார். சரிம்மா வந்துருவாங்க என்றான். இப்படி இரண்டு வாரம் சென்றது. சின்னப்பொண்ணுவின் பெற்றோர்கள் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். புகுந்த வீட்டிற்கு வந்த உடனேயே சம்பந்தியம்மா என்னம்மா சின்னப்பொண்ணு நகைய வாங்கிட்டு வந்தியா? இல்ல சும்மா வந்துட்டியா? என்று கேட்டார். அதற்கு அவள் இல்ல…. இன்னும் ரெண்டு வாரத்துல அப்பாவே கொண்டுவந்து கொடுத்துவிடுவதாகச் சொன்னாங்க என்றாள்.

அதான் வந்துட்டேன் என்று கூறினாள். சம்மந்தியம்மாள் சற்று கோபப்பட்டாள். நேரம் கிடைக்கிறபோதெல்லாம் சின்னப்பொண்ணுவைக் காயப்படுத்தினார். உன் அப்பா மனநிலையை பார்த்தாயா என்றும் அவர் குடும்பத்தைப் பற்றியும் ஏளனமாக சொல்லுவதை வழக்கமாக்கிக் கொண்டார். இராமனும் ஜானகியும் தன் மகளை நன்றாக வாழ வைக்க முடியவில்லையே என்றும் வருந்தினர். அவர்கள் வீட்டில் இருந்த வறுமையின் காரணமாகவும் ஒவ்வொரு நாளும் பிரச்னையாகவே மனநிம்மதி இல்லாமலேயே அவர்களது வாழ்க்கை ஓடியது.

கடன்காரர்கள் வந்து ராமரையும் ஜானகி அம்மாவையும் கண்டபடி திட்டுவார்கள். யோவ் இராமா என்னய்யா எப்பதான்… நீ என்னிடம் வாங்கிய பணத்தத் தருவ என்று கேட்பார்கள். உன் வீட்ல ஏதாவது எடுத்துட்டு போகலாமா என்று பார்த்தால் வீட்டில் ஒன்றுமே இல்லை. சரி நீயும் பணம் தர்ர்ரஅ மாதிரி தெரியல. அதனால நீங்க உங்க வீட்ட விட்டுட்டு வேற எங்கேயாவது போங்கள் என்று கூறினர். வீட்டில் வைத்திருந்த பாத்திரத்தை எல்லாம் வெளியே தூக்கி எறிந்தார்கள். அவர்களிடம் பேசி அவர்களை அனுப்பி வைத்தனர்.

ராமனும் ஜானகியும் தன் மகளை நன்றாக வாழ வைக்க முடியவில்லையே என்றும் இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தார்கள். சின்னப்பொண்ணுவோ தனக்கு நடக்கும் சித்திரவதையைத் தாங்கிக் கொண்டு வாழ்வதை விட நம் வீட்டிலேயே சென்று வாழலாம் என்றும் நினைத்தாள். தான் பிறந்ததே தவறு என்றும் பலவாறு எண்ணி கொண்டே வருந்தினாள்.

மறுநாள் காலையில் செய்தித்தாள் படித்துக் கொண்டே கொண்டே மணி அவனது அம்மாவிடம் வந்து கோபமாகப் பேசினார். என்ன கோவமா பேசுற மணி என்ன விஷயம் சொல்லு என்று அவனது அம்மா கேட்டார். அம்மா நியூஸ் பேப்பரில் வந்த செய்திய படிச்சீங்களா என்றான். என்னடா போட்டிருக்கு என்றார். வறுமையைக் காரணம் காட்டி தன் வீட்டிற்கு வந்த மருமகளை சித்திரவதை செய்த மாமியாரையும் மருமகனையும் கைது பண்ணி சிறையில் வச்சுருக்காங்களாம். நல்லா பார்த்துக்கோங்கம்மா. இது உனக்குத் தேவையான விஷயம்தான் என்றான்.

இந்த விஷயம் தெரிஞ்சு என் மாமனாரும் மாமியாரும் மகளிர் போலீசில் கேஸ் கொடுத்தா நமக்கும் இந்தகதிதான் அதனால் இனிமேலாவது நீ திருந்துமா… என்றான். என் மனைவியை நல்லபடியா வச்சுக்கோ என்று கூறினான். மணி ..மணி உண்மையாவா? சொல்ற அந்த செய்தித்தாளக் காட்டு பார்க்கலாம் என்று கேட்க மணி அந்த செய்தித்தாளை முழுக்க படித்துக் காட்டினான்.

அதைப் பார்த்ததிலிருந்தே சம்மந்தியம்மா கொஞ்சம் பயந்த்துதான் போனார். சிலநேரம் யோசித்துவிட்டு மணியிடம் இப்படி பேசினார் மணி மணி நம்ம சின்னப்பொண்ணுவ நாம இனிமே நான் ரொம்ப கோவமா பேசப் போறது இல்ல, என்றும் நம்மள நம்பி வந்திருக்கா, அவங்க அப்பா அம்மாவையும் விட்டுட்டு நம்ம கூடத்தான் இருக்கா,,, அதனால சின்னப்பொண்ணுவ நாமதான் சந்தோஷமா பார்த்துக் கொள்ள வேண்டுமென்றார். அதைக் கேட்ட மணியின் மனது மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

அம்மா நீயா இப்படி பேசறது என்றான். ஏன்டா இப்படி கேக்குற? நான் தான் சொல்றேன். உன் பொண்டாட்டிய அதாவது என் மருமகளை இனிமேல் நான் நல்லா பார்த்துக்குவேன், அவளுக்குத் தேவையானதை எல்லாம் நானே செய்வேன். நீ எதைப் பற்றி யோசிக்காத என்று மணியிடம் திரும்பக் கூறினாள். இது எல்லாம் ஓரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்த சின்னப்பொண்ணு மகிழ்ச்சியுடன் போன் செய்து அவரது அப்பா அம்மாவிடம் நடந்ததைக் கூறினாள்.

நான் நல்லா இருக்கேன் அப்பா என்று மகிழ்ச்சியுடன் கூறினாள். எங்க மாமியாரும் இனிமேல் உங்களைத் தொந்தரவு பண்ண மாட்டார் எனச் சொன்னாள். அதற்கு அவர்கள் என்ன ஆச்சு, ஏன்? இப்படி சொல்ற? என்றனர். நடந்ததைக் கேள்விபட்டு அவுங்களுக்கு நான் நன்றி சொன்னதாகச் சொல்லும்ம்மா என்றார்.

சரிப்பா என்றாள் சின்னப்பொண்ணு. இல்லப்பா அத்தையும் உங்க மருமகனும் என்னை இனிமேல் நல்லா பார்த்துப்பாங்க . அதனால என்ன பத்தி இனிமே நீங்க கவலைப்படாம சந்தோஷமா இருங்கப்பா என்று கூறினாள். சரிம்மா நீ சந்தோஷமா இருந்தா அது போதும்மா என்று இருவரும் கூறினர்.

மறுநாள் காலையில் சின்னப்பொண்ணு இங்க வாம்மா என்று அவரது அத்தை அழைத்தாள். எதை எடுத்தாலும் வாம்மா என்று அன்போடு அழைக்க ஆரம்பித்தாள். அத்தையிடம் நல்ல மாற்றத்தை அவளும் மணியும் கண்டனர்.

மணி இங்க வாடா என்றார். என்னமா என்ன விஷயம் சொல்லு என்று பதற்றத்தோடு கேட்டான் மணி. இந்த மாதிரி… சொல்லப்போனா என்னை மாதிரி எத்தனைப்பேர் அவுங்வுங்க மருமகளை துன்பப்படுத்தி நடத்துவாங்க என்றார். அதுக்கு நாம என்னம்மா பண்ணனும் என்றான்.

மணி நான் இப்ப திருந்தின மாதிரி மற்றவங்களும் திருந்திட்டா எப்படி இருக்கும் என்றார். அதற்கும் மணி ஆமாம்ம்மா நல்லாதான் இருக்கும் என்றான். அதனால நாம ஒரு சங்கம் ஆரம்பிச்சா என்ன என்று கேட்டார். இப்ப புரியுதுமா நீ என்ன சொல்ல வரன்னு என்றான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சின்னப்பொண்ணுவும் பேச ஆரம்பித்தார். வரதட்சணை என்ற சமூகத்தீயை நாம் ஒழிக்க ஏதாவது செய்யனும் என்று கூறினாள். நம்ப சின்னப்பொண்ணு கரெக்ட்டா சொல்றா பார்த்தியா? அவ சொல்ற மாதிரியே நாம இதைத் தடுக்க ஏதாவது செய்யனும் என்றார்.

நாம் எதாவது செய்தாத்தான் சிலருடைய மனசாவது மாறும் என்று மணியும் கூறினான். குடிபுகுந்த வீட்டில் இருக்கின்ற அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருக்கணும் அதுக்கு ஏதாவது செய்யணும் என்று சம்மந்தியம்மாவும் சின்னப்பொண்ணுவை நோக்கி கூறினார்.

சரிம்மா நான் வேலைக்குப் போயிட்டு வரன் என்று மணி கூறிவிட்டு சென்றுவிட்டான். மதியம் திரும்ப வீட்டுக்கு வந்தான். அவர்கள் மூணு பேரும் சேர்ந்து வரதட்சணை என்ற சமூகத்தீயைத் தடுக்க சங்கம் ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தனர். மறுநாள் காலையில் இவர்கள் மூவர் இருகைகளிலும் வரதட்சணையை ஒழிப்போம் என்பது குறித்தான பதாகைகளை ஏந்திய வண்னம் சென்றனர். அன்பை பெருக்குவோம், மருமகளையும் மகளாகவே கருதி … வாழ்வோம்…. வாழ்க்கை சிலகாலம்தான் அதை சந்தோஷமாக மாற்றுவோம் என்று சொல்லிக்கொண்டே சாலை வழியாக ஊர்வலம் சென்றனர்.

அவர்கள் இப்படிச் செல்வதைப் பலர் ஆச்சரியத்தோடு பார்த்தனர். வசனத்தை படித்துக் கொண்டே சென்றனர். வரதட்சணைத்தீயை அழிப்போம்….மாற்றம் வரும்… கண்டிப்பாக மாற்றம் வரும்…. என்று மூவர் சென்ற ஊர்வலத்தில், சாலையில் சென்ற பலரும் கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து கொண்டனர். தற்போது இந்த எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகிறது. தொடர்ந்து சமூக விழிப்புணர்விலும் இவர்கள் பங்கு கொள்கின்றனர். இன்றைக்கு மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன…. நாளடைவில் இச்சமூகத்தீ காணாமல் போய்விடும். வாருங்கள் நாமும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றுவோம்….தீயை அழிப்போம்,,,,,,,,…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *