காலக் கணக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2023
பார்வையிட்டோர்: 2,972 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாஞ்சில் நாடனின் உலகம் முற்றிலும் ‘தத்துவமற்ற’ பிராந்தியம். காரணம் அது முற்றிலும் ‘வரலாறற்ற’ பிராந்தியம். ஆகவே அது முற்றிலும் ‘இலட்சிய கனவுகளற்ற’ பிராந்தியம். யதார்த்தவாதம் அனுமதிக்கும் எல்லைக்குள் மட்டுமே அவரது படைப்புலகின் அனைத்து கூறுகளும் பரிணாமம் கொள்கின்றன. காரணம் நாஞ்சில் நாடன் முற்றிலும் யதார்த்தவாதி – ஜெயமோகன்

***

என்னவோ தொடர்ந்து பாம்புகளாகக் குறுக்கே வந்து கொண்டிருந்தன.

அந்த சம்பாப்பூவில் விதைத்து கொம்பு மரங்கள் அடித்து முடிந்தவுடன் சித்திரை பத்தாம் உதயத்தில் பெய்ததைக் காட்டிலும் பெரிய மழை, பாட்டம் பாட்டமாக, இருபது நாட்கள் சம்பாப்பயிரைக் காய்வுக்கு விட்டு, பின்பு காய்ச்சல் வெள்ளம் நிறுத்த முடியாமல், கொம்பு மரங்கள் முடிந்ததும் வெள்ளம் நிறுத்த வேண்டியதாயிற்று. பயிரோடு சேர்த்துக் களைகள் கணிசமாக வளர்ந்தன. உபநெல், துவரை, கோரை என. சம்சாரிகளுக்கு தோட்டத்தில் பாதி கிணறு என்ற கணக்கில் பயிரேற்றும் செலவில் பாதி களை பறிக்க ஆகும் போலிருந்தது.

கடன் வாங்கியாவது, பொண்டாட்டி கழுத்துச் சங்கிலியைக் கழற்றி நிலவள வங்கியில் பணயம் வைத்தாவது களை பறிக்காமல் விட முடியாது. பெரிய நடை வரப்புக்களிலும் கால்வாய் வரப்புக்களிலும் இடையிலுள்ள ஒட்டு வரப்புக்களிலும் கால் பதித்து நடக்க முடியாமல் நாற்றுக்கட்டுக்கள் போல் களைகள் பறித்து வரிசையாய் அடுக்கப் பட்டிருந்தன. களையானால் கூட, வேரோடு பறித்ததால் வயல் வண்டல் மண்வேரோடு பெயர்ந்தது. வரப்பில் நடக்கும்போது ‘சளக்’ கென கால் வழுக்கியது ‘நரக்’ கென மிதிபட்டன.

ஆற்றங்கரையை அடுத்திருந்த தோப்படி வயலில் இடை வரப்பில் பறித்து வைத்த களைக்கட்டுக்கள் காய்ந்தபோது அப்பா சொன்னார், “மக்கா, பனையோலைக் கடவத்தைக் கொண்டு போயி, வரப்பிலே கெடக்க களையெல்லாம் ஒதுக்கி, ஆத்தாங் கரையிலே குமிச்சிரு. அடுத்த பூவிலே வாரி வயல்லே தொழிக்குக்கூட விரிச்சிரலாம்.”

வெயில் தாழ்ந்து போனாலும் போதும் என்றார்.பள்ளிக்கூடம் சனி ஞாயிறு விடுமுறை. வைகாசி மாத வெயில் சித்திரைக்குக் குறைந்ததாக இல்லை. வயல் கரையை அடுத்தது ஆறு. கரை ஒரு மரமடி வீதிக்கு இருந்தது. எங்கே குவிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. ஆனி ஆடிச்சாரல் ஆரம்பிக்கும்போது வயற் கரையில் நெடு நீளமாய் காய்கறித்தோட்டம் போடுவதுண்டு. எனவே கிழக்கு ஓரமாய்க் குவிக்கலாம் என்று களைக் குப்பங்களைக் கடவத்தில் நிறைக்க ஆரம்பித்தான். தொழி சரியாகக் காயந்திருக்க வில்லை. கடவத்தைத் தூக்கிவிட யாரும் கிடையாது. தானே வெட்டித் தூக்கித் தலையில் வைக்கும் அளவுக்கு நிறைத்து, நாலைந்து நடை கொண்டுபோட்டான்.

சாரத்தை மடித்துக் கட்டி, தோளில் கிடந்த துவர்த்தை வட்ட காட்டாய் தலையில் கட்டி, கடவம் தூக்கி நடக்கையில், வியர்வையில் சூரியன் கோடுகள் கிழித்தான். மறுபடியும் களைகளை அடுக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு குப்பத்தைத் தூக்குகையில், படமெடுத்த பாம்புக் குட்டியொன்று வயலில் சாடியது. ஒன்றரைச் சாண் நீளம் இருக்கும். வெயிலில் சங்கு சக்கரம் தெளிவாகத் தெரிந்தது.கடவத்தைப் போட்டுவிட்டு ஒரே ஒட்டமாக மூச்சிரைக்க வீட்டுத் திண்ணையில் ஏறியபோது, சாதகம் எழுதத் தோதான நீளத்தில் பனையோலைக் குறுத்துக்களை நறுக்கிக் கொண்டிருந்த அப்பா நிமிர்ந்து பார்த்தார்.

“எம்லே பேயடிச்சவன் போல ஓடியாற?”

“களைக் குப்பத்துக்குக் கீழே பாம்புப்பா. குட்டிப்பாம்பு.- நல்லது -படமெடுத்துக்கிட்டு வயலுக்குள்ளே சாடுகு..”

“குட்டிப் பாம்பு என்னடா செய்யும்? அதுக்கா இப்பிடி ஓடியாந்தே? சவம் போகும். நீ போயி வாரிப்போடு.”

“ஆங்… நல்ல கதையா இருக்கு! இன்னும் எத்தனை கெடக்கோவ்? சின்னப் பயலுக்கு என்ன தெரியும்? பாத்ததுனால ஆச்சு. வசக்கேடா கொத்தீட்டுண்ணா?” அம்மா.

“அதெல்லாம் ஒண்ணுஞ் செய்யாது. பயப்பிடப்பிடாதுடா! பத்தாங்கிளாஸ் படிக்க பையன் இப்படி அடிச்சுப் பெரண்டு ஓடியாரலாமா? சரி கெடக்கட்டும். கடவத்தையாவது எடுத்துக் கிட்டு வா. வரப்பிலே கெடந்தா எவனும் தூக்கிட்டுப் போயிருவான்.” மறுபடியும் அந்த வரப்புக்குப் போக அவனுக்குப் பயமாக இருந்தது. கடும் எச்சரிக்கை உணர்வுடன், வரும் ஆவணி ஞாயிறில் நாகரம்மன் கோயிலுக்கு வருவதாய் வேண்டிக்கொண்டு, பக்கத்துத் தோப்பில் விழுந்த தேங்காய் நெற்றை யாருக்கும் தெரியாமல் எடுத்து வருவதைப் போல, கடவத்தைத் தூக்கிக்கொண்டு வந்தான்.

திரும்பவும் பெய்த மழையில் வயற்கரை மேடு குளிர்ந்து, வெயிலில் காய்ந்து, பொருக்காடிக் கிடந்தது. மண்ணைக் கொத்தி மறித்துப் போடலாம் என்றார் அப்பா.ஆற்று வண்டல் சுமந்த கரை. மண்வெட்டி ‘சொரு சொரு’ வென இறங்கியது. சற்று தூரத்தில் அப்பா, ஆற்றோரம் வளர்ந்து மண்டிக் கிடந்த தாழைப்புதர்களை வெட்டி ஒதுக்கி, வேலி அடைத்துக்கொண்டிருந்தார்.

அன்று முதல் வெட்டு வெட்டி முடித்தால், இரண்டு நாட்கள் சென்று மறுவெட்டு குறுக்காக வெட்டலாம். மண் புழுதியானால் தான் பாத்தி பிடிக்க வசமாக இருக்கும். கோழிக்கூடு நிறைய நிரந்திருக்கும் கோழிக்காரம் சுமந்து புழுதிமேல் சிதற வேண்டும். போன வருஷம் சேகரித்து வைத்திருந்த கீரைவிதை வீட்டில் இருந்தது. நல்ல செண்பகராமன்புதூர் தண்டன் கீரை. மணலோ சாம்பலோ கலந்து பாத்தியில் தூவவேண்டும். பாத்தியின் வரப்பில் வெண்டை விதைகள், சீனி அவரை விதைகள் ஊன்ற வேண்டும். வித்துக்கு விட்ட காய்த்த வெண்டை நெற்றுக்கள் வீட்டில் இருந்தன. கனகமூலம் சந்தையில் இருந்து அப்பா மிளகாய் நாற்றும் கத்திரி நாற்றும் வாங்கிவருவார். முளைக்கீரை பிடுங்கியதும் விழும் இடைவெளியில் நாற்றுக்களை நடலாம். வேலியோரம் கோழி அவரை, பீர்க்கு விதைகள் ஊன்றலாம்.

தோட்டம் அமைந்துவிட்டால் காலையிலும் மாலையிலும் வயல் கரைக்கு அது கவர்ந்து இழுக்கும். வெண்டையின் முதல் மஞ்சள் பூக்கும்!

அவனுக்குக் கீரை கடைந்தால் மட்டுமே பிடிக்கும். துவரனும் புளிக்கறியும் பிடிக்காது. வெண்டைக்காயை எப்படிக் கறி வைத்தாலும் பிடிக்காது. ஆனால் பனை நார்ப்பெட்டி நிறைய கீரை பிடுங்கி, ஆற்றில் வேர்மண் போகக் கழுவிக்கொண்டு போகப் பிடிக்கும். மடித்துக் கட்டிய சாரத்தில், பின்பக்கம், முற்றாத வெண்டைக்காய் பறித்துப் போவது பிடிக்கும். மஞ்சள் நிறத்தில் செவ்வரியோடிய காய்கள். பச்சையாய் கடித்துத் தின்ன நன்றாக இருக்கும். வெண்டைக்காயைப் பறிக்கும்போது காம்பிலும் காயிலும் ரோமம்போல இருக்கும் பூனை முள், பதமான விரலில் ‘சொருக்’கென ஏறிவிடும் சமயங்கள் உண்டு.

எங்கு சாணிக்குப்பம் கண்டாலும் இடதுகையில் உருட்டி எடுத்து வந்து பயிரின் மூட்டில் வீசும் அப்பாவைப் போல, அவனும் இப்போது சாணிக்குப்பம் கண்டால் விடுவதில்லை. ஆரோக்கியமான மாட்டின் சாணம் நல்ல கட்டியாக, உருட்டத் தோதாக. மிதமான வெதுவெதுப்புடன் இருக்கும். எருமையின் சாணத்தை ஒரு கையால் உருட்டி எடுத்து விட முடியாது. சாணத்தைக் கத்தரிகளின் மூட்டில் உதிர்த்து உதிர்த்துப் போடுவான்.

வெயிலுக்கு முகம் காட்டாமல், கிழக்குப் பார்த்து நின்று, மண் வெட்டியைப் போட்டுக்கொண்டிருந்தான். கட்டை மண்வெட்டி தான். கோடி மண்வெட்டியானால் வெட்டி வாங்க சிரமமாக இருக்கும். போட்ட மண்வெட்டியை வாங்க நினைக்கையில், மண்வெட்டியின் குறுக்கே, வால் சிக்கி, நீளமாகப் பாம்புக் குட்டியொன்று நெளிந்தது. வியர்வையைத் தாண்டி ‘சிலீரெ’னக் குளிர்ந்தது.

“யப்பா.. பாம்பு – யப்போவ் பாம்பு.” என்றான்.

“எங்கலே” என்றவாறு ஓடி வந்தார்.

முன்பு கண்டதோ, அதன் கூடப் பிறந்ததுகளில் ஒன்றோ தெரியவில்லை. இரண்டு சாண் நீளம் இருக்கும். சங்கு சக்கரம் தெரிந்தது. மண் வெட்டிப்படத்தின் வெளியே சீறியது. குட்டிச் சீறல்.

ஓடி விலகி நின்றுகொண்டு, அதன் தலையில் போட பெரிய கல்லொன்று தேடினான், காணோம். ஓரத்தில் நின்ற பூவரசின் கம்பொன்றை ஒடிக்க போனான்.

“தள்ளி நிண்ணுக்கலே… மம்பிட்டியை எதமா வாங்குனா ஓடீரும்.”

“நிண்ணுப்பா. கொண்ணுரலாம்.”

“வேண்டாண்டா… வால்லதான லேசாப் பட்டிருக்கும். பொழச்சுக்கிடும்.”

“நல்ல பாம்பை அடிச்சுக் கொல்லாம விடப்பிடாதுப்பா.”

“நாம வேணும்ணாடா செய்தோம். ஒண்ணுஞ் செய்யாது.நீ அங்கிணயே நில்லு, பயப்பிடாம.”

பின்புறம் தள்ளி நின்று, மண்வெட்டியின் வேப்பந்தாங்கியை வசமாய்ப் பிடித்து, வெடுக்கென உயர்த்தினார். வெட்டுப்பட்ட வாலின் கடைசியை இழுத்துக்கொண்டு, சங்குப் பூப்போல படத்தை உயர்த்திக் கொண்டு, பாம்புக் குட்டி வேலிக்கு ஓடிப் போயிற்று.

நெஞ்சு அடிக்கும் சத்தம் காதில் விழுந்தது. வேலை செய்யும் போதிருந்த உற்சாகம் வடிந்துவிட்டது. மீதிக்கரையை அன்று அப்பாதான் வெட்டினார். தோட்டத்துக்கு வரும்போதெல்லாம், அடிபட்ட காயத்தை மனதில் வஞ்சம் வைத்து, எங்காவது ஒளிந்து கதுக்கட்டி நின்று, பின்னங் குதிகாலில் ஒரு போடு போட்டு விடுமோ என்ற பயம் சின்னாட்கள் இருந்தன.

ஆனி ஆடிச் சாரல் தொடங்கிவிட்டது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு சீற்றத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. பிரம்மாண்ட மான பாம்பொன்று சீறிப் பாய்வதைப்போல, வழக்கமாக வெளிக்குப் போகும் இடங்கள் எல்லாம் கசகசவெனக் கிடந்தன. அதிகம் அடைசலும் சேற்றுப் படிவும் இல்லாத, பூச்சி முட்கள் படர்ந்திருந்த, புன்னைமர மூட்டொன்றில் குந்தி இருந்தபோது, உலக நினைவுகள் தப்பிப் போயின. காற்றின் சன்னமான சீறலில் கண்ணுயர்த்திய போது தலைக்கு மேலிருந்த புன்னை மர முண்டின் போட்டில் இருந்து ஓரடி வெளிப் போந்து, காற்றை இழுத்து, படத்தை விரித்து, யோசனையில் நின்றுகொண்டிருந்தது பாம்பு. காற்றில் துழாவிய நாக்கு சம்பாத் தவிட்டின் நிறம். மூக்கின் ஈரப் பளபளப்பு, அசாத்தியமான ஈர்க்கும் பயங்கரம். எப்படி ஓடிக் கரையடைந்தான் என்பது நினைவில்லை. கரையில் நின்றபோது உடல் வெடவெடத்துக் கொண்டிருந்தது.

அம்மா சர்ப்பக்குற்றம் என்று தீவிரமாக நம்பினாள் எப்படியும் ஆவணி மாத ஞாயிறுகளில் விரதம் இருக்க வேண்டும். என்றாள். கோயிலுக்குப் போய் நாகருக்கு உப்பும் நல்லமிளகும் போட்டு, நாகரம்மனுக்குப் பாலூற்ற வேண்டும் என்றாள்- ஞாயிற்றுக்கிழமை விரதம் என்றால், முதலாவது, அன்று வீட்டில் மீன்கறி வைக்க மாட்டாள்.காலையில் குளித்து, குறுக்குப் பாதையில் நடந்து,நாலுமைல் தொலைவில் இருக்கும் நாகரம்மன் கோவிலுக்குப் போய் பாலூற்றி வந்தபிறகுதான் சாப்பாடு. எல்லோரும் கொண்டு போகும் பாலை ஊற்ற பெரிய வெண்கல உருளி வைத்திருந்தனர். விரதம் பொங்கிய பச்சரிசிச்சோறு. சோற்றில் பிசைந்துகொள்ள, காணத் துவையல், தேங்காய்த் துவையல், கொத்த மல்லித் துவையல். அல்லது கீரையும் கீரைத்தண்டும் போட்டுப் புளிக்கறி, மோர், நல்ல காலத்தில், பொங்கல் அன்றே, பச்சரிசிச் சோறு தின்பது என்பது கொல்லக் கொண்டு போவது போல அப்பா சிலசமயம் கோட்டயம் சர்க்கரை உருண்டையும் தேங்காய்க் கீற்றுக்களும் வைத்துக் கொண்டு உப்புப்போடாத பச்சரிசிப் பொங்கல் சோறு தின்பதைக் காண ஆச்சரியமாக இருக்கும். இந்த ஆவணிக்கு ஞாயிறுகள் நான்கா ஐந்தா என்று காலண்டரில் பார்க்க வேண்டும்.

அப்பா, அம்மாவிடம் சமாதானம் சொன்னார்.

“அவன் மகம் நட்சத்திரம். சிம்ம ராசி. தனுசு லக்னம். பாம்பு அவனை ஒண்ணும் செய்யாது.”

அம்மா சமாதானம் ஆகவில்லை.

விரதம் இருக்கும்போது, ஒரு நாள் பிற்பகல், கூட்டி வைத்திருந்த தொழுத்துச் சாணியை, மூத்திரச் சேறு முதுகில், மார்பில் வடிய, உரக்குண்டுக்குச் சுமந்தான். முந்திய நாள் தம்பியின் முறை, அன்று அவன் முறை. பிரம்புக் குட்டையை தொழுவின் மூலையில் வீசிவிட்டு, குளிக்கப் புறப்பட்டான். தலை முழுகிக் குளித்தாலும் சாணி மூத்திர வாடை ஒளிவட்டம் போல மூக்கைச் சுற்றிக் கிடக்கும்.

வழக்கமாகக் குளிக்கும் படித்துறையில் அன்று பெண்டுகள் நிறையப்பேர் அடித்துத் துவைத்துக்கொண்டும் குளித்துக் கொண்டும் படித்துறை வரிக்கல்லில் மஞ்சள் உரைத்துக்கொண்டும் ஆவாரம் கொழுந்தைச் சதைத்துக் கொண்டும் இருந்தனர். சற்று உயரே போகலாம் என்று தேரேகால் பிரியும் பாலத்தைத் தாண்டி, பழையாற்றங்கரையில் வடக்கு நோக்கி நடந்தான். எதிரே, எரிக்கச் சுள்ளி பொறுக்கி வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தவனிடம் பேசிவிட்டு, ஆற்றில் இறங்கினான்.

இருகரைகளிலும் நெடுந்தொலைவுக்கு ஆட்கள் இல்லை. நிக்கரிலும் மாட்டு மூத்திரச் சொட்டுக்கள் உலர்ந்து கொண் டிருந்தன. துவைத்தால் அது காயும்வரை அப்பாவின் துவர்த்தைத் தான் கட்டிக்கொண்டு நிற்க வேண்டும். சற்று யோசித்துவிட்டு, அங்கு மிங்கும் ஆள் பார்த்து, நிக்கரை உரிந்து கரையில் வீசிவிட்டு, ஆற்றில் பாய்ந்தான்.

தொடர்ந்து பெய்த ஆனியாடிச் சாரலில் குதித்து ஓடிய ஆறு, அலுப்புத்தீர தளர்ந்து தணிந்து அசைந்து கொண்டிருந்தது. இல்லாத ஆற்றின் வேகத்துக்கு எதிர்நீச்சல் போட்டு, சற்றுத்தூரம் போய்த் திரும்பினான். வெயிலுக்கு சுகமாக இருந்தது. தண்ணீருக்குள் அமிழ்ந்து கிடந்து மூச்சுப் பிடித்தான். மூச்சுப் பிடிக்கும் நேரம் கணக்கிட, ஆயிரத்தொன்று, ஆயிரத்திரண்டு, ஆயிரத்தி மூன்று எனத் தொடர்ந்து எண்ணினான். மூன்றாவது முறையாக, மேலும் மூச்சடக்க முடியாமல் மேலே வந்து தலையைச் சிலுப்பியபோது, விளக்குப்போல் தூக்கிப்பிடித்த படம் கொண்டு, பாம்பொன்று, கைக்கெட்டும் தூரத்தில், ஆற்றை நீந்திக் கடந்து கொண்டிருந்தது.

கணநேரம் மூச்சு நின்று துடித்தது. தன் தலைக்கு மேலேதான் போயிற்றோ என்றொரு சந்தேகம். கணங்களுக்கு முன்னால் ஆலமுண்ட சிவனாய், கழுத்தில் சுற்றிய அரவுடன் நின்று கொண் டிருக்க நேர்ந்திருக்கலாம். ஆற்றோரம் சாய்ந்து நின்ற ஏராளமான புன்னை மரங்களின் கிளைகளில் ஒன்றிலிருந்து தவறி விழுந்து நீந்துகிறதோ என்று தோன்றியது. இந்த நட்ட நடு மத்தியானத்தில், அக்கரையில் அதற்கென்ன அவசர சோலி என்றும் புலனாகவில்லை. எவ்வாறாயினும் கணங்களில் உயிர் தப்பி வருவதாகத் தோன்றியது.

அம்மா, அப்பாவிடம் முறையீடு போலச் சொன்னாள்.

“எதாம் பொரிச்சம் பாத்துண்ணாலும் சொல்லுங்களேன். இந்தப் பயலை ஏன் இப்படி சுத்திச் சுத்தி வருகுண்ணு?”

போன கோடையில், பங்குனி சித்திரை மாதவெளியில், பட்டு நின்ற முள்ளு முருங்கைத் தடியை அசைத்து அசைத்துச் சாய்த்து வேலியில் இருந்து பிடுங்கி விறகுக்காகுமென அவனும் தம்பியுமாய்த் தோளில் சுமந்து வீட்டுக்கும் மாட்டுத் தொழுவுக்கும் இடையில் இருந்த புறக்கடை முற்றத்தில் போட்டபோது, முள்முருங்கைத் தடியின் காய்ந்த பொருக்காடியிருந்த பட்டையின் உள்ளே இருந்து சாடிய ‘எட்டடி விரியனை’ தம்பியும் அவனுமாய் அடித்துக் கொன்றதை அம்மா மறந்து போயிருப்பாள். ஒருவேளை, அது படமெடுக்காததால் பொருட்படுத்தி இருக்கமாட்டாள். அல்லது நல்ல பாம்பை விட எட்டடி விரியன் விஷத்தில் இளைத்தவன் அல்ல என்பதை அறிந்திருக்க மாட்டாள். வேறு நினைவறிந்து எந்தப் பாம்புக்கும் கெடுதல் செய்த ஞாபகத் தடம் இல்லை.

பள்ளிக்குப் போகையில், மற்ற பயல்கள், வாய்க்காலில் ஓடும் தண்ணீர்ப் பாம்பைப் பிடித்து, வால்புற்றிச் சுழற்றி வீசி இருக் கிறார்கள். தூரத்தில் ஓடும் மஞ்சள் சாரைப் பாம்பை குறி தப்பாமல் எறிந்திருக்கிறார்கள். கரையான் புற்றை உடைக்கும்போது சிக்கும் மண்ணுள்ளிப் பாம்பைக் கம்பால் கோரிவந்த தீயில் போட்டிருக் கிறார்கள். பச்சைப் பாம்பின் கழுத்தைப் பிடித்துக்கொண்டு, சமையல் மணக்க, கன்னிகளை, தாய்மாரை, பல்விழுந்த கிழவிகளை உருவச் சொல்லி இருக்கிறார்கள். அவன் பயத்தாலும் அருவருப் பாலும் ஓதுங்கிப் போகிறவன். பின்பும் ஏனிவை காலைச் சுற்றுகின்றன?

ஒரேயொரு முறை சாத்தாங்கோயில் அரசமரத்து மூட்டில், வரிசை செய்யப்பட்டிருந்த நாகர் கூட்டத்தில், ஆளில்லாத பின் மாலையில், மற்ற பயல்களுடன் சேர்ந்து மூத்திரம் பெய்தது மட்டும் ஞாபகத்துக்கு வந்தது. அதை, அடுத்தநாள் பூசைக்கு வந்த போற்றி தண்ணீர்விட்டு அடித்துக் கழுவி விட்டிருப்பார். அதற்குப் போய் இத்தனை பாம்புகள் தன்னைச் சுற்றி வருமா என்று தெரியவில்லை. அதுவும் முதலில் செய்தவனையும் அடுத்துத் தூண்டியவனையும் விட்டுவிட்டு, கடைசியில், கேலிக்கு அஞ்சி, வராத மூத்திரத்தை முக்கிமுக்கித் தெளித்தவன் தலைமீது எதற்கு இந்த முற்றுகை?

அப்பா சொன்னார், “உம்மகனுக்கு ஒண்ணும் ஆகாது. எழுபத்தினாலு வயசு வரை ஆயுசு இருக்கு. நாளைக்கு எதுக்கும் ஒருக்கக்கூடி சாதகத்தைப் பார்க்கட்டும், ஏதாம் ராகு-கேது தோஷம் இருக்காண்ணு!”

இரவுகளில் ஒரே பாம்புப் படையெடுப்பாக இருந்தது. காதுக்குள் மூக்குக்குள் எல்லாம் பாம்புகள் நுழைவதைப் போல. ஒன்று ஏதோ தெலுங்கு தேச ராஜகுமாரிப் பாம்பாக இருக்க வேண்டும். விடாமல் துரத்தித் துரத்தி வந்தது. சினிமா வால் போஸ்டர்களில் நாககன்னிகளைப் பார்த்தாலே பதறிப் போயிற்று. இதுவரை கேட்டிருந்த எல்லாப் பாம்புக் கதைகளும் மொத்தமாக மனதை அடைத்துக் கொண்டன. இனிமேல் பாம்பு சினிமாக்களே பார்ப்பதில்லை என்று தீர்மானித்தான்.

அடுத்த நாள் காலையில், கதிராகித் தலைசாய்ந்து நிற்கும் பயிருக்குத் தளைகொத்தி வைத்துவிட்டு, ஆற்றில் இறங்கிக் குளித்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, சற்று நேரம் கிடக்கப் படுத்து, எழுந்திருந்து முகம் கழுவி பஞ்சாங்கமும் கையுமாக அப்பா உட்கார்ந்திருந்தபோது அவன் பள்ளி விட்டு வந்தான்.

படிப்புரையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வாழைத் தண்டுப் புளிக்கறியும் காணத் துவையலும் அப்பா சாக்குக் கட்டியால் சிலேட்டில் ஏதேதோ கணக்குகள் போட்டுக் கொண்டிருந்தார். செவ்வகமாக வரைந்திருந்ததனுள் பன்னிரண்டு கட்டங்கள். மாந்தி உட்பட சகலகிரக நாயகர்களும் சிற்சில கட்டங்களில் நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.

கணக்குப் போட்டு முடிந்து, அப்பா தலை நிமிர்ந்து அம்மாவிடம் சொன்னார்-

“இவுனுக்கு எட்டாமடத்திலே சனி உக்கார்ந்திருந்தான். குருவும் நாலிலேருந்து அஞ்சாம் மடத்துக்குப் போயாச்சு.அதுனால குரு அனுகூலமும் இல்ல. இன்னும் ரெண்டு வருஷம் பாடுபடுத்திக் கிட்டுத்தான் சனி மாறுவான்.”

“அதுக்கு ஒண்ணும் பரிகாரம் இல்லையா?”

“என்ன பரிகாரம்? சனிக்கிழமை விரதமிருந்து நவக்கிரகத்தைச் -சுத்தலாம். எப்பிடியும் அவன் வேலையை அவன் காட்டத்தான் செய்வான்!”

“வேற ஒண்ணும்..”

“வேற என்ன செய்வான்? ஆயுசு பெலமாத்தான் இருக்கு. ஆனா கொஞ்சம் சூச்சிக்கணும்.”

“சனிக்கிழமை விரதம் இருந்தா பாம்பு வராதாப்பா?”

“பாம்பு என்னடா செய்யப் போகு? அரணை, ஒந்தான், எலி போல அதுவும் ஒரு சீவராசி. வயக்காட்டிலே கெடந்தா நமக்கு நல்லதுதான். எலி உவத்திரவம் இருக்காது. அது வழிக்கு நாம போகல்லேண்ணா அது நம்ம வழிக்கு வராது,”

“பயமா இருக்குல்லாப்பா?”

“பயந்து என்னடா ஆகும்? வாறதை வழியிலே செறுக்க முடியுமா? தைரியமாட்டு இரி. ஒண்ணும் ஆகாது.”

தட்டத்தை கழுவப்போட்டு, கை கழுவி வாய் கொப்பளித்து விளையாடப் போக யத்தனிக்கையில், முறையாம்பிள்ளை பாட்டா எதிரே வந்தார்.

“என்னா சோசியர்வாள் வீட்ல உண்டா? நல்லதாப் போச்சு. பஞ்சாங்கமும் கையுமா இருக்கே!”

“அண்ணன் வாரும். இரியும். என்னா, பார்வதியைப் பெறக் கூட்டீட்டு வரணுமா?”

“அதுக்கு இன்னும் நாளு கெடக்குல்லா? கார்த்திகை மாசம் நாள் பார்த்தாப் போரும். நான் வந்தது அதுக்கில்லே. நேத்தைக்கு நம்ம ஊர் முதலடிமாரு கூட்டம் இருந்தில்லா. அதுல பேசிக்கிட்டா எல்லாரும். நம்ம சுடுகாடு மானம் பாத்துகிட்டுக் கெடக்கு. மழை வந்தா பெரிய சல்லியமாப் போகு எரிஞ்சுக்கிட்டுருக்க பொணத்துக்கு காமணம் போட வேண்டியதிருக்கு. போன மாசம், உனக்குத் தெரியுமே, நம்மசொள்ள முத்துக்கு மாமியாரு செத்த அண்ணைக்கு அடை மழையில்லா. மே காத்து வேற. காமணம் போட்டும் பிரயோஜன மில்லை. காத்து தூக்கி வீசிட்டு. ராத்திரி இந்தப் பயக்க போயி எட்டிப் பாத்திருக்கணும். காலம்பற, காக்கா கரையச்சிலே போயிப் பார்த்தா, கௌவி அரைவேக்காட்டிலே எந்திரிச்சு- உக்காந்திருக்கா. தண்ணி கொளம் மாதிரி கெட்டிக் கெடக்கு சுத்தி. பின்னே திரும்ப வெறகு மண்ணெண்ணை எல்லாம் கொண்டு போயி சரியாக்கிச்சு. அதான், எதானாலும் ஊர் வகையிலே பணம் இருக்கு. சுடுகாட்டைச் சுத்தி அரையளவு உயரத்துக்கு கல்லுக்கட்டி, மேலே தகரத்திலே ஒரு கூரையும் போட்டிரலாம்ணு.”

“போட்டிர வேண்டியதுதான்.”

“அதுக்கு கல்லு எறக்க நீ ஒரு நாளு பாத்துச் சொல்லு.” “வேலை எப்பம் தொடங்கப் போறா?”

“இப்பம், புரட்டாசியில தொடங்கீர வேண்டியதுதான். தீர்மானிச்சாச்சுண்ணா, சவம் சட்டுப்புட்டுண்ணு முடிச்சுப் போட்டிர வேண்டியது தாலா”

விளையாடப் போவதைத் தள்ளிப் போட்டுவிட்டு, அவன் பாடு கேட்டுக்கொண்டிருந்தான்.

பழையாற்றின் மேற்குக் கரையில் சுடுகாடு. முதலில் பக்கத்து கிராமத்து ஐயர்மார்களுக்கானது. நல்ல திருத்தமாக ஒதுக்கிக் கட்டப் பட்டிருந்தது.அடுத்தது ஊர்ச் சுடுகாடு. சுடுகாட்டின் மேற்கில் ஒரு மாமரம். நல்ல புளிச்சி மாவு. கல்லெறிந்தும் ஏறிப் பறித்தும் காய்கள் கொள்ளை போகும். சின்ன ஊராகையால் எப்போதாவதுதான் பிணம் விழும். சுடுகாட்டுக்கு அதிக உபயோகம் இல்லை. மாங்காய் பறித்து உப்புமிளகாய் நுணுக்கித் தின்னவும் பீடி குடித்துப் பழகவும் ஐயர்களின் மண்டபத்தில் உட்கார்ந்து மாடு மேய்க்கும் பையன்கள் நாயும் புலியும் ஆடவும் நல்ல தோதுண்டு. கல்லெறிந்தால் கல்லுக் குழியில் விழும் மாங்காயை வெறுமனே துடைத்துக்கொள்வதோடு சரி.

மாமரத்து மூட்டில் கிழக்குப் பார்த்து, வீரமாய் முழித்துக் கொண்டு, கல்லில் அடித்த சுடலை. குடலைக்கும் கூரை கிடையாது. சுடுகாட்டுக்கும் கூரைகிடையாது.

அப்பா மும்முரமாய் பஞ்சாங்கத்தைப் புரட்டிக்கொண்டிருந்தார்.

“புரட்டாசிபதினெட்டாம் தேதி கல்லு இறக்கீரலாம்”

“புதனாச்சையா வருகு?”

“இல்லண்ணேன். வெள்ளியாச்சை”

சுடுகாட்டு வேலை சுறுசுறுப்பாய் நடந்துகொண்டிருந்தது. கைப்பிடி சுவர்கட்ட வானம் தோண்டுகையில் கலைந்த புற்றில் இருந்து தாயும் தகப்பனும் குட்டிகளுமாய் எட்டு நல்ல பாம்புகள் அடித்ததாகச் சொன்னார்கள். ஒன்றோ இரண்டோ வேலிக்குள் புகுந்து ஓடிவிட்டன வாம். சுடுகாட்டுக்கு சற்றுத்தள்ளி, குழி தோண்டி, எட்டையும் புதைத்து, பாலூற்றியபோது பார்க்க அவனும் போயிருந்தான்.

மறுபடியும் பயம் ஓலைத்தீயாய் மதமதத்து எரிந்தது.

ஒருசமயம், தனது எதிரிகளில் எட்டுப்பேர் குறைந்து போனதாகவும் தோன்றியது.

வயல்கள் ஆங்காங்கே அறுவடையாகிக் கொண்டிருந்தன. காற்றில் சம்பாக் கதிர்களின் வாசனை நிரம்பி இருந்தது.

புதிதாய்க் கட்டி முடிக்கப்பட்ட அந்தச் சுடுகாட்டை நோக்கிச் சின்ன தாய் ஒரு சவ ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது.

மேற்கில் அடர்ந்திருந்த கருமேகக் கூட்டங்களின் ஊடே சூரியக் கதிர்கள் சாய்வாய்ப் படர்ந்திருந்தன.

கொட்டும் முழக்கும் தேர்ப்பாடையும் நடை விரிப்பும் இல்லாத சாதாரண மூங்கில் பாடை.

பின்னால் இரண்டு பேர் தணிந்த குரலில் உரையாடிக்கொண்டு வந்தனர்.

“சவம் கொம்பேறி மூக்கன்னா சும்மயா? வெசம் கூடின சரக்கில்லா! கொத்தின ஆளுக்கு சிதை எரியதை மரத்திலே ஏறிக் கெடந்துல்லா பாக்குமாம்.”

“எல்லாம் நேரம். சூடடிக்கு மாடு அவுக்க தொழுத்துக்குப் போனவன் ஒரு பேட்ரி லைட்டோ அரிக்கன் லேம்போ கொண்டுகிட்டு போகப் பிடாது, இருட்டிலே என்னத்தைத் தெரியும்? இவன் வசக்கேடா சவுண்டீட்டான் போலிருக்… ஒரே போடா போட்டிற்று-”

“உடனே சர்க்கார் ஆசூத்திரிக்குக் கொண்டு போயிருந்தா, செல சமயம் பொழச்சிருப்பான்”

“ராத்திரிரெண்டரை மணிக்கு நடந்திருக்குப்பா வைத்யனாரு பாட்டாவை எழுப்பீட்டு வந்து பாக்கச்சிலேயே நாடி விழ ஆரம்பிச்சிட்டு பொறவு வண்டியை இழுத்து, காளையை அவுத்து.- கோட்டாத்து மேட்டிலே வண்டி ஏறச்சிலே சூரியன் ஊதிச்சாச்சு. ஆஸ்பத்ரி கேட்டு வாறதுக்கு முந்தியே தலை தொங்கிப் போச்சு.”

“என்னத்த மனுசன் காரியம். அவனுக்கு என்னா ஒரு அம்பத்தஞ்சு அம்பத்தாறு வயசு இருக்குமா?”

“இருக்கும். அஞ்சாறு கண்ணுங்கயந்தலைகள். முக்காக் கோட்டை விதைப்பாட்டை வச்சுகிட்டு என்னுண்ணு ஒப்பேத்தப் போறாளோ?”

கேட்டுக்கொண்டு, கம்பூன்றி நடந்து வந்து பாட்டையா சொன்னார்.

“பேரப்பிள்ளை! நேரம் வந்தா பாம்பு கடிச்சுஞ் சாவான். பல்லுவலி வந்தாலும் சாவான். அதுல்ல காரியம்…சுடுகாட்டுச் சுடலையை நீ சாமானியமாவா நெனைச்சே? புதுசா சுடுகாடு கெட்டுனாள்ளாடே? ஒரு சிறப்பு கழிச்சாளா? நாம சொன்னா சாகிற காலத்திலே கெழவன் பொலம்புகாம்ணு சொல்லுவியோ!”

“பாட்டா, அதுக்கு பாவப்பட்ட சோசியரு என்ன செய்வாரு?”

“யாருடா இவன் முட்டாக்… சுடுகாடு கெட்டுகதுக்கு கல்லு இறக்க யாருடா நாளு குறிச்சா? இவன் செய்யலாமா ஒரு தொழிலாளி? சரி! நாளுதான் குறிச்சுக்குடுத்தான்.அதுக்குப் பொறவு செய்ய வேண்டிய காரியங்களைச் சொன்னாது?”

“அப்பம் பாட்டா சொல்லுகது, சுடுகாட்டுக்கு முதல் பலிண்ணா?”

“சந்தேகமா பின்னே? விண்ணாணமாப் பேசினாப் போராது. காரியத்திலேயும் கணக்கா இருக்கணும். சுடலை பிழை பொறுக் காதுடா!”

“பாட்டா இப்பம் சொல்லுகியோ! முன்னே சொல்லீருக்கப் பிடாதா?”

“சொன்னம்லே! எவன் கேட்டான்? பாட்டாக்கு பல்லில்லாத காலத்திலே ஆட்டுக்கறி திங்க ஆசை வந்திட்டுண்ணு பரிகாசம் செய்தானுகோ. இப்பம் அம்மாண்ணா வருமா? ஆத்தாண்ணா வருமா?”

“பாட்டா, அதுக்கு சாமி கொண்டாடி கிட்டயோ முதலடி கிட்டயோ போயிக் கேக்க வேண்டியதுதாலா! பாவப்பட்டவனைப் பலி எடுக்கது சரியா?”

“அது அவனுக்குத் தெரியும்டா. எது சரி, எது தப்புண்ணு.. வெளைச்சல் பேசாத என்னா?”

புதிய சுடுகாட்டின் நிழல் தாங்கலில் பாடையைக் கொண்டு இறக்கினார்கள்.

மாமனின் தோளில் சாய்ந்தபடி அவன் ஆற்றங்கரை மேட்டிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான்.

எல்லா பயமும் தெளிந்ததோர் சூன்யத்தில் குத்தி நின்றது மனம்.

– நன்றி (https://nanjilnadan.com/2011/10/22/காலக்கணக்கு/)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *