கற்பவை… கற்றபின்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 13,395 
 
 

நேற்றுமதியத்திலிருந்து எதைச்செய்தாலும், அதனூடாக அம்மாவின் நினைவும் நிழலாகச் சேர்ந்துவந்தது. மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, யாரோ முகம் தெரியாத ஒருஆள், தன்னுடன் வந்தவரிடம், “எங்கம்மா, நல்லா மீன்கொழம்பு வைப் பாங்க!“ என்று சிலாகித்துச்சொன்ன நொடியில், மனசுக்குள் அம்மாவின் நினைவு, புகை போல மேலெழுந்து அலையாடி, பல சித்திரங்களை வரைந்து தள்ளியது. அம்மாவுக்கும் மீன்குழம்பு நன்றாகச் சமைக்கவரும். மூன்றுதெருவுக்கு மணக்கும்.

கை கழுவிவிட்டு வெளியேவந்தபோது, ‘இந்தா… பாக்கு போட்டுட்டுப்போ!‘ என்று அம்மாவே சொல்வதுபோலிருந்தது. இரவுத்தூக்கத்திலிருந்து இரண்டொருமுறை அம்மா வின் நினைவுகளோடு விழிப்பு தட்டியது. ஒருமுறை முதிர்ந்த வேப்பமரமொன்று வேரோடு முறிந்துவிழுந்தது. அம்மாவுடன்பேசி பதினைந்து நாட்களுக்கும் மேலாகி விட்டது. இதற்குமுன்பும் நீண்டநாட்கள்வரை பேசாமலிருந்திருக்கிறேன். அப்போதெல் லாம் இப்படியெதுவும் துரத்திக்கொண்டுவந்ததுபோல, நினைவிலில்லை. ‘அம்மாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?‘ எனும் சந்தேகக்கோடு ஒன்று, நினைவைக் கிழித்துக் கொண்டே இருக்கிறது. காலையிலிருந்து இருக்கையில் சீராக உட்கார முடியவில்லை. நிச்சயமின்மைபோல ஏதோவொன்று மனசைத் துன்புறுத்துகிறது. எதையும் எதிர்கொள் ளும் மனநிலை இப்போதில்லை.

நினைத்த நேரததில் அம்மாவைத் தொடர்புகொண்டு பேசமுடியாது. குறுக்கும் மறுக்குமான முனிச்சாலை தெருக்களில் கருவாட்டுக்கூடையும் குரலுமாகத் திரிவாள். வாங்குபவர்கள் விசனப்பட்டு விசாரிக்கும்போது, அவர்களிடம் என் நம்பரைக்கொடுத்து, “இது, எம்புள்ள நம்பர். ஒங்க போன்ல கொஞ்சம் போட்டுக்குடுங்க, மகராசி” என்று கெஞ்சிக்கேட்டுப் பேசுவாள். அவள் கேள்விக்கு, “இங்கே நான் நல்லாருக்கேம்மா” என்று சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். அதைக்கேட்டு அவள் கசிவது வார்த் தைகளில் வழிந்துவரும். “என்னைப்பத்தி நீ கவலைப்படாதேய்யா. கஞ்சிக்கு இங்கே நான் கருவாடு வித்துக்குவேன். நீ நெனைச்சமாதிரி அங்கன இருக்கியா?” என்று அப்பாவி யாய்க்கேட்பாள். அடுத்தமுறை ஊருக்குப்போகும்போது, குறைந்தவிலையிலாவது ஒருசெல்லை வாங்கிக்கொண்டுபோய் அம்மாவுக்குக் கொடுக்கவேண்டும். ஐநூறு ரூபாய்க்கே புதியசெல் கூவிக்கூவி விற்கப்படும் இந்தக்காலத்தில், அவளுக்கு ஒரு செல்லை வாங்கி்த்தர என்னிடம் வக்கில்லை என்பதை நினைக்கும்போது, உடம்பு கூசுகிறது.

நினைவுகளை ஒதுக்கிவிட்டு பணிக்குள் ஆழ்ந்தபோது, பந்துபோல அம்மாவின் நினைவு திமிறிக்கொண்டு முகத்திற்கு முன்னே ஆடுகிறது. இரவுக்குள் மொத்தப் பக்கங் களையும் கட்டிமுடித்தாகவேண்டும். நாளை மறுநாள் அரசு விடுமுறை. மணியண்ணன் பிரஸ்ஸூக்கு லீவுவிட்டுவிடுவார். அப்புறம் ஓட்டிவாங்குவதற்குள் நாக்குத்தள்ளிவிடும். அவர் பின்னால் ஏந்திக்கொண்டே திரியவேண்டும். போஸ்டல் தேதியை மாற்றச் சொல்லி லெட்டர் தரவேண்டும். போஸ்டாபீசில் அந்தம்மா, ஏதோ வேண்டாதமாதிரி கையெழுத்துப்போட்டு, ‘நொட்டாங்கையால்‘ நீட்டுவாள். சலுகைக்கட்டணத்தில் எடுத்துக் கொண்டுபோகிற கூரியர்காரன், திடீரென்று மாப்பிள்ளை ஆகிவிடுவான். எல்லாவற் றையும் மாற்றிக்கொண்டு அலைவது, தொறட்டுப்பிடித்த வேலை. சுத்தப்படாது.

மணியண்ணனின் பிரஸ்பெயரில் போட்டுவாங்கிய செக், ‘பாக்கெட்டில் இருக் கிறதா?‘ என்று கை அனிச்சையாகத் தொட்டுப்பார்த்துக் கொண்டது. முன்னமெல்லாம் பேமென்ட்டை சாவகாசமாக வாங்கிக்கொள்வார். இப்போது அப்படியில்லை. எல்லோரை யும்போல, ‘இந்தக்கையில செக். அந்தக்கையில மேட்டர்’ என்கிறார். போன இதழை மக்குப்பேப்பரில் ஓட்டிவிட்டார். ‘ஏத்துறதுக்கு முன்னால நீ ஒருதடவை பாக்குறது இல்லியா?’ என்று பர்ஸ்ட் காப்பி பார்த்த ஆசிரியர் இங்கே ஓட்டிவிட்டார். அவ்வளவு செய்தும் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. ‘இந்த இதழுக்கு ஃபாரின் நியூஸ் பிரிண்ட் பிளீச்சுடுதான் வேணும்னு சொல்லிறணும். லலிதாலதான் நல்லபேப்பர் கிடைக் குதே!’

நேற்றிரவு, ராப்பர் நாலாவதுகலர் ஓடுவதைப் பார்க்கப்போனபோது, அட்டைப் படத்திலிருந்த மூதாட்டி, அம்மாவை நினைவூட்டினாள். அவள் பார்வையிலிருந்தக் கனிவை, அம்மாவிடம் நான் நேரில் பார்த்திருக்கிறேன். பிளஸ்டு படித்துவிட்டு மேலே படிக்க வழியில்லாமல் தடுமாறிக்கொண்டு திரிந்தக்காலம். நண்பர்களுடன் சேர்ந்து, தினமணி டாக்கீஸிலும், சிந்தாமணி டாக்கீஸிலும் ஐம்பத்தைந்து காசுக்குப் படம் பார்த்துவிட்டு, விஸ்வநாத அய்யர் கடையில் பதினைந்து காசுக்கு பொங்கல் தின்று விட்டு வீட்டுக்கே போகாமல், தெப்பக்குளத்திலும் மஹாலிலும் நடக்கும் சினிமா படப் பிடிப்புகளைப் பார்ப்பதும், அங்கேயே தூக்கிக்கழிப்பதுமாகக் கவலையில்லாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அம்மாவோ கண்ணில்பட்டவர்களி்டமெல்லாம் என்னைக் கேட்டுத் தேடித்திரிந்திருக்கிறாள். யாரோ இருப்பிடத்தைச் சொல்லத் தேடிவந்து, அடித்து இழுத்துக்கொண்டுபோனது இன்னும் நினைவில் இருக்கிறது. அடியென்றால் அப்படி யொரு அடி. உடம்பு கன்றிப்போனது. அவள் அடியைத் தடுக்க இடதுகையால் மறித்த போது, மணிக்கட்டுக்குமேலே கம்புபட்ட இடம் பணியாரம்போல வீங்கிவிட்டது. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடோடிவந்து, “அப்பனில்லாதப் பிள்ளையை அடிச்சுக் கொன் னுறாதே!“ என்று தடுத்துப்பிரி்த்தார்கள். தேம்பித்தேம்பி அழுதபடி தூங்கிவிட்டேன். அன்றிரவு, அடிபட்ட இடத்தில் அம்மா தவிட்டு ஒத்தடம்கொடுத்தபோது, இதமானச் சூட்டில் கண்விழித்தேன். அவள் என் மீது கொண்டிருந்தப் பரிவை, தாய்மை வெளிச்சம் போட்டுக்காட்டியது. கொஞ்சநாட்கள் ஒழுங்காக இருந்து, நல்ல நண்பர்களுடன் சேர்ந்து, மத்திய அரசின் பணியாளர்த் தேர்வை எழுதியபோது, அதிர்ஷ்டம் பிய்த்துக்கொண்டது. என்னைத் தவிர, எழுதிய நண்பர்கள் எல்லோருக்கும் புடுங்கிக்கொண்டது. அம்மா, எனக்குக் கோலாகலமாக விழா எடுக்காதக்குறைதான். ஊரெல்லாம் வேடிக்கை பார்க்கும் படி செய்துவிட்டாள். அன்று அவள் முகத்திலிருந்த வெளிச்சம் நிலவொளியை ஒத்தி ருந்தது.

புதுடெல்லியில் மொழிபுரியாத அலுவலகமொன்றில் தாட்டி தாட்டியான ஆட்களுடன் என்ன செய்வதென்று தெரியாமல் பதினைந்துநாட்களைக் கழிக்கவே, ஒரு ஜென்மம் போய்விட்டதாக உணர்ந்தேன். அவர்கள் சொல்வது எனக்கும், நான் சொல்வது அவர்களுக்கும் புரியவேயில்லை. போன மூன்றாம்நாளே, ஐம்பது பைசா உள்நாட்டுக் கடிதத்தில், “அம்மா, இங்கே சோறு தண்ணீ சரியில்லம்மா!“ என்று எழுதிப்போட்டேன். பத்தாவதுநாளே, “ஒத்துக்காட்டி வந்துர்றா ராசா!“ என்று பதில் கடிதம் போட்டுக் கூப்பிட் டுக்கொண்டாள்.

மது எட்டுமணிவாக்கில் வந்துவிடுவான். தேசியநாளிதழ் ஒன்றில் லே – அவுட் பிரிவில் இருக்கிறான். சூப்பர் வேலைக்காரன். மண்டை பூராவும் மசாலா. ‘செய்திகளை குரங்குவால்போல நீளநீளமாக ஒட்டுவது என்னவேலை?’ என்று சலித்துக்கொண்டு, நேரம் ஒதுக்கி நாலைந்து மாதஇதழ்களுக்கு வடிவமைப்பு செய்துதருகிறான். ஒருஇதழுக்குச் செய்ததுபோல மற்றொரு இதழுக்கு இருக்காது. ஒருபக்கம்போல மற்றொருபக்கமும் இருக்காது. செய்திகளையும் அதற்கானப் படங்களையும் கொடுத்து, பக்க அளவைக் குறிப்பிட்டுவிட்டால்போதும்… சொன்னதைக்காட்டிலும் பத்துசதவீதம் கூடுதலாக அசத்தி யிருப்பான். அப்படிச்செய்வதுதான் திருப்தியாக இருப்பதாகச் சொல்லுவான். பிளாட் பார்ம் பழைய புத்தகக்கடைகளில் நிறைய ஆங்கிலப் புத்தகங்களை வாங்கி, பக்கம் பக்க மாய் ஒரு குழந்தைபோல புரட்டிப்புரட்டிப் பார்ப்பான். சொன்னதுபோல வந்துவிடுவான். வரட்டும். இரவு எவ்வளவு நேரமானாலும் அவன் பேசிக்கொண்டே முடித்துத்தந்து விடுவான்.

அம்மாவிடமிருந்து போன் வந்த தருணங்களிலெல்லாம் அவனும் அருகில் இருந்திருக்கிறான். நான் பேசுவதை கண் இமைக்காமல் பார்ப்பான். “ஸ்பீக்கர்போட்டுப் பேசு” என்பான். நான் பேசிமுடித்துவிட்டு, அவனிடம் திரும்பும்போது, “அம்மா இல்லா தது பெருங்குறையாருக்குடா!” என்பான். அவன் கண்களில் நீர் இருக்கும். அந்தவகை யில் அம்மா தூரத்திலிருந்தாலும் நான் அதிர்ஷ்டக்காரன்.

புதுடெல்லியிலிருந்து திரும்பிவந்து சினிமா… சினிமா… என்று அலைந்தபோது, படத்தில் அடுத்தக்காட்சி என்னவாக இருக்கும் என்று தெரியத்துவங்கியது. அடுத்தடுத்து வரவிருக்கும் வசனமும் புரிபடத்துவங்கியது. சினிமா கைக்குள் வந்துவிட்டதுபோல இருந்தது. ‘சினிமாவுக்கு நாம ஏன் கதை எழுதக்கூடாது?‘ என்று, எனக்குள் ஏதோ வொன்று குடையத் துவங்கியது, அப்போதுதான். மதுரையில் தொடர்ந்து நடந்துவந்த சினிமா படப்பிடிப்புகளும் அதற்கு ஊக்கம் கொடுப்பதாயிருந்தது. மதுரைக்காரர்களான பாலமுருகன், சோலைமலை கதை – வசனத்தில் கலக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எழுதிய படங்கள் நூறுநாட்கள்தாண்டி ஓடிக்கொண்டிருந்தன. தெருமுக்கிலிருந்த வாசக சாலைக்கு பேப்பர் படிக்கவரும் இங்கர்சால் வாத்தியார், அங்கு உட்கார்ந்து நான் கதை எழுதுவதைப் பார்த்து புளகாங்கிதமடைந்து, அதை வாங்கிப்படித்தார். ‘நீ நல்லா வருவே‘ என்று ஆசிர்வாதமும் செய்தார். அவர் சினிமா பித்தர். ஒருபடம் விடமாட்டார். அதனால் அவரது ஆசிர்வாதமும் என்னை உசுப்பேத்தியது. முதலில் எழுதியக் கதை யைப் படித்துப்பார்த்து, ‘இதை பத்திரிகைக்கு அனுப்பு‘ என்று சொன்னதும் அவர்தான். அனுப்பி ஒருமாதமிருக்கும். என் பெயருக்கு பத்திரிகை அலுவலகத்திலிருந்து தபால் ஒன்று வந்திருந்தது. பிரித்துப்பார்த்தால், நான் எழுதியனுப்பியிருந்தக் கதை பிரசுரமாகியிருந்தது.

இரவும்பகலுமாக நான் எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்த அம்மா, கொஞ்சம் பயந்துபோனாள். துணிக்கடையில் வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டாள். கருவாடு வாங் கும் வீடொன்றில் பெண்களிடம் பேசி, அவர்கள் ஆண்களிடம் பேசி, எனக்கானப் பணி யிடம் தயாராகியிருந்தது. துணிக்கடையின் கோடவுனில், வந்த துணிப்பண்டல்கள் எத்தனை… போன துணிப்பண்டல்கள் எத்தனை என்பதை கணக்கெழுதவேண்டும் என்றார்கள். கணக்குக்கும் நமக்கும் காததூரம். ஆகாது. கணக்கு வாத்தியார் கல்யாண சுந்தரம்தான் வாழ்க்கையில் என் முதல் எதிரி. அவர் வகுப்புக்கே மட்டம்போடுகிறவன் நான். இப்போது நானொரு மாபெரும் கலைஞன். ‘இந்தவேலை உனக்கானது இல்லை‘ என்று மனசு சொன்னது. மனசைத்தாண்டி என்னால் எதையும் செய்துவிட முடியாது. கடையில் சொல்லாமல் கொள்ளாமல் மதிய உணவுவேளையின்போது, வீட்டுக்கு வந்து விட்டேன். கருவாடு விற்றுவிட்டு வீடுதிரும்பிய அம்மா, என்னைப் பார்த்ததும் அதிர்ந்து போனாள். “என்னடா?” என்றாள்.

“அந்தவேலை புடிக்கலம்மா!“ என்றபோது, அவள் எதுவும் பேசவில்லை. என் முகத்தையே பார்த்தாள். அப்புறம் சோறு போட்டாள். சாப்பிட்டு முடித்து கை கழுவி எழுந்தபோது,“நான் கெஞ்சிக்கூத்தாடி அந்தவேலைக்கு ஏற்பாடு செஞ்சேம்ப்பா“ என்றாள். வார்த்தைகளில் லேசானக் கெஞ்சல் இருந்தது. மகனுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்ற ஆதங்கம் புரண்டோடியது. “வயசுபோகுதுல்ல. இனிமே என்ன செய்யப் போற?“

“நான் சினிமால டைரக்டர் ஆகப்போறேம்மா“

“என்னது?“

“டைரக்டர்ம்மா…டைரக்டர்”

அவளுக்கு எதுவும் புரியவில்லை. “என்னமோ போ. எழுதுனவன் ஏட்டக்கெடு்த் தான்ம்பாங்க. கெடைச்சத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுற!“

இதழுக்குப் போதுமானச் செய்திகள் கையில் இருந்தன. நான்கு கட்டுரைகள், ஏழு அல்லது எட்டுகவிதைகள், மூன்றுசிறுகதைகள், ஒருசெவ்வி, இரண்டுபக்கத்துக்கு சினிமா, ஒருபத்தி, அப்புறமாய் இரண்டு நூல்விமர்சனம், ஒருதலையங்கம், கொஞ்சம் கடுதாசிகள் என்று இதழின் உள்ளடக்கம் இருக்கும்.

அட்டைப்படத்துக்கான பெரியகட்டுரை இரண்டுநாட்களுக்கு முன்பே தங்கையா அனுப்பிவிட்டார். இருபதுபக்கத்துக்கு இணுக்கிஇணுக்கி எழுதியிருந்தார். தமிழின் முக்கி யமானக்கட்டுரை. இப்போதெல்லாம் கையால் எழுதுவதை எழுத்தாளர்கள் பாவம் என்று கருதுகிறார்கள். ‘ஒன்லி டைப்பிங் செண்டிங் வயா ஈ.மெயில்’ என்று சொல்லிக்கொள் வதைப்பெருமையாக நினைத்துக்கொள்கிறார்கள். அது பத்திரிகையின் பாதிவேலை யைக் குறைத்துவிடுவது உண்மைதான். சிலபெரிசுகள் மட்டும் கட்டைப்பேனாவில் மை ஊற்றி எழுதினால்தான் எழுதவரும் என்று அடம்பிடிக்கையில் அவர்களும் பாவமாகத் தான் தெரிகிறார்கள். தங்கையா அடம்பிடிக்கும் ரகம். அவரது கையெழுத்தைப் படித்து டைப் அடிக்கும் ஷர்மிளாவுக்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வேலைக்கு சிபாரிசு செய்யலாம். முதல் புரூஃப்பிலேயே தவறில்லாமல் அடித்துத்தரும் அசாத்தியத் திறமை சாலி. “எப்டிம்மா அந்தக்கையெழுத்தப் படிச்சு அடிச்சுத்தர்றே?” என்று கேட்கும் போதெல் லாம், “இதத்தான் எழுதிருப்பாருன்னு குத்துமதிப்பா அடிக்குறதுதான்!” என்று அலட்ட லில்லாமல் சொல்லுவாள். ரசனைக்காரி. விதவிதமானத் தோடுகளைக் காதில் போடு வாள். தலையை வெடுக்கெனத் திருப்புவதற்கு எங்கேயோ பயிற்சி எடுப்பாள்போல. தலையும் அவள் அணிந்திருக்கும் தோடும் பிரயத்தனத்தோடு அழகாய்த் திரும்பும். ஆனால் அடுத்தவார்த்தைப் பேசமாட்டாள். ரகோத்தமன் பிட்டுபோட்டுக் கொண்டிருக் கிறான். ஆகிவந்தால் சந்தோஷம்தான். எதிர்சீட்டில் உட்கார்ந்திருக்கும் ரகோ செல்லில் பேசிக்கொண்டிருக்கிறான். அவளிடமாகத்தான் இருக்கும்.

இரண்டாவது கட்டுரை மங்குனி எழுதியது. மங்குனி என்பது புனைப்பெயர். பல் கலைக்கழகவாசி. அவர், வகுப்புக்குப்போய் பாடம் எடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால் எழுத்தில் வரலாறு படைக்கிறார். ஏழெட்டுப் பத்திரிகைகளில் கலை, இலக்கி யம், பண்பாடு, நாடகம் என்று இதழுக்கு ஒன்றாக எழுதிக்குவிக்கிறார். இந்தஇதழுக்கு ஏதோ ஒருஊரின் பண்பாட்டு அடையாளங்களை எழுதியிருப்பதாகச் சொன்னார். பிரிண்ட் அவுட் டிரேயில் கிடக்கிறது. ஒருபுரட்டு புரட்டவேண்டும். அந்தஆளை நம்பி இனி அப்படியே போடமுடியாது. உள்ளுக்குள் சாதிவாடை உள்ளவராக இருக்கிறார். போனமாதத்துக்கு முந்தினமாதத்துக் கட்டுரையில், வரலாற்று நிகழ்ச்சியில் ஒருசமூகத் தின் பங்களிப்பை மறைத்துவிட்டு, மற்றொரு சமூகம்தான் அதை முதலில்செய்தது என்று எழுதிக்கொடுத்துவிட்டார். அது ‘சரியா. தவறா?’ என்று எங்கேபோய் சரிபார்ப்பது. சரிபார்த்துப் போடுவதுதான் சரியானது என்றாலும் தொடர்ந்து எழுதுபவர், பெரிய மனிதர் என்று நம்பித்தானே போடுகிறோம். எழுத்துப்பிழைகள் மட்டும் பார்த்துப் போட் டாகிவிட்டது. பதினெட்டாயிரம் பிரதிகள் போகின்றன. இதழ்வெளியாகி இரண்டாவது நாள் ‘ஆ…. ஊ…’ என்று மற்றொரு சமூகத்து ஆட்கள் ‘திமுதிமு’வென நுழைந்துவிட் டார்கள். செக்யூரிட்டி என்று எதுவுமில்லை. அப்போது ஆபிஸ் ஆட்கள் யாரும் வந்தி ருக்கவுமில்லை. நான்தான் முதல்ஆளாக வந்திருந்தேன். அத்தனைப் பெரியக்கூட்டத் தைப் பார்த்ததும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. நாளிதழொன்றில் மூன்றுபேர் கொல்லப்பட்ட சம்பவம், சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்துபோனது. வந்திருந்தவர் களில் ஒருவன் குதிரை உயரத்துக்கு இருந்தான். கடாமீசை வேறு. சங்கத்துக்கு செயலா ளராம். ரொம்பப் பேசினான். ”எழுதுனவன இப்பவே பாத்தாகணும்’ என்று தவ்வினான். சமாதானப்படுத்தி அனுப்புவதற்குள் அடிவயிற்றில் நீர்நிறைந்து கனத்துவிட்டது. மஞ்சள் பை நிறைய உடைந்த… உடையும் நிலையிலுள்ள… காகிதங்கள். கண்ணாடி பிரேம் போட்ட பத்திரங்களைத் தூக்கிப்போட்டு, “அப்ப இதுவெல்லாம் என்னவாம்?” என்று ஒரு கேள்வி கேட்டான். எனக்கு பதில் தெரியவில்லை. அவர்கள் போனதும் ஐந்துநிமிடங் களுக்கும் மேலாகநின்று கழித்துவிட்டு வந்தபின்புதான் ஆசுவாசமானது. இந்த மாதத்து இதழில் அவன் கொடுத்துவிட்டுப்போன ஆதாரங்கள் கடிதமாகப் பிரசுரமாகியிருக்கிறது.

மற்ற இரண்டுகட்டுரைகளும் டவுண்லோடு ஐட்டங்கள். ‘கூகுள் இருக்க பய

மேன்?’ என்று சுடப்பட்டவை. லிட்டரரி டிரான்ஸ்லேஷன் கூடக்கிடையாது. டிட்டோ வெர்பல். அதைத் தரவிறக்கம் செய்திருப்பது பவளராமனும், அடையாளமில்லாதவனும். வார்த்தைகளை வெட்டினாலோ, மாற்றினாலோ அர்த்தம் மாறிவிட்டதாகச் சண்டைக்கு வந்துவிடுவார்கள். அப்படியே இருந்தால்தான் அர்த்தம் விளங்குமாம். ‘என்ன அர்த் தமோ… என்ன எழவோ..?’ இருவரும் ஆசிரியரின் நண்பர்கள். ஆசிரியர்தான் பதிப்பா ளரும்கூட. அட்ஜஸ்ட் செய்துகொண்டு போகச்சொல்லுவார். போய்த்தான் ஆகவேண்டும். இதழ் வந்ததும் அடுத்தநாளே அந்தக்கட்டுரைகளுக்கு நாலைந்து வாசகர் கடிதங்கள் ‘ஆஹா… ஓஹோ…’ என்று வந்துசேரும். பெயர் விலாசம் வெவ்வேறாக இருந்தாலும் சொல்லிவைத்து ஒரே ஆள் எழுதுவதுபோல நெடியிருக்கும். இரண்டுபேருமே ஏழெட்டுப் புத்தகங்கள் போட்டுவிட்டார்கள். அத்தனையும் சுயமுன்னேற்றம் பற்றியது. சுயமுன் னேற்றம் என்று யார் எழுதினாலும் வாசகர்கள் விழுந்தடித்து ஓடிப்போய் வாங்குகிறார் கள். என்ன செய்வது? நெட்டைத் திறந்தால் பத்துரூபாயில் எடுத்துவிடலாம் என்பதும் எழுதுபவர்கள் அங்கிருந்துதான் லவட்டுகிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிய வில்லை.

ஜெயஷங்கரிடமிருந்தும் மணிமுத்துவேலிடமிருந்தும் கவிதைகள் கேட்டுவாங்கி யாகிவிட்டது. நல்லகவிதைகள். ரத்னாகரனும் ஸ்ரீஜித்தும் ஆளுக்கொருகவிதை அனுப்பி யிருக்கிறார்கள். போட்டுவிடலாம். ராம்மௌனிகாஸ்ரீ அனுப்புவதாகச்சொல்லி பத்துநாட் களாகிவிட்டன. இன்னும் அனுப்பவில்லை. செல்லை எடுத்து நம்பரை அடித்தால், நீண்ட நேரம் ஒலித்து ‘நோ ஆன்ஸர்’ என்று வருகிறது. முதலில் கஜேந்திரசாரதியிடம்தான் கேட்கலாம் என்று தோன்றியது. ராம்மௌனிகாஸ்ரீ இருக்கும்போது இன்னொன்று எதற்கு என்று விடவேண்டியதாகிவிட்டது. அதுபோக, தபாலில் வந்து அச்சேறாமல் கிடக்கும் புதிய கவிஞர்களின் கவிதைகள் இரண்டோ மூன்றோ இந்தஇதழில் சேர்த்துக்கொள்ள லாம். அபூர்வா என்ற புதுப்பையன் எழுதியக்கவிதை ஒன்று நன்றாக இருக்கிறது. அதை யும் போட்டுவிடவேண்டும். இரண்டுமூன்றுமுறை போனில் கேட்டுவிட்டான்.

இந்தக்கவிதாயினிகள் நம்மப்பக்கம் திரும்ப மாட்டேனென்கிறார்கள். ஆரம்பத் தில் பொட்டுரமா மட்டும் ஒன்றிரண்டு கவிதைகளை அனுப்பிவைத்தார். இப்போது அது வும் இல்லை. இதழ் சைவமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது. ஆண்கள் எழுதும் ‘அப்படி இப்படி’யெல்லாம் அசைவத்தில் சேர்த்தியாகும்படி இல்லை. அதிகபட்சம் லிங்கத்துடன் அல்லது கை மைதூனம் என்பதுடன் நின்றுவிடுகிறது. கெஞ்சுதல் அல்லது பெருமூச்சு டன் அவர்கள் கவிதை முடிந்துவிடுகிறது.

மறக்காமல் எழுத்தாளர் சின்ன ராட்சசனின் மறைவுக்கு, ஒரு கண்ணீர் அஞ்சலி செய்தி எழுதிப்போடவேண்டும். பலவகையில் இந்தப்பத்திரிகைக்கு அவர் ஊக்கம் கொடுத்திருக்கிறார். அவர் மூலமாக முப்பது ஆயுள் சந்தாக்கள் வரவாகியிருக்கின்றன. ஆர்ப்பாட்டமில்லாத அற்புதமான மனிதர். இதழ் வந்ததுமே படித்துவிட்டுப் பாராட்டுவார். தவறுகளைச் சுட்டிக்காட்டி மென்மையாகத் திருத்தங்களைச் சொல்வார். பத்திரிகை உலகிற்கு பேரிழப்புதான். கஷ்டமாகயிருக்கிறது. முன்னமே எழுதி முடித்திருக்கவேண் டும். நேரமிருக்கும்போதெல்லாம் சும்மாயிருந்துவிட்டு, கடைசிநேரத்தில் ஓடுவதுதான் என்னைப்போன்ற துணையாசிரியர்களுக்கு வழக்கத்திலிருக்கிறது. மாற்றிக்கொள்ள முயற்சித்துத் தோற்றுப்போனதுதான் மிச்சம். கடைசிநேரத்து ஓட்டமும் சுகமாகத்தான் இருக்கிறது.

செகண்ட் டெலிவரி தபால்காரர் இரண்டு மணியார்டர்களைக் கொண்டு வந்திருந் தார். கையெழுத்துப்போட்டு வாங்கியபின், “இதுல ஸ்டாம்ப் கம்மியா ஒட்டிருக்கு. ஆறு ரூவா ஃபைன்” என்று ஒருகவரை நீட்டினார். சூச்சுமமான ஆளாக இருந்தார். நமுட் டாய்ச் சிரித்துக்கொண்டேன். ‘காசு இல்லை’ என்று சொல்லித் தப்பிக்கமுடியாது. வாங்கி விலாசம் பார்த்தேன். அனுப்புநர் பகுதியல் புதிதான முகவரியாக இருந்தது. ‘ஒருவேளை நல்லபடைப்பாக ஏதும் இருந்துவிடாதா?’ எனும் நப்பாசையுடன் ஆறுரூபாயைக் கொடுத் துவிட்டேன். அப்புறமாகப் பிரித்துக்கொள்ளலாமென்று அதை ஓரத்தில் வைத்தபோது, செல்போன் அலறியது. அழைத்தது. புதிய எண். யாரென்று தெரியவில்லை. ஒரு நாளைக்கு இப்படி ஐம்பது எண்களாவது வரும். “சார், என்கதையை எப்பசார் போடு வீங்க?” என்பதாக இருக்கும். கதை என்ற இடத்தில் கவிதை, கட்டுரை, என்று வேறுவேறு சொற்களை நிரப்பிக்கொள்ளலாம். வாசகர் கடிதத்தை அனுப்பிவைத்துவிட்டு ‘எப்பசார் வரும்?’ என்று கேட்கும் அழைப்புகளும் உண்டு. எடுத்து ஹலோவினேன். எதிர்முனை என்னவோ சொன்னது. சரியாகக் கேட்கவில்லை. நடுங்கிய வயதானக் குரலாக இருந் தது. ‘ஒருவேளை அம்மாவின் குரலாக இருக்குமோ?‘ என்று, “ஹலோ… ஹலோ…“ என அழைப்புக்கு ஒப்புக்கொடுத்தும் பதிலில்லை. என் செல்லின் டவரில் ஐந்து புள்ளி கள் இருந்தன. எதிர்முனையில்தான் கோளாறோ? அம்மாவின் குரல் இப்படியிருக்காது. அதிலொரு நிம்மதி. ஒருவேளை, வேறுயாரிடமாவது சொல்லி, பேசச் சொல்லியிருப் பாளோ? நினைவுகள் எங்கெங்கோ இழுத்துக்கொண்டு போனது. இருக்கும், அவளுக்கும் வயது ஒரு அறுபது. அனுபவிக்காத ஆத்மா. அடுத்த அழைப்பு எப்போது வருமென்று காத்திருந்தேன்.

முதல்ரவுண்டில் வடிகட்டப்பட்ட முப்பதுக்கும் அதிகமானச் சிறுகதைகள் கிடக் கின்றன. நாள்தோறும் ஒன்றிரண்டாவது தபாலில்வரும். மெயிலில் மூன்று அல்லது ஐந்துகூட வரும். ஒன்றுகூட தேறுவதாக இருக்காது. ஜல்லி அல்லது மட்டை ரகம். படிக்கவே ஆயாசமாக இருக்கும். படித்துப்பார்த்தாக வேண்டும். ஒருசில கதைகளில் தேற்றுவதற்கான விஷயமும் இருப்பதில்லை. அதில் பலகதைகள் பிரபலங்கள் எழுதி யவை. போன்போட்டு ‘நல்லா வந்துருக்குல்ல?’ என்றுகேட்டு, சுயமாகப் புரமோட் செய்து கொள்வார்கள். அதிலொருவர் சாகித்திய அகாடமி விருதை வாங்கியவர். நான்குமாதங் களுக்கும் மேலாக அவரது கதையைப்போடாமல் நகட்டிக்கொண்டே வந்தாகிவிட்டது. ஒவ்வொரு இதழ்வந்ததுமே அவரிடமிருந்து போன்வரும், ”என்ன கதையைக் காணோமே?” என்ற கேள்வியுடன். “அதுலதான் கதையே காணாமே!” என்று சொல்லி விட வாய்வரை வார்த்தைகள் வந்துவிடும். ஆனால் சொல்லமுடியாது. “அடுத்த இஷ்யூல போட்டுறலாம் சார்!” என்று ஒவ்வொருமுறையும் வழிவதே வேலையாக இருக்கிறது. இந்தஇதழிலும் போடாவிட்டால் ‘கதையைத் திருப்பிக்குடுப்பா. சிறப்பி தழ்லப் போடுறதுக்காக விகடன்ல கேக்குறாங்க. இலக்கிய மலர்ல போடுறதுக்குக் குமுதத்துலக் கேக்குறாங்க. காலச்சுவட்டுல கண்ணன் பேசுனாரு. உயிர்மைல மனுஷ்ய புத்திரன் பேசுனாரு. சுதிர் நான் சொன்னாக் கேப்பாரு தெரியும்ல்ல. எடுத்துவை’ என்று கேட்டுக்கொண்டே படியேறி வந்துவிடலாம். ஆட்டோவுக்குக் கம்பெனிதான் காசு கொடுக்கவேண்டும். அசங்காமல் கேட்டுவிடுவார். கதையைக் கொடுத்துவிட்டு அப்போதே ‘செக் போடமுடியுமா?’ என்று கேட்டுவைக்கும் ஆள் அவர். இத்தனைநாள் கதையை விட்டுவைத்ததே பெருசு. இந்நேரம் இங்கே சொல்லாமல் கொள்ளாமல் அங்கே யாருக்கேனும் கதையை அவர் அனுப்பியும் இருக்கலாம்.

என்றாலும் நான்கைந்து சிறுகதைகளுக்குப் படம்போட்டு வாங்கியாகிவிட்டது. ஒருகதைக்கு பூச்சி. மற்றமூன்றுக்கு குருவை அகிலன். படங்கள் நன்றாகவே வந்திருக் கின்றன. ‘எப்டியெல்லாம் யோசிச்சு யோசிச்சுப் படத்தைப் போடுறானுக. கதைக்கே ஒரு அழகு வந்துருது!’

‘சங்க இலக்கியம் முன்னும் பின்னும்’ என்ற தலைப்பில் ஒருசெவ்வி. முது பெரும் எழுத்தாளர் அரிஸ்டாட்டிலிடம் பேசி எடுத்தது, தங்கப்பாண்டியன். தங்கப்பாண்டி யனுக்கு ‘ப்’ போடக்கூடாது என்பான். போட்டால் கத்துவான். போடாவிட்டால் ‘பேட்டி கண்டவரின் பெயரில் ‘ப்’ விடுபட்டுவிட்டதோ?’ என்று வாசகர் கடிதம் வரும். மேஜைமீது கிடந்த செவ்வியை எடுத்துப் பார்த்தபோது, நல்லவேளையாக ‘ப்’ இல்லை. வாசகர்களைச் சமாளித்துக் கொள்ளலாம்.

அதுசரி… இந்தப்பேட்டி கொடுப்பவர்கள் எல்லாருமே ஏன் ஒரேமாதிரியாக இருக் கிறார்கள் எனும்கேள்வி, எனக்குள் ரொம்ப நாளாகவே இருக்கிறது. கேமராவுக்கு முன் னால் வலதுகையையோ… அல்லது இடதுகையையோ முகவாய்க்கட்டையில் தாங்கிப் பிடித்துக்கொண்டு ஏதோ யோசிக்கிறார்கள். அப்படி அவர்கள் யோசிப்பது பார்க்கப் பாவ மாக இருக்கிறது. யோசிப்பதுபோல போஸ் கொடுத்தால்தான் அறிவாளி என்று சொல் வார்கள் என்பதற்காக இருக்கலாம். செவ்வி நன்றாக வந்திருந்தது. தங்க’ப்’பாண்டி யனை செல்லில்கூப்பிட்டுச் சொன்னபோது, “மக்கா… இன்னிக்கு நைட்ல ஒனக்கு ‘டைட்’ உண்டுடே!” என்று சந்தோஷமாய் உறுதிகொடுத்தான்.

சினிமாச் செய்திகளுக்கு லைட்ஸ் ஆஃப் லிங்கு இருக்கிறான். கவர் மன்னன் என்று சொல்கிறார்கள். அவன் கொடுத்துவிட்டுப் போயிருந்த சினிமாச்செய்தி நன்றாக இருக்கிறது. ஒருபடம் பற்றி முழுமையாக ஆய்ந்திருந்தான். சொந்த ஊரில் இடம் வாங்கிப்போட்டிருப்பான். ஒருவேளை அடுத்தப்படத்துக்கு வசன உதவி… அப்படியே அசிஸ்டெண்ட் என்று யாரிடமாவது நகர்ந்துவிடுவான்போலத் தெரிகிறது.

இதழின் துவக்கத்திலிருந்து அவன்தான் சினிமாப் பகுதிக்கு. முதலில் நடந்து வந்து போய்க்கொண்டிருந்தான். அப்புறம் அவன் ஆடைகளில் ஒரு உயர்வு தெரிந்தது. செண்ட் வாடை வீசியது. ஒருநாள் உமா செப்பலிலிருந்து தடாலடியாக பாட்டா ஷூவுக்கு மாறியிருந்தான். ‘கால்சுண்டுவிரலக் கவ்வுது!’ என்று ஷுவைக்காட்டிப் பொசுங்கவைத்தான். இப்போது எல்லாமே பாஸ்ட் டிரக்தான். ஹோண்டா யூனிகார்ன் தான். ஒருநாளைக்கு மூன்றுகவர் இல்லாமல் வீட்டுக்குப் போவதேயில்லையாம். ஆனாலும் அவன் ‘இல்லவே இல்லை’ என்று சத்தியம் செய்கிறான்.

இங்கே தொங்கிக்கொண்டு கிடக்கவேண்டியதாக இருக்கிறது. ஆசிரியப் பதிப்பா ளர் நண்பர். அலுவலக நேரம்தவிர மற்றநேரங்களில், ‘வாடா… போடா…’ போட்டுக்கொள் ளும் நெருக்கம். ‘நீ முன்னாடிப்போ… நான் பின்னாடி வாறேன்…’ என்பதுபோல வேறு வேறு ஊரிலிருந்து ஒரே நோக்கத்துடன் புறப்பட்டு வந்திருந்தோம். இங்கே வந்தபின்பு தான் பழக்கம். ஒத்த அலை இணைத்துவிட்டது.

எனது சினிமா ஆசையையும், அதற்காக நான் கதைகளெல்லாம் எழுதிக்கொண் டிருப்பதையும் ஆர்வத்துடன் பார்த்த இங்கர்சால் வாத்தியாருக்கு, என் மீது அளப்பரிய பாசம் பிறந்துவிட்டது. “வாடா“ என்று சென்னைக்கு அழைத்துவந்து, அவருக்குத் தெரிந்த இயக்குநர் இராமா. வேணுகோபாலனிடம் கூட்டிப்போய் அறிமுகம் செய்து வைத்தார். “நெறையக் கதைகள் எழுதிருக்கான்“ என்று பில்டப் கொடுத்து, பிரசுரமாகி யிருந்த கதைகளை அவர் கையில் கொடுத்தார். இராமா. வேணுகோபாலன் ஆடு, மாடு களைக் கதாநாயக அந்தஸ்துக்கு ஏற்றிவைத்துப் படமெடுத்துக்கொண்டிருந்தார். “நானும் சப்ஜெக்ட் மாறணும்ன்னு நெனைக்கிறேன். சரி. இவனை நானே வெச்சுக்குறேன். அசிஸ் டென்ட்டா சேரச்சொல்லுங்க!“ என்றுவிட்டு, “ஸ்டார்ட்!“ எனக்குரல்கொடுத்தபடி எழுந்து போய்விட்டார். ஒருசிக்குசிடுக்கல் எதுவுமில்லாமல் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

“என்னடா சந்தோஷம்தானே?” என்றுகேட்ட இங்கர்சால் வாத்தியார், என்முகம் களையிழந்து இருப்பதைப்பார்த்து, “என்னாச்சு?“ என்றார்.

“எனக்கு இந்த டைரக்டர் வேண்டாம். ரவீந்திரராஜாட்டதான் ஒர்க் பண்ணுவேன்!” என்றேன்.

ரவீந்திரராஜா கலைநேர்த்தியானப் படங்களை எடுக்கும் முன்னணி இயக்குநராக இருந்தார். தமிழ்ப்பட ரசிகர்களுக்கு தெய்வமாகியிருந்தார். படம்வெளியாகும் தியேட்டர் களில், கதாநாயகனுக்கு வைக்கப்படாத பேனர், அவருக்கு வைக்கப்படும். அவரைப் பார்ப்பதே அரிது என்று சொல்வார்கள். யாரையும் சந்திக்க மாட்டார் என்று திரைபோடு வார்கள்.

இங்கர்சால் வாத்தியார் என்னைக் கூர்ந்து பார்த்தார். ‘திறந்திருக்கும் வாசல் கதவை மூடிக்கொள்கிறானே‘ என்றெல்லாம் அவர் பாடம் எடுக்கவில்லை. “அவ்வள தானே. அவரையும்போய் பாத்துருவோம்!“ என்றார்.

வெளியாகும் புதுப்படங்களைப் பார்த்ததுமே, அதுபற்றிய தனது கருத்துகளை கடிதமாக அந்தப்படங்களின் இயக்குநருக்கு எழுதுவதை இங்கர்சால் வாத்தியார் வழக்க மாக வைத்திருந்ததால், எல்லோரையும் அவருக்குத் தெரிந்திருந்தது. ரவீந்திரராஜா, “அதனாலென்ன என்ட்ட இப்ப ஆறுபேரு உதவியாளரா இருக்காங்க. ஏழாவதா இருந் துட்டுப்போறான். ஆனா இப்போ நான் வெளிப்படங்கள் ஏதும் பண்றதில்ல. எல்லாமே சொந்த பேனர்தான். அதுனால அவனுக்கானதை அவன்தான் பாத்துக்கணும்!” என்று சொன்னார்.

அது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ரவீந்திரராஜாவிடம் உதவியாளர் என்ற சொல்லே என்னைக் கனவுலகத்தில் பரத்தியது. இப்போது, இங்கர்சால் வாத்தி யார் முகம் களையிழந்துபோயிருந்தது.

“என்ன சார்?”

“ஒண்ணுமில்லடா. தங்குறது, சாப்பாடு, செலவு எல்லாம் நீயாத்தான் பாத்துக்க ணுமாம். வேலைய வாங்கிக்குவானுகளாம். கூலியத் தரமாட்டானுகளாம்!” என்று விட்டு யோசித்தார்.

அவரது யோசிப்பில், ‘ஐயோ… வாய்ப்பு பறிபோய்விடுமோ?‘ என்ற கவலை என்னை சூழ்ந்துகொண்டது. கொஞ்சநேரம் யோசித்த இங்கர்சால் வாத்தியார், “விடுறா. அதுக்கும் ஆள் பாத்துருவோம்“ என்று சாப்பாட்டுக்கும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்வ தாகச் சொன்னார். ஆனால் மூன்றாவதுநாள் சாயங்காலம் கக்கூஸுக்குப் போனவர் குப்புறவிழுந்து இறந்துபோனார். அதன்பிறகு, ஓடியாடிக் களைத்துப்போனதுதான் மிச்சம். ஒருபடிகூட மேலே ஏறமுடியவில்லை. ஏகப்பட்ட நண்டுகள் காலை இழுத்து வாரிவிட் டன. வந்தவிஷயம் இதுவரைப் பிடிபடவேயில்லை. ‘சரி பிடிபடுவதைப் பார்ப்போமே’ என்று உட்கார்ந்தபோது, பலவிஷயங்களை சமரசம் செய்துகொள்ளவேண்டியிருந்தது. கால்களில் சங்கிலிகள். நின்ற இடத்திலேயே நின்றிருக்கும் சுகமான சமரசமாக அது இருக்கிறது.

இதழுக்கு ஆட்ஸ் வருமானம் பெரிதாக இல்லை. விளம்பர ஏஜண்ட்டுகள் வணிக இதழ்களுக்குத்தரும் முக்கியத்துவத்தை இதுபோன்ற இதழ்களுக்குத் தருவதில்லை. டெபாசிட்டும் சொல்லிக்கொள்ளும் அளவில்வந்து குவியவில்லை. இதழ் விற்றக்காசும் கமிஷன்போகவும் முழுதாக வருவதில்லை. ‘இன்னிக்கு டீடீ அனுப்புறேன்… அனுப்பிட் டேனே’ என்பதாகத் தாக்கல்கள் மட்டும் அழகாகவரும். ரெப்புகளை அனுப்பி வசூலிப் பதில் மிச்சம் எதுவும் நிற்பதில்லை.

ஆனால் பத்திரிக்கைக்கு நல்லபெயர் இருக்கிறது. ‘நல்லாத்தான் இருக்கு. நிக்கும்’ என்று இலக்கியவட்டத்தில் ஒருபேச்சும் இருக்கிறது. குறிஞ்சிக்காடன், வர்ணப்பரியன், விஜயராகன், கு.தமிழ்மைந்தன் எல்லோருமே ஏதாவது ஒருஇலக்கியமேடையில் இதழின் பெயரை உச்சரிக்கவே செய்கிறார்கள். சக பத்திரிகைகள் இதிலிருந்து எடுத்துப் போட்டு, நன்றி சொல்கின்றன. இந்த ஆண்டின் சிறந்த இலக்கியப் பத்திரிகையாக விஜய் டிவி அங்கீகரித்திருந்தது

சினிமாவுக்குப்போகும் ஆசையுடன் வந்து, பத்திரிகை நடத்தும் இடத்தில் நிற் கிறேன். ஆசிரியப் பதிப்பாளரை நட்டாற்றில் விட்டுவிட்டுப் போக மனமில்லை. தங்குவ தற்கு இடமும் செலவுக்குக் காசும் தரும் வள்ளலாகத் தெரிகிறார். இருப்பதைவைத்து நாட்களைக்கழிக்க வேண்டியதுதான். கவிச்செல்வியோ, வண்ணாத்திப்பூச்சி, தமிழ்மகள் ராஜதுரையோ ஆதரவுக்கரம் நீட்டவில்லை. தொடர்ந்து காம்பிளிமெண்ட் போய்க் கொண்டுதான் இருக்கிறது. ஒருமுறைபோன்போட்டு, ‘இதழ் கெடைச்சுதா?’ என்று கேட்ட தற்கு, “ரொம்ப நல்லாருக்கே… லைப்ரரீஸ் போகுதா?” என்று எதிர்கேள்வி எல்லோரிட மிருந்தும் வந்தது. “கேட்டுருக்கோம்… ஆனா ரெஸ்பான்ஸ் இல்ல!” என்றதற்கு, “நான் இயக்குநரை பேசச்சொல்றேன்” என்று ஆதுரக்குரல்கள் மட்டும் கேட்டது. இதுவரை ஏதும் நடக்கவில்லை. ‘டெவலப்மெண்ட்ஸ் குறித்துப்பேசலாம்’ என்று இப்போதெல்லாம் மூவரில் யாருக்காவது போன்போட்டால்… ‘நாட் ரீச்சபிள்’ என்றோ… ‘நோ ஆன்ஸர்’ என்றோ திரை ஒளிர்கிறது. மேலமாசிவீதியில் பிளாஸ்டிக், எலக்டிரிகல் கடைநடத்தும் வடஇந்தியசேட்டின் தயவு ஆசிரியப் பதிப்பாளருக்கு இருக்கிறது. சேட்டு, தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் இலக்கியம் வளர்க்கிறான். ம்ம்ம்.

‘அம்மாவைப் பார்த்துவிட்டு வரலாமா?‘ என்றொரு யோசனை மனதுக்குள் ஓடத் துவங்கியிருந்தது. போய்ப்பார்த்து ஏழு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. எஸ்.இ.டி.சி யில் டிக்கெட் முந்நூற்று அறுபது ரூபாய் ஆக்கிவிட்டார்கள். ரயிலில் ரிசர்வ் செய்து கொண்டுபோக செலவு கம்மிதான். டிக்கெட்தான் கிடைப்பதில்லை. ஏஜெண்டிடம் கூடுதல்கொடுத்து வாங்கமுடியவில்லை. காசுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

நூல்மதிப்புரை வந்துசேர்ந்து பதினைந்துநாட்களுக்கும் மேலாகிவிட்டது. தி.க.ரஞ்சராசன் எழுதியது. எங்கே வைத்தேனென்று தெரியவில்லை. போடாமல் விட்டால் மனிதர் வஞ்சப்புகழ்ச்சியிலேயே ‘உண்டு… இல்லை…’ என்று ஆக்கிவிடுவார். மேஜைமீதிருந்த டிரேயில் அதைக் காணவில்லை. ‘தமிழ்ல இது முக்கியமான நூல்ய்யா. நல்லா பண்ணீருக்கான். புரபஷனல் கூரியர்ல அனுப்பிருக்கேன்’ என்று அவர் சொன்னதும், அதை கையெழுத்துப்போட்டு வாங்கியதும் நினைவில் இருக்கிறது. டிரே யிலிருந்து டிராயருக்குத் தாவி மொகஞ்சதாரோவை தோண்டுவதுபோல அள்ளி அள்ளி வெளியில் போட்டேன். ஏராளமானக் காகிதங்கள். போட்டோக்கள். விசிட்டிங் கார்டுகள். அழைப்பிதழ்கள். அது பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த யூஸ்டுகவர் என்பது நினைவில் தங்கியிருந்தது. ஒருபக்கம் நைந்துபோயிருந்தது. வேறுஒரு ஒட்டுக்காகிதம் போட்டு ஒட்டியிருந்தார். ‘அப்பாடா, அதோ அங்கேயிருக்கிறது. டிராயரில் நெட்டு வாக்கில்நின்று உயிரை எடுத்துவிட்டதே!’

அதை சரியாகத் தெரியும்படி வைத்தபோது செல்போனில், ஒரு எண் ஒளிர்ந்து அழைத்தது. இதுவும் புதிய எண். யாரென்று தெரியவில்லை. ஒருவேளை அம்மாவாக இருக்குமோ?

“ஹலோ”

“ஹலோ சார், நான் சிம்ம சூரியன் பேசுறேன் சார். இந்த இதழ்ல 36 ஆம் பக்கத் துல கட்டுரை எழுதிருக்கேன்ல”

“சரி. சொல்லுங்க”

“சார், நல்லாருக்கீங்களா?”

“நல்லாருக்கேன்”

“ஒண்ணுமில்ல சார். என் கட்டுரைக்கு வாசகர்கக்கிட்டருந்து நாலைஞ்சு லெட்டர்

வந்துருக்குமே. அதைக்கொஞ்சம் போட்டுவிட்டுருங்க. ரொம்பப்பேர் போன்போட்டு கட்டுரை நல்லாருக்குன்னு சொன்னாங்க. அப்புறம் இந்தக்கட்டுரைக்கு எவ்வளவு சார் ரெமுனரேஷன் தருவீங்க?”

எனக்குச் சிரிப்பாக வந்தது. “அதெல்லாம் அட்மினிஸ்ட்ரேஷன் சைட்லதான் பாப் பாங்க”

“அப்டியா… அப்ப அந்தநம்பரைத் தாங்க சார், நான் அங்கே பேசிக்கறேன்”

ஆசிரியப் பதிப்பாளர் என்மேஜைக்கு வந்து, “இந்தா தலையங்கம்! போன்ல யாரு.

கண்ணெல்லாம் கனருது?” என்று கேட்டபடி போய்விட்டார்.

இந்தமுறை ‘சிநேகிதனே… சிநேகிதனே…’ என்று செல்போன் கூவிஅழைத்தது. அழைத்து முடியட்டும் என்று கடைசிவரைக் காத்திருந்தேன். முடியப்போகும் தருணத் தில் ஆன் செய்தேன். ‘சிநேகிதனே..’ அழைப்பில் ஒருமயக்கம் இருக்கிறது. எதிர்முனை யில் “என்னப்பா ரொம்ப பிசியா?” என்று கேட்டாள்.

“பிசியெல்லாம் இல்லேப்பா!”

“என்ன சலிச்சுக்குற. இன்னிக்கு டெட்லைனா?”

“ஆமாப்பா… இன்னிக்கு முடிச்சாத்தானே டேட்டுக்கு கொண்டுவரமுடியும். நாளைக்கழிச்சு கவர்ன்மெண்ட் ஹாலிடேல்ல!”

அப்படியே தொடர்ந்தப் பேச்சு ஒருவழியாக முடிந்தபோது, வெளியே இருட்டி யிருந்தது. ‘இப்பத்தான் மத்தியானம் சாப்புட்டுட்டு வந்து ஒக்காந்த மாதிரியிருக்கு. அதுக் குள்ள சாயங்காலம் ஆகிருச்சா?’

அவளை நினைக்க எனக்குப் பாவமாக இருந்தது. கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு, செய்தி சேகரிக்கப் போனபோது உண்டான, ‘ஜஸ்ட்’ பழக் கம். அந்தக்கட்டுரைக்கு ‘மரத்தடியில் பூக்கள்’ என்று தலைப்பிட்டு, ஏழெட்டுமாணவிகள் அமர்ந்திருக்கும் படத்தைப் போட்டிருந்தேன். அது அவளுக்குப் பிடித்திருந்தது. ‘தன் மனதுக்குப் பிடித்த கவிஞன்’ என்று என்னிடமே சொன்னாள். ஆரம்பத்தில் அது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

என் நிலை மாறமுடியவில்லை. அப்படியே இருக்கிறேன். அவள் தேர்வுகள் எழுதி ரயில்வே அதிகாரியாகி உயர்நிலைக்குப் போய்விட்டாள். கைக்கொள்ளாத சம்பளம் வாங்குகிறாள். மாதக்கடைசியில் மட்டுமல்ல, முதல்தேதியிலும் அவள் உதவி தான் என்னைச் சுணக்கமில்லாமல் எழுதவைக்கிறது. அவள் கையில் என் சம்பாத்தி யத்தைக் கொடுத்துக் குடும்பவண்டியை ஓட்டமுடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை யில்லை. அவள் காசில் உட்கார்ந்து சாப்பிட மனம் விரும்பவில்லை. அதை அவளிடம் சொன்னபோது, “அப்டியெல்லாம் உன்னை விட்டுறமுடியாது” என்று பிடிவாதமாக இருக் கிறாள். அவளை நினைத்து ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொருபுறம் மனசு வலிக்கிறது. புரிந்துகொள்ள மறுக்கும் ராட்சசி.

எனக்கென்று நிறைய ஆசைகளும் கனவுகளும் இருக்கவே இருக்கின்றன. நிறையநிறையச் சம்பாதித்து, சொந்த ஊரில் பெரிய வீடுகட்டி, ஸ்கார்ப்பியோ கார் வாங்கி, அதில் அம்மாவை அமரவைத்து வலம்வரவேண்டும் என்ற கனவு ஒன்று முன்பு இருந்தது. பணக்காரவீட்டு முதியபெண்கள் அப்படியானக் கார்களில் வந்துஇறங்கும் போது, அந்தஇடத்தில் அம்மாவை இருத்திப்பார்ப்பேன். கார் துடைக்கும் ஈரத்துணி போலத் தெரிவாள். காருக்கும் அவளுக்கும் ஒட்டாது. என்றபோதும் அழகாக இருப்பதாக நினைத்துக் கொள்வேன். காக்கைக்கு மட்டும்தான் தன் குஞ்சு பொன்குஞ்சா… குஞ்சுக் கும் தன் அம்மா பொன் அம்மாதானே? கொஞ்ச நாட்களாக, ஸ்கார்ப்பியோ ரொம்ப உயரமானக் காராக இருக்கிறது. அம்மாவுக்கு ஏறியிறங்கக் கஷ்டமாக இருக்கும் என்று படுகிறது. இன்னோவாதான் சரியான கார். உயரம் குறைவாகவும் பார்க்க பாந்தமாகவும்

இருக்கிறது என்று இப்போது நினைத்துக்கொள்கிறேன்.

மூடியகண்களுக்குள் அம்மாவும், புரிந்துகொள்ள மறுக்கும் ராட்சசியும் நிரம்பி யிருந்தார்கள். ‘இங்கிருந்து ஓடிவிடலாமா?‘ என்றொரு நினைப்பும், ‘போய் என்ன செய் வது?‘ என்ற தவிப்பும் இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது.

மீண்டும் செல்போன் அழைப்பில் கண் திறந்தேன். Editor Calling… என்று திரை ஒளிர்ந்து அடங்கியது. மிஸ்டு கால். தலைநிமிர்ந்தபோது, ஆசிரியர் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. டிராயரை மூடிவிட்டு எழுந்தேன்.

“என்ன மாப்பு, ரொம்ப ரோஜனையா இருக்கீங்க போலருக்குது?” என்று இழுத்தார்.

என்னைக் கலாய்க்க நினைக்கும்போது அப்படித்தான் இழுத்துப்பேசுவது வழக்கம்.

“என்ன ரோஜனையா இருக்கோம்?”

“சரி நம்மப் பேச்சை நைட் பேசுவோம். நாளைக்கு பிரிண்டருக்கு சிடி தரணும். இல்லாட்டி அந்தாளு நம்மளைக் கைவிட்டுருவான். அப்புறம் நாம தொண்ணாங்கிக் கிட்டே அந்தாளு பின்னாலத் திரியவேண்டியதுதான். நீதான்டி திரியவேண்டிவரும்”

“எதுக்கு திரியுறோம். மது எட்டு மணிக்கு வந்துருவான். பக்கத்தை நைட் ரெண்டு மணிக்குள்ள முடிச்சிறலாம். காலைல சிடி அந்தாளுக்கு குடுத்துறலாம்ல்ல”

“குடுத்துறலாம். ஆனா தொறை நீங்க இன்னும் உங்கக் கமிட்மெண்ட்ட முடிக் கலை. பத்தி யாரு எழுதுறதாம்?”

இதழுக்குத் தேவையான எல்லாமே வந்துவிட்டன. அந்தப்பத்தியைத் தவிர. பத்தியை நான்தான் எழுதுகிறேன். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. ஒவ் வொரு இதழிலும் ஒவ்வொரு விஷயம். சூடாக, நக்கலாக, நையாண்டியாக அறிவுத் தளத்தில் அது நல்லதொரு வினையை உண்டாக்கியிருந்தது. இந்த இதழுக்கு என்ன எழுதுவதென்று பிடிபடவில்லை. இரண்டுமூன்று நாட்களாக அதைப்பற்றி உள்ளுக்குள் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

“எழுதணும். என்ன எழுதுறதுன்னு தெரியலை? சாகித்ய அகாடமி எழுதலாம்ன் னா, இந்தவருஷம் அதை யாருமே கண்டுக்கல. ‘புஸ்ஸ்ஸ்‘ன்னு ஆயிருச்சு. டெல்லி மருத்துவ மாணவி விஷயத்தை போன இஷ்யூல மேட்டரா பண்ணியாச்சு. விலைவாசி எழுதலாம்ன்னா டெய்லி பேப்பர்ல எழுதிஎழுதிக் கிழிக்கிறானுங்க. இந்த நரேந்திரமோடி வெற்றிய வெச்சு பிஜேபிய சுளுக்கெடுக்கலாம். காங்கிரஸ் வலியவந்து பத்துநிமிட வரையறை விவகாரத்துலயும் மானிய சிலிண்டர் விவகாரத்துலயும் என்னைய சுளுக் கெடேன்ங்குது. பேலன்ஸ் பண்ணமுடியாது. அது பிஜேபிக்கு பேவராத்தான் போகும். வெஸ்ட் பெங்கால் எழுதலாம்ன்னா, ரெண்டு இஷ்யூக்கு முன்னால மம்தா – நக்சல் பத்தி எழுதிருக்கேன். மண்டையக் காயவிட்டதுதான் பாக்கி. எழுதுறதுக்குன்னு ஒண்ணுமே சிக்கமாட்டேங்குது!”

“சிக்கமாட்டேங்குது. அவ்வளவுதானே?… எழுதுறதுக்கு ஒருபிரச்சனையுமே இல்லைங்க்ற மாதிரி எல்லாப் பிரச்சனைகளையும் சேர்த்து எழுது. பத்தி டிஃபரண்ட்டா ஆயிரும்!”

ஆசிரியரைப் பார்க்கப் பெருமையாக இருக்கிறது. எதையும் சட்டென்று முடி

வெடுக்கும் அசாத்தியம் அவரிடமுண்டு. “அட..ஆமால்ல!”

மது கிளம்பிவிட்டதாக அனுப்பிய எஸ்எம்எஸ், ‘கிளிங்’ சத்தத்துடன் இன்பாக் ஸில் வந்துவிழுந்தது.

பத்தி எழுதிமுடிக்குமுன்னே, அவன் வந்துவிட்டான். “ஏண்டா டல்லாருக்க?“

“தெரியலடா. நேத்து மத்தியானத்துலருந்து இப்டித்தான் இருக்குது“

“அம்மாட்டருந்து போன் வந்துச்சா?“

“இல்லடா. ஆனா அம்மாவுக்கு என்னவுமோன்னு மனசு தவிக்குது”

“அதெல்லாம் ஒண்ணுமிருக்காது. வேலைய ஆரம்பிப்போமா?“

கொஞ்சநேரத்தில் செல் ஒளிர்ந்தது. அதுவும் புதிய எண்ணாக இருந்தது. இது என்ன கேட்கப்போகிறது? எடுத்துக்காதில் வைத்தேன். “அய்யா… நல்லாருக்கியாய்யா?“ என்றது, அம்மாவின் குரல்.

“அம்மா… நீ நல்லாருக்கியாம்மா?”

“நல்லாருக்கேன் ராசா. ராமேஸ்வரத்துல என்னமோ பிரச்சனையாம். பத்துநாளா கருவாடு வரத்து இல்ல. அதுனால் யாவாரத்துக்குப் போகல. இன்னிக்குத்தான் போனேன். ஒன்ட்ட பேச முடியாததால மனசுக்கு என்னமோ மாதிரியாயிருச்சுப்பா. பலசரக்குக்கடை மாரிமுத்தண்ணேதான் சொன்னாரு. அவரு கடைலருக்குற போன்ல ஒருரூவாப் போட்டுப் பேசலாமாமே. அவருதான் கடைலருந்து ஒன் நம்பரப் போட்டுக் குடுத்தாரு“

அம்மாவும் தவித்துக்கொண்டுதான் இருந்திருப்பாள்போல. அவள் பேசப்பேச கனத்துப்போயிருந்த மனசுக்குள்ளிருந்து அடையாளமற்ற எதுவோ கரையத்துவங்கியது. உடம்பு லேசானது. என்னையுமறியாமல் கண்கள் கசிந்தன.

இதழ்களில் சிரிப்பும் கண்களில் துளிர்விட்டக் கண்ணீருமாய், மது பொறாமை யுடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *