சமூகக் கட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2024
பார்வையிட்டோர்: 267 
 

(1962ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜமீன்தார் சாகேப் ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டார். ஒரு நாளாவது சிந்தனையில் ஈடுபடாத அவருக்கு அன்றைய அனுபவம் புதிதாக இருந்தது. கையிலிருந்த கடிதம் அவரை மேன் மேலும் சிந்திக்கத் தூண்டியது. கடிதத்தை எழுதிய நங்கையிடம் அவர் கொண்டிருந்த உண்மையான காதல் அச் சிந்தனைக்கு ஓர் எழுச்சியை ஊட்டிற்று. என்னதான் தூண்டுத லும் எழுச்சியும் இருந்தாலும் அனுபவம் புதிதல்லவா? பணம் இருக்கிற இடத்தில் சிந்தனைக்கு என்ன வேலை ? பணத்தை வாரி இறைத்தால் பணக்காரனுக்காக அறிவை அடகு வைக்க அறிஞர்கள் காத்திருக்கிறார்கள். எனவே, ஜமீன்தாருக்கு அன்றைய அனுபவம் புதிது; முதன்முதலாக ஏற்படுவது. தம் வாழ்க்கையைப்பற்றித் தாமே சிந்திக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. தீவிரமாக எண்ணினார்; மிகத் தீவிரமாக எண்ணினார். மனத்தை ஒருமுகப்படுத்தி எண்ணிவிட முயன்றார். 


அவன் தெருவழியே நடந்து போய்க் கொண்டிருந்தான். எந்த ஊரில் இருக்கிறோம் என்றுகூட அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், ஏதோ பழக்கமான ஊர்போலவும் தோற்று கிறது. தெருவழியே போவோர் வருவோர் எல் லோரையும் வியப்போடு பார்த்தான். ‘சுத்தக் கர்நாடகங்கள் ‘ என்று அவர்கள் கோலத்தைப் பற்றி எண்ணினான். ஆனாலும் அந்தக் கர்நாடக உடை தனக்குப் பழக்கமானது போலவும் உணர்ந்தான். மாடமாளிகைகள் நிரம்பியிருந் தன. அவையெல்லாம் ஏதோ ஒரு புதுமையாகத் தென்பட்டாலும் எங்கோ பார்த்திருக்கிறோமே என்று எண்ணினான். 

திடீரென்று ஒரு யானை வருவதைக் கண் டான். அதன்மேல் ஒருவன் அமர்ந்து பறை அறைந்துவந்தான். அவனுக்குப் பின்னால் இருந்த ஒருவன் ஏதோ ஒன்றைக் கையில் வைத்துப் படித்தான். பறை ஓசை கேட்டதும் தெருவில் சென்ற மக்கள் எல்லோரும் நின்றனர். செய்தியைப் படித்தவுடன் அவர்கள் யாவரும் ஒருமுறை தலையை வளைத்து வணக்கம் செலுத்தி விட்டு மேலே சென்றனர். இது என்னடா, புதுமாதிரியாக இருக்கிறது ! என்னவென்று தான் கேட்கலாமே ‘ என்று எண்ணி, பக்கத்தில் சென்ற ஒருவரை அணுகினான். “யானை மேலிருந்து என்ன படிக்கிறான்? நீங்களெல்லாரும் ஏன் பணியவேண்டும் ?” என்று கேட்டான். 

“என்ன, ஐயா ஊருக்குப் புதியவர்போலி ருக்கிறது. அவர்தாம் அரண்மனை வள்ளுவர். இன்னும் இரண்டு நாட்களில் இளவரசருக்குச் ‘சின்னப் பட்டம்’ சூட்டப் போகிறார்கள். அதைத்தான் அறிவித்தார். அரண்மனை அறி விப்பைக் கேட்டால் அதற்கு மரியாதை செலுத்த வேண்டாமா? அதற்காகத்தான் தலை வணங்குகிறோம்…… அது சரி. தாங்கள் யார் ?” 

“நானும் இந்த ஊர்தான்…” 

“என்னமோ!? ம்ம்….ன் ” என்று சொல்லிக் கொண்டே வழிப்போக்கர் நடையைக் கட்டினார். 

அவனுக்கு ஒரே வியப்பு. “நம் ஊரில் நடக்கிறவையே நமக்கு விளங்கவில்லையே! சரி, அந்த அரசனையும்தான் பார்த்துவிடுவோமே என்று முடிவுகட்டினான். அரண்மனைக்காக அவன் ஒன்றும் நடந்து அலுக்க நேரவில்லை. திரும்பிப் பார்த்தான்; அரண்மனை! 

நேரே உள்ளே நுழைந்தான். அவனை யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை. “நல்ல காவல்! நுழைவதைப் பார்த்தும் தடுக்காமல் இருக்கிறார்களே!” என்று வாய்விட்டுச் சொல் லிக்கொண்டே உள்ளே போனான். அப்போது கூட அவனை யாரும் தடுக்கவில்லை. அவனுக்கு ஒரே வியப்பு! ‘இப்படியும் இருப்பார்களா ‘ என்று ஒரு ‘கேள்வி எழுந்தது. ‘ஒருவேளை உள்ளே……. ஏதாவது ஆபத்து ஏற்படலாம். அதனால்தான் இவர்கள் தடுக்கவில்லைபோ லிருக்கிறது’ என்ற எண்ணம் உதித்தது. அதன் விளைவாக அச்சம் அவனைக் கௌவிக்கொண் டது. இருந்தாலும் மறைந்து மெல்ல மெல்ல…. உள்ளே, உள்ளே…….. போனான். உள்ளே என்றால், நேரே அந்தப்புரத்துக்கே போய் விட்டான். அதுவரையிலும் ஒரு தடையும் நேர வில்லை என்ற ஒரு காரணமே அவனுக்கு எல்லை யில்லாத வெருட்சி அளித்தது. கடைசியாக ஒரு பரண்மேல் அமர்ந்துகொண்டான். எப்படித் தான் பரண்மேல் ஏறினான் என்று தெரிய வில்லை. அவனுக்கு உதவியாக மெத்தை தலையணை யெல்லாம் யார் போட்டார்கள் ?. ஒன்றும் புரியவில்லை. 

இருந்தாற்போ லிருந்து வீணை இசை அவனை ஈர்த்தது. குனிந்து பார்த்தான். அந்தணர் ஒருவர் வீணையை மீட்டினார். அழகாக மீட்டிப் பாடினார். அவனுக்குத் தூக்கம்கூட வந்தது. அவ்வளவு இனிமையாக இருந்தது, வீணை இசை. தூக்கத்தை அடக்கிக்கொண்டு, என்னதான் நடக்கிறது என்று கவனித்தான். அந்த இசைக் கலைஞருக்கு எதிரே அசையும் சதைப் பிண்டமாக ஓர் உருவம் இருந்தது. அந்த உருவத்துக்கு நடந்த மரியாதையி லிருந்து அது அரசியின் திருவுருவம் என்று முடிவு செய்தான். இசைக் கச்சேரி நடந்தபோது மன்னன் வந்து சேர்ந்தான். அவனுடைய வருகையை அரசி விரும்பவில்லை. தன் வெறுப்பை வெளிக்காட்ட அவள் தயங்க வில்லை. எரிந்து விழுந்தாள்; வாய் வழியாக நெருப்பைக் கக்கினாள். பரண்மேல் இருந்த வனுக்கு இதில்மட்டும் வியப்பே தோன்றவில்லை. தனக்கு மிகவும் அனுபவமான நிகழ்ச்சி போலவே அவனுக்குப் பட்டது. உள்ளே வந்த மன்னனுக்கும் நடந்த நிகழ்ச்சி வெறுப்பையோ வியப்பையோ ஊட்டவில்லை. பொறுமையாக நின்று பார்த்தான். அரசியின் வடிவிலிருந்த ஆங்காரியின் ஆத்திரம் வடிவதாகக் காணோம். சரி, இது வழக்கம் தானே’ என்று சொல்லுவது போல ஒரு வகையான விகற்பமும் இல்லாமல் வந்த வழியே திரும்பினான். பரணில் இருந்தவ னுக்கு ஒரே மகிழ்ச்சி! என்னவோ தெரிய வில்லை. உடனே பொத்தென்று கீழே குதித் தான். ஒருவரும் அவனைக் கவனிக்கவில்லை. மன்னனைப் பின்தொடர்ந்தே சென்றான். 

