கல்வித் தாத்தா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 12,942 
 
 

ஜூன் மாதம் பள்ளிக்கூடம் தொடங்கிய முதல் வாரத்தில் புத்தகம் நோட்டு எல்லாம் இல்லாமல் ஜாலியாகக் கழிந்தபின் அடுத்த வாரத்தில் என்ன நோட்டு எத்தனை பக்கங்களில் இருக்கவேண்டும் என்று எழுதிப்போட்டதை என் பெரியண்ணாவிடம் நானும் என் தம்பியும் கலெக்டரிடம் மனுகொடுத்தபின் காத்திருப்பது போலக் காத்திருந்தோம். போன வருடத்தைய நோட்டுகளில் மிச்சமிருந்த பேப்பர்களைக் கிழித்துத் தைக்கச்சொன்னதில் என் பழைய நோட்டுகளில்தான் அதிகம் எழுதாமல் வெள்ளைத் தாள்கள் மிச்சமிருந்ததால், அவற்றைக் கொண்டு தைத்த நோட்டுகளை எனக்கு மட்டுமே கொடுக்கவேண்டும் என்றும் புதிதாக வாங்கும் நோட்டுகளைத் தனக்கே தரவேண்டும் என்ற என் தம்பியின் ஈவு இரக்கமற்ற கோரிக்கையை ஒருதலைப்பட்சமாக என் தம்பிக்குச் சாதகமாக என் பெரியண்ணா தீர்மானித்த ” பிக் ப்ரதர் அட்டிட்யூடில் ” மனமுடைந்து இந்த வருடம் எல்லா நோட்டுகளிலும் சித்தெறும்பு ஊர்வது மாதிரி இப்போது எழுதுவதுபோல எழுதாமல் கேரளாவில் கிடைக்கும் சாதம் மாதிரி கொட்டைகொட்டையாக எழுதி, பேப்பரே மிச்சமில்லாத வகையில் செய்துவிடவேண்டும் என சபதம் மேற்கொண்டிருந்த சமயத்தில்தான், என் தம்பி நாங்கள் எப்போதும் மளிகை சாமான் வாங்கும் ஆனந்தா ஸ்டோர்ஸில் நோட்டுகளெல்லாம் என்ன விலை என ” கொடேஷன் ” வாங்குவதற்காக எங்கள் வீட்டைத்தாண்டி மேலகல்கண்டார்கோட்டை போகும் 41 ஆம் நம்பர் பஸ்ஸை விரட்டிக்கொண்டுபோய் அது வளைந்து திரும்பி நின்ற சமயத்தில் அதன் பின்பக்கத்தில் ” தொட்டால் பூ மலரும் ” பாட்டில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவியைத் தட்டுவதுபோலத் தட்டிய சமயத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கண்டக்டர் ” யார்றா அது ” என இறங்கியதைப் பார்த்து நிலைமையின் விபரீதம் உணர்ந்து நாலாவது கியரில் ஓட்டமெடுத்து சட்டென்று கோயிந்து மாமாவின் வீட்டிற்குள் பாம்பு நுழைவதுபோல நுழைந்துவிட்டான்.

கோயிந்து மாமாவின் வீடு கம்பிகேட் என்றழைக்கப்படும் காய்கறி மார்க்கெட் போகும் வழியில் இருந்தது. காய்கறி வாங்கிவரவேண்டியிருக்கும்போதோ அல்லது சில்லறையாக மளிகை சாமான் வாங்க வேண்டியிருந்தாலோ கோயிந்து மாமா வீட்டைத் தாண்டித்தான் நாங்கள் போவோம். பொன்மலை ரயில்வே காலனியின் கிழக்குப் பக்கத்தில் இருந்த ஆறு வீடுகள் கொண்ட அந்த ப்ளாக்கில் முதல் வீடாக அவர் வீடு அமைந்துவிட்டதில், முன்னாலும் பக்கவாட்டிலும் தோட்டம் போட்டு அதில் மா, வாழை, முருங்கை என நிறைய மரங்களும் பூச்செடிகளும் பார்க்கவே பசுமையாக இருக்கும் சூழலில் இருக்கும் அவரது வீடு. . அந்த வீட்டு வாசலில் மர நிழலில் எப்போது பார்த்தாலும் ஈசிச் சேரில் சாய்ந்து புத்தகமோ அல்லது செய்தித்தாளோ படித்துக்கொண்டு அல்லது ட்ரான்ஸிஸ்டரோ கேட்டுக்கொண்டிருப்பார் கோயிந்து மாமாவின் அப்பா. அவரது பக்கத்தில் எப்போதாவது உட்கார்ந்திருப்பார் மிகவும் சீக்காளியான கோயிந்து மாமாவின் அம்மா. கோயிந்து மாமாவின் அப்பாவும் ரயில்வே ஒர்க் ஷாப்பில் வேலை செய்து ரிடயர் ஆனவர்தான். அவர் ரிடயர் ஆனபின் அதேவீட்டை கோயிந்து மாமாவின் பேருக்கே மாற்றிவிட என் அப்பா ரொம்ப உதவிசெய்ததால் அவ்வப்போது அவர் வீட்டுத் தோட்டத்தில் காய்க்கும் காய்களோ கனிகளோ எங்கள் வீட்டிற்கு வரும்.

கோயிந்து மாமாவின் வீட்டிற்குள் நுழைந்த தம்பி அடுத்த நிமிடத்திற்குள்ளேயே 41 ஆம் பஸ் நம்பர் கிளம்பியதைப் பார்த்துவிட்டு ஆனந்தா ஸ்டோர்ஸ் பக்கம் போகாமல் வீட்டிற்கு ஓடிவந்து உள்ளே நுழையுமுன்பே ” அம்மா அம்மா! கோயிந்து மாமா வீட்டுத் தாத்தா செத்துப் போயிட்டாராம் ” என்று மூச்சிரைக்கச் சொன்னான். இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த வீட்டிலிருந்து வந்த முருங்கைக்காயை நறுக்கிக்கொண்டிருந்த அம்மா என் தம்பி கத்திக்கொண்டே வந்த செய்தியின் துயரம் தாக்க, சற்று நிதானித்து ” டேய் ! யாருடா போயிட்டது பாட்டியா இல்ல தாத்தாவா ? ” என்று பாட்டியின் நீண்டகால உடல் நலமின்மையை மனதிற்கொண்டு கேட்டாள். ” தாத்தான்னுதான் சொல்லிண்டிருந்தாங்கம்மா . அவ்வளவுதான் எனக்குத்தெரியும் ” என்று நிற்காமலேயே சொல்லிவிட்டு ஆனந்தா ஸ்டோர்ஸை நோக்கிப் புது நோட்டுகளின் கனவோடு ஓடிவிட்டான். நானோ என் தம்பி சொன்ன செய்தி சம்பந்தப் படாத ஒரு சோகத்தில் உட்க்கார்ந்தபோது அம்மா என்னிடம் வந்து மிகுந்த துக்கம் மேலிட்ட குரலில் ” டேய் ரமணா! கோயிந்து மாமா ஆத்துக்குப் போயி என்ன சமாச்சாரம்னு கேட்டுண்டு வாடா ” என்று சொன்னபோது என்னால் தட்டமுடியவில்லை. நான் கிளம்புமுன் ” வாசல்லேயே நின்னு கேட்டுண்டு வா. உள்ள போனா வந்து குளிக்க வேண்டியிருக்கும் ” என்று அந்த வீட்டுக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டே சொன்னாள்.

நான் கோயிந்து மாமா வீட்டிற்குப் போனபோது, அவர் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிக்கொண்டிருந்தார். அழுது சிவந்திருந்த கண்களோடு வாசல் கேட்டிற்கு வெளியே வந்த அவர் என்னைப் பார்த்தபின் என்னைக்கட்டிக்கொண்டு ” போய்ப்பாரு கண்ணு. தாத்தா நம்மள எல்லாம் விட்டுட்டுப் போயிட்டாரு ” . அவர் என்னைக் கட்டிக் கொண்டதால், எப்படியும் குளித்தாகவேண்டும் என்பதால், போய்ப் பார்த்துவிடலாம் என்று வீட்டிற்குள்ளே போனபோது அந்தப் பாட்டி மாத்திரம் தனியாக அம்மா கொண்டிருந்த சோகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லாமல், உட்கார்ந்திருந்தார்கள். கோயிந்து மாமாவின் மனைவி கண்ணில் தென்படவில்லை. . இன்னும் அந்தத் தாத்தாவை எல்லோரும் வந்து பார்க்கும்போது எப்படி வைத்திருக்க வேண்டுமோ அந்த நிலைக்குத் தயார்ப் படுத்தவில்லை. அம்மாவிடம் வந்து செத்துப்போனது தாத்தாதான் என்றும் இன்னும் யாரும் வரவில்லை என்றும் கோயிந்து மாமாகூட வெளியே போய்விட்டதாகவும் அந்தப்பாட்டி தாத்தாவிற்கு எதுவுமே நடக்காத மாதிரி உட்கார்ந்திருப்பதையும் சொன்னபோது அம்மா , ” அது என்ன பண்ணும். அதுக்கு இருக்குற சீக்குக்கு அது போய் சேந்திருக்கலாம். இவரு இப்படி பொட்டுன்னு போய்டுவாருன்னு யாருக்குத் தெரியும். நல்ல மனுஷன். ம்… அந்தக் கெழவிய இவனுங்க என்ன பண்ணப்போறாங்களோ ” என்று அடுத்த கவலைக்குப் போய்விட்டாள் அம்மா.

கோயிந்து மாமாதான் கடைசிப் பிள்ளை. அவருக்கு நான்கு அண்ணண்களும் ஒர் அக்காவும் இருப்பதாகவும் ஆனால் தாத்தாவிற்கு எல்லோர்கூடவும் சண்டை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். இரண்டு பெரியண்ணன்கள் பிஹெச் இ எல்லிலும், ஒரு அண்ணன் எங்கோ வடக்கே ஸ்டேட் பேங்கிலும், இன்னொரு அண்ணன் ரயில்வேயில் டிக்கெட் செக்கராகவும் , கோயிந்து மாமா ஒர்க் ஷாப்பிலும் இருந்தாலும் கடைசி இரண்டு பையன்களுக்கும் தாத்தா ரொம்ப சிரமப்பட்டுதான் ரயில்வேயில் வேலை வாங்கித்தரமுடிந்தது என்றும் அம்மா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ” ஜெயா சமயலப் பாத்துக்கோடி! நான் ஒரு எட்டு அவாத்துக்குப் போயி பாத்துட்டு வந்துடறேன் ” என்று என் அக்காவிடம் சொல்லிக்கொண்டே தலைமுடியை முடிந்துகொண்டு கிளம்பியபோது நானும் அம்மாவோடு கிளம்பிவிட்டேன். ஏற்கனவே எனக்கிருந்த சோகமான முகம் அந்தச் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமானதாகவே இருந்ததால் அம்மாவும் ஒன்றும் சொல்லவில்லை. நாங்கள் போனபோது கோயிந்து மாமா வீட்டிற்குத் திரும்பியிருந்தார். அம்மாவைப் பார்த்தபோது பெருத்த குரலெடுத்து, ” மாமி ! அப்பா போய்ட்டாங்க மாமி ! இனிமே யாரு இருக்காங்க எனக்கு ” என்று கதறியது மனதை என்னவோ செய்தது. கோயிந்து மாமாவின் மனைவியோ தனக்கு அழுகை வராததை மறைக்கப் புடவைத் தலைப்பால் வாயை மூடிக்கொண்டார்கள். ” எப்படிப்பா இது ! நல்லாதானே இருந்தாரு ! நம்பவே முடியலியே ” என்று தாத்தாவைப் பார்த்துக்கொண்டே கேட்டதற்கு , ” ஹார்ட் அட்டாக்தான் மாமி ! குடிக்க தண்ணி வேணும்னு சத்தமாக் கேக்க ஆரம்பிச்சு முடியாம சைகையில காட்டிக்கேட்டுக்கிட்டே இருக்கும்போது மூஞ்சி எல்லாம் வேர்த்து அப்படியே சாஞ்சிட்டாரு! எல்லாம் ஒரு அஞ்சு நிமிஷத்தில முடிஞ்சிருச்சி ” என்று ஒரு குறும்படத்தை விவரிப்பதுபோலச் சொன்னதை கோயிந்து மாமா விசாரிக்க வரும் எத்தனை பேரிடம் திரும்பத் திரும்ப இதையே கேட்பவருக்கு மட்டுமே முதன் முதலாகச் சொல்வதுபோல் சொல்லவேண்டியிருக்கும் என நான் நினைத்துக்கொண்டிருக்கும்போதே கோயிந்து மாமா சொன்னதைத் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக்கொண்டிருந்த அம்மா ” எல்லாருக்கும் சொல்லி அனுப்பிச்சாச்சா ” என்று கேட்டபோது , ” ஆச்சு மாமி. ஜனாதான் வரத்துக்கு லேட்டகும் போல இருக்கு. ஆனா , வந்துடறேன் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லியிருக்கான். நாளன்னிக்குக் காலையிலதான் வரமுடியும் அவனால. பாட்னாவிலேந்து வரணுமே ” என்று சொன்னபோது பக்கத்திலிருந்தவர்களுக்கு தாத்தா போன கவலையைவிட பாட்னா அண்ணன் வருவதற்கு நேரமாகுமே என்ற கவலை அதிகமாக இருந்தது மாதிரி எனக்குத் தெரிந்தது. பேசிக்கொண்டிருக்கும்போதே பிஹெச் இ எல் அண்ணன்கள் தனித்தனிக் காரில் தனித் தனிக் குடும்பங்களாக வந்திறங்கினார்கள். வெளி கேட்டைத்தாண்டி உள்ளே வரும்போதே அவர்களைப் பார்த்துவிட்ட கோயிந்து மாமாவின் மனைவி , ” சாவு வீட்டுக்கு வர்றவங்களுக்கு என்ன மேக் அப் வேண்டிக்கிடக்கு ” என்று அரை செகண்டில் அவர்களின் அலங்கார விசேஷங்களைக் கண்டுகொண்டு சமையலறை பக்கம் போய்விட்டாள். உண்மையில் அந்தக்குடும்பங்கள் ஏதோ கல்யாண ரிசெப்ஷனுக்கு வருவதுபோலத்தான் வந்திருந்தது .

கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் செத்துப்போன தாத்தாவின் கடைசித்தங்கை வந்தபின் தான் அந்த வீட்டிற்கு சாவு வீட்டிற்கான அந்தஸ்து வந்தது. தரதரவென்று கண்ணீர் அருவியாகக்கொட்ட, மூக்கைப் புடவைத்தலைப்பில் சிந்திக்கொண்டே உச்சஸ்தாயியில் அவள் பாடிய பிலாக்காணம் செத்துப்போன அவள் அண்ணனின் பெருமைகளை வாழவைத்துக்கொண்டிருந்தது. புதிதாக யார் வந்தாலும் மாரில் அடித்துக்கொண்டு அவர்களிடம் அண்ணனின் கடந்த காலங்களை எவ்வளவு முறை விவரித்தும் அவை அவளுக்கு சலிக்காது இருந்தது போலவே அவள் குரலும் தேயவே இல்லை. நடு நடுவில் ‘ டொய்ங்க் டொய்ங்க் ‘ என்று ரவுண்டான பித்தளைத் தட்டைத் தட்டி ஒருவர் எழுப்பிக்கொண்டிருந்த சத்தம் வேறு அந்தத் தங்கையை உசுப்பேத்திக்கொண்டிருந்தது. வந்தவர்கள் எல்லாம் காஃபியை குடித்துவிட்டு எதிர்த்தாற்போல் இருந்த மைதானத்தில் போடப்பட்டிருந்த கூரை தந்த நிழலில் அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள். கோயிந்து மாமாவின் பிஹெச் இ எல் சகோதரர்கள் அவ்வப்போது சிகரெட் பிடிக்க நழுவிப் போய்க்கொண்டிருக்க அவர்களின் வாரிசுகள் கிரிக்கெட் கமெண்டரி கேட்டுக்கொண்டிருந்தார்கள். வந்தவர்கள் எல்லாம் அவர்கள் தாத்தாவின் மேல் வைத்திருந்த பாசத்தின் அளவிலோ அல்லது அவர்களின் அந்தஸ்தின் பிரதிபலிப்பாகவோ வேறு வேறு அளவுகளில் மாலைகளை வாங்கி வந்து தாத்தாவின் மேல் அடுக்கிக்கொண்டிருந்தார்கள். தாத்தாவிற்கு மட்டும் அப்போது கொஞ்சூண்டு உயிர் இருந்திருந்தாலும், அந்த மாலைகளில் தெளித்திருந்த செண்டின் வாசனை தாக்கி உடனேயே மிச்ச உயிரை விட்டிருப்பார். எனக்கு அந்த வாசனையே எமனின் வாசனையாகத் தெரிந்தது. போதாதற்கு தாத்தாவின் தலைமாட்டில் ஏற்றிவைத்திருந்த ஊதுபத்தி வேறு எமலோகத் தயாரிப்பாகவே இருந்தது. எப்படி சாவுக்கென்று ஒரு வாசனையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை.

இன்னும் ஒரு நாள் காத்திருக்க வேண்டும் தாத்தாவை அனுப்ப என்ற நினைப்பே அங்கிருந்தவர்களை கஷ்டப்படுத்திக்கொண்டிருந்தது. பாட்டிக்குப் பசி தாங்காது என்பதால் வீட்டின் சமையல் அறையில் தனியாக ஹோட்டலில் வாங்கிவந்த சாப்பாட்டைக் கொடுத்தார்கள் . வந்தவர்கள் எல்லாம் ஒவ்வொருவராகப் போய் வெளியிலேயே சாப்பிட்டு வந்தார்கள் . காஃபி மாத்திரம் மணிக்கொருதரம் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் கோயிந்து மாமா மட்டும்தான் எதுவும் சாப்பிடவில்லை. அவரிடம் யாரும் எதுவும் கேட்கவுமில்லை. நான் மட்டும் கோயிந்து மாமாவிடம்போய் ” மாமா கொஞ்சமாக் காஃபியாவது தரட்டுமா. எல்லாரும் சாப்புட்டுட்டாங்க ” என்றபோது என்னை மீண்டுமொருதரம் கட்டிக்கொண்டு அழுதார். ஆனால் ஒன்றும் சாப்பிடவில்லை. என் அம்மா நேரமாகிவிட்டதால், எனக்கு நைசாகக் கண்ணைக்காட்டி வரச்சொல்லிவிட்டு விடுவிடுவென வீட்டிற்குப் புறப்பட்டு விட்டாள். ராத்திரியெல்லாம் விசும்பிக்கொண்டே படுத்திருந்தாராம் கோயிந்து மாமா. மறு நாள் கோயிந்து மாமாவின் ஜனா அண்ணன்ரெண்டு நாள் ரயில் அழுக்கோடு வந்துசேர, சடசடவென எல்லோரும் காரியத்தில் இறங்கினார்கள் தாத்தாவை அனுப்ப. பூக்களாலேயே செய்த பல்லாக்கில் தாத்தாவை அலங்காரம் பண்ணி தாரை தப்பட்டையோடு அவரின் கடைசி பயணம் கிளம்பும்போது என்ன நினைத்தாளோ அந்தப் பாட்டி , திடீரென்று ஓவென்று கத்தி அழ, அதைப்பார்த்த அந்தக் குடும்பத்தின் பெண்மணிகள் இதுவரை செய்ததுபோல் இல்லாமல் உண்மையாகவே அழுததைப் பார்த்தபோது தாத்தாதான் கடைசியில் ஜெயித்தது போல் இருந்தது. ஆனாலும் செத்துப்போய்க் கடைசிப் பயணத்திற்குக் காத்திருந்த காலம் என்னவோ அவ்ர் உயிர் வாழ்ந்த எண்பது வருடங்களைவிட அதிகமாக இருந்ததாக எல்லோருக்கும் தோன்றிவிட்டது கோயிந்து மாமாவைத் தவிர.

கோயிந்து மாமா, தாத்தாவின் பதினாறாம் நாள் காரியத்திற்கு எங்களைக் கூப்பிட வந்திருந்தபோது , அம்மாவிடம் நிறைய பேசிக்கொண்டிருந்தார். அவரது அம்மாவைப் பற்றி அவரின்

அண்ணன்கள் யாரும் கவலைப்படாதது பற்றியும், தன் மனைவியும் தன் அம்மாவை எப்படிக் கவனித்துக்கொள்வாளோ என்பது பற்றியும் மிகுந்த சோகத்தோடு

சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் தம்பி ஆனந்தா ஸ்டோர்ஸில் இருந்து அவன் வாங்கி வந்த புது நோட்டுகளை அம்மாவிடம் காட்ட எடுத்துக்கொண்டு வந்தான். அதைப் பார்த்த

கோயிந்து மாமா , ” அடடா ! நோட்டெல்லாம் வாங்கிட்டியா ! அப்பா இந்த வருஷம் பத்து குழந்தைங்களுக்கு நோட்டு புஸ்தகமெல்லாம் வாங்கிக் கொடுக்கணுமின்னு சொல்லிக்கிட்டிருந்தாரு ! அதுக்குள்ளாற இப்படி ஆயிருச்சி ! ” என்று சொல்லிக்கொண்டே என்னைப் பார்த்து , ” நீயும் வாங்கிட்டியா கண்ணு ? ” என்று கேட்டபோது நான் அம்மாவைப்

பார்த்தேன். அவள் முக பாவத்திலிருந்து என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

– 18 ஜூன், 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *