“ஒன்னு போதும்ன்னு முடிவெடுத்து பெத்து வளர்த்தது, மூணு வருஷம் வளர்ந்து, விபத்துல போய் பத்து மாசம் ஆச்சு. உனக்கு… அடுத்து அறுவை சிகிச்சை செய்து குழந்தைப் பெத்துக்கிறதிலே விருப்பமில்லை. எனக்கும் அப்படி. நாம கடைசிவரை இப்படியே இருக்கனுமா..? – கேட்டு தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான் ஆனந்த்.
“உங்க விருப்பம் என்ன..” நந்தினி அவனைத் திருப்பிக் கேட்டாள்.
“கைநிறைய சம்பாதிக்கிற நாம ஏன் வெறுமனே வாழ்ந்து மடியனும்..? ஏதாவது ஒரு அனாதை குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாமே…? அதுக்கும் வாழ்க்கைக் கிடைக்கும், அம்மா, அப்பா கிடைக்கும் நமக்கும் திருப்தி.” சொன்னான்.
நந்தினி யோசிக்கவே இல்லை.
“நல்ல யோசனைங்க..” சொல்லி மலர்ந்தாள்.
“சமீபத்துல ஒரு விபத்தில் பெத்தவங்களை இழந்த குழந்தை ஒன்னு இருக்கு.” என்றான்.
“அப்படியா…?!..” வாயைப் பிளந்தாள்.
“ஆமாம். இவுங்கதான் விபத்துல இறந்த அந்த ஜோடி!” தன் கையில் இருந்த தினசரியைக் காட்டினான்.
பார்த்த நந்தினிக்கு அதிர்ச்சி.!!!
“அத்தான்!” அலறினாள்.
“அவன் உன் முன்னாள் காதலன். அவள் என் காதலி!”
நந்தினி உறைந்தாள்.
ஆனந்த் தொடர்ந்தான்.
“நந்தினி.. ! ஒரு இளைஞனும் இளைஞியும் காதலித்தாலே பாதி கணவன் மனைவி. சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிஞ்சாச்சு. அந்தக் குழந்தையை மத்தவங்களை விட நாம அன்பு, நேசம், பாசம், ஈடுபாடாய் வளர்க்கலாம். ஆமாம் நந்தினி. ! என் சொல்படி அந்த குழந்தைக்கு ஏற்கனவே நாம பாதி அம்மா அப்பா. இப்போ எடுத்து வளர்த்தால் முழு அம்மா அப்பா ஆகிடுவோம். என்ன சொல்றே..?!” கேட்டு பார்த்தான்.
‘எப்படி இவரால் இப்படி சிந்திக்க, முடிகிறது..?’ என்று நினைத்த நந்தினிக்கு ஆனந்த். மடமடவென்று உயர…ஆனந்தக் கண்ணீர்.
“இதுதாங்க சரி!”என்று சொல்லி அவனைத் தவிப்பு பிடித்து இறுக்கினாள்.