கரையைத் தொடாத ஓடங்கள்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 11,034 
 
 

பல்கலைக்கழகத்தில் நுழைந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தக் காலத்தில் நான் புதிதாக என்ன சாதித்து விட்டேன். உடலால்… உள்ளத்தால்… அறிவால் வளர்ந்திருக்கிறேனா? எனக்குத் தெரியாது. பரீட்சைகளில் சித்தியடைவதால் நாம் வளர்கின்றோம் என்ற பொய்யான பிரமையில்… போலியான கருதுகோளில்… ஏமாந்து பெருமிதம் கொண்டவர்களில் நானும் ஒருவன்.

நான் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சையில் சித்தியடைந்தது… பெர்ஸ்ட்போம் வந்தது… பின் செகண்ட்போம் வந்தது… பல்கலைக்கழகத்தில் நுழைந்தது எல்லாமே ஒரு எக்சீடன்டுதான். ஏனென்றால் நான் பரீட்சை பாஸ் பண்ணுவேன், பல்கலைக்கழகத்துக்குப் போவேன், பட்டதாரியாவேன் என்றெல்லாம் கனவு காணவுமில்லை. அது எனது லட்சியமாக இருக்கவுமில்லை. எனது குடும்பநிலை அப்படி. பதினொரு பேருள்ள குடும்பத்தில் ஐந்தாவதாய்ப் பிறந்தவன் நான்.

ஓ.எல். படித்து விட்டு இனி என்னடா செய்வது, ஏதாவது வேலை கிடைக்காதா என வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த என்னை எனது பாடசாலை அதிபர் ஒருநாள் ”லபக்” என்று பிடித்து ஏ.எல். வகுப்பில் போட்டு விட்டார். வீட்டில் விருப்பமில்லைதான் என்றாலும் வேலையும் தான் இல்லையே. அதிலும் கூட ஒட்டாமல்தான் படித்தேன்.

என்னைப் பிடிச்ச சனியன்… படிப்பு.. அத்தோடாவது விட்டதா? பல்கலைக்கழகத்துக்குப் போடா என்றாகி விட்டது.

அம்மாவோட கடிதம் அடிக்கடி வரும். வீட்டில் உள்ள கஷ்டங்கள் எல்லாவற்றையும் கொட்டி அழுதிருப்பாள். நானும்தான் பார்க்கிறேன். ஒரு வேலை கிடைத்தால் படிப்பை விட்டு விடலாம் என்று… ஊஹூம்.

பல்கலைக்கழக வாழ்க்கைங்கிறதே தனி. சட்டங்கள், கட்டுப்பாடுகள், விதிகள் எம்மைக் கட்டுப்படுத்தாது என்று துள்ளித்திரியும் இளைஞர்களும், யுவதிகளும் தம்மை மறந்து தமது சூழ்நிலையை மறந்து, குடும்பம் உற்றார், உறவினர் ……பேதங்களை மறந்து புதிய ஒரு உலகத்திற்கு வந்துவிட்டது போல் சிறகடிக்கும் புறாக்கள் இவர்கள். வசந்தத்தின் எல்லா வசீகரங்களையும் தமக்கே சொந்தமாக்கிக் கொண்டுவிட வேண்டும். அவற்றை ஆரத் தழுவிக்கொண்டு விட வேண்டும் என்று சதா ஒரு ஆவல் இவர்களுக்கு. நானும்கூட இதற்கு விதிவிலக்கா என்ன? அடிக்கடி வசந்த கால கனவுகளில் மூழ்கிவிடும் போதெல்லாம் வீட்டு நினைவு வந்து உலுக்கி விடும்.

கெம்பசில் ” மனோ” என்றால் யார் மன்மதனா? என்பார்கள். மனோ என்பது எனது நண்பர் மனோகரன். காதல் பிரச்சினைகள், பாலியல் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் மந்திரியாக நின்று ஆலோசனை சொல்பவன் இவன்தான். இவனுக்கு நண்பனாக இருக்க நான் தகுதியற்றவன் என்று கருதியதுண்டு. என்றாலும் எங்கள் நட்பு அதனால் கெட்டுப்போய் விடவில்லை.

இவனுடன் கெம்பசில் நுழைவதென்பது இனிமையும், சங்கடமும் கலந்த விடயம். யாராவது எதிரில் சாரி கட்டிக்கொண்டு வந்தால் போதும். அவள் எந்தப் பாசை, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, இவனுக்குப் பழக்கமானவளாக இருப்பாள். அவளுடன் பல்லைக் காட்டிச் சிரிச்சுப் பேச ஒரு அரைமணித்தியாலம். அப்புறம் இன்னொன்று, மற்றுமொன்று… அப்பப்பா. இது நமக்குச் சரிப்படாது.

இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் நான் சலித்துக் கொள்ளும் போதெல்லாம் மனோ சொல்வான்…

”இந்த நிமிசத்தில் நாம் அனுபவிக்கிறதுதாண்டா வாழ்க்கை. இந்த நிமிஷம் சந்தோசமானதாக இருந்து அதை அனுபவிக்காமல் கடத்திட்டோம்னா வாழ்க்கையில் ஒரு சந்தோசகரமான நிமிசத்தை நாம் இழந்தவர்களாவோம். அழகு எங்கிருந்தாலும் அதை ரசிக்கணும். பாராட்டணும். ரசிக்கிறதால நாம் சந்தோசப்படுறோம். பாராட்டுறதால அழகுக்குரியவங்க சந்தோசப்படுவாங்க.”

மனோ பேசுறது சில நேரம் ரொம்ப பிலாசபிகலா இருக்கும். அதை நான் ”பிளேபோய் பிலாசபி” என்று அடிக்கடி கேலி செய்வதுண்டு. ஆனால் உண்மையில் இவங்கதான் வாழ்க்கையில் யதார்த்தமானவங்களாக இருக்கிறாங்க. சமூகத்தின் வலுக்கட்டாயமான சில கட்டுப்பாடுகளுக்கும், விதிமுறைகளுக்கும் இவர்கள் அடிபணியிறதில்லை. உண்மையில் சொல்லப்போனால் இவங்களாலதான் மயான அமைதி நிரம்பிய வாழ்வின் சுற்றுப்புறங்கள் எல்லாம் சுவாரஸ்யம் அடைகின்றதெனலாம்.

சமீபத்தில் யாரோ சொல்லக் கேட்டேன். இப்படி வாழ்வின் ஒவ்வொரு கணத்திற்கும் அர்த்தம் கற்பித்துக்கொண்டு, இன்பத்தைத் தேடி அலைந்துகொண்டு… நமது பாஷையில் ”கெட்டுப் போனவர்கள்” தான் பிற்காலத்தில் தத்துவஞானிகளாக, எழுத்தாளர்களாக, கவிஞர்களாக ஆகின்றார்கள் என்று. இது உண்மைதான் போலும். ஏனெனில் இளமைக் காலத்தில் பட்டினத்தடிகள், அருணந்தி சிவாசாரியார், கண்ணதாசன் என்போர்கள் இப்படித்தானே இருந்திருக்கிறார்கள்.
* * * * *
வசந்தத்தின் வசீகரங்களை எல்லாம் அள்ளிப் பருகிட வேண்டும். இளமையின் இன்பக் கனவுகளை எல்லாம் அனுபவித்து விட வேண்டும் என்று எனக்குக் கூட ஆசைதான். ஆனால், அதற்கான ‘டெக்னிக்தான்” சரியாகப் புரியவில்லை. மனோ சொல்வது போல் இந்த இரண்டு வருட கால கெம்பஸ் வாழ்வில் ஒருத்தியையாவது பிடித்துக்கொள்ள முடியவில்லை என்பது…. கேவலம் ஒரு புதுசையாவது மடக்க முடியவில்லை என்பது எனது பலவீனம்தானா?

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. அந்தக் கிழமைக்கான கடைசி லெக்சர் முடிந்து விட்டது. நான் புளூமென்டால் வீதிக்குப் போக வேண்டும். அந்த வீதிக்குச் செல்லக்கூடிய, எங்கள் கெம்பஸ் வழியாகச் செல்லும் ஒரேயொரு பஸ் நூற்று அறுபத்தேழு, இதனைப் பிடிப்பதென்பது ஒரு காதலியைப் பிடிப்பதிலும் கடினமானது. எனது நகைச்சுவையை நானே ரசித்துக்கொண்டு பஸ் ஸ்டான்டை நோக்கி நடக்கிறேன்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தினைப் போல் எங்கள் பல்கலைக்கழகத்தில் காதலர்க்கு அவ்வளவு வசதிகள் கிடையாது. என்றாலும்கூட நிவ் ஆர்ட்ஸ் தியேட்டர். அதனைச் சுற்றியுள்ள ”வசந்தவனம்” கே.ஜி.ஹோலுக்குப் பின்னால் உள்ள நிழலான பகுதிகள், லைப்பிரரியின் மேல்மாடி என்பவை எல்லாமே காதல் இளம் ஜோடிகளால் அலங்கரிக்கப்பட்ட கண்காட்சிச் சாலைகள்தான். முகிழ்ந்து மணம் வீசாத என் போன்ற இள மொட்டுகளுக்கு இந்த இடங்களைக் கடந்து செல்வதென்பது பனாகொடை சித்திரவதையை விட கொடியது.

நூற்று அறுபத்தேழாம் நம்பர் பஸ் எப்போது வந்து தொலைகிறதோ என்ற கவலையுடன் ரீட் அவெனியூ பஸ் ஹோல்ட்டில் போய் நின்றுகொள்கிறேன். இப்போதெல்லாம் தூரத்தில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக எந்தப் பெண் வந்தாலும் அவள் எனக்காகத் தான் வருகிறாளோ என்ற பிரமை ஏற்படுகின்றது. மனோவுடன் சேர்ந்த தோஷம், பஸ்சில் போகும் போது கூட அதில் பிரயாணம் செய்யும் அழகான பெண்களை கள்ளத்தனமாக ரசிக்கும் பழக்கம் என்னையும் தொற்றிக்கொண்டு விட்டது.

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய அதிசயம்! நான் செல்ல வேண்டிய நூற்று அறுபத்தேழாம் நம்பர் பஸ் வேளைக்கு வந்து விட்டது. எனக்கு அதில் சந்தோசமோ, துக்கமோ இல்லை. ஏதோ கடமையைச் செய்பவன்போல ஏறிக்கொண்டேன்.

பஸ்சில் அவ்வளவு நெரிசல் இல்லை. என்றாலும் சராசரிக்கு மேல் கூட்டம் இருந்தது. பலர் நின்று கொண்டிருந்தார்கள். டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு கண்டக்டர் ”இஸ்ஸராட்ட யண்ட” என்று சொல்வதற்கு முன்னரே முன்னோக்கி நகர்ந்தேன். இப்போதைய எனது கவலை இந்த பஸ் பிரயாணத்தைப் போரடிக்காமல் கழிப்பதற்காக வசதியான ஒரு இடத்தில் நின்றுகொள்ள வேண்டும் என்பதுதான். அப்போதுதான் அவள் என் கண்ணில் பட்டுத் தொலைத்தாள். பலருடைய எரிச்சல் மிகுந்த பார்வைகளைத் தாங்கிக்கொண்டு அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து அவளருகே சென்றுவிட்டேன். அதற்கு மேல் என்ன செய்வதென்று எனக்கு விளங்கவில்லை. அவளது கவனத்தை எப்படிக் கவரலாம்? இந்த விஷயத்தில் நான் ”வீக்” ஏறெடுத்து அவளை ஒரு நேரான பார்வை பார்ப்பதற்காவது எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு பட்டதாரி மாணவன் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியுள்ளவனா?

பஸ் நகர்ந்து கொண்டிருந்தது…. ரோயல் கல்லூரி ரீட் அவனியூ சந்தி, விக்டோரியா பார்க்…. நான் ஒரு முறை கடைக்கண்ணால் அவளைப் பார்க்கிறேன். அவள்

”சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா

சூரிய சந்திரரோ ……
வட்டக் கரிய விழி கண்ணம்மா

வானக் கருமை கொள்ளோ”

பாரதியின் பாட்டு எனக்கு ஞாபகம் வந்தது. இத்தகைய சந்தர்ப்பங்களில் தான் முன்னெப்போதோ பாடிச் சென்று விட்ட இந்தக் கவிஞர்களின் இத்தகைய பாடல் வரிகள் அதிக சந்தோஷமுடையனவாகத் தோன்றுகின்றன. அவளும் என்னை ஒருமுறை பார்த்தாள். ஒரு சின்ன முறுவல் வெள்ளையாக எனக்குத் தானா? நான் சந்தேகத்துடன் பின்னால் திரும்பிப் பார்த்தேன். வேறு யாரும் அவளைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. புன்னகை எனக்குத்தான். என் உடம்பில் ஒரு சந்தோச சிலிர்ப்பு. எனக்குத் தைரியம் பிறந்தது. பஸ் அடுத்த திருப்பத்தில் திரும்பிய போதுதான் அவள் அருகே சென்று விட்டேன். இன்னும் அவள் அவ்விடத்தில் தான் நின்று கொண்டிருக்கிறாள்.

எனது அதிர்ஷ்டமோ இல்லை அவளது அதிர்ஷ்டமோ தெரியாது. இருவருக்கும் மிக அருகிலிருந்த சீட்டில் இருந்த ஒரு மனிதர் இறங்குவதற்கு எழுந்தார். நான் அவள் இருக்கட்டும் என்பதற்காக விட்டுக்கொடுத்தேன். ஆனால் அவள் அமர்வதாக இல்லை. சில நொடிகள் சங்கடத்தில் நகர்ந்தன. நான் அவளைப் பார்த்தேன். அவள் தலையைக் குனிந்து கொண்டிருந்தாள். அந்த சீட்டில் அமர்ந்திருந்த மற்ற மனிதர் ஒரு நடுத்தர வயதுடைய ஒருவராக இருக்க வேண்டும். அவருக்குப் பக்கத்தில் அமர அவளுக்கு விருப்பமில்லையோ?

நான் அந்த சீட்டில் அமர்ந்து கொண்டேன். அவள் இப்போது என்னருகே நின்று கொண்டிருக்கின்றாள். நான் அவளருகே அமர்ந்து கொண்டிருக்கின்றேன். மேலே தலையை உயர்த்தி அவள் என்ன செய்து கொண்டு இருக்கின்றாள் எனப் பார்க்க ஆவல். ஆனால் அதை எப்படிச் செய்வது? மனதில் துருதுருப்பு மெல்ல நிமிர்ந்து பார்க்கிறேன்.

அவள் ………..

அவளின் கீழ்நோக்கிய பார்வை ………எனது மடியிலிருந்த எதையோ துழாவுகின்றன. நான் சட்டெனப் பார்வையைத் தாழ்த்துகிறேன். உடம்பின் ஒவ்வொரு நாளத்திலும் நரம்பிலும் இரத்தம் ஓடுவது அப்பட்டமாக உணரப்படுகின்றது.
வியர்வை

அவள் கண்களால் என்னதைத் துழாவுகிறாள்?
எனது மடியில் கெம்பஸ் பைல்….. அதில்…. கொழும்பு பல்கலைக்கழகம் என்று பெரிதாக கரிய எழுத்தில் இருபது மீற்றருக்கு அப்பால் இருந்தால் கூட விளங்கும் அளவுக்கு பதிக்கப்பட்டிருக்கின்றது. அதை எழுத்தெழுத்தாக ஆர்வத்துடன் வாசிக்கின்றாள், அப்படியென்றால்…….?

வாழ்க கெம்பஸ் பைல்……
அதன் கரிய பெரிய எழுத்துக்கள்…..

பல கனவுகள் வருகின்றன. கதாநாயகனுக்குப் பதில் நான்.

கதாநாயகிக்குப் பதில் அவள்.

மேகங்களினூடே சவர்க்காரக் குமிழ்கள் வண்ண வண்ணமாகப் பறக்கின்றன. உலகத்தின் எல்லா வகை இனிய இசைக்கருவிகளும் மெல்லியதாக முழங்குகின்றன.

அவள் எனது பைல் கவரில் இருந்த பெயரையும் வாசித்திருப்பாள். ஜெகநாதன் என்ற பெயரைச் சுருக்கி ஜெகா என்று எழுதியிருந்தேன்.

பஸ் இப்போது யூனியன் பிளேஸ் சந்தியைக் கடந்து ஜெனரல் கொஸ்பிட்டல் பக்கம் சென்று கொண்டிருந்ததை அவதானித்தேன். அடுத்த ஹோல்ட்டில் பஸ் நின்ற போது இன்னொரு நல்ல விஷயம் நடந்தது. எனக்குப் பக்கத்திலிருந்த அந்த நடுத்தர வயதுக்காரர் இறங்க ஆயத்தம் செய்தார். நான் ஜன்னல் புறமாக நகர்ந்து அவள் அமர வேண்டும் என்ற பாவனையில் இடம்கொடுத்தேன்.

அவள் சற்றே தயங்கினாள். சில அமைதியற்ற கணங்கள் புயல் வேகத்தில் மின்னிச் சுழன்றன. அதற்குள் நான் ஆயிரம் தேவதைகளைப் பிரார்த்தித்து விட்டேன். பிரார்த்தனை பலித்தது. அவள் என்னருகே அமர்ந்து கொண்டாள்.

இனி என்ன செய்வது ? அவள் எங்கே இறங்குவாள் எனத் தெரியாது, அவள் இறங்குவதற்குள் கதைத்து விட வேண்டும். எப்படித் தொடங்குவது? மூளை இயங்க மறுக்கின்றது. பரபரப்பு, அவஸ்தை, ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் பிரகாசிக்கும் வானத்தில் என்னைத் தனியே தள்ளி விட்டது போல் ஸப்த நாடிகளும் ஒடுங்குகின்றன.

அவள் எனது நிலைமையைக் கற்பனை செய்து பார்க்கக் கூடுமா? இல்லை, அவளது நிலைமையும் என் போன்றது தானா? என்னுள் இத்தனை பிரளயம் நடக்கிறது. யாருமே அதைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. எல்லோரது நெஞ்சங்களிலும் இப்படித்தான் வேறு வேறு காரணங்களுக்காக வேறு சந்தர்ப்பங்களில் பிரளயம் நடக்கும். நான் யோசிக்கிறேன். எல்லாச் சராசரி காதலர்களும் யோசிப்பது போல் இந்தப் பஸ் பிரயாணம் இப்படியே நீண்டு விடக்கூடாதா?

பஸ் மருதானைச் சந்தியை அடைந்து விட்டது. எதிரே எல்பிஸ்டன் தியேட்டர். இதற்கிடையில் நான் அவளை மூன்று நான்கு முறை கடைக்கண்ணால் நோக்கினேன். அவளும் நோக்கினாள். சுமுகமான பார்வை உள்ளங்கள் தான் ஊமையாகி விட்டன. கண்கள் மாத்திரம் பேசிக்கொண்டன.

இந்த நேரத்தில் இவ்விடத்தில் மனோ இருந்திருந்தால் என்ன செய்திருப்பான்? அவன் விசித்திரமான பேர்வழி. செய்கைகளும் அப்படித்தான். எந்த நேரமும் அவனிடம் அழகான கையெழுத்தில் வெள்ளைத்தாளில் எழுதப்பட்ட முகவரித் துண்டுகள் தயாராக இருக்கும். இப்படி அறிமுகமாகும் பெண்களிடம் எல்லாம் அதில் ஒன்றைத் தயங்காமல் கொடுத்து விடுவான். பிறகு ஒவ்வொரு நாளும் தபால்காரன் வரும்வரை தவமிருப்பான். நிறையப் பெண்களிடமிருந்து நிறையக் கடிதங்கள் வரும். அநேக சந்தர்ப்பங்களில் நானும், அவனும் அவற்றைப் படித்து ரசித்துச் சிரித்திருக்கின்றோம்.

நானும் அப்படிச் செய்தால் என்ன? ஐடியா, என்னிடம் முகவரி எழுதப்பட்ட வெண்துண்டுகள் இல்லையே. ஆனால் வீட்டிலிருந்து என் முகவரியிட்டு வந்திருந்த கடித உறை பைலில் இருக்கிறது. எப்படி அதனை அவளிடம் கொடுப்பது?

பரபரப்பு, இதயம் வேகமாகத் துடித்தல், மீண்டும் பிரளயம்.

பஸ் புகாரி ஓட்டலை அணுகுகின்றது. நிறையப் பேர் இறங்கத் தயாராகின்றார்கள். அவளிலும் ஒரு சலனம். அவளும் இறங்கப் போகின்றாள். நான் இன்னும் தீர்மானிக்கவில்லை. தாமதித்து விட்டேனா? நான் ஒரு மண்டு. மக்கு, முட்டாள், மடையன், மட்டி, மோட்டு…? வயிற்றிலிருந்து ஒரு பெரிய பந்து உருண்டு வந்து தொண்டையில் அடைத்துக்கொள்கின்றது.

பெல் அடிக்கப்படுகின்றது. பஸ் நிற்கின்றது.

அவள் எழும்புகிறாள். நகர்கின்றாள்.

ஒரு சக்கரவர்த்தி தன் சாம்ராஜ்யத்தை இழக்கின்றான். மனிதர்கள் கதவை நோக்கி நகர்கின்றார்கள். நான் அவளையே பார்க்கின்றேன். அவளில் ஒரு தயக்கம். நகர்கிறாள் என்னைப் பார்க்கிறாள். ஆயிரம் மின்னல்கள் ஒன்றாகத் தாக்கும். மின்சாரப் பார்வை ஏக்கம். அவள் என்னிடம் எதனையோ எதிர்பார்க்கின்றாள். நான் எதனை அவளுக்குக் கொடுக்க வேண்டுமென்று நினைத்தேனோ அதனைத்தான் அவள் எதிர்பார்க்கின்றாளோ!

எனது நெஞ்சத்தின் எங்கோ ஒரு மூளையில் சுரீர் என்று உறைத்தது. ஆச்சரியம். நான்கூட மின்னல் வேகத்தில் செயல்பட்டேன். பைல் கவருக்குள் இருந்த எனது முகவரியிட்ட கடித உறையை உருவினேன்.

அவள் கதவருகே சென்றுவிட்டாள். அப்போதும் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். நான் எனது கையிலிருந்த கடித உறையை அவளுக்குத் தெரியும்படி காட்டினேன். அவள் கீழே இறங்கியவுடன் அக் கடித உறையை வெளியில் ஜன்னலுக்கூடாகப் போட்டேன். தமிழ்ப் படங்களில் வருவது போல அது அவள் காலடியில் போய் விழுந்தது.

அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

சிரித்தாள்.

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

பஸ் நகர்ந்தது.

அவள் கடித உறையைக் கட்டாயம் எடுத்திருப்பாள்.

****

அந்த இரண்டு நாட்களும் சுவாரஸ்யமான உயிரோட்டமுள்ள நாட்களாகப் பெரிய சாம்ராஜ்யக் கனவுகளுடன் மெதுவாக நகர்ந்தன. எனது காதல் சாம்ராஜ்யத்தின் கோட்டை கொத்தளங்களைக் கட்டி முடித்து விட்டேன். அவற்றை ஆங்காங்கே திருத்தியமைத்து அழகுபடுத்திக்கொண்டிருக்கிறேன். தனிமையில். அதில் யார் குறுக்கிட்டாலும் அது என்ன தலைபோகிற காரியமாக இருந்தாலும் எரிச்சல் எரிச்சலாக வந்தது. எனது கனவைக் கலைத்து விடும் யாரையும் நான் மன்னிக்கத் தயாராக இல்லை.

சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் நான் எங்கும் வெளியில் போகவில்லை. போகப் பிடிக்கவில்லை. எதைத் தொட்டாலும் அவளைப் பற்றிய நினைவில் செயலிழந்து விடுகின்றேன். பிரமை பிடித்தவன் போல் எங்கெங்கு நோக்கினும் அங்கங்கெல்லாம் அவள் முகம், அந்தப் புன்னகை. இடையிடையே, ‘உனக்கென்னடா நடந்துவிட்டது?’ என்ற நண்பர்களின் குரல் கேட்டுத் திடுக்கிடுவதுண்டு. மனிதர்களைக் கண்டால் பிடிக்கவில்லை. சாப்பாடு செல்லவில்லை. உள்ளம் தனிமையையே நாடியது”.

வழக்கம் போல் நம்பர் நைன்டி ஹெவலொக் ரோட், அக்வைனாஸ் ஹொஸ்டல் மாணவர்களின் கூக்குரல்களில் களை கட்டி இருந்தது. தொண்டையைக் கிழித்துக்கொண்டு கிளம்பும் அபஸ்வரப் பாட்டுகள், குளிப்பதற்காக உடைந்து போய்க்கொண்டிருக்கும் மோட்டார் பம்பியை இயக்க முயலும் பிரயத்தன ஊளைகள், பாத்ரூம் வாளிகளைப் பொறுமையிழந்து உதைத்துப் பந்தாடும் சத்தம். யாரோ ஒருத்தனின் அண்டர்வெயாரை மற்றவன் ஒளித்து விட்டமைக்கான மல்யுத்தம். விடிந்ததும் இன்னும் நித்திரை விழிக்காதிருந்தவர்களை எழுப்புவதற்காகப் பள்ளிஎழுச்சி ”பக்கட்டிஞ்” நீராபிஷேகம். நீராபிஷேகம் செய்யப்பட்டவர்களின் சகிக்க முடியாத தூஷண காவிய பிரபந்தங்கள், வக்கிரத்தனமான ஹா… ஹா… சிரிப்பு இத்தியாதி.

நான் அன்றைய காலை லெக்சருக்குப் போகப் போவதில்லை. இது பலருக்கு ஆச்சரியம் தரும் விஷயம். பலருக்கு கேள்விக்குறி. ஏனென்றால் நான் போகாமல் விட்டால் அவர்கள் போகாமல் விட்ட லெக்சர்களுக்கான நோட்ஸ் வேறு யாரிடமும் ஒழுங்காக இருக்காதென்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். என்றாலும் நான் அவர்களின் ஆச்சரியத்தையும் ஆட்சேபனைகளையும் பொருட்படுத்தவில்லை. அன்றைய காலைத் தபாலில் எனக்கொரு முக்கியமான கடிதம் வரப்போகின்றதென்பது அவர்களில் ஒருவருக்கும் தெரியாது.

பத்து மணியை நோக்கி நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. ஹொஸ்டலுக்குப் பத்து மணிக்குத்தான் தபால் வரும். ஒன்பது மணிக்கும், பத்து மணிக்கும் இடையில்தான் நேரம் நகர மாட்டேன் என்கிறது. இதுவரை வாசலுக்கும், ரூமுக்கும் எத்தனை தடவை நடந்துவிட்டேன்? ராஜேந்திரன் கேட்டே விட்டான். ”என்னடா ஜெகா! உடம்புக்குச் சரியில்லையா?” என்று, அதற்கு நான் பதில் சொல்லவில்லை. வெளியில் எந்த சைக்கிள் பெல்லடித்தாலும் அது தபால் சைக்கிளின் ஓசையாகவே கேட்டது.

அப்பாடா… பத்துமணி கடந்து எட்டு நிமிடம். அப்போதுதான் அந்த நாசமாய்ப் போன தபால்காரன் வந்தான். எனது அறை ஹொஸ்டலின் மேல் மாடியில் பதினான்காம் நம்பர். பத்து மணி கடந்ததுமே மேல் மாடி வராந்தாவில் வாயிலை நோக்கியவாறு நான் நிரந்தரமாகவே நின்று விட்டேன்.

வழக்கம்போல மனோகரன் தபால்காரனை வரவேற்றான். அவனுக்கே அதிக கடிதங்கள் வருமாதலால் அவனிடம் எல்லாக் கடிதங்களும் ஒப்படைக்கப்படுவதை மற்றவர் ஆட்சேபிப்பதில்லை. அவன் அருகில் இருப்பவருக்கான கடிதங்களைக் கொடுத்துவிட்டு மிஞ்சியதை ஷெல்பில் போட்டு விடுவான்.

தபாலை எதிர்பார்த்து ஏற்படும் காய்ச்சல் பொதுவாக ஹொஸ்டலுக்குரிய குணாம்சம்தான். அது எனக்கு மட்டும் உரியதில்லை. அங்கு வரும் கடிதங்களில் அகத்துறைக் கடிதங்களே அதிகம். மனோ பெயர்களை வாசித்து கடிதம் கொடுத்தான். ராஜேந்திரன், ரவி, சுகுமார், சின்னபாலா, பெரிய பாலா, சற்குணமூர்த்தி… ஜெகநாதன்! டேய் ஜெகா! ஓடிவா உனக்கொரு லெட்டர்.. குண்டு குண்டா கையெழுத்து… பொம்பளைக் கையெழுத்துடா….”

மனோ ஜெகா என்று உச்சரித்து முடித்திருக்க மாட்டான். நான் பறந்தேன். அவன் தருமட்டும் காத்திருக்கவில்லை. பிடுங்கிக்கொண்டு படிக்கட்டுகளில் தாவி, பாதையில் கிடந்த கதிரையில் கால் தடுக்கி விழுந்து, கையில் ஏற்பட்ட சிராய்ப்பைப் பொருட்படுத்தாமல், ‘டேய்… டேய்…” என்ற கூக்குரல்கள் பின்னே துரத்த, ஓடினேன்.

இந்த விஷயத்தில் எனது ரகசியம் எனக்கு மட்டும்தான் சொந்தம். எனது இன்பத்தைப் பகிர்ந்து கொள்ள யாரையும் அனுமதிக்கப்போவதில்லை. பதினாலாம் நம்பர் அறைக்குள் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டேன். யாரும் பின்தொடர்ந்து வந்து கதவைத் தட்டுகிறார்களா எனப் பார்க்க சற்றுக் காத்திருந்தேன். நல்ல வேளை தடிப்பசங்கள் யாரும் வரவில்லை. நிம்மதிப் பெருமூச்சு, அறையில் இருந்த ஒரேயொரு கதிரையை எடுத்து கதவுக்கு முட்டுக்கொடுத்து விட்டு ஆறுதலாகக் கட்டிலில் அமர்ந்தேன்.

கண்ணில் கற்பனைகள் விரிந்தன. புதிய பூரிப்பு, கடிதத்தை ஆர்வத்துடன் மேலும் கீழும் பார்த்துக்கொண்டேன். இதனை எப்படித் திறப்பது, உறையைக் கீறித் திறப்பதென்பது அவள் இதயத்தையே குத்திக் கிழிப்பதைப் போன்று வேதனை அளித்தது. மெதுவாகவே அதனைத் துறந்தேன். எனது ஆவல் எல்லை கடந்தது.

வெண் கடதாசியில் நீல நிற மையால் எழுதப்பட்டிருந்த அந்தக் குண்டு குண்டான எழுத்துக்களில் வரி வரியாக நான் கண்களை ஒட்டிய போது…

அத்தனை வேகமாக எனது கற்பனைக் குதிரைகள் பாய்ந்து சென்றதனாலோ என்னவோ, அவை அந்த செங்குத்தான அதலபாதாளத்துக்குள் குதித்து விட்டன. ஆயிரம் கடப்பாரைகள் அத்தனை ஆழமாக என் நெஞ்சத்தில் பாய்ந்திருக்க வேண்டும்.

கடிதம் அம்மா சொல்லி எனது சிறிய தங்கையால் எழுதப்பட்டிருந்தது. அன்புள்ள தம்பி! இத்துடன் நீ பரீட்சைக் கட்டணத்துக்கெனக் கேட்டிருந்த பணத்தை உனது தங்கச்சியின் தோடுகளை அடகுவைத்து அனுப்பி வைக்கிறேன். எங்கள் கஷ்டங்களைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே. மனத்தை அங்குமிங்கும் அலையவிடாதே, நீ படித்துப் பட்டம் பெற்றுப் பெரியவன் ஆனால் அதுவே எங்களுக்கு நிம்மதியைத் தரும்… அன்புள்ள அம்மா!

அடுத்த லெக்சர் பதினொரு மணிக்கு கே.ஜி.ஹோலில், பொருளியல் கோட்பாடு. அதற்குப் போய்விட வேண்டும். நான் அந்த பைல் கவரை எடுக்கிறேன். கொழும்பு – 3 பல்கலைக்கழகம் என்ற கரிய பெரிய எழுத்துக்கள் இப்போதும் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டுகின்றன. இந்த இரண்டு நாட்களில் நான் பட்டுவிட்ட அவஸ்தை. சே…. நான் எத்தனை பலவீனமானவன். நம்மால் சவால்கள் விடுக்கப்படு முன் நமக்கு விடப்பட்ட சவால்கள் முறியடிக்கப்பட வேண்டும்.

என் மனது மேகங்கள் அற்ற வானம் போல் தெளிவாக இருந்தது. என் கால்கள் விரிவுரை மண்டபத்தை நோக்கி விரைந்தன.

(யாவும் கற்பனை)

முதல் பிரசுரம்
வீரகேசரி வாரவெளியீடு
19.02.1989

இலங்கையின் மூத்த தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் கவிஞருமான இரா.சடகோபன் அவர்கள் நாவல் நகர் என்று சிறப்பாக அழைக்கப்படும் மலையகத்தின் மத்தியில் இருக்கும் சிறு நகரமான நாவலபிட்டியின் அருகில் அமைந்துள்ள மொஸ்வில்ல தோட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர். மொஸ்வில்ல தோட்ட பாடசாலை,நாவலப்பிட்டிய கதிரேஷன் கல்லூரி ஆகியவற்றில் கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப்பட்டத்தை பெற்றதோடு இலங்கை சட்டக்கல்லூரிக்கும் பிரவேசித்து சட்டத்தரணியாகி தன் உழைப்பால் உயர்ந்தவர். கவிஞராக,பத்திரிகை ஆசிரியராக,மொழி பெயர்ப்பாளராக,சமூக…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *