கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 23, 2019
பார்வையிட்டோர்: 7,222 
 

தன் மொத்த கனவும் தகர்ந்து போன உணர்வில் ரொம்ப இடிந்து அமர்ந்திருந்தார் தணிகாசலம்.

பெரிய கனவு. தன் மகன் டாக்டர், இன்ஜினியராகி பெற்றவர்களைத் தாங்கி, மற்றவர்களுக்கும் நல்லது செய்து, பேர் சொல்லும் பிள்ளையாய் ஊர் மெச்ச வாழ வேண்டுமென்கிற கனவு.

ஆனாலும் இது அவருக்குக் குருவித் தலையில் பனங்காய். தன் சக்திக்கு எட்டாக்கனி. என்றாலும் அவர் முயன்றால் முடியாததில்லை என்பதில் ரொம்ப மூர்க்கம். துணிந்து இறங்கினார்.

பலன்…..?!

ஒரே பிள்ளை தவமாய் தவமிருந்து பெற்றது. திருமணமாகி முதல் வருடம் தவறி… அடுத்த வருடமும் தவற.. அதன் பின்தான் தங்களுக்குள் ஏதோ குறை சுதாரித்தார்கள். வழக்கமாய் எல்லாரையும் போல் தெய்வக் குத்தம், பக்தி, சாமி, நேர்த்திக்கடன் என்று விழுந்து கடைசியில் மருத்துவ பரிசோதனை, மருந்து, மாத்திரை என்று வந்து நான்காம் வருட முடிவில் கர்ப்பமானதில் கணவன் மனைவி இருவருக்குமே காணக்கிடைக்காத பொக்கிஷம், தங்கம்.

‘‘ஆணோ பொண்ணோ நமக்கு இந்த ஒன்னே போதும் செண்பகம்.’’

‘‘ஏன்……?’’

‘‘என் கிளார்க் வேலை சம்பளத்துக்கு ஒன்னுதான் சரியான முறையில் வளர்க்க முடியும். புள்ளை மேல என் கனவுகள் ரொம்ப அதிகம்;.. மகன் பெரிய படிப்பு படிச்சி உன்னையும் என்னையும் தாங்கி பேர் புகழோட வாழனும். இது என் ஆசை. இன்னையக் காலக்கட்டம் புள்ளை வளர்ப்புங்குறது சாதாரண விசயமில்லே. பொறந்ததிலேர்ந்து ரெண்டு வருசம் வரை சளி, ஜீரம், இருமல்ன்னு டாக்டர்கிட்ட அலைஞ்சி ஈரக்குலையில வைச்சு காப்பாத்தி வளர்க்கனும்.’’

‘‘அப்புறம் படிப்பு. ஏனோ தானோன்னு படிக்க வைக்க முடியாது. டாக்டர் இன்ஜினியர்ன்னு தொழில் படிப்பு படிக்க ஆங்கிலம் அத்தியாவசியம். ஆகையினால கான்வென்ட் படிப்பு படிக்க வைக்கனும். அதிலும் நல்ல கான்வென்டா சேர்க்கனும். அடுத்து தொழில் படிப்புக்குத் தாவும் போது பிரச்சனை. பையன் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தான்னா தகுதி அடிப்படையில அரசு சலுகையில நல்ல கல்லூரி, விருப்பப்பட்டப் பாடம் நாம தேர்ந்தெடுத்துக்கலாம். இல்லேன்னா லட்சக்கணக்குல கொட்டிக் குடுத்து அதைப்புடிக்கனும். அரசு சலுகையைவிட ரெட்டிப்புச் செலவு. பணக்காரங்களுக்குத்தான் இது தாக்குப்புடிக்கும்.’’

செண்பகம் கணவன் கனவுகளைக் கண்டு மலைத்தாள். வாயைத்திறக்காமல் பார்த்து இறுதியில் இசைவாய் ‘‘சரிங்க’’ தலையாட்டினாள்.

அன்புச்செல்வன் ஒரே பிள்ளையென்பதால் அதிக செல்லம். தணிகாசலத்திற்கு வசதி வாய்ப்புகள் இருந்;தால் ஊட்டி கான்வென்டில் படிக்க வைத்து பையனைப் பெரிய ஆளாய் ஆக்கி இருப்பார். இல்லாதததின் விளைவு…. நகரத்திலேயே நல்ல பள்ளியில் சேர்த்தார். சேர்த்ததோடு நின்றுவிடாமல் அடிப்படைப் படிப்பு அழுத்தமாய் வரவேண்டுமென்பதற்காக காலை மாலை.. நேரம் ஒதுக்கி அவனுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்ததார். எட்டாம் வகுப்பு வரை இந்த நடப்பு, உழைப்பு. அதற்கு மேல் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நல்ல டியூசன் வாத்தியாரிடம் விட்டார். அன்புச்செல்வன் பத்தாம் வகுப்பு படிப்பில் நானூற்றி அறுபது. திருப்தி. பன்னிரண்டாhம் வகுப்பில் கொஞ்சம் தடுமாற்றம். எதிர்பார்த்த மதிப்பெண்கள் இல்லை.. குறைவு. மேற்படிப்பு டாக்டரா இன்ஜினியரா மனசு அலையாய…. இறுதியில் பையன் விருப்பப்படி இன்ஜினியர் படிப்பு என்ற முடிவிற்கு வந்தார்.

‘‘என்னங்க…….!. கடன் வாங்கி வீடு கட்டி நாம ரொம்ப கஷ்டத்துல இருக்கோம் இன்ஜினியர் படிப்புக்கு அதிகம் செலவாகும்ன்னு நீங்களும் சொன்னீங்க வெளியிலேயும் சொல்றாங்க. அகலக்கால் வைச்சு நாம சிரமப்படக் கூடாது. யோசிச்சு முடிவெடுங்க…‘‘ செண்பகம் வந்து கொஞ்சம் குறுக்கே அணை போட்டாள்.

தணிகாசலம் ஏற்றுக்கொள்ளவில்லை.

‘‘ஒன்னை ஒழுங்கா வளர்க்கனும்ன்னுதான் நாம அடுத்தது பெத்துக்கலை. அதுபடி பொறந்ததையும் வளர்த்தாச்சு. இ;ப்போ முன் வைச்ச காலை பின் வைச்சா நமக்கு அசிங்கம்இ அவமானம் மட்டுமில்லே பையன் டாக்டர் இன்ஜினியர் கனவுலேயே வளர்ந்தவன் சிதைஞ்சா உடைவான்.‘‘

‘‘செண்பகா ! நம்ப அரசாங்கம் இப்போ ரொம்ப சுதாரிப்பு. ஏழைஇ நடுத்தர மக்களை முன்னேத்தி வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தாதான் நாடு முன்னேறும்ங்குறதுல தெளிவாய் இருக்கு. அதன்படி முன்னேறுது. அதனால வீடு கட்ட படிப்புஇ தொழில் செய்ய எல்லாம் வங்கிகள் எல்லாருக்கும் தாரளமாய்க் கடன் கொடுக்குது.‘‘

‘‘வங்கியில கடன் பெற்று படிச்சி வேலையில சேர்ந்து அதை அடைக்கலாம். ஆனா நான் படிப்பு சம்பந்தமா பையன் மேல கடன் சுமையைத் திணிக்க விரும்பலை. நாளைக்குப் புள்ளையை நான்தான் நல்லவிதமா வளர்த்து படிக்க வைச்சி முன்னுக்குக் கொண்டு வந்தேன்னு மார் தட்ட முடியாது. மாறாய் பையன்..பெத்தவங்களுக்கு கையாலாகலை. நான் என் சொந்த முயற்சிஇ உழைப்புனால சுயமாய் முன்னேறினேன்னு கேவலமாய்ப் பேசலாம். அதுக்கு நான் இடம் கொடுக்க விரும்பலை. எதையும் சமாளிச்சு நினைச்சதைச் சாதிக்க எனக்குத் தெம்பு தைரியம் இருக்கு.‘‘ சொல்லி மகன் விருப்பப்படியே இன்ஜினியர் படிப்பில் சேர்த்தார். பொருளாதாரத்தைச் சமாளிக்க… அலுவலகம் விட்டு வந்து ஆறு மணிக்கு மேல் ஒரு ஜவுளிக்கடையில் கணக்கெழுதினார்.

தன் உழைப்புஇ பொருளாதாரம் மொத்தத்தையும் அன்புச்செல்வனுக்கேக் கொட்டினார். இன்னும் இரண்டு வருடங்கள் தாக்குப் பிடித்தால் பையன் ஆரம்பச் சம்பளமே முப்பதுஇ நாற்பதாயிரம். வேலை தேட வேண்டியதில்லை கொத்திக் கொண்டு போக கல்லூரி வாசல்லேயே கம்பெனிக்காரர்கள் தயாராய் இருக்கிறார்கள். இவர் நினைவெல்லாம் அப்படித்தானிருந்தது. ஆனால் காலை பதினோரு மணிக்குத் தொலைபேசி அடித்துக் கெடுத்தது.

‘‘ஹலோ ! தணிகாசலம்ங்களா ?‘‘

‘‘ஆமா….‘‘

‘‘நான் வ.உ.சி பொறியியல் கல்லூரி முதல்வர் பேசுறேன். நீங்க உடனே வந்து என்னைச் சந்திக்கனும்.‘‘

இவர் ஏன்இ என்னஇ ?…எதற்கு என்று கேட்டு சரி சொல்வதற்குள் எதிர்முனை துண்டிக்கப்பட்டுவிட்டது.

அலுவலகத்தில் விடுப்பெழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார். செய்தி அதிரிச்சி.

அமர்ந்திருந்த தணிகாசலதிற்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை.

‘‘செண்பகம் !‘‘ அழைத்தார்.

‘காலையில போய் சாயந்தாரம் திரும்பற மனுசன் திடுதிப்புன்னு மூணு மணிக்கு வந்து துவண்டு உட்கார்ந்து ஏன் ஏதோ யோசனையில் இருக்கார் ? அலுவலகத்துக்கு விடுப்பு ஜீரம்இ உடல் வலியா ? இல்லே அங்கே இடிஇ மின்னல்இ பிரச்சனையா ?‘ என்று ஆளைக் கண்டதிலிருந்து கலங்கி உள்ளுக்குள் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் கணவர் குரல் கேட்டு ‘‘வர்றேன் !‘‘ வந்தாள்.

தணிகாசலம் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் ‘‘இப்புடி உட்கார் !‘‘ எதிர் நாற்காலியைக் காட்டினார்.

‘‘ஏ…ன் ?‘‘

‘‘உட்கார் சொல்றேன்.‘‘

‘விசயம் விபரீதம் !‘ அவளுக்குள் பட்டது. அமர்ந்தாள்.

தலையை நிமிர்த்தி ஒரு நிமிடம் அவள் கண்களை உற்று ஆழமாகப் பார்த்த அவர் ‘‘நான் உனக்கு என்ன பழி பண்ணினேன் நீ எனக்குத் துரோகம் செய்ஞ்சே ?‘‘ மெல்ல கேட்டார்.

செண்பகத்திற்கு அது இடியாய் இறங்கியது.

‘‘அத்தான் !‘‘ அதிர்ந்தாள். அலறினாள்.

‘‘பயம். பதற்றம் வேணாம் நான் கேட்குற கேள்விகளுக்கு மட்டும் ஒழுங்கா பதில் சொல்லு ?‘‘

‘‘……………………..‘‘

‘‘பெத்தவங்களை அழைச்சு வரச் சொல்லி உன்னை உன் பையன் எத்தினி தடவை தன் கல்லூரி முதல்வர்கிட்டே அழைச்சுப்போயிருக்கான் ?‘‘

‘பழி நம் மேலில்லை. பையன் குட்டு உடைபட்டிருக்கிறது. அதான் கேள்வி !‘ புரிய…

‘‘நாலைஞ்சு தடவை…‘‘ மெல்ல சொன்னாள்.

‘‘ஒவ்வொரு முறையும் பையன் போக்கு சரி இல்லே! படிக்கலை! மத்தவங்களைக் கலாட்டா பண்றான்! புகைக்கிறான்! குடிக்கிறான்னு புகார் அப்படித்தானே ?‘‘

‘‘…அ…ஆமா…‘‘

‘‘நீ எதையும் என்கிட்ட மறைக்க வேணாம் செண்பகம். எல்லாம் தெரியும். இன்னைக்கு அந்த முதல்வரே என்னை தொலைபேசி செய்து அழைச்சு கொட்டினார். ஒவ்வொரு முறையும் உங்க பையன் தன் அம்மாவையேக் கூட்டி வர்றான் சார். அம்மா கண்டிச்சி புள்ள திருந்த வாய்ப்;பில்லே. அப்பா கண்டிப்புத்தான் திருத்தும்ன்னு நெனைச்சி உங்க மனைவி கடைசி முறையாய் இங்கே வந்த போதுகூட…. பையனுக்கு வக்காலத்தா நீங்களே வர்றீங்க. பெத்தவர் இல்லையான்னு கேட்டேன். அவர் அலுவலக வேலையாய் வெளியூர் போயிருக்கார்ன்னு வழக்கமாய்ச் சொல்ற பதிலைச் சொன்னாங்க. நானும் விடாம நாங்க அழைக்கிறபோதெல்லாம்தான் அவருக்கு வெளியூர் வேலையா ? ஏம்மா…. புருசனுக்குப் பயந்து புள்ளைக்காக வந்து அவனைக் கெடுக்குறீங்கன்னு திட்டினேன். இப்போ விசயம் முத்திப் போச்சு. உங்களை அழைக்க வேண்டியக் கட்டாயம். அதான் அலுவலகத்துக்குப் போன் பண்ணி உங்களை அழைச்சேன்னு கொட்டினார்ம்மா ‘‘. நிறுத்தினார்.

செண்பகத்திற்;கு அடிவயிறு கலங்கியது.

‘‘இன்னைக்குக் காலை கல்லூரி நுழைஞ்சதுமே ஒருத்தனோட வாய்த்தகராறு. அவனைக் கை நீட்டி அடிச்சி புரட்டியிருக்கான். இவனை அப்பவே கல்லூரியை விட்டு வெளியே துரத்தியாச்சு. சஸ்பெண்ட் நிலையில நிக்கிறாங்க. சொன்னார். எனக்குப் பகீர்ன்னு ஆகிப்போச்சு.. அவர் கால்ல விழாத குறையாய்க் கெஞ்சி நான் கண்டிச்சா திருந்திடுவான் சார். இந்த ஒரு தடவை மன்னிச்சு விடுங்க. அடுத்து திருந்தாமல் போனால் நீங்க என்ன தண்டனைக் கொடுத்தாலும் நான் குறுக்கே வரமாட்டேன்இ ஒப்புதல்ன்னு சொல்லி நிறுத்தி வந்திருக்கேன். இவன் முத்தி… செய்கை இந்த அளவுக்குப் புரையோடிப் போனதுக்குக் காரணம் நீ என்கிட்ட சொல்லாமல் விட்டது. ஏன் மறைச்சே…? நான் புள்ளைக்கு நல்ல தகப்பனாய் மனைவிக்கு நல்ல கணவனாய் இருக்கும்போது நீ இப்புடி மறைச்சி பையனைக் குட்டிச் சுவராக்கியது நியாயமா ? வாலிபக் கோளாறு வயசுப் புள்ளைங்க தவர்றதுங்குறது இயல்பு. அதை சரியான நேரத்துல கண்டிச்சிஇ தண்டிச்சி சரி செய்தா திருந்துவாங்க. மறைச்சி தப்புப் பண்ணிட்டே ஏன் ?‘‘

‘‘உங்க கண்டிப்புல கடுமை காரம் இருக்கும். வயசுப் புள்ள மானம் அவமானம் தாங்க முடியாம ஓடிப்போறதுஇ தற்கொலை அது இதுன்னு தவறான முடிவு எடுத்துட்டான்னா நாம ஒத்தப்புள்ளையையும் இழந்துடுவோம்ங்குற பயம்ங்க.‘‘ கமறினாள்.

‘‘ஓ.கே. உன் நெனப்பும் சரி. கல்லூரிக்குப் போய் வந்த பிறகு அவன் குறைகளைத் தட்டிக் கேட்டு கண்டிச்சியா ?‘‘

‘‘செய்தேங்க….‘‘

‘‘பையன் திருந்தலை. ஏன்….? உன் கண்டிப்புல கடுமை காரம் இல்லே. எந்த தாய் கண்காணிப்பு கண்டிப்புலேயும் அது இருக்காது, காரணம்…. பத்து மாசம் சுமந்து பெத்த பாசம். செண்பகம் ! பையனோ பொண்ணோ படிப்பு காலத்துலதான் பெத்தவங்களைச் சரியாய் உபயோகப் படுத்திக்க முடியும். நம்ம பையனைக் காசைப் பார்க்காம கான்வென்டுல படிக்க வைச்சோம்.. அங்கே உள்ள கண்டிப்பு கட்டுப்பாட்டில் பத்தாம் வகுப்பில் திருப்தியாய் மதிப்பெண்கள் எடுத்தான். அடுத்து பன்னிரண்டாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு மாறினான். வயசு… கண்டிப்பு கட்டுப்பாட்டை மீறி கொஞ்சம் சுதந்திரமாய்ப் படிச்சான்…..மதிப்பெண்கள் குறைவு தொழில் படிப்புல நுழைய திணறல். நான் என்ன செய்ஞ்சேன் ? என் பொருளாதாரத்தால உன்னை முன்னேத்துறேன் புடிச்சுக்கோன்னு மனசுல பதியற மாதிரி சொல்லி நம்ம வீட்டை அடகு வைச்சு அவன் விருப்பப்படி படிக்க வைச்சேன். புடிச்சிருக்கனும், புடிச்சுக்கலை. வயசு சேர்மானம் ஆயிரம் காரணங்கள். நீ என் காதுல போட்டிருந்தீன்னா எப்படி கண்டிக்கனுமோ அப்படிக் கண்டிச்சு திருத்தியிருப்பேன். தவறிட்டே. இப்போ பையன் திருந்தனும் என்ன செய்ய ?‘‘

செண்பகம் பேசவில்லை.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த அன்புச்செல்வன் அம்மாவும் அப்பாவும் ஓரு சேர அமர்ந்திருப்பதைக் கண்டு பயந்து அவர்களைக் கவனிக்காதவன் போல் சென்று அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தி கட்டிலில் அமர்ந்தான்.

இவர்களும் அவன் சென்றதைக் கவனித்தார்கள்.

தன் ஒட்டு மொத்த உழைப்பும் வீணாகிப் போய்விட்ட துடிப்பு. தணிகாசலத்திற்கு ஆளைப் பார்த்ததுமே ஆத்திரம். பலாத்கார கண்டிப்பு அநாகரீகம் விபரீதம் புரிய….. அவைகளை அப்படியே அடக்கினார். எப்படி என்ன வழியில் திருத்த ? தரையைப் பார்த்து யோசனையில் இறங்கினார்.

புயல்.. என்ன வேகத்தில்;இ எப்படி வீசப்போகிறது ? செண்பகம் நெஞ்சுக்குள் பயம் படபடப்பை ஏற்படுத்தியது.

அதே சமயம் தணிகாசலத்திற்குள் பொரி தட்டியது. சுவாமிமலை மனதில் வந்தது, அங்கு சிவபெருமான் கைகட்டி வாய்ப்பொத்தி சிறுவனான தன் மகன் முருகன் முன் நிற்கும் காட்சி கண்களில் விரிந்தது. அடுத்து தாம் செய்ய வேண்டுவது சட்டென்று தெரிய….. சரியா ? அலசினார்.

அவ்வளவு பெரிய கடவுளே சிறுவனான தன் மகனுக்குச் சிறுசாகிப் போய் தணிகையில் தாம் தணிவதில் தவறில்லை தெளிந்தார். எழுந்து மகன் அறையை நோக்கி நடந்தார்.

செண்பகத்திற்குள் படபடப்பு பதற்றமாக மாற….‘‘ கோபம் ஆவேசம் வேணாங்க..‘‘ தணிகாசலம் காதுக்கு மட்டும் கேட்கும்படி கெஞ்சி அவரைத் தொடர்ந்தாள். கதவைத் திறந்து அவர் அறைக்குள் நுழைய இவளும் நுழைந்தாள்.

பெற்றவர்களைப் பார்த்த அன்புச்செல்வன் திடுக்கிட்டு கட்டிலைவிட்டு எழுந்து நின்று தலை குனிந்து கைகளைப் பிசைந்தான்.

தணிகாசலம் மகனை ஒரு விநாடி உற்றுப் பார்த்தார்.

‘‘நீ செய்ஞ்ச காரியம் எல்லாம் எனக்குத் தெரியும். உன் இன்னைய நிலையும் எனக்குத் தெரியும். கல்லூரியைவிட்டு துரத்தி இருக்காங்க. நாளைக்கு நீக்க ஏற்பாடு, நீ அதைப் பத்தியெல்லாம் கவலைப் பட்டோ படாமலோ ஊர் சுத்தி திரும்பி இருக்கே. நீ இந்த தப்பு தவறையெல்லாம் ஏன் செய்ஞ்சே! எதுக்குச் செய்ஞ்சே கேட்டு உன்னைச் சங்கடப்படுத்தி நேரம் காலத்தை வீணடிக்க விரும்பலை. இப்போ நீ திருந்தனும். கெட்டதெல்லாம் ஒதுக்கி நல்லவனாகி நல்ல படிப்பு படிச்சு முன்னேறனும். உன் திருத்தத்துல என் சுயநலமும் இருக்கு. என் ஒட்டு மொத்த உழைப்பு! பொருளாதாரம்! ஆசை! கனவு! லட்சியம்! எல்லாத்தையும் கொட்டி என் மூலதனமே நீயாய் மாத்தி இருக்கேன். நாளைக்கு அந்த மூலதனம் கெட்டு அழிஞ்சுப் போனால் நானும் தெருவில் நிப்பேன். எனக்குக் கழுத்தை நீட்டி உன்னைப் பெத்த குத்ததுக்காக என் மனைவி – உன் அம்மாவும் தெருவில் நிப்பாள். இதெல்லாம் வேண்டாம்ங்குறது என் ஆசை.‘‘

‘‘தோளுக்கு வளர்ந்த மகன் தகப்பனுக்குத் தோழன் இணைஇ துணை. வயசுக்கு வந்த புள்ளையை அடிச்சு உதைச்சு கண்டிக்கிறது அநாகரீகம். வன்முறை சரியும் கிடையாது. ஆகையினால நீ திருந்த நான் ஒரு காரியம் பண்ணப் போறேன். எனக்கு இதைவிட்டா வேற வழியும் தெரியலை. நீ இதுல திருந்தனும். இதுலேயும் நீ திருந்தலைன்னா படைச்ச கடவுள்கிட்டகூட உனக்கு மன்னிப்பு கிடைக்கிறது கஷ்டம் கெடைக்காது, ஏழேழு ஜென்மத்துக்குக் கடைத்தேறவும் முடியாது. உன் வளர்ப்புல எனக்கு தப்பிருந்தாலும் பேச்சுல தவறிருந்தாலும் மன்னிச்சு திருந்திடு.‘‘ சொல்லி அடுத்த விநாடி யாரும் எதிர்பாராமல் நெடுங்சாண்கிடையாக தரையில் விழுந்து மகன் பாதங்களைப் பற்றினார்.

செண்பகம் ‘‘அத்தான் !!‘‘ பதறி அலறினாள்.

அன்புச்செல்வனுக்கு அதிர்ச்சி. பிடரியில் பொளேரென்று அறை விழுந்த உணர்வு.

‘‘அப்பா….ஆஆ !!‘‘ துடித்து அப்படியே மடிந்து அமர்ந்து ‘‘அப்பா ! பண்ணக்கூடாத காரியம் பண்ணி என்னைச் செருபாலடிச்சுட்டீங்க. இனி நான் இந்த நிமிசம் விநாடியிலேர்ந்து நல்ல புள்ளை. திருந்திட்டேன். மறந்தும் தப்பு தவறு செய்ய மாட்டேன். எழுந்திருங்க‘‘ என்று கதறி அவர் கைகளைப் பிரித்து முடியாமல் ‘‘ஐயோ… அப்பா ! அப்பா !….‘‘என்று முகத்தில் அறைந்து கொண்டு அழுது அப்படியே அவர் முதுகில் கவிழ்ந்து அழுதான்.

செண்பகத்திற்கும் தாங்க முடியவில்லை.

‘‘புள்ள திருந்திட்டான் மன்னிச்சுடுங்க. எழுந்திருங்க‘‘ அவளும் அவர் அருகில் அமர்ந்து எழுப்பி அழுதாள்.

தணிகாசலம் திருப்தியாக எழுந்து அமர்ந்து இருவரையும் இரு கைகளால் அணைத்தார். அதே சமயம் அவருக்குள்ளும் உணர்ச்சிப் பிரவாகம் கண்களில் நீர் வழிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *