கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 1,504 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கைகளை மடக்கிக் காப்புக்களை நெஞ்சோடேயே வைத்துப் படுத்திருக்கிறாள் குழந்தை பூமணி. பக்கத்தில் ஒரு சாக்குக் கட்டிலில் இருந்தவாறே தனது மகளின் முகத்தில் வழியும் புன்னகைச் செல்வத்தை அனுபவிக்கிறான் சண்முகம்.

அவள் கனவு காண்கிறாளோ?

ஆமாம், பாதி நித்திரை தான். பிஞ்சு விரல்கள் மற்றக் கையின் காப்பைத் தடவிப் பார்த்துக் காவல் செய்கின்றன.

அடேயப்பா, அந்தக் காப்புக்களை வாங்க எவ்வளவு அடம் பிடித்தாள் அவள். தமிழர் நாகரிகத்தின் குட்டிப் பெண்ணல்லவா? நகை ஆசை இல்லாமல் போகுமா?

முகத்தில் மீண்டும் ஒரு மலர்ப் புன்னகை. ‘பூமணி, இந்தப் புன்னகை வளர்ந்து, பூரித்துப் பக்குவமாகி…’

சண்முகத்திற்குச் சிந்தனையை வளர்க்க ஆனந்தமாக இருந் தது. பெருமையும் ஓரளவு வெட்கமும் கூட.

அவனுடைய மகள் குமரியாகும் போது மிக மிக கவர்ச்சியாக இருப்பாள். அவன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நல்ல வன் கையில் கொடுத்து…..

அவள் கைகளை மெல்லத் தொடுகிறான். -“ம்ம்ம் ” – ஒரு முனகல். இன்னும் ஒரு தரம்….. செல்லமாக ஒரு திடுக் காட்டிய அசைவு. வட்டக் கருவிழிகள் மடல்கள் பிளந்து உருண்டன. அவன் கைகளை வெடுக்கென இழுத்துக் கொண்டான். ”களவெடுக்கிறாய்ய்ய் ” கோபச் சிணுங்கல். “இல்லையடி குஞ்சு. நான் இனித் தொடமாட்டேன்.

அப்பா காப்பு வாங்கித் தந்தவர் களவெடுப்பாரா?”

“அப்ப ஏன் தொட்டே ஏ ஏ'”

“ஆசைக்கு”

“ஆசைக்கா?”

வெடுக்கென்று ஒரு கேள்வி.

“பொய், களவெடுக்க….”

“குஞ்சுன்ரை காப்பை நான் களவெடுப்பேனா?”

“ம்ம்ம் “.

குழந்தை மறுபடியும் கனவு உலகில் வழுக்கி விழுந்து மகிழ்கிறது.

அன்றுதான் அவன் ஒரு ஜோடி காப்பு வாங்கிப் போட்டான். ‘கற்பூர, பீங்கான், பிளாஸ்டிக், நைலோன் வளையல்களுக்கும் தமிழ் நாட்டின் பொற்காப்புக்கு மிடையே பேதமை தெரிகிறதே இந்த நான்கு வயசுப் பெட்டைக்கு!”

சிந்தனை இன்பத்தைத் தான் அள்ளிக் கொட்டுகிறது.

‘மனம் இருந்தால் வறுமை சின்ன விஷயம். சுருட்டுக் கொட்டில் முதலாளியிடம் நான் வாங்கிய கடன் காசு ரூபா நூற்றைம்பது என்ன காசு? பத்து மாதம் கொஞ்சம் இறுக்கிப் பிடித்தால் கட்டி முடிக்கலாம். நூற்றைம்பது ரூபாய்க்காக ஒரு பச்சைக் குழந்தையின் துளிர் மனத்தைத் துவள விடலாமா?’

“இந்தாங்க நீங்க அவளுக்கு அதிகம் செல்லம் கொடுக் கிறீங்க” சண்முகத்தின் மனைவி அன்று காலையில் கண்டித்தாள். ஆனால் அவள் உதடுகளிலும் கண்களிலும் குறும்பு வர்க்கப் புன்னகை அவன் செயலையே ஆமோதித்தது.

“காப்பு ஏது?”

“செய்விச்சனான்.”

“காசு?”

“கடன் வாங்கினேன்.”

“கடனா ?”

“திருப்பிக் கொடுப்பது?”

“மாசம் பதினைந்து ரூபாயாக பத்து மாசத்தில்.”

“முடியுமா?”

“முடியாதா? நல்லம்மா நான் இனிமேல் மத்தியானச் சாப்பாட் டுக்கு வீட்டை வரயில்லை. அந்த ஒரு மணித்தியாலத்திலை ஐம்பது அறுபது சுருட்டினால் ஒரு நாளைக்கு அறுபது சதம் அதிகமாக உழைக்கலாம்.”

“சாப்பிடாமலா?”

“ஐஞ்சு மணிக்கு வந்து சாப்பிடுறேனே.”

“இந்தக் கயிட்ட மெல்லாம் எதற்கு?”

“அதற்கு -” என்று சுட்டிக் காட்டுவது போல பூமணியின் பக்கம் திரும்பினான் சண்முகம்.

“என்ரை அப்பா வாங்கித் தந்தவர்” – கைகளை பரத நாட் டிய கமல முத்திரையில் பிடித்தவாறே காப்புக்களைக் காட்டிப் புழுகிக் கொண்டிருந்தாள் பூமணி.

“என்ரை அப்பா” என்ற போது தனது மகள் அன்பைச் சந்தனமாகக் குழைத்துத் தனது உடலெல்லாம் பூசியது போல் சிலிர்த்தது சண்முகத்திற்கு.

பூமணியைச் சுற்றி அயல் வீடுகளின் ஜயா, புஷ்பா, வரதா, வாணி….. எல்லாமாக ஏழு எட்டுப் பெண் குழந்தைகள் சதுரங்க விளையாட்டுக் காய்கள் போலக் குந்தியிருந்தனர்.

பூமணி ஒரு இராசாத்திக் காயாக அவர்கள் மத்தியில் இருந் தாள். கைகளில் ஒரு சோடி தங்கக் காப்பு….. தலையில் மகுடம் என்ற யோசனையோ?

மற்றப் பிள்ளைகளின் கைகளில் தங்கம் இல்லாமலில்லை. அவர்களின் கழுத்துக்களில் கூட சின்னஞ் சிறு சங்கிலிகள். இவை தாம் ஒன்றுமறியாத பூமணியக்குத் ‘தங்கக் காப்பு’ ஆசையை மனதில் விதைத்தன. ஆனால் இன்று இந்தப் புத்தம் புதிய சோடிக்குத் தான் மகிமை. அது குழந்தை உலகமல்லவா?

சண்முகத்தின் கண்மணி பூமணிக்குக் காப்பு வந்த செய்தி புதிசாகவே இருக்கின்றது. இரு கிழமைகள் கூட காலத்தின் எல்லை யில் மறையவில்லை …. சாகவில்லை .

கைகளை மடக்கிக் காப்புக்களை நெஞ்சோடேயே வைத்து…

கைகளை மடக்கி அப்படியே வைத்திருக்கிறார்கள். குளிப் பாட்டி, பூச்சட்டை மாட்டி, சாந்துப் பொட்டு இட்டு….. முகத்தில் அதே கனவுச் சிரிப்பு.

“பாரென் நித்திரையிலை படுத்திருக்கிறது போலை தானை கிடக்கிறாள்.”

“என்னக்கா, மூன்று நாள் காய்ச்சல் தானே” தனது மூக்கைத் துடைத்து முந்தானையில் துடைக்கிறாள் மற்றவள்.

“எங்களுக்கே மனம் பதறுகுது எண்டால், பெத்தவளுக்கு எப்படி இருக்கும்?”

இனத்தவரின் இப்படியான பேச்சுக்கள் சண்முகத்தின் உள்ளத் தீயில் எண்ணெய் வார்க்கின்றன. சவப்பெட்டியில்

பக்கத்தில் அப்படியே இருந்து விட்டான்.

‘குஞ்சு……. உன்ரை அப்பா பக்கத்தில் இருக்கிறார். அப்பா காப்பு வாங்கித் தந்தவரல்லாவா?…..’

மூளை சிந்திக்க இதயம் அழுதது. ‘குஞ்சு…நீ இனிப் பேசமாட்டாயா? அப்போ , அப்பா என்று கூட கூப்பிட மாட்டாய்? ஏன் அப்படித் தானே…..? இதயம் சிந்திக்க அவன் குழந்தையைப் போல் அழுதான்.

யாரை நோவது? விதியையா? விதியின் தூதனாக வந்த பரிகாரியையா? அல்ல பரிகாரியின் உருவில் தான் விதி வந்ததோ!

மூன்று, நான்கு நாட்களுக்கு முன் பூமணிக்கு மெல்லிய காய்ச்சல். அடுத்த நாள் சாப்பாட்டை மறுத்து விட்டாள். தொண் டையில் நோவு. யாழ்ப்பாண பெரிய ஆஸ்பத்திரிக்குப் போக முத்திரைச் சந்தையடி பஸ் நிறுத்தும் இடத்தில் சண்முகம் நின்றான். அவன் இடது தோளில் பூமணி சாய்ந்திருந்தாள். வலது கை அவள் முதுகைத் தடவிக் கொடுக்கிறது.

பஸ் வரவில்லை . பரிகாரி தம்பிப்பிள்ளை தான் செம்மணி ரோட்டில் வந்தார்.

நோயாளி பக்கம் – பரிகாரி சம்பாஷணையும், பரிசோதனை யும் சந்தியிலேயே நடந்தது. கழுத்தை வருடி முதுகைத் தடவி குழந்தையின் கையைப் பிடித்து மணிக்கட்டு நாடியின் மேல் தனது வலது விரல்களை வைத்து நாதஸ்வர மேதையைப் போல் தொட்டும் தொடாமலும் மாற்றி மாற்றி விரலடித்து…….

“கழுத்தில் இரு வாய்வுக் கட்டிகள்” – நான்கு சின்ன வார்த்தைகளில் விளக்கமாக ‘டயக்னோசிஸ்’, கை மருந்துக்கு ஆலோசனையும் அனுமானமும் கையோடயே கிடைத்தன.

‘சே! பரிகாரி குழந்தையின் வாயைத் திறந்து கொஞ்சம் பார்த்திருக்கக்கூடாதா? அல்லது அந்த பஸ் தான் கொஞ்சம் முந்தி வந்திருக்கக் கூடாதா? விதியோ வியாதியோ மூன்று நாட்களிலேயே முத்தி முறுகி குழந்தையின் தொண்டையை இயமக் கைகளுடன் இறுக்கியது.

ஆஸ்பத்திரிக்குக் கார் பிடித்து ஓடினார்கள். அங்கே நெளிந்த வெள்ளித் தகடால் மெல்ல நாக்கை அமுத்த வாயைத் திறந்து வெளிச்சம் பிடித்துப் பார்த்து……. தொண்டைக் கரப்பனாம்.

“சே!.. கடைசி நேற்றாவது வந்திருக்கப்படாதா? வேதனை யுடன் டாக்டர் கேட்டார்.

பரிசோதனை அறையை விட்டு வெளியே வரும்போது கங்காணி பரஞ்சோதி – நல்லூர்ப் பையன் – ”என்ன சண்மு கண்ணை பிள்ளையைக் கொன்று போட்டாய்” என்று கவலை யுடன் ஆனால் முரட்டுத்தனமாக அங்கலாய்த்தான்.

இந்தக் கேள்விகளின் ஒலி அலைகள் எல்லாம் இப்போது அவன் காதுகளில் அங்குசங்களாகக் கிழிக்க இதயம் உளறியது. நல்லம்மாவின் தமையன் மார்க்கண்டு காப்பைக் கழற்ற கையை விலக்குகின்றான்.

“மச்சான் சுடலையில் கழற்றலாம்” என்று கூறி ‘ஓ’ வென்று கதறினான் சண்முகம். சவப்பெட்டி மூடப்பட்டது.

“ஊரார் கிடங்கு வெட்ட உற்றவையோ மண்போட்டார் அயலார் கிடங்கு வெட்ட அந்நியரோ மண்போட்டார்…..”

வீட்டுப் பெண்களின் ஒப்பாரி கேள்விகளாக, சண்முகம் விடை தெரியாது திணறினான்.

“வாய்க்காலோ மெத்தை?

வரம்போ தலைக்கணை?”… ஒரு தனி வயோதிப ஒப்பாரி கம்மிய குரலில் கிணற்றடியிலும் தொடர்ந்து கேட்டது. மனக் கவலை துலாமிதிக்கச் சண்முகம் அழுது கொண்டே சூத்திரப் பாவையைப் போல் சாய்ந்தான்.

உறவினர் வீட்டுச் சோறு பரிமாறப்படுகிறது. வாணி வீட்டுச் சோறா? ஐயா, புஷ்பா , வரதா, வாணி…… பூமணி? அவள் காப்பு!

“மச்சான் சுடலையிலை காப்பைக் கழற்ற மறந்து போனோம்” மார்க்கண்டு ஏங்கினான்.

“நீ கழற்றுவாய் என்றிருந்தேன்.”

“நீ கழற்றுவாய் என்றல்லோ நினைச்சேன்.”

“என்ன கதைக்கிறியள், காப்பைக் கழற்றவில்லையா?” நல்லம்மாவும் கேட்டாள்.

“என்ன விலை?” – சபையில் ஒருவர் செலாவணி மதிப்பில் நிலைமையைக் கணிக்கப் பார்க்கிறார்.

அடுத்த நாள் விதானை, சுகாதார வைத்தியர், நீதிபதி முதலி யோரைக் கண்டு சவக்குழியைத் தோண்டிச் சவத்திற்குப் போட்ட காப்பைக் கழற்ற அனுமதி பெற்றார்கள்.

மார்க்கண்டு மயானத்தின் ஏகாந்த அமைதியைக் கலைக்க விரும்பாதவன் போல் குழியை மெல்லத் தோண்டிக் கொண் டிருந்தான்.

பக்கத்தில் குந்தியிருந்த சண்முகத்தின் இதயம் நிறை மாதக் கருப்பையின் பிரசவத் துடிப்பைப் போல் அவதியுடன் சுருங்கிச் சுருங்கி விரிந்தது. ‘செத்த பிறப்பல்லவா? விபரீத பிரசவமல் லவா?’ யோசனை உணர்ச்சிகளை மடக்கித் திருப்ப, அதே இதயம் சில வேளைகளில் மௌன விரதம் இருந்தது.

அவன் பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தான். சவப்பெட்டி திறக்கப்பட்டது.

சண்முகத்தின் கண்ணீ ர்த் திரையூடாகச் சவம்…… அல்ல. அவன் மகள் பூமணிதான் தெரிகிறாள்.

கைகளை மடக்கி, காப்புகளை நெஞ்சோடேயே வைத்து…. அந்தக் கைகளை மெல்லத் தொடுகிறான். “குஞ்சு”

கைகளை வெடுக்கென உதறி இழுத்துக் கொள்கிறான். அவள், அப்பா வாங்கிக் கொடுத்த காப்புகளைத் தன் நெஞ் சோடேயே வைத்துக் கிடக்கிறாள்.

பெட்டியை அமைதியாக மூடிவிடுகிறான் அவன். குழியும் நிரம்புகிறது.

சண்முகத்தின் கண்ணீர் நனைந்த முகந் தசைகளின் சோக அசைவுகளோடு –

அவன் உதடுகள் படபடக்கின்றன.

“குஞ்சு, அப்பா உனக்குக் காப்பு வாங்கித் தந்தவர்….. களவெடுப்பாரா?”

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *