கூட்டினாலும், பெருக்கினாலும்…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 2,857 
 
 

புனிதாவை முழுசாய் பார்த்து இரண்டு நாளாச்சு..புனிதா என் மனைவி தான்.காலை. மதியம்..இரவு. சாப்பிடும் நேரம் தவிர அதிகம் கண்ணிலேயே படவில்லை…

சாதாரணமாக சமயலறையே கதியென்று கிடக்கும் கூட்டத்தைச் சேர்ந்த பெண்ணில்லை புனிதா.
ஏதோ செய்யவேண்டும் என்பதற்காக மூன்று தடவை அவசரமாய் செய்து முடித்தோமா.கிச்சனை விட்டு வெளியே வந்தோமா டைப்..

நானும் நாக்கை நீட்டிக் கொண்டு சாப்பாட்டுக்கு ஏங்கும் ஆள் கிடையாது. பசிக்கும்போது சாப்பிட ஏதாவது இருந்தால் சரி.

எங்களுக்குள் ஒத்துப் போகும் அபூர்வ விஷயங்களில் இதுவும் ஒன்று.

வரவர புனிதாவுக்கு மூன்று வேளை சமைக்கும் பொறுமையும் போய்விட்டதென்று என்னிடம் ஜாடை மாடையாய் கூற ஆரம்பித்திருக்கிறாள்.

என்னமோ வேலைக்கு வரும் ஆட்கள் யாரும் இரண்டு வருஷத்துக்கு மேல் நிலைப்பதில்லை.

இந்த ஆகஸ்ட் வந்தால் வயது அறுபத்தைந்து…

புனிதாவுக்குத்தான்.பாவம்.உடம்பு படுத்துகிறது. அவள் மனதை என்ன வாட்டுகிறதென்று எனக்குத் தெரியாதா என்ன ..?

நான் கூடமாட உதவி செய்யலாமென்றால் உடம்பு வணங்கினால் தானே. எல்லாம் கையில் கொண்டுவந்து குடுத்து பழக்கிவிட்ட அம்மாவின் மேல் கோவம் வந்தது. ஆனாலும் ரோஷம் வர மறுத்தது..

இன்றைக்கு எப்படியாவது புனிதாவைப் பிடித்து என்னதான் செய்கிறாள் என்று கேட்க வேண்டும்..!!

மதியம் சாப்பிட்டுவிட்டு எழுந்தவளை தடுத்து நிறுத்தினேன்..

“புனிதா . கொஞ்சம் உக்காரு.. உங்கிட்ட பேசணும்..இரண்டு நாளா நானும் பாக்கறேன் .அரைமணில வேலைய முடிச்சிட்டு சோபால வந்து உக்காந்திடுவியே.. பேப்பர்.இல்லை T.V. ..இப்ப என்னடான்னா சதா பெருக்கறதும்.துடைக்கறதும்.

வேலைக்கு நாளைக்கு யாரோ வரப்போறான்னு சொன்னியே.பின்ன எதுக்கு விழுந்து. விழுந்து..வீட்டை க்ளீன் பண்ற..?”

“நானே உங்க கிட்ட சொல்லணும்..சொல்லணும்னு இருந்தேன்…நம்ப கமலாம்மாவ நியாபகம் இருக்கா.கீழ்ப்பாக்கத்தில் நாம குடியிருந்தப்போ நம்ப வீட்ல வேல பாத்தாளே.நல்ல பெரிய குங்கும பொட்டு வச்சிட்டு..காலைலயே குளிச்சிட்டு சுத்தபத்தமா மகாலட்சுமி மாதிரி வருவாளே.!”

“எப்படி மறக்க முடியும்..?அவ ஒத்திதானே உன்னோடு ஒத்துப்போய் அஞ்சு வருஷம் நம்ம வீட்ல வேல பாத்தா..!”

“அவளேதான்.அவளத்தான் போனவாரம் முண்டக்கண்ணி கோவில்ல பாத்தேன்..”

“அதே குங்குமப் பொட்டா.? வேலைக்கு வரேன்னு சொன்னாளா.?”

“நீங்க வேற.. பாவம் புருஷன் போய் ஆறு வருஷமாச்சு.பட்ட பட்டையாக விபூதிதான்.. அவளுக்கு வயசு என்னாச்சுன்னு நெனப்பு..??

பாவம்..ஆளே அடையாளம் தெரியல.
ரொம்பவே இளச்சு போயிட்டா..ஷூகர் வேற.”

“சரி.கமலா புராணம் போதும்…சமாசாரத்த சொல்லு..!”

“அவ வீட்டுல தான் இருக்காளாம்..நம்ப வீட்டு பக்கம்தான். பையனுக்கு கல்யாணமாகி பேரனும் பொறந்தாச்சாம்…மருமக தங்கம்னா தங்கமாம்..

“இப்போ குழந்தைக்கு நாலு மாசம் முடியுது.வீட்டில் இரண்டாளுக்கு என்ன வேல. ‘நானு வேலைக்கு போறேன்னு’ ஒரே ரவுசு..

தெரியாத இடத்துக்கு அனுப்ப பயம்மா இருக்குது அம்மா.. தெய்வம் மாதிரி உங்களைப் பாத்துப்புட்டேன். வேலைக்கு ஆள் வைக்கிறதா இருந்தா சொல்லு.நாளைக்கே ரெடி பண்ணிடலாம்.. பளிங்கு மாதிரி வீட்ட துடைச்சு.. துடைச்சு வச்சிக்குவா.. சாப்பாடு செய்ய கூட மாட எல்ப்பு பண்ணும்..!!”

“நான் உடனே சரின்னு சொல்லிட்டேன்..”

“அப்புறம் என்ன..அவதான் வரப்போறாளே… எதுக்கு இழுத்துப் போட்டு வேல செய்யிற..?”

“என்னங்க நீங்க..அவளே ரொம்ப சுத்தமாம்..நம்ப வீட்டப் பாத்து என்ன நினைப்பா…? க்ளீனா இருக்க வேண்டாம்..?”

அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்..

“புனிதா. உன் லாஜிக்கே எனக்குப் புரியல.வீட்டை சுத்தம் செய்யத்தான் ஆளு.சுத்தமா இருக்கிற வீட்டில அவளுக்கென்ன வேலை.. அப்புறம் என்னிக்காவது நிறைய பாத்திரம் விழுந்தா தேய்க்கமாட்டேன்னு சொல்ல மாட்டாளா.?”

“உங்க லாஜிக் எனக்கு ஒத்து வராது.இந்த சமாசாரத்திலயேல்லாம் தலையிடாதிங்க..!!”

லாஜிக்கில் இத்தனை வகையா??

மறுநாள்.. சரியாக காலை ஆறு மணி. எப்பவும் போல் வாசலில் பேப்பரை எடுத்து வைத்துக் கொண்டு காப்பிக்காக..
காத்திருந்தேன். காத்திருந்தேன்.. பொறுமையிழந்து சமயலறைக்கே போய்விட்டேன்..!!!

“புனிதா. என்னம்மா..காப்பி லேட்டா..?”

“இதோ . ஒரு செகண்ட். இரண்டாவது டிக்காஷன் இறங்கிட்டிருக்கு…!!”

“ஏன் . முதலுக்கு என்ன ஆச்சு.? சுடச் சுட வாசலுக்கே வருமே..!”

“இன்னிக்கு கமலாம்மா மருமக வேலைக்கு வரா.மறந்து போச்சா..??”

“அதுக்கென்ன..?”

“முதல் டிக்காஷன அவளுக்கு எடுத்து வச்சிட்டேன்.வந்ததுமே நல்ல காப்பியா குடுக்கலைனா என்ன பத்தி என்ன நினைப்பா..?”

“காப்பியோட ஏன் நிறுத்திட்ட..காலை நாஷ்ட்டா..??”

“நேரத்தில எதுக்கு எழுந்திரிச்சேன்..? இதோ.. பாருங்க..!!”

மூடி வைத்திருந்து எவர்சில்வர் சம்புடத்தை திறந்தாள்..

கமகமவென்று நெய்யில் பொரித்த முந்திரிப் பருப்பு ‘ என்னைப் பார்…உன்னைப்பார்.. என்று வெண் பொங்கல் மேல் உட்கார்ந்து கொண்டு. முழித்துக் கொண்டிருந்தது..!!!

‘ ஸ்வீட் இல்லையா.’ என்று கேட்கத் தோன்றியது. அப்புறம் ‘ அல்வா கிளறியிருக்கேன்..’ என்று சொல்லிவிட்டாளானால்..என்னுடைய இதயத்துக்கு தாங்கும் சக்தி இருக்குமா என்ற சந்தேகத்துடன் இடத்தைக் காலி பண்ணினேன்.

சரியாக மாட்டிக் கொள்ளப் போகிறாள்..!

ஆனால் கதை வேறு விதமாகப் போகும் என்று யார் கண்டார்கள்…?

காப்பியை எடுத்துக் கொண்டு மறுபடியும் வாசலுக்கு வந்தேன்..
மொப்பெட் சத்தம்…

வண்டியை நிறுத்தி விட்டு நிதானமாய் இறங்கினாள் அந்தப் பெண்..

ஒரு இருபது. இருபத்தைந்து.வயது மதிக்கத்தக்க பெண்.

ஒல்லியான. சிறிய உருவம். நேர்த்தியான உடை..தலையை நன்றாக எண்ணெய் தடவி வாரி. இரண்டு பக்கமும் கல் வைத்த க்ளிப்.. காதில் ஜிமிக்கி..மாட்டல்… கல்லூரி மாணவி போன்ற தோற்றம்…

“Good morning ஸார்.. எம்பேரு ரேவதி.கமலாம்மா அனுப்பிச்சாங்க..!!”

இன்றைக்கு பார்த்து அழுக்கு வேட்டியும்.. பனியனும்.ச்சே.காலைல குளிச்சிட்டு நல்ல சட்டையா போட்டிருக்கலாம்.சில விஷயங்களில் புனிதா என்னைவிட சாமர்த்தியசாலிதான்…

அவளுடைய லாஜிக் சரியாக இருக்கும்போலத்தான் தெரிகிறது…

“வாம்மா..புனிதா சொன்னா..நல்ல சுத்தமா வேலை பாப்பியாமே…உங்க மாமியாரே சர்ட்டிபிகேட் கொடுத்தப் புறம் அப்பீல் ஏது…?

பேச்சுக் குரல் கேட்டு புனிதாவே வாசலுக்கு வந்தாள்.

“அடேடே.ரேவதியா.உள்ள வாம்மா.!”

புனிதாவுக்கு நான் வேலைசெய்யும் பெண்களுடன் அதிகம் பேசினால் பிடிக்காது.. எங்கிருந்தாலும் ப்ரத்யஷமாகி விடுவாள்…அவர்களை என்னிடமிருந்து ரட்சிக்கும் ஆபத்பாந்தவன் என்ற நினைப்பாயிருக்கவேண்டும்…!

உள்ளே மறைந்து விட்டார்கள்.காதை தீட்டி வைத்துக் கொண்டு கேட்டதில் காதில் விழுந்தவை..

“ரேவதி.முதல்ல இந்த பொங்கல சாப்பிட்டு.காப்பி குடிச்சதுக்கப்புறம் என்ன வேலைன்னு சொல்லித்தரேன்..!”

“ஐய்யோ.அம்மா..நானு வீட்ல டிபன் பண்ணிட்டு .காப்பி குடிச்சிட்டுத்தாம்மா வரேன்.வேலைய சொல்லுங்க..”

புனிதாவின் முகத்தப் பார்க்க ஆவலாயிருந்தது. ரேவதியிடம் அவள் லாஜிக் பலிக்கவில்லையா..?

“துணிய வாஷிங் மிஷினில் போட்டு இன்னிக்கு காட்றேன்… நாளையிலிருந்து நீயே போடலாம்..”

“எங்க வீட்டிலேயும் இதே மிஷின்தாம்மா ஓடுது. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. .நானே பாத்துக்குவேன்.!!”

இரண்டு மணி நேரத்தில் அத்தனை வேலையும் ஓவர்..

புனிதா எதிர்பார்த்ததற்கு மேலேயே ரேவதி ஸ்மார்ட்டாய் இருந்தாள்..

“ஏங்க.ரேவதியப் பாத்தா நம்ம நித்யா மாதிரி இல்ல..?”

நித்யா எங்களின் ஒரே பெண்.. இவள் வயதுதான் இருக்கும்.. இப்போது இல்லை… ஒரு ஆகஸிடென்டில் போய் எட்டுவருஷமாச்சு.அழுது..ஓய்ந்து.இப்போதுஅவளைப்பற்றி அதிகம் பேசுவதில்லை.

இதோ மீண்டும் ரேவதி உருவத்தில்..

“ஆமா புனிதா.அவளப் பார்த்ததுமே எனக்கும் நித்யா நியாபகம் வந்திருச்சு.”

வேலை முடிந்ததும் இப்போதெல்லாம் ரேவதியைக் கூட வைத்துக் கொண்டுதான் சீரியல் பார்க்கிறாள்.!!

“என்ன.எந்திருச்சிட்ட..??”

“அம்மா.. கொஞ்சம் இருங்க.குக்கர ஆஃப் பண்ணிட்டு வரேன்…!!”

“இரு.முக்கியமான் ஸீன மிஸ் பண்றியே. அவர் ஆஃப் பண்ணுவார்..

“ஏங்க.அந்த குக்கர கொஞ்சம் நிறுத்திடுங்க..”

“நானும்.. ரேவதியும் பக்கத்தில் நடக்கிற ஒரு டெக்ஸ்டைல் எக்ஸிபிஷனுக்கு போய்ட்டு வரோம்..மிஷின் நின்னதும் துணியக் கொஞ்சம் காயப்போட்டுடுங்க ப்ளீஸ்.!!”

“இன்றைக்கு கடைசிநாள். அஜீத் படம். என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் பாத்துட்டாங்க. மதியம் வெளியே சாப்பிட்டுக்கிறோம்.. எல்லாமே டேபிள்ள ரெடி ….

எடுத்து போட்டு சாப்பிட வேண்டியது தான்..
கொஞ்சம் ஒழிச்சு மட்டும் ஃபிரிட்ஜில வச்சிருங்க.. பாத்திரம் எல்லாம் கிடக்கட்டும்.

பாலக் காச்சி காப்பி மட்டும் போட்டுக்குங்க. உங்களுக்குத்தான் இரண்டு மணிக்கெல்லாம் காப்பி வேணுமே..!!”

புனிதா இப்போதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தாள்..

“இன்னிக்கு நாம் இரண்டு பேரும் கடைக்குப் போறோம்.தயாரா இருங்க..”

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.இப்போதேல்லாம். நான் ஒருவன் இருப்பதாகவே காட்டிக் கொள்வதில்லை.வீட்டை பூட்டவும். திறக்கவும் மட்டுமே என் உதவி தேவைப்பட்டது. ஆனால் இன்றைக்கு கடைக்கு கூப்பிடுகிறாளே..!!

“நாம நேரா துணிக்கடைக்கு போறோம். அங்கேயிருந்து நகைக் கடை.!”

“என்ன விசேஷம்..?”

“வாங்க.. தெரியும்..!”

துணிக் கடையில் ஒரு வயது குழந்தைக்கான உடைகள் நாலு. அப்புறம் இரண்டு பொம்மைகள். கொஞ்சம் இனிப்பு வகைகள்…!!

“இப்போ நகைக் போகணும்.”

வெள்ளி அரைஞாண்.. ஒரு ஜோடி கொலுசு..!!

“புனிதா .. போதும் உன் ஸஸ்பென்ஸ்..சொல்லும்மா..”

“நம்ப ரேவதி பையனுக்கு வர வெள்ளிக்கிழமை பிறந்தநாள். அதுக்கு நம்ப கிஃப்ட்.!!”

“ரேவதி பாவங்க..சின்ன வயசிலேயே அப்பா.. அம்மா.. போய்ட்டாங்க..!!!

அண்ணங்காரன் மட்டும்தான்.. அவனும் எங்க இருக்கான்னு தெரியாதாம்..

சீர்.செனத்தி.செய்யக்கூட யாருமில்ல.காலல அஞ்சு மணிக்கெல்லாம் எந்திரிச்சு பத்து பேருக்கு ஸ்வீட் பண்ணனும்.
ஒம்பதிலிருந்து பத்து முகூர்த்தம்.. நாமதான் அம்மா..அப்பா. ஸ்தானத்தில இருந்து செய்யப்போறோம்.

புனிதா பேரனை கையை விட்டு கீழே இறக்கவில்லை..

புனிதாவுக்கு ராஜ மரியாதை..!!

இப்போதெல்லாம் ரேவதி வரும்போது கூடவே அகிலும்..

குழந்தையைப் பார்த்துக் கொள்வது புனிதா தான்.

நான் ரொம்ப மாறிவிட்டேன்.

ரேவதிக்கு காய்கறி நறுக்கி கொடுப்பது.துவைத்த துணிகளை காயப்போடுவது…

மடித்து வைப்பது. ஒட்டடை அடிப்பது.. இன்னும் சில பல சில்லறை வேலைகள்.

வீடு சொன்னபடி பளிங்கு மாதிரியெல்லாம் மின்னவில்லை. ஆனால் எல்லோர் மனதிலும் பளிங்குபோல் தூய்மை.. ஒரு குதூகலம். ஆனந்தம்..

கூட்டினாலும்.பெருக்கினாலும் சில கணக்குகளின் விடைகள் ஒன்றாகவே இருப்பது போல்.

வீட்டை சுத்தமாக வைத்தாலென்ன..? மனதை சுத்தமா வைத்தாலென்ன.?

இது வரை சுமையாய் தெரிந்தது. இப்போது சுகமாக மாறியது எப்படி..?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *