கல்யாணக் குருவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 9,383 
 
 

சற்றுமுன் வரை தன்னில் அலங்காரமாயிருந்த அத்தனையும் மெத்தையில் கலைந்து கிடந்தது.சுடிதாருக்கு மாறினாள். இது எத்தனையாவது அலங்காரம்?அவளுக்கே ஞாபகமில்லை. மனமெங்கும் குமுறல், அழுகையாக உருவெடுக்கும் முன் நிதானத்தை பற்றிக் கொள்ளனும் என்று எண்ணியவாறே துண்டை எடுத்துக் கொண்டு, பாத்ரூமுக்குள் நுழைந்தாள் சுபத்ரா.

சுபத்ரா,சாமுத்ரிகா லட்சணம் பொறுந்திய பெண்தான்…திருமணக்கொழு, மணவரை மாடத்தில் யாரும் அமர வைக்காத பொம்மையாகி விட்டாளே…அதுதான் வருத்தமளிக்கிறது. நாட்களின் நகர்வில் வயதின்அளவு நீள்கிறது இதை, அவள் நினைக்கவில்லைதான். இதோ முகம் கழுவி துடைத்தவாறே வந்து விட்டாள்.

முழுநீளக் கண்ணாடிமுன் நின்றாள்.மொத்தமாய் தன்னை உற்றுக் கவனித்தாள். எந்தச் சலனமுமின்றி தலைவாறி பவுடர் பூசி, பின் குத்தி,ஸ்டிக்கர் ஒட்டி, இப்படியும் அப்படியுமாய் திரும்பி அழகு பார்த்த போது, இனம் புரியாத சலிப்பு தோன்றியது.சட்டென பால்கனி குருவி ஞாபகத்தில் வந்தது.

பால்கனி கைப்பிடிசுவரில் டிசைனுக்காக பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடியின் முன் சிறிய திண்டில் வந்தமரும் குருவி அந்தக் கண்ணாடியை ‘டொக் டொக்’ என கொத்தும். தினமும் இக்காட்சி… எதேச்சையாக ஒருநாள் பார்த்த சுபத்ராவுக்கு அது வித்தியாசமாகப்பட்டது. மனதில் அவ்வப்போது ஏற்படும் தாக்கங்களை மெல்லமாய் பால்கனிக்குச் சென்று,குருவியின் செயலை பார்த்துக் கொண்டேயிருந்து தன்னை லேசுப்படுத்திக் கொள்பவள் ”ஏகுருவியே…எந்தத் தேடலில் உன்னை இப்படி ஆட்படுத்திக் கொள்கிறாய்..?” முணுமுணுத்துக் கேட்பாள்.

அதுவே நாளடைவில் சித்ராவுக்கு இதம் வருடும் ஈடில்லாக் காட்சியாகி விட்டது.

மாடியேறும் போது பார்த்தாள், மிச்சர் வைத்துக் கொடுத்த பேப்பர் தட்டு, டீ கப், வெத்தலைப் பாக்குத்தட்டு எல்லாமும் எடுத்துக் கொண்டிருந்தாள்,அம்மா. பாவம் அவள் இதுவும் கைகூடாமப் போச்சேன்னு வாய்விட்டுப் புலம்பலானாள்.

“அம்மா விடுமா சுபத்ராவுக்கு இன்னும் நேரம் கைகூடலன்னு நெனச்சிக்குவோம்.” சோபாவில் படுத்துக் கிடந்த அண்ணன் கூறியது உதட்டளவு வார்த்தைதான்… உள்ளுக்குள் தன் தங்கைக்கு காலகாலத்தில் நல்லது செய்ய முடியலையே என்ற தங்கம் கனத்துக் கொண்டிருக்கும் என்பதே உண்மை.

“அதுக்குனு இப்படியாப்பா வாரதெல்லாமா தட்டிப் போகனும். கும்பிடுற சாமிக என்ன செய்யுதுகளோ…” அழுதே விட்டஅம்மாவை எண்ணித் தனக்குள் சிரிக்கத்தான் முடிந்தது சுபத்ராவால்.

வீட்டுக்குள்ளேயே இருக்கும் அம்மாவிற்கே இப்படின்னா முப்பது வயதை தொட்டும் இன்னும் காட்சிப் பொருளாக தினம் வேலைக்குப் போய் வீடு வருகிறேனே என் நிலை? வேலையில் அலுத்து சலுத்து, பஸ்ஸை விட்டு இறங்கி நடந்து வருகையில் உடன் படித்த, பழகிய பெண்கள் யாராவது எதிர்ப்பட்டு ”சுபத்ரா நல்லாயிருக்கியா”ன்னு கேட்டு ”எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி. உனக்கு ஆச்சா”ன்னு தெரிந்த விசயத்தை தெரியாத மாதிரி குத்திக் கேட்கும் போது, நடிப்புத்தனமாக புன்னகைத்தபடி ஏதோ ஒன்னு சொல்லும் நிலையிருக்கே…அந்த கொடுமை வேறெந்த பெண்களுக்கும் வரக்கூடாது கடவுளே…” என பல தடவைகள் மனமுருகியுள்ளாள்.

இதோ இன்றும், மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் பிடித்து, சுபத்ராவின் அண்ணன், அக்கா, மாமா எல்லோருக்குமே மாப்பிள்ளை வீட்டார்களை ரொம்பப் பிடித்து, பெண் பார்க்கும் சம்பிரதாயத்தில்…”மாப்பிள்ளை தனக்குப் பிடிக்கவில்லை” என மெளனமாய் சுபத்ரா சாதித்து விட, வழக்கம் போல் கூட்டம் வீடு கலைந்தது.

வழக்கம்போல் பால்கனிக்குப் போய் அரவமில்லாது எட்டிப் பார்த்தாள்…அதே குருவி கண்ணாடியை ‘டொக் டொக்’ ன்னு கொத்திக் கொண்டிருந்தது!

”உன்னை மாதிரிதான் குருவியே நானும்…என்றாவது ஒருநாள் திருமணத்தில் பூத்துவிடுவேன் என்ற நம்பிக்கையில், பெண் பார்த்தல் கண்ணாடி முன் நின்று எதிர் நோக்குகிறேன்” தன்னில் நினைத்து, புன்முறுவலித்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *