கிராக்கி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 10,415 
 
 

“நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா? சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து சொல்லுங்கள்”

என்று டி.எம்.எஸ் பாடல் ஆட்டோவினுள் ஒலித்து கொண்டிருந்தது. வெளியே நின்று பாஸ்கரன் வைகை ஆற்றை வெறித்து பார்த்து கொண்டிருந்தான். மதுரைக்காரனுக்கு வைகையை பார்ப்பது சந்தோஷமான விஷயம். ஊரை இரண்டாக பிரித்து நடுவே இருக்கும் வைகை வறண்டு இருந்தாலும் சரி, தண்ணீரோடு இருந்தாலும் சரி, அதை பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்.

வறண்ட வைகை, மதுரைகாரனுக்கு குறுக்கு வழியை தரும். ஆத்துக்கு குறுக்கே புகுந்து அடுத்த கரையை சுலபமாக போய்டலாம். இல்லாவிட்டால் ஊரை சுத்தனும். வறண்ட வைகையை அசிங்கம் பண்ணலாம், கிரிக்கெட், கில்லி விளையாடலாம்.

தண்ணி ஓடுனா, ஆத்துல தண்ணி ஓடுது, தண்ணி ஓடுதுன்னு சொல்லி பிள்ளை குட்டிய கூட்டிட்டு வந்து காண்பிக்கலாம். நல்லா குளிக்கலாம், துவைக்கலாம். எப்படியும் எதுக்கோ ஒன்னுக்கு மதுரைகாரனுக்கு வைகை உபயோகபட்டுட்டு இருக்கு.

ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு ஆத்துக்கு பக்கத்துல இருக்கிறது பாஸ்கரனுக்கு ரொம்ப சௌகரியமா போச்சு. சவாரி திகையலைன்னா, ஆத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிடுவான். மனுஷங்கள வேடிக்கை பார்க்கிறத விட ஆத்து மணல வேடிக்கை பார்க்கலாம். எல்லா விஷயத்தையும் போட்டு மூடி பாதுகாக்கிற மணலை பார்க்கும் போது பாஸ்கரனுக்கு தன்னோட மனசுதான் நினவுக்கு வரும். அவனும் ஒரு ஆள்கிட்ட ஒரு விஷயத்தை கேட்கனும் அடக்கி வச்சிருக்கான். அதை கேட்க, தைரியமும், நேரமும் வரவில்லை.

சட்டென பஸ் ஸடாண்டு அருகில் சலசலப்பு சத்தம்.

“ஏண்டா, அவுசாரின்னா அவ்வளவு இளக்காரமா போச்சா? என்ன சொன்ன, மாப்ள இது கிராக்கிடா? டேய் நான் கிராக்கிதாண்டா. உன் கிட்ட வந்து என்னை கூட்டிக்கிட்டு போடான்னு கெஞ்சினேனா? இல்ல இளிச்சிகிட்டு நின்னேனா? சும்மா போற பொம்பளைய கேலி பண்ணி பார்க்கிறேயே? ஒரு அறை விட்டேனா, உன் மரியாதை எல்லாம் காணாம போயிடும். எனக்கு மானம் மரியாதை எல்லாம் கிடையாது. புடவையை போத்திக்கிட்டும் நிப்பேன், தூக்கியும் காண்பிப்பேன். செருப்பு பிஞ்சிடும். ஒடி போய்டு” என்று பயங்கரமாக சத்தம் போட்டு காறி துப்பிட்டு, குமாரி பாஸ்கரன் ஆட்டோவை நோக்கி வந்து உரிமையோடு உள்ளே போய் உட்கார்ந்திக்கிட்டா.

குமாரி பஸ் ஸ்டாண்டு ஏரியாவில ரொம்ப பிரபலம். பார்க்க நல்லா இருப்பா. அவளுக்கு ரெகுலர் கஸ்டமர்ஸ் அதிகம். எப்படியும் யாரவது ஒருத்தன் வந்திடுவான். அவளை ஹோட்டலுக்கு அழைச்சிட்டு போய்ட்டு வர்றது பாஸ்கரன் தான். எவ்வளவோ ஆட்டோக்கள் இருந்தாலும், அவளுக்கு ராசி பாஸ்கரன் ஆட்டோதான்.

பாஸ்கரு, பாஸ்கரு என்று அவள் அழைப்பது அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்கு வயது அவனை விட அதிகம் என்பது அவள் போடும் மேக்கப்பை மீறி அவனுக்கு தெரிஞ்ச விஷயம். அவள் புருஷன் ஓடி போனதும், அவளுக்கு வயசு வந்த பொம்பள புள்ள இருக்கு என்பதும் அவள் சொல்லி அவனுக்கு தெரிஞ்ச விஷயம்.

“ஏன் இப்படி கத்திட்டு வர்ற. கிராக்கின்னு சொன்னா ஏன் உனக்கு இப்படி கோபம் வருது. கிராக்கின்னா இங்கிலிஸுல டிமாண்ட்ன்னு அர்த்தம். உனக்கு டிமாண்ட் ஜாஸ்திதானே. அதனாலதானே ரெகுலரா உன்னை தேடி வர்றாங்க.”

குமாரி முகத்தில பெருமிதம் கலந்த புன்னகை.

“அதுக்கில்ல பாஸ்கரு, சும்மா சிவனேன்னு போய்ட்டிருந்தா, இவங்க பல்ல காட்டிக்கிட்டு கிண்டல் பண்ணா என்னை அறியாம கோபம் வந்திடுது. கத்திபுடுறேன். இந்த தொழில் அவ்வளவு ஈசியா? எவ்வளவு நெளிவு சுழிவு தெரியனும் தெரியுமா? பத்து பேரை பழக்கம் பண்ணுறதுக்குள்ள, நான் பட்ட கஷ்டம். உடம்பை காட்டினாலும், அதுல நமக்கு உபயோகம் இருக்கனுமில்ல. கண்ட நாய்கிட்ட போய் படுத்து வர முடியுமா. நல்ல ஆளா மாட்டுன்னா, அவன நம்மல விட்டு போகாம வச்சுக்க, வித்தையெல்லாம் காட்டனும் பாஸ்கரு. இவனுக என்னடானா, சுலபமா கிராக்கின்னு கேலி பண்ணுறாங்க. அந்த நாய்களால. என் மேக்கப் போச்சுன்னு, மடியில இருந்து ஒரு பையை எடுத்து, அதுக்குள்ள இருக்கிற பவுடரை எடுத்து பூச ஆரம்பிச்சா.

“நீ தான் நல்லா இருக்கியே, அப்படியும் ஏன் இப்படி பவுடர் பூசுற?

“பாஸ்கரு பஸ் ஸடாண்டுல, எல்லாரும் நிக்கும் போது குடும்ப பொம்ளைங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியனுமில்ல. வர்றவனுக்கு இவ தொழில் செய்றவனுன்னு தெரியனும். இல்லாட்டி அவனுக்கு எப்படி கேட்கிறதுன்னு சந்தேகம் வந்துறாது”
“சூப்பர், சூப்பரா காரணம் சொல்லுறன்னு” பாஸ்கரன் வாய் விட்டு சிரித்தான்.

“மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்கும் என்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று”

டி.எம்.எஸ் பாடல் ஒலித்து கொண்டிருந்தது.

“நல்ல பாட்டு பாஸ்கரு. நீ சாப்டல?”

“சாப்டாச்சு”

“அடுத்து எப்ப கோர்ட்டுக்கு போகனும்”

“அடுத்த வாரம். எத்தன் நாள் வெளிய இருக்க போறேன்னு தெரியல. வக்கீல், எல்லாம் ஜட்ஜ் கையில இருக்கு. கடவுள் அவர் மனசை மாத்தினாருன்னா, உனக்கு விடுதலை கிடைக்கும்ன்னு சொல்லி இருக்கார்”.

ஏன் பாஸ்கரு, உன்னை பார்த்தா பூஞ்சையா இருக்க. நீயா கொலை பண்ண?

“ அதெல்லாம், சமயத்துல வர்ற வேகம். நான் அன்னைக்கு அவனை கொலை பண்ணலன்னா, அவன் என்னையும், எங்க அப்பனையும் கொலை பண்ணிருப்பான். ஒரு வேகத்துல நான் முந்திக்கிட்டேன். ஆனா இப்ப ஏண்டா அப்படி செஞ்சோம்ன்னு இருக்கு. எந்த அப்பனை நான் காப்பத்தினேனோ, அவனே என்னை கொலைகாரன்னு வீட்டை விட்டு துரத்திட்டான். நன்றி கெட்ட நாய் பய. நான் அவனுக்கு கேவலமா போயிட்டேன். பெத்தவன் மதிக்கலன்னா, ஊர் எப்படி மதிக்கும். கூட படிச்சவங்க மட்டும் உதவலைன்னா, கேஸை எப்படி நடத்துறது. வர்ற திங்கள்கிழமை முடிவாயிடும்ன்னு நினைக்கிறேன். ஸ்டேஷன் வேற போகனும்.”

“கவலை படாத பாஸ்கரு. நீ விடுதலையாயிடுவ. கல்யாணம் பண்ணி நல்லா இருப்ப பாரு. நான் அதையும் பார்க்க தான் போறேன்”

பாஸ்கர் அவள் முகத்தை தீர்க்கமாக பார்த்தான்..

“என்ன பார்க்குற?”

“நீ சொன்ன மாதி நடந்திட்டா, கல்யாணத்தை பத்தி உங்கிட்ட தான் ஒன்னு கேட்பேன்”

“என்ன பாஸ்கரு வித்தியாசமா பேசுற. எனக்கு புரியல?”

“இப்ப உனக்கு புரிய வேணாம். வா, உன் ஆள் வந்திட்டான். உன்னை லாட்ஜ்ல இறக்கி விடுறேன்னு வண்டியை கிளப்பினான்.

சிரிப்பு வருது, சிரிப்பு வருது, நினைக்க நினைக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன், பெரிய மனுஷன் செயல பார்த்து சிரிப்பு வருதுன்னு சந்திரபாபு பாட ஆரம்பித்தார்.

—————————

திங்கள்கிழமை காலை எழுந்திருக்கும் போதே பாஸ்கருக்கு படபடப்பாக இருந்தது. குளித்து சாமியை கும்பிட்டுவிட்டு கோர்ட்டுக்கு போக ஆட்டோவை கிளப்பினான்.

“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன்
வகுத்ததடா, வருவதை எதிர் கொள்ளடா” என கர்ணன் பட பாடல் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒலிக்க ஆரம்பித்தது.

“பாஸ்கரு நில்லு நில்லு, நானும் வர்றேன்” என மூச்சிரைக்க குமாரி ஓடி வருவது தெரிந்தது.

ஆச்சரியத்துடன் பாஸ்கர் அவளை பார்த்தான். முகத்தில் பவுடரே இல்லாமல் நெற்றியில் பொட்டுடன் அழகாக இருந்தாள்.

“இந்தா விபூதி வச்சுக்க. கோவிலுக்கு போய் உனக்காக வேண்டிட்டு வர்றேன். நானும் உன் கூட வர்றேன். உனக்கு துணையாயிருக்கும்ல”

பாஸ்கரனுக்கு அழ வேண்டும் போல இருந்தது. மெதுவாக சிரித்து வா உட்காருன்னு ஆட்டோவை ஓட்ட ஆரம்பித்தான்.

கோர்ட்டில் ஒரு பக்கமாக அமர்ந்து கர்ணன் பட பாட்டையே பாடி கொண்டிருந்தான். தகுந்த சாட்சியம் இல்லாததாலும், கொலை செய்வதற்க்கான முன் விரோதம் இல்லாததாலும், பாஸ்கரது வயது மற்றும் வாழ்வை கருதி அவனை விடுதலை செய்வதாக தீர்ப்பு சொன்னவுடன் குமாரி உற்சாகத்தில் கத்திய சத்தத்தை கேட்டு கோர்ட் ஸ்தம்பித்தது.

பாஸ்கர் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான்.

“பாஸ்கர், கண்ட் ரோல் யுவர் செல்ப். நிறைய பார்மாலிட்டிஸ் இருக்கு. உன் பிரண்ட்ஸ் இரண்டு பேர் என் ஆபிஸில் உட்கார்ந்திருக்காங்க. வா போகலாம். இந்தாம்மா நீ இங்கேயே இரு. என் ஆபிஸ் பக்கம் வந்துறாத” என்று அதட்டினார்.

“சரிதான் போய்யா. பாஸ்கரு நான் அந்த மரத்துக்கு கீழே உட்காந்திருக்கேன். நீ வக்கில பார்த்திட்டு வந்து, விடுதலையானவுடனே, கல்யாணத்தை பத்தி என் கிட்ட பேசுவேன்னு சொன்னேயே அத வந்து சொல்லு”

பாஸ்கர் அவளை பார்த்த பார்வையில் மூடியிருந்த மணல் சரிந்தது. வக்கீலை பார்த்து “சார், நீங்க போங்க, ஒரு பத்து நிமிஷத்தில வந்திர்றேன்னு என்று அனுப்பி வைத்து விட்டு, குமாரியை பார்த்து

உறவால துரத்தப்பட்டு நான் வந்து நின்னப்ப, என்னை பாசத்தோட கூப்பிட்டு பேசுனவ நீ. நீ உன் விஷயத்தை சொல்றப்ப உன் கஷ்டமும் துயரமும் என்னை ரொம்ப கஷ்டபடுத்தும். அப்ப எல்லாம் ஒரு விஷயத்தை கேட்கனுமின்னு நினைப்பேன். ஆனா கொலை கேஸுல நான் தண்டிக்கபடுவேனோ? இல்லையோன்னு தெரியாம எப்படி உன் கிட்ட கேட்குறதுன்னு கஷ்டமா இருக்கும். இப்ப தைரியமா கேட்கிறேன். என்னை உன் தம்பியா ஏத்துகிட்டு உன் பொண்ணை எனக்கு கட்டி கொடு. நான் அவளை கண் கலங்காம பார்த்துகிறேன்”

குமாரி ஒரு நிமிடம் அமைதியாக பாஸ்கரை பார்த்த படியே உட்கார்ந்திருந்தாள். “பாஸ்கரு எனக்கு உணர்வெல்லாம் அறுந்து போய் ரொம்ப நாளாச்சு. நீ சொன்னத கேட்டவுடன் சந்தோஷத்தோட அழனும் நினைக்கிறேன், ஆனா அழுகை வர மாட்டேங்குது. என் பொழப்பு இப்படி ஆயிடுச்சேன்னு சாமியை திட்டினாலும், விடாம சாமிய கும்பிடுவேன். கும்பிட்ட சாமி என்னை கைவிடல. நீ என்னை அக்கான்னு சொல்லிட்ட அதனால காலில விழாம இருக்கேன், உன்னை போல ஒருத்தன் கிடைக்க என் புள்ள கொடுத்து வச்சிருக்கனும் தம்பின்னு சொல்லும் போதே வராத தண்ணீர் அவள் கண்ணில் வழிய ஆரம்பித்தது.

“கொலைகாரனுக்கு பொண்ணு தர மாட்டேன்னு கிராக்கி பண்ணுவேயோன்னு பயந்துட்டு இருந்தேன். ரொம்ப தாங்க்ஸ் அக்கா”

குமாரி அழுகை கலந்த சிரிப்போடு, “கேலி பண்ணாத பாஸ்கரு, போய் வக்கீல பாரு” என்றாள்.

“ஒளி மயமான எதிர் காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் முழுதும் பாடும் ஓசை என் காதில் கேட்கிறது”

என்ற டி.எம்.எஸ் பாடல் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *