நஷ்டமே லாபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 2, 2023
பார்வையிட்டோர்: 2,262 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவள் தன் துணைவியாக வந்து சேராதது தனது வாழ்க்கையின் பேரிழப்பு ஆகும் என்று ராஜாகிருஷ்ணன் நம்பினான் தன் வாழ்வில் மலரவேண்டிய வசந்தம் தோன்றாமலே, வரண்ட கடுமையான கோடை புகுந்து தன்னுடைய இளமைக் கனவுகளை, இனிமை நினைவுகளை, ஆசைத் திட்டங்களை எல்லாம் தீய்த்துக் கருக்கிவிட்டது என்று அவன் உள்ளம் சதா குமைந்து கொண்டிருந்தது.

அவன் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தான்!. அவளை மையமாக்கி எத்தனே எத்தனை இன்பக் கனவுகள், ஆசைக் காவியங்கள் கற்பனையில் ஆக்கி மகிழ்ந்து வந்தான்: “அடி வசந்தா, அனைத்தையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டாயேடி, பாவி!” என்று ராஜாகிருஷ்ணன் மனம் அடிக்கடி கொதித்துக் குமுறுவது வழக்கமாயிற்று.

வசந்தா…வசந்தா…வசந்தா, . எந்தப் பெயரை ஜெபிப்பது அவனுக்கு முன்பு இன்பக் கிளர்வும் கிளுகிளுப்பும் உண்டாக்கியதோ, அதுவே இப்போது ஆத்திரத்தை, கசப்பை, வெறுப்பைக் கிளறிவிடும் சொல்லாக மாறியிருந்தது. ஆயினும் அதை அவன் மனசினால் நினைக்காதிருக்க இயலவில்லை.

-ஏடி வசந்தா, வஞ்சனேயின் திருஉருவே! நீ பெரிய நடிப்புககாரி. என்ன பசப்புகள் பசப்பினாய் ஏமாற்ற்களை ஏமாற்று என்று தெரியவிடாதபடி நடித்து என் மீதே உனக்கு அளவிலா ஆசை என்பதுபோல் பாவனைகள் பண்ணி…சமயம் வத்தபோது பணமும் காரும் பகட்டும் பெருமையும் கொண்ட எவனோ வெறும்பயலுக்கு மணமகள் என்று மின்னி மினுக்கிச் சிங்காரித்துச் சிரித்துக்கொண்டு போய்விட்டாயே.

முந்திய உனது பேச்சுகளும் சிரிப்புகளும், கொஞ்சுதல்களும் செயல்களும் உண்மையானவை என்றால், உன் உள்ளத்து உணர்ச்சிகளின் ஊற்றெடுப்ப்கள் என்றால், புதிய ஏற்பாட்டுக்கு இணங்காமல் நீ என்னோடு அல்லவா வந்திருக்கவேண்டும்? கள்ளி,வஞ்சகி, ஏமாற்றுக்காரி…

பெருமூச்செறிந்து, கசப்போடு கரித்துக் கொட்டுவதே அவனுடைய வாழ்க்கை நியதி ஆகிவிட்டது.

வசந்தா தனக்கில்லாமல் போய்விடக்கூடும் என்று ராஜம்கிருஷ்ணன் எண்ணியதே இல்லை. எண்ணிப் பார்க்க தோன்றக்கூட இல்லை அவனுக்கு. அவள் சதா அவனோடு சிரித்து விளையாடிக் கலகலத்துத் திரிந்து கொண்டிருந்தாள். எதிரில் இல்லாதபோது அவள் நினைப்பாகவும் தூக்கத்தில் கனவுகளாகவும் அவள் அவனுள் நிறைந்திருந்தாள். கவலை என்பதறியாக் கவிதை அவள். அவனது கவலையையும் பொங்கி எழும் தன் சிரிப்பால், இனிய பேச்சால், போக்கிவிடும் களிப்பின் ஊற்று. காட்சிக்கு இனிய ஓவியம், அவள் அசைவுகள் தனி நாடகம். அவன் ரசனைக்கு இனிய இலக்கியம்.

வசந்தா சூரியனின் பொன்னொளி போல் அவன் வாழ்வில் பிரவேசித்தாள்.

அப்போது அவளுக்குப் பதினாலு அல்லது பதினைந்து வயதிருக்கலாம். தோழிகளோடு கலகலவெனச் சிரித்து, கலீரெனப் பேசி, அவள் ஓடிவிளையாடுவதை அவன் தன் அறையிலிருந்தே கவனித்து ரசிப்பது வழக்கம். அந்த அறைக்கு அண்மையில்தான் அவன் குடிவந்திருந்தான். அவள் வீடு அதன் அருகிலேயே இருந்தது.

ஒருநாள் அவள் திடுமென அந்த அறைக்குள் புகுந்தாள். “நான் அங்கே இங்கே போகிற போதும் வருகிற போதும், என்னேயே, என் முகத்தையே கூர்ந்து பார்க்கிறீர்களே? அங்கே என்ன இருக்குதாம்?’ என்று கேட்டாள்.

அவள் அப்படிவந்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்பாள் என்று ராஜாகிருஷ்ணன் எண்ணியவன் அல்லன். அதனல் அவன் தயங்கினன். சிறிது குழம்பினான். பிறகு அவனுக்கே உரிய இயல்பான துணிச்சலோடு சொன்னான்:

‘கருவண்டுக் கண்கள் சுழலுது. குமிழ் மூக்கு இருக்கு, கண்ணாடிக் கன்னங்களும், பிறை நிலவு நெற்றியும், பழச்சுளை உதடுகளும் இருக்கு எல்லாவற்றிலும் அழகு கொஞ்சுது சிரிக்குது!.’

அவளுக்கு வெட்கமாவது வெட்கம்! இருந்தாலும், அந்தப் பேச்சு அவளுக்கு இனித்தது என்பதை அவள் அங்கிருந்து திரும்பி ஓடாதது எடுத்துக் காட்டியது: முகத்தில் பூத்த செம்மையினூடே மலர்ந்த புன்சிரிப்பு சுட்டியது. தலை கவிழ்ந்த நிலையில் அவள் ஏவிய ஒரக் கண் பார்வை விளக்கியது.

“இதை விசாரிக்கத்தான் நீ இங்கே வந்தாயா?” என்று கேட்டான் அவன்.

“நீங்கள் கதை எழுதுகிறவரா?” என்று அவளும் ஒரு கேள்வியையே உதிர்த்தாள்.

“இல்லை. ரசிகன் நான்!”

“பத்திரிகை ஆபீசில் எதிலாவது வேலை பார்க்கிறீர்களா?”

“ஊகுங். ஒரு லைபிரரியில்!”

“அப்போ, எனக்குப் படிப்பதற்கு நிறையப் புத்தகம் தரனும் நீங்க.”

“அழகை ரசிப்பதற்குக் கட்டணமா, காணிக்கையா?”

அவள் சிரித்தாள். அது செஞ்சொல் கவிதையாக ஒலித்தது அவன் காதுகளில்.

பொழுது போகல்லே, போரடிக்குது. கதைப் புத்தகம் ஏதாவது வாங்கிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். நீங்க நிறையப் புத்தகங்கள் வச்சிருக்கீங்க. எப்ப பார்த்தாலும் படிச்சுக்கிட்டே இருக்கீங்க. அதனாலே உங்களிடமிருந்து…” அவள் இழுத்தாள்.

இன்பக் கதைகள் கொண்ட இரண்டு புத்தகங்களை அவன் கொடுத்தான்.

விரைவிலேயே, ‘இன்பக் கதைகள் உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ, கண்ணம்மா!’ என்ற வரியை ‘வசந்தா!’ என்று மாற்றி அவளிடமே சொல்லவேண்டிய நிலைமை அவனுக்கு ஏற்பட்டுவிட்டது.

அவள் பள்ளிக்கூடம் போகாத நேரங்களில் எல்லாம் அங்கேயே இருந்தாள். “பாடத்தில் சந்தேகம் கேட்க வந்தேன்” என்று சொல்லிக்கொண்டு வருவாள். பள்ளிப் பாடம் படிப்பது தவிர, எல்லாவற்றையும் செய்வாள். அர்த்தம் உள்ளனவும், இல்லாதனவும், சுவை உடையனவும் அல்லாதனவும் ஆக என்னென்னவற்றையோ பேசுவாள். அவன் சொல்வதிலேயே தனிச்சுவை இருந்தது அவனுக்கு.

அவள் வரும்போது அவன் படித்துக்கொண்டிருந்தால், ‘சும்மா என்ன படிப்பு!’ என்று புத்தகத்தைப் பிடுங்கி வைத்துவிட்டு, ‘நான் வருவதைக் கண்ட உடனேயே புத்தகத்தை மூடி வைக்கவேண்டாம்?’ என்று செல்லமாக அதட்டுவாள். சிரிப்பாள்.

சிரிக்காமல் இருக்க முடியாது அவளால். களங்கமிலாச் சிரிப்பை அள்ளிச் சிதறும் ஆனந்த ஊற்று அவள். ஆடாமல் அசையாமல், குதிக்காமல், துள்ளாமல் ஓடாமல் ஒரே இடத்தில் அவளால் அமைதியாக இருக்க முடியாது. உணர்வு துளும்பும் உயிர்க் கவிதை அவள்.

அவள் சுபாவங்கள் அனைத்தையும் அவன் ரசித்து மகிழ்த் தான். அவள் விளையாட்டுப் பேச்சும் சிரிப்பும் அவனுக்கும் பிடித்திருந்தன.

அந்த அறையில் உள்ள ஒவ்வொன்றையும் அவள் துழாவி ஆராய்ந்து விடுவாள். அப்படி டப்பாவைத் பார்த்தவள், ‘ஐயே, நீங்க என்ன சின்னப் பிள்ளையா!’ என்றாள். அதனுள்ளிருந்த மிட்டாய்களில் ஒன்றை எடுத்து, கண்ணாடித் தாளை உரித்துவிட்டு, வாயிலிட்டுச் சுவைத்தாள். ‘அய், நல்லாருக்கு!’ என்றாள்.

‘நான்தான் சொன்னேனே! நான் ரசிகன். இனிய விஷயங்களை ரசிப்பதற்கு வயது குறுக்கே நிற்காது. மனம் தான் வேண்டும்’ என்றான் ராஜாகிருஷ்ணன்.

வசந்தாவின் பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர், அவள் எந்நேரமும் அவன் அறையிலேயே காணப்பட்டாள்–சாப்பிடும் நேரங்களிலும், இரவு தூங்கும் நேரமும் தவிர. எப்போதும் சிரிப்பு, ஓயாத பேச்சு. எப்பவாவது பத்திரிகைகள், புத்தகங்களில் ஈடுபடுவதும் உண்டு. அவனுக்கு இனிப்புகள் பிடிக்கும் என்றால், அவனைவிட அதிகமாகவே அவை அவளுக்குப் பிடித்திருந்தன. அவன் ஆரம்பத்தில் அன்பளிப்பாக சில சில ‘ஸ்வீட்’கள் வாங்கிக் கொடுத்து வழி காட்டவும், அவள் உரிமையோடு ‘ஜாங்கிரி வேண்டும் இன்று பாதாம் அல்வா ரசமஞ்சரி வாங்கி வாங்களேன்’ ‘பெங்கால் ஸ்வீட் காஷ்மீர் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இன்று அதையே வாங்குங்கள்’ என்று ‘டைரக்ட் செய்த’ விரும்பியதைப் பெற்று மகிழ்ந்தாள். அவள் விருப்பங்களும் கோரிக்கைகளும் அவனுக்கு வெறுப்பு ஏற்படுத்தவில்லை. மகிழ்வுடன் வாங்கித் தந்தான். அவளது அந்நேரத்திய மனநிறைவை, முகமலர்ச்சியை, ஆனந்தக் களிப்பைக் கண்டு, மனம் மகிழ்வது அவன் இயல்பாகி விட்டது.

இவ்விதம் ஒடின வருடங்கள்.

அவள் அவனைத் தன்னுடன் இணைத்தே பேசிக் களித்தாள். “நம்ம வீடு” என்றே அறையைக் குறிப்பிட்டாள். ‘நமக்கு நிறைய பணம் கிடைத்தால் நாம் என்னென்ன வாங்கலாம், என்ன செய்யலாம், எங்கே போகலாம்’ என்றெல்லாம் ஆசைக் கோட்டைகள் கட்டுவாள்.

அழகான ஸாரிகள், ஜாக்கெட்டுகள், புது டிசைன் நகைகள், அடிக்கடி சினிமா பார்ப்பது, ஓட்டல்களில் விதம் விதமான தின்பண்டங்களையும் டிபன் தினுசுகளையும் வயிறாற, மனமாற தின்பது-அவள் விழிப்பு நிலையில் அளக்கும் கனவுகளில் இவை எல்லாம் அதிகம் இடம்பெறும். அனைத்தும் அவன் துணையோடு நடப்பதாகத்தான் அவள் சித்தரித்தாள்.

அவனும் வசந்தாவுக்கு அடிக்கடி அவள் விரும்பிய துணி மணிகளை வாங்கி அன்புப் பரிசுகளாக வழங்கினான். அப்படிக் கொடுப்பதில் அவனுக்கு ஒரு இன்பம். அவற்றை வாங்கி அணிந்துகொள்வதிலும் அவன் முன் காட்சிப் படுத்துவதிலும் அவளுக்கு எவ்வளவோ சந்தோஷம். அவள் அழகு மலர்ச்சியையும் ஆனந்தத் துள்ளலையும் கண்டு ரசிப்பதில் ராஜா கிருஷ்ணனுக்குத் தனி மன நிறைவு.

வசந்தா தன்னுடையவளாகத் தன் வீட்டுக்கே வந்து விடுவாள்; இவ்வளவு உரிமையோடு பழக அனுமதித்திருக்கும் பெற்ரறோர்கள் தங்கள் அருமை மகளின் விருப்பத்துக்குக் குறுக்கே நிற்கமாட்டார்கள் என்றே அவன் நம்பினான்.

காலம் அவன் நம்பிக்கையைச் சிதறடித்தது.

பணம் மிகுந்த, வசதிகள் நிறைந்த, காரும் பெரிய வீடும் தொழில் நிறுவனமும் உடைய பெரியதனக்காரர் ஒருவரின் மகனை தங்கள் மகளுக்குத் தகுந்த மணுளளுகத் தேர்ந்தெடுத் தார்கள் வசந்தாவின் பெற்றோர்கள்.

அந்த ஏற்பாட்டில் மனம் ஈடுபடாதவளாய்க் காட்டிக் கொண்டாள் வசந்தா, ராஜாகிருஷ்ணன் பற்றி அவள் அம்மாவிடம் சொல்லவும் செய்தாள். ஆனால் அனுபவம் மிகுந்த அம்மாவின் அன்பு உபதேசம் அவள் ஆசையைத் திசைதிருப்பிவிட்டது. வசதியான பங்களா; உல்லாச வாழ்வுக்கு ஏற்ற கார், பணம், இஷ்டம்போல் கிடைக்கக் கூடிய நகைகள் ஸாரிகள் வகையறா: நாகரிக ஓட்டல்களின் நவ நவமான தீனிவகைகள்-புதிய சொர்க்க வாழ்வு அவன் கனவில் குளு குளுவென ஒளி வீசியது.

அப்புறமும் அவள் சிணுங்கவில்லை; சீறவில்லை. சிரித்துக் கொண்டே புதுமனை புகுந்தாள்.

ஏமாற்றம் அடைந்த ராஜாகிருஷ்ணன்தான் சீறினான்; தன்னுள் சிடுசிடுத்தான்; “ஸினிக்” ஆனான்.

“பெரும்பாலும் பெண்கள் துணைவன் என் ஒருவனை நாடுவதும் தேடுவதும் தங்களுடைய எதிர்காலம் ஸ்திரமானதாக அமையவேண்டும் என்பதற்காகவே, சாப்பாட்டுக்கு மயக்கம் இல்லாமல், இஷ்டம்போல் உண்டு, உடுத்து, உல்லாசமாகத் திரிவதற்கு அவர்கள் நோக்கில் நல்ல கணவன்… என்றெல்லாம் அவன் மனம் ஞானமொழி பேசலாயிற்று.

என்றாலும், வசந்த போய்விட்டது தனக்கு பெரும் நஷ்டம் என்று அவன் உள்ளம் வருத்தப்படாமல் இல்லை. அப்போதெல்லாம் மனசார அவளை வசைபாடுவதும் அவன் இயல்பாகிவிட்டது.

அதன் பிறகும் அவ்வட்டாரத்தில் இருப்பது அவனுக்கு உசிதமாகப்படவில்லை. எனவே ராஜாகிருஷ்ணன் வேறொரு இடத்துக்குக் குடிபெயர்ந்தான்.

ஐந்து வருடங்கள் தம் போக்கில் ஓடிவிட்டன. தான் உண்டு, தனது புத்தகங்கள் உண்டு என்று காலம் ஓட்டி வந்தான் அவன். வசந்தாவை அவன் மறுபடி பார்க்கவே இல்லை, பார்க்கவேண்டும் என்று ஆசைப்படவும் இல்லை.

அதற்காகக் காலம் சும்மா இருந்துவிடுமா? ஒருநாள் அவர்களை மீண்டும் சந்திக்க வைத்தது.

ஒரு சினிமா தியேட்டரின் அருகே அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

அவன் ஏதோ நினைவாக நடந்துகொண்டிருந்தபோது, “என்னாங்க? ஹல்லோ ராஜாகிருஷ்ணன்!” என்ற குரல் அவனைப் பிடித்து உலுக்கி நிறுத்தியது.

அப்படி அழைத்தது யார்? ஒரு இளம் பெண். தடியாக, ரொம்பவும் தடியாக, கழுத்து-உடம்பு எல்லாம் ஒன்றாகி, குதிர் மாதிரிப் பெருத்திருந்த உருவம்…

“யார் இந்த எருமைமாடு? எங்கோ பார்த்த ஞாபகமாய்…

கால் பந்து மாதிரி உருண்டு திரண்டிருந்த தலையில் உப்பியிருந்த கன்னங்கள் மத்தியில் இருந்த முக்கும், அதை ஒட்டியிருந்த கண்களும்…

‘அடடே, வசந்தாவா!’ உண்மையான ஆச்சரியத்தோடு கவிஞன் அவன்.

எப்படி இருந்தவள் என்னமாய் மாறிப்போனாள்! ஆளே அடையாளம் தெரியாதபடி! மித மிஞ்சிய தீவனமும் சுகவாழ்வும் ஆளைக் கெடுக்கும் என்பது சரிதான்!

‘என்ன இப்படி அடையாளமே தெரியாதபடி ரொம்ப மெலிஞ்சுபோயிருக்கீங்க?’ என்று கேட்டாள் வசந்தா. ‘நலம்தானே? நல்லா இருக்கீங்களா?’

‘ஆமா ஆமா’ என்றான் அவன். ‘செளக்கியம் தானே?’

அதுதான் ஆளப் பார்த்தாலே தெரியலியா என்றது அவன் மனம்.

என் வசந்தா-என் நினைவில், உள்ளத்தில், பசுமையாக விளையாடுகிற பெண் வேறு, இத்தடிச்சி வேறு என்று பேசியது அது.

‘நேரமாகுது. பிக்சருக்குப் போகிறேன். அந்தப் பக்கமே நீங்க வர்றது இல்லே போலிருக்கு. ஒரு நாள் வாங்களேன்’ என்று சொல்விவிட்டு, அவளுக்காகக் காத்து நின்ற அம்மாளோடு சேர்ந்து போனாள் அவள்.

‘தொலை…தொலைஞ்சு போ!’ என்றது அவன் மனம்.

அவனை அறியாமலே அவனுள் ஒரு ஆனந்தம் குமிழியிட்டுக் கொப்புளித்துப் பொங்கியது; புரண்டு ஒடியது; அவனுள் எங்கும் பரவி, அவனை நனைத்து உவகைப் பெருக்கில் குளிப்பாட்டியது.

ஆடும் கவிதையாய், அசையும் ஓவியமாய், இனிய கலையாக விளங்கிய என் வசந்தா கால வேகத்தில் இப்படி மாற முடித்திருக்கிறது என்றால்! என்னோடு சேர்ந்திருந்தாலும் இப்படித்தான் ஆகியிருப்பாள். ஸ்வீட் வேணும், அது வேணும், இது வேணும் என்று கேட்டு வாங்கித் தின்று… எப்படியும் போகட்டும்! ஆளைக் கெடுத்துவிட்டாளே! இவள் என் வாழ்வில் வந்து சேராமல் போனதே நல்லதுதான். வசந்தா என் துணைவி ஆகி, இப்படிக் குண்டம்மாளாக வளர்ந்து நின்றால், உண்மை ரசிகனான என்னால் எப்படி சகித்துக்கொண்டிருக்க முடியும்? அவள் என்னை விட்டுப் போனதே எனக்கு லாபம்…அவன் முகத்தில் சிரிப்பு பரவியது. அந்த லாபத்தைக் கொண்டாட வேகமாக ஒரு ஒட்டலை நோக்கி நடந்தான் ராஜாகிருஷ்ணன்!

– ‘செளராஷ்டிரமணி’, தீபாவளி மலர் 1971, அருமையான துணை, முதற் பதிப்பு: நவம்பர் 1991, கிறுஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *