கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 4,162 
 
 

அம்மாவை நினைக்கும் பொழுது அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. என்னோட இந்த நிலைக்குக் காரணமே அவங்களா இருந்தபோதிலும் அம்மாவை வெறுக்க முடியவில்லை. கையிலிருக்கும் உணவு நஞ்சாய்க் காட்சியளிக்க மனம் கடந்துபோன நாட்களை நாடி ஓடுகிறது.

“எதுக்கு இவ்ளோ அவசரம்?” அப்பா அப்போதே கேட்டார்தான்.

“அதது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கவேண்டாமா?” அம்மாவின் கடுமையான பதிலில் அப்பா சற்று அடங்கினார்.

“இன்னும் கொஞ்சநாள் போகட்டுமே” அப்பாவுக்கு அம்மாவின் பதிலில் திருப்தியில்லை.

“காலாகாலத்துல நம்ம கடமையை செய்யணும். எனக்கு மட்டும் யுவாமேல பாசமில்லையா என்ன?”

“நல்ல இடம்தானான்னு விசாரிச்சிட்டியா?”

“எல்லாம் விசாரிச்சிட்டுதான ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்…. இப்பதான் ஆரம்பிச்சமாதிரி பேசுறீங்க….!”

“விசாரிக்கிறப்ப எல்லாம் நல்ல இடம்னுதான் சொல்வாங்க…. போகப்போகத்தான தெரியும்…”

“வேற என்னதான் செய்யணும்னு நினைக்கிறீங்க?”

“நீ அவசரப்படறியோன்னு இருக்கு. நம்ம பொண்ணு நம்மோடவே இன்னும் கொஞ்சநாள் இருக்கிறதுல உனக்கென்ன சிரமம்?”

“ஏன் சின்னப்பிள்ளைமாதிரி அடம் பிடிக்கிறீங்க? அவளே தயாரா இருக்கா.”

“அவளுக்கென்ன தெரியும்?”

“மகள் பாரதிபோல தைரியமா இருக்கணும்னு யுவபாரதின்னு பேரைமட்டும் வச்சா போதுமா?”

“இருந்தாலும்….”

“நீங்க கவலைப்படாதீங்கப்பா, நான் பாத்துக்கிறேன்” இடையில் புகுந்தேன்.

“ஏன் இன்னும் சாப்பிடலை?” அதிகாரத்தோரணை நிகழ்வுக்கு இழுத்து வந்தது.

“சாப்பிடுகிறேன்” முனகினேன்.

இந்த மாதிரில்லாம் நான் துன்பப்பட வேணாம்னுதான் அப்பா அவ்ளோதூரம் தடுத்திருக்கிறார். நான்தான் அதைப் புரிஞ்சிக்காம பெரிய மனுஷிமாதிரி அப்பாவை சமாதானப்படுத்தியிருக்கேன். இப்பவே அப்பாவைப் பார்க்கணும்போல இருக்கு.

புறப்படும் நேரத்தில் அப்பா, “உனக்கு எப்ப எங்களைப் பார்க்கணும்னு தோணுதோ ஒரு கால் பண்ணு செல்லம்…. நாங்க ஓடிவந்துடுறோம்” குரல் கம்மியபடி.

“கிளம்புற பொண்ணுக்குப் புத்திமதி சொல்லாம என்ன பேசுறீங்க?” அம்மா அப்பாவை முறைக்கிறார்.

“யுவா… நீ போற இடத்துல பக்குவமா நடந்துக்கணும். அது ஒண்ணும் நம்ம வீடு கிடையாது. நினைச்சமாதிரி இருக்க. அங்கே அவங்க சொல்றபடிதான் நடந்துக்கணும். எல்லாம் உன் நன்மைக்காகத்தான் சொல்றேன் புரியுதா?”

துளிர்க்கும் கண்ணீரைக் காட்டிக்கொள்ளாமல் “சரிம்மா… நான் பார்த்துக்கிறேன்” என்றேன் சமர்த்தாக.

வந்தவுடன் இங்கு இருந்த சூழ்நிலை பிடித்தும் போனது. பெரிய தலைகள் சிரிக்கச்சிரிக்கப் பேச, அம்மா, அப்பாவின் நினைவு தலைகாட்டாதது ஆச்சரியம். சுரேந்தருடன் நேகாவும் என்னுடன் நன்றாகப் பழக மகிழ்ச்சி. எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை ஆர்வமுடன் செய்தேன்.

“ஏன் முடியை விரித்து போட்டபடி இருக்கே?” வெளுத்த தலையுடன், மூக்குக்கண்ணாடியை ஏற்றிவிட்டபடி கேள்வி பிறக்க அதிர்ந்துபோனேன்.

‘இது ஒரு குற்றமா?’

இயல்பாகவே கூந்தலை சிறைபிடித்தார்போன்று கட்டி வைப்பது எனக்குப் பிடிக்காது. கூந்தலை ரப்பர் வளையத்துக்குள் நுழைத்துவிட்டு ஒடுங்கிப்போகிறேன்.

கையிலிருக்கும் உணவு பாரமாகிறது.

“இப்ப சாப்பிடாவிட்டால் அப்புறம் விடமாட்டாங்க…. சாப்பிடு” தன் தட்டை காலியாக்கியபடி நேகா.

“வீட்டு ஞாபகம் வந்துடிச்சா?” சுரேந்தரின் கேள்வி என்னை கலங்கடித்தது.

“அழாதே…. எல்லாம் சரியாகிடும்.”

அந்த ஆறுதல் பிடித்திருந்தது.

“இன்னும் கொஞ்சம்தான் சாப்பிட்டுவிடு.”

அதன்பிறகுதான் என்னையறியாமல் சாப்பிட்டது தெரியவர, இலேசாக வெட்கம் பிறக்கிறது.

சின்னச்சின்ன வேலைகளை மகிழ்வுடன் செய்தேன்.

“பை சுரேந்தர்…. பை நேகா…. நாளை சந்திப்போம்” பள்ளி முடிந்துவரும் என்னை ஏன் வாயைப்பிளந்தபடி பார்க்கிறார் அப்பா!

– சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் கதைக்களத்தில் (ஆகஸ்ட் 2017) முதல் பரிசு பெற்ற சிறுகதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *