கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 15,067 
 

இப்படி ஓர் அவமானம் கனகசுந்தரிக்கு அவளுடைய 15 வயது வாழ்க்கையில் நடந்தது கிடையாது. இதற்கு எல்லாம் காரணம், கறுப்பு ரீச்சர்தான். மற்றவர்கள் விமலா ரீச்சர் என்று அழைத்தாலும், அவளுக்கு அவர் கறுப்பு ரீச்சர்தான். எதற்காகத் தன் மீது வன்மம் பாராட்டுகிறார் என்று அவள் யோசித்து இருக்கிறாள். ரீச்சர் வாய் திறக்கும்போது நாக்கு பிளந்திருக்கிறதா என்று உற்றுப் பார்த்திருக்கிறாள். கனகசுந்தரி அழகாக இருப்பாள். வெள்ளை வெளேர் என்ற நிறம். அவள் நடந்துபோனால், ஆணோ, பெண்ணோ நின்று திரும்பிப் பாராமல் நகர முடிவது இல்லை. ரீச்சர் வருவதற்கு முன் கனகசுந்தரிக்கு அந்தப் பள்ளிக்கூடத்தில் ஒரு மதிப்பு இருந்தது. தலைமை ஆசிரியர்கூட அவளைக் கண்டதும் தலையை ஆட்டிப் புன்னகை செய்வார். காலை வேளைகளில் அவள் பச்சைப் பாவாடை, மஞ்சள் பிளவுஸ் அணிந்து, இரட்டைப் பின்னல் பின்னி, பச்சை ரிப்பன் கட்டி கடவுள் வணக்கம் பாடும்போது வெகு அழகாக இருப்பதாக, சிநேகிதிகள் சொல்லியிருக்கிறார்கள். அவள் பள்ளி வாழ்க்கையைக் கறுப்பு ரீச்சர் அன்றுடன் முடித்துவிட்டார்.

பள்ளிக்கூடம் விடுவதற்கு இன்னும் நேரம் இருந்தது. கனகசுந்தரி வீட்டுக்குப் போகும் வீதியில் நடந்தாள். தூரத்தில் யாரோ ஒருத்தர் சைக்கிளில் புகையிலைச் சிப்பம் கட்டிக்கொண்டு போனார். அம்மாவுக்கு என்ன சொல்லித் தப்பலாம் என்பதைத் தீர்க்கமாக ஆலோசனை செய்தாள். கறுப்பு ரீச்சர் ஓணான்போலத் தலையை ஆட்டி, ‘நீ உருப்பட மாட்டாய்’ என்று திட்டியதை அவளால் மறக்க முடியவில்லை. வீதியின் அகலத்தையும் மீறிய கார் ஒன்று எதிர்த் திசையில் வந்தபோது, கனகசுந்தரி வேலியோடு ஒட்டிக்கொண்டு நின்றாள். அது ஒரு ஹில்மன் மிங்ஸ் கார். அந்த ஊரில் அபூர்வமாகத் தென்படுவது. தன் கவலையை மறந்து கார் மறையும் வரை அதையே பார்த்தாள். அவள் மனம் காரின் பின்னாலேயே போய்விட்டது. உடனேயே தன் தங்கையிடம் இதைச் சொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டாள். அவளுடைய தங்கை பொது நிறம். அடிக்கடி தன் கையை அக்காவின் கைக்குப் பக்கத்தில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்துவிட்டுச் சொல்வாள். ”அக்கா, உன்ரை கலர் வெள்ளைக்காரியின்ரை கலர். எங்க பள்ளிக்கூடத்திலே உன்னிலும் பார்க்கத் திறமான அழகி ஒருத்தரும் இல்லை!”

Kanakasundari1

கனகசுந்தரிக்கு 10 வயது நடந்தபோது, கறுப்பு ரீச்சர் பள்ளிக்கூடத்துக்கு வந்து சேர்ந்தார். அன்று முதல் எல்லாமே மாறியது. அவர் கணக்கு, சரித்திரம், தமிழ், வண்ண வேலை, சம்ஸ்கிருதம் போன்ற பாடங்களை எடுத்தார். ”எழுத்தை எழுதிவிட்டு அதைக் கொடியில் காயப்போடுவதுதான் சம்ஸ்கிருதம்” என்று கனகசுந்தரி கேலியாகச் சொல்வாள். கறுப்பு ரீச்சர்தான் பள்ளிக்கூடத்தில் ‘குட்டிப்போட்டு முந்துவது’ என்ற வழக்கத்தைக் கொண்டுவந்தார். வெளியே மாமரத்துக்குக் கீழே அவர்களை வரிசையாக நிற்கவைத்து ரீச்சர் மனக் கணிதம் கேட்பார். தசம் இரண்டு தானத்துக்கு விடை கூற வேண்டும். சரியான விடை சொன்னால் பிழையாகச் சொன்னவர்களை எல்லாம் குட்டிவிட்டு, வரிசையில் முன்னேறலாம். கனகசுந்தரிக்கு விடை தெரியவில்லை. விடை சொன்னவள் தடவுவதுபோல அவள் தலையில் குட்டிவிட்டு முன்னுக்குப்போய் நின்றாள். கறுப்பு ரீச்சர் எப்படிக் குட்டுவது என்று கனகசுந்தரியின் தலையில் இடி இடிப்பதுபோலக் குட்டிக் காண்பித்தார். ரீச்சருக்குத் தன் மீது எவ்வளவு வெறுப்பு என்பதை கனகசுந்தரி அன்று கண்டுகொண்டாள்.

கனகசுந்தரியின் வாழ்க்கையில் அரசர்களும் அரசிகளும் நிறையவே குறுக்கிட்டார்கள். அந்தச் சம்பவம் எட்டாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது. சில வருடங்களுக்கு முன்னர்தான் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழா நடந்திருந்தது. லண்டனில் யாருக்கோ முடிசூட்டினால், இந்த ரீச்சருக்கு என்ன வந்தது? ராணியின் முடிசூட்டு விழாபற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். ‘வெள்ளைக்காரர்களின் ராணி எலிசபெத் அழகாயிருப்பார். அவருடைய முடிசூட்டு விழா 2 யூன் மாதம், 1953-ம் ஆண்டு நடைபெற்றது’ என்று கட்டுரையைத் தொடங்கியிருந்தாள் கனகசுந்தரி. ரீச்சருக்கு அது பிடிக்கவில்லை. ”அழகு என்பது தோல் நிறத்தில் இல்லை. கறுப்பானவர்கள் அழகாகவும் வெள்ளைக்காரர்கள்கூட அழகு இல்லாமலும் இருக் கலாம். உதாரணத்துக்கு, உலக அழகி கிளியோ பாட்ரா. அவர் வெள்ளைக்காரி அல்ல,ஓர் ஆப்பிரிக்கக்காரி.” ரீச்சர் எத்தனை பெரிய உரை நிகழ்த்தினாலும் அவளுக்கு உண்மை தெரியும். ரீச்சர் கறுப்பு; அவள் வெள்ளை!

ஆனால், அவளை அன்று ரீச்சர் பள்ளியில் இருந்து துரத்திய காரணம் ஓர் அரசியால் உண்டாகவில்லை. அரசனால்தான் வந்தது. இலங்கையை ஆண்ட பழங்காலத்து அரசன் வசபன். சரித்திரப் பாடம் என்பதால், இரவிரவாகக் கண் விழித்து தேதிகளை மனப்பாடமாக்கி வந்திருந்தாள் கனகசுந்தரி. ஆனால், கறுப்பு ரீச்சர் கேள்வியை மாற்றிவிட்டார். ”வசபன் எத்தனை குளங்கள் கட்டினான்? எத்தனை கால்வாய்கள் வெட்டினான்?” என்பதுதான் கேள்வி. இதை யார் நினைவில் வைத்திருக்கப்போகிறார்கள்? சும்மா ஓர் எண்ணைச் சொல்லிவைத்தாள். ரீச்சர் கறுப்பு நாகம்போல அவளைக் கொத்த சமயம் பார்த்திருந்தார். ”நீ முகத்துக்கு வெள்ளையடிச்சுக்கொண்டு வாற நேரத் திலே கொஞ்சம் சரித்திரமும் படிக்கலாமே” என்று வைதுவிட்டு ”ஏறு… ஏறு… வாங்கிலே ஏறி நில்” என்றார். அவளுக்குத் திகைப்பாக இருந்தது. பெரிய பிள்ளையான பிறகு ஒருவரும் வாங்கில் ஏறி நிற்கச் சொல்வது இல்லை. கனகசுந்தரி தயங்கி தரையைப் பார்த்தபோது மறுபடியும் ரீச்சர், ”ஏறு… ஏறு… உனக்கு அப்பதான் புத்தி வரும்” என்றார். கனகசுந்தரி பாவாடையை மடித்து, ஒரு கையைப் பக்கத்து மாணவியின் தோளில் ஊன்றி வாங்கில் ஏறி நின்றாள். கூரையில் தலை இடித்துவிடும்போல அத்தனை உயரமாகத் தன்னை உணர்ந்தாள். உடம்பு கூசியது. ரீச்சர் கரும்பலகையில் ஏதோ எழுதத் திரும்பிய சமயம், கனகசுந்தரி பல்லைக் கடித்தபடி தன் சிநேகிதிகளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னாள். ”இவவின்ர கறுப்பு நிறத்தைத் தாங்க ஏலாமல் தான் புருசன்காரன் ஓடிப்போனான்!” இது எப்படியோ ரீச்சருக்குக் கேட்டுவிட்டது. தீயை மிதித்ததுபோலச் சீறிக்கொண்டு திரும்பினார். விவகாரம் தலைமை ஆசிரியர் வரை போனது. இனிமேல் கனகசுந்தரியைப் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

Kanakasundari2அவள் வீட்டுக்கு வரும் முன்னரே தகவல் வந்துவிட்டது. அவளைக் கண்டதும் அம்மா தன் தலையில் தானே அடிக்கத் தொடங்கினார். ”உனக்கு வாயை வெச்சுக்கொண்டு சும்மா இருக்க ஏலாது” என்று கதறினார். கனகசுந்தரி ஒன்றுமே பேசவில்லை. ”ஐயா வந்ததும் அவரைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் போ” என்றார். ”என்னை வெட்டிக் கொன்றாலும் போக மாட்டேன்” என்றாள் கனகசுந்தரி. ”நீதானே ரீச்சருக்குப் படிக்க வேண்டும் என்று சொன்னாய்.” ”அதுவும் ஒரு வேலையா? ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னர் எத்தனை குளம் வெட்டினால் என்ன? அதிலே ஒன்றுகூட இன்றைக்கு இல்லை. அந்தக் காலத்து மக்கள் எத்தனை வேளை சாப்பிட்டார்கள்? அந்தப்புரத்தில் எத்தனை அடிமைகள் சிறை கிடந்தார்கள்? இவை எல்லாம் தெரிந்தாலாவது பிரயோசனமாக இருக்கும்.” ”இப்ப என்ன செய்யப்போறாய்?” என்றார் தாயார் அதிர்ந்துபோய். ”வேறு என்ன? நான் கல்யாணம் செய்யப்போறன். சுருக்காக எனக்கு மாப்பிளை பாருங்கோ!” என்றாள்.

தங்கச்சிக்காரி பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் இருவரும் ஒன்றுமே நடக்காததுபோல ஒழுங்கையில் போய் நின்றுகொண்டார்கள். தங்கை வழக்கம்போல கையிலே நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, வாயிலே குருவி துரும்பு காவுவதுபோல குறுக்காக பென்சிலை வைத்துக்கொண்டு புறப்பட்டாள். ”எத்தனை நம்பர் எழுதியிருக்கிறாய்?” என்றாள் அக்காக்காரி. தங்கை, ”116” என்று சொன்னாள். அவளுடைய தங்கையின் பொழுதுபோக்கு கார் நம்பர்கள் எழுதுவது. அவள் வகுப்புக் காரிகள் எல்லோரும் எழுதினார்கள். குறுகலான வீட்டு ஒழுங்கையில் அபூர்வ மாகவே கார் வரும். அவள் சிநேகிதி களில் ஒருத்தி 247 கார் நம்பர்கள் எழுதிவிட்டாள். அவர்கள் ஊரில் காணக்கிடைப்பது இரண்டே இரண்டு வகை கார்தான். ஒன்று ஒஸ்டின் 40, அடுத்தது, மொறிஸ் மைனர். எப்போ தாவது ஹில்மன் மிங்ஸ் கார் வரும். அப்போது கனகசுந்தரி துள்ளிக் குதிப் பாள். நீளமான முன் பக்கமும், மயில் தோகையைக் குறுக்காக வெட்டிவிட் டது போன்ற பின்பக்கத் தோற்றமும் கொண்டது அது. ஓர் அரசி உலா போவதற்குத் தகுதியான கார் என்று குதிப்பாள். அன்று மதியம் தான் கண்ட ஹில்மன் மிங்ஸை வர்ணிக்கத் தொடங்கினாள். அவள் தங்கை பரவச நிலையை எய்திவிட்டதுபோலக் கேட்டுக்கொண்டு இருந்தாள்.

ஒருநாள் இரண்டு பேரும் ஒழுங்கை யில் கார் நம்பர்கள் எழுதிக்கொண்டு நின்றபோது, தூரத்தில் கறுப்பு ரீச்சர் வருவது தெரிந்தது. ஒரு கையில் புத்தகத்தைக் காவியபடி மறு கையால் குடையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நடந்தார். தரையைப் பார்த்த படி நடந்த அவருக்கு முன்னால் அவருடைய நிழல் நடந்துபோனது. தங்கச்சி நினைத்தாள் அவளுடைய அக்கா வீட்டுக்குள் ஓடிவிடுவாள் என்று. அப்படி எல்லாம் நடக்கவில்லை. ரீச்சர் அவர்களைச் சமீபித்து நிமிர்ந்து பார்க்காமலே தாண்டிப் போனார். அந்தச் சமயம் கனகசுந்தரி தேன் தடவிய குரலில் ”ரீச்சர் குடையை விரிச்சுப் பிடியுங்கோ. கறுத்துப் போவீங்கள்” என்றாள். ரீச்சரின் உடம்பில் பாய்ந்த அத்தனை ரத்தமும் முகத்தில் ஏறி, அது குரூரமாக மாறியது. எரிப்பதுபோல நிமிர்ந்து பார்த்தார். பின்னர், கிடுகிடுவென அந்த இடத்தைவிட்டு அகன்றார்.

இதைக் கேள்விப்பட்ட அம்மாவுக்குக் கோபம் உச்சத்துக்குப்போனது. ”நீ வெள்ளை என்ற கர்வம் உனக்குத் தலைக்கு ஏறிவிட்டது. உன்ரை வாயைப் பற்றி இந்த ஊரிலே எல்லா ருக்கும் தெரியும். அடுத்த ஊருக்கும் தெரியும். அதற்கடுத்த ஊருக்கும் தெரியும். உன்னை ஆர் கட்ட வரப் போகினம். உன்ரை ஐயா ஒன்றுமே சேர்த்துவைக்கவில்லை. நீ இப்படியே கார் நம்பர்களை உன்ரை தங்கச்சிபோல எழுதிக்கொண்டிரு. புருசன் வந்து குதிப்பான்” என்று திட்டினார். அம்மா சொன்னது முற்றிலும் பொய் என்பது விரைவிலேயே நிரூபணமானது. பொம்பிளை பார்க்க பக்கத்து ஊரில் இருந்தும், அதற்கடுத்த ஊரில் இருந்தும் இன்னும் பெயர் தெரியாத பல ஊர்களிலும் இருந்தும் ஆட்கள் வந்தார்கள். கனகசுந்தரியின் அழகு அவ்வளவு பிரசித்தமானது. அவள் ஒரே ஒரு நிபந்தனைதான் வைத்தாள். ”மாப்பிளை ரோட்டுக் கூட்டும் ஆளாகக்கூட இருக்கலாம். ஆனால், வெள்ளையாக இருக்க வேண்டும்!”

கனகசுந்தரி மாப்பிள்ளையை வணங்கி விட்டு, கடையில் வாங்கிய வடையையும் வாழைப் பழத்தையும் பரிமாறுவாள். வடை, வாழைப் பழத்தைப் பிடிக்கவில்லை என்று சிலர் சொன்னாலும், ஏக மனதாக எல்லோருமே ”பெண் பிடித்திருக்கிறது” என்றார்கள். ஆனால், சீதனக் கதை வந்த போது பேச்சு முறிந்தது. 10 பவுன், 20 பவுன் அத்துடன் ரொக்கம் என்று வாய் கூசாமல் கேட்டார்கள். ஒரு நாள் இரவு அவசரமாக ஒரு குடும்பம் 75 மைல் தொலைவில் உள்ள வவுனியாவில் இருந்து வந்து பெண் பார்த்தது. கனகசுந்தரி மேல் கண்ணால் ஒரே ஒரு முறை பார்த்தாள். மாப்பிள்ளை மயங்கிவிட்டார். சீதனத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை. கல்யாணச் செலவு முழுவதையும் அவர்களே ஏற்பதாகவும் சொன்னார்கள். ஆனால், பிரச்னை என்னவென்றால், மாப்பிள்ளை நெட்டையாக, கறுப்பாக இருந்தார். அவர் வவுனியாவில் நாலு லொரிகள் சொந்தமாக வைத்திருந்தார். கொழும்புவுக்குச் சரக்கு ஏற்றுவதும் அங்கு இருந்து கொண்டுவந்து இறக்குவதுமாக நல்ல வியாபாரம். கனகசுந்தரி வாழ்நாள் முழுக்க வசதியாக வாழலாம். அனைவரும் திடுக்கிடும் விதமாக கனகசுந்தரி சம்மதம் தெரிவித்தாள். மாப்பிள்ளையிடம் சொந்தமாக ஒரு ஹில்மன் மிங்ஸ் கார் இருந்ததுதான் காரணம் என்பது பலருக்குத் தெரியாது. காரின் நம்பர் இஎல் 1548. கூட்டிப் பார்த்தபோது 9 வேறு வந்தது. அது அவளுடைய இலக்கம்.

Kanakasundari3இரண்டு நாளிலே கல்யாண எழுத்து முடிந்தது. மூன்று மாதத்தில் திருமணம் என்று முடிவானதும் மாப்பிள்ளை வவுனியா வுக்குத் திரும்பினார். அவருக்குக் காதல் கடிதம் எழுத வராது. முழுக்க முழுக்கக் கடிதத்தில் சினிமாப் பாடல் வரிகள்தான். ‘உன்னைக் கண் தேடுதே’ என்று அவர் எழுத, ‘புதுப் பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே…’ என்று இவள் பதில் எழுதினாள். அவர், ‘புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே’ என்று எழுதினால், இவள் ‘நீதானே எனை அழைத்தது’ என்று எழுதி, தன் சினிமாப் புலமையைக் காட்டினாள். ஒரே ஒரு தடவை அவர் எழுதியதைப் படித்து வியந்துபோய், அந்தக் கடிதத்தை கனக சுந்தரி பத்திரப்படுத்தினாள். ‘ஒரு பூவைப் பார்த்து ஆயிரம் பேர் இன்புறுவார்கள். ஓர் ஓவியத்தைப் பார்த்து ஆயிரம் பேர் களிப்பார்கள். ஆனால், உன் அழகு பார்ப்பவர் எல்லோருக்கும் துன்பம் தருவது. அது, இன்பம் தரப்போவது எனக்கே எனக்கு மட்டும்தான்!’

வீதியை மறைத்துப் பந்தல் போட்டு, நாலு கூட்டம் மேளம் பிடித்து வெகு விமரிசையாகத்தான் திருமணம் நடந்தது. இரவு, பகலாக ஒலிபெருக்கியில் சினிமாப் பாடல்கள் முழங்கின. கனகசுந்தரிக்கு உச்சிப் பட்டம், இரட்டை வடம் சங்கிலி, தங்க வளையல்கள், ஒட்டியாணம், நெக்லஸ் என்று மாப்பிள்ளை வீடு கொடுத்த ஆபரணங்களைப் பூட்டி அழகு பார்த்தார்கள். நகைகள் அவள் உடல் அழகை மறைத்தனவே ஒழிய, கூட்டவில்லை. கனகசுந்தரியின் தாயார் தனக்குச் சொந்தமான ஒரே ஒரு சிவப்புக் கல் அட்டியலைக் கொண்டுவந்து, மகளுக்குப் பூட்டியபோது அதை உடனே கழற்றித் தங்கைக்கு அணிந்து ‘இது உனக்கு’ என்றாள்.

தாலி கட்டிய பின்னர் புருசனோடு புறப்படும் நேரம் வந்தபோது ஆச்சர்யப்படும் விதமாக, கனகசுந்தரி கதறி அழுதாள். தாயாரிடம் ”அம்மா என்னை மன்னித்துவிடு. அறிவில்லாமல் நடந்துகொண்டேன்” என்று விம்மினாள். தகப்பனாரின் காலில் விழுந்து வணங்கினாள். தங்கையைக் கட்டிக்கொண்டு மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்து அழுதாள். அடுத்த நாள் காலையே கணவனுடன் அவள் வவுனியாவுக்குப் புறப்பட்டுவிடுவாள். அவர்கள் முதலிரவு மாமியார் வீட்டில் அன்று நடக்கும். மாலையும் கழுத்துமாகப் புதுத் தம்பதி காரில் ஏறி அமர்ந்ததும் சாரதி காரை எடுத்தார். சிறுவர்கள் காரைத் தொடர்ந்து சிறிது தூரம் ஓடி வழியனுப்பினார்கள்.

அடுத்த நாள் தம்பதி வவுனியாவுக்குப் புறப்பட்டார்கள். ஒரு முழு இரவைக் கணவனுடன் கழித்துவிட்ட கனகசுந்தரி, செல்லமாக ”டிரைவர் வேண்டாம், நீங்களே காரை ஓட்டுங்கள்” என்றாள். புருசன் பக்கத்தில், இங்கிலாந்தில் இருந்து பிரத்யேகமாகத் தருவிக்கப்பட்ட ஹில்மன் மிங்ஸ் காரில், முன் சீட்டில் அவள் உட்கார்ந்திருக்கிறாள் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.

இரண்டு வர்ணம் பூசிய கார் அது. மேல் பாதி வெள்ளை, கீழ்ப் பாதி அடர் பச்சை. யாழ்ப்பாணம் முழுக்கத் தேடினா லும் அப்படி அற்புதமான ஒரு கார் கிடைக்காது. காரை அந்த ஒடுக்கமான ஒழுங்கைகளுக்குப் பொருந்தாத வேகத்தில் கணவன் ஓட்ட, கனகசுந்தரி சுகத்தை அனுபவித்து கால்களை அகட்டிவைத்து, கைகளைப் பரப்பி உட்கார்ந்து இருந்தாள். அந்த நேரத்திலும் அவளால் கறுப்பு ரீச்சரை மறக்க முடியவில்லை. ‘உருப்படாமல் போவாய்’ என்று அவர் சாபமிட்டதை நினைத்துச் சொண்டுக்குள் சிரித்தாள்.

கணவனின் உதட்டில் ஒரு பக்கத்தில் சிகரெட் தொங்க, மறு பக்கத்தில் வெண்புகை நூலாக எழும்பிய காட்சி பார்ப்பதற்கு அவளுக்கே பெருமையாக இருந்தது. வீடு போய்ச் சேரும் வரைக்கும் சிகரெட் முடியக் கூடாது என்று பிரார்த்தித்தாள். ”போகும் வழியில் அம்மாவைப் பார்த்துவிட்டுப் போகலாம்” என்றாள். மறு பேச்சில்லாமல் கணவன் காரைத் திருப்பினான்.

காலையில் வாசலில் கார் வந்து நின்றதும் அயல் வீட்டுச் சனங்கள் காரைச் சூழ்ந்துகொண்டார்கள். சிறுவர்கள் உள்ளுக்கு எட்டி எட்டிப் பார்த்தார்கள். கணவனை வர வேண்டாம் என்று கண்களால் சைகை காட்டிவிட்டு இறங்கி, பொற்கிரீடம் விழுந்துவிடும் என்பதுபோல் தலையை உயர்த்தி வீட்டினுள்ளே புகுந்தாள். தூங்கிய தங்கச்சியைக் காலால் தட்டி எழுப்பி, சிவப்புக் கல் அட்டியலைப் பறித்துத் தானே அணிந்துகொண்டாள்.

கனகசுந்தரியின் தாயும் தகப்பனும் பின்னாலே தீக்கோழிகள்போல ஓடி வந்தார்கள். அவள் திரும்பிப் பார்க்க வில்லை. ஒரு வார்த்தை பேசவும் இல்லை. நீச்சல்காரர் தண்ணீரைக் கிழிப்பதுபோல சனங்களைப் பிளந்துகொண்டு போய், கார் முன் சீட்டில் ஏறி அமர்ந்து புருச னிடம் ‘காரை எடுங்கள்’ என்று உத்தர விட்டாள். பின்னர், கண்ணாடி வழியாகப் பார்த்து நீண்ட வெள்ளைக் கையுறை அணிந்த எலிசபெத் மகாராணி செய்வது போலக் கையை அசைத்தாள். கார் கிளம் பியதும் அதைத் தொடர்ந்து சிறுவர்கள் ஓடினார்கள். கார், அது கிளப்பிய புழுதியில் மறைந்தது. சிறிது நேரத்தில் சிறுவர்களும் மறைந்தார்கள்!

– ஜூன் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *