குரு பார்வை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 11, 2023
பார்வையிட்டோர்: 7,430 
 
 

வாசலில் பைக் – சத்தம் கேட்டவுடன் இங்கு நாராயணன் தன் மனைவியிடம் கட்டளை இட்டார் “உன் பிள்ளை வந்தாச்சு. உடனே ஆரம்பிக்காதே. காபி டிஃபன் கொடுத்த பிறகு நிதானமாக சொல்லு”.

வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான் அவர்களது மகன் குருப்ரகாஷ். அழகிய உருவம், ஆறடி உயரம், பொன்னிறம் , புன்னகை பூத்த முகம்,  கம்பீர தோற்றம் என்று பார்க்க  நன்றாகவே இருந்தான். M.Sc.M.Ed. படித்து விட்டு ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறான். மற்ற வேலை வாய்ப்புகள் வந்த போதும் பிடிவாதமாக டீச்சிங் ப்ரோபஷனை தேர்ந்தெடுத்து வேலை செய்து வருபவன்.

மகன் ரெப்ரேஷ் செய்து வந்தவுடன் அம்மா  லக்ஷ்மி  “வாப்பா, இந்தா காபி, டிஃபன், சாப்பிடு” என்றாள் .

“என்னம்மா, நாராயணன் என்ன சொல்கிறார்”

“அவர் என்ன சொல்கிறார் . நான்தான் ‘நல்ல புத்தி கொடுடா நாராயணணா; சொன்னதை கேளுடா சுப்ரமண்யா’ என்று புலம்பிக்கொண்டு இருக்கிறேன்”.

“இது எத்தனை நாளா? அப்பாவை வாடா…போடா சொல்ற…” என்று சிரித்தான் குரு .

“டேய் அரட்டை; நான் சாமி கிட்ட வேண்டிக்  கொண்டதை சொன்னேன்டா” என்று பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டாள் லக்ஷ்மி.

“அவர் ஏற்கனவே சொன்ன பேச்சை கேட்டுக்கொண்டு நல்ல புத்தி நாராயணனாகத்தானே இருக்கிறார். என்னப்பா…”

“என்னை ஏன்டா வம்புக்கு இழுக்கிற. உங்கம்மாதான் மத்தியானத்தில் இருந்து யோசனை. நீ வர காத்துக்கொண்டு இருந்தாள். அதை கேளு…”

“என்னம்மா சொல்லு…” என்றான் குரு சாப்பிட்டுக்கொண்டே…

“இன்னிக்கி கார்த்தாலே ஜோசியர்  வந்திருந்தார். உன் ஜாதகத்தை பார்த்தார். இப்போ ‘குரு பார்வை’  வந்தாச்சு;  கல்யாணான யோகம் வந்தாச்சுனு” சொன்னார்.

“ஏன்மா நானே குருதான். என் பார்வை பிரகாசமா இல்லையா “என்றான் கிண்டலாக .

“குறுக்கே பேசாதடா குரு . அவரிடம் ஒரு பெண் ஜாதகம் வந்திருக்கிறது. உனக்கு பொருத்தமாக இருக்கும் என்றார். பொண்ணு பேர் லாவண்யா . ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, அந்த பொண்ணு உங்க ஸ்கூல் லதான் வேலை பார்க்கிறாள். அதே ஊர்தான் . என்னடா சொல்ற….. பார்க்கலாமா ?”

 “வேண்டாம் ”என்றான் குரு ஒற்றை வார்த்தையாக.

“ஏன்டா? பட்னு இப்படி சொல்ற ? உனக்கு அவளை தெரியுமா ? நல்ல சுபாவமுள்ள பெண்தானே?

“ஹப்பா ..எத்தனை கேள்விகள். ஒரே ஸ்கூல்ல வேலை பார்க்கும்போது எப்படி தெரியாமல் இருக்கும் நன்னா தெரியும். ரொம்ப நல்ல மாதிரி.  சொல்ல போனால்  அவங்க எனக்கு ஒரு நல்ல பிரெண்ட். ”

“அப்புறம் என்னடா ?.”

“வேண்டாம் மா ஒரே ஸ்கூல்ல வேலை பார்க்கும்போது இப்படி கல்யாணத்திற்கு பார்க்க வேண்டாமே ப்ளீஸ்…”

“ஏன்டா ஒரே இடத்தில வேலை பார்க்கிறவர்கள் பிடித்துப்போய் கல்யாணம் செய்து கொள்வது இல்லையா?” 

“தாராளமா பண்ணிக்கலாம். மற்ற வேலைகளுக்கு பொருந்தும் . என்னை மாதிரி ஆசிரியர்களுக்கு வேண்டாம் என்பது என் அபிப்ராயம். என் வாழ்க்கைக்கான என் அபிப்ராயம் மட்டுமே. ஒரு கணவன், மனைவி ஒரே ஸ்கூல்ல வேலை செய்யலாம். ஆனால்  ஸ்கூல்ல வேலைக்கு வந்துவிட்டு அப்புறம் பார்த்து பேசி  கல்யாணம் செய்து கொள்வது என்னை பொறுத்தவரை யோசிக்க வேண்டிய ஒன்று. நான் அப்படி பண்ணிக்க மாட்டேன்” என்றான் குரு.

“அம்மா இந்த ஆசிரியர் வேலை என்பது சாதாரணம் இல்லை. ஒரு விதையை மண்ணில் புதைத்துவிட்டு அதன் வளர்ச்சிக்கு பாடுபடுவது போல…. ஒரு குழந்தை தட்டு தடுமாறி எழும்போது கை  பிடித்து நடக்க வைப்பது போல…. தண்ணீரில் தத்தளிப்பவனை கை கொடுத்து  காப்பாற்றுவது போல….  பல வண்ணப்பொடிகளால் கோலம் வரைந்து அதன் அழகை பார்த்து ரசிப்பது போல….. ஒரு கல்லை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி சிலை வடிப்பது போல ….. இப்படி நிறைய சொல்லலாம்”

“ரொம்ப பொறுப்பான வேலை . எதிர்கால தலைமுறைகளை நல்ல விதமாக உருவாக்க வேண்டிய பெரிய கடமை எங்களுக்கு இருக்கிறது . பசங்க எங்களை ரோல் மாடலாக நினைக்கிறார்களோ இல்லையோ நாங்க எங்க மனதில் ஒரு கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும். ஆனால் சமீப காலமாக ஒரு சில பொல்லாத குணமுள்ள, புல்லுருவிகளால் ஆசிரிய சமூகமே அவமானப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. பாலியல் பலாத்கார குற்றங்கள்தான் பெருகி வருகின்றன . ஆசிரியப்பணியின் புனிதம் புரியாமல் தப்பு செய்கிறார்கள். மாணவர்களுக்கு புத்தி சொல்லி நல்வழிப்படுத்த வேண்டியவர்கள் தாங்களே முறையற்ற வழியில் நடக்கிறார்கள்”.

“மாதா, பிதா , குரு  தெய்வம் என்று ஆசிரியரை தெய்வத்திற்கு முன்பாக வைத்திருக்கிறார்கள். இதன் மேன்மை புரியாமல் சில பேர் நடக்கும்போது கோபம்தான் வருகிறது. கோர்ட்டில் வழக்குகளுக்கு முன் சத்தியப்பிரமாணம் வாங்குவது போல்,  வேலையில் சேரும்போது இவர்களிடம் மாணவிகளை தப்பாக பார்க்க மாட்டேன், தப்பாக நடக்க மாட்டேன் என்று எழுதி வாங்கி வேண்டும்”

“நான் இப்போ லாவண்யாவை கல்யாணம் செய்தால், கூட வேலை பார்த்த பெண்ணை லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டான் என்ற பெயர்தான்  கிடைக்கும். இன்னும் ஒரு படி மேலே போய்  பள்ளியில் படித்த பெண்களிடம் எப்படி நடந்து கொண்டானோ என்ற கேள்வி வரும். வகுப்பறையில் கூடப் பயிலும் பெண்களை பசங்க தப்பாகப் பார்த்தால்  கண்டிக்க கூட முடியாது. என்னையே கிண்டலாக பார்ப்பார்கள். மரியாதை இருக்காது. இதெல்லாம் தேவையா ?” .

“சரிடா . கல்யாணத்திற்கு பிறகு அவளை வேலையை மாற்றி கொள்ள சொல்லலாம். நீயும் வேண்டுமானால்  வேறு இடத்திற்கு ட்ரான்ஸ்பர் வாங்கிக்கோ ”

“அம்மா…இது இன்னும் மோசம். லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கொண்டு  ஊரை விட்டு ஓடிப்போய் விட்டார்கள் என்று அபவாதம் வரும்.”

“நான் இந்த வேலையை எவ்வளவு மதிக்கிறேன்; எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியாதது இல்லை . யாராவது ஒருவர் என்னை அப்படி நினைத்துவிட்டால் கூட அது என் வாழ்நாள் பூரா நெருஞ்சி முள்ளாக உறுத்திக்கொண்டே இருக்கும்.  அதனால் இந்த ஐடியாவை விட்டு விடுங்கள்” என்றான் தெளிவாக.

“அப்புறம் இன்னொன்று….. இந்த மாதிரி ஜோஸ்யர் சொன்ன விஷயம் லாவண்யா குடும்பத்திற்கு தெரிய வேண்டாம். பிறகு எங்க ரெண்டு பேருக்குமே அது தர்ம சங்கடமான சூழ்நிலையாகிவிடும். இப்படியே விட்டு விடுங்கோ” என்றான்

அவன் அருகில் வந்த அப்பா “இந்த “குருவின் பார்வை” (குரு பிரகாஷின் சமூகப்பார்வை) பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அலசி ஆராய்ந்து சொல்கிறாய் .நான் நீ சொன்னவற்றை ஒத்துக்கொள்கிறேன்” என்றார் பெருமிதமாக .

“ஏதோ பொண்ணு நன்னா இருக்கா, இவனுக்கும் ஏற்ற மாதிரி வேலை, ஜாதக பொருத்தம் இருக்கு என்று பார்த்தேன்”என்று இன்னும் அங்கலாய்த்தாள் லக்ஷ்மி.

தனது அறையின் வாசல் வரை சென்ற குரு திரும்பி வந்து “ஏன்மா ….. உனக்கு வீட்டுக்கு விளக்கேற்ற அந்த பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா ? இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன் . இந்த பொண்ணையே பார்த்து முடித்த பின்னே ஒரே ஊர்ல, ஒரே இடத்தில ரெண்டு பேருக்கும் வேலை. அலைச்சல்  வேண்டாம்.  வீட்டோட மாப்பிள்ளையாக வந்து விடுங்கள் என்றால் என்ன செய்வது?” என்றான் (அப்பாவை பார்த்து கண்ணடித்தபடி)

“ஆஹாங்….. அது எப்படி ? இது எல்லாம் என்னடா அசட்டு பேச்சு. அடுத்த வாரம் இன்னும் சில ஜாதகங்கள் கொண்டு வருகிறேன் என்று ஜோசியர் சொல்லி இருக்கிறார். எங்கே பிறந்து இருக்கிறாளோ? என்ன செய்கிறாளோ? வரும்போது வருவாள். நேரம் காலம் கூடி வர வேண்டும்  பார்ப்போம்” என்று சமாளித்தாள் லக்ஷ்மி.

இப்போதைக்கு லக்ஷ்மியின் ஒரே லட்சியம் என் கல்யாணத்தை முடிப்பதுதான் என்று சிரித்தான் குரு

“மகனே ….. உங்கம்மாவை எப்படி சமாளிப்பது என்ற வித்தை உனக்குதான்டா தெரியும்” என்று சிரித்தபடி கை கொடுத்தார் அப்பா நாராயணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *