(1992 வெளியான கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ரேணுகா பக்கத்து வீட்டு சுபத்ரா மாமியோடு தன் வீட்டுக் கூடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
மார்க்கெட்டிலிருந்து காய்கறிப் பையோடு நுழைந்த அவள் கணவன் ரவீந்திரன், “வாங்க மாமி,” என்றபடியே, “இந்தா பதார்த்தம்”, என்று பையை மனைவியிடம் கொடுத்தான்.
பையிலிருந்து காய்கறிகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து ரேணுகா, “ஐயய்யய்ய…என்ன இது…பார்த்து வாங்கலையா. இந்தக் கத்தரிக்காய் சொத்தையா இருக்கே?” என்று எடுத்துக் காண்பித்தாள்.
“பார்த்துப் பார்த்துத்தான் வாங்கினேன்,” என்று ரவீந்திரன் விழித்துக் கொண்டிருக்கும்போதே –
“போங்க… இந்த வெண்டைக்காய் முற்றலா இருக்கு. என்னை தான் பார்த்தீங்களோ?” மாமியிடம் ஒரு முற்றலான வெண்டைக்காயை எடுத்துக் காண்பித்தபடி சலித்துக் கொண்டவாறு, அடுத்துக் கொத்தவரங்காயை எடுத்தவள், “ம்… ஊம்…” என்று முகம் சுளித்து, “இதான் மாமி, நான் இவர்கிட்ட ஒண்ணும் சொல்றதில்லே. காய்கறி வாங்கக்கூடத் தெரியலே பாருங்க,” என்று புலம்பினாள்.
உடம்பு சரியில்லை என்றவளுக்காக ஒத்தாசை செய்யப்போய் இப்படியானதே என்று தன்னையே நொந்து கொண்டு வெளியேறினான் ரவீந்திரன்.
அவனது வாடிப்போன முகத்தைக் கவனித்த மாமி, ரேணுகா விடம் மெதுவாக “அவருக்குத் தெரியலே…அவருக்குத் தெரியலேன்னு சொல்லறியே ரேணு, உனக்கு ஒண்ணு தெரியலையே?”
“என்ன மாமி?”
“அவர் வாங்கி வந்த எல்லாக் கத்தரிக்காயுமா சொத்தையா இருக்கு? எல்லா வெண்டையுமா முற்றலா இருக்கு? ஒண்ணு ரெண்டுதானே சரியில்லே? அதைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போகலாமே?”
“வந்து… மாமி… அவர் பொறுப்பா நடந்துக்கணும்னு தானே…”
“அதுக்கு நீ எப்படி நடந்துக்கணும்? குறைகளைச் சொல்லாம நிறைகளைச் சொல்லணும். பரவாயில்லையே, நீங்க சமத்தா வாங்கி வந்திருக்கீங்க. ஏதோ ஒண்ணு ரெண்டுதான் சொத்தை.. இந்த மாதிரி நீ சொன்னீன்னா அவருக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்?”
மாமி பேசப் பேசக் கத்தரிக்காயில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று வியந்து அவரை பார்த்துக் கொண்டேயிருந்தாள் ரேணுகா.
– 29-10-1992