கம்பன் கஞ்சனடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 7,191 
 
 

யாரும் பார்க்காத நேரமது சட்டென மணமகனை தள்ளிவிட்டு மணமகள் தலைதெறிக்க ஓடினாள். மண்டபவமே திடுக்கிட்டது. மணகோலத்தில் நடந்து வந்துகொண்டிருந்தவள் திடிரென ஓட்டமெடுக்க காரணமென்ன என புலம்பியபடியே கண்ணாடி முன் நின்று யோசித்து கொண்டிருந்தாள் பர்வதம்.

அச்சமயம் “மா! மா! அம்மா” என வாசலில் நின்று கத்தி கொண்டிருந்தான் பலதேவா.

“டேய் என்னடா பிரச்சனை” என்று வினவியபடியே வந்தாள்.

“எதுக்கு மா கார்லாம் புக் பண்ணிருக்க ஆட்டோல போய்ட்டு வந்துருக்கலாம்ல”

“டேய் மானத்த வாங்காத டா வாடா” என்றாள் அவன் தாய் பர்வதம்.

நடுவே பலதேவன் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துட்டு “டேய் இதுதான் கடைசி இதுக்கு மேல எங்களுக்கு தெம்பில்ல பேசமா சந்நியாசி ஆகிறு” என சிரித்து கொண்டே காரின் பின் சீட்டில் அமர்ந்தாள் பலதேவனின் அக்காள்.

“உங்களுக்குளாம் என்ன பார்த்த நக்கலா இருக்கு ம்ம்” என கடுகடுத்துக் கொண்டே பார்த்தான் பலதேவன்.

“என்னப்பா போலமா” என அவன் முதுகில் தட்டிவிட்டு காரின் முன் சீட்டில் ஏறினார் அவன் அப்பா பரந்தாமன்.

வண்டி புறப்பட்டது வழி நெடுக ஒரே புலம்பல். புலம்பி கெட்ட குடும்பம் போலும். “இந்த இடமாவது நல்லபடியா அமையனும் அதுக்கு அந்த காமாட்சி தான் அருள் புரியனும்” என்றாள் பர்வதம்.

“மா இதுவரைக்கும் இவனுக்கு 12 பொண்ணுங்கள பாத்துருக்கோம்…

அதுல 5 பொண்ணுங்க இவன பிடிக்கலனு சொல்லிருச்சுக …

4 ஜாதகம் சரில்ல 2 நிச்சயதார்த்ததோட முடிஞ்சு..

இன்னும் 1 கல்யாணம் வரைக்கும் போய் நின்றுச்சு..

எனக்கு என்னமோ இவனுக்கு கல்யாணம் ஆகும்னு நம்பிக்க இல்ல” என படபடவென பொறிந்தாள் பலதேவனின் அக்காள்.

“மா இவள பேசாம வர சொல்லு” என எச்சரித்தான் பலதேவன்.

“அடியேய் சும்மா இரேன்டி”

“ஏனடா இந்த லவ் கிவ் பண்ணி எங்காவது ஓடகூடாது ஆனா அதுக்கும் உனக்கு திறமை இல்ல, வேஸ்ட் பெல்லோடா நீ”

“மாஆஆஆஆஆ” என மறுபடியும் ஒரு எச்சரிக்கை குரல்.

பரந்தாமனும் திரும்பி முறைப்பு காட்ட ஒருவாறு பேச்சு அடங்கியது சேர வேண்டிய இடமும் வந்தது.

வாசலிலே நல்ல வரவேற்பு, பெண்னை பெற்றவளும் வளர்த்த தமையனும் வாய் நிறைய வாங்க என்று அழைத்து குசலம் விசாரித்தனர்.

“சடகோப தரகர் தான் சொன்னாரு போட்டோலே பிடிச்சு போச்சு அதான் வந்துட்டோம்” என்றார் பரந்தாமன்.

“ரொம்ப சந்தோஷம்ங்க!

மா காப்பி டிபன்” என்றபடி அம்மாவை பார்த்தான்.

குணவதியின் அம்மாவும் காப்பியுடன் கொஞ்சம் மிக்சரும் வைத்து கொடுத்து கொண்டே வந்தாள் கடைசியாக மாப்பிள்ளையிடம் வந்தாள்.

“ம்ஹூம் நான் காப்பி டீ லாம் சாப்புடுறது இல்லங்க”என மிக்சரை மட்டும் எடுத்துக்கொண்டு நெளிந்தான் பலதேவன்.

“ஆமாங்க என் பிள்ளைக்கு காப்பி டீ மட்டுமில்ல வேற எந்த கெட்ட பழக்கமும் இல்ல இந்த வயசுலே அநாவசியமா எதும் செலவழிக்கமாட்டானா பாத்துக்கோங்க! நிறையா சேர்த்து வைப்பான் கொஞ்சம் கஞ்சம் தான் ஆனா தனக்கு மனைவியா வர போறவளுக்கு நிறையா இப்பவே சேர்த்து வச்சுருக்கான்” என தன் மகனை பற்றி ஒரு நீண்ட புகழ் பாடினாள் எல்லாம் குட் புக்ஸில் இடம் பெற தான்.

மெள்ள பர்வதம் காதில் வந்து கிசுகிசுத்தான் “மா நீ பொண்ணு பாக்க வந்தியா இல்ல என்ன அசிங்கப்படுத்த வந்தியா…

இப்ப எதுக்கு இதலாம் உளறிட்டு இருக்க”

“டேய் நீ சும்மா இருடா” என மகனின் தொடையில் கிள்ளினாள்.

“ஏங்க பொண்ணு ஊருக்கு எதும் போய்ருக்காங்களா!

ஏன்னா… ஆபிஸுக்கு 2 அவர் தான் பர்மிஷன் போட்டுருகேன் லேட்டா போனா லாஸ் ஆப் பே ஆகிரும் அதான் கேட்டேன்” என பரபரத்த குரலில் கேட்டான் பலதேவன்.

“டோட்டல் டேமேஜ்…

இவன எதுக்குமா கூட்டிட்டு வந்த”

என பர்வதத்தின் காதாண்டே முனங்கினாள் அக்காள்.

“அப்படிலாம் ஒன்னுமில்லங்க பொண்ணு இங்க தான் இருக்கு..

இந்தா வர சொல்ரேன்…

மா” என கண்ணசைவிலே அன்னையிடம்

சொன்னான் அண்ணன்.

மெல்லிய கொளுசின் இனிய ஓசை, மல்லிகையின் மயக்கும் மன்மத வாடை என அவள் வரும் முன்னே அவ்விடம் கொஞ்சம் சிலிர்த்தது. எலுமிச்சை மஞ்சள் பட்டு புடவையில் அகண்டு சிவந்த சிவப்பு ஜரிகை. முந்தானையின் சரி பாதியை அவள் கார்கூந்தல் அளந்தது, இடுப்பு சீலையின் இடத்தே சில சுருக்கங்கள் ஓளிந்திருந்தன அநேகமாக இதை மூன்றாவது முறையாக உடுத்திருப்பாள். தொண்டை குழியின் நடுவே அந்த சிறிய மச்சத்தின் இடயே வியர்வை முத்துகள் வழிந்தோடின. மாதுளை செவ்விதழ்கள் சிவக்க மூக்குத்தியின் சுடெரொளியில் அவள் கயல்கள் நஞ்சு குழம்பாக மின்ன கதவோரம் கடைக்கண் பார்வை கொண்டே வந்தாள். கண்ணுக்கிட்ட காஜல் இரு புருவம் இணைக்க வைத்த கோபால பொட்டு வகுந்தெடுக்காத மயிரிழையின் நடுவே அந்த சுட்டி காதோரம் ஆட்டமிட்ட ஜிம்மிக்கி என அவள் ரதி வதனம் அவளை தேவலோக கண்ணிகை போல காட்சிப்படுத்தியது.

இராமனே அவளை பார்த்திருந்தால் கொஞ்சம் சபலப்பட்டிருப்பான் சூர்ப்பனகையை கண்டதுபோல் இவனோ அற்ப மானுடன் தானே நஞ்சை வெகுவாக அவன் உள்ளத்தில் பாய்ச்சி கொண்டான்.

பலதேவன் விஷம் குடித்தவன் போல துடிதுடித்தான். எத்தனையோ பெண்களை பார்த்திருக்கிறான் ஆனால் இவளை போல எவளும் அவன் மனதில் நஞ்சை செலுத்தியதில்லை. அது உண்மையிலே ஒரு ரசாயன மாற்றம் தான் எங்கோ தலைக்குள் முனுமுனுத்து கொண்டே இருக்கும் ‘இவள் எனக்கானவள்’ என்று.

“பொண்ண நல்ல பாத்துக்கடா அப்புறம் நான் சரியா பாக்கலனு சொல்லிராத” எனக் கூறி பரந்தாமன் ஓங்கி சிரித்தான்.

“நீயும் தான்மா மாப்பிள்ளைய நல்லா பாத்துக்கோமா… மாப்பிள்ளைய பிடிச்சிருக்குல” என எதோ கவலை தொனித்த குரலில் கேட்டான் குணவதியின் அண்ணன்.

“நான் அவர்ட்ட தனியா பேசனும்” என கவ்விய குரலில் கூறினாள் குணவதி.

சட்டென அவள் தாய்க்கு என்ன சொல்வதென தெரியவில்லை குணவதியை பார்த்து முறைத்தாள்.

“இதுல என்ன இருக்கு பேசட்டும் நாளபின்ன வாழபோறவங்க…

போடா போய் பேசிட்டு வா” என அதட்டினார் பரந்தாமன்.

நடுவே “மா! இந்த பொண்ணும் இவன பிடிக்கலனு சொல்ல போது” என பர்வதம் காதில் எச்சரித்தாள் பலதேவன் அக்காள்.

இப்போது இருவரும் தனிமையில். ஒரு நிமிடம் நீண்ட நிசப்தம். குணவதியே பேச்சை தொடங்கினாள்.

“என்ன பிடிக்கலனு சொல்லிறீங்களா!”

பலதேவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்.

“ஏங்க என்ன பிடிக்கலயா”

“இல்ல, அப்படிலாம் ஒன்னுமில்ல”

“பின்ன ஏங்க அப்படி சொல்ல சொல்றீங்க!

வேற யாரயாவது லவ் பண்றீங்களா?”

“இல்லங்க! பிடிக்கலனா பிடிக்கலனு சொல்லுங்களேன்”

“அப்படிலாம் சொல்லமுடியாது… எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு…”

“புரிஞ்சுகோங்க ப்ளீஸ்”

“நோ… நான் போய் உங்கள பிடிச்சிருக்குனு சொல்ல போரேன்” என கூறி கதவோரம் வந்தான் திடிரென குணவதியின் குரல் தடுத்தது அதை கேட்காமலே சென்றிருக்கலாம் ஆனால் கேட்டுவிட்டான்.

“எனக்கு ஏற்கனவே கல்யாணமாகிறுச்சு” என சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கின.

“என்னது புரில”

ஆம் அவளுக்கு கல்யாணமாகிவிட்டது. கல்யாணமாகி பின்பு தாயாகி இப்போது தனியாகி நிற்கிறாள். நூற்றில் பத்து பெண்களுக்கு நடக்கும் கதை தான் அது கடைத்தெருவில் சீலை எடுக்க நூறு கடையேறி இறங்கும் பெண்கள் தன்னவனை தேர்ந்தெடுக்கும் போது அந்த ஆண்ணின் மனதை கூட ஏறி பார்த்ததில்லை பார்ப்பதுமில்லை பார்க்கபோவதுமில்லை. அவள் கதையை அவள் வாயால் சொன்னால் அவள் மனம் ஆறுதலடையும். ஆகயால் அவளே சொல்லட்டும். தொண்டையில் வார்த்தை வராமல் சிக்கிய போதும் மடையை திறந்து அனைத்தையும் கொட்டினாள்.

“ஆமா! எனக்கு கல்யாணமாச்சு மூனு வருஷத்துக்கு முன்னாடி அம்மா அப்பா ஆசை ஆசையா பண்ணி வச்சாங்க…

நானும் ரொம்ப சந்தோஷமா தான் இருந்தேன் ஒரு ஆறு மாசம் அப்புறம் இன்னும் சந்தோஷமா…

ஏன்னா அப்ப நான் இரண்டு உயிரா இருந்தேன் ஆன எதிர்பாராத விதமா என்னோட இன்னொரு உயிரு என்னோடையே போயிருச்சு…

அப்ப ஆரம்பிச்சது தான், ஒரு வருஷம் வரைக்கும் போச்சு அப்புறம் சுத்தமா நின்றுச்சு கோர்டே அத செஞ்சிருச்சு…” இப்போது அவள் கண்ணீர் அவள் மூக்குத்தியின் வழியே வழிந்து வியர்வையுடன் கலந்தது.

“இப்பலாம் எனக்கு ஆம்பளைங்கனாளே ஒரு வெறுப்பு, அவங்ககுள்ள ஒரு பேய் இருக்கு அது ஒரு சந்தேக பேய்….

பின்ன! சந்தேகப்படுற ஆம்பளயவே கடவுளா வச்சு கும்பிட்டா அப்படி தான இருப்பாங்க….

போதும்ங்க இதுக்கு மேல எதுவும் வேனாம். எங்க வீட்ல இதலாம் சொல்லியிருக்க மாட்டாங்க. உங்களுக்கு கண்டிப்பா ஒரு நல்ல பொன்னு கிடைப்பா. என்ன வேணாமுனு சொல்லிருங்க ப்ளீஸ்…” என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் அழட்டும் சுமார் மூன்றாண்டுகள் தேக்கி வைத்ததெல்லாம் கொட்டி தீர்க்கட்டும். இனி அவள் கண்களில் கண்ணீர் வரத்தின்றி வறண்டு தான் போகட்டுமே.

அவள் சொன்னதெல்லாம் அவனை என்னனவோ உண்டு பண்ணியது. தீர்க்கமாக அவனுக்குள் ஒரு முடிவு இல்லை. மெள்ள வந்து அமர்ந்தான் கொஞ்சம் தண்ணீர் கேட்டான். இதன் நடுவே பர்வதம் காதுகளில் வந்து கிசுகிசுத்தாள் அவள் மூத்த மகள் ‘மா பொன்னு வந்து பிடிக்கலனு சொல்லும் பாரு’.

குணவதியின் அண்ணன் கொஞ்சம் இறங்கி “மாப்பிள்ள பொண்ண பிடிச்சுருக்கா?” என்றான்.

கொஞ்சம் அமைதி நிலவியது. மீண்டும் கேட்டான் அண்ணன். எல்லோரும் ஆவலுடன் இருந்தனர். ஒரு வழியாக ஒரு பெரு மூச்சு விட்டு தயாரானான்.

“இந்த கல்யாணதுல எனக்கு இஷ்டமில்ல!

உங்க பொண்ண எனக்கு பிடிக்கல…

மா வா போலாம்” என சரமாரியாக பதிலளித்துவிட்டு சென்றான்.

வாசலில் நின்று திரும்பி பார்த்தான் உட்கதவோரம் விரக்திசிரிப்பை உதிர்த்தபடி அவனை பார்த்துக்கொண்டிருந்தாள் குணவதி. சீதையை பார்த்த இராமனை போல அந்த பார்வை ஆயிரம் கதைகள் சொன்னது.

மெள்ள நாட்கள் சென்றன. சுமார் பதிமூன்று நாட்கள் கடந்துவிட்டன. அது ஒரு மாலை பொழுது. குணவதியின் வீட்டு கதவு தட்டப்பட்டது வாசலில் அவன் தான் பலதேவன். அவனை பார்த்தவுடனே கோபாக கேட்டாள் அவள் அம்மா “பிடிக்கலைனு போனிங்க இப்ப எதுக்கு வந்திங்க”

“எனக்கு எல்லா உண்மையும் தெரியும், இன்ஃபாக்ட் என்ன பிடிக்கலனு சொல்லிருங்கனு சொன்னதே உங்க பொன்னு தான்”

இதை கேட்ட அந்த நிமிடமே ஸ்தம்பித்தாள் குணவதியின் தாய். மேற்கெண்டு பேச அவள் வாய் வரவில்லை.

பின்பு குணவதியிடம் தனியாக பேசவேண்டுமென வேண்டுகோள் விட்டான் கோள் கிடைத்துவிட்டது போலும் அன்று பேசிய அதே அறை காத்து கொண்டிருந்தது. பலதேவன் இரண்டு கட்டையில் பேச ஆரம்பித்தான்.

“என்னடா அன்னைக்கு பேசாமா போனவன் இன்னைக்கு வீடு தேடி வந்துருக்கேனு பாக்குறீயா…

சத்தியமா! என்னால முடியல அன்னிக்கு நீ சொன்னத சொன்னேனே தவிர என் அடிமனசுல இருந்து அத நான் சொல்லல…

எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு என்ன கல்யாண செஞ்சுகிறியா???

ம்ம் செஞ்சுகிறியா..

என்ன கஞ்சம்னு அம்மா சொல்லிருப்பாங்க. ஆமா! நான் கஞ்சம் தான். என் மூளவேன கஞ்சமா இருக்கலாம் ஆனா என் மனசு கஞ்சமில்ல அதுல எந்த வஞ்சமுமில்ல… உன் பதிலுக்காக தான் காத்திருக்கேன் சொல்லு”

இதை கேட்ட அவளுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை நவரசத்தை தாண்டி தசரசத்தை எதும் முயற்ச்சித்தாளோ என்னவோ அவனை இன்னும் ஏறெடுத்து அவள் பார்க்கவில்லை. அவள் அடர்குழல் தவிர அவனுக்கும் ஒன்றும் தெரியவில்லை பெண்களை நேருக்கு நேர் பார்த்து பேசும்போதே அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாதபோது அவள் பின்னழகை கொண்டு என்ன கனித்துவிடமுடியும். ‘என்ன கல்யாணம் செஞ்சுகுறியா’ என்ற வார்த்தை அவள் காதுகளை சுற்றி வட்டமிட்டு எதிரொலித்த காரணத்தினால் தானோ அவன் பிற்பாடு கூறியதை அவள் காதுகள் கேட்க தவறிவிட்டது. அது மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் எதிரொலித்து மந்தமாக்கியது. ஆனால் அவன் மறுபடியும் இசைத்தான் “என்ன கல்யாணம் செஞ்சுகுறியா”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *