குமரேசன் VII A

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 12,097 
 

‘குமரேசன் இன்னிக்கு ராத்திரி கத்திக்கிட்டே ஓடுவான்!’

‘நிச்சயமா மாட்டான். அவனுக்கு சரியாயிடுச்சு!’

‘நேத்துதானே ஓடினான். இன்னிக்கு நிச்சயமாத் தூங்குவான். நீ வேணாப் பாரேன். என்ன பெட்?’

‘ரெண்டு சப்பாத்தி!’

இப்போதெல்லாம் எங்கள் ஹாஸ்டலில் அடிக்கடி நாங்கள் பெட் கட்டிக்கொள்வது, ‘இன்னிக்கு ராத்திரி குமரேசன் அலறிக்கிட்டே ஓடுவானா?’ என்பதுபற்றித்தான். நீளமான எங்கள் ஹாஸ்டல் பெட்ரூம் ஹாலில் வரிசையாகப் படுக்கைகள் விரித்துப் படுத்துக்கொள்வோம். 8.50-ல் இருந்து 9 மணிக்குள் படுக்கையை விரித்துப் படுத்துவிட வேண்டும். மூச்சு விடுவதைத் தவிர, எந்தச் சத்தமும் இருக்காது. பெரிய வார்டன் நூல் பிடித்த மாதிரி இருக்கிற வரிசைகளுக்கு நடுவில் நடந்து வருவதைத் தவிர, எந்தச் சத்தமும் கேட்காது. மிஞ்சிப் போனால், மின் விசிறிகளின் கிறீச் சத்தம் கொஞ்சம் கேட்கும்.

இதற்கு நடுவில்தான் இந்த பெட் கட்டல்கள். பெட் பெரும்பாலும் சப்பாத்திதான். ஹாஸ்டலில் சப்பாத்தி குருமாவுக்குத்தான் நிறைய டிமாண்டு.

இப்போது குமரேசன் இரவு ஓடுவானா இல்லையா என்பதற்குக்கூட சப்பாத்திதான் பெட். என் படுக்கையில் இருந்து நாலாவது இடம்தான் குமரேசன் படுக்கும் இடம். அதில் இருந்து பத்து படுக்கைகள் தள்ளி அடுத்தடுத்த இடத்தில்தான் இப்போது பெட் கட்டிக்கொண்டு இருக்கிற சந்துருவும் மணியும் படுத்திருப்பார்கள். இவர்கள் தவிர, இன்னும் சிலரும் இந்த பெட் வைத்திருக்கக் கூடும். முந்தாநாள் பெட் கட்டி ஜெயித்த தைரியத்தில்தான் சந்துரு மீண்டும் பெட் கட்டி இருக்கிறான்.

இது எதுபற்றியும் தெரியாமல் கண்களை மூடி ஜெபித்துவிட்டு, கண்ணாலேயே எனக்கும் பக்கத்து நண்பர்களுக்கும் குட் நைட் சொல்லிவிட்டுப் படுத்தான் குமரேசன்.

எனக்கு நல்ல ஃப்ரெண்ட் குமரேசன். எல்லாருக்கும் குமரேசனை ரொம்பப் பிடிக்கும். ரொம்பப் பாசமாகப் பழகுவான். ஊரில் இருந்து வரும்போது, ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது வாங்கி வருவான். யாரிடம் சண்டை போட்டாலும், அவனே ‘ஸாரி’ சொல்லி சமாதானம் செய்வான்.

நான் அவனைவிட ரெண்டு கிளாஸ் பெரியவன் என்பதால், என்னை அண்ணா என்றுதான் கூப்பிடுவான். படிப்பு, விளையாட்டு இரண்டிலும் கெட்டி. அழகாக எழுதுவான். இலக்கிய மன்றம், ஆண்டு விழா இப்படி எந்த விழாவுக்கும் போர்டில் ஆர்ச் மாதிரி வரைந்து எழுதுவது அவன்தான்.

முறுக்கு, சீடை, தட்டை என எது வாங்கினாலும், எல்லாருக்கும் கொடுப்பான். ஸ்டடி ஹாலில் பேசுகிறவர்கள் பெயர்களை எழுதி வார்டனிடம் கொடுப்பதைத் தவிர, மற்ற எல்லா விஷயத்திலும் குமரேசனை எல்லாருக்கும் பிடிக்கும்.

ஹாஸ்டலில் முக்கியமான பதவி என்பது ராத்திரி பிரேயர் சொல்லும் பொறுப்புதான். குமரேசன் நல்ல பையன் என்பதால், அந்தப் பதவிகூட அவனுடையதாக இருந்தது. கெட்ட கனவு வரக் கூடாது, தூக்கத்தில் உளறக் கூடாது… இப்படி ஒவ்வொருத்தரும் அந்த பிரேயரில் வேண்டிக்கொள்வோம். தூக்கத்தில் கிரிக்கெட் விளையாடுகிற காட்டான் சுரேஷ், அதிர்ந்து கத்துகிற சரவணன், ‘அய்யோ… அம்மா… அடிக்காதீங்க’ என்று புலம்புகிற புளுகு மூட்டை கணேசன்… இப்படி தூங்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.

இவர்களை எல்லாம் மறுநாள் காலை கிண்டல் செய்யும்போதுகூட, குமரேசன் அவர் களுக்காக அனுதாபப்படுவான். அப்படிப் பட்ட குமரேசன், ராத்திரி ஓடுவானா இல்லையா என்று பெட் கட்டுகிற அளவுக்கு மாறிப்போனது சமீப நாட்களில்தான்.

படுப்பதற்கு முன் தினமும் பர்ஸைத் திறந்து அம்மா போட்டோவைப் பார்க்காமல் தூங்க மாட்டான் குமரேசன். காலையில் எழுவதும் அப்படித்தான். அந்த பர்ஸில் இருக்கிற அம்மா போட்டோவைப் பார்த்துச் சிரிப்பான். பரீட்சைக்குப் போகும்போது, இன்னிக்குக் கட்டாயம் தமிழ் வாத்தியார் அடிப்பார் என்று தெரிகிறபோது, புதன் கிழமை கலர் டிரெஸ் போடும்போது… இப்படி எல்லா நேரத்திலும் அம்மா போட்டோவைப் பார்த்துக்கொள்வான்.

ஒருநாள் ஸ்டடி ஹாலில் அவன் பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்துவிட்டு, ‘ஸ்டடி ஹால் லீடரே இப்படிப் பண்ணலாமா?’ என பெரிய வார்டன் முட்டி போடவைத்துவிட்டார். அப்போதுகூட பர்ஸைத் திறந்து அவன் அம்மாவிடம் ஏதோ பேசினான் குமரேசன்.

எல்லாரையும்போலவே அவனுக்கும் அவன் அம்மாவை ரொம்பப் பிடிக்கும். ‘அம்மா இதை உனக்கு குடுக்கச் சொன்னாங்க!’ என்று கவரில் கட்டிய பலகாரத்தில், எங்களுக்கும் நிறையக் கொடுப்பான். அதனால் எங்களுக்கும்கூட குமரேசன் அம்மாவைப் பிடிக்கும்.

ஒருநாள் ஸ்டடி ஹாலில் இருந்தபோது, அவனை பெரிய வார்டன் கூப்பிட்டார். ஐந்து நிமிடங்கள் கழித்து ஒரு மாதிரி குழப்பமான, பதற்றமான முகத்துடன் வந்தான் குமரேசன். டெஸ்க்கை மூடிவிட்டு அவனையும் அழைத்துக்கொண்டு கிளம்பி னார் பெரிய வார்டன்.

ஸ்டடி முடித்துவிட்டு வெளியே வந்தபோது கார் ஒன்று நின்று இருந்தது. அதே குழப்பமான முகத்துடன் குமரேசன் அதில் உட்கார்ந்திருந்தான். அவனை அழைத்துப் போக யாரோ வந்திருந் தார்கள். அவன் அம்மாவைக் காணோம்!

சாப்பாட்டு ரூமில் இருக்கும்போதுதான் தகவல் வந்தது. ‘உனக்குத் தெரியுமா… குமரேசன் அம்மா செத்துப்போயிட்டாங்களாம்டா’ என்று காட்டான்சுரேஷ், சுகுமாரிடம் சொல்லியது என் காதில் விழுந்தபோது, ரொம்பவே கலங்கிப் போனேன். திரும்பிப் பார்த்தபோது, அதே குழப்பமான முகத்துடன் குமரேசன் காரில் போய்க்கொண்டு இருந்தான்.

வரும்போது எல்லாம் ஒரு பத்து பேருக்காவது சமைத்து எடுத்து வருவார் குமரேசன் அம்மா. ‘தம்பிய நல்லாப் பார்த்துக்கப்பா!’ என்று என்னிடம் அடிக்கடி சொல்வார்.

காலாண்டு, அரையாண்டு லீவில் எனக்கு குமரேசன் கடிதம் எழுதும்போதுகூட, அவன் அம்மாவும் எனக்கு நாலு வரி எழுதுவார். மாதத்தில் இரண்டு முறையாவது அவன் அம்மா ஹாஸ்டலுக்கு வந்துவிடுவார். பெரிய பொட்டு, திருத்தமாகக் கட்டிய சேலை, நடுவில் வகிடெடுத்து நேர்த்தியாகச் சீவிய தலை என்று பார்க்கும்போதே பாசமான அம்மா என்று தோன்றும்.

ஃபுட்பால் கிரவுண்டுக்குப் பக்கத்தில் இருக்கிற புல்வெளியில் ஜமுக்காளம் விரித்து, சமைத்த எல்லாவற்றையும் எல்லாருக்கும் பரிமாறுவார். நான் உட்பட பத்துப் பேராவது சாப்பிடுவோம். ‘உனக்குப் புடிக்கும்னுதாய்யா இதைச் செஞ்சேன். இன்னும் ரெண்டு சாப்பிடு!’ என்று எனக்குப் பிடித்த கோலா உருண்டை இரண்டு வைப்பார்.

அம்மாவின் மடியில் ஒரு கையை வைத்துக்கொண்டு ஒருக்களித்தவாறு சாப்பிடுவான் குமரேசன். கிளம்பும்போது எல்லாம் அம்மாவுக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்கும். நான்கூட, ‘ஏம்மா சின்னப் புள்ளை மாதிரி அழுறீங்க?’ என்று பெரிய மனுஷன் மாதிரி கேட்பேன்.

‘கைக்குள்ளயே வளர்ந்த புள்ளைப்பா. ஒரே புள்ள வேற… அதான்!’ என்பார். காரில் ஏறும்போதும் மறக்காமல், ‘தம்பிய நல்லா பார்த்துக்கப்பா!’ என்பார். எனக்கு என்னைப் பெரிய மனுஷன் மாதிரி தோணும். ‘நீங்க கவலைப்படாமப் போங்கம்மா’ என்று அனுப்பிவைப்பேன்.

ஒரு பெரிய பை நிறைய அம்மா கொண்டுவந்த பட்சணங்கள் எல்லாவற்றையும் சாயந்தரத்துக்குள் எல்லாருக்கும் கொடுத்துவிடுவான். எங்களுக்கு, வார்டன், ஹெட் மாஸ்டர் எல்லாருக்கும் குமரேசன் அம்மாவை ரொம்பப் பிடிக்கும். குமரேசன் லெட்டர் எழுதும்போதுகூட நாங்களும் ரெண்டு ரெண்டு வரி எழுதுவோம்.

அம்மாவின் சாவுக்குப் போய்விட்டு, 15 நாட்கள் கழித்துத் தான் வந்தான் குமரேசன். நாங்கள் எல்லாம் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டாலும், அவன் ரொம்ப இயல்பாகத்தான் இருந்தான். மொட்டை அடித்து ஆள் கொஞ்சம் மாறி இருந்தான். மற்றபடி அவனிடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.

பெரிய வார்டன் ஹவுஸ் லீடர்களை அழைத்து, ‘குமரேசனை நாம எல்லாம் நல்லாப் பார்த்துக்கணும். அவன் சின்னப் பையன். அம்மா இல்லாம இருக்கோம்கிற நினைப்பே அவனுக்கு வரக் கூடாது’ என்று சொன்னார்.

அன்று இரவு எல்லாரும் படுக்கச் சென்றோம். பிரேயர் முடித்து படுக்கையை விரிக்கும்போது கவனித்தேன். பர்ஸைத் திறந்து அம்மா போட்டோவைப் பார்க்கிறவன், அன்று பிரேயர் மட்டும் சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டான்.

இரவு 12 அல்லது 1 மணி இருக்கும். திடீரென்று அலறல் சத்தம். நீளமான பெட்ரூம் ஹாலில் எதிரொலிக்க…திடுதிடுவென்று யாரோ இருட்டில், ‘அம்மா… அம்மா’ என்று கத்திக்கொண்டே ஓடுகிறார்கள். பயமும் பதற்றமுமாக எழுவதற்குள் அந்த உருவம் படியில் இறங்குவது தெரிந்தது. நான் உட்பட சீனியர் மாணவர்கள் திடுதிடுவென எழுந்து நிதானிப்பதற்குள், அந்த உருவம் அலறலை நிறுத்தாமல் படியில் இறங்கி ஓடியேவிட்டது.

பெரிய வார்டன், ஸ்டோர் பிரதர் எல்லாரும் டார்ச்சுடன் வந்துவிட்டார்கள். லைட்டைப் போட்டுப் பார்த்தால், பாதிப் பேர் பயத்தில் சுவரோடு ஒடுங்கி இருந்தார்கள். யாருக்கும் எதுவும் புரியவில்லை.

திருடன் ஏன் கத்திக்கொண்டே ஓட வேண்டும் என்று யோசிக்கும்போது, ‘பிரதர்… குமரேசனைக் காணோம்!’ என்றான் கணேசன். ஏதோ புரிந்ததுபோல் தடதடவென்று படியில் இறங்கி ஓடினார் பெரிய வார்டன். நான் உட்பட கொஞ்சம் சீனியர் மாணவர்கள் அவர் பின்னாலேயே ஓடினோம்.

ஹாஸ்டலுக்குப் பின் ஒரு பெரிய தென்னந் தோப்பு. அதற்குப் பின்னால் வாழைத் தோப்பு. அதைத் தாண்டி, கொஞ்சம் வயல். அப்புறம் ஒரு பெரிய பாறைக் கிணறு. எல்லாம் எங்கள் பள்ளிக்குச் சொந்தம். ஆனால், அந்தப் பக்கம் யாரும் போனது இல்லை… போகவும் கூடாது. அந்தப் பக்கம் இருக்கிற பாறைக் கிணற்றில் ஒரு பேய் இருப்பதாக ஒரு கதை உண்டு.

‘குமரேசா… குமரேசா’ என்று பெரிய வார்டன் கத்துகிறார். தென்னந்தோப்பை ஒட்டி இருக்கிற சமையல் ஆட்கள் தங்கும் இடத்தில் இருந்து ஓடி வந்த சூசை, ‘பிரதர்… இந்தப் பக்கம்தான் ஒரு ஆள் ஓடினான்’ என்று சொன்னார். தென்னந்தோப்புக்குள் புகுந்து ஓடி மறுபடியும் பெருங்குரலெடுத்துக் கத்தினார் பெரிய வார்டன்.

எனக்குப் பயமும் அழுகையுமாக வந்தது. ‘குமரேசா’ என்று நானும் நண்பர்களும் கத்தினோம். ஒரு பலனும் இல்லை. பெரிய வார்டன் பைத்தியம் பிடித்த மாதிரி வாழைத் தோப்புக்குள் புகுந்து வயல் காட்டுக்குள் வந்தார். காலில் முள் குத்தியது, கையில் குச்சி கிழித்ததுபற்றி எல்லாம் யோசிக்காமல் எல்லாரும் ஓடினோம்.

வயல் வெளியிலும் யாரும் நிற்பதற்கான அறிகுறி இல்லை. வார்டனின் பெரிய டார்ச் லைட் வெளிச்சத்தில் எந்த உருவமும் சிக்கவில்லை. நானும் வருகிறேன் என்று என்னோடு ஒரு ஆர்வத்தில் ஓடி வந்த சுப்பிரமணி, ஒரு கையில் உயிரையும் மறு கையில் என்னையும் பிடித்துக்கொண்டு நின்று இருந்தான். சுற்றிலும் இருட்டு. திரும்பிப் போவது என்றாலும் எப்படி என்று தெரியாது.

ஏதோ யோசனை வந்தவராக பாறைக் கிணற்றுக்குப் பக்கத்தில் போய் உள்ளே டார்ச் அடித்துப் பார்த்தார் பெரிய வார்டன். ஆட்கள் இறங்கிப் போவதற்காகக் கட்டியிருந்த படிகளின் கடைசிப் படியில் ஓர் உருவம் தண்ணீரைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருப்பதைப்போலத் தெரிந்தது.

அந்தக் கிணற்றைப் பார்க்கவே கொஞ்சம் பயமாக இருக்கும். ஏறக்குறைய ஒரு குட்டை மாதிரி ரொம்ப அகலமாக, ஆழமாக, கறுப்பாக இருக்கும்.

பெரிய வார்டன் கையைப் பிடித்துக்கொண்டு நாங்களும் உள்ளே எட்டிப் பார்த்தோம். பெரிய வார்டன் அந்த உருவத் தின் முகத்தில் டார்ச் அடித் தார்.

அது குமரேசன்தான். ஆனால், எந்த உணர்ச்சியும் காட்டவில்லை. பெரிய வார்டன் கொஞ்சம் உரத்த குரலில் ‘டேய் குமரேசா… அங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க? மேல வா!’ என்று டார்ச் அடித்தார். ஒரு பதிலும் இல்லை.

என்னைக் கூப்பிட்டு, ‘குமரேசா வா… பிரேயருக்கு நேரமாச்சுன்னு கூப்பிடு’ என்றார். நானும் அப்படியே கூப்பிட்டேன். லேசாக மேலே பார்த்தானே ஒழிய, எந்தப் பதிலும் இல்லை. அவன் கை கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வழிந்துகொண்டு இருந்தது. உண்மையில் உள்ளே இறங்கிப் போய் கூப்பிட, பெரிய வார்டனுக்கேகூட பயம்தான்.

மறுபடி அரட்டுகிற தொனியில் பெரிய வார்டன் கூப்பிட்டுப் பார்த்தார். புண்ணியம் இல்லை. வேறு வழி இல்லாமல், ஸ்டோர் பிரதர் சொல்லச் சொல்லக் கேட்காமல் மெதுவாகப் படி வழியே உள்ளே இறங்கினார் பெரிய வார்டன்.

பாதி வழியில் நின்று மறுபடி கூப்பிட்டார். குமரேசன் திரும்பி, ‘குட்மார்னிங் பிரதர்!’ என்றான். மேலே என் பக்கத்தில் நின்று இருந்த சுப்பிரமணி ஏறக்குறைய செத்தேபோய்விட்டான். பெரிய வார்டன் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, ‘வா… பிரேயருக்கு நேரமாச்சு’ என்று கூப்பிட்டுக்கொண்டே போய் அவன் கையைப் பிடித்தார்.

திடீரென பல்லை நறநறவெனக் கடித்தவாறே பிரதரை முறைத்துப் பார்த்தான். மேலே இருந்து நாங்கள் எல்லோரும், ‘குமரேசா… வாடா வாடா!’ என்று கத்தினோம். சுப்பிரமணி அழுதேவிட்டான்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை, திடீரென தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான் குமரேசன். பட்டென்று பெரிய வார்டன் அவனைத் தூக்கிக்கொண்டு மேலே ஏறினார். அவன் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அழுதுகொண்டே இருந்தான்.

மேலே வந்தவுடன் நாங்கள் அவனைத் தூக்கிக்கொண்டோம். எங்களுக்குப் பெரிய வார்டன் என்றால் ரொம்பப் பயம். எதற்கும் கலங்க மாட்டார். அவரே கண் கலங்கியபோது, எங்களுக்கும் அழுகை வந்தது. குமரேசன் சின்ன வயதில் இருந்தே இங்கே படிப்பதால், எல்லா பிரதர்ஸுக்கும் அவன் செல்லம்.

தட்டுத் தடுமாறி டார்ச் லைட் வெளிச்சத்தில் பெட்ரூம் ஹாலுக்கு வந்து சேர்ந்தோம். குமரேசன் அழுதுகொண்டே இருந்தான். பெரிய வார்டன் ரூமில் அவன் காயங்களுக்கு டிஞ்சர் போட்டு மருந்து தடவிவிட்டார். நிறையக் கீறல் காயங்கள். குமரேசன் அழுகையை நிறுத்தவே இல்லை. அப்படியே தூங்கிவிட்டான்.

அன்று இரவு முழுவதும் இந்தப் பக்கம் நான், அந்தப் பக்கம் அனீஸ். சுவர் பக்கமாக பெரிய வார்டன் தன் மடக்குக் கட்டிலைப் போட்டுப் படுத்துக்கொண்டார். எப்போது தூங்கினோம் என்று தெரியவில்லை.

யாரோ என்னை எழுப்புவது மாதிரி தெரிந்தது. கால்மாட்டில் குமரேசன் உட்கார்ந்து இருந்தான், அதிர்ந்து போய்ப் பார்த்தேன். ‘அண்ணா, பூச்சி கடிச்சிருக்குண்ணா உடம்பெல்லாம்… பாருங்க!’ என்றான்.

பெரிய வார்டனும் எழுந்துவிட்டார். ‘சரி… சரி, டாக்டரைப் பார்த்து மாத்திரை வாங்கிக்கலாம்!’ என்று அவனிடம் சாதாரணமாகச் சொல்வதுபோல சொன்னார். குமரேசன் ஓடியதில் தொடங்கி அவனுக்கு பேய் பிடித்துவிட்டதாகப் பல கதைகள். ஹாஸ்டல், ஸ்கூல் என்று எல்லா இடத்திலும் அதே பேச்சுதான்.

ஆனால், குமரேசன் எந்தப் பாதிப்பும் இல்லாமல் எப்போதும்போலத்தான் இருந்தான். எல்லோருக்கும் லேசாகப் பயம் இருந்தாலும், ‘அம்மா இல்லை அவனுக்கு’ என்ற எண்ணத்தில், அவன் மீது எல்லோருமே கூடுதல் பாசம் காட்ட ஆரம்பித்துவிட்டோம். பெரிய வார்டன்கூட எங்களிடம் அவனை நல்லாப் பார்த்துக்கணும் என்று அடிக்கடி சொல்வார்.

அதற்குப் பிறகு, பெட்ரூம் வாசலை அடைத்தபடி மூன்று பேர் முறைவைத்துப் படுத்துக்கொள்வோம். வாரத்துக்கு இரண்டு தடவையாவது ‘அம்மா… அம்மா’ என்று கத்திக்கொண்டு குமரேசன் எழுந்து ஓடுவான். ஓடிப் போய் அவனை இழுப்போம். ‘போகாதேடா… போகாதேடா!’ என்று கூச்சலிடுவோம். திமிறுவான், அழுவான்… அப்புறம் அப்படியே தூங்கிப்போவான்.

மறுநாள் காலையில் ரொம்பச் சாதாரணமாக இருப்பான். எல்லாருக்கும் அவன் மீது கூடுதல் கரிசனம் வந்துவிட்டது.

ஒருநாள் சுப்பிரமணி பெரிய வார்டனிடம் போய், ‘குமரேசனுக்கு பேய் பிடிச்சிருக்கா பிரதர்?’ என்று கேட்டான். ‘பேய் எல்லாம் ஒண்ணும் கிடையாது சுப்பிரமணி. மனுஷன் மனசுதான்டா பேய்’ என்றார் பெரிய வார்டன். அதற்குப் பிறகு, சுப்பிரமணிக்குக்கூட குமரேசன் மீது கூடுதல் பாசம் தான்.

‘நான் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்’ என்று அவன் மாமா வந்து நின்றபோதுகூட, ‘பசங்களோட பசங்களா இருந்தா எல்லாம் சரியாயிடும். அவனைக் கவனிச்சுக்கிறதுக்கு நாங்க இவ்வளவு பேர் இருக் கோம். கவலைப்படாதீங்க’ என்று சமாதானம் சொல்லி அனுப்பிவைத்தார் பெரிய வார்டன்.

அவர் போகும்போது, ‘தங்கச்சி சாகுறதுக்கு ரெண்டு நாள் முன்னாடிகூட உன்னைப்பத்திதான் பேசிக்கிட்டு இருந்துச்சுப்பா!’ என்றார் என்னிடம். ‘அவனுக்கு கோலா உருண்டை குழம்புவெச்சு எடுத்துப் போகணும்னு சொல்லுச்சுப்பா’ என்று அழுதுகொண்டே சொன்னார். எனக்கும் அழுகை வந்தது.

மாமா போன பிறகு, குமரேசனை உடை மாற்றும் அறையில் பார்த்தோம். ‘அண்ணே, எனக்கு பெரிய வார்டன்கிட்ட சொல்லி ஒரு உதவி பண்ணுவியா?’ என்று கேட்டான். அவன் டிரங்குப் பெட்டியைத் திறந்து, அதில் இருந்து ஒரு சார்ட் பேப்பரை எடுத்து நீட்டினான். பென்சிலால் அவன் அம்மாவின் படத்தை அப்படியே வரைந்திருந்தான்.

அதுவரை குமரேசன் வரைந்து நான் பார்த்தது இல்லை. அழகாக எழுதுவான் என்பது தெரியும். ‘அண்ணா, பெரிய வார்டன் கிட்ட சொல்லி, ஸ்டோர் பிரதர் ஊருக்குப் போறப்போ இதை ஃப்ரேம் பண்ணி தரச் சொல்றியா?’ என்று கேட்டான்.

ரொம்ப நாளைக்குப் பிறகு, அவன் அம்மாவைப்பற்றிப் பேசியது அன்றைக்குத்தான். ‘கட்டாயம்டா!’ என்று சொல்லிவிட்டு, அதை என் டிரங்க் பெட்டிக்குள் வைத்துக்கொண்டேன்.

திடீரென்று அருகில் வந்து நின்றவன், ‘எனக்கு எங்க அம்மா ஞாபகமா இருக்குஅண்ணே!’ என்று அழுதான். அவன் அம்மா இறந்த பிறகு இன்றைக்குத்தான் இப்படி ஒரு வார்த்தை சொல்கிறான் குமரேசன்.

சுற்றி இருந்த எல்லாருக்குமே மனசு கனமாக இருந்தது. சுப்பிரமணிதான் ‘நாங்கல்லாம் இருக்கோம்டா’ என்று அழுதுகொண்டே அவனைத் தேற்றினான். ‘இன்னிக்கு என் சப்பாத்தியை உனக்குத் தரேன்டா… அழாதடா!’ என்று சந்துரு ஆறுதல்படுத்தினான்.

‘பேரன்ட்ஸ் – டீச்சர்ஸ்’ மீட்டிங் முடிந்து வெளியே வந்தார் பெரிய வார்டன். அன்றைக்கு ஹாஸ்டல் ஜெகஜோதியாக இருக்கும். எல்லாருடைய அம்மா – அப்பாவும் வருவார்கள். பிரியாணி சாப்பாடு, நிறையத் தின்பண்டங்கள் கிடைக்கும். குமரேசனுக்காக அவன் மாமா வந்திருந்தார். பெரிய வார்டனும், அவரும் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.

நாங்கள் பேஸ்கட் பால் கோர்ட் அருகில் நின்று பேசிக்கொண்டு இருந்தபோது, டிரங்க் பெட்டி சகிதம் குமரேசனை அவனது மாமா வம்படியாக இழுத்து வந்துகொண்டு இருந்தார்.

‘பேரன்ட்ஸ் – டீச்சர்ஸ்’ மீட்டிங்கில் ஒரே சண்டையாம். ‘பேய் பிடிச்ச பையனோட எங்க பிள்ளைகள் எப்படி இருக்கும்?’ என்று அம்மா – அப்பாக்கள் சத்தம் போட்டார்களாம்.

குமரேசனை இழுத்து அவன் மாமா காரில் ஏற்ற முயன்றபோது, பக்கத்தில் நின்றிருந்த பெரிய வார்டனின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு ‘நான் போகலை பிரதர்’ என்று சத்தமாக அழுதான் குமரேசன். பிரதர் வானத்தைப் பார்த்தபடி பேசாமல் நின்றார்.

நாங்கள் எல்லாரும் ஓடினோம். என்னைப் பார்த்தவுடன், ‘அண்ணே, நான் போகலண்ணே… வேணாம்னு சொல்லுங்கண்ணே’ என்று கத்தினான். எல்லாரும் காரைச் சூழ்ந்து நிற்கிறோம். ஒவ்வொரு முறையும் அம்மா என்று கத்திக்கொண்டு ஓடும்போது, ‘போகாதடா’ என்று பிடித்து இழுக்கிற எல்லாரும் அப்படியே நின்றோம். யாராலும் எதுவும் சொல்ல முடியவில்லை.

பெரிய வார்டன், நான் மற்ற நண்பர்கள் யாரும் உதவிக்கு வரப்போவது இல்லை என்று குமரேசனுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. கடைசியாக கார் கதவைப் பிடித்துக்கொண்டு வானத்தைப் பார்த்து, ‘அம்மா… மாமாகிட்ட சொல்லும்மா, நான் இங்கயே இருக்கேம்மா’ என்று குமரேசன் கத்தியபோது, அழுகையை அடக்க முடியாமல் வேகமாக நடக்க ஆரம்பித்தார் பெரிய வார்டன்.

மாமா அவனை காருக்குள் ஏற்றிவிட்டார். திடீரென நினைப்பு வந்தவனாக கூட்டத்தை விலக்கிக்கொண்டு உடை மாற்றும் அறைக்கு ஓடினேன். குமரேசன் ஆசை ஆசையாக வரைந்த அவன் அம்மாவின் படத்தை எடுத்துக்கொண்டு வருவதற்குள் கார் கிளம்பிவிட்டது. முடிந்த வரை பின்னாலேயே ஓடினேன். என்னைப் பார்த்தவாறே, ‘அம்மா… நான் இங்கேயே இருக்கேம்மா’ என்று பெருங்குரல் எடுத்துக் கத்தினான் குமரேசன்.

மெயின் கேட்டைத் தாண்டி வெளியே போனது கார். ஆத்திரமும் இயலாமையும் அழுத்த, மனசு உடைந்து அழுதேன்.

பெரிய வார்டன் அடிக்கடி சொல்வது காதில் கேட்டது, ‘மனுஷன் மனசுதான்டா பேய்!’

– ஜூன் 2011

Print Friendly, PDF & Email

1 thought on “குமரேசன் VII A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *