கேள்விக்குறியான அபலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 6, 2023
பார்வையிட்டோர்: 3,140 
 
 

நான்கு வருடங்களுக்குப் பிறகு, சொந்த ஊர் திரும்பிய பிரபாகரனுக்கு, திருமண ஏற்பாடுகள், தொடங்கியது. கண்மாய்க்கரையை, வடக்கு எல்லையாக கொண்ட விளத்தூரில், பெண்ணெடுக்க முடிவு செய்யப்பட்டது. வைகாசி மாதம், சுக்கில பட்சமும், சதுர்த்தி திதியும் சேர்ந்த, ஒரு முகூர்த்த நாளில், மணப்பெண் அனுஷாதேவியின் கழுத்தில், பிரபாகரன் தொட்டுக் கொடுத்த மங்கல நாண் ஏறியது.

பெண்களோடு பழகியே வழக்கமில்லாத பிரபாகரனுக்கு, மஞ்சள் முகத்தோடு பக்கத்திலேயே இருக்கின்ற மனைவியின அணுக்கம், படாதபாடு படுத்தியதெ. பகல், இரவு நேரங்களில், மனைவியோடு பேசியே பொழுதைக் கழித்தான். இதுவரை புத்திக் கூர்மையுள்ள வேலை என்று நினைத்தானோ, என்னவோ.. புதுமாப்பிள்ளை என்ற பட்டப்பெயர், வழக்கத்தை விட்டு நீங்குவதற்குள், மனைவியை அழைத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டான். தனிக்குடும்ப வாழ்க்கையில், அவன் துய்த்த ஊடலை உறுதி செய்யும் வகையில், பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மாதங்கள் வருடங்களாக உருண்டோட, குழந்தை வளர்ந்தது. குடும்பத்தாரின் தொலைபேசி வழித் தொடர்பு இல்லாத நிலையில், இல்லற லயிப்புகளில், எந்த இடையூறும், அவர்களது தாம்பத்ய வாழ்க்கையில் குறுக்கே நிற்கவில்லை.

ஒருநாள் நெருங்கிய உறவினர் ஒருவரின் அழைப்பு, அவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. போனை எடுத்த பிரபாகரன் ‘.. என்னது திடீர்னு போன் பண்ணிருக்கீங்க’ புதுசா ஏதாவது ஞானோதயம் தோணுச்சா..? என்றான்.

‘பண்ண வேண்டிய கட்டாயந்தான். உன்னோட அக்கா, ஒருத்தனோட ஓடி, கல்லாணம் பண்ணிக்கிட்டாடா’

‘அப்பறம் என்னாச்சு, அம்மா, அப்பாலாம் என்ன சொன்னாங்க.. அதிர்ச்சியாயிட்டாங்களா..? அவளைக் கொண்டுவர்றதுக்கு இப்ப என்ன பண்றாங்க..’

‘அதிர்ச்சியாவது, மசுராவது.. நாங்களும் அப்டித்தான் நெனைச்சோம். ஆனா மொதப்புருசனோட சொந்தக்காரங்க வந்து போறதைப்பாத்தா, இவங்கெதா கூட்டி விட்ருப்பாங்க போல..’

‘கூட்டிட்டு ஓடுனவன் யாருனனு தெரிஞ்சதா..?

‘முதலில் கல்லாணம் பண்ணால்ல உன்னோட அக்காவை, அவனோட அண்ணந்தான்டா…’

‘அப்டியா..! என்று போனைக் கட் செய்தான் பிரபாகரன். அப்போது ‘ என்னங்க’ என்று கேட்ட மனைவியிடம் , ‘மச்சானோட அண்ணன் இருக்கான்ல, அக்கா அவனோட ஓடிப் போயி கல்லாணம் பண்ணிட்டாளாம்..’

‘ஓடிப்போறது என்ன புதுசா, கல்லாணந்தான் புதுசு… ஒரு நாளைக்கு இந்த வம்பு வருமுன்னு, ஏற்கனவே எனக்குத் தெரியுமே, மெட்ராஸ்லெ இருக்கும்போது மறஞ்சு, மறஞ்சு பழகுனாங்க, இப்ப கூட்டிட்டு ஓடிருக்காங்க, அவ்வளவுதானே, அத விடுங்க நம்ம வேலையைப் பாப்போம்’ என்று சமையலறைக்குள் புகுந்தாள் அனுஷாதேவி.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, சொந்த ஊர் திரும்பிய பிரபாகரனை, நண்பர்கள் சந்தித்துப் பேசினார்கள்.

‘மாப்ளே இப்படி நடக்குமுன்னு தெரிஞ்சிருந்தா, நானே ஒனக்கு மச்சான் ஆயிருப்பேண்டா…’

‘டே நிறுத்துடா, எங்க அக்காவை அவிசாரின்னு நெனைச்சியா’ என்று அடித்து விட்டான் பிரபாரன், அக்கம்பக்கத்தார் எட்டிப் பார்க்கும் அளவுக்கு சிறிது நேரம் மல்லுக்கட்டி ஓய்ந்தனர். பிரச்சினையை சமரசம் செய்த நண்பன் ஒருவன்,’ உனக்கு ஏன் கோபம் வருது, அவன் சொன்னதிலெ என்னடா தப்பு..? என்று சொல்லியவன், சக நண்பர்களை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

ஒரு வார ஓய்வுக்குப் பிறகு, மனைவியை் கூட்டிக் கொண்டு சென்னை திரும்பினான் பிரபாகரன். இரண்டு மாதங்களாக உற்சாகம் இல்லாமல், முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருந்தான், குடும்பத்தினரால் எதிர் கொண்ட அவமானங்களை, அவனால் ஜீரணிக்க முடியவில்லை. ஒருநாள் , பேப்பர் வாங்கி வருவதாக் வெளியே சென்ற பிரபாகரன். நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. வாசலிலேயே, கணவனுக்காக காத்திருந்தபோது, மனைவியின் செல்போன் அலறியது. அதனை எடுத்துப் பேசிய அனுஷாதேவி, செல்போனை தரையில் வீசிவிட்டு அழுதாள். ஒப்பாரியைக் கேட்டு ஓடி வந்த அண்டை வீட்டார். ‘என்னாச்சு’ என்று கேட்டனர்.

‘தண்டாவாளத்திலெ விழுந்து, சூஸைட் பண்ணிக்கிட்டாராம்’ என்றாள். உடனடியாக அரசு மருத்துவமனை சென்ற அவர்கள், உடலை வாங்கிக் கொண்டு சொந்த ஊர் திரும்பினர். இரண்டு ஆண்டுகள் நிம்மதியாக வாழ்ந்த அனுஷாதேவி, இப்போது ஒண்டிக்கட்டையாக நின்று கொண்டிருக்கிறாள்.

பிரபாகரன் மறைவுக்குப் பிறகு, கணவன் வீட்டாரால் கைவிடப்பட்ட அனுஷாதேவி, அருகில் உள்ள நகரத்தில் சொற்ப ஊதியத்தில், பணி செய்து வருகிறாள். ஒருநாள், அ னுஷா தேவியைப் பார்க்கச் சென்ற, அவளது உறவினர் ஒருவர, ‘ஏம்மா இன்னும் கவலைப்பட்டுட்டு இருக்கே, புள்ளைய கவனிம்மா..’ அதுக்காகவாவது கொஞ்சம் சுறுசுறுப்பா இரு..’

‘..புருசந்தான் செத்துப் போனார்னு நெனைச்சேன். இந்த சின்னப்புள்ளையக்கூட, அவரு வீட்ல யாரும் வந்து பாக்கலை, அதாங்கஷ்டமா இருக்கு..’

‘..அவங்களும் செத்துப் போய்ட்டதா நெனைச்சுக்கோ, புருசனே போய்ச் சேந்த்திட்டான், இனிமே அவ நமக்கு எதுக்குன்னு கூட, அவங்க நெனச்சுருக்கலாம்ல…’

‘என்னக்கா இப்டிச் சொல்றீங்க..’

‘ஆமாடி, உன்னோட நாத்தனாவை இழுத்திட்டு ஓடுனான்ல, அந்தப்பயலோட அப்பனும் ஆத்தாளும், எல்லாசொத்தையும் எழுதிக் கேக்குறாங்களாம்’ இதைப் பண்ணலேனா, ஒன்னோட நாத்தனாவையும் விட்டிட்டுப் போய்டுவான்ல, அதுக்காக, உன்னை ஒதுக்குறாங்க, இப்ப புரியிதா..?’

‘அப்டியா என்ற அனுஷாதேவி, மகளைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு, வாசலைப்பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது மோவாயைப் பிடித்திழுத்த மகள்,

‘அம்மா , அப்பா எப்பம்மா வருவாரு..?

‘..வந்திடுவார்டா செல்லம்..’

‘தூங்கும்போது அவரைத் தூக்கிட்டுப் போனாங்களே, இன்னும் விடலையாம்மா..’

மகளின் இந்த வார்த்தைகளைக் கேட்டு கண்ணீர் வடித்த அனுஷா, கேள்விக் குறியைப் போல, சுவரைப் பிடித்தபடி, நின்று கொண்டிருந்தாள். அவளது வரம்பு கட்ட முடியாத அளவுக்கு துயரம் துரத்துகிறது. ஜீவனாக நினைத்த கணவனை இழந்த அனுஷாவின் கண்ணீருக்கு, அணைகட்ட முடியாதுபோல.

மரணத்தில் இடிந்துபோன அனுஷா, நாத்தனாரின கள்ளக்காதலால, சுருங்கி நிற்கிறாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *