ஆபிஸ் முடிந்து வீடு திரும்பினேன். உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக அம்மா பொங்கினாள்.
‘அடேய்! இனி ஒரு நிமிஷம் கூட உன் மனைவியோட நான் இருக்க மாட்டேன். என்னை லட்சுமி வீட்டுல விட்டுடு!’
லட்சுமி என் தங்கை.
‘ஏம்மா…என்ன பிரச்னை’ என்றேன். பதிலே இல்லை.
‘எல்லாம் உன் மனைவி சொல்லுவா. கேட்டுக்க. அவ பேச்சைக் கேட்கிறவன்தானே நீ!” என என்னை ஒரு இடி இடித்து விட்டு ‘நீ என்னடா கொண்டு போய் விடறது? நானே போய்க்கிறேன்!’ என்று உடனே புறப்பட்டு விட்டாள் அம்மா
மனைவியைத் தேடினேன். மார்க்கெட் போய்விட்டு சாவகாசமாக வந்தாள்
என்ன பிரச்னை…ஏன் அம்மா கோவிச்சுக்கிட்டு போறாங்க…? – கேட்டேன்
அது ஒண்ணுமில்லீங்க. இங்கே மறுபடி பவர்கட் பிரச்னை வந்துடுச்சா, அதனால முன்ன மாதிரி உங்கம்மாவால சீரியல்
பார்க்க முடியலை. சீரியல் பார்க்கலைன்னா உங்கம்மாவுக்கு பித்துப் பிடிச்சது மாதிரி ஆயிடும். லட்சுமி வீட்டுல
இன்வெர்ட்டர் போட்டிருக்காங்கன்னு கூப்பிட்டிருக்கா. அங்கே போனா நிம்மதியா டி.வி.பார்க்கலாம்னுதான் என் கூட
சண்டைங்கிற மாதிரி ஒரு நாடகமாடிட்டு கிளம்பிட்டாங்க. நீங்க பயப்பட வேண்டாம்” என்றாள்.
‘நல்லா கெளப்புறாங்கடா பீதிய’ என்று என் மனம் நிம்மதியானது.
– பெ.பாண்டியன் (ஏப்ரல் 2014)