கிழவரும் கிழவியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2022
பார்வையிட்டோர்: 2,951 
 

(2004 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எல்லாம் நடந்து முடிந்துவிட்டன கிழவி சுடலையிலே, எரிந்து சாம்பலானது, காடகற்றியது அந்தியேட்டி, வீட்டுக்கிருத்தியம், ஆத்மாசாந்திப் பிரார்த் தனை, நினைவுமலர் வெளியீடு, உற்றார் உறவினர் நண்பர்களுக்கு மதிய போசனம் எல்லாமே முடிந்துவிட்டன முப்பத்தொரு நாள்கள் எப்படியோ ஓடி மறைந்துவிட்டன

போட்ட மறுநாளே மெல்ல மெல்லப் பொய்யாய், பழங்கதையாய்…

கிழவியின் மக்கள், மருமக்கள், பேரர், பேர்த்திகள் எல்லாருமே வழமைக்குத் திரும்பிவிட்டார்கள். வீட்டில் ஒரே குதிப்பும் கும்மாளமுந்தான். சமையல், சாப்பாடு, தொழில், படிப்பு, தொலைக்காட்சி ரசனை, விருந்தினர் வருகை, வம்பளப்பு என்ற எல்லாமே பழைய படி குடியேறத் தொடங்கிவிட்டன.

இவ்வளவையும் சுவரில் தொங்கும் படத்திலே இருந்த வண்ணம் கிழவி, மாறாத – எப்படி மாறும்? படம் சடந்தானே? – புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

இத்தனைக்கும் மாறாக அந்த வீட்டில் நடைப்பிண மாக உலாவிக் கொண்டு பழைய நினைவுகளிலேயே மூழ்கிப் போய்க் கிடந்த ஒரே ஒரு சீவன் கிழவியோடு அரை நூற்றாண்டுகளுக்கு மேல் தாம்பாத்தியத்தில் இணைந்திருந்த கிழவர்தாம்.

எப்படி மறப்பது? எதை மறப்பது?

நினைவுகள் எல்லை கடந்து மனக்கடலிலே அலை யெறிகையில் கிழவருக்கு நெஞ்சே உடைந்தவிடும் போல இருக்கிறது. கண்களில் நீர் வடிய விம்மலும் புலம்பலுமாய் அவர் கழிக்கும் வேளைகள் சுற்றியிருப்பவர்களின் இரக்கத்தைக் கிளப்பி விடுவதும் அவர்கள் ஆறுதல் கூறுவதும் படிப்படியாக ஒய்ந்து சலிப்புக்கும் ஏன் வெறுப்புக் கும் கூட இடமாகி விடுகின்றன.

கிழவரைப் புரிந்துகொண்டு ஆறுதல் கூறுவதில் இன்னும் சலிப்படையாதவள் அவரின் கடைக்குட்டி வத்சலா தான்.

“அப்பா, அழாதைங்கோ” அம்மா அனுபவிக்க வேண்டியதெல்லாத்தையும் அனுபவிச்சிட்டு நிறை சுமங் கலியாய்ப் பொட்டோடும் பூவோடும் போயிட்டா. அவவின்ரை ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தியுங்கோ. அதை விட்டுட்டு அழுது புலம்பி என்ன பயன்? உங்கடை பிள்ளையள் நாங்கள் இருக்கிறம். உங்களைப் பூப்போல வைச்சிருப்பம். ஒரு குறையும் விடமாட்டம். ஓண்டுக்கும் யோசியாதையுங்கோ”

அவளின் வார்த்தைகள் போலி அல்ல என்பதைக் கிழவர் உணர்ந்தாலும் அவரின் வேதனை குறைந்தபாடில்லை.

“பிள்ளை, நீங்கள் என்ரை உடலைப் பேணிப் பாதுகாப்பியள் எண்டு எனக்குத் தெரியும். ஆனால் என்ரை மனத்துக்கு உண்டாகும் நோயளுக்கு ஒத்தடம் கொடுத்துப் பேணியவள் எனக்கு இல்லை” என்று சொல்லி விட்டுக் கிழவர் மீண்டும் விம்மி வெடிக்கிறார்.

வத்சலாவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகச் சலிப்பு ஏற்பட்டு வளர, இப்போது அவருக்கு ஆறுதல் சொல்ல எவரும் முன்வருவதில்லை . அவரோடு பேசுவதோ, கதை கொடுப்பதோ கூடப் படிப்படியாகக் குறையத் தொடங்கி விட்டன. சுற்றம் சூழ்ந்திருந்தும் தனித்தவராய் அநாதை யாய்ப் போய்விட்ட உணர்வோடு சோகம் அவரை முற்றாக ஆட்கொண்டு விழுங்கியதாய் அவர் உணர்கின்றார்.

இருதயக் நோயாளரான அவருக்கு அவ்வப்போது தேவைப்படும் மருந்துக்கோ சிகிச்சைக்கோ குறைவில்லை. நேரத்துக்கு நேரம் அவருக்கும், அவருடைய முதிய உடலுக்கும் சீரண சக்திக்கும் ஏற்ற உணவுக்கும் தடை யில்லை. அவருக்கென்று மூத்தமகன் அமைத்துக் கொடுத்த ‘கொம்மோட்,’ இதமான பஞ்சணை மெத்தைப் படுக்கை, வாசிக்கப் பத்திரிகைகள், புத்தகங்கள் ஒன்றுக்கும் குறை வைக்கவில்லை.

ஆனால்….

‘என்னோடு சேர்ந்துச் சிரிக்கப் சிலபேர் இருக்கினம். எனக்காக அழவும் ஒண்டிரண்டுபேர் இன்னமும் இருக்கினம். ஆனால் என்னோடை அழ, என்ர துக்கத்திலை பங்கு கொள்ள ஆர் இருக்கினம்? இருந்தவள்தான் போயிட்டாளே!.’

கிழவருக்கும் கிழவிக்கும் இடையே ஏற்பட்ட மணஉறவு ஆரம்பத்தில் அவ்வளவு திருப்தியானதாக இருக்கவில்லை என்பது உண்மையே. நுனிக்கரும்பைச் சுவைத்த கதையாகவே இருந்தது.

கிழவி குமரியாய்க் கட்டுடலோடு கூடி அவரது தலை யணையிலே தலை சாய்க்க உரித்துப் பெற்று வந்த பொழுது அவளை இரசிக்க அவரால் கூடவில்லை.

பொதுநிறம் என்றாலும் பரவாயில்லை. அட்டைக் கரி! ஆசிரியரும் நாலு பேர் மதிக்கும் அறிவாற்றல்கள் பொருந்தியவருமான தமக்கு 6ஆம் வகுப்பையே தாண்டாத ஒருத்தி, மனைவியானது கவலையோடு அவளில் வெறுப்பை அளித்ததும் உண்மைதான்.

நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என்று சிறுவயதிலிருந்தே விழுந்து விழுந்து வாசித்து அந்த வாசனை மூலம் தாம் கட்டியழுப்பிய கனவு மாளிகையில் சகவாசியாக அமர்பவள் பற்றி அவர் எதிர்பார்த்தவை யெல்லாம் உடைந்து சிதறிப் போவதை அவரால் சகித்துக் கொள்ள முடியாதிருந்தது என்னவோ வாஸ்தவந்தான்.

ஆனால்…..

கிழவரின் இளமைக்காலம் மகிழ்ச்சியும் நிறைவும் கொண்டதாய் அமைவதற்கு வேண்டிய வசதிகளோ வளங்களோ கொட்டிக் கிடக்கவில்லை. அவரின் மழலை மாற முன்னரே தகப்பனைத் தின்னியாகி வறுமைக் கோட்டின் கீழ் இருந்த தாயின் வியர்வையும் பாடுகளுமே – அவரை வளர்த்தன. அலாவுதீனின் அற்புதவிளக்கைத் தேய்த்து மாடமாளிகையில் வாழவோ பஞ்சபட்ச பரமான்னியம் உண்ணவோ, பட்டுப் பீதாம்பரங்கள் பொன் மணிக்கலன்களை அணியவோ கூடிய அதிர்ஷ்டமும் எட்டாக்கனியாகவே இருந்தது.

வாழ்க்கை என்ற சறுக்கு மரத்தில் ஏறி அடிக்கடி நழுவிக் கீழே வந்து எப்படியோ ஒரு தமிழாசிரியாராய் அவர் ஆவதற்கு அவருடைய தாயின் தூண்டுதலும் இறை நேர்த்திகளுமே அவருக்குப் பக்கபலமாயிருந்தன.

அந்தக் காலத்துத் தமிழ்வாத்தியின் கலியாணச் சந்தை மதிப்பு சிறியதொரு காணித்துண்டு, குச்சுவீடு, சில நகைகள், ஒன்றோ இரண்டோ ஆயிரம் சீதனம் என்ற அளவிலேயே இருந்ததால், அந்த அளவுக்குள் அவருக்கு கிட்டிய மணவாட்டி அவரின் கனவுகளின் அளவுக்கு உயர்ந்திருக்காதது வியப்பிற்குரியதல்ல.

தந்தையை இழந்து, தாயுடனும் தம்மிலும் பல வயது மூத்த அண்ணனுடனும் அண்ணியுடனும் வாழ்ந்து தாயினதும் மலடரான அண்ணர் அண்ணியினதும் அளவு கடந்த செல்லத்திலும் வளர்ந்து எல்லாவற்றிற்கும் இந்த மூவரிலுமே தங்கியிருந்து உலக அனுபவமே இல்லாதிருந்த அவருக்கு வாய்த்த வள்…?

அவளுக்குக் கொடுத்த சீதனக் காசு இரண்டாயிரம் அவர் ஆசிரியர்ப் பயிற்சி பெற்று முடிப்பதற்கென்று பெற்ற கடனுக்குத் தாரை வார்க்கப்பட்டது.

போதாததற்கு அவளின் தகப்பன் வாங்கிக் கொடுத்த புதிய தையல் மெஷினையும் அண்ணன் அண்ணியின் தூண்டுதலால் விற்பதற்கும் அவர் முனைந்தார். காரணம் மலிவாக வந்த காணி ஒன்றைத் தம்பிக்கு வாங்கி அதில் அவனுடைய சம்பாத்தியத்தில் ஒரு வீட்டையும் கட்டிக் கொடுக்கவேண்டும் என்ற அண்ணனின் நல்ல எண்ணந் தான்.

ஆனால் அந்தக்காணி ‘மைனர் காணி’ என்றும் கொள்வனவு செய்வது பாதுகாப்பு இல்லை என்றும் திருமணமாகி ஓரிரு மாதங்களிலேயே தங்கள் மகளையும் தங்களையும் ஏமாற்றித் தங்களின் சீதனக் காணியையும் காலப்போக்கில் சூறையாடிவிடுவார்கள் என்றும் அவரின் மாமன் மாமிக்கு அச்சம் ஏற்பட்டதில் நியாயம் இருக்கவே செய்தது.

அவர்கள் போலிசுக்கு முறைப்பாடு கொடுத்து மகளையும் மருமகனையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பித்தார்கள்.

– “பொலிஸ் ஐயா, மருமகனுஞ் சரி அவற்றை அண்ணன் அண்ணியும், சரி சரியான பிடுங்கிகள். நாங்கள் குடுத்த சீதனக் காசை மருமகன் படித்த செலவுக்கெண்டு எடுத்துக் கொண்டினம். நாங்கள் ஆசையாய்க் கொடுத்த தையல் மெஷினையும் விக்கப்பாக்கினம். அதைக் கொண்டு மைனர் காணியொன்றை வாங்கப்போவதாகப் பம்மாத்துப் பண்ணினம். நாங்கள் குடுத்த சீதனக் காணியிலை வீடு கட்டலாந்தானே? ஆனால் அங்கை மருமகன் வந்திருக்க மாட்டராம்! வந்திருக்க இவையும் விடமாட்டினை. இவையின்ரை கைப்பாவைதான் மருமகன். ஆனபடியால்…” என்று மூச்சுவிடாமல் அவரது மாமி பேசியதன் மிகுதியைத் தொடரவிடாது பொலிஸ் அதிகாரி கேட்டார். “ஆனபடியால் என்ன செய்யச் சொல்லுறியள்?”

“போனது போகட்டும். எங்கடை மகளை எங்களோடை அனுப்பி வைச்சாப் போதும். இனி அவள் உவரோடை வாழவேண்டாம்” என்று தகப்பன் தாய்க்குப் பக்கப்பாட்டுப் பாடினார். பொலிஸ் அதிகாரி கேட்டார்.

“பிள்ளை உம்முடைய புருஷனை விட்டுட்டு அம்மா அப்பா

வோட போக உமக்குச் சம்மதமோ?”

கிழவர் – அந்நாள் இளைஞர்- அதிர்ச்சியோடும் ஆவலோடும் மனைவியைப் பார்த்தார். வாய் பேசாத அவளின் மௌனம், சில கணங்கள் பயங்கரமாக நீடித்தது.

அந்தக் கணங்கள் கழிய அவரின் மனைவி சொன்னாள். “உவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி செய்யிறன்.” மாமியும் மாமனும் உரத்த குரல் எடுத்துப் புலம்ப, பொலிஸ் அதிகாரி அவர்களை அதட்டி அடக்க, தொடர்ந்து எந்த அசம்பாவிதமும் இன்றி அவர் தமது மனைவியை அழைத்துக் கொண்டு காரில் வீடு திரும்பினார்.

கன்னங்கரிய, படிப்பறிவற்ற தம் மனைவியை எவ்வளவு வெறுத்தாரோ அந்த அளவுக்கு அன்றிலிருந்து அவளை அன்புத் தேவதையாகத் தமது காரியம் யாவிலும் கை கொடுக்கும் சகதர்மிணியாக அவர் ஏற்றுக்கொண்டார்; தம் உள்ளத்தில் ஆவாகனம் செய்துகொண்டார்.

கரிய அவளின் முகத்தில் ஒளிவிட்ட வண்ணம் மூக்கினை அலங்கரித்த சிமிக்கியோடு அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் சாட்சாத் பரமேஸ்வரியாகவே அவள் அவருக்குத் தரிசனம் கொடுத்தாள். –

திருமணமாகி ஒரிரு மாதங்களிலே ஒருவரை யொருவர் சரியாகப் பரிந்து கொள்ள முன்பே, தன் கணவரின் சுபாவங்களைச் சரிவர அறிந்து கொள்ள முன் னரே, “உவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யிறன்” என்று அவள் சொன்னாளே! அந்த வாக்கியத்திற்கு இத்தனை மகத்துவமா? அந்தச் சம்பவத்தை இப்பொழுது நினைத்தாலும் கிழவரின் மெய் சிலிர்க்கின்றது; உரோமாஞ்சலி உண்டாகின்றது. மனைவியின் படத்தை நோக்கி அவரை அறியாமலே அவரின் கைகள் குவிகின் றன.

‘உவர் என்ன சொல்லிறாரோ அதன்படி செய்யிறன்,’ என்ற வாக்கு, கடைசிவரை கிழவியால் வார்த்தைக்கு வார்த்தை கடைப்பிடிக்கப்பட்டதையெல்லாம் அவர் நினைத்துப் பார்க்கிறார்.

கிழவரின் வாழ்க்கையிலே எத்தனையோ சோதனை கள், வேதனைகள், இழப்புக்கள், இறக்கங்கள் என்று ஏற்பட்ட வேளையில் எல்லாம் அவற்றின் பங்காளியாக மட்டும் கிழவி இருக்கவில்லை. அவற்றைத் தன் தலையிலே சுமக்கும் சுமைதாங்கியாகவும் மாறி அவருக்கு அவள் அளித்த ஆறுதலும் நிம்மதியும் கொஞ்சமா?

இளமையின் துடிப்பும் குருதி ஓட்ட வேகமும் நிறைந்து அவற்றின் வடிகாலாக அவளைக் கொண்டு எட்டுப் பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளினாரே?

ஆட்டங்கள், பாட்டங்கள் என்று சக ஆசிரியர்கள், நண்பர்களோடு வீட்டுப் பொறுப்பைச் சற்றும் கவனத்தில் கொள்ளாது அவர் திரிந்த காலத்தில், அத்தனையையும் தனித்துச் சுமந்து பிள்ளைகளை வளர்த்தெடுத்தவள் அந்தக் கிழவிதான். நண்டுஞ் சிண்டுமாக ஒருவருட இருவருட இடைவெளிகளில் பிறந்தவர்கள் அவர்கள்.

“எங்கள் எட்டுப் பேருக்கும் அப்பாவுக்கும் காலைப் பலகாரம் செய்து உண்ண வைத்து, எங்களுக்கு உடையணிந்து அங்கும் இங்கும் சிதறிக் கிடக்கும் புத்தகங்கள், கொப்பிகளை எடுத்துத் தந்து அம்மா பாடசாலைக்கு அனுப்பினா. அப்பா கதவைப் பூட்டிக் கொண்டு வெளிவாரிப் பட்டப்படிப்பில் மூழ்கி இருக்கையில், எங்களின் துடுக் கடக்கி அ,ஆ படிப்பித்த முதல் ஆசிரியை அம்மாதான்,” என்று கிழவரின் மூத்த மகன் நிர்மலன் குரல் தளதளக்கச் சொல்லி அழுதபோது, கிழவரின் மனச்சாட்சி அவரை உறுத்தக் கழிவிரக்கம் அவரை ஆட்கொண்டதை அவர் நினைத்துக் கொள்கிறார்.

“கலியாணம் முடித்துப் போனவையும், கலியாணம் முடிக்க இருகிறவையும் அம்மா அப்பாவுக்கு எத்தனை பிரச்சினை கொடுத்திருப்பினம்” அப்பா அவையின்ர சுயநலக் கொடுமைகளைத் தாங்காமல் எரிமலையாய் வெடித்துக் கிளம்புவார். அந்த வேளைகளில் எல்லாம் அவரை அதட்டி, அடக்கிச் சுயநிலைக்குக் கொண்டு வந்தவ அம்மா” என்று கடைக்குட்டி புலம்புகையில் அவரின் நெஞ்சைக் கிழித்துக் கொண்டு பெருமூச்சுக் கிளம்பி அவரையே விழுங்கி விடும். உணர்வை அவர் அடை கின்றார்.

‘அம்மா சிக்கனத்திற்குப் பெயர் போனவ. அப்பா அவவுக்கு அடிக்கடி உடுபுடைவை எடுத்துக் கொடுத்த வரலாறே இல்லை. மாறாகப் பெருகிவரும் குடும்பத் தேவை களைச் சரிக்கட்ட அவ கொண்டு வந்த நகைநட்டை விற்றுத் தொலைத்தவர் அப்பா. அம்மா ஒரு சொல்லும் அப்பாவை மனம் நோகச் சொன்னதில்லை’. என்று விம்மித் தவிக்கிறாள் மூன்றாவது மகள் சுமதி. அவளின் சொற்கள் அவரை வாட்டி வதைக்கின்றன.

‘கலியாணம் கார்த்திகை எண்டு போக நேர்ந்தாலும், சாதாரண பருத்திப் புடைவையிலை கூட அவ போயிருக் கிறா. அண்ணையை வெளிநாட்டுக்கு அனுப்பத் தன்ரை தாலிக் கொடியை விற்றுக் கொடுத்து விட்டுக்கிலிட்டுத் தாலிக் கொடியை வாங்கிப் போட்டவ எங்கட அம்மா” என்று இரண்டாம் மகன் கமலன் சொன்ன பொழுது அவர் விம்மிப் பொருமி வெடித்தே விடுகிறார்.

இவ்வாறெல்லாம் சொல்லிச் சொல்லிக் கடைசியில் மனஆறுதல் அடைந்த மக்கள் இப்பொழுது அவை பற்றி நினைப்பதுகூட இல்லை. தங்கள் குடும்பம், தங்கள் பிள்ளைகளின் பாடு பறப்பைப் பார்ப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. இந்த நிலையில் அம்மாவை நினைக்க நேரமெங்கே? அதற்காக அவர்களைக் குறை கூறிப் பயனில்லை .

ஆனால்… கிழவரால் அது முடிந்த காரியமா? அவர் கிழவியின் படத்தை நெடிது நோக்கி நிற்கின்றார்.

“அம்மா, என்னாலை இன்னும் கனநாளைக்கு இந்த உலகத்திலை இருக்க முடியாது. என்னை விரைவிலை உன்னிட்டை அழைத்துக்கொள்”.

– வலம்புரி (5.3.2004), சொக்கன் சிறுகதைகள், வெளியீடு: நயினை கி.கிருபானந்தா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *