கறிவேப்பிலை மாமா

 

எ 2 ப்ளாக் ல குடியிருந்த மாமி காலையில 6 மணிக்கு செத்துப் பொயிட்டாங்களாம். உங்கள பூரணி அம்மா போன் பண்ணச் சொன்னாங்க. சொசைட்டி கிரவுண்டில் கால்பந்து பயிற்சி முடிந்து வீடு திரும்பிய விக்னேஷ் சொன்ன தகவல் மனதைப் பிசைய ஆரம்பித்தது. முன்னூறு வீடுகள் கொண்ட டில்லியின் அந்த விக்டோரியா சொசைட்டியில் மொத்தம் நாங்கள் மூன்று பேர் தான் தமிழர்கள்.

மாமி நன்றாய்த் தானே இருந்தாள். போனவாரம் செவ்வாய் கிழமை காய்கறிச் சந்தையில் சந்தித்தது. அதுவே கடைசி சந்திப்பாக இருக்கும் என நம்பவே முடியவில்லை. எவ்வளவு குளிரிலும் ஸ்வெட்டர் அணிய மாட்டாள். வெறும் சால்வை தான். அரக்க பரக்க செய்த டிபனை விக்னேஷுக்கு எடுத்து வைத்து விட்டு பூரணியை அழைத்தேன்.

மாமி வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் பூரணி இப்போது அங்கே அழுது கொண்டிருப்பாளோ. பால்கனியிலிருந்து பார்த்தால் தெரியும் தூரம் தான் அவர்களின் வீடு. அப்படியொன்றும் அங்கே ஆள் நடமாட்டம் தெரியவில்லை. குப்பை கூட்டுபவன் சாவகாசமாக வேலை செய்து கொண்டிருந்தான். சர்தார்ஜி கார் துடைப்பவனை திட்டிக் கொண்டிருந்தார்.

உனக்கு தொடைக்க இந்த அழுக்குத் துணி தான் கெடச்சிதா என

அவரவர் பால்கனியில் நின்றே செப்புச் சொம்பிலிருந்து தண்ணீரை கீழே ஊற்றி சூரிய நமஸ்காரம் செய்ய முயன்றதில் இரண்டாம் மாடி பாட்டியின் மீது தெரியாமல் தண்ணீர் ஊற்றியதற்காக மூன்றாம் மாடி தாத்தா மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்.

வெள்ளிக் கிழமை என்பதால் ஓரிரு இல்லத்தரசிகள் சிவப்புத் துணி மூடிய தாம்பாளத்தை எடுத்துக்கொண்டு கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அவர்களின் பின்னால் சீக்கிரம் வா. பூந்தி கெடைக்கும் என கூட்டத்தைத் திரட்டிக் கொண்டு வேலைக்காரி மினியின் மகன் லக்கி ஓடிக் கொண்டிருந்தான்.

ஆச்சர்யம் தான் இந்த பத்து வயது லக்கி பையனுக்குமாமி எவ்வளவு செய்திருப்பாள்.

அவ செத்ததுல யாருக்குமே வருத்தம் இல்லயா. என்ன உலகம் இது. இப்போ அவன கூப்பிட்டுற வேண்டியதுதான்.

ஏ லக்கி எங்க ஓடற. இங்க வா. என்றவுடன்

ஆன்டி எ2 தாதி செத்துட்டாங்க. நான் தோட்டக்காரன் பாபா கிட்ட எலுமிச்ச கன்னுக்கு சொல்லிட்டேன். இப்போ நான் பூந்தி வாங்க போறேன். வந்து சொல்றேன். சுத்த ஹிந்தியில் சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

ஒன்றும் புரியாமல் பூரணியைக் கூப்பிட்டேன்.

பூரணி எப்டி இப்படி திடீர்னு ஆரம்பித்தவுடன்

நிம்மி நான் சொல்றத மொதல்ல கேளு. மாமியோட பாடி ஹாஸ்பிடல்ல தான் இருக்கு. தரதுக்கு நேரம் ஆகும். நீ உன் வீட்டு வேலையெல்லாம் முடிச்சவொடனே போன் பண்ணு அப்ப போலாம்.

மறக்காம ஒரு செட் டிரஸ் எடுத்து டைனிங் டேபிள் மேல வச்சிரு. வந்தவுடனே குளிச்சிட்டுதான் மத்த பொருள தொட முடியும். அதுக்காக சொல்றேன். சரி நான் இப்போ வச்சிர்ரேன். வைத்தே விட்டாள்.

என்ன ஆச்சு எல்லாருக்கும். இருந்தாலும் செத்தாலும் அவுங்கவுங்களுக்கு தன்னோட வேல தான் முக் கியம். சன்னலடியில் உட்கார்ந்து மாமி வீட்டு தோட்டத்த பாக்க ஆரம்பிச்சேன்.

பால்கனிக்கு ஒட்டியபடி மாமி போட்டிருக்குற தோட்டத்துல கறிவேப்பிலை, மல்லிகைச் செடி, வெற்றிலை, வாழை வரைக்கும் நன்றாக தெரிஞ்சது. அதுக்குப் பின்னாலயும் மருதாணி, சோத்துக்கத்தாழை வளத்த மாதிரி ஞாபகம். மாமிக்குதான் மாமனார் மாமியார் மேல எவ்வளவு மரியாத. வருசத்துக்குஒருதடவை கருவேப்பில மரத்து மூட்டுல டிரஸ் வாங்கி வச்சி மாமனார் நினைவா தோட்டக்காரனுக்கு குடுப்பாங்க. அதேபோல மல்லிகைச்செடி மாமியாராம். ஒவ்வொருதடவையும் மல்லிகை பூக்கும்போது அத தொடுத்து குடுத்துட்டு, நாத்தனார் வெத்தலையையும் மாமியார் மல்லிகப் பூவையும் வச்சிக் கொடுக்கறேன். நீடூழி வாழணும் னு எனக்கும் பூரணிக்கும் குடுப்பாங்க.

அவுங்க வீட்ல செத்தவங்க எல்லாரோட நினைவாலயும் ஒவ்வொரு செடி வைப்பாங்க போல. அதத்தான் ஒருவேள லக்கி சொல்லிருப்பான். மாமி நினைவா எலுமிச்சைய வளக்கணும் னு மாமா நினைச்சிருக்கலாம்.

மொதல்ல ஹாஸ்பிடல் போணும். அதுக்கப்புறம் மீதியப் பாத்துக்கலாம்.

கிளம்பி பூரணி வீட்டுக்குப் போனவொடனேதான் தெரிஞ்சது மாமி வீட்ல யாரும் இல்லன்னு. பூட்டின வீட்டு வாசல்ல மாமி போட்ட நெளிக்கோலம் பளிச் னு.

ஹாஸ்பிடல்லேந்து மாமிய வீட்டுக்குகொண்டு வர மாட்டாங்களாம். அவங்களோட உறுப்புகள் எல்லாம் தானம் கொடுத்ததால பாடிய பேக் பண்ணி நேரா சுடுகாட்டுக்கு கொண்டு போயிடுவாங்க போல. நானே உன்ன கூப்பிடறதா இருந்தேன். வா சீக்கிரம் போலாம். என்றாள் பூரணி.

இருவரும் சைக்கிள் ரிக்ஷா எடுத்து ஹாஸ்பிடலை அடைந்தோம். முழுவதும் மூடப்பட்ட சாக்குப் பை போன்ற உறையுனுள் மாமியின் உடல் இருப்பதாகச் சொன்னதால் அவளைக் கற்பனை செய்து கொண்டு இரண்டு சொட்டு கண்ணீர் வடித்து இறுதி மரியாதை செலுத்தினோம். பக்கத்தில் மாமியின் மகளும், கணவரும், இரண்டு நண்பர்களும் தவிர வேறு யாருமில்லை. பாவம். மாமி. முறைப்படி மந்திரங்கள் சொல்லி கர்மம் பண்ண வேண்டாமா.

பத்தாம் நாள், பதிமூன்றாம் நாளாவது பண்ணுவார்களோ என்னவோ. பழகியதற்காக நாமாவது மாமாவிடம் சொல்ல வேண்டும். தீர்மானித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம். நான் வீட்டிற்க்குக் கிளம்புமுன்பே சரியாக ஒருமணி நேரத்தில் மாமாவும், மகளும் வந்துவிடவே கேட்டுவிட வேண்டியதுதான் என தீர்மானித்தோம்.

மகள் போபாலில் இருப்பதாக மாமி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். ஐம்பது வயது இருக்கும். பார்த்தால் கல்யாணம் ஆன மாதிரி தெரியவில்லை. மெதுவாக பேச்சு குடுத்தவுடன் மாமா ஆரம்பித்தார். இவ்வளவு நாளும் நான் யார் கிட்டயும் பேசினதே இல்ல.

இப்போ பேச வேண்டிய நேரம். நீங்கல்லாம் என்னைய மாமா னு கூப்பிடறதுல சந்தோஷம். இப்போ நான் மாமிக்கு சடங்கு செய்யணும்னு எதிர்பாப்பீங்க. ஆனா என்ன செய்யணும்னு எனக்கு தெரியாது. நான் ஒரு அநாதை. சேலம் அநாதை இல்லத்துல தான் படிச்சி வளந்தேன். என்ன பெத்தவங்க யாரு என்ன குலம் னு எனக்கு தெரியாது. திருச்சி கல்லூரில படிக்கும்போது அநாதையான உங்க மாமிய சந்திச்சேன். படிச்சி ரெயில்வே ல வேலைக்கு சேந்தவுடனே எங்க இல்லத்தோட உதவியோட நாங்க திருமணம் செய்துகிட்டோம். எங்களுக்கு இனி குழந்த பிறக்க வாய்ப்பில்லன்னு டாக்டர் சொன்னவுடனே இல்லத்துக்கு தெரிவிச்சு ஒரு குழந்தைய தத்தெடுக்கணும்னு சொன்னோம். அவுங்க கேட்டுக்கிட்டதுக்கிணங்க திருநங்கையான இந்த மகதிய அவளோட இருபது வயசிலேந்து மகளா வளத்துக்கிட்டு வரோம். அவ போபால்ல புத்தி ஸ்வாதீனமில்லாது கைவிடப்பட்ட அநாதைகளுக்காக காப்பகம் நடத்தறா. எங்க குடும்பச் சொத்துங்கறது அது ஒண்ணுதான்.

அவ கூடவே நானும் கெளம்பி போபாலுக்கு போயிடலாம் னு நினைச்சா மாமி வளத்து வச்ச இந்த கற்பனை கறிவேப்பிலை அப்பா, மல்லிகை அம்மா, வெத்திலை தங்கை இவங்கல்லாம் என்னய தடுக்கற மாதிரி தோணுது. தினமும் தண்ணி ஊத்தும்போது சொல்லுவா. எங்க ரெண்டு பேருல யாரு மொதல்ல செத்தாலும் உங்க கூட தோட்டத்துல செடியா நிப்போம். எங்கள திரும்பவும் அநாதையாக்கிடலாம் னு மட்டும் நெனைச்சிடாதீங்க. நான் எலுமிச்சமரமா நிப்பேன். இவரு உங்க வாரிசு தானே. அதனால கறிவேப்பிலை மரம் தான். அதனால இந்த குடும்பத்துல எலுமிச்சயா மாமிய நட்டு வச்சிட்டு தினமும் அவள கவனிச்சி எப்போ நான் கருவேப்பில மரமா நிக்கப்போறேன்னு காத்துக் கிடக்கிறதுதான் என் வேலை. ரெண்டு பேரும் சிரமப் பட்டுக்காதீங்க. சாகர் ரத்னால சாப்பாட்டுக்கு சொல்லிட்டேன். நாங்க சாப்பிட்டுக்குவோம். நாளைலேந்து சமயல்காரிய ஏற்பாடு பண்ணிடுவேன்.

போயிட்டு வாங்க. ஏதேதோ கேட்க வேண்டும் என நினைத்த இருவரும் வாயடைத்து நின்றோம்.

-நன்றி. முத்துக்கமலம் மின்னிதழ் 

தொடர்புடைய சிறுகதைகள்
வாசலில் கவுசல்யா தன் மகனின் வருகைக்காகக் காத்திருந்தாள். பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கிய ஆதித்யா வீட்டினுள் நுழையுமுன்பே தன் புத்தகப் பையிலிருந்த ஸ்கூல் டைரியை எடுத்து நீட்டினான். அம்மா என் டீச்சர் என்னை கவுன்சிலர் சைல்ட் னு சொன்னாங்க தெரியுமா, ஏதோ கவுரவப் பட்டம் ...
மேலும் கதையை படிக்க...
எந்த அப்பாவனு கேட்டுட்டானே இந்த பொடிப்பய. விசயம் என்னவா இருக்கும். மனசு போட்டு குடைந்து தள்ளியது. என்னவோ சென்னைய ரொம்ப ஒழுக்கமான உயர்ந்த இடத்தில வச்சிதான் இவ்ளோ நாள் கோட்டை கட்டிக்கிட்டு இருந்தேன். இங்கயும் இப்டித்தானா. அதிக யோசனையால் தலை லேசா ...
மேலும் கதையை படிக்க...
ஊரிலிருக்கும் போது பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது யமுனாவிற்கு. அம்மா ஒவ்வொரு பண்டிகையையும் சின்ன வயசில எப்படிக் கொண்டாடினாள் என்று பாட்டி சொல்லியிருந்தாள். கார்த்திகைத் திரு நாளுக்கு முந்தைய தினம் அம்மாவும், அவளின் தோழிகளும் சக்கரம் பொறுத்தப்பட்ட யானை விளக்கு, பாவை விளக்கு, ஐந்து ...
மேலும் கதையை படிக்க...
நலம் விரும்பி நல்ல சாமி விருவிருவென்று போய்க் கொண்டிருந்தார் தாலுகா அலுவலகம் நோக்கி. ஏம்வே இன்னிக்கு யாரப்பத்தி கோள் மூட்டி உடப் போறீறு. அடி பைப்பில் தண்ணீர் பிடிக்க வந்த சின்னத்தாயியின் குரலைக் கேட்டும் கேட்காததுபோல் ஓடிக் கொண்டிருந்தார் அவர். சின்னத்தாயி குடத்தை இடுப்பில் ...
மேலும் கதையை படிக்க...
ஐஸ் கிரீம் பார்லரில் இவ்வளவு பிரச்சினை வரும் என எதிர் பார்க்கவில்லை தான். இனிமேல் பேச்சில் கவனம் தேவை. எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். என்னப்பா இது வெண்ணிலா ஐஸ் கிரீம் மேல தேன் மட்டும் உட்டு கொடுத்திருக்காங்க. எனக்கு சாக்கலேட் சிப்ஸ், ...
மேலும் கதையை படிக்க...
மிச்சமுள்ள ரெண்டு பிரட் பீஸ்ல ஜாமத்தடவி முழுங்கிட்டு ஏர்போர்ட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதான் பொறியாளர் சந்திரன் தீர்மானித்தார். அப்பாடா இந்த வந்தே பாரத் ப்ளைட் டிக்கெட் கெடைக்கறதுக்குள்ள நானும் என் நண்பனும் ஒருவழியாயிட்டோம். கொரோனாவால வேலையும் போச்சு. எப்படியோ ஊருக்குப் போய்ச் சேந்தாப் போதும். ...
மேலும் கதையை படிக்க...
இன்று மேகலாவின் பள்ளியில் பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் அனுபவங்களைப் பகிரும் நாள். பத்தாண்டுகளுக்கு முன்பு அப்பள்ளியிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுச் சென்ற அவர்கள் முதன் முதலில் மீண்டும் சந்தித்த போது மகிழ்ச்சிப் பெருமிதத்தில் நனைந்தனர். மேகலா தான் முழு ...
மேலும் கதையை படிக்க...
அந்த அரங்கத்தில் பள்ளி முதல்வரின் உரை தொடங்க இன்னும் பதினைந்து நிமிடம் இருந்ததால் ஆசிரியர்கள் கூடிப் பேச ஆரம்பித்தனர். காவ்யா திறமைசாலி. ஒரு முறை நான் அவளின் வகுப்பில் இப்போது கடவுள் உங்கள் முன் நின்றால் அவரிடம் என்ன கேட்பீர்களோ அதை ஐந்து ...
மேலும் கதையை படிக்க...
அம்மா போரடிக்குது. எங்கேயாவது வெளியில் போகலாமா? தொடர்ந்து நச்சரிக்கும் குட்டி ஸ்ருதியை அழைத்துக் கொண்டு செல்ல இடம் ஆலோசிக்க ஆரம்பித்தனர். ‘அரை மைல் தூரத்தில் புதியதாக மால் திறந்திருக்கிறார்கள் கூட்டிக் கொண்டு போய் வா’ என்றாள் பாட்டி கோமதி. மும்பையிலிருந்து கோடை விடுமுறைக்காக வந்திருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
மருத்துவரின் குறுக்குக் கேள்விகள் முடிந்தவுடன் அவருக்கு கைபேசியில் முக்கிய அழைப்பு வந்ததால் எங்களை உட்காரச் சொல்லிவிட்டு எழுந்து சென்றிருக்கிறார். இப்பொழுது யாராவது என்னிடம் பேச வேண்டும் எனத் தோன்றியது. மதன் மருத்துவர் என்ன கேட்டார்னு கேளுங்களேன். நீங்க வெளில தானே இருந்தீங்க. என்ன கேக்கணும். சொல்ல ...
மேலும் கதையை படிக்க...
மகனின் பொம்மை வாழ்க்கை
மெல்லத் தெரிந்து சொல்
நவீன கார்த்திகை
மினுங்கும் தாரகை
மனதின் குரல்
துபாய்க்காரர்
தந்தையின் மனைவி
காற்றிலே காவியமாய்
ஆடையில் ஓட்டையிடும் இராட்சதர்கள்
என் மனத்தோழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)