அவள் வாழ்க்கை நிஜங்களை வார்த்தைகளில் வடித்து வரிகளை நிரப்பிக் கொண்டிருந்தாள். அவளின் இரண்டாவது மகள் அவளிடம் சென்று என்ன மம்மி எழுதிறீங்க? எனக்கு உம்மாக்குடு! ………. கின்ர காடின்ல பட்டபிளை படம் கீறி கலர் பண்ணிக்கொண்டு வரச்சொல்லி மிஸ் சொன்னவ கீறித்தாறீங்களா மம்….! மழலை மொழி பேசும் அந்தச் சின்னவளின் வயது நாலு. படத்தைக் கீறிக் கொடுத்தவுடன் அவள் தாயின் கன்னத்தில் முத்தத்தை உதிர்த்துவிட்டு அவள் தன் அறைக்குப் போய்விட்டாள். அவள் தாயின் எண்ணங்கள் மட்டும் வண்ணத்துப் பூச்சியாகப் பறந்து வண்ணக்கனவுகளில் மிதந்தது.
அவள் பெயர் சுமித்ரா. வயது 34. அனைவரையும் சுண்டியிழுக்கும் மாநிறம். லாவகமான உடல் வாகு. சிறுவயது முதலே கண்ணாடி. நடிகை ரேவதியின் சாயல். கலகலப்பான கபாவம். அவளின் பூர்வீகம் யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய். 92இல் கனடாவுக்கு வந்து கலியாணமும் கட்டி இப்ப இரண்டு பெண்பிள்ளைகள். இப்படித்தான் வாழவேண்டும் என்று வரன்முறையை இப்போதுதான் கற்று உணர்ந்து வாழ்கின்றாள். அவளின் முன்னைய வாழ்வு எப்படியும் வாழலாம் என்ற பாங்கில் ஓடிய வசந்தக் கனவுகளில் மிதந்தாள்.
சுமித்ரா கரணவாய் கைஸ்கூல் 6ஆம் வகுப்பு மாணவி. நல்ல கெட்டிக்காரி. அவளின் தாய்மாமன் மூளாயில் வசித்து வந்தார். அவருக்கு மூன்று பெடியள். மூத்தவன் பாலன் வயது 18. பல விடயங்களிலும் ஆழ்ந்த அறிவும், எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் வல்லமை இருந்தும் ஓ.எல் பெயில். ஊர்சுற்றித் திரிவான். இந்திய இராணுவத்தின் கெடுபிடியான 87ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாலனுக்குப் பாதுகாப்பு இல்லை என்று தகப்பன் அவனை கரணவாயில் தன் சகோதரி வீட்டில் கொஞ்சநாள் இருக்கட்டும் என்று அனுப்பிவைத்தார்.
பிள்ளை! என்னடி றோட்டையே பாக்கிறாய்? இண்டைக்கு பாலன் மச்சான் வருவான் எண்டில்லே மாமா சொன்னவர், அதான் பார்க்கிறன். பெட்டிக் கடை வைத்து குடும்பம் நடத்தும் கதிரேசனும் ராமாமிர்தமும் தான் அவளின் பெற்றோர். பாலன் இந்திய ஹீரோ சைக்கிளில் ஒரு ஹீரோ மாதிரியே வந்திறங்கினான். இருவர் பார்வைகளும் சந்தித்துக் கொண்டன. இருவருக்குள்ளும் தம்பதிகள் போன்ற எண்ணம், உரிமை, பாசம், பரிவு, காதல், நட்பு எல்லாம் ஒன்றுசேரப் பிரவகித்தது. பூர்வ ஜென்ம பந்தம் என்று நம்பி தம் இளவயது எண்ணங்களுக்கு வரையறையின்றி விருந்து கொடுத்தார்கள். அவள் இன்னம் பெரிசாகக்கூட இல்லை. ஆனால் அவள் உடலின் வனப்பு வசந்தம் தேடியது. போளை அடியும், கிட்டிப்புள்ளும், பற்மின்ரனும் அவர்கள் தினமும் விளையாடி மகிழ்வர். சுமி உனக்கு என்னில் விருப்பம் இல்லையா? விருப்பம்தான், ஆனால் பயமாயிருக்கு. ஏன் பயப்பிடுறாய் நீ என்ர சொந்த மச்சாள்தானே. காதல் என்று புரியாத ஒர் விருப்பத்துக்குள் இருவரும் கட்டுண்டது எல்லோருக்கும் தெரிந்து விட்டது.
கதிரேசனின் கைகள் பாலனின் கன்னங்களில் பதிந்தன. உந்த நாயை முதல்ல வீட்டை அனுப்பு. கொண்ணனும் இந்தப் பக்கம் வரக்கூடாது……. வார்த்தைகள் எல்லாம் வரம்பு மீறி வசையாக மாறியது. பிரச்சனை பெருத்தது. அவளும் பெரிசானாள். சடங்குக்கு மட்டும் தாய்மாமன் குடும்பம் வரட்டும் என்று சமாதானம் செய்யப்பட்டது. அதன் பின்பு பிரிவு நிரந்தரமானபோது பாலன் உணர்வுகள் பரிமளிக்க அவனின் பெற்றோர்களால் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் சமரசம் பேச முனைந்தனர். ஆனால் நடந்தது……. உவன் உதவாதவன், ஊதாரி, படிக்கவும் இல்லை , தொழிலும் இல்லை, பணமும் இல்லை, பிள்ளை உவனை நம்பினால் உன்ர வாழ்க்கை அவ்வளவுதான். இஞ்ச……. பிள்ளை …. அம்மா சொன்னாக் கேப்பாயில்ல……. தினம் தினம் உபதேசம். எறும்பு ஊர கற்குழிவது போல சுமியின் மனதிலும் மாற்றம்.
பெற்றோர்களின் முன்னிலையில் இருவரின் சந்திப்பும். என்னை மறந்திடு! உன்னில் எனக்கு விருப்பம் இல்லை ….. அப்ப இந்த மூன்று வருடமாப் பழகினது…… மௌனம் மௌனம் மௌனம்……. இந்த மௌனம் சம்மதத்தின் அறிகுறியா? இல்லவே இல்லை. பாவ மன்னிப்பின் மௌனம்…… ஆணின் வீரம் எல்லாம் அரியணையில் மட்டும்தான். வாழ்க்கையில் அவன் கோழையாகி விட்டான்.
பாலன் நினைவு மாற வடிகாலாக வந்தவன் தான் கணேசதாஸ். கடைக்கு அடிக்கடி வந்து போனவனின் கடைக்கண் பார்வையில் மயங்கி காதலுற்றாள் அவள். பாடசாலையில் விளங்காத பாடங்களுக்கு விளக்கம் கொடுக்கும் தோரணையில் இருவரின் காதல் பாடமும் படிக்கப்பட்டது. எல்லாம் தெரிந்தும் கதிரேசனும் ராமாமிர்தமும் பேசாதிருந்தனர்.
கதிரேசனின் மகன் சங்கர் கனடாவில் இருந்து குடும்பத் தினரை கொழும்பு வந்தால் தான் கனடா கூப்பிடுவதாகச் சொல்ல, கதிரேசன் குடும்பம் செட்டித் தெருவில் சில காலம் செற்றிலானது. பொழுதுபோகாத சுமிக்கு போக்கிடம் சிங்களக் கிளாஸ்தான். பெரும்பான்மை இனத்தவனின் பெருமைப் பேச்சில் கணேசதாசனும் காணாமல் போனான். இப்போ அவள் உள்ளம் எல்லாம் சுனில்தான். இந்தக் காதல் கோல்பேஸ் கடலுக்கு மட்டுமே தெரிந்த காதல். யாருக்குமே சந்தேகம் இல்லை. சுனிலும் சுமித்திராவும் சிட்டுக் குருவிகள் என கொழும்பை வட்டமிட்டுத் திரிந்தனர், மகிழ்ந்தனர்.
மாற்றான் தோட்டத்து மல்லிகை மணம் வீச, சீ….. சீ….. இந்தப் பழம் புளித்துப்போனது. சுனிலின் ஒன்றரை வருடக் காதல் சுமித்திராவின் உள்ளத்தில் சுருண்டு சுமையானது. பாலன் மட்டும் இடைக்கிடை நினைவில் நிழலாடி நிஜமாக இதயத்தை உருக்கினான்.
பிள்ளை..! என்ன யோசிக்கிறாய்? கொஞ்ச நாளா உன்ர போக்கு சரியில்லை. ஏதோ கப்பல் கவுண்ட மாதிரியில்லே திரியிறாய். பிள்ளை ! அண்ணன் எங்கள எப்பிடியும் கூப்புடுவான். நீ ஒன்றும் யோசியாதை. ஆ….. அட….. அண்ணன் சொன்னவன் உன்னை றைவிங் பழகட்டாம். அங்க பழகிறதென்றால் காசு கூடவாம். இஞ்ச சும்மா இருக்கேக்க பழகிப் போடலாமாம். காசும் அனுப்பிறதென்று சொன்னவன். பிள்ளை கெதியாய் பழகிப் போட்டியென்டால் சுகம். எப்பிடியும் இன்னும் மூன்று மாதத்தில எங்களுக்கு விசா வந்திடும்.
நீங்க முதல்ல ஸ்ரெடியா இருங்க. அவசரம் கூடாது. நிதானம் தான் வேணும்……. லெப்டில தானே திருப்பச் சொன்னன். நீங்க என்ன றைட்டில கட் பண்றீங்க…. ஸ்ரேங்கிங்கோடு அவளின் கையையும் பிடித்தவன் நிவாஸ். அந்த ஸ்பரிசம் அவளுக்கு அன்னியமாகப் படவில்லை. அடுக்கடுக்கான வார்த்தையும், சந்திப்பும் நிவாசை அவர்கள் குடும்ப நண்பனாக்கியது. மொழிப்பிரச்சனையால் கொழும்பில் எங்கு சென்றாலும் நிவாசின் கார்தான் என்ற நிலையில் அவர்கள்.
அன்னியோன்யம் அரண் தாண்டி அவர்கள் அணைப்பில் அதிசய உலகம் கண்டனர். பத்தொன்பது வயது சுமித்திராவுக்கு சாரதியாக மட்டுமில்லாமல் வாழ்வின் சகல பாடங்களுக்கும் ஆசான் நிவாஸ்தான். ஒன்றரை வருட இன்பக் கனவை கனடா விசா கலைத்து விட்டது.
சுமி! நான் உம்மை துவா செய்ய விரும்புறன். உமக்கு ! விருப்பமா? இருதலைக் கொள்ளி எறும்பானாள் சுமி. அவள் மௌனம் இருவாரம் வரை நீண்டபோதுதான் அந்தச் செய்தி. நிவாசுக்கு முப்பது வயது, மீரிகமவில இரண்டு மனைவிகள், மூன்று பிள்ளைகள். அவன் மதம் பலதார மணத்திற்கு சம்மதித்தது. ஆனால் சுமியின் மனம் சம்மதிக்குமா!? அதிர்ச்சியின் அலைகள் அவள் மனதில் கவலை அலைகளாக.
பிள்ளை! என்னடி சுகமில்லையே? பேய் அறைஞ்ச மாதிரி இருக்கிற, நாளையிண்டைக்கு நைட் 12.30க்குப் பிளைற். எவ்வளவு சந்தோசப்பட வேணும்? நீ என்னென்டா……. ஒன்றும் அறியாத ராமாமிர்தம் அவளை விசித்திரமாகப் பார்த்தாள்.
புதிய இடம், புதிய சூழல், புதிய மனிதர்கள், புதிய கலாச்சாரம் எல்லாம் ஒன்றுசேர்ந்து அவளை ஓர் புதுமைப் பெண்ணாக மாற்றியது. கனடா போய் ஒரு வருடத்துக்குள் பழங்கள் பொதி செய்யும் ஒரு தொழிற்சாலையில் சேர்ந்து உழைத்தாள்.
வாழ்வின் வழித்தடங்கள் மெல்ல மெல்ல மறைய உலகின் ஓட்டத்துடன் அவளும் ஓடியபோது அவளுக்கு இருப்பத்தி மூன்று வயது. அப்போதுதான் வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என இனிய மலர்கள் அவள் இதயத்தில் மலர்ந்தன.
இஞ்சேரப்ப…. பெடியன் இஞ்செத்த சிற்றிசனாம். இவன் ஜெயக்குமாற்ற பெறாமேன் முறையாம். ஒரண்றியோ ஸ்றீட்டில சொந்தமாக் கடையும் நடத்திறானாம். இந்தா இதில படமும் கிடக்கு, பெட்டைக்குப் பிடிச்சா மேற்கொண்டு கதைக்கலாம்… கதிரேசனின் வார்த்தைகள் இந்தக் கடும் குளிரிலும் தெளிவாக வந்து ராமாமிர்தத்தின் செவிகளில் பாய்ந்தன.
சம்பந்தம் சம்மதமானது. சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் அயல் நாட்டிலும் அப்படியேதான், மாறவேயில்லை. வாழ்க்கையை நெறிப்படுத்தி வரன்முறையிட்டு வளப்படுத்துபவை சாஸ்திரங்கள் தானே. இல்லற வாழ்வில் இனிய நண்பனானான் முகேஸ் என்கின்ற முகேஸ்ராம். அமைதி, அடக்கம், ஆற்றல், ஆளுமை ஒன்றுசேர்ந்த அழகு சுந்தர புருஷனின் அணைப்பில் இரண்டு குழந்தைச் செல்வத்துடன் வாழ்வின் இன்பக் கடலில் மிதந்தாள் சுமி.
நல்லூர்
11.05.2006
அன்பின் மாமா, மாமிக்கு நமஸ்காரம். முகேஸ் சுமி மற்றும் மருமக்களுக்கு நல் ஆசிகள். எல்லோரும் நலம். உங்கள் சுகங்கள் எப்படி? 28.05.2006 அன்று எனது இளைய மகனின் முதலாவது பிறந்த நாள். நீங்கள் ஒருவரும் அருகில் இல்லை என்று கவலைதான். இருந்தும் உங்கள் ஆசிகளும் வாழ்த்துக்களும் என்றென்றும் கிடைக்க எங்களை வாழ்த்தும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
அன்புள்ள, மருமகன் பாலன்-சாரதா
நீண்ட கால இடைவெளிக்குப்பின் வந்த இந்தக் கடிதம் கதிரேசன் குடும்பத்தின் பாச உணர்வின் ஆழச் சுரங்கத்தில் நேசப் புயலைத் தோண்டி எடுத்தது…
எல்லோருக்கும் மகிழ்ச்சி. பாலனும் சாரதாவை மணம் புரிந்து மூன்று மகனும் இரண்டு பெண் பிள்ளைகளும் பெற்று ஓரளவு வசதியாக நல்லூரில் இருக்கிறான் என்றபோது சுமியின் மனதிலும் இனம் புரியாத ஒரு நெருடல், சீ… பாவம், எவ்வளவு நல்லவன்…. அவனுக்கு நான் செய்த துரோகம் என்னை இந்தப் பதினேழு வருஷமா என்ன பாடு படுத்திச்சு. இப்போதும் அவனின் வேதனையில் யாருக்கும் பங்கில்லை. முகேசுக்கு ஒன்றுமே தெரியாது. எதைச் சொல்லுவது? எப்படிச் சொல்லுவது? ஆறு வருட தாம்பத்திய வாழ்க்கையின் அர்த்தம் அவள் தன் வாழ்க்கையில் பழைய சம்பவங்களைச் சொல்ல அவளை தரங்கெட்டவளாக்கி தரணியில் விடுமல்லவா? அது அவளுக்கு மட்டுமே தெரிந்த அறியாப் பருவ அவசர தீர்மானங்களின் அழுகைக் காட்சிகள்.
வரைவிலக்கணம் மீறிய தன், வாழ்க்கைப் பயணங்களை காட்சிகளாக அவள் வார்த்தையில் வடித்து வரிகளாக உங்களுக்குப் படிக்கத் தருகிறாள். படியுங்கள். ஆனால் முகேசிடம் பகராதீர்கள். தவறி வீழ்ந்த அவள் வாழ்க்கையைப் படித்து விட்டீர்களா? உங்கள் வாழ்க்கைப் படியில் பக்குவமாய் ஏறுங்கள்.
– என் மாதாந்திர ஓய்வூதியம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2012, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.