கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2023
பார்வையிட்டோர்: 3,230 
 
 

(1928ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(தமிழில் முஸ்லிம் பெண்மணியால் எழுதப்பட்ட முதல் நாவல்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

3 – மாயாபுரி 

நாம் கதையைத் தொடர்ந்து செல்லுதற்கு முன் மாயாபுரியைப் பற்றிச் சிறிது அறிந்து கொள்ளுதல், கதா நிகழ்ச்சிக்கு இன்றியமையாதது வேண்டப்படுவதால், அதைப்பற்றிய சில விவரங்களை அறிவதற்காக, நாம் இங்கே சற்று தாமதிப்போம். 

மாயாபுரி யென்பது இரண்டு மலைகட்கு நடுவே, அழகான பள்ளத்தாக்கில், ஆற்றங்கரை யோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு மலைப்பிரதேசம். அப் பிரதேசத்தை அரச குடும்பத்தின் வழித்தோன்றலாக வந்த சுசீலரென்பார் ஆட்சி புரிந்து வந்தார். அவர்க்கு விஜய சுந்தரி என்ற பெண்மகவைத் தவிர, வேறு குழந்தைகள் கிடையா. ஆகவே சுசீல மன்னர்க்குப் பிறகு, அவர் சகோதரி புதல்வனான பிரதாபனே பட்டத்திற்குரியனாய், அந்நாட்டு வழக்கப்படி கருதப்பட்டான். அதுபற்றி குடிமக்களும், உற்றார் உறவினரும், பிரதாபனை இளவரசனாகவும், விஜயத்தை இளவரசியாகவுங் கருதி மரியாதை செலுத்தி வந்தனர். 

செல்வி விஜயாள் மக்கள் மனத்தைக் கவரும் மாண்புடன் விளங்கினாள். சிறந்த அழகும், பரந்த ஞானமும், சீரிய குணமும் ஒருங்கமையப்பெற்ற இளவரசியை மக்கள் விரும்பியது வியப்பாமா? அவள் ஏழைகளிடத்து காட்டும் அன்பும், ஆதரவற்றரிடங் கூறும் இனிய மொழிகளும் அவட்கு தனி மதிப்பைக் கொடுத்தன. 

இளவரசன் பிரதாபனுக்கடுத்தபடியாய், பிரபு இராகுலனே பட்டத்திற்குரியனாய்ப் பொது மக்களாற் கருதப்பட்டான். அவன், கோமகன் பிரதாபுக்கு ஒன்றுவிட்ட சகோதரனாவான். 

இஃதிங்ஙனமிருக்க, தமக்கு மரண காலம் கிட்டிவிட்டதென உணர்ந்த சுசீலமன்னர், தமது மந்திரி, பிரதானிகள், சேனைத் தலைவர் முதலியோரை அருகழைத்து. பிரதாபனையும் விஜயாளையும், தமக்குப் பிறகு அரசனையும் அரசியாயும் ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். அரசர் கூறியதை மந்திர சுற்றத்தார், தந்திரச் சுற்றத்தார் முதல் எல்லோரும் அன்போடு ஏற்றுக்கொண்டனர். பிறகு, தம் மகளையும் மருமகளையும் மருங்கழைத்து, இருவரும் ஒருவரையொருவர் மணந்துகொண்டு, அரச பாரத்தை ஏற்று, நீதிநெறி வழுவாது ஆட்சி புரிந்து வருவதே தம் விருப்பமெனக் கூறி, மீண்டும் தம் மகளை நோக்கி, “குழந்தாய்! நான் கூறியவைகளை யெல்லாம் உன் மனதில் பதிய வைத்துக்கொள். உன் அன்னையார் இறந்து இத்தனை ஆண்டுகளாய், அவளது விருப்பத்தை நிறைவேற்றுவான் வேண்டி, நான் மற்றோர் மாதை மணம் புரிந்து கொள்ளவில்லை. உன்னையே என் ஏகபோக சொத்தாக நினைந்து அன்பு பாராட்டி வந்தேன். நீ கடமைத் தவறாது நடந்து கொள்ளுவாயாக. நீயும் பிரதாபும் ஒன்று பட்டு, நெறி பிறழாது ஆட்சி புரிந்து வருவீர்களாயீன், குடிமக்கள் உங்களை வாழ்த்துவர். நாட்டில் அமைதி நிலவும். பகைவர் அஞ்சியோடுவர். இம்மாயாபுரி. பிற ஆட்சிக்குட்பட்டதன்று. இஃது தனிப்பட்ட பிரதேசம். நீ என் விருப்பத்தை மீறி. பிரதாபை விடுத்து, பிறனொருவனை மணந்துகொள்ளுவாயின்.அரசுரிமையைப்பற்றிய கிளர்ச்சிக்கு இடமளித்தவளாவாய். விஜயா! இன்னும் அரை நாழிகையிலோ ஒரு நாழிகையிலோ என் உயிர் போய்விடும், ஆகவே, நீ என் விருப்பப்படியே பிரதாபை மணந்து கொள்ளுவா யென்று உறுதியாய் நம்பி, நான் மன அமைதியுடன் உயிர் விடுகின்றேன். இறக்குந் தறுவாயிலிருக்கும் எனது இந்த விருப்பத்தை, பூர்த்தி செய்ய வேண்டியது புதல்வியாகிய உனது கடமை” என்று உருக்கத்தோடு கூறினார். 

பிறகு பிரதாபை அருகழைத்து, பல்வேறு புத்தி புகட்டி, ஒழுக்க நெறி கற்பித்து, தமது சேனைத் தலைவர் கமலாகரர் கூறும் புத்திமதியைக் கேட்டே நடந்து கொள்ள வேண்டுமென்று கூறினார். அதன் பிறகு கமலாகரரை அழைப்பித்து, பிரதாபை அவரிடம் ஒப்படைத்து, அவரது சொந்தக் குழந்தையைப் போலவே அவனை பாவித்து, எல்லா விஷயங்களிலும் அவர் தம் விருப்பப்படியே செய்து வரவேண்டு மென்றுந் தெரிவித்துதன்றி கமலாகரர் கடமைத் தவறாத உத்தம புருடராகலின், அவரிடத்து தமக்கு முழு நம்பிக்கையும் உண்டெனத் தெரிவித்தார். இங்ஙனம் பேசிக்கொண்டிருந்த சில வினாடிகட்கெல்லாம், அவ்வரசர் பெருமான் என்றும் எழுந்திரா நித்திரையிலாழ்ந்தார். ஆறு மாதங்கள் கடந்தன. விஜயாளின் இளம் பருவத்திலிருந்தே அவள் மாட்டு அளப்பரிய அன்பு பாராட்டி வந்த இளவரசன் பிரதாப், சுசீல மன்னர் இறந்த பிறகு இன்னும் அதிகமாய் அவளை நேசித்து வந்தான். ஆனால் செல்வி விஜயாள், பிரதாபை அத்துணை தூரம் நேசித்தாளா? இல்லையா? என்பதை ஒருவராலும் உணர்ந்து கொள்ளுதற் கியலவில்லை. விஜய சுந்தரியின் உள்ளப் பான்மையை ஒருவராலும் வெளிப்படையாய் விளங்கிக்கொள்ள முடியாமையான் பிரதாப் தனது விருப்பத்தை அவளிடம் அத்துணை அதிகமாய் தெரிவிக்க அஞ்சினான். ஆனால் பொது மக்களோ விஜயாளை அரசியாகக் கண்டு களிக்க ஆவலுற்று துடித்துக்கொண்டிருந்தனர். 

இளவரசன் ஒரு உல்லாச புருஷன். மக்கட்கு அவனது நடத்தைகளில் சில பெரும்பாலும் அருவருப்பைத் தந்தன. அவனது நடத்தையைப்பற்றி மக்கள் பலவாறு பேசிக்கொள்ளுவாராயினர். குடியிலும் ஆடம்பரத்திலும் மூழ்கியிருப்பதாய் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்,இங்ஙனம் பிரதாபின் நடத்தையைப்பற்றி குடி மக்களிடம் மிகைப்படுத்தி, மிகத் தந்திரமாய்ப் பிராசாரம் புரிந்து வந்தது பிரபு இராகுலனது வகுப்பாரே. ஆயினும், குடிமக்கள் தாம் அன்போடு நேசித்துவரும் செல்வி விஜயாளுக்கு கணவனாகப் போகிறவரும், இறந்து பட்ட மன்னரின் விருப்பப்படி தங்கட்கு அரசராய் வரக்கூடிய வரும், அத்தேய வழக்கப்படி நேரிய முறையில் அரசுரிமைக் குரியருமான இளவரசன் பிராதாபைப் பற்றி வெளிப்படையாய் பேசிக்கொள்ள அஞ்சினார். இந்நிலையில்தான் முடிசூட்டுதற் குறிய ஏற்பாடுகள் நடைபெற்றன. 

முடி சூட்டுதற்கென்று நல்ல நாளொன்று குறிப்பிடப்பட்டது. அன்று எப்படியும் முடிசூட்டியே தீர வேண்டுமென்பது குடி மக்களது அவா. 

பிரபு இராகலனோ, இளவரசி விஜயாள் மாட்டு தன் மனத்தைப் பறிகொடுத்திருந்தான். அவளையும் அவட்கே நியாயமாய் உரித்தான சிம்மாசனத்தையும் கவர்ந்து கொள்ள பெரிதும் பேராசைக்கொண்டான். இயற்கையிலேயே ஆழஅறிவும் அறியசூழ்ச்சியும் உடைய இராகுலானது மூளை பிரதாபுக்கு முடிசூட்டு தற்கியலாமல் எங்ஙனம் தடுக்க முடியுமென்பதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது. 

சில நாட்களாய் உடல் நலமின்மையான் மெலிந்து தோன்றிய பிரதாபுவைக் கண்ட இராகுலன், அதுவே தான் சூழ்ச்சி செய்தற்கு ஏற்ற தருணமாய் நினைந்தான். அடிக்கடி பிரதாபிடத்து, கிராமத்திற்குச் சென்று, சில நாட்கள் ஆங்கிருக்கும்படியும், அங்ஙனம் கிராமத்திற்குச் செல்லின், கிராமக் காற்றும், இனிமையான இயற்கைக் காட்சிகளும் அவன் மனத்தைக் கவரக் கூடுமென்றும் கூறிவந்தான். 

பிரதாபின் மனத்திற்கு இராகுலனது மொழிகள் சூழ்ச்சியாய்த் தோன்றியபோதிலும், கிராமவாசமே உடல் நலத்திற்கு கேற்றதென நினைந்து, சில நாட்கள் கிராமத்திலுள்ள இராகுலனது வனமாளிகையிலேயே தங்கியிருக்கத் தீர்மானித்தான். இராகுலன் தன் கருத்து நிறைவேறுதற்குரிய ஏற்ற தருணத்தை எதிர்நோக்கி யிருந்தமையான், தன் சொந்த பணி மக்கள் மூலமே எல்லா ஏற்பாடுகளுஞ் செய்து தெரிவித்தான், குறித்த நாளொன்றில் இளங்கோ பிரதாப், இராகுலனது சூழ்ச்சியை சிறிதும் அறிந்துகொள்ளாததே போன்று நடித்து அவனது வனமாளிகைக்குச் செல்ல, கமலாகரரும் இன்னும் முக்கியமான சில பிரபுக்களும் பின் தொடந்தனர். 

இங்ஙனம் இளவரசன் பிரதாப், பிரபு இராகுலனது வனமானிகைக்குச் சென்றபொழுதுதான், நமது கதை ஆரம்பமாகின்றது. 

4 – ஹோட்டலில் சுரேந்திரன் 

வாசகர்களே ! இனி, நாம் கதையைத் தொடர்ந்து செல்வோம். சாப்பாட்டு விடுதியின் சொந்தக்காரனது புதல்வியின் மொழிகளைக் கேட்டு ஆச்சரியத்தினால் கற்சிலையைப்போன்று சுரேந்திரன் நின்றுவிட்டான் என்று முன்னர்க் கூறினோமல்லவா? அங்ஙனம் சில வினாடிகளே நின்றுகொண்டிருக்க, அதற்குள் அச் சிறுமி, தன் தாய் தந்தையரை அழைத்து வந்தாள். இவர்களிருவரும் சுரேந்திரனைக் கண்டதும் சிறுமி சுசீலை செய்தவாறே தலை வணங்கி நின்றனர். 

சிறிது நேரம் வியப்பே வடிவாய் ஒன்றும் பேசாதிருந்த சுரேந்திரன். பிறகு அவர்களைப்பார்த்து, “நீங்கள் ஏன் என்னைக் கண்டதும் இங்ஙனம் தலைவணங்கி நிற்கின்றீர்கள்? இச் சிறுமி கூறிய வார்த்தையின் பொருளென்ன? என்னால் ஒன்றும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அன்பு கூர்ந்து சற்று விளங்க உரைக்கும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்” என்றான். 

சுரேந்திரன்:- நான் மதுரையைச் சேர்ந்தவன் . என் பெயர் சுரேந்திரன்னென்பர். எனக்கு இம் மாயாபுரியையும் மற்றம் பிற ஊர்களையும் பார்க்க வேண்டுமென்னும் அவா அதிகமாயிருந்ததுபற்றி, யான் என் வீட்டார் ஒருவரும் அறியாவண்ணம், இரவில் வீட்டை விட்டும் வெளிப்போந்து. பல ஊர்களுஞ் சுற்றிப் பார்த்துக்கொண்டே இன்று இங்கு வந்தடைந்தேன். இவ்வளவுதான் என் வரலாறு. 

சாப்பாட்டு விடுதியின் சொந்தக்காரன்:- ஐயா! நாங்கள் உம்மைக் கண்டு தலைவணங்கி, நின்றதற்குக் காரணம். இன்னும் இரண்டொரு நாட்களில் முடிபுனையப்போகும் எங்கள் இளவரசர் பிரதாபன். உருவத்தில் உம்மைப்போலவே இருப்பார்.நன்றாய்க் கூர்ந்து கவனித்தாலன்றி. ஒருவராலும் உம்மை பிரதாபல்லவென்று தெரிந்து கொள்ள இயலாது. ஆனால் இளவரசர் பிரதாபைவிட நீர் இளமையுடையாராயும், அழகுடையாராயும் காணப்படுகின்றீர். உமது வதனத்தில் இருக்கும் மீசையை மட்டும் நன்றாய் வெட்டி விட்டுக்கொண்டால், உமக்கும் அரசர்க்கும் வேற்றுமை கண்டுபிடிக்க யாராலும் முடியாது. நண்பரே! இப்போது உம்மைக்கண்டு நாங்கள் தலைவணங்கியதற்குரிய காரணத்தை விளங்கிக்கொண்டீரல்லவா? 

சுசீலை:- ஆம், அப்பா! இவரைக்கண்டதும் நமது இளவரசர் என்றே நான் எண்ணினேன். அதனாலேயே உங்களை யழைத்து வந்தேன். 

இவர்கள் கூறியதைக்கேட்ட சுரேந்திரன் சற்றுநேரம் ஏதோ சிந்தித்துக்கொண்டு பேசாதிருந்தான். பிறகு அவர்களைப்பார்த்து, “ஆம், ஐயா, நீங்கள் கூறியவை யெல்லாம் உண்மையென்று உணர்ந்து கொண்டேன். ஆனால் என் மனத்தே ஒரேயொரு ஐயம் எழுகின்றது. அஃதாவது, மாயாபுரியின் இளங்கோவான பிரதாப், என்னைப் போன்று எளிய உடையில், இங்ஙனம் தன்னந் தனியே இந் நேரத்தில் வருவாரே? என்பதே” என்றான். 

“அன்பான ஐயா, உமது மனத்திலுதித்த ஐயம் நியாயமானதேயாகும். இளவரசர் தமது தலை நகரிலிருந்து இவ்விடத்திற்கு தனியே வரவில்லை. இவ்விடத்திற்கு சமீபத்திலேயே இராகுலப் பிரபுவினது வனமாளிகை இருக்கின்றது.. பிரதாப இளவரசர், உடல் நலத்தைக்கருதி இவ்வனமாளிகையிற் சில நாட்களாய்த் தங்கியிருக்கின்றார். அவர் ஒருவிதமான உல்லாச பேர்வழியாதலின், சிற்சில அமயங்களில் அவர்மாறுடையயோடு எங்கேனும் செல்வதுண்டு. அதைப் போலவே, இன்று அவர் இங்கு வந்திருப்பதாய் நாங்கள் எண்ணியது ஓர் வியப்பல்ல. ஏன், நான் சொன்ன காரணம் உமக்கு பொருத்தமாகப் படவில்லையா? என்றான் சாப்பாட்டு கடைக்காரன். 

“நீர் கூறியதில் பொருத்தமற்றது ஒன்றுமில்லை. சரி, இது போகட்டும். இளவரசர் பிரதாபனுக்கு முடிசூட்டு வைபவம் இன்னும் இரண்டொரு நாளிலென்றா கூறினீர்” என்றான் சுரேந்திரன். 

“ஆம், அப்படித்தான் எங்கும் கூறிக்கொள்ளுகின்றனர். எங்கு பார்த்தாலும் இதே பேச்சாகவேயிருக்கின்றது. முடிசூட்டு வைபவத்தைப் பார்க்கும்பொருட்டு ஆயிரக்கணக்கான மக்கள். தலைநகரை நோக்கிச் செல்லுகின்றனர். என் மகள் சுசிலையும் அங்கு செல்லவேண்டுமென்றே தொந்தரை கொடுக்கின்றாள்” என்றான் ஹோட்டல் சொந்தக்காரன். 

“பேச்சிலேயே பொழுதை போக்கிவிட்டால். வந்திருப்பவர் உணவருந்த வேண்டாமா? நேரமாகிறது, சாப்பிட வாருங்கள்” என்று சற்று அதிகார தோரணையில் தங்கணவனைப் பார்த்துக் கூறினாள் ஹோட்டல்காரன் மனைவி. 

அத்துடன் அவர்களது பேச்சு நின்று விட்டது. சிற்றுண்டிச்சாலை சொந்தக்காரன் முன்செல்ல, அவனைத் தொடர்ந்து அவனது மனைவியும், மகளும், சுரேந்திரனுஞ் சென்றனர். சுரேந்திரனுக்கு மிக்க உருசிகரமான உணவு வகைகளும். பானைவகைகளும் பரிமாறப்பட்டன. மிகவும் பசியோடிருந்த சுரேந்திரன், அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுவகைகளை நன்றாய்ச் சாப்பிட்டான். பிறகு அவனுக்கென விடப்பட்ட படுக்கையறையிற் சென்று, களைப்பு மேலீட்டால் படுக்கையிற் படுத்து ஆழ்ந்த துயிலில் அழுந்தி விட்டான். 

காலை மணி எட்டுக்கு படுக்கையினின்றெழுந்து உட்கார்ந்தான். அவன் படுத்திருந்த அறையின் பலகணிவழியாய்ச் சூரிய கிரணங்கள் வீழ்ந்து கொண்டிருந்தன. தான் வெகு நேரம் வரையிலும் அயர்ந்து துயின்று விட்டதாய் நினைந்த சுரேந்திரன், காலைக்கடன் 

கழிக்க வெண்ணிஉடனே படுக்கையினின் றெழுந்தான். எழுந்திருக்க முடியவில்லை. உடல் அவ்வளவு கனத்திருந்தது. தன் உடல் மிகவுங் களைப்படைந்திருந்தமையான், இன்று பகற்பொழுது முழுதும் ஓய்வெடுக்கக் கொள்ளவேண்டுமென்றெண்ணி, ஒருவாறு எழுந்து காலைக்கடன் கழித்து, ஏதோ சிறிது ஆகாரம் உட்கொண்டு மீண்டும் படுக்கையிற் படுத்துக் கொண்டான். 

இங்ஙனம் பகற்பொழுது கழிய, சாய்ங்காலம் மணி ஐந்துக்கு, அந்த ஹோட்டல்காரனுக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு. அங்கிருந்து புறப்பட்டான் மெல்லமெல்ல சுரேந்திரன், வழிநெடுக நடந்து கொண்டிருந்தான். நேரங் கழிந்து கொண்டே சென்றது. அவ்வமயம் அவன் கண்கட்கு இனிமையாய்த் தோன்றிய சிங்காரவனமொன்¢று காணப்பட்டது. அதன் வாயில் எவ்வித காவலுமின்றி திறந்திருந்தமையால் சுரேந்திரன் அதைச் சுற்றிப்பார்க்க வெண்ணி அதற்குள் நுழைந்தான். அஃது மிக்க மனோகரமாய் விளங்கியமையான், அன்றிரவை அங்கேயே கழிக்க நினைந்து, ஆங்கோரிடத்திற் தோன்றிய பசும்புற்றரையில் அமர்ந்து கொண்டான். தன்னைக் காணாது, தன் அண்ணனும அண்ணியும் எங்ஙனம் வருந்துகின்றனரோ என்றெண்ண அவன் மனம் மிக்க துயரடைந்தது. அதனோடு பல்வேறுபட்ட நினைவுகளும் அவன் மனத்தில் தோன்றின. இங்ஙனம் தன் மனத்திற்தோன்றிய நினைவுகளிலேயே தன் சிந்தனையை செலுத்தியபடி, அப்புற்றரையிலேயே படுத்து உறக்கத்தில் ஆழ்ந்தான். 

– தொடரும்…

– முதற் பதிப்பு: பெப்ரவரி 1928, மின்னூல் வெளியீடு – http://FreeTamilEbooks.com 

2003 ல் இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையால் மின்னூலாக்கப் பட்டு இங்கு: http://www.tamilheritage.org/old/text/etext/sidi/sidistor.html வெளியிடப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *