காதல் கிளிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 8,182 
 
 

வீடு வெறும் வீடாக இருந்தது நாளை காலை அந்தமானுக்கு பயணம் மகள் சிந்தாமணி நிம்மதியாக தூங்குகிறாள் அவளுக்கு இது பிறந்த வீடு. எனக்கு நான் கட்டுன மாளிகை. பதினைஞ்சு பதினாறு வயசுல கட்டினது.

மூக்கமாவுக்கு ஐம்பது வயது ஒருக்கும் அள்ளி முடிந்த கூந்தல் சிவந்த தேகம்; தோள்களில் கிளிப் பச்சை; ஜாக்கெட் போடும் பழக்கமில்லை ஆனால் இரண்டு முந்தானை மடித்து போட்டிருப்பாள் மூக்குக்கு அருகில் ஒரு கருப்பு மறு; சிங்கப்பல் சிரிப்பு; வசீகரமான கிராமத்து முகம்; சொந்த மாமனை கட்டி மதுரைக்குக் குடி வந்தாள்.

இந்த வீடு அவளும் மாமனும் மண் பிசைந்து இரண்டடி சுவர் வைத்து மேலே கூரை போட்டு கட்டினார்கள் அப்போது வாசல் இரண்டடி உயரம் மட்டுமே. மாமன் கை வண்டி இழுத்தார். சிந்தா கல்யாணத்தின் போது தான் ஐந்தடி சுவர் வைத்து உள்ளே சிமென்ட் தளம் போட்டு கூரை வேய்ந்து வாசலில் ஐந்தடி வாசல் வைத்தனர். அப்போது திமுக ஆட்சி நடந்தது. சாதிக்கட்டுப்பாடுகள் கொஞ்சமாக மறைந்தன எல்லோரது வீடும் வாசல் உயர்த்தி கட்டப்பட்டன. இரு பக்கமும் ஒரு ஆள் கால் நீட்டி படுக்கும் அளவுக்கு திண்ணை எடுத்தனர்.

இப்போது வீட்டில் ஒரு சாமானும் இல்லை மூட்டை முடிச்சுகள் கட்டப்பட்டு தயாராக இருந்தன. அவள் வட்டிக்கு கொடுத்திருந்த மூனு லட்ச ரூபாயும் சமர்த்துக்காரி சிந்தாமணி போய் வசூல் பண்ணிட்டா. பித்தளை குடம் பானையை வித்துட்டா. மாமனும் நானும் எடுத்த போட்டாவை நான் எடுத்து வச்சுக்கிட்டேன். அந்த போட்டோ மலைக்கள்ளன் படம் பார்க்க போனப்ப எடுத்தது. மாமன் கூட முதமுதல்ல படம் பார்க்க போனேன். டிக்கெட் கெடைக்கலைன்னுட்டு அழுதேன் மாமன் என்னை சமாதானப்படுத்தி ‘வா சோடியா நின்னு போட்டோ எடுப்போம்’னு எடுத்துக்கிட்டு வந்துச்சு. மாமன் வண்டி இழுக்கும் நான் பின்னாடி இருந்து தள்ளுவேன். எங்க வண்டி நல்லாத்தான் ஒடுச்சு .ஒரு பொம்பளைப்பிள்ளை பிறந்தா. அவளையும் பத்தாப்பு படிக்க வச்சு அந்தமாணுல கட்டிக்குடுத்தோம்.

அன்னைக்கு ஒரு நாள் மத்தியானம் மாமன் கை வண்டி இழுத்துக்கிட்டு வந்தப்ப கார்வண்டி மோதி கீழே விழுந்திருச்சு பெரிய ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனோம் டாக்டர் மூனு மாசம் ஆகும்ன்னுட்டாரு., நான் வந்து இரண்டு இளந்தாரி பையன்களை வண்டி இழுக்க சொல்லி பின்னாடி இருந்து தள்ளிக்கிட்டு போவேன். கொஞ்ச கொஞ்சமாக மாமனுக்கு காலு சரியாச்சு, ஆஸ்பத்திரியில் ஒரு நரசய்யா நல்லா கவனிச்சுக்கிட்டாரு, நான் வண்டி தள்ளுறதை பார்த்துட்டு என்ன கூட்டிகிட்டு போய் ஒரு ஒரமா வச்சு கலங்குனாரு. இனி உன் புருஷன் வண்டி இழுக்க முடியாது என்ன செய்வன்னு கேட்டாரு நான் அழுதேன் வெங்காயம் வித்தாவது பெழச்சுக்குவேன்னு சொல்லி அழுதேன் ‘அழாதே நான் இருக்கேன்’னு தோளை பிடிச்சு ஆறுதல் சொன்னாரு.

மாமனும் அவரும் ஆஸ்பத்திரியில வச்சு நல்லா பழக்கமாயிட்டாங்க வீட்டுக்கு வந்ததும் அவர் கொஞ்சம் காசு கொடுத்து டயர் வண்டி வாங்கி கொடுத்தாரு அப்புறமா நாங்க சிறுக சிறுக குடுத்து அவர் கடனை அடைச்சுட்டோம். டயர் வண்டின்னா மரச் சக்கரத்துக்கு பதில் டயர் சக்கரம் இருக்கும் முன்னால மாடு கட்டியிருக்கும் மனுஷன் இழுக்க வேண்டியதில்ல. மாமன் ஜம்முனு உட்கார்ந்தபடி வண்டி ஒட்டுச்சு பையன்ங்க ரெண்டு பேரும் சாக்கு மூடைகளை தூக்கி வண்டியில வைப்பாங்க. கால் அடிபட்டதில இருந்து மாமன் வீட்டுக்குள்ள வரல திண்ணையிலயே தங்கிருச்சு காலை தொங்கப் போட்டு உட்கார எழுந்திருக்க திண்ணை வசதியா இருந்துச்சு. அடுத்த திண்ணையில வந்து உட்கார்ந்து நர்சய்யா பேசுவாரு; கட்டுப் போடுவார்; மருந்து கொடுப்பாரு;. அவருக்கு குடும்பம் எதுவும் இல்லை, மலேயாவில இருந்து வந்தவரு, தனி கட்டை

ஒரு நாள் இங்க வந்தவரு பேசிக்கிட்டு இருந்துட்டு நைட் டூட்டி பார்த்த களைப்புல அப்படியே தூங்கிட்டாரு. மாமன் அவரை உள்ள போய் படுக்க சொன்னாரு. அன்னையில இருந்து அவரும் எங்க குடும்பத்துல ஒருத்தராயிட்டாரு. இங்க இருந்து வேலைக்கு போவாரு. சாங்காலம் இங்க வந்து வீட்டுக்குள்ள படுத்துக்குவாரு. யாரும் அதை பத்தி ஒன்னும் பேசிக்கிட்டதில்லை. பக்கத்து வீட்டுக்காரிக சாடையா என்ன பார்த்து ரெட்டை குதிரையில சவாரி செய்றவன்னு பேசுவாங்க நான் காது கேட்காத மாதிரி போவேன்.

ஒரு நாள் திண்ணையில உட்கார்ந்துக்கிட்டு ‘’பென்சன் நோட்டுல வீட்டம்மா படம் ஓட்டன்னும்னு ஆபிசுல சொல்றாங்க. ஒட்டுனா என்னோட பென்ஷன் கெடைக்கும். மூக்கம்மா படத்தை ஒட்டி குடுக்கவா’’ன்னு என் மாமன்கிட்ட கேட்டாரு. ‘’பிற்காலத்துக்கு அவளுக்கு ஒரு ஆதரவா இருக்குமேன்னு கேட்டேன் அவ யாரும் இல்லாத ஆனாதை ஆயிரக்கூடாதே’’ன்னாரு மாமனும் சரின்ன்னுச்சு

அன்னைக்கு சாயந்தரம் என்னை போட்டோ பிடிக்க கூட்டிட்டு போய் சேர்ந்து நின்னு நர்சய்யா ஒரு போட்டோ எடுத்தாரு. அதை அவர் ஆபிசுல குடுத்துட்டாரு. தன்னோட பர்சிலயே வச்சுருந்தாரு. அந்த போட்டோவில நான் ரொம்ப நல்லா இருந்தேன். மாமன் கிட்ட போட்டோவை காட்டல. யாருகிட்டயும் காட்டல.

இது நடந்து ஒரு மாசத்துக்குள்ள மாமனுக்கு திடீருன்னு வலிப்பு மாதிரி வந்து பொசுக்குனு இறந்து போயிருச்சு. ஆள் இல்லாத திண்ணையை பார்த்து கதறி கதறி அழுதேன். அதுக்கு பெறகு நல்லது கெட்டதுக்கு நான் மட்டும் தனியா போவேன் அத நெனச்சு தான் ரொம்ப கலங்குனேன். நர்சய்யா அமைதியா இருந்தாரு. அவருக்கு பேச்சு துணையா இருந்த மனுசனும் போய்ட்டாரு. எங்களுக்குள்ள எப்பவுமே அதிக பேச்சு கெடையாது. அது கூட தான் அவரு பேசிக்கிட்டே இருப்பாரு.

ரெண்டு மூனு வருசம் ஆச்சு. ஒரு பிரச்சனையும் இல்ல. டயர் வண்டியையும் மாடுகளையும் வித்துட்டோம் அவரு மட்டும் ஆஸ்பத்திரி வேலைக்கு போய்ட்டு வந்தாரு,

ஒரு நாள் மத்தியானம் ஒரு ஆள் வேகமா வந்து அவருக்கு மூச்சிரைக்குதுன்னு சொன்னாரு. நானும் வேகமாத்தான் ஒடுனேன் ஆனால் நான் போறதுக்குள்ள உசிரு போயிருச்சு .பொணமா தூக்கிட்டு வந்தோம். எங்கே இருந்தாங்களோ சாமி அம்புட்டு சொந்தக்காரங்க. திடீர்னு வந்துட்டாங்க நான் அழுதுக்கிட்டே இருந்தேன் வேற என்ன செய்ய? என்ன நிக்க வச்ச சாமியும் போச்சு நிலைக்க வைச்ச சாமியும் போச்சு, இப்பதான் அநாதையான மாதிரி தவிப்பா இருந்துச்சு. நான் இருந்து ரெண்டு பேரையும் அனுப்பி வச்சுட்டேன். எனக்கு யார் இருக்கான்னு அழுதேன். தண்ணியில மீனு அழுத கதை தான் என் கதை.

அப்புறம் ஒரு வாரம் கழிச்சு அவரு அண்ணன் மகனாம் ஒருத்தன் வந்தான். ‘நான் தான் கொள்ளி வச்சேன். எனக்கு தான் சித்தப்பா பணம் வரணும்’ன்னான் நான் பார்த்தேன். இனி அழுதுக்கிட்டு இருக்க கூடாதுன்னு கிளம்பிட்டேன். என்ன ஆனாலும் சரி இவனை விடக்கூடாது –னுட்டு போய் ஒரு வக்கீலை பார்த்தேன்; பென்சன் புஸ்தகத்தை காட்டுனேன்; அவர் அவனை கூப்பிட்டு பேசினாரு; அவருக்கு நிறைய பீஸ் குடுத்தேன். ஆளுக்கு பாதி பணம்ன்னு முடிவாச்சு. பென்ஷன் முழுக்க எனக்கு. அதுல அவனுக்கு பங்கு இல்லை. வந்த காசை வட்டிக்கு விட்டுக்குட்டு நல்லா தானே இருந்தேன்.

என் மகக்காரி இருக்காளே, சதிகாரி. ஒரு நாள் போன் பண்ணி ‘’உன் பேரனுக்கு அமெரிக்காவுல வேலை கெடச்சிருக்கு உன்கிட்ட ஆசிர்வாதம் வாங்க வருறான்’’னு சொன்னாள் இங்கே வந்துட்டு போனவன் அவுங்க அம்மாகிட்ட போய் ‘’ஆத்தா நல்லா வசதியா இருக்கு; நாம இங்க கஷ்டப்படுறோம்’’னு சொல்லவும் அவள் இங்கே புறப்பட்டு வந்துட்டாள் ‘என் காசை எல்லாம் பிடுங்கிக்கிட்டு, எனக்கு பிச்சை கஞ்சி ஊத்த என்ன அவ கூட அந்தமானுக்கு அழைச்சுக்கிட்டு போறாளாம் . தெருக்காரிகளும் என்னை மக கூட போ போன்னு வெரட்டுராளுக. எனக்கு நாயம் பேச யாருமில்லயே. நான் காசிருந்தும் ஆருமில்லாத அனாதையாய்ட்டேனே

தூக்கம் வரல, மனசு கடந்து தவிக்குது. இந்த வீட்டை விட்டுட்டு என் ஆவி கூட போகக் கூடாதுன்னு தவிக்கிறேன். வாசலில் அவர் நிக்குறாரு உள்ள வரக்கூடாதுன்னு சொல்றேன். வராம நிக்குறாரு கனவா நெசமான்னு தெரியல. ஆனா நான் வர்றேன் நான் வர்றேன்னு சொல்றேன் அவர் காதுல விழுந்த மாதிரியே தெரியல. சும்மா நிக்குறாரு. மொகம் சரியா தெரியல. ஆனா அவருதான். அவரே தான். சாமி என்ன அநாதை ஆக்கிராதன்னு அழுறேன். அப்புறம் என்ன நடந்துச்சுன்னே தெரியல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *