(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அப்போது எனக்குச் சுமார் ஒன்பது வயதுதான் இருக்கும். மூன்றாவது அல்லது நான்காவது வகுப்புத்தான் படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் பள்ளி முடித்து வீட்டிற்குத் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடிவந்தேன்.
பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசு என்னை விட்டு வேறு யாருக்குமே செல்லாது. போட்டி முடிவதற்குள் முதல் பரிசு பொன்னுசாமிக்குத்தான் என்று எல்லோரும் சொல்லும் அளவிற்குப் பெயர் எடுத்திருந்தேன். அதேபோல பள்ளி முடிந்து வீட்டை அடைவதிலும் நான்தான் முதல் மாணவன்.
என் தாய்க்கு ஐந்து பிள்ளைகள். நான் தான் ஐந்தாவது பிள்ளை. நான் கடைசிப் பிள்ளை என்பதாலோ என்னவோ என்தாய் என்மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். நான் பள்ளி முடிந்து வருவதற்குள் என் தாய் தேயிலைத் தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருப்பார்.
வீட்டுக்கு வந்ததும் வராததுமாக சமையல் வேலையைச் செய்துவிட்டு எனக்காக வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருப்பார். என்னைக் கண்டதும் அவர் முகத்தில்புதிய மலர்ச்சியும் மகிழ்ச்சியும் தாமே வந்துவிடும். ஓடிவந்து என் புத்தகப் பையை வாங்கிக் கொள்வார். கை கால்களைக் கழுவச் சொல்லிவிட்டுச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்வார்.
சாப்பிடும்போது பள்ளியில் நடந்தவற்றைப் பற்றிக் கேட்பார். ஒன்று விடாது சொல்வேன். இடையிடையே என் பெருமையைக் கொஞ்சம் சொல்லு வேன். அப்போது ‘என் தங்க ராஜா’ என்று சொல்லி ஒரு முத்தம் கொடுப்பார்.
ஆனால் அன்று ஒருநாள் என் தாய் வீட்டின் முன் எனக்காகக் காத்திருக்க வில்லை. ஏன் அம்மாவைக் காணவில்லை? அம்மாவிற்கு என்னவாயிற்று? அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லையோ? வேலை செய்த இடத்தில் அம்மா மலைச்சாரலில் வழுக்கி விழுவந்திருப்பாரோ? அல்லது சமையல் செய்யும் போது அம்மா மீது சுடுநீர் ஊற்றி இருக்குமோ ஐயோ! அம்மாவிற்கு என்ன ஆயிற்று? என்று தாயைக் காணாத நான் ஒருவித தயக்கத்தோடும் கலக்கத்தோ டும் வீட்டிற்குள் நுழைந்தேன். அங்கே என் தாய் சோகமே உருவாகக் காட்சி தந்தார். அக்காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது.
ஆம்! கம்பீரமாகக் காட்சி தந்த தந்தை; அறிவூட்டி வளர்த்த தந்தை, யார் தப்புச் செய்தாலும் தயங்காது தட்டிக் கேட்ட தந்தை, நல்லவர்கள் மெச்சிய தந்தை, உயர்ந்த கருத்தையும் சிறந்த தத்துவத்தையும் உணவோடு சேர்த்து ஊட்டிய தந்தை உடல்நிலை முடியாத நிலையில் படுத்திருந்தார். இல்லை! இல்லை!! ஏதோ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார். அதுவரை அத்த கைய காட்சியைக