கண்ணாடியின் முன் காஸ்மெட்டிக்ஸோடு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் உட்கார்ந்ந்தாள் ஹரிணி.
முழு நிலவாய் முகம் பிரகாசிக்க பீரோவைத் திறந்தாள்.
‘எந்த டிரஸ் போடலாம்!’ என அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசித்து, சந்தனக்கலர் உடுப்பில் தேவதையாய் ஒளி வீசினாள்.
கல்லூரிக்குச் செல்லும் ஹரிணியை வழியனுப்ப வாசலுக்கு வந்தாள் பாட்டி. பரட்டைத் தலையும், அஜித் மீசையுமாய் கூலிங் கிளாஸ் அணிந்து ஹீரோ போல் புல்லட்டில் கிளம்பிய எதிர்வீட்டு ஹரன் கண்ணில் பட, பாட்டியின் வயிறு சொரேர் என்றது.
‘காலம் கெட்டுப் போச்சு! பிஞ்சில் பழுக்கும். இதுபோல பொறுக்கிப் பசங்க கிட்ட மாட்டாம என் பேத்தி தப்பிச்சி வரணுமே!’ என்று கவலைப்பட்டாள்.
ஹீரோ போல் ஜீன்ஸ் பேண்டும், ஜீன்ஸ் சட்டையும், காதில் மாட்டிக் கொண்ட இயர் ஃபோனுமாய் புல்லட்டில் காலேஜ் புறப்பட்ட பேரன் ஹரனை வழியனுப்ப வாசலுக்கு வந்த பாட்டி எதிர்வீட்டு ஹரிணியைப் அருவருபோடு பார்த்தாள்.
‘இவளைப்போல மேனா மினுக்கிங்க கிட்டேல்லாம் மாட்டாம என் பேரன் தப்பிச்சி வரணுமே..!’ என்று கவலைப்பட்டாள் ஹரனின் பாட்டி.
(26.01.2022 குமுதம்)