(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
குளியலறைக்குள் கிழவர், தலையில் பாதி தரையில் பாதியாகத் தண்ணிரை ஊற்றிக் கொண்டிருந்தபோது, அவரது எட்டு வயதுப் பேரன் செல்வம், கதவை இடித்துக் கொண்டிருந்தான்.
“தாத்தா, சீக்கிரமாய்க் குளிச்சு முடியுங்க. மார்னிங் ஷோவுக்கு டயமாயிட்டுதுன்னு மம்மி சொல்றாங்க…”
கிழவர் காதில் பேரன் சொல் எடுபடவில்லை என்றால், அவுன் குளியலறைக் கதவை அடித்த வேகத்தில் எழுந்த சத்தந்தான் காரணம். அவர் நிதானமாக முதுகைத் தேய்த்துக் கொண்டிருந்தார். பேரன், கதவை ஓங்கி ஓங்கிக் குத்தினான். சினிமாவுக்குச் சீக்கிரமாய்ப் போக முடியவில்லையே என்கிற ஆத்திரம் குத்தாகவும், அம்மாவைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஆசை சத்தமாகவும் கதவில் ஒலித்துக் கொண்டிருந்தது. கமலா பொறுமை இழந்தவளாய் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். டம்பப் பையை அங்குமிங்குமாக ஆட்டினாள். அவள் வேகத்துக்கு ஈடுகொடுப்பது போல், பையன் பலமாகக் கத்தினான். மகனைப் பார்த்து, “கதவுக்கு ரோஷம் வந்து உடஞ்சிடப் போவுதுடா. அதுகூட ரோஷம் தாங்காம உடஞ்சிடும். ஆனால் மனுஷங்களுக்குத்தான் ஒண்ணுங் கிடையாது.” என்றாள். அவள் நல்லவள். என்றைக்குமே மாமனாரை நேரடியாகத் திட்டமாட்டாள்.
அவள் குரல் நின்றபோதே, குளியலறைக்குள் தண்ணிரின் சலசலப்புச் சத்தமும் நின்றது. நையாண்டி மேளம் மாதிரி ஒலித்த கதவின் சத்தத்தையும், குழாயின் இரைச்சலையும் மீறி வேகமாக ஒலித்த மருமகள் காரியின் குரல் வெம்மையில் குளிரை மறந்தவராய், கிழவர் அவசர அவசரமாகத் துண்டை வைத்துத் தலையைத் தேய்த்துக் கொண்டே வெளியே வந்து ஒர் ஒரமாக உட்கார்ந்திருந்தார்.
மருமகள்காரி, ஒரு தட்டில் சோற்றைப் போட்டு வேகமாகத் தரையில் வைத்தாள். கிழவர் சோற்றைப் பிசைந்தார். உப்பு கொஞ்சம் குறைவாகத் தோன்றியது. கேட்க நினைத்தார். பிறகு அந்த நினைப்பைச் சோற்றுடனேயே உள்ளே விழுங்கினார். அவள் பேச்சைக் கேட்டு உயிரை விடும் அளவிற்கு ரோஷம் இல்லாத தனக்கு உப்பு எதற்காக என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். தட்டில் இருந்த இரண்டே இரண்டு துண்டு உருளைக்கிழங்கை ஒதுக்கி வைத்தார். அவருக்கு ஒத்துவராது. வாயுக் கோளாறு. இது போதாதென்று மூலநோய் வேறு. ஒரு சமயம் டாக்டர் அவரைக் கருணைக்கிழங்கைச் சேர்த்துக் கொள்ளும்படி கூறினார். மகன்காரனின் ஆணைப்படி அவள் ஒருநாள் கருணைக்கிழங்கை, பாதித் தோலை உரிக்காமலே சமையல் செய்து போட்டாள். வாயெங்கும் எரிச்சல். ஆனால் மறுநாள் வயிறு சரியானது.
மறுவாரமும் கன வணின் கட்டாயத்தில் அவள் கருணைக்கிழங்கைச் சமைத்தாள். அந்தச் சமயத்தில் பேரன் செல்வம், “மம்மி, இன்னைக்கு ஸ்கூலுக்குப் போனா டீச்சர் வெளியேதான் நிக்க வைப்பாங்க. நீங்க எனக்கு இன்னும் டிரஸ் பண்ணல. நான் போகமாட்டேன்,” என்று ஆனந்தமாய்ப் பள்ளுப் பாடினான்.
“நான் என்னடா பண்றது? இந்த வீட்ல ரெண்டு வகைக் குழம்பு வைக்க வேண்டியதிருக்கு. அதுக்கே நேரம் போதல. உனக்கு எப்படி டிரெஸ் பண்ண முடியும்? கருணைக்கிழங்கு இல்லாட்டா செத்தா போயிடுவாங்க?”
கருணையில்லாத அந்த வார்த்தையைக் கேட்ட கிழவரின் வாய்க்குள் அதன் பெயரைக் கொண்ட அந்தக் கிழங்கு இறங்க மறுத்தது. மருமகளிடம் உடம்பு சுகமாகிவிட்டதாகவும், கருணை போதும் என்றும் கலங்கிய கண்களைத் தாழ்த்திக் கூறிவிட்டார்.
கிழவர் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லை. கமலா கைகளை நெறித்தாள். இன்று சினிமாவுக்குப் போனது மாதிரிதான். கடியாரத்தைப் பார்த்தாள். கிழவர் தட்டில் மீதமிருக்கும் உணவைப் பார்த்தாள். அவள் மகனுக்கு விஷயங்களை அறிவதில் ஆர்வம் அதிகம்.
“மம்மி, அந்தச் சினிமாவுல ஃபைட் இருக்குமா?” “நீயும் ஏண்டா என் பிரானனை வாங்குற? முதல்லே சாப்பாட்டோட நடக்கற ‘பைட்டு எப்போ முடியுதுன்னு பார்ப்போம். தலைவிதி ஒரு நாளாவது சரியான டயமுக்கு போக முடியதா?”
“டயம் ஆகுது மம்மி,” “உனக்குத் தெரிகிறது. எல்லாத்துக்குந் தெரியணுமே. இவள் எதுக்காக வெளியே போகணும்னு நினைச் சே காரியம் நடக்கும்போது நான் என்னாத்த பண்ணித் தொலைக்கிறது?”
கிழவரால் மேற்கொண்டு சாப்பிட முடியவில்லை. சாப்பாட்டை வைத்துவிட்டால், ‘எதுக்குக் குறைச்சல் இருந்தாலும் ரோஷத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை, என்பாள். அல்லது, இங்கே என்ன கொட்டியா கிடக்குது. போடும்போதே போதுமுன்னு சொல்றது. என்பாள்.
என்ன செய்வது? அவசர அவசரமாகச் சாப்பிட்டார். நொறுங்கத் தின்று நூறு வயசு வாழவேண்டாம் என்று அந்த எழுபது வயது பிராணன், உணவை உருண்டை உருண்டையாகப் பிடித்து உள்ளே போட்டுக் கொண்டது. துக்கத்தைப் போல், சோறும் தொண்டையை அடைத்துக் கொண்டது.
துக்கத்தைக் கண்ணிராலும், தொண்டைக்குள் விக்கிய உணவுக் கட்டியைத் தண்ணிராலும் கழுவிக் கொண்டிருந்தார்.
கடியாரத்தின் பெண்டுலம் போல் ஆடிய கைகளை வைத்துத் தட்டைக் கழுவினார். “கை காலு என்ன விழுந்தா போச்சு, எச்சித் தட்டை நான் கழுவுறதுக்கு?” என்று ஒரு நாள் மருமகள்காரி சுவரைப் பார்த்துக்கொண்டு சொன்னதைக் கேட்டதிலிருந்து அவர்தான் தட்டைக் கழுவுவார். அவள், அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே போயிருக்கலாம். என்றாலும், தட்டைக் கழுவாத அவள், அந்தத் தட்டை எடுத்து சமையலறையில் வைத்துப் பூட்டிவிட்டு, சாவியைக் கொண்டு போவதில் ஒருவித திருப்தி அடைந்தாள். கண் மங்கலான அவரிடம் எவராவது பேச்சுக் குரல் கொடுக்கும் சாக்கில், தட்டைத் தூக்கிக்கொண்டு போனால், அவள் இன்னொரு ஈயத்தட்டுக்கு எங்கே போவாள்?
தட்டுக்கெட்ட இந்த விவகாரம் முடிந்ததும் கிழவர் ஒரு மூலையில் சாய்ந்தார். கமலா, வெளியே கிடந்த ஈஸிசேரை எடுத்து பெட்ருமுக்குள் போட்டுப் பூட்டிவிட்டு, சமையலறையில் தொங்கவிட்ட பிறகு, பையையும், அதைத் துக்கிய கையையும் வீசிக்கொண்டு வெளியேறினாள்.
இந்தக் கிழவரும், எல்லோரையும் மாதிரி ஒரு காலத்தில் இளைஞனாகத்தான் இருந்தார். ஆனால் அதே எல்லோரையும் மாதிரி கண்டுக்காமல் இருக்காமல், அன்னை தந்தையை, மனைவிக்காரி எப்படிப் பராமரிக்கிறாள் என்பதைப் பராமரித்துக் கொண்டிருந்தார். போதுமான அளவு இருந்த நிலபுலன்களைக் கவனித்துக் கொண்டு, ஒரு சுயமரியாதை மனிதராகத்தான் திகழ்ந்து வந்தார். –
ஒரே மகனைப் படிக்கவைத்து, அவன் குடியுங் குடித்தனமுமாக இருப்பதை, கிராமத்தில் இருந்துகொண்டே ஆனந்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, அந்த மகன் தன்னோடு வந்து தங்கும்படி கேட்டபோது தட்டிக் கழித்தவர்தான் இவர். ஆனால் மகன் வந்து, “அப்பா, மெட்ராஸ்ல ஒரு பிளாட் வாங்கியிருக்கேன். நம்ம சொத்தை வித்து ஒரு லட்சம் ரூபாய்ல ஒரு வீடு கட்டினால் வாடகை நிறைய வரும். எனக்கும் வாங்கற சம்பளம் கட்டுபடி யாகலே,” என்று சொன்ன போது, அவன் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டார்.
வயது எழுபதைத் தாண்டியதும், அவரால் எதுவுமே இயலாமல் போனபோது, மகன்காரன் தன்னுடன் வந்து தங்கும்படி கேட்டதும், பெற்ற மகன் மடியில் தலை வைத்து, பேரப் பிள்ளையின் கன்னத்தை வருடிவிட்டுக் கொண்டே உயிரைவிட வேண்டும் என்ற பாசத்தில் வந்த பாமரன் இந்த முதியவர்.
10ணி இரண்டாகி விட்டது.
மருமகளையும், பேரனையும் காணோம். சினிமா எப்போதோ விட்டிருப்பார்களே இன்னும் ஏன் வரவில்லை? ஒரு வேளை ஏதாவது கார் மோதியிருக்குமோ? நகையைத் திருடுவதற்காகக் கழுத்தை… அடக் கடவுளே, இன்னும் ஏன் வரவில்லை? கிழவர் நிலைகொள்ளாமல் தவித்தார். வாசலுக்கும் வராந்தாவுக்குமாக நடந்தார். பேரன் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பது போலவும், மருமகள் மயக்கமடைந்து கிடப்பது போலவும் ஒர் எண்ணம். அவர் உடம்பு வியர்த்தது. உள்ளம் விம்மியது. கடவுளே, என்னை எடுத்துக் கொள், என் பிள்ளைகளை விட்டுவிடு…
திடீரென்று கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவர் சந்தோஷமாகப் போய்க் கதவைத் திறந்தார். இரண்டாவது தெருக்காரி ஒருத்தி பிரசன்னமானாள். கமலா இன்னும் வரலியா?” என்று கேட்டாள். வரவில்லையே என்ற ஆதங்க அபிநயத்துடன் அவர் கையை ஆட்டினார். “அவளோட அப்பா இன்னைக்கு மாயவரத்திலே இருந்து வர்றார். சினிமா விட்டதும் ஸ்டேஷனுக்குப் போகணுமுன்னு அவள் சொன்னது இப்பத்தான் ஞாபகம் வருது,” என்று சொல்லிக் கொண்டே அவள் போனாள்.
கிழவருக்குப் போன உயிர் திரும்ப வந்தது. மருமகளும் பேரனும் பத்திரமாக இருக்கிறார்கள் என்ற எண்ணம், பயவுனர்வைத் துரத்தியது. பயவுணர்வு போனதும், பசியுணர்வு வந்தது. கோரப் பசி. இந்நேரம் எதையாவது ஒன்றைச் சாப்பிட்டிருப்பார். மருமகள் வரவில்லை.
மணி ஆறாகிவிட்டது.
பசி கிழவரைத் தின்றது.
அதோ இதோ என்று ஏழு மணிக்கு, கமலா, தன் தந்தையுடன் வந்து சேர்ந்தாள். அவசர அவசரமாக அறையைத் திறந்து, ஈஸிசேரைக் கொண்டுவந்து போட்டுக் கொண்டே, இதில சாய்ஞ்சுக்கங்க அப்பா, என்று சொல்லிவிட்டு, ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள். அவள் தந்தை ராமநாதனுக்கு அறுபது வயது இருக்கலாம். கிழவருடன் பேசினார். ஆனால் அவருக்குப் பசி வாயை அடைத்திருப்பதை, அவருக்குப் பேச விருப்பமில்லை என்று வேறுவிதமாக எடுத்துக்கொண் டு, மகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.
மணி எட்டாகி விட்டது.
கமலா இன்னும் சமையலறைக்குள் போகவில்லை… கிழவர் வயிற்றைப் பிடித்துக் கொண்டார். அவளோ, நீங்க ஏன் தோசையை அப்படியே வச் சிட்டிங்க?’ என்று தந்தையிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். பிறரு இருவரும் மாலையில் தாங்கள் சாப்பிட்ட ஒட்டலின் தரத்தைப் பற்றியும் ஜனதா சாப்பாடு பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். கிழவர், வயிற்றில், இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டார்.
ஒருவழியாக ஒன்பது மணிக்கு, கமலா சமையலறைக்குள் போனாள். கிழவர் அந்த அறையையும் அவள் நடமாட்டத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். துடித்த வயிற்றுக்கு, ஆடும் கைகளை அணைப்புக் கொடுத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.
பத்து மணிக்கு உணவு பறிமாறப்பட்டது. “வாங்கப்பா,” என்று தந்தையைக் கனியக் கனியச் சொல்லி விட்டு, மாமனாரைத் தட்டுமுன் உட்காரும்படி எரிய எரியப் பார்த்தாள். “உங்களுக்குப் பைல்ஸ் இருக்கிறதினாலே கருணைக் கிழங்கு குழம்பு வச்சேன். புளி அதிகமாகச் சேர்த்திருக்கேன். காறாது” என்று தந்தையிடம் சொன்னாள்.
ராமநாதனுக்கு நான்கு நாள் ராஜயோகம். மகளுடனும், பேரனுடனும் பகலில் வெளியே போய்விடுவார். இதனால் கிழவர் சில சமயம் பட்டினி கிடக்க நேர்ந்தது. அவர்கள் வெளியே போகும்போதெல்லாம், அந்த ஈலிசேர் உள்ளே போய்விடும்.
ஒருவழியாக அன்று காலையில் ராமநாதன் ஊருக்குப் புறப்பட்டார். மகள் செய்து கொடுத்த இனிப்புப் பண்டங்களை ஒரு பையில் போட்டு வைத்துக் கொண்டு அதில் ஒன்றைக் கிழவருக்கு நீட்டினார். அப்போதுதான், இப்படிப்பட்ட ஒன்று வீட்டில் உருவாகியிருப்பதைத் தெரிந்த கிழவர் வேண்டாம் என்று சைகை செய்தார்.
மகள்காரி கனிவோடு தந்தையைப் பார்த்தாள். “உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்குங்க அப்பா. ஏற்கனவே உங்களுக்கு பைல்ஸ். இப்போ வாதம் வேறயா?”
‘உடம்புக்கு எப்படி இருந்தால் என்னம்மா! சீக்கிரமா ஆண்டவனோட போய்ச் சேர்ந்துடனும்.” “என்னப்பா இப்படிப் பேசுறீங்க?” “ஒன்கிட்ட சொல்லாமல் யார்கிட்ட அம்மா சொல்றது? இந்த நாலே நாள்தான் நான் இந்த வருஷத்துல வாழ்ந்த உண்மையான நாட்கள். ஊருக்குப் போனதும் நரகந்தான். உன் அண்ணிக்காரி ஒருநாள்கூட வயிறாரச் சோறுபோடமாட்டாள். தெரு நாயை நடத்துற மாதிரி நடத்துறா. உன் அண்ணன், என்னைக்காவது ஒருநாள் எனக்கு நல்ல பலகாரம் வாங்கிட்டு வந்துட்டாபோதும். அன்றைக்கு முழுதும் அவன்கூட வேற சாக்கில் சண்டைக்குப் போவாள். என்னையும் சாடைமாடையாய்த் திட்டுவாள். நான் உயிரோட இருக்கறதே தப்பும்மா.”
ராமநாதனின் கண்கள் கலங்கின. கமலா அழுதே விட்டாள். “இங்கேயே இருங்கப்பா. உங்கள ராஜா மாதிரி கவனிச்சுக்கிடுறேன்.” கேவலுக்கிடையே கூறினாள். ராமநாதன், மகள் முதுகைச் செல்லமாகத் தட்டிவிட்டுப் போய்விட்டார்.
அன்று மத்தியானம் சாப்பாடு ஆகவில்லை. கமலாவுக்கு அழுவதற்கே நேரம் போதாததால், சமையலறைக்குள் அவளால் போக முடியவில்லை. எப்படி இருந்த அப்பாவை, அந்த மூதேவி அண்ணிக்காரி இப்படி நடத்தியிருக்கிறாள்! அவள் உருப்படுவாளா? வயிறாரச் சோறுபோட மாட்டாளாமே! சாடைமாடையாய்த் திட்டுவாளாமே! அடி பாதகி ஒன் அப்பனுக்கும் இதுமாதிரி வராமல் போகாது. வினை விதைக்கிறவள் வினையை அறுத்துத் தாண்டி ஆகணும்.
அண்ணிக்காரியை மனத்தில் சபித்துக் கொண்டும், சில சமயம் தன்பாட்டுக்கு உரக்கச் சொல்லிக் கொண்டும், அழுதுகொண்டே இருந்தாள் கமலா. அதனால் மணி பகல் இரண்டாகியும் கிழவருக்கு எதுவும் கிடைக்கவில்லை.
கமலா இன்னும் அழுவதை நிறுத்தவில்லை. கிழவர் பசி தாங்க முடியாமல், வாஷ்பேசினில் குழாயைத் திறந்து தண்ணிரைக் குடித்துக் கொண்டிருக்கிறார்.
– ஒரு சத்தியத்தின் அழுகை – முதல் பதிப்பு : 1981, மணிவாசகர்பதிப்பகம், சென்னை-600108