மன்னன் அரண்மனையை விட்டு வெளி யேறினான். அவனும் கூடவே பின்தொடர்ந் தான். திடீரென்று ஒரு பெரிய மாளிகைக்குள் மன்னன் நுழைந்தான். அவனும் உள்ளே போனான். மன்னனைப் பல பெண்டிர் வணங்கி வரவேற்றார்கள். அவனைமட்டும் யாரும் கவனித்த தாகவே தெரியவில்லை. இந்த மாளிகை திடீ ரென்று எப்படி வந்தது? இந்தப் பெண்களெல் லாம் யார் ?-இப்படியாகப் பல கேள்விகள் அவன் மனத்தில் எழுந்தன. ஆனால், விடை தெரியவில்லை. அதற்குள், அதோ, யாரது? அவளை எங்கோ அவன் பார்த்திருக்கிறானே! யாரது? யார்? ம்ம்……. யாரது? ம்ம்….யாரது 

மன்னனை நெருங்கினாள். கரங்களோடு கரங்கள் சேர்த்து வரவேற்றாள். உள்ளே அழைத்துச் சென்றாள். அவன் உள்ளே போக விரும்பவில்லை. வெளியே நின்றுவிட்டான். பேச்சுக் குரல் கேட்டது. கேட்டான். 

“மகாராஜா! ஒரு கேள்வி கேட்கலாமா?”

“உனக்கு இல்லாத உரிமையா? தயக்கம் எதற்கு?” 

“இல்லை, ஒன்றுமில்லை சும்மாதான் ?”

“போடி பயித்தியமே ! சும்மாவாவது சுமந்துகொண்டாவது! என்ன வேணுமோ கேள்”. 

“இளவரசுப் பட்டம் சூட்ட நாள் முடிவா யிற்று என்று கேள்விப்பட்டேன். அது தான், வேறொன்றும் இல்லை….” 

“என்னமோ இழுக்கிறாயே? மனத்தில் உள்ளதைச் சொல்லு. மறைப்பு எதற்கு ? என்னிடத்தில் எதற்காக மறைக்கவேண்டும் ? ஏன் நீயும் விழாவுக்கு வரவேண்டுமா?…” 

“ஐயையோ! நானாவது அரண்மனைக்கு. வருவதாவது! எங்களுக் கெல்லாம் அங்கே இடமேது ? அப்படி நான் ஒன்றும்……..” 

“பின்னே என்னதான் கேட்க நினைக்கிறாய்? கேட்டுத் தொலையேன். அர்த்தமற்ற விளையாட்டுக்காகவா இங்கே நான் வருகிறேன்?’ 

“கோபமே வந்துவிடும்போ லிருக்கிறதே ! இப்போதே இவ்வளவு கோபமென்றால் நான் நினைத்த கேள்வியைக் கேட்டுவிட்டால்…….” 

“இதோ பார்….அப்படியெல்லாம் நான் ஒன்றும் முட்டா ளல்ல. சும்மா கேள்.” 

“சரி கேட்கிறேன். என்ன ஆனாலும் சரி… உங்கள் இளவரசன் இருக்கிறானே, இன்பவேலன், அவன் பிறப்பைப்பற்றி என் னென்னவோ பேசிக்கொள்கிறார்களே, அதெல்லாம் மகாராஜா சமூகத்துக்குத் தெரியுமோ?…. 

“தெரியுமோ என்ன? எனக்கும்தான் அந்தச் சந்தேகம் உண்டு. நான் என்ன பண்ணலாம்? எல்லாம் நாம் நினைத்தபடியா நடக்கிறது? உன் மகன்…”

வெளியே இருந்த அவனால் அவ்வளவுதான் கேட்க முடிந்தது. பிறகு ஒன்றும் கேட்கவில்லை. தூக்க மயக்கம். 

விழித்துக்கொண்டபோது மன்னன் புறப்பட்டுக்கொண் டிருந்தான். அரசன் வாசலைத் தாண்டிய பிறகு அவனும் அடித்துப் புரண்டு எழுந்து ஓடினான். அவன் வெளியே போகுமுன் ஒரு பணிப்பெண் அவனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தாள்.” பாவம், பயித்தியக்காரி! என்னை அரசன் என்று நினைத்துத்தான் கொடுத்து விட்டாள். என்ன எழுதியிருக்கிறது பார்க்கலாம்” என்று கடிதத்தைப் பிரித்தான். படித்துக் கொண்டே நடந்தான். அதற்குள் வாயிற் படி தடுக்கிற்று. விழுந்து விட்டான்…


ஜமீன்தார் சாகேப் விழித்துக்கொண்டார். சிந்திக்கத் தொடங்கினவர், பாவம், தூங்கி விட்டார். கையிலே ஒரு கடிதம் இருந்தது. அதைப் படித்தார் : 

ஜமீன்தார் சாகேப்! 

திருவடிகளுக்கு வணக்கம். உயில் எழுதப் போவதாகக் கேள்விப்பட்டேன். இதுவரை இல்லாத உரிமை இனிமேல் புதிதாக வரப் போவதில்லை. இதுவரை இருந்த உரிமையை இனிமேல் என்னிடம் பறிப்பாரும் இல்லை…என்னவோ எழுதத் தோன்றுகிறது. எழுது கிறேன். மன்னிக்கவேண்டும். 

என்னதான் காதலுக்கு உறைவிடமாய் இருந்தாலும் வைப்பாட்டி வைப்பாட்டிதான். என் வயிற்றில் உதித்த குழந்தைக்கு உரிமை நல்கச் சமூகச் சட்டம் மறுக்கிறது. 

மனைவியிடம் அன்பில்லாமல் இருக்கலாம். மனைவி என்ற ஒரு காரணத்தினாலேயே அவள் பெற்றெடுத்த குழந்தைக்கு உரிமை கிட்டுகிறது. 

என் வயிற்றில் தோன்றிய கரு தங்கள் விளைவாய் இருந்தாலும் ‘வேசி மகன்’ என்று தான் முடிகிறது. 

அவள் குழந்தையோ தோற்றம் எப்படி யிருந்தாலும் ‘ஜமீன்தார் பையன்’ என்றுதான் முடிவாகிறது. 

கணிகையின் குழந்தை உள்ளன்பின் விளைவு; ஊனமில் பிறவி. ஆனால், உரிமை இல்லை. 

மனைவியின் குழந்தை மனை வாழ்க்கையின் விளைவு; மனக் குறைவின் புறத்தோற்றம். ஆனால், உரிமை பெற்றுவிடுகிறது. 

என்ன செய்யலாம்? என் காதலருக்கு ஆண்மை இல்லை. அவள் கணவருக்கு உரிமை இல்லை. சமூகக் கட்டு நாசமாகும் காலம் எப்போதோ, தெரியவில்லை. 

தாய்மையால் வருந்தும் அடியாள் 
காமவல்லி 

கடிதத்தைப் படித்தார். சிந்திக்க முயன்றார். பாவம்! அந்தப் பிறவிக்குச் சிந்தனை என்ற ஒரு சரக்கு ஏது?

– இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *