கோயில் பொம்மைக்கு ஒரு மொழம் பூ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 11,775 
 
 

வைப்பாரறும் கிருஷ்ணாறும் ஒண்ணா சேர்ந்து ஓடுற ஆத்துக்கு நடுவுல உள்ளது தான் இருக்கன்குடி மாரியம்மன் கோவில். மேற்க மேற்கு தொடர்ச்ச்சி மலைப் பக்கம் நல்ல மழை பெஞ்சா மட்டும் தான் இங்க ஆத்துல கொஞ்சமாவது தண்ணிய பாக்கலாம்.இப்போ ஆத்துல துளியும் தண்ணி இல்ல ஆத்துல அங்கங்க உள்ள ஆள்துழ கிணத்துல வர்ற பம்புசெட்டு தண்ணியிலதான் அந்த ஊர் சனமும் கோவிலுக்கு வர்றவங்கலும் குத்தால அருவியில குளிக்கிறது போல குளிச்சிக்கிட்டு வர்றாங்க.

கோவிலோட பரப்பளவு ரொம்ப விரிஞ்சி கெடக்கும். கோவில சுத்தி நூறு கடைக்கு மேல இருக்கும். அதுல ஒண்ணுதான் கல்யாணியோட பூக்கடை. அவ பாக்குறதுக்கு மாநிறமாவும் நடுத்தர உயரமாவும் இருப்பா. மெலிஞ்ச ஒடம்புக்காரி. மேல் பல்லு ரெண்டு மட்டும் எடுப்பா இருக்கும் பாக்க லட்சணமாத்தான் இருப்பா. சின்ன வயசுலேயே அப்பன், ஆத்தாள பறிகொடுத்தவ. பாட்டி வீட்லதான் வளர்ந்து வந்தா. எட்டாவது வரைக்கும் படிச்சா. அப்பறம் வயசுக்கு வந்தவுடன் படிக்கிறத நிப்பாட்டிட்டா அவ பாட்டி.

ஏழாயிரம் பண்ணைல உள்ள பூ வியாபாரம் செய்யும் பெரியசாமியோட இளைய மகனுக்கு இவள கட்டி வச்சிட்டு கண்ண மூடிட்டா பாட்டிக்காறி . ஆரம்பத்துல அவளோட புருசனும் அவளும் சேர்ந்துதான் பூஜை சாமான்களும், பூவும் வித்துகிட்டு இருந்தாங்க. கல்யாணமாகி ரெண்டு வருசத்துல அவ புருசனுக்கு மஞ்சள்காமால முத்திப்போயி அலுப்பாயிசுல போயிட்டான். அப்போ அவளுக்கு புள்ள இல்ல.

ரெண்டாத ஒருத்தனுக்கு வாக்கப்பட்டு அவனுக்கு ஒரு பொம்பள புள்ளைய பெத்தெடுத்து முழுசா ஐந்து வருசம்தான் ஆகுது. அவனும் இவள பாதியில விட்டு புட்டு வண்டியில அடிபட்டு செத்து போயிட்டான். கழுத்துல கட்டுன ரெண்டு தாலியுமே நிக்காம இப்ப மூலியா நிக்கா.

அன்னைக்கு ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமை, இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரொம்ப விசேசமா இருந்துச்சி. ஆயிரக்கணக்கான மக்கள் கூடிகிட்டு இருந்தது. விளாத்திகுளத்துல இருந்து இருக்கன்குடி போறதுக்கு 10 மணி ஜெயவிலாசு பஸ்சு பொகைய கெளப்பிகிட்டு, சத்தம் குடுத்துகிட்டு, பொறப்படத் தயாரா நின்னது. பஸ்சுக்குள்ள நிக்கக்கூட இடமில்லாம படிக்கட்டு வெளியவரைக்கும் சனம் பிதிங்கி போயி இருந்தது. போதாக் கொறைக்கு பஸ்சோட மேல் கூரையிலும் பல பேரு ஒக்காந்துருக்க,

“ஏப்பா! கண்டக்டர் ஏறிட்டாரான்னு, யாராவது பாத்து சொல்லுங்க…”னு டிரைவரு கெடந்து கத்துராரு.

ஏய்! அதெல்லாம் கண்டட்டரு டாப்புல ஏறி ஒக்காந்துக்கிட்டு டிக்கட்டு போடுராறுன்னு யாரோ பின்னாடி இருந்து குரல் கொடுக்க,

“ஏப்பா நீ மொதல்ல வண்டிய எடு…”னு மீசக்கார பெருசு ஓங்கி சத்தம் கொடுத்துது.

அப்பத்தான் பஸ்சோட டயரு பைய உருள ஆரம்மிச்சது…

ஒருவழியா சூரங்குடி போற மொதவண்டிய புடிச்சி வந்தது நல்லாத போச்சின்னும், சரியான நேரத்துல வந்து சீட்ல எடம் பிடிக்க முடிஞ்சதால பெரு மூச்சி விட்டுகிட்டு ஜன்னல் ஓரமா ஒக்காந்து காத்து வாங்கிய படியே வந்தாள் கோமதி . பக்கத்துல அவளோட மகள் கவிதா தன்னோட கைக்குழந்தயோட மொத்தமா மூனு பேரு உட்காருர சீட்ல சவுகரியமா உட்காந்துகிட்டாங்க . கோமதியோட மகள் கவிதா அவ அம்மா கூட தான் திருப்பூர்ல பனியன் கம்பெனில டைலரா வேல பாத்துட்டு வர்றா. அவளுக்கும் அங்க வேல பாத்த பரமக்குடிபக்கம் உள்ள இளவட்டம் ஒருத்தனுக்கும் காதலாகி சென்னிமலை முருகன் கோவிலுள வச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க இப்போ அந்த பையன் இவள விட்டுட்டு ஓடி போயிட்டான்.

கையில ஒரு வயசுக் கைக்குழந்தையோட அவ அம்மா வீட்லதான் வாழாவெட்டியா வாழ்ந்துகிட்டுருக்கா.

கவிதாவோட ஒரு வயசு மகன் கருப்பசாமி பசியில கெடந்து வீளு வீளுன்னு கத்த ஆரம்பிச்சிட்டான். கருப்பசாமி அது கவிதவோட அப்பா பேரு. அதத்தான் அவ பையனுக்கு பாசமா வச்சிருக்கா. அவ புள்ளைக்கு மொட்ட போடுறத்துக்கு தான் இருக்கன்குடி கோவிலுக்கு கெளம்பி வந்துக்கிட்டுருக்காங்க. ஒரு வழியா 11.30க்கெல்லாம் இருக்கன்குடிக்கு ஜெயவிலாஸ் வந்து சேர்ந்தபோது,கோமதியும் அவ மகளும் நல்லா அசந்து தூங்கி இருந்தாங்க .

ரண்டக்க ரண்டக்கன்னு நையாண்டி மேள சத்தம் கேட்டவுடன் தான் முழிப்பு வந்தது. பஸ்சுல இருந்து எறங்கி கோவில் இருக்குற ஆத்த நோக்கி ரெண்டு பேருமா நடக்க ஆரம்பிச்சாங்க பஸ்டாண்டுல இருந்து ஆத்துக்குள்ள இருக்குற கோவில் வரைக்கும் கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் சனம் நெறிச்சி தள்ளிகிட்டு போயிகிட்டு இருக்க கொட்டு சத்தமும், கொலவ சத்தமும்தான் ஆத்துக்குள்ள ஆர்ப்பரிச்சி கேட்டுகிட்டுருந்தது. எங்க பாத்தாலும் தீச்சட்டி, பால்குடம், வேல் குத்திவர்றதுன்னு நேத்திகடன் பண்ணுறவங்க கோயில சுத்தி சாமி ஆடிய படியே, ”ஓம் சக்தி… ஓம் சக்தி…” ன்னு வாய் நெறைய சொல்லிக்கிட்டு ஓடிக்கிட்டு இருந்தாங்க .

கோமதியும் அவ மகளும் தங்குறதுக்கு கோவில சுத்தி எங்க தேடியும் நல்ல எடம் கிடைக்காம ரொம்ப நேரம் தேடுன பிறகு கடைதெரு பக்கம் வந்து எடம் பாத்ததுல பூக்கடை பக்கத்தில இருந்த வேப்ப மரத்தடியில் ஏற்கனவே ரெண்டு மூணு குடும்பம் பாய விரிச்சி உட்காந்து இருந்தாங்க. அவங்க பக்கத்துல இருந்த சின்ன எடத்துல போயி கொண்டு வந்த ஜமுக்காளத்த விரிச்சி உட்கார்ந்துகிட்டாங்க.

இன்னைக்கு மாரியத்தள ஓசில பாக்கனும்னா நாலு மணிநேரம் காத்து கெடந்தாத்தன் போச்சின்னு பக்கத்துல உட்கார்ந்து இருந்த கெழக்க வேம்பாத்து பக்கம் இருந்து வந்திருந்த ரெண்டு குடும்பம் பேசிக்கிட்டு இருந்தாங்க.

ஆம்பள தொன இல்லாம பிள்ளைகள வச்சிக்கிட்டு பத்து வருசமா படாத பாடு பட்டு கெடக்கா கோமதி. ”வீட்டுகாரரு எங்கம்மா? கடத்தெருவுக்கு போயிருக்காரா?” ன்னு பக்கத்துள இருந்த வேம்பாத்துக்கார பெரியம்மா பேச்சி கொடுத்தாங்க.

அந்தம்மா கிட்ட பதில் சொல்ல வார்த்த இல்லாம மௌனமா கண்ணுல கண்ணீர தொடசிகிட்டு அமர்ந்திருந்தா கோமதி .

கருப்பசாமி கூலி வேலைக்கு போனாலும் பொண்டாட்டி பிள்ளைகள சந்தோசமாகத்தான் வச்சிருந்தான்.

அப்புராணி மனுஷன் யாருகிட்டயும் நாலு வார்த்த அதிகமா பேசமாட்டான். ஒத்தைக்கோ ஒரு பொன்னு கவிதா. எட்டாவது படிச்சிகிட்டுருந்தா கல்யாணமாகி பதிமூணு வருஷம் போனது தெரியல.

சந்தோசமாத்தான் குடும்பத்தோட அந்த வருசம் வைகாசி விசாகத்துக்கு திருசெந்தூர் கோவிலுக்குல்லாம் போயிட்டு வந்தாங்க.

விதி இப்பஅந்த குடும்பத்த நாலா பக்கமா பிரிச்சி போட்டு நாசமா ஆக்கிடுச்சி.

கோமதிக்கு அடுத்த தெரு இன்னாசி கூட, பல மாசமா ஊருக்கு தெரியாம இருந்த பழக்கம், ஒரு நா ராத்திரி திருப்பூர் போற கடைசி பஸ்ச புடிச்சி ரெண்டுபேருமா ஓடிப்போன பொரவு தான் கருப்பசாமிக்கும் ஊருக்காரவுகளுக்கும் அவுங்க பழக்கம் தெரிய வந்துச்சி. ஒரு வருசம் வரைக்கும் ஊரு சனமே இவ கதயத்தான் புரனியா பேசிக்கிட்டு இருந்தாங்க.

பொண்டாட்டி காரி செஞ்ச காரியத்த நெனச்சி கருப்பசாமியும் மக கவிதாவும் தெனம் தெனம் வீட்டுக்குள்ள ஒப்பாரி வச்சிகிட்டு இருந்தாங்க

கவிதா பள்ளிக்கூடம் போறத நிப்பாட்டிட்டு வீட்டு வேலைகல கவனிச்சிகிட்டா அப்படி, இப்படின்னு முழுசா மூணு வருஷம் ஓடி போயிருச்சி

.திருப்பூர்ல சில வருஷம் கோமதி கூட இருந்த இன்னாசி, ஒரு நாள் சொல்லாம கொல்லாம வசந்திய விட்டுட்டு ஓடி போயிட்டான்.

அவன் போன பொறவு ஒன்டியாத்தான் கஷ்டப்பட்டு காளத்த கடத்தி வந்தா கோமதி .

மகளிடம் மட்டும் அப்பப்ப தொடர்புகொண்டு பேசிகிட்டுருந்த கோமதிய நேர்ல பாக்க கிளம்பி போன கவிதா நிறந்தரமாவே அவ அம்மா கூடவே தங்கிட்டா .

கருப்பசாமி பொஞ்சாதி புள்ளைக நினப்புள கெடந்து சரியாய் சாப்பிடாம கொல்லாம சாரயத்த குடிச்சி சீரழிய ஆரம்பிச்சிட்டான்.

அக்கம் பக்கத்துல உள்ளவங்களும் ஒறவுக்கரங்களும்மா சேந்து இருக்கன்குடியில உள்ள புருசன எழந்த கல்யாணிய கருப்பசாமிக்கு ரெண்டாந்தாரம கட்டிவச்சாங்க.

கருப்பசாமி தன்னோட ரெண்டாவது பொஞ்சாதி கல்யாணி கூட, இருக்கன்குடி கோவில் கடை தெருவில் பூ, பூஜை சாமான்கள் வியாபாரம் செய்து வந்தான் அவங்களுக்கு அடையாளமா ஐந்து வயசுல ஒரு பொட்ட புள்ள ஒன்னு பால்வாடி போயிட்டு இருந்தது.

கருப்பசாமிக்கு எப்பவுமே கோமதி , கவிதா நெனப்புதான்.

கல்யாணியிடம் மூத்த சம்சாரம் கோமதிய பத்தித்தான் எப்போதும் பெருமையா பேசி கிட்டு இருப்பான் முகம் சுழிக்காம கேட்டுகிட்டு இருப்பா. அதபத்தியெல்லாம் ஏதும் நெனைக்க மாட்டா நல்ல மனசுக்காரி.

கோமதி தன்னோட பேரனுக்கு மொட்ட போட கொவில நோக்கி நடக்க ஆரம்பிச்சா அவங்க கொண்டு வந்த பொருட்கள பக்கத்துல இருந்த பூக்கடையில போயி இந்த பொருள செத்த நேரம் பாத்துகிட முடியுமான்னு பூ வியாபாரம் செய்யிற கல்யாணிய பாத்து கேட்டா கவிதா . ஒருமணி நேரத்துக்கு ஐஞ்சி ரூபான்னு. அவளுக்கு பதில் சொன்னா கல்யாணி கதம்பம் பூவ கட்டிகிட்டே, , மொட்ட போடுற இடத்துக்குப் போயி டோக்கன் வாங்கிக்கிட்டா கோமதி . மக கவிதா பொருட்கள கடையில பாதுகாப்பா வச்சிட்டு வந்து சேரவும் மகனுக்கு மொட்ட போட்டு முடிச்சாங்க. கோமதி அவ வேல பாக்குற திருப்பூர் பனியன் கம்பெனில நல்ல கிளாத்துல பேரனுக்கு பனியனும் டவுசரும் வாங்கி வந்திருந்தா

சாமி பாக்குரதுக்கு பெரிய வரிச நின்னுகிட்டு இருந்ததுல கோமதியும் அவ குடும்பதோட போயி கையில பூஜை சாமான் கூடையுடன் போயி நின்னுகிட்டா மெல்ல மெல்ல கூட்டம் நகர்ந்தது ஒரு மனி நேரத்துல சாமி முன்ன போயி நின்னுட்டா சாமிய பாத்து கண் கலங்கிகிட்டே தன்ணோட பொன்னு அவ புருசன்கிட்ட திரும்பியும் சேர்ந்துரனும்னு மனம் வுருகி வேண்டிகிட்டா நம்ம அம்மாவும் அப்பாவும் திரும்பியும் ஒன்னு சேர்ந்துரனும்னு மக கவிதாவும் சாமி கிட்ட கண்கலங்கி வேண்டிகிட்டா .

சாமி கும்பிட்டு முடித்த பின்பு கோவில விட்டுக் கிளம்பும்போது கோமதி தன்னோட பேரனுக்கு, விளையாட்டு பொம்மைக்கள ஒன்னு ஒண்ணா தேடி புடிச்சி வாங்க்க்கிட்டுருந்தா.கவிதா கல்யாணியோட பூக்கடையில கொடுத்து வச்சிருந்த பொருள வாங்குறதுக்கு வேகமா வந்தா கடையில கல்யாணியும் அவ மகளுடன் சேர்ந்து பூக்கட்டிக் கொண்டிருந்தாள்.

”என்ன மா அதுக்குள்ள புள்ளைக்கு மொட்ட போட்டுட்டீகளா?”னு கேட்டா.கல்யானி

”ஆமாக்கா… ஊருக்கு கெளம்பிட்டோம். அதான் பைய வாங்கிட்டு போலாம்னு வந்தேன்”னு சொன்னவ அப்படியே , “பூ என்ன விலை அக்கா”ன்னு கேட்டா. ”எந்த பூ வேணும்… மல்லிக மொழம் பத்துரூபா”ன்னு சொல்லி ஒரு மொழம் பூவ அளந்து வெட்டி கொடுக்க வாங்கித் தலையில் வைத்துக் கொண்டு நூறு ரூபா நோட்ட நீட்டினா கவிதா .

”சில்லறையா இருந்தா கொடுமா” என்றாள் கல்யாணி.

”சில்லறை இல்லக்கா, கொஞ்சம் இருந்தால் பாருங்க” என்று மருவினால் கவிதா .

சரி மா கொஞ்சம் பொறு, பின்னாலதான் என்னோட வீடு..அங்கபோயி சில்லரை எடுத்துட்டு வந்துர்றேன்னு சொல்லிட்டு அவளோட பொன்ன கடைய பாத்துக்கிட சொல்லிட்டு சென்றால்

அவ வர கொஞ்சம் நேரமானதும் அந்த சின்ன பொன்னுகிட்ட கவிதா பேச்சி கொடுத்தா.

”பாப்பா, ஒன்னோட பேரு என்னமா.?”

”செல்வி”…

”ஓங்க அம்மா பேரு என்னமா..?”

”கல்யாணி”…

”அப்பா பேரு…”

”கர்ப்பசாமி”.

“கருப்பசாமியா!!!” ன்னு கேட்டு திடுக்கிட்டாள் கவிதா .

ஏன்னா அவளோட அப்பா பேரும் கருப்பசாமிதான் அவர பிறிஞ்சிதான் ரொம்ப வருசமா அவ குடும்பம் இருக்கு .

தன்னோட அப்பா விருதுநகர் பக்கம்தான் வேற ஒரு கல்யானம் பண்ணிக்கிட்டாருன்னு கேள்விபட்டிருந்தா ,இந்த பொன்னு நம்ம அப்பாவோட ரெண்டவது சம்சாரத்தோட மகளா இருப்பாலோன்னு யோசிச்சவ, .

அவரு என்ன வேல பாக்குறாருன்னும்..? இப்ப அவர எங்கன்னும் கேட்டா கவிதா .

அம்மாவுக்கு முன்னாடி அப்பாதான் இங்க பூ வியாபாரம் பத்தாரு இப்போ இல்ல

இப்போ எங்க வேல பாக்காருன்னு திருப்பி கேட்டா கவிதா .

அப்பா இல்ல செத்து பொச்சின்னு ரொம்ப பாவமா சொன்னா அந்த பொன்னு

இவலுக்கு தூக்கி வாரி போட்டது மாரியம்மன மனசுக்குல்ல வேண்டிகிட்டா அது னம்ம அப்பாவா இருக்க கூடாதுன்னு …

சரி பாப்பா உனக்கு வேற தங்கச்சி பாப்பா யாரும் இருக்கான்னு அந்த பொன்னுகிட்ட திரும்பவும் பேச்சி குடுத்தா கவிதா

எனக்கு தங்கச்சி இல்ல ,ஆனா அக்கா , இருக்காங்க

அப்படியா அவங்க எங்க ,அவங்க பேரு என்ன ன்னு கேட்டா ..

அவங்கள நான் பாத்தது இல்ல அவங்க வேற ஊர்ல படிக்கிறாங்கலாம் அவங்க படிச்சி முடிச்சதும்தான் இங்க வருவாங்கலாம்னு எங்க அப்பா சொல்லிருக்கு

அவங்க பேரு ,கவிதா , ன்னு செல்வி சொன்னதுதான் தாமதம்

கவிதாவுக்கு உடனே புரிஞ்சி போச்சி

இது நம்ம அப்பாவோட பொன்னுதான்னு .

கவிதாவோட கண்ணுல சார, சாரையா கண்ணீர் பெருக்கெடுத்து இருக்கங்குடி ஆத்த நெரப்புற அளவுக்கு கட்டுக்கடங்காம வந்துகிட்டு இருகக்கு ,

”ஐயோ! எப்பா… எங்கள விட்டு போயிட்டீகலானு கருப்பசாமி மக கவிதா ஓங்கி ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிட்டா….

பசங்களுக்கு விளையாட்டு பொம்மையல்லாம் வாங்கி முடிச்சிட்டு, கவிதாவ தேடி கோமதி வந்தா. அப்ப மவ ஒப்பாரி வச்சி அழுறத பாத்து பதறிபோனவ என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு கவிதா கிட்ட ஓடி வந்தா.

அதுக்குள்ளே சில்லற எடுக்கப்போன பூக்காரி கல்யாணியும் சில்லறைய எடுத்துகிட்டு வந்தா…

. அங்க என்ன நடந்ததுன்னு தெரியாம கோமதி , கல்யாணி, ரெண்டு பேரும் பதறிப் போயி வந்து நின்னாங்க…

”என்னம்மா ஆச்சின்னு…” பதட்டதோட கவிதாவ பாத்து கோமதி கேட்க,

”அம்மா… நம்ம அப்பா, நம்மளயெல்லாம் உட்டுட்டு செத்துபோயிட்டாரும்மா…” என கதறி அழுதுகிட்டே சொன்னா.

அப்பத்தான் கல்யாணிக்கு வசந்திய அடையாளம் தெரிஞ்சது, இவுக நம்ம வீட்டுகாரரோட மொத சம்சாரமுன்னு .

கருப்பசாமி சாவுறதுக்கு முன்ன ஒரு முறை அவனோட மொத சம்சாரத்தோட போட்டோவா இவளுக்கு காண்பித்து இருந்தான். ஆனால் இப்பதான் கோமதிய கல்யாணி நேர்ல பாக்குறா.

கருப்பசாமியோட மொத சம்சாரத்த பாத்த உடனே கல்யாணிக்கு என்ன பேசுறதுன்னே தெரியல.

”என்னடி சொல்ற, அப்பா செத்து போச்சா?” என பதட்டத்தோட மவள பாத்து

”யாருடி சொன்னது” என கோமதி கேட்க,

”இந்த பூவிக்கிற அம்மாவதான் அப்பா ரெண்டாவதா கட்டிருக்காரு” என அழுதுக்கிட்டே சொன்னா.

எய்யா… எஞ்சாமி என்ன விட்டு போயிட்டியான்னு கோமதி மண்ணுள பொரண்டு அழ, இதெல்லாம் பாத்த கல்யாணி ஓடிவந்து கோமதிய , கட்டிப்புடிச்சி அவளும் சேர்ந்து அழுதா.

தேம்பி தேம்பி அழுது கண்களில் கண்ணீர் வத்திய பின்பு அத்தன பேரையும் தன்னோட வீட்டுக்கு அழச்சிட்டு போனா. கடைக்கு பின்னால உள்ள அவ வீட்டுக்குள்ள போனதும் சுவத்துல மாட்டியிருந்த கருப்பசாமி படத்த பாத்து இன்னும் கதறி அழத் தொடங்கினாள், கோமதி .

என்ன கட்டிக்கிட்டு வந்த நாள்ல இருந்து ஒங்கள பத்தி ஒரு வார்த்தை கூட பேசாம தூங்க மாட்டாரு.

என்னோட பொண்டாட்டி புள்ளைக எப்படி, எங்க கஷ்டப்பட்டு இறுக்குதுகன்னு வருத்த பட்டே ஒரு கட்டத்துல புத்தி பேதளிச்சி போயி பேச ஆரம்பிச்சிட்டாரு.

நானும் காட்டாத ஆஸ்பத்திரி இல்ல, போகாத கோயிலும் இல்ல… போன வருஷம் திடீர்னு ஒரு நா… சாத்தூர் போலிஸ்காரங்க அவரு போட்டாவ வச்சிக்கிட்டு கடத்தெருவுல விசாரிச்சிகிட்டு இருந்தத, தெரிஞ்சவுக ஓடியாந்து என்கிட்டே சொன்னங்க. நா, என்னமோ ஏதோனு பதறிபோயி சாத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் பார்த்தேன். இந்த போட்டோவுல இருக்குறது யாருமான்னு கேட்டாங்க. எங்க வீட்டுக்காரருனு சொன்னேன். ஒன்னோட புருஷன் தான… சரி பேரு விலாசலம் கேட்டு வாங்கிகிட்டு… ஒன் புருஷன் நேத்து லாரியில அடிபட்டு செத்துட்டானு அந்த போலீஸ்காரரு சொன்னதும் எனக்கு இதயமே நின்னுடுச்சி….

அப்பறம் சாத்தூர் ஆஸ்பிட்டல இருக்குற பிரேதத்த போயி வாங்கிக்கன்னு சொல்லிட்டாக…,

ஓத்த பொட்ட புள்ளைய வச்சிகிட்டு என்ன பண்றதுன்னு நினச்சி ஒடிஞ்சி போயிட்டேன்…

விசும்பி விசும்பி புருஷன் செத்தத கோமதிகிட்ட சொல்லிமுடிச்சா கல்யாணி ….

எஞ்சாமிக்கு ஒரு கொறையும் வைக்காம பாக்காம போயிட்டேனே… இந்த பாதகத்தி முண்ட. என்னைக்காவது ஒரு நாளு அவரு காலுல விழுந்து மன்னிப்பு கேட்டு மறுபடியும் ஒண்ணா சேர்ந்து வாழணும்னு இருந்தேனே…

இந்த பாவஞ்செஞ்ச சண்டாளி எஞ்சாமிய நானே கொண்டுட்டேனேன்னு கருப்பசாமி போட்டோவ கையில வச்சி வெறிச்சி பார்த்துக்கிட்டு, தலையில அடிச்சி அழுது பொறண்டா கோமதி. கருப்பசாமியோட பொஞ்சாதி புள்ளைகளோட ஒப்பாரி, சத்தம் மாரியம்மன் கோவில் நையாண்டி மேல சத்தத்த விட அதிகமா இருக்கன்குடி ஆத்துக்குள்ள பட்டு எதிரொளிச்சிகிட்டு இருந்தது.

கவிதா மகனும், கல்யாணி மகளும் வாங்கி வந்த விளையாட்டு பொம்மைகளுக்கு பூ வச்சி விட்டு விளையாண்டுகிட்டு இருந்ததுக.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *