கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்

 

பண்டாரம் பிள்ளைக்குப் போகாமல் முடியாது. ஒன்றுவிட்ட அக்காள் மகளுக்குக் கல்யாணம் நடக்கையில் தாய்மாமன் முறையுள்ளவன் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது. அக்காளுக்கோ வேறு உடன்பிறப்பு கிடையாது. நிச்சய தாம்பூலதுக்கே எழுத்து உண்டு. ‘தத்தர’ நடவு சமயம் எனவே போகமுடியவில்லை. இப்போது கல்யாணத்துக்கு எங்கு கடன்பட்டாலும் எவள் தாலியை அருத்தானாலும் போய்த்தான் தீர வேண்டும். செய்யும் கட்டு செய்யாமல் விட்டால் குறைச்சல் இல்லையா?

ஒரு இடத்துக்குப் போக வேண்டுமானால் நின்ற நிலையில் புறப்பட முடிகிறதா? எத்தனையோ சீர் பிடிக்கவேண்டும். முதலில் உடுக்க நல்ல வேட்டி முண்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அலமாரிக்குள் தேடினால் நல்ல வெள்ளையாக ஒரு இரட்டை வேட்டியும் சிவந்த சுட்டிபோட்ட துவர்த்தும் இருந்தது.

நல்ல வெள்ளையாக ஒரு வேட்டியைப் பார்த்தாலே சந்தேகம், கீறலோ பீத்தலோ இருக்கும் என்று. மடிப்பும் அதிகம் பிரிந்து விடாமல் பிரித்துப் பார்த்தால் நினைத்தது சரிதான். பின்பக்கத்துக்கு நேரே வாக்காக ஒரே கிழிசல். மூளி எந்தக்கள்ளி முள்ளில் காயப்போட்டு இழுத்தாளோ? இனி அது இட்டிலித்துணிக்கோ விளக்கு திரி திரிக்கவோ அல்லது யாராவது பிள்ளைபெற்றாள் அணவடைத்துணிக்கோ ஆகும். வண்ணாக்குடிக்கு கடைக்குட்டிப் பயலை அனுப்பிப்பார்த்தாலும் பிரயோசனம் இருக்காது. அழுக்கு எடுத்துப் போய் ஆறேழு நாட்கள் தான் இருக்கும். இருபத்தைந்து நாளைக்குள் வெள்ளை வந்தாலே பெரிசு! எடுத்துக் கொண்டு போன அழுக்கு இன்னும் மூட்டையாக இருக்குமோ இல்லை வெள்ளாவிப் பானையில் அவிந்துகொண்டிருக்குமோ?

இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரேயொரு உபாயம்தான் உண்டு. குப்பான் பிள்ளை கடையில் போய் கோடி முண்டும் துவர்த்தும் ஒரு ஜோடி எடுத்துக் கொள்வது. குப்பான் பிள்ளை கடை இருப்பது ஒரு சௌகரியம். விலை கொஞ்சம் கூடுதலானாலும் ‘அத்தகைக்கு’ கடனாக எடுத்துக் கொள்ளலாம். வைக்கோல் விற்றோ அறுப்புக்கோ பணம் கொடுத்தால் போதும். அனேகமாக பயல்கள் படிக்க ஆரம்பித்த பிறகு, பண்டாரம் பிள்ளை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தான் வேட்டி எடுத்துக் கொள்வது.

திங்கட்கிழமை காலையில் ஒன்பதரைக்குமேல் பத்தரைக்குள் முகூர்த்தம். நியாயப்படி அவளையும் கூட்டிக்கொண்டுதான் போக வேண்டும். அவள் தீர்க்கமாய் வரமுடியாது என்று சொல்லிவிட்டாள். உடுக்க நல்ல சீலைத்துணி இல்லை. கையில் ஒன்றும் கிடையாது. தாலிச் செயின் கூட பணயத்தில் இருந்தது. அவள் சொன்ன காரணங்கள் சரியாகவே பட்டது.

அவர்மட்டும் என்றால் கூட செலவு சும்மாவா போகும்? நாகர்கோயிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு போகவர பஸ்சார்ஜ் எட்டு ரூவா ஆகும். ஒரு பத்துரூவாயாது அந்தக் குட்டிக்கு திருநூறு பூசி கையில் கொடுக்க வேண்டும். ஆக இருபது ரூபாய்க்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

பணமும் ஏற்பாடு செய்தபிறகு, மூன்றாவது பெரிய வேலை குடிமகனைத் தேடித் பிடித்து முகம் வழிப்பது. அத்தியாவசியமான நாள் பார்த்து அவன் ஆளே அகப்படமாட்டான். வந்தாலும் நடுமத்தியானம் பன்னிரெண்டரை மணிக்கு வந்து “போத்தியோ” என்று குரல் கொடுப்பான்.

அருத்தடிப்புக் களத்தில், பூவரசமர நிழலில் உட்கார்ந்து முடியும் வேட்டி முகமும் வழிக்க வேண்டும்.

“போத்தியோ! எங்கேயோ அசலூருக்குப் பொறப்படுக மாதிரி இருக்கு…”

“ஆமடே … திருவந்திரம் வரை ஒண்ணு போய்ட்டு வரணும்…”

“அக்கா வீட்டுக்கா? “

“ஆமா… மருமகளுக்கு நாளைக்கு கலியாணம்லா?”

“அப்பம் நீருபோய்த்தாலா மாமன் குறை தீக்கணும்?”

“பின்னே இல்லியா?”

“நல்ல சரிகை வெட்டியும் நேரியலும் உண்டும்ணு சொல்லும்.”

“பின்னே அதிலே எல்லாம் குறை வைப்பாளா?”

“மாப்பிள்ளைக்கு என்ன சோலி?”

“மருமக டாக்டருல்லா… மாப்பிள்ளையும் டாக்டருக்குத்தான் படிச்சிருக்காரு…”

“போத்தி எப்பம் போறேரு?”

“வெள்ளனதான் போணும்…”

“நாளைக்கு மருமகளுக்கு கலியாணம். வெள்ளனப் போனாப் போறுமா?”

“நீயொருத்தன்… அங்க எல்லாம் இங்க மாரியா? தலைக்கா நாளே கறிக்கா வெட்டு, காலம்பற இட்லி, மதியம் ஊரு சத்திவைப்பு, நாலுமணி காப்பி, நாலா நீரு சாப்பாடு, ஏளா நீரு சாப்பாடுண்ணு வச்சு வேளம்பப் போறாளாக்கும்? எடு கெடத்துண்ணு நம்ம அதியாரம் செய்ய முடியுமா? சத்திரத்திலே வச்சுக் கலியாணம்… ஆளெண்ணி இத்தனை இலைண்ணு சாப்பாடு. நோட்டை எண்ணிக் குடுத்தா சங்கதி தீந்து போச்சு… இதுக்கு நாலு நாளு மிந்தியே போயிக் காவலு கெடக்கணுமாங்கும்?”

“அதும் அப்படியா? அப்பம் வெளக்கு வக்கயதுக்கு மிந்தி திரும்பீருவேருண்ணு சொல்லும்.”

பேசிக்கொண்டே முகம் வழித்தாலும், கீழ்க்கன்னத்தில் கத்தியை வைத்து மேல் நோக்கி எதிர்த்திசையில் இழுக்கும்போது உயிரோடு மயிர் பிடுங்கும் வலியாக இருந்தது.

முதல் கோழி கூவியதுமே எழுந்து, பல் விளக்கிக் குளித்து நாகர்கோயிலுக்கு நடந்தார் பண்டாரம் பிள்ளை. காலையிலேயே குளித்துவிட்டதால் நடை வேகம் ‘வெதவெத’ வென்று சுகமாக இருந்தது. நாகர்கோயிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விடிய விடிய பஸ் உண்டு. ஐந்து மணிக்கு பஸ் பிடித்தாலும் ஏழு மணிக்குப் தம்பானூர் பஸ் ஸ்டாண்ட். அங்கிருந்து அக்கா வீடு அதிக தூரம் இல்லை. எப்படியும் ஏழரை மணிக்குள் வீட்டுக்குப் போய்விட்டால், காப்பி குடித்துவிட்டு எல்லோரோடும் கல்யாண சத்திரத்துக்குப் போய்விடலாம் என்று நினைத்தார்.

பஸ் ஸ்டாண்டில் சொல்ல முடியாத கூட்டம். திருவனந்தபுரம் பஸ்ஸுக்கு பெரிய அடிபிடி. திங்கட்கிழமை ஆதலால் வார இறுதியில் வீட்டுக்கு வந்து திரும்புவார் கூட்டம். நிறைய முகூர்த்தங்கள் இருக்கும் போலும். வேட்டியைத் தார்பாயச்சிக் கட்டிக்கொண்டு, துவர்த்தை தலைப்பாகை கட்டி ஏற யத்தனித்தும் ஆறரை மணி வண்டியில்தான் பண்டாரம் பிள்ளைக்கு இடம் கிடைத்தது. ‘அன்னா அன்னா’ என்று அக்கா வீடு போய்ச் சேர காலை எட்டே முக்கால் ஆகிவிட்டது.

வீடு வெறிச்சென்று கிடந்தது. ஒரு வேலைக்கார கிழவியும் சங்கிலியை இழுத்துக்கொண்டு குரைக்கும் சடை நாயும். எல்லோரும் சத்திரத்துக்குப் போயாயிற்று என்று புரிந்தது. கனகக்குன்று கொட்டரத்துக்கு வழி விசாரித்துக்கொண்டு வேகமாக நடந்தார் பண்டாரம் பிள்ளை.

சாமத்தில் எழுந்து புறப்பட்டதால் நன்றாக பசித்தது. ‘கிளப் கடை’யில் ஏறி காப்பி குடிக்கலாம் என்றால் நேரமாகிவிடும். நல்ல சமயத்தில் மணவடையில் ஏற மாமனைத் தேடுகையில் மாமனைக் காணவில்லை என்றால் சிரிக்க மாட்டார்களா?

சொந்த அடியந்திரம். காலைக் காப்பிக் குடியைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது என்று நினைத்தவர், நடந்து கனகக்குன்று கொட்டாரத்தை அடைகையில், கொட்டார வாசலில் கணக்கற்ற கார்கள். முகப்பில் வாழை, கமுகு, செவ்விளநீர், உலத்திக்குலைகள். முகப்பில் இருந்து கொட்டார வாசல் வரை தோரணங்கள். காலடியில் நடக்க கடல் மணல். வாசலை நெருங்க நெருங்க பட்டாளத்துக்காரர்கள் அடிக்கும் பேன்ட்மேளம். பண்டாரம் பிள்ளைக்கு தொழியுழவில் ஏருக்குப் பின்னல் நடப்பது போலக் கால்கள் சற்றே இடறின.

தெரிந்த மனிதர்கள் யாராவது தட்டுப்படுகிறார்களா என்று துருவித் துருவித் தேடிக்கொண்டே வாசலை அடைந்தார். மடித்துக் கட்டியிருந்த வேட்டியை, கை தானாக அவிழ்த்துத் தாழ்த்தியது. தலையில் கிரீடம் போல் மிதப்பாக இருந்த துவர்த்து, தோளில் சால்வை போல இறங்கியது.

மண்டப நுழைவில், மேசை மேல் விரிப்பும் விரிப்பின் மேல் சந்தனக் கும்பா, குங்குமச் செப்பு, பன்னீர்ச் செம்பு, சிறிய ஒற்றை ரோஜாக்கள் நிறைந்த தாம்பாளம், சீனிக்கற்கண்டு நிறைந்த தாம்பாளம். ஒரே நிறத்தில் பட்டு உடுத்திய மூன்று சிவந்த கன்னிகள். கோடி, இரட்டை வேட்டியும் சில்க் ஜிப்பாவும் போட்ட ஆண்கள். சிலும்பிய தலைமுடியோடு வாலிபர்கள்.

தன்னுறவில் தெரிந்த முகங்கள் இல்லாமற் போகாது என்ற நம்பிக்கையில் பண்டாரம் பிள்ளையின் கண்கள் ஏக்கத்தோடு அலைந்தன. உள்ளே பந்தி பந்தியாய் நாற்காலிகள் நான்கு புறமும். நடுவில் மணமேடை, மாப்பிள்ளைச் சடங்கு நடந்துகொண்டிருந்தது.

அவர் நுழைவை யாரும் மறுக்கவில்லை ஆதலால் தயங்கித் தயங்கி நுழைந்தார். அறிமுகம் இல்லாத முகம் ஒன்று அவர் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காலியாக கிடந்த நாற்காலியில் அமர்த்திவிட்டுப் போயிற்று. உட்கார்ந்தவர் சுற்றும்முற்றும் பார்த்தார். பிடரியில் சூடாக வேற்று மூச்சுக்காற்று படுவதுபோல், மேலெல்லாம் ஒரு புல்லரிப்பு. ஆனாலும் நாற்காலியில் உட்கார்ந்து இருப்பது ஓரளவுக்கு பாதுகாப்பாகவே இருந்தது.

ஜப்பான் நடவின் இடையில் புகுந்து பூச்சி மருந்து அடிப்பதுபோல, நாற்காலிகளின் வரிசைகளின் இடையே புகுந்து ஒருத்தர் சென்ட் அடித்துப் போனார். ஒரு தினுசான மணமாக இருந்தது.

தன்னைத் தேடி அலையப் போகிறார்களே என்று ஒரு அவசரம் அவரைப் பிடித்துக்கொண்டது. மணமேடையின் பக்கம் அவரது அத்தான் முதுகைக் காட்டிக்கொண்டு நின்றிருந்தார். அத்தானின் காதில் கிசு கிசுக்கும் அவரது தம்பிக்கும் தன்னைத் தெரியும். அவரையாவது தன்பால் ஈர்த்து தனது வருகையை உணர்த்திவிட்டால் போதும். கைதட்டிக் கூப்பிட முடியாது. எழுந்து போய் அவரருகில் நிற்கவும் கூச்சமாக இருந்தது. கூச்சத்தைப் பார்த்தால் முடியாது என்று, எழுந்து போய், அத்தானிடம் பஸ் கிடைக்காமற் போன விவரத்தையும் வீட்டுக்குப் போய்விட்டு மண்டபத்துக்கு வந்ததையும் சொல்லிவிட்டு வந்தார்.
பெண்ணை அழைத்துக்கொண்டு வந்தார்கள். முன் வரிசையில் இருந்த ஒருவரை எழுப்பி இழுத்துக்கொண்டு போய் பெண்ணின் பக்கத்தில் உட்கார வைத்தார்கள். கூர்ந்து பார்த்ததில் இரும்புக்கடை தெய்வநாயகம் பிள்ளை என்று புரிந்தது. சற்று எட்டி யோசித்ததில், பெண்ணுக்கு தகப்பன் வழியில் அவரும் ஒரு மாமன் என்பது ஞாபகம் வந்தது.

பிறகு நடந்தது ஒன்றும் பண்டாரம் பிள்ளைக்கு நினைவு இல்லை. திருமணம் முடிந்துவிட்டது போலிருக்கிறது. சாரிசாரியாய் ஆட்கள் எழுந்து போனார்கள். எழுப்பி அழைத்துக்கொண்டு போனார்கள். திருமண அரங்கை வெளிவட்டமாய் வளைத்துக்கொண்டிருக்கும் அறைக்கு மேல் திறந்த வராந்தாவில் சீருடை அணிந்த சேவர்கள் நடமாடினார். பீங்கான் தட்டுக்களின் ‘களங், ஙணங்’. நாற்காலிகள் நகர்த்தப்படும் உராய்வு. அதிக ஓசையில்லாத உரையாடல்களின் கலவை.

உட்கார்ந்திருப்பதா நிற்பதா என்று தெரியவில்லை. கூட்டம் கரைந்து கொண்டிருந்தது. நிறங்கள் முகப்பு மைதானத்தில் விரவின. கார்கள் ஏதோ இதுவரை பொறுமையாக நின்றுகொண்டிருந்ததே புண்ணியம்போல சினந்து சீறின.

பண்டாரம் பிள்ளை கீழப்பத்துமண்ணின் நிறம்கொண்ட கருப்பான மனிதர். முகம் மேலும் கறுத்துப்போனது. என்ன கஷட்டப்பட்ட காலத்திலும் இந்த அக்காளுக்காக சுமந்துகொண்டு வந்து சேர்த்த சம்பா அரிசிக் குட்டிச் சாக்குகள், அவல் பைகள், வற்றல் வடகம் பொதியல்கள், புளிச்சிப்பங்கள், ஓடைக்கரைவயல் கீரைத்தண்டு, மொந்தன் வாழைக்காய், கருநெத்திலிக் கருவாடு, நுங்குக்குலை எல்லாம் நினைவுக்கு வந்தன.

மொண்ணைத்தனமான ஒரு கோபம் வந்தது. அழுகல் கோறைப் பாக்கு கடித்தது போல் ‘…க்குப் பொறந்த பயக்கோ கலியாணம் களிக்கான்… நாஞ்சி நாட்டுக்கு வரட்டு… காட்டித் தாறேன்’ என்று ஒரு அகக்கறுவல் விறுவிறுவென வெளியே நடந்தார் அவர் வேகம் நடந்தே சொந்த ஊர் அடைந்துவிடத் தீர்மானித்திருப்பதுபோல் இருந்தது.

– தினமணிக்கதிர், 1980 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒற்றை வேட்டியும் தலைமுண்டும்தான் அங்கு சீலம். வேலை நடக்கும்போது வேட்டியைத் தார் பாய்ச்சிக் கட்டியிருந்தால் மற்ற சமயங்களில் மடித்துக் கட்டுவதுண்டு. வேலை செய்யும்போது தலையில் கட்டப்பட்டிருக்கும் துவர்த்து பிற சமயங்களில் தோள்மீது கிடக்கும் ஒரு பக்கமாகவோ இரண்டு பக்கங்களிலும் கண்டமாலை போலவோ. ...
மேலும் கதையை படிக்க...
காந்திபுரத்தில், 95-ம் எண் பேருந்துக்கு காத்து நின்றுகொண்டிருந்தான் கஸ்தூரி. பசித்திருந்தான் எனினும், உப்பிலிப்பாளையம் போய்த்தான் சாப்பிட வேண்டும். மத்தியானம் இரண்டே கால் ஆகிவிட்டிருந்தது. சற்று முன் ஒரு தேநீர் பருகத் தோன்றியது. எட்டு ரூபாய் ஆக்கி விட்டார்கள். விலையில்லா அரிசி போல, ...
மேலும் கதையை படிக்க...
பெருந்தவம்
மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ...
மேலும் கதையை படிக்க...
‘எட்டு, பத்து மாசமாச்சு... இப்படி ஓட்டம் தொடங்கி. சின்னப்பாடா? வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு?’ சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் ...
மேலும் கதையை படிக்க...
புரந்தரர் காலனியைப் பாம்பு வந்து சேர்வதற்குள் படிஞாயிறு மலைகளுக்குள் இராத்தங்கப் புகுந்துவிட்டது. நல்ல முனைப்பான வைகாசி வெயில். மழைகண்டு ஆயின மாதங்கள். பாவி அரசு செய்தால் பருவமழை பொழியாது, செல்லாது இயல்பாக இயற்கை, கசங்கிக் குலையும் கானுயிர் என்பது கார்க்கோடக புராணம். ...
மேலும் கதையை படிக்க...
(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலைவர் போல, நடிகர் போல, வாரிசுகள்தான் அடுத்துப் பொறுப்பேற்பார்கள் கோமரம், சந்நதம், அல்லது ஆராசனைக்கும். நாம் குறித்த மூன்று சொற் களும் அர்த்தமாகவில்லை என்றால் மலையாளச் சொல் வெளிச்சப்பாடும் புரியாது உமக்கு. எனவே ...
மேலும் கதையை படிக்க...
அம்மை பார்த்திருந்தாள்
ஞாயிற்றுக்கிழமை காலை. இன்னும் எட்டுமணிகூட ஆகவில்லை. உறக்கம் விழித்து, கூரை எறப்பில் தொங்கிய பனையோலைப் பட்டையில் உமிக்கரி அள்ளி, தேரேகாலில் இறங்கிப் பல் தீற்றி, வாய் கொப்பளித்து முகம் கழுவியாகிவிட்டது. கிழக்கு நோக்கித் தாழக்குடிக்குப் பிரியும் கப்பிச்சாலையின் ஓரத்தில் குத்த வைத்து ...
மேலும் கதையை படிக்க...
ஆவணங்களில் அவர் பெயர் பீதாம்பர் பாண்டுரங்க்நாத்ரே. இதில் பீதாம்பர் அவர் பெயர், பாண்டுரங்க் என்பது தகப் பனார். நாத்ரே என்பது குலப் பெயர். குலப் பெயரைவைத்து சாதியைத் தெரிந்துகொள்ளலாம் எனினும், குலப் பெயர் சாதிப்பெயர் அல்ல. Sur Name என்பர் வடவர் ...
மேலும் கதையை படிக்க...
காலையில் வெந்தயக் கொழுக்கட்டை அவித்திருந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. மாவரைத்துப் பிடித்துக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுப்பதல்ல வெந்தயக் கொழுக்கட்டை. இட்டிலிச் சட்டுவத்தில் வைத்து அவித்து எடுப்பது, சுடச்சுட, நல்லெண்ணெய் விட்டுப் புரட்டிய தோசை மிளகாய்ப்பொடி தொட்டுக் கொண்டு ஆர்வமாக ஏழெட்டுத் தின்ற ...
மேலும் கதையை படிக்க...
மாவட்ட மைய நூலகத்தின் தலைமாட்டில் புதியதாகப் பொருத்தப்பட்டிருந்த மின்னணுக் கடிகாரம் தன்பாட்டுக்கு இராப் பகலாக, நாள், கிழமை, நேரம், காற்றின் பதம், அந்நேரத்து வெப்பம் எல்லாம் காண்பித்துக் கொண்டிருந்தது. நேரம் சரியாகப் பிற்பகல் 14-30 என்றும் சூடு 42°c என்றும். ஒரு ...
மேலும் கதையை படிக்க...
பிராந்து
கடி தடம்
பெருந்தவம்
ஏவல்
பாம்பு
கோமரம்
அம்மை பார்த்திருந்தாள்
ஆத்மா
தற்குத்தறம்
பிறன் பொருளைத் தன் பொருள் போல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)