கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2021
பார்வையிட்டோர்: 2,952 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஒரே ஒரு ஊரில்”

என் மனைவி கைப்பிள்ளைக்குக் கதை சொல்ல ஆரம் பிக்கிறாள். அவனைப் பால் மறக்கடிக்க என்னென்ன வித்தைகளோ பத்து நாட்களாக நடக்கின்றன.

“ஏன் மன்னி?” என் தம்பி குறுக்கு வெட்டினான்; விடு முறைக்கு வந்திருக்கிறான். “ஓரே ஒரு ஊர்தான் உண்டோ ? உலகத்தில் எத்தனை ஊர்கள் தெரியுமா?”

“எத்தனை இருந்தால் என்ன? எல்லாம் ஒரே உலகத்தைச் சேர்ந்தவைதானே! உலகங்கள் எத்தனை தெரியுமா?”

“எத்தனை?” என் தம்பி சற்று மிரண்டு போனான். அவன் பாடங்கள் இன்னும் அவ்வளவு தூரத்துக்கு வரவில்லை.

“எத்தனை எத்தனையோ?” அவள் குரல் மூச்சாய் ஒடுங்கிற்று. “ஆனால் கதை என்னவோ ஒன்று தான்”

“இல்லை; எத்தனை எத்தனையோ கதைகள்-“

“இல்லவே இல்லை -” அச்சீறல் கேட்டுத் தலை நிமிர்ந்தேன். “அத்தனையும் ஒரே கதையின் அத்தனை துவக்கங்கள் தாம்.”

“துவக்கங்களும் எத்தனையோ . முடிவுகளும் எத்தனை எத்தனையோ “

“ஸேது, கதையைக் கெடுக்காதே.”

அவள் குரலில் அழுகை துளும்பிற்று.

“என்ன மன்னி?”

தலையைத் திருப்பிக் கொண்டாள்.

நான் சமாதானம் பண்ண முயன்றேன்.

“ஒருத்தரும் ஒன்றைக் கெடுக்க முடியாது. அது உள்ள படியே தான் இருக்கிறது. ஒண்ணு ஒன்பது ஆவது ஒன்பது ஓராயிரம் ஆவது எண்ணங்கள் தான். ஆகையால் ஒன்று என்கிற எண்ணம் தான் கெடுபடுகிறது.”

“எண்ணம் முக்கியம் இல்லையா? உண்டு – இல்லை பண்ணுவதே அது தானே!”

“எண்ணுவதற்கு எண்ணேயில்லை. எண்ணுவதைவிட உள்ளதே முக்கியம்; அப்பப்போ உள்ளது. அதைச் சுற்றிச் சுற்றித்தான் எண்ணம்.”

“எண்ணம் இல்லாததையும் தான் சுற்றுகிறது” அவள் குரலில் படர்ந்த பகை லேசாய்க் கசந்தது.

“என்னண்ணா மன்னியும் நீயும் பேசறேள்?”

வண்டியின் அறைகூவல் தூரத்திலிருந்து நெருங்கிக் கொண்டே வந்து, நெஞ்சைக் கிழித்தது. சோம்பல் முறித்த வண்ணம் எழுந்தேன்.

“குண்டலி!”

“குண்டலியா? அது யார்? பேரே புதுவிதமாய் -“

நான் ஒன்றும் பேசவில்லை, அவள் முகம் கறுத்தது. குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு விடு விடென உள்ளே சென்றாள்.

வண்டி நெருங்கிவிட்டது.

நான் ஸ்டேஷனுக்குக் கிளம்பினேன்.

***

நிமிஷத்தின் நீட்டமே வருடங்கள் என்பதற்குச் சான்றென இங்கு நேரம் நின்ற இடத்திலேயே நிற்கின்றது.

ஸ்டேஷனுக்குப் பின்னால் ஒரே வரிசையில், இட வசதியில்லாத அதே மூன்று வீடுகள். ஒன்று அநேகமாய்ப் பூட்டியே கிடக்கும். மூன்றுக்கும் பொதுவாய் ஒரு கிணறு, இதைவிட உப்பான இடங்களிலிருந்து வந்த ஸ்டேஷன் மாஸ்டர் குடும்பங்களுக்கு இதன் ஜலம் கரும்பு!

கண்ணுக்கெட்டியவரை வயல் பரப்புகள். ஏரிக்கரை மீதினில் காவல் நிற்கும் பனை மரங்கள். அவைக்குமப்பால் எட்ட எட்ட நகர்ந்துகொண்டே சமயப்படி சிரிக்கும். சினக்கும், குமுறும் வான் விளிம்பு.

ஓரிரவு –

என்மேல் கைப்பட்டு விழித்துக்கொண்டேன். ஓருருவம் என்மேல் குனிந்தது. முகம்கூட நன்கு தெரியவில்லை. கும்மிருட்டு.

தவளைகளின் மூச்சுவிடாத பாட்டினிடையே அத் துடன் இழைந்தாற் போலேயே இன்னொரு சப்தமும் எழுந்தது.

“கூ –கூ- கூ-!”

என்னென்று புரியவில்லை. ஆனால் என் தலைமயிர் விறைத்தது.

“அம்பி, பயமாயிருக்கா? பயப்படாதே!” என் மார் மேல் அம்மாவின் கை விரல்கள் வெட வெடத்தன.

“என்னம்மா அது?”

“யாரையோ இருட்டில் மடக்கிண்டு அடிக்கிறா.”

அம்மா எழுந்து சென்று சுவாமி விளக்கை ஏற்றி நமஸ் கரித்தாள். அவளுக்கு அப்பாவைப்பற்றிக் கவலை. அப்பா ஸ்டேஷனில் இருந்தார். நைட் டியூடி.

“கூ-கூ-!”

அம்மா செவியைப் பொத்திக்கொண்டாள். என்னிடம் வந்து கையை நீட்டினாள். விழிகள் வழிந்தன.

“அம்பி அடித்துக்கொடு. நீ பெரியவனாகி வேறு எந்த உத்தியோகத்துக்குப் போனாலும் இதுக்கில்லேன்னு எனக்குக் கை தட்டிக்கொடு”

நான் தைரியமூட்ட முயன்றேன். “இது இல்லா விட்டால் எப்படியம்மா, காசு இல்லாமல் காசிக்கும் கன்னியாகுமரிக்கும் போக முடியும்?”

“என்ன வேண்டிக் கிடக்கு?” அம்மா வயிற்றைப் பிசைந்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாயலைந்தாள். (அதற்குக் கூட இடம் பற்றாத விடுதி!) “ஒரு நிமிஷ நிம்மதி யுண்டா? மனுஷாளுக்குத் தூக்கம் கெட்டால் ஆயுசுலே அப்புறம் என்னடா இருக்கு? இதென்ன குருவிக்காரன் குடுகுடுப் பைக்காரன் பிழைப்பு – அடிக்கடி டேரா தூக்கிண்டு? குழந்தைகளின் படிப்பு பாழ்! அண்டை அசலார் முசுமாற்றம். பொழுதுபோக்கு உண்டா? சுடலைக்கழுகு மாதிரி தனியா இடத்தைக் காத்திண்டு என்ன பிழைப்பு இது? சம்பளமும் கட்டை; ஆனால் மண்டைமேல் கர்ணம் தப்பினால் மரணப் பொறுப்பு -“

அம்மா சொன்னது முழுதும் மனம் வாங்கிக்கொண்டதோ இல்லையோ? அந்த ஓலம் மறுபடியும் எழக் காத்திருந்தேன். ஆனால் கேட்கவில்லை.

கேட்டால்தான் நாங்கள் என்ன செய்ய முடியும்? ஒருவர் உதவிக்குப் போக முடியுமா?

அவரவர் விதி அவரவரின் புனை தல் என்பது மற்றெங்கினும் இங்குதான் கண்கூடு.

காலடியில் மணியாங்கற்கள் நொறுங்கின. ‘சரக்சரக்’ கெனும் மிதி சப்தம்கூடப் பழமையை ஞாபகமூட்டிற்று. அதோ மூன்று காலில் பாழ் மண்டபம் – அப்படியே தான் இன்னும் நொண்டுகிறது. இப்போது என் தம்பிபோல், நான் விடுமுறைக்கு வந்திருந்த அந்த நாளைக்கும் இன்றைக்கும் வித்யாசம் ஏதும் தெரியவில்லை. அன்றே இன்றையுமிருப் பின் இங்கு அது ஆச்சரியமில்லை. காலடியில் நீலமலர் சிரித்தது.

குனிந்து இதழ்களைத் தொட்டேன். பத்து வருடங் களுக்கு முன்னைய நெஞ்ச நெகிழ்ச்சியில், இதோ இதே இடத்தில் இதுமாதிரியே குனிந்து தொட்ட அதே மலர் தான்.

கம்பி வேலியுள் நுழைந்து தாண்டு கையில் காலை யிடறும் அதே கல், மண்ணின் புதைவினின்று முண்டிற்று. ஒவ்வொரு தடவையும் அப்பா தலையிலடித்துக் கொள்வார்.

அப்பா போய் அவருக்குப்பின் வேண்டிய பேர் வந்து போய், உலகத்தின் உருண்டைக்கு இன்னொரு அத்தாட்சி யாய் நானும் என் அப்பாவின் இடத்திற்கு இங்கு மீண்டா யிற்று. ஆனால் இதுவரை ஒருவருக்கேனும் அந்தக் கல்லைப் பெயர்த்தெடுக்கத் தோன்றியதில்லை.

வண்டி ஸ்டேஷனில் வந்து நின்று புகைந்து கொண்டிருந்தது.

‘கார்டு’ பச்சைக் கொடியால் தொடை தட்டியபடி பொறுமையிழந்து நின்றார்.

“என்ன ஸார், ஒரு நாளைப் பார்த்தால் போல் வண்டி சமயத்துக்கு எங்கேயோ போயிட றீங்க! எளுதிப் போட்டுட வேண்டியது தான்னு தோணுது! நீங்கள் எல்லாம் அனாவஸ்யமாயிருங்க. என் மண்டை உருண்டால் உங்களுக் கென்ன வந்தது?”

வண்டி வளைவில் மறையும் வரை அதையே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

நாள் முழுவதும் இங்கு இறங்குவோரையும் ஏறுவோரை யும் ஒரு கையில் அஞ்சு விரலில் எண்ணிவிடலாம்.

ஸ்டேஷனின் பேர்ப்பலகை நட்டு நிற்குமிடத்திலிட்ட பெஞ்சின் மேல் ஒரு உருவம் தெரிந்தது. யாராவது இறங்கினார்களா? டிக்கட் இல்லாமல் ‘டிமிக்கி’ கொடுக்கக் காத்திருக்கிறானா?

இரண்டடி எடுத்து வைத்ததும் என் மனைவியென்று கண்டேன். அவளை விளிக்க உயர்ந்ததையை ஒடுக்கிக் கொண்டேன்.

‘கார்டு’ டன் சச்சரவில் நான் மானமிழந்து நிற்பதைக் கண்டு கொள்ளாது அங்கேயே நாசூக்காக நின்றுவிட் டாளோ? வந்த சிரிப்பையடக்கிக் கொண்டேன். ஏனெனில் எங்களிடையில் ஒருவருக்கொருவர் மனம் நளினம் கண்ட நாட்கள் கடந்தாகிவிட்டன. அவரவர் மனத்தில் அவரவர் புழுங்கும் நிலையில் இப்போதிருந்தோம். தன் யோசனை களில் ஈடுபடத் தனிமைக்கு வந்திருக்கிறாள். பாவம்;

அவளை ஏன் கலைக்க வேண்டும்?

இந்தண்டை வேப்பமரத்தடிப் பெஞ்சில் உட்கார்ந்தேன்.

நான் இங்கே – அவள் அங்கே . கணவன் மனைவியே ஆயினும் நாங்கள் வாழ்வின் வழிப்போக்கர்கள். அவரவர் விதியின் புனைதல் அவரவரதே எனும் முறையில் நாங்கள் இருவரும் முற்றிலும் அந்நியரே என்பதற்கு இதைவிட ருஜு எது? என் விதியுடன் அவள் விதி பிணைக்கப்பட்டிருப்பது அவள் விதிவந்த வழி. ஒற்றுமையாமோ?

பயல் தூங்கியிருப்பான். அதான் கொஞ்சம் ஓய்வா யிருக்கிறாள்.

மூன்று, எவர் ஐதீகத்திலேயும் ஒரு ஆரம்பத்தையோ முடிவையோ நிறுவும் முக்யமான எண் எனக் கருதுகிறேன்.

“One -Two – Three – Off”

“ஒரு தரம் ரெண்டு தரம் மூணு தரம்- விட்டுட்டேன்!”

“ஜலமும் மூணு பார்க்கும்!”

மூன்று பெற்றிடினும் அவ்வாறுதான். கணவன் மனைவி யுறவில் ஒரு கட்டத்தின் முடிவு; இன்னொன்றின் ஆரம்பம். அம்சங்களே மாறுகின்றன. ஒருவர் மற்றவரைப் பற்றித் தெரியப் பாக்கி ஏதுமில்லை. புதுமையின் வியப்பு மலர்ந்து. கசங்கி, இறக்கை விரித்து, ரகசியமிழந்து, இதழ்கள் உதிர்த் தாயிற்று. நாரின் மணத்தை நம்பிய நாட்கள் எவ்வரை நிஜத்தை நம்பியவை, பொய்யில் ஏமாந்தவை?

எனக்குத் தோன்றும் இதே எண்ணங்கள் தாம் அதோ அங்கே அவளுக்கும் தோன்றுகின்றன. இல்லேல் நான் இங்கே யும், அவள் அங்கேயுமாய், அவரவர் வழியில் ஏன் தனித் திருக்கிறோம்?

கண்ணெட்டிய வரையும் அப்பாலும் தண்டவாளம் எங்களைச் சிறையிட்டது. வான் கிண்ணமும் மூடி உள்ளே மாட்டிக் கொண்டோம். கிண்ணங்கள் ஒட்டிய இடம்விட்டுப் போகாமல் பட்டமிட்டாற்போல், தண்டவாளம் சுற்றி ஓடிற்று. வேளாவேளைக்கு வண்டிகள் பாரா வந்து போயின.

இதோ இன்னொன்று வருகிறது. இது பழைய நண்பன்.

ஆனால் இது இங்கு நிற்காது. பத்து வருடங்களுக்கு முன் நின்று கொண்டிருந்தது. ஆயினும் அதிகாரிகள் கதி களையும் நேரங்களையும் அப்போதைக்கப்போது மாற்றும் அட்டவணையில் இதற்கும் அவசரம் வந்துவிட்டது. தன் வயது முடியுமுன் தண்டவாளத்தின் முடிவு காணும் வேகத் தில் விரைகின்றது, இலுப்பந்தோப்பு வளைவில் அது வெளிப்பட்டதும் என்னையுமறியாமல் எழுந்து நிற்கிறேன். ஏன் இருப்புக் குதிரை என்கிறார்கள்? சிங்கம் என் றிடில் இன்னும் தகுமோ? சிங்கத்திலும் சிங்கம் கிழட்டுச் சிங்கம்! என்ன தான் சுமையை இழுக்க முடியாதபடி, இழுத்து வந்தாலும், வயதின் புழுதி என்னதான் ஆழமாய்ப் படிந் தும், அதன் கம்பீரத்தை எது அடக்க முடியும்? அந்தச் சுமையும் புழுதியுமே கம்பீரத்தைப் பெருக்குகின்றன.

சம்சாரியை விடாது அவனைப் பிடித்துக்கொண்டு தொங்கும் அவன் உழலல்கள் போலும் வண்டிகள் அதைப் பின் கவ்வித் துரத்துகின்றன. வெல்லக் கட்டிமேல் மொய்த்து ஊறும் ஈ எறும்புகள் போல் நஞ்சானும் குஞ்சானு மாய் முகங்கள் பெட்டியிலிருந்து எட்டிப் பார்க்கின்றன.

வண்டி சீறிச் செல்கையில் முகங்கள் சலனப்படத்தின் ஓட்டம்போல் கண்முன் வேகமாய்ப் பாய்ந்து செல்கின்றன. ‘பெண்களுக்கு மாத்திரம்’ பெட்டி வாசலில் ஒரு வெள்ளைப் புடவையின் மேலாக்கு காற்றில் கதவுக்கு வெளியே அலை மிதந்தது.

குண்டலங்கள்!

“குண்டலி!”

என் அலறலை எஞ்சினின் வீறல் தன்னோடு அடித்துக் கொண்டு போயிற்று. பித்துப் பிடித்தவனாய், கடைசி வண்டி கண் மறையும் வரை பார்த்தபடி நின்றவிடத்தில் நின்றேன்.

இழுத்துப் பிடித்த மூச்சுப்போல் தண்டவாளம் ஒற்றைத் தன்மையடைந்தது. தன்னைத்தானே துரத்திச் சென்றது.

நொடியில் வருஷங்கள், நொடியில் ஒடுங்கிய சிமிழின் இருள் என் மேல் படர்ந்தது. காலம் கதிகலங்கிய சுழலில் பழையன புதியன பிரிவு அழிந்து, பத்து வருடங்களின் முன் சமயம் இப்போதென என்னைத் தொட்டுச் சென்றதும், உடல், ‘ஜிவ்’ விட்ட ஜன்னியில் செயலில் என்னை மீறியது.

மீறின பின்னே தெரிந்தது.

அலைகள் மெதுவாய் அடங்கலுற்றன. நினைவு, தான் மீண்ட தெளிவில் இழைகளைச் சாவதானமாய்ச்சிக்குப் பிரித்து நெய்ய ஆரம்பித்தது.

அவளிடத்தில் அவளும் நின்று கொண்டிருந்தாள்.

காற்று எழும்பி வேப்பங்கிளைகளை ஊடுருவிற்று. பூக்கள் என் மேல் உதிர்ந்தன. தலையிலும், சட்டை மேலும் ஒட்டிக் கொண்டன.


என் நண்பனே! பத்து வருடங்களுக்குமுன் இல்லாத அவசரம் உனக்கு இப்போது ஏன் எங்கிருந்து வந்தது? அப் போது இப்படியா இருந்தாய்? ஸ்டேஷனை நெருங்க, நடை தளர்ந்து மூச்சுத் திணறி முக்கு திக்காடி அசைந்து நின்று அடிவயிற்றிலிருந்து ‘உஸ் ஸென்று பெருமூச்செறிவாய். இப்போதைவிடப் பத்து வருடங்களுக்குமுன் அப்போது எனக்கு அதிக ஆச்சரியமில்லையா? அமைதியான அழகான இவ்விடம் விட்டு நகர உனக்கு மனம் இல்லை; எனக்குத் தெரியும். அப்பாவும் கார்டும் நெருங்கிய நண்பர்கள். பின் குடுமியின் முண்டலில் அப்பா தலைமேல் , ஸ்டேஷன் மாஸ் டரின் தலைப்பாகை, பட்சி போல் தலைக்குச் சம்பந்தமில்லா மல் உட்கார்ந்திருக்கும்.

டிரைவர் பொறுமையிழந்து ஊதலைக் கிளப்பினான். ஆனால் அதைப்பற்றி இருவருக்கும் அக்கறையில்லை. பேசிக் கொண்டேயிருந்தனர். கார்டு வண்டியில் ஏறிக்கொண்ட பின்னரும் அப்பா உரக்கக் கத்தினார்.

“மறந்து விடாதே. நாளைக் காலைவரைக்கும் தான் பொடியிருக்கிறது. எங்களோடிருந்தால் பரவாயில்லை. பையன் லீவுக்குப் பட்டணத்திலிருந்து வந்திருக்கிறான் -“

“ஏன் ஸார். உங்கள் பிள்ளைக்குக் காப்பிக் கொட்டை வாங்கி வரவா ரயிலோடுகிறது? விடுமய்யா ரயிலை!”

அப்பா துளிக்கூட முகம் மாறாமல், குரல் வந்த ஜன்ன லண்டை போனார்.

“என் பையன் பி.ஏ-க்குப் படிக்கிறான் ஸார், மைக்கல் மஸ்ஸுக்கு வந்திருக்கிறான். எங்கள் குடும்பத்திலேயே இவன் தான் ஸார் முதல் பி.ஏ. நானே பீற்றிக்கொள்கிறேன் என்று நினைக்கப்படாது. Bright Boy! பர்ஸ்ட் பாரத்தி லிருந்து மெரிட் ஸ்காலர்ஷிப்” –

எரிச்சலும் வெட்கமும் என்னைப் பிடுங்கித்தின்றன. வேப்பமரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள முயன்றேன்.

எனக்கெதிரே ‘பெண்களுக்கு மாத்திரம்’ பெட்டி – நெருப்புப் பெட்டி போல் சின்னப் பெட்டி – உள்ளே நாலு பேருக்குமேல் இல்லை. கதவைத் திறந்து கொண்டு மேலாக்கின் கொடுக்கு காற்றில் அலைமிதக்க வாசலில் வந்து அவள் நின்றாள். குண்டலங்கள் –

காலத்தின் உறைக்கல்லில் எல்லாம் தேய்ந்த பின்னர் அக்குண்டலங்கள் மாத்திரம் ஜ்வலிக்கின்றன. ஊன்றிய உள் நோக்கில் எல்லா அங்கங்களும் தன் பின்னணியில் மறைந்த இருளில், அவை மாத்திரம் குதித்துச் சுடர்விடுகின்றன. நடு வகிடினின்று வங்கி வங்கியாய்ச் சரிந்து இரு பக்கமும் தள தளத்த கூந்தல் பொத்திய செவிகளின் அடியிதழ்களில், புயலில் அலையும் ராந்தல்கள் போல், ஆடிச் சிரிக்கின்றன.

அவளைவிட அவைகளே அடையாளப் பதவியை அடைந்துவிட்டன.

எங்கள் கண்கள் சந்தித்தன. ரயில் ஊதி நகர்ந்து, வேகமெடுக்க ஆரம்பித்தது.

என் பார்வையில் மறையும் வரை அங்கேயே நின்றிருந்தேன் .

அக்குண்டலங்கள் நினைவில் எங்கோ தைத்துக் கொண்டாலும் அவளைப்பற்றி நினைத்துக் கொண்டேயிருக்கப் போதுமான ஆதாரம் அப்போது நெஞ்சில் அழுந்தவில்லை. ரயிலில் எத்தனையோ பேர் வருகிறார்கள். போகிறார்கள்.

மறுநாள் அந்த வேளைக்கு அப்பா ஸ்னானம் பண்ணிக் கொண்டிருந்தமையால், கொடி காட்டவும் சாமான்களை வாங்கி வரவும் என்னை அனுப்பினார்.

கார்டுடன் பேசிக் கொண்டிருக்கையில் பிடரியில் குறு குறுவெனும் உணர்ச்சி மீறித் திரும்பினேன்.

வண்டி வாசற்படியில் , கல்லாலடித்தாற்போல் நேற் றைக்கும் இன்றைக்கும் வேறு இல்லாமல் அவள் நின்றிருந்தாள். தீர்க்கமான பார்வை என் கண்களைத் துருவின. எஃகுச் சுருள்கள் போன்ற மயிர் வளையங்களின் அடியில் குண்டலங்கள் ஆடிக் கன்னங்களை முத்தமிட்டன. அவை களின் அடிச் சதங்கைகள் புலி நகங்களாய் நெஞ்சில் புதைந்தன.

வண்டி நகர்ந்தது.

மறையும் வரை அங்கேயே என்னைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

ஸ்டேஷனின் வெறிச்சில், பொட்டலங்களை அணைத்த படிப் பொறி கலங்கி நான் நின்றேன். ஒன்றிரண்டு நழுவிக் காலடியில் வீழ்ந்தன.

வயல்களில் கதிர்களில் பச்சை பளிச்சிட்டது. கதிர்ப் பச்சையின் வாஸனை எங்கிருந்தோ கம்மென்று கிளம்பி இலுப்பத் தோப்பிலிருந்து வரும் பூமணத்துடன் கலந்தது.

“ஓஹோய்!”

களத்து மேட்டிலிருந்து யாரோ யாரையோ கூவியழைக் கிறான். குரல், சுண்டின வெள்ளி போல் எழும்பி ஆகாயத் தில் அந்தரத்தில் தனித்த நாதச் சொட்டாய்த் துளித்து வெற்றியோடு தொங்குகிறது. வேப்ப மரத்தடியில் பூக்கள் உதிர்ந்து ஜமக்காளம் நெய்திருக்கின்றன. வானில் ஒரு பட்சிக் கூட்டம் வியூகம் கட்டிப் பறந்து செல்கின்றது. அம்மா உலையில் அரிசி களைந்து இடுகையில் குறிப்பாய்ப் பாடும் துதி காற்றில் மிதந்து வந்து வாயில் கற்கண்டாய் தித்திக் கின்றது. கிணற்றடியின் சிமிட்டித் தரை, ஜலத்தில் நனைந்து சலவையாய்ப் பளபளக்கிறது. அப்பா அரைத் துண்டுடன், வாளிவாளியாய் இழுத்து மொண்டு மொண்டு விட்டுக் கொள்கிறார். உடலும் முகமும் தக்காளி போல் சிவப்பேறித் தகதகக்கின்றன.

“என்னடா அம்பி உடம்பு சுகமில்லையா? உனக்குப் பிரியமாச்சேன்னு மைசூர் ரஸம் வெச்சேன். சாதத்தைக் கோழி மாதிரி குதறிண்டிருக்கையே? ஏன், ஓட்டலில் சாப் பிடுகிற மாதிரியில்லையா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை அம்மா!”

“என்னமோ அப்பா, நாளைக்கு வண்டி ஏறும் சமயம் எதையாவது வரவழைச்சுண்டு நிக்காதே! உங்கப்பா என் உசிரைப் பிடுங்கியெடுத்துடுவார். பிள்ளைப் பாசம் உனக்குத்தான்னு பண்ணிப் பண்ணி வயத்தில் தனியா வெச்சி அடைச்சயா’ன்னு.”

‘ஒண்ணுமில்லேம்மா.”

என் தொண்டையுள் குண்டலங்கள் மாட்டிக் கொண்டிருக்கின்றன.


நேற்றுப் போனவள் இன்றும் போனதால், போனவள் வருவாள் என்று அவள் வருகையை எதிர்பார்த்து மாலை வண்டிக்குக் காத்திருக்கிறேன்.

வானத்தில் மேகப் பாறைகள் அடைத்துக் கொண்டிருக் கின்றன. மரங்களில் இலை அசையவில்லை. வேர்வையில் மயிர் நனைந்து நெற்றிப் பொட்டில் பிசுக்கென்று ஒட்டிக் கொள்கிறது. மூச்சு திணறுகிறது.

ராந்தல் கம்பத்தின் உச்சியை எட்ட ஒரு வண்டு எகிறி எகிறித் தோற்று, சொத்துச் சொத்தெனத் தரைமேல் விழு கின்றது. விழும் சப்தம் அருவருப்பாயிருக்கிறது. ஓரோரு சமயமும் வீழ்ந்த அதிர்ச்சியின் மூர்ச்சை தெளிய நேரம் ஆயிற்று. ஆயினும் அதன் துள்ளல் ஓயவில்லை.

நீ வாத்தியாரா? நர்ஸா? வேறு எந்த உத்தியோகம்?

உன் குண்டலங்களும் உருவும் உனக்கு நானிட்ட பேருமன்றி உன்னைப் பற்றி வேறெதும் கண்டிலேன். உன் குரலின் விதம்கூட எப்படி என்று அறியேன். ஆயினும் நெஞ்சில் தந்திகள் தாமே அலைந்து செவிதாண்டி, தசை தாண்டி எலும்பின், உள்சத்தில் அவை எழுப்பும் கீதத்தை உணர்கிறேன்.

நெஞ்சில் உன் உருவக் கோடுகளை விளம்பி விளம்பி நான் உன்னில் கண்டதை உள்ளபடி, என்னை ஏமாற்றிக் கொள்ளாது நினைப்பதிலேயே அமைதியும் அடைகிறேன்.

இவ்வமைதியே உனக்கும் எனக்குமிடையில் நான் கண்ட உண்மைக்கு ஒரு சாட்சியோ?

நான் கண்டதை உனக்குச் சொல்லும் பாவனையில் திரும்பத் திரும்ப எனக்குச் சொலிக்கொள்கிறேன்,

உடல் வாளிப்பின் பேரழகன்றி வேறில்லை. மூக்கு எடுப் பாய் ஆரம்பித்ததும், நுனிசற்று விண்டிருக்கிறது. உதடு களின் வார்ப்பு செதுக்காயிருப்பினும் வாய் சற்றுப் பெரிது; கண்கள் பெரியன – ஆயினும் குழிவு.

நெற்றி ஆணினுடையது போல் அகன்று உயர்ந்திருக் கிறது. ஆயினும் இச் சிறுசிறு குறைகளிலிருந்தே தான் முகத் தில் உயிர் கூடச்சிந்துகிறது அவைகளின் நிறைவை மனதின் ஊகத்திற்கு விட்டுவிட்டு முகம் களை கட்டுகிறது. கூடக் குண்டலங்களும் சேர்ந்த மொத்த விளைவு நெஞ்சு விளைவுடன் கலந்து நேர்ந்த ஊமை வலி, என்னை உள் தின்று கொண்டு, நான் என் உள் உள்பட வெறும் வெளிப் பொறுக்காய் நிற்கிறேன், உட்காருகிறேன், அலைகிறேன், துண்டால் மண்டையிலடித்த வண்டென என்னைக் சுற்றித் தட்டாமாலை வருகிறேன்.

தூரத்தில் ஒளி உதயமாகி, அதன் வட்டம் நெருங்க நெருங்கப் பெரிதாகிக்கொண்டே வருகிறது.

இது தான் நீ வரவேண்டிய வண்டி.

ஆனால் வண்டி இருப்புக் கிராதியின் எல்லையுள் கடக் கும் போது தான் அறிகிறேன், இத்தொடருள் இரவில் உன்னைத் தேடுவது எவ்வளவு கடினம்! பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசமில்லையா? இரவில், ரயிலின் அவசரத்தில் இரவு காட்டும் நிழலில், அத்தனை முகங்களும் தனி முகமில்லா ஒரே முகம்தான்.

தோல்வியோ ஆவலோ, என் கைகள் பேரணைப்பில் விரிகின்றன.

இந்த வண்டித்தொடருள், எந்தப் பெட்டியுள் எந்த மூலையில் நீ புதைந்திருந்தாலும் சரி. நீ வந்திருந்தால் என் தழுவலுள் அடங்கவேணுமென்று இந்த ரயிலையே அணைக்கின்றேன்.

உன்னை அணைக்க நினைந்ததற்கு உன்னை மன்னிப்புக் கோரவில்லை. கோரினும், இன்றினும், நினைத்தது. நினைத்தவரை நினைத்தது தான். ஒவ்வொரு எண்ணமும் ஒரு உயிர்த்தாது. நீ வெகுண்டினும் நான் அதற்கு மருண் டினும் அதை நசித்துவிடல் இயலாது.

ஆனால் உன்னை அணைக்க முடியவில்லை. நீ வந்திருந்தால் இந்த ரயிலில் வந்திருப்பாய் என்ற எண்ணத்திற்காக, உன்னைக் காணமுடியாததால் என் பார்வையை விசுவ திருஷ்டியாய்ப் பெருக்கிக் கொண்டாலும், என் அணைப்பு எவ்வளவு அகல விரிந்திடினும் என் கண்ணும் கையும் சூம்பித்தான் போகின்றன. விழியோரங்கள் உறுத்துகின்றன.

ஆயினும் கண்ணின்று வழியும் ஒரு ஒரு துளியும் ஒவ்வொரு சொட்டும் ஒவ்வொரு ப்ரளயத்தைத் தன்னுள் அடக்கிய வித்து.

கடைசிப் பெட்டியின் சிவப்பு விளக்கு என்னைப் பேரிருளில் ஆழ்த்திவிட்டு எட்டி மறைகின்றது.

வானத்தில் பாறைகள் உடைந்துவிட்டன. காற்று எழும்பி, மரங்களில் சீறுகின்றது. மின்மினிகள் புதருக்குப் புதர் மினுக்கின்றன.

அறுந்த நகைபோல் வானில் மணிகள் சிதறி, வாரி யிறைந்து, குற்றுயிரில் ஒளிமூச்சு விட்டபடி கிடக்கின்றன.

பாச்சையினத்தின் பூச்சியொன்றின் ரீங்காரம், நள்ளிர வில் மோஹினியின் கால் சலங்கை போல் கிண்கிணிக்கிறது.

தலையை இரு கைகளிலும் தாங்கிக்கொண்டு வேப்ப மரத்தடிப் பெஞ்சின் மேல் குன்றுகிறேன். நீ வந்ததையும் வராததையும் அறியேன். ஆனால் நேற்றுப் போனாய், நாளை போவையோ? அல்லது விடுமுறை கொள்வாயோ?

என் விடுமுறை முடிந்து நாளை நான் திரும்புகிறேன்.

தண்ணீரும் மூன்று முறை பார்க்குமென்பார்கள். நான் உன்னில் மூழ்கிவிடுவேனோ? அல்லது மூழ்கியேவிட்டேனோ?


சொல்வோருக்குக் கேட்போரைப் பற்றிக் கவலை யில்லை. சொல்வோருக்குச் சொல்லச் சொல்ல அலுப்புமில்லை.

இரவெல்லாம் அம்மா வயிற்றுக்குப் புத்தி சொல்லி மாளவில்லை. “நீ ஓட்டலில் சாப்பிடறே. இதைத் தின்னு, அதைத் தின்காதே; எண்ணெய் முறை மறக்காதே. கஷாயம் போட்டுக்கொடுக்க ஆளில்லா விட்டாலும் ஒரு முட்டை விளக்கெண்ணெயைப் படுக்கப் போகுமுன் விட்டுக்கோ -“

இன்னும் இதுமாதிரி எத்தனையோ புத்திமதிகள்.

இப்போ அப்பா முறை, வண்டி கிளம்பும் வரை ஓயாது. “உன்னைத் தனியாக விட்டிருக்கிறது. உன்னைப் பக்கத்தி லிருந்து பாதுகாக்கவேண்டிய பருவம். ஆனால் குடும்ப நிலைமை ஒண்ணு ஒண்ணு எப்படி எப்படியோ இருக்கிறது. உன் வயதில் எனக்குச் சொல்வோர் யாருமில்லை. எல்லாத் தையும் நானே தடுக்கி விழுந்து பட்டுப்பட்டுத் தெரிந்து கொள்ளும்படி ஆயிற்று. ஆனால் எவ்வளவு தூரம் புத்தி சொல்லியே காக்க முடியும்? அப்பனும் பிள்ளையுமாயிருக் கிறோம்; சில விஷயங்களைத்தான் விவரித்துச் சொல்ல முடியும்; சிலதை ஜாடையாய் விட்டுவிடும்படியிருக்கிறது. ஆனால் அந்த சொல்லாத விஷயங்களில் தான் நீ ரொம்பவும் உஷாராயிருக்கணும். நான் என்ன சொல்கிறேன் புரி கிறதோ? புரிகிறதோ? – என்னடா சொல்லிண்டேயிருக் கேன் , எங்கோ நினைவாயிருக்கே? ரயில் இதோ வந்து விடும். உன்னைத் தூக்கிண்டு போயிடும். ஆனால் அடுத்த தடவை நீ வரும்போது நான் இருக்கணுமேடா!”

அப்பா நாக்கில் சனி.

அப்பா சொன்னபடி தான் ஆயிற்று.

அத்துடன் என் படிப்பும் போயிற்று.

படிப்புடன் கனவுகள், கோட்டைகள், திட்டங்கள் …

வண்டி வருகிறது.

இதிலேதான் நான் ஏறணும்.

இன்று வண்டி லேட்: இரண்டு நிமிஷங்களுக்குமேல் நிற்காது.

ஏனோ தெரியவில்லை, இன்று ஏகக் கூட்டம். இன்றென்று என்னோடு எல்லோருக்குமே விடுமுறை முடிந்துவிட்டதா?

“இந்தப் பக்கம் வாடா! வண்டி ஊதியாச்சு; அங்கெங்கேடா வட்டமிடறே?”

அவள் வந்திருந்தாலும் இந்த அவசரத்தில் எங்கு தென்படப் போகிறாள்?

துக்கம் தொண்டையை அடைத்தது.

என் பெட்டி படுக்கையுடன் அப்பா என்னை உள்ளே திணிப்பதற்கும் வண்டி கிளம்பவும் சரியாயிருக்கிறது.

அப்பா ஆசியில் கையை உயர்த்துகிறார்.

வண்டி நகரும் ஒவ்வொரு அடியும், தாண்டும் ஒவ்வொரு. கம்பமும், இந்த மூன்று நாட்களின் கனவிலிருந்து எட்ட எட்ட என்னை எடுத்துச் செல்வனபோல் உள் தோய்கையில் விசனம் வண்டலாய் இதயத்தில் இறங்கி வழிகின்றது.

ஒரு தென்னங்கன்றின் மட்டைமேல் ஒரு பச்சைக் கிளி உற்சாகமாய் ஊஞ்சலாடுகிறது. யாரைப்பற்றி அதற்குக் கவலை? தன்னைப் பற்றிக் கூடயில்லை, அதன் வாழ்வு அதன் பிரித்த சிறகில் இருக்கிறது; பாக்கி வேளை ஒடுங்கிய சிறகுள் அடங்கிக் கிடக்கிறது.

என் பாடு அப்படியா?

நான் காணாத இரும்புச் சங்கிலிகளின் கனம் கழுத்திலும் கைகளிலும் கால்களிலும் அழுத்துகின்றபோதும் நகரும் போதும் நெஞ்சில் “க்ளாங் க்ளாங்’ கிடுகிறது.

பக்கத்து ஸ்டேஷனில் வண்டி நின்றதும், உள்ளே ஒரு அலை மோதுகிறது.

மஞ்சள் புடவை. அதில் ஆங்காங்கே சுடர்விடும் ஜிகினாப் பொட்டுக்கள். மார்போடு அடுக்காய் அணைத்த தோல்பை புத்தகம், டிபன் டப்பா.

குண்டலங்கள்?

அவள் கண்கள் வண்டியுள் தேடியலைந்து என் மேல் தங்கின. மூச்சு லேசாய்த் திணறிற்று.

என் தொண்டை தவிக்கிறது. எழுந்து நின்றேன். எனக்கு வாயடைத்துவிட்டது.

என் இடத்தை இரு கைகளாலும் காண்பிக்கிறேன். ஆனால் அவள் உட்காரவில்லை. என் கைகளை அவள் பார்க்கவில்லை. என் முகத்தில் நிலைத்த பார்வை பெயரவில்லை .

அப்படியே கடைசிவரை நின்று கொண்டிருக்கிறோம்.

வண்டியின் தாளம் போட்ட அசைவில் குண்டலங்கள் கன்னங்களில் இடித்து நர்த்தனமாடுகின்றன. அவள் நெஞ்சுக் குழியில் அடிக்கும் நரம்பில் பதிந்துவிட்ட என் கண்களை எடுக்க முடியவில்லை. அங்கு துடிப்பது என் உயிரா? அல்ல எவ்வுயிரும் ஓருயிராய்ப் பொதுவான ஒன்றன் உயிரா?

அடுத்த ஸ்டேஷனில் அவள் இறங்கினாள். அப்புறம் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பிளாட்பாரத்தில் நெறிந்த கூட்டத்தில் கலந்து போனாள்.

குண்டலி!


அறையுள் டெலிபோன் மணி அடித்தது. உள்ளே சென்றேன். டெலிபோனை எடுத்தேன். பக்கத்து ஸ்டேஷனிலிருந்து குரல் வந்தது.

“என்ன, வண்டியை விடலாமா? என்ன பேச்சுமூச்சு காணோம்? காது கேட்கிறதாயில்லையா? இல்லை, வாயில் கொழுக்கட்டையா?”

எங்கோ. நினைவாய், “அதான் தலையை ஆட்டினேனே!” என்றேன்.

“அதுதான் சரி, ரொம்ப சரி! அப்பாவுக்கேற்ற பிள்ளை நீதாண்டா!” வெடுக்கென டெலிபோனைக் கொக்கியில் மாட்டிய சப்தம் காதை குடைந்தது.

அவருக்கு அப்பாவைத் தெரியும். அவர் ஜாம்பவான்.

நான் உள்ளங்கை அடிமேட்டில் கண்களைக் கசக்கிக் கொண்டேன். இமையுள் குண்டலங்களின் அடிச் சதங்கை மணிகள் அறுந்து தாறுமாறாய் மின்னி அறுத்தன.

கண் திறந்ததும் எதிரே என் மனைவி நின்றிருந்தாள். அவள் கைகள் முஷ்டித்திருந்தன. உள்வலியில் புருவங்கள் நெறிந்தன.

எனக்குப் போதை பூரா தெளியவில்லை. வாய் ஏதோ முணுமுணுத்தது. அவள் கண்களில் கனல் நீராக துளித்தது.

“குண்டலி செத்துப்போயிட்டாள்.” அவள் குரல் கடுத்தது.

“ஹா!” அப்புறம் தான் நினைவு வந்தது. குடிகாரன் கபடு என்னுள் புகுந்து கொண்டது. வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

“குண்டலி செத்துப்போக மாட்டாள்!” என் வார்த்தைகள் கொழகொழத்தன.

“இல்லை; அவள் ஒழிஞ்சு, அவள் மேல் புல் முளைச்சாச்சு!”

“உனக்கெப்படித் தெரியும்?”

“எனக்குத் தெரியும். நான் பொம்மனாட்டி யில்லையா?”

“உனக்குத் தெரிந்தது அவ்வளவு தான். குண்டலியால் இறக்க முடியாது; வெட்டில் விட்டுப்போன கோடரிபோல் இங்கு தங்கியிருக்கிறாள் -” என் மாரைத் தட்டிக்கொண்டேன், மார் விண் விண் எனத் தெறித்தது. “மேலே மரமும் வேர்களும் மூடி வளர்ந்துவிட்டாலும் உள்ளே பிளவில் புதைந்தபடி கோடரி அப்படியேதானிருக்கிறது”.

“இந்த நிலையிலிருந்து விமோசனம் இல்லையா?”

“எந்த நிலை? வாழ்க்கை முழுவதுமே ஒரு நிலைக் கூடு . தேன் கூடு போல். வாழ்க்கை நிலையற்றதாயினும் ஒரு ஒரு நிலையும் ஒரு ஒரு தனித்தனி வாழ்க்கை. ஆகையால் நிலைகளிலிருந்து விடுதலையுமில்லை; அழிவுமில்லை.”

“நிஜமாவா? அப்போ நமக்கு விமோசனமில்லையா?”

“எதிலிருந்து? என்ன வேணும் உனக்கு?” பொறுமை இழந்தேன். என் போதை கலைந்து கொண்டிருந்தது.

“எனக்குந்தான் தெரியவில்லை. நீங்கள் தான் சொல் லுங்கோளேன்!” கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள். பார்க்கப் பரிதாபமாயிருந்தது. ஏன் இப்படி மாட்டிக் கொள்கிறோம்?

“சொல்லவோ செய்யவோ என்ன இருக்கிறது? வயிற் றுப்பாடில் மாட்டிக்கொண்ட பிறகு வருவதை வந்தபடி ஏற்பது தவிர!”

“இது தான் உங்கள் பதிலா?”

நான் வேறு பேசவில்லை. இவளோடு எவன் பேசு வான்? இந்த நிமிஷத்துக்கு இவளையே எங்கேயோ எப்பவோ பார்த்த மாதிரிதான் இருந்தது.

அவள் உதடுகள் நடுங்கின. மரணத் தீர்ப்பு கேட்ட கைதி போல் அவள் முகத்தில் அவயவங்கள் விண்டன. அப்படியே மேஜைமேல் சாய்ந்தாள். முழங்கை வளைவுள் முகம் கவிழ்ந்தது.

நான் தேற்ற முன்வரவில்லை. இப்போது அவள் மேல் எனக்கு இரக்கம்கூட வரவில்லை. ‘அழு, அழு, நன்றாய் அழு. அலுப்பு உனக்கு மாத்திரம்தானோ? எனக்கில்லையா?’

வண்டி கிளம்பியாகிவிட்டது. மேட்டிலிருந்து பள்ளத்தில் இறங்குகையில் சரியும் சப்தம் தூரத்திலிருந்து எட்டுகிறது.

புத்தகங்களில் செய்யவேண்டிய பதிவுகளைச் செய்தேன் .

அகமுடையான் அடித்தாற்போல் பிழியப் பிழிய அழறாளே, யாராவது வந்தால்?

அந்தக் கவலையே வேண்டாம். அநேகமாய் அடுத்த வருஷத்துக்குள் இந்த ஸ்டேஷனை எடுத்துவிடுவார்கள் என்றே நினைக்கிறேன். எடுத்து விடட்டும். எல்லாம் தொலையட்டும். என்னுள் எல்லாவற்றின் மேலும் ஒரு சீற்றம் எழுந்தது.

லெவல் க்ராஸிங் கதவை மூட, வேலன் எப்பவோ போயாச்சு. இப்போது வருவது “குட்ஸ”.

வெளியே வந்து தூண் அருகே தொங்கும் தண்டவாளத் துண்டை ஆணியால் தட்டினேன்.

யாருக்காகத் தட்டினேன்? யார் இருக்கிறார்கள் என் தட்டலைக் கேட்க? அர்த்தமற்ற இந்தக் காலி சத்தத்தை எதற்காக எழுப்புகிறேன், குண்டலி போலவே எல்லாம் கேலிக்கூத்தாய்ப் போச்சு. ஏனோ இப்படி வாழ்க்கையில் அவமானச் சின்னமாய் நிற்கிறோம்?

என் மனைவி அறையினின்று வெளிப்பட்டாள். அவள் கண்களில் வெறி கூத்தாடிற்று. கைகளை வீசிக்கொண்டு இருப்புப் பாதையை நோக்கி ஓடினாள். ஏதோ அவளிடமிருந்து தெறித்தது.

‘குண்டலி செத்துப்போனாள்! குண்டலி செத்துப் போனாள்!! செத்தே போயிட்டாள்!’ அவள் குரல் கீறீச் சிட்டு உடைந்து சுக்கல்களாய் உதிர்ந்தன. ஓடிப்போய்த் தாங்கிக் கொண்டேன். இல்லாவிட்டால் விழுந்திருப்பாள்.

ரயில் இரும்புக் கிராதியின் எல்லையுள் கடந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தின்மேல் குண்டலங்கள் இரண்டு வெய்யிலில் தகதகத்தன.

– அலைகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *