கேரளத்தில் எங்கோ…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2023
பார்வையிட்டோர்: 1,312 
 
 

(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12

அத்தியாயம்-9

எனக்கு ஒரு பேத்தி இருக்கிறாள். இருக்கிறாளாம் என்கிற முறையில். அப்பவே அப்படி. இப்போ இன்னும் கேட்க வேண்டாம். வழிகாட்டின மாதிரி நானே இப்பத் தானே வந்திருக்கிறேன்! எதுவுமே பழங்கதை அல்ல. எல்லாம் அப்பப்பா மூண்டெழும் ஒரே கதைதான். அவிந்த அடுப்பை நம்பாதே. நீர்த்துப்போன சாம்பலுக்குள் ஒரு சுறீல் – ஹும்… 

மதுரம் என்னுடைய அளவு தம்ளரில் அதனடியில் ஒரு பாத்திரம் உண்டு- டபராவுமில்லை, பேலாவுமில்லை யென்று இடையில் ஒரு உரு. (‘உங்களைப் போலவே பிடி படாமல் ஒரு ஏனம்’ – அப்படி என்னை ஏளனம் பண்ணு வதும் வேடிக்கையாக இருந்த அந்நாள் -) ஆவி பறக்க, பொன்னிறத்தில் என் இஷ்டப்படி நுரையிலாது, கசப்பு மட்டும் போகும் சீனி – எனக்குக் காப்பியைக் கண்ட மாதிரியாகவா இருக்கிறது. கண்ணீரே வந்து விடும் போல் அவ்வளவு உணர்ச்சி. முதல் விழுங்கில் நூல் பிடித்த மாதிரி அந்தக் கொதிப்புச் சூடு உள் இறங்குகையில் – விழி கருகுகிறது. மதுரம் தீர்க்க சுமங்கலி பவ – ஒஹோ இப்பவும் என்னைத்தான் ஆசிர்வதித்துக் கொள்கிறேனோ? 

உர்ஸுக்கு டீ டீ- கண்ணாடி தம்ளரில் தனி, சீப்பிக் குடிக்கிறது. அறிந்து தான் அவளுக்குக் கண்ணாடி தம்ளர் சர்வீஸ். 

‘ப்ரபு எங்கே கண்ணிலேயே படவில்லை?’ எனக்குத் திடீரென்று நினைப்பு வந்தது. 

“ப்ரபு காம்ப்” 

“வேலைக்கு அப்போ என்னியிலிருந்து?-” 

“வேலைக்கு இன்னும் வேளை வரவில்லை” முனகி னாள். “ஒரு லைட்ம்யூஸிக் குழுவில் கிட்டார் வாசிக் கிறான். நீங்கள் கொங்கணவன் முழி முழிச்சு என்ன பண்றது? எல்லாம் வேளைவரப்போத்தானே? சுந்தரகாண்டம் பாராயணம் போன ஞாயிறுதான் பூர்த்தியாச்சு.” 

“வடைமாலை, பாயசம், வடை பருப்புடன், வெள்ளரிக்காய் மறக்காமல்?’ 

“ஆமாம் அப்பிடித்தான். உங்கள் கிண்டலெல்லாம் அனுமாரிடம் வெச்சுக்காதேயுங்கள். இனிமேல் தான் அவர் கிருபை தெரியணும் – ஆ வாங்கோ வாங்கோ, இவர்தான் இந்தாத்து மாமா – இவர் பக்கத்துப் ஃப்ளாட்.” 

ஆச்சு ஒண்ணு ரெண்டாயும் ஒவ்வொருத்தராயும் பக்கத்து ஃபிளாட் மேல்மாடி, கீழ்மாடி இந்தக் கட்டிடத் திலேயே இருபது குடித்தனங்கள் தேறும். எல்லாரும் பெரிய மனுஷாள் இது போஷ் ஏரியா. 

மாமாவைப்பற்றி மாமியிடம் விசாரிக்க வருபவர் களுக்கு காபி வித் பிஸ்கட். என் வயதில் கதாநாயகனா வதற்குக் காணாமல் போவது காட்டிலும் உகந்த வழி எது அஞ்சு வருடம் அட்ரெஸ்ஸே இல்லாமல் இருந்தவன் ஒண்ணு- காவி உடுத்து மொட்டை சாமியாரா இருக் கணும். அப்படியே வெள்ளை கட்டியிருந்தாலும் சடைமுடி தாடியுடன் இருப்பேன் என்று எதிர் பார்த்தார்களோ என்னவோ? அதுவும் கிடக்கட்டும். பஞ்சலோக விக்ர ஹத்தை திருடுவதுதான் நாகரிகம். ஆனால், மூலவரையே பெயர்த்து எடுத்து வந்து விட்ட பூசாரி நான் மாதிரி, என்பக்கத்தில் அசைவற்று நிற்கும் உர்ஸ், வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்குச் சரியான அவல். 

ஆண்டிக்கும் பணிவிடைக்கு ஒரு அடியாள் தேவை தானே! 

“சக்தி உபாசனையாக இருக்குமோ? நேரிடையாகப் பீடத்திலேயே ஏற்றி பூசை செய்யற மாதிரி அப்படி ஒரு வழிபாடு இருக்காமே!” 

“- மதுராமாமியை ஒரு ஞானின்னு நான் சொல்வேன். இந்த அக்ரமத்தை யெல்லாம் தாங்கிக்க ஒரு மனோபக்குவம் வேண்டாமா?” 

எனக்குமட்டும் அவர்கள் எண்ணங்கள் காது கேட்கின்றன. எனக்கு உள்ளூர உவகை பொங்கிற்று. பேஷ், உர்ஸ்! 

ஆனால், உர்ஸ் ஏனோ மக்கு வேஷம் போடுகிறாள். 

வந்தவரெல்லாம் ஒரு வழியாகப் போனபின்னர் எங்கிருந்தோ வருவது போல் இளஞ்சிரிப்புடன் மதுரம் சுறுசுறுப்பாக உள்ளே வந்தாள். ”இந்தப் பொண்ணைக் கவனிக்காமல் நாம்பாட்டுக்குக் கூத்தடிச்சிண்டிருக்கோமே. ஏண்டிம்மா உன் பேர்?” 

சிலை உயிர்த்தது. ”உர்ஸ்’. 

“உர்ஸ்? உர்ஸ்… ?? – ஏதோ சீர்ற மாதிரியில்லே?’ இருவரும் சிரித்தனர். “உன்னை ஊர்வசின்னு அழைக் கட்டுமா? அதுவும் புதிசுதான். ஆனால் உனக்கு நன்னாப் பொருந்தும். 

“உங்கள் சந்தோஷம்” 

மதுரம் அவளை அணைத்துக் கொண்டாள். 

“அட, சமத்தாவும் பேசறியே! இன்னி சாயந்திரம் பீச்சுக்குப் போவோமா? உங்கள் ஊரில் பீச்சு இருக்கோ?”

“100, 120 மைல் தாண்டி கோவளம் உண்டு.”

“ஓ, மறந்து போச்சு. செம்மீன், ஷுட்டிங்…”

மறுபடியும் ஊர்வசி மதுரத்தின் ஆலிங்கனத்தில் நெரிந்தாள். 

“இந்த ஊர் பீச்சும் பார்க்கவேண்டிய பீச்சுத்தான். பட்டணம் வேறு சுற்றிப் பார்க்க வேண்டாமா? 

இந்த வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரா.எங்கள் ஜாதிச் சீமைக்கலியாணம்.நீ பார்க்க வேண்டாமா? நல்ல சமயமாத்தான் கூடியிருக்கு.’ 

“ட்ரஸ்?” 

மதுரத்தின் பார்வை தன் வினாவை, உர்ஸின் கையில் இன்னும் மாட்டிக்கொண்டிருக்கும் பெட்டிமேல் நிலைத்தது. 

சொல்லி வைத்தாற்போல் கேள்விக்குப் பதிலாய், தடா லென்று பெட்டி, மூடியும் அடியுமாய்த் திறந்துகொண்டு முண்டமாகத் தொங்கிற்று. மருந்துக்கு ஒரு பற்பொடிப் பொட்டலம் கூட அதிலிருந்து விழவில்லை. காலி. 

எங்களுக்கு வழிந்த அசடை முகத்துக்கு முகம்தான் தெரிந்து கொள்ள முடியும். சிரிப்பலை அடங்கியதும் எனக்குச் சீற்றம் மூண்டது. மதுரத்தின் கண்கள் என்னை குற்றஞ் சாட்டின. கேலி செய்தன. உடனே உள்ளுக்கு இழுத்துக்கொண்டன. உடனே ஒரு கவசப்பனி அவை மேல் படர்ந்தது. இவைக்கெல்லாம் அர்த்தம் என்ன வேணு மானாலும் பண்ணிக்கொள்ளலாம். எல்லோரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். ‘அட அசடே யிலிருந்து ‘அக்ரமம்! அக்ரமம்!’வரை. 

மதுரம்தான் சுருக்க சமாளித்துக் கொண்டுவிட்டாள். அதனால் என்ன? காட்ரெஜில் என்புடவை ரெண்டு மூணு அதிகமாத் தூங்கிண்டுதானேயிருக்கு! இன்னிக்கு சாயந்திரம் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணினால் போறது. ஊர்வசிக்கு, அலங்காரம் பண்ணிப்பார்க்கணும்னு எனக்கும் ஆசையாயிருக்கு! மறுபடியும் ஆவலோடு அந்தக் கட்டல். பாவம், மதுரம்! சில சமயங்களில் பெரிய கடல்களைக் கூடக் கணப்பொழுதில் தாண்டிவிடும் சக்தி மதுரத்துக்கு உண்டு. என்னைப் பற்றி நான் அப்படி சொல்லிக் கொள்ள முடியாது. அவள் சௌகரியத்திலேயே பிறந்து வளர்ந்து அதனாலேயே ஒரு பாரி மனப்பான்மையுடன், காலத்தை இதுகாறும் ஓட்டியும் விட்டாள். 

என்னைப் பற்றி நான் அப்படி சொல்லிக் கொள்ள முடியாதே! இளமையில் வறுமையின் சிறுமனப்பான்மைப் பிசுக்கு இன்னும் விடமாட்டேன்கிறதே! 

“சின்னப்பிள்ளை வாரார்!’ கட்டியம் கூவிவிட்டு உதவிமாமி சட்டென்று ஜன்னலிலிருந்து பின் வாங்கு கிறாள். அவள் முகத்தில் ஒரு கபட்டுச் சிரிப்பு, 

படீரென்று கதவு திறந்து கொண்டது. அவன் மேல் கூட, எடுத்தவுடன் என் கண் விழவில்லை. பின்னாலேயே ஒரு உயிர் ஸெலுலாயிடு பொம்மை, என் கவனத்தை ஈர்த்துக் கொண்டது. 

“ஹல்லோ டாடி! ஹௌ டி? மீட் லூலூ” சப்தித்தான்.  

நான் மதுரத்தைப் பார்க்கிறேன். அவள் முகத்தில் ஒரே சமயத்தில் குழுமும் வேதனை, விநயம், குற்றம், செயலாகாத் தன்மை – காண சகிக்கவில்லை. வருகிற வெள்ளிக்கிழமை பெண் பார்க்கும் படலம் என்று சொன் னாயே! அது பஜ்ஜி ஸொஜ்ஜி வரை தானோ? அதை அங்கே போய்த்தின்னால் தான் ஆகுமா?எப்பவுமே அது ஒரு ஃபாஷன். அதையும் கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருக் கிறது இந்த இளைய தலைமுறை. என்னைப் புரளி செய்வதற்கென்றே மெனக்கெட்டு அழைத்து வந்தார்களா? 

எதைக் கண்டும் ஆச்சரியப் படலாகாது. இதுதான் இனி நீ கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். தேற வேண் டிய சோதனை. கடிதம் போட்டால் வர வேணுமா? வந்தாய், படுகிறாய்.படுவதும் உன் குற்றம் தான். இது போன்ற மூக்குடைப்பில்தான் தன் நரம்பு பலத்தை இளைய பாரதம் எங்கள் மேல் பரீசிலித்துக் கொள்கிறது. 

“ஹாய்!” மிஸ் லூலூ கை குலுக்கக் கை நீட்டினாள். நான் கை கூப்பினேன். இந்த அரை அங்குல அரிதாரத்தின் அடியில் உன் முகத்தின் உண்மை உரு என்ன மிஸ் லூலூ? 

அப்புறம் தான் அவன் உர்ஸைப் பார்த்தான். 

“மிஸ் உர்ஸுவவா ஜியார்ஜ்-மிஸ்டர் ஷ்யமந்த்,” 

இப்போத்தான் தனக்கு இயல்பான சங்கோசம் பிசிர்களுடன் பழைய சாமா வெளிப்பட்டான். 

உர்ஸ் ஆச்சரியத்துக்குரிய ஆசாமி தான். இது போன்ற பரிசயங்கள் அவளுக்குள் நெடுநாளையப் பழக்கம் போல், முகத்தில் எவ்வித சலனமுமற்று என்ன அனாயாசம்! அந்தப் புன்னகையில் என்ன தனிக் குளிர்ச்சி! அந்தக் கை கூப்பலில் என்ன ஒப்பற்ற செதுக்கல்! ஆனால் முகத்தில் லேசாய், வெகு லேசாய், இப்போது ஒரு உன்னிப்பு காண்கிறேன். ஆம். 

மாடிப் படியில் திடுதிடு. கித்தாரை மீட்டிய வண்ணம் ப்ரபு வாசற்படியில் தோன்றுகிறான். 

தன் ப்ரவேசத்தால் எந்த இடத்தையும் மேடையாக்கி விடுவான் எந்தன் ப்ரபு. 

என்னைக் கண்டதும், 

“அப்பா!’ஓடோடி வந்து கட்டிக் கொள்கிறான். கித்தார் தோளில், லொடலொடாவென அதன் வாரில் ஊஞ்சலாடுகிறது. சங்கோசமெல்லாம் அவனுக்குக் கிடையாது. 

அவனும் நானும், பிள்ளையும் தகப்பனுமாவா பழகினோம்? தோழமையில் எப்படித் திளைத்திருந்தேன் ஒரு காலத்தில்! 

“அப்பா என்ன ரொம்ப இளைச்சுப் போயிட்டேளே! கண்தான் வட்டமாயிருக்கு. கார்ட்டூன் பொம்மையாட் டம்! என்னம்மா, உனக்கு அப்பா எப்படித் தெரியறா?’ 

“நான் சொல்லல்லை. நீ சொல்லிட்டே.’ 

“அப்படியெல்லாம் சொன்னால் உர்ஸ் சங்கடப்டுவாள். எனக்குச் சோறு போடுகிறவள் அவள்தான்.” 

 “உர்ஸ்? ஓ” 

அர்ச்சுனன் ஊர்வசியை வணங்குகிறான். “ஸாரி, உங்கள் மனசைப் புண்படுத்திட்டேனோ? மன்னிச்சிடுங்கோ.”  

அவள் முகம் ‘டால்’ அடித்தது. ‘இல்லேங்க, அச்சன் மேல் நீங்கள் வாஞ்சை காண எனக்குப் பரவசம்-‘ 

(லேசாக மூச்சு தேம்பியதோ? ஏ, உர்ஸ்!) 

“நீங்கள் சொல்றேள் – ஆனால் அப்பா இதையெல்லாம் நடிப்பு என்று விடுவார்”. 

“இது நடிப்பானால் அப்போ நீங்கள் பெரிய களி யாட்டம்- ஐ மீன் ஆக்டர்’ அவன் சிரித்தான். அரும்பு மீசையில் செவ்வரி பளபளக்கிறது. அவனுக்கு எப்பவுமே கன்னம் குழியும். 

“நீங்கள்தான் சொல்றீங்க. ஒரு சான்ஸ், எக்ஸ்ட் ராவாக் கூடக் கிடைக்க மாட்டேன்குதே!’ 

“நிங்களுக்குக் கிட்டாமல், வேறு யாருக்குக் கிட்ட நியாயமுண்டு? சௌந்தர்யவான் 

“அஹ்ஹா, என் கன்னத்தில் சிவப்பு ஏறுகிறதா பாருங்கள்!” 

இப்போ அவள்முறை, வெட்கமுற மற்றவர் இருப்பதையே தான் மறந்து விட்ட உணர்வு தீண்டித் தலை குனிந்தாள். ஆம், இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? 

இத்தனை பேர் நடுவே அவர்கள் இருவருக்கு மட்டும் சொந்தமாய், பிரத்யக்ஷ அந்தர்த்யானத்தில் 

நடுவில்.. 

சமையலறையிலிருந்து மதுரத்தின் குரல். 

“குளிக்கறவா குளிச்சுட்டு வந்தால் சாப்பாடு ரெடி!”

அத்தியாயம்-10

மாலை மஞ்சள் வெய்யிலின் கதகதப்பில், பால்கனி யில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கிறேன். 

உர்ஸைக் கொத்திக் கொண்டு பிள்ளைகள் ஷாப்பிங் போய்விட்டார்கள். ஒத்தாசைக்கு லூலூகூட 

எங்கேயோ ஆலயமணி… 

அவசரமாக மதுரம் உள்ளிருந்து வந்து பால்கனியில் எனக்கும் கைப்பிடிச் சுவருக்கும் இடையிடுக்கில் நுழைந்து மணியோசை திக்கைப்பார்த்து மற்ற கட்டிடங்களின் மாடி கள் ஆலய கோபுரத்தை மறைத்துவிட்டன -ஒரு கைவிரல் நுனிகளால் கன்னங்களில் மாறி மாறிப் போட்டுக் கொள் கிறாள். 

”மதுரம், லூலூன்னா என்ன பெயர்?”

புன்னகை பூத்தாள்.”நானும் முதலில் திணறித்தான் போனேன். வெச்சபேர் லலிதா. லலியாக் குறுகி அப்புறம் லல்லி லில்லி, அப்புறம் லூலூ சூரபத்மன் தலை மாதிரி” வாய்விட்டுச் சிரித்தாள். “அப்பாவின் பதவி உயர்வுக்கு ஏத்தபடி புழக்க வட்டம் மாற மாற பேச்சு,உடை பேர் திரியக் கேட்பானேன்? ஸ்லாக்கும், ஜீன்ஸும் உடுத்துண்டு என் பேர் லலிதான்னா என்ன பொருத்தம் இருக்கு. நானே கேட்கறேன்? லூலூ இது எப்படியிருக்கு? பேரில் என்ன இருக்கு? எதில்தான் என்ன இருக்கு?, எனக்குத் தலை சுத்தறது- 

“இப்போ நான் கேட்டதனால் புதுசாவா? மதுரம் அந்த சம்பந்தம் நீ பிடித்ததா? உனக்குச் சம்மதமா?” 

”நானா, எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடை யாது. உங்கள் சம்மதத்தையும் என் சம்மதத்தையும் யார் கேட்கறா?” 

“உன் பிள்ளைகளை நீ தலையில் வெச்சுண்டு கரகம் ஆடினதெல்லாம் போச்சா?” 

“கரகம் தூக்க வேண்டியதுக்குத் தூக்க வேண்டியது தான்”. 

”மதுரம் இது எங்கே போய் நிற்கும்?” 

“அதான் கலியாணந்தில் வந்து நிக்கறதே!இன்னும் எங்கே போய் நிற்கணும்?” 

“அதில்லை மது! மஞ்சள் கயிறுக்கு மிச்சம் ஏதேனும் விட்டு வெச்சிருக்குமா?” 

“யார் கண்டது? யார் கேட்பது? யாருக்கென்ன அக்கறை? பிள்ளைக்கு நீங்கள் பூணூல் போட்டேளா, அவன் கட்டப்போறத் தாலியைப்பற்றி இப்போ கவலைப் பட?” 

“அப்போ உன் அபிப்பிராயத்தில் மஞ்சள் கயிறும் பூணூலும் ஒரே எடையா?” 

“இது பற்றி நாம் ஏன் சண்டை போடணும்” மதுரம் எரிந்து விழுந்தாள். “இதுதான் வீட்டுக்குள்ளேயே ஊர் வம்பு என்கிறது. நல்லதோ பொல்லாதோ பாவ புண்ணியம் பார்க்கிறது அவர்கள் பாடு!”

“மதுரம் நாம் கொஞ்சம் கூட மாறவில்லை. தர்க்கத்தில் நீதான் ஜயிக்கணும்னா இப்பவே சொல்லிடு, பின் வாங்கிடறேன். எனக்குப் பழைய தெம்பு இல்லை. என்னை எதற்கு வரவழைத்தாய் என்று உனக்கே தெரியா விட்டால் நான் என்ன செய்ய முடியும்!” 

மதுரம் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். டாங்கென்று இனிப்பாய் அழைப்புமணி ஒலித்தது. கதவைத்திறக்கச் சென்றாள். 

சிரித்துக் கொண்டே ஸேது வந்தான். அப்பா என்று அழைக்க அவனுக்குப் பேச்சு வந்த நாளிலிருந்தே லஜ்ஜை. எல்லாவற்றிற்கும் அவனுடைய இளிப்பு ஈடுசெய்துவிடும். அந்த லஜ்ஜை இளிப்புத்தான் ஸேதுவின் சிறப்பு. சற்றுப் பெரிதானாலும் ஒழுங்கான பல்வரிசை. 

என் கையில் ஆப்பிளைக் கொடுத்து அவன் நமஸ்கரிக் கையில் தொப்பை மேல் உடல் நின்றது, 

“என்ன ப்ரதர்! ரொம்ப கனவானாயிட்டே! இந்த வயசிலேயே இந்த வெயிட் நீ உஷாராயிருக்கணும்.” 

“சுபாவத்திலேயே அவன் கூஷ் பாண்ட சரீரம் தானே!” 

மதுரம் இடைமறித்தாள். 

“உன் பிள்ளையை ஒண்ணும் சொல்லிடல்லே, அவன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.”

“நீங்கள் நம்பமாட்டேள். இப்போல்லாம் நான் டிபனே சாப்பிடறதில்லே.” 

“என்ன ‘ஷாக்’ கொடுக்கிறே. அடை என்றால் உனக்கு உசிராச்சே மாஸக்கடைசி கூட பார்க்காமல் உன் தாயார் நனைச்சுடுவாளே!” 

“என் பிள்ளைக்கு மட்டும் பண்ணினேனா? எல்லாரும் தின்பதிலும் குறைச்சலில்லை தூத்துறது லேயும் குறைச்சலில்லை”. 

“நல்ல கதையாயிருக்கே! பண்ணினால் எல்லோரும் தின்கிறோம்”. 

“நீங்கள் பாட்டுக்கு சொல்லிக்காட்டிண்டேயிருங்கோ, எனக்கு இன்னும் நாலு வயசு போகட்டும். குடும்ப நிர்வாகம் இனிமேல் புதுசா உங்ககிட்ட கத்துக்கறேன்.’ 

”என்னமா செய்வது? நானோ இளமையில் வறுமை, சிதைவரை அல்ப்புத்தி எங்கே விடும்? உங்களுக்கு கொப் புளிக்கப் பன்னீர். என்னால் முடியாததால்தானே வீட்டை விட்டே ஓடி விட்டேன்!”

மூவரும் சற்று நேரம் வாளாவிருந்தோம். பிறகு ஸேது, “அந்தக்காலமெல்லாம் மலையேறிப் போச்சு. ஒரு நாள் சாப்பாட்டுக்கே தக்றார், டிபனுக்கு ஏது வழி? அவளுக்கு சமைக்க நேரமில்லை. ஆபீஸிலிருந்து திரும்பற வேளைக்கு இரண்டு பேரும் அடிச்சுப் போட்ட மாதிரி ஆயிடறோம். அடுத்த நாள் அடிச்சுப் பிடிச்சுண்டு ஓடறோம். இப்படியே பிழைப்பு அயிடுத்து”. 

“முடியல்லேன்னா ராஜி வேலைக்கு முழுக்கும் போட்டுவிட வேண்டியது தானே!” 

“அதெல்லாம் நடக்கற காரியமில்லேப்பா. எங்கள் தேவைகளும், விலைவாசிகளும், வாழ்க்கை முறையும் அதற்கு இடம் கொடுக்கல்லே. அவளும் ருசி கண்ட பூனை ஆகிவிட்டாள்.”

மறுபடியும் அவரவர் புழுக்கத்தில் அவரவர் மௌனத்தின் தேக்கம். 

“ஸேது, இன்னிக்கு உனக்கு பிடிச்ச சமையல், ராத்திரி தங்கிச் சாப்பிட்டு விட்டுப் போயேன்!” 

ஸேதுவின் மூக்குநுனி விடயத்தது. 

“சேப்பங்கிழங்கு ரோஸ்ட்”

ஸேதுவின் முகம் தத்தளித்தது. “நேரமில்லை. கிளம்பணும்.ரூட் 37-ஐ விட்டேன்னா அடுத்தது ஒரு மணி பொறுத்து, அதுவும் நிச்சயமில்லை”. 

“என்ன வராப்போல வந்தே.நீ வந்தது உண்மை யில்லை, போவது தான் உறுதியா நடந்துக்கறே!” 

“அதுதான் வாழ்க்கை!” புன்னகை புரிந்தபடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான் – புன்னகையா வது? விசனத்தின் மறுபக்கம் திருப்பிப் போடாமலே முறுக்கிறது. 

திமி திமியென்று மாடிப்படியில் மிதியடிகளின் ஓசை. 

‘டாங்! டாங்’! டாங்!!! மணி அலறிற்று. மதுரம் கதவை முழுக்கத் திறப்பதற்குள் அலைமோதிற்று. சந்தைக்கடை இரைச்சல். இரைச்சலில்தான் இதே தலை முறை ஒளிந்து கொள்கிறது. கூடவே ஒவ்வாத அங்க சேஷ்டைகள், 

உர்ஸ்! உர்ஸ்தானா? உர்ஸ் தகதகத்தாள். வெள்ளைச் சந்தனக்கலர் புடவை மின்சார ஒளியில், யதேச்சையான உடல் அசைவுகளில் அதுவும் நளின நீலம் காட்டுகிறது. இன்னொரு அசப்பில் வெள்ளையுடன் கலந்த லேசு ரோஜா. அங்கும் இங்குமாய் மின்மினித் தெளிப்புகள் பொரிகின்றன.ஏதோ கெலிடாஸ்கோப் ஜாலக். 

”பேஷ்! உன்னுடைய தேர்வா? லலித்.” 

”நோ… நோ…டாடி மிஸ்டர் ப்ரபு.” 

மார்மேல் கைக்கடலுடன் ப்ரபு உர்ஸை சிந்தித்துக் கொண்டு நடுக் கூடத்தில் நிற்கிறான். அவனுடைய தோரணையான அந்த அமைதியின் அடியில் ஏதோ சிறகு களின் படபடப்பு சிலிர்த்தது. 

அதே சமயத்தில் அந்தப் புது விழிப்பால் ஒரு திகைப்பு. உளி வடித்த புத்துருவின் உக்கிரம். 

அரிவாளின் விச்சுப்போல் நடுவகிடினின்று கூந்தல் இருசரேல் வீழ்ச்சிகளாய்ப் பிரிந்து சரிந்து பின்னுக்கு ஓடிச்சேர்ந்து தடித்த பின்னலில் முடைந்து கொண்டன. அதில் ஒரு தாழம்பூ மடல் கத்தி போல் சொருகிக் கொண்டிருந்தது. 

சமையலறையிலிருந்து மதுரம் விரைந்து வந்து உர்ஸை நெற்றியில் தொட்டுச் சட்டென்று அணைத்துக் கெர்ண் டாள். பிரிந்து அவள் தோள்களைப் பற்றித் தன் எதிரே நிறுத்தினாள்.உர்ஸின் புருவ மத்தியில் இப்போது குங்குமம் திகழ்ந்தது. மின்சார விளக்கில் திடீரென்று லோடு ஏறினாற் போல் ஒருப்புப் பரிணாமத்தில் பிதுங்கினாள். நெற்றியில் திடுக்கென உதயமான அந்த செஞ்சுடர் வட்டத் துடன் அந்த மேனிக் கறுப்பு, இந்த ப்ரமை தட்ட, கூட்டு சேர்ந்து கொண்டது. 

அமானுஷ்யை 
கன்யாகுமரி 
தாக்ஷாயணி 
தடாதகை 
திரௌபதி 

நம்பினோர்க்கு அவரவர் நம்பிக்கையாகவும் நம்பார்க் குக் கேட்கக் கேட்க வற்றாத கதையம்சமாகவும்… 

எல்லாமே கண்டவரின் மனநிலையென ஞான விஞ்ஞான விளக்கங்கள் அல்லது பின்னால் காலகதியில் காணும் தெளிவு எல்லாம் கண்டதைக் கண்ட பின்னர் தான். மைல்கற்கள் எல்லாம் பின்னால் நடுபவைதான். ஆனால் இந்த ரஸவாதம் முன்பின் அறிகுறியின்றி நிகழ்ந்தது நிகழ்ந்ததுதான். இதற்கு எங்களனைவர்க்கும் நேர்ந்த வாயடைப்பே சாந்தி. 

“ஐ ஸே; ஸி லுக்ஸ் கிரேட் – ” யார் சாமாவா?

மந்திரம் கலைந்தது. 

எல்லோரும் ஒரு பந்தியாக உட்கார்ந்தோம். மதுரம் பரிமாறினாள். “எத்தனை நாளாச்சு! எல்லோரும் ஒரு குடும்பமா – ஸேது கூட இன்னிக்கு சேர்ந்துண்டிருக்கான். நேரமிருந்தால் பாயஸம் வைக்கலாம். முன் கலத்துக்கு சர்க்கரை வெச்சேனும் மகிழ்ந்திருக்கறேன். எப்பவும் நாம் இப்படி இருக்க மாட்டோமா! அவளுக்கு தொண்டையை அடைத்தது. 

சாமா, லூலூ 

ஸேது, நான் 

எனக்கடுத்து ப்ரபு 

ப்ரபு பக்கத்தில் உர்ஸ் தானே வந்து உட்கார்ந்து விட்டாள். 

கறியைச் சுவைத்து விட்டு இடது செவியைப் பொத்திக் கொண்டாள். கறியும் இன்று உணக்கை தான். 

“நெய் விடட்டுமா?” 

சுட்டு விரலுக்கும் கட்டை விரலுக்குமிடையே ஒரு தானை இடுக்கிக் கொண்டு மேல் காரப்பூச்சை உர்ஸ் வழித்துக் கொண்டிருக்கையில் அந்தக் கிழங்கு திடீரென அவள் பிடியினின்று வழுக்கிக் கவண் போல் புறப்பட்டு ப்ரபுவின் கலத்தில் ‘சொதக் கென்று விழுந்தது. ப்ரபு சடக்கென்று அதையெடுத்து விழுங்கி விட்டான். 

ஒரே உருட்டுச் சிரிப்பு. என்னையும் மதுரத்தையும் தவிர, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு திருதிரு வென்று விழிக்கிறோம். எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? 

எச்சில் எச்சில் என்பீர் ஏதும் கெட்டமானிடரே –

உங்கள் அருவருப்புக்களே பாசாங்குகள். 

பெரியவர்களின் அகந்தைகள் என்று இளைய தலை முறை நிரூபனை செய்ய ஆரம்பித்து விட்டால் எங்கள் மானம் எங்கே போகிறது? வயது ஏற ஏற, சொல் தாங்கு வது கஷ்டமாயிருக்கிறது. 


கரை மறைந்த அசதிக் கடல். 

இன்று வானத்தில் அலாதி தெளிவு. மத்தாப்பு கொள்ளையாக கொட்டியிருக்கிறது. 

உண்ட சுகம் கண்ட 

இன்ப அசதிக் கடல். 

இந்த சமயத்துக்கு எனக்கு பூமியில் யாரும் எதுவும் பகை கிடையாது. 

அரைக்கண் செருகலுல் வான விளிம்புக்கே மிதந்து செல்கிறேன். 

கூரைப் புடவையையும் தூலியையும் தாங்கி ஆசிக்கும் சபையோ? 

– தொடரும்…

– கேரளத்தில் எங்கோ… (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1988, ஐந்திணை பதிப்பகம், சென்னை. 

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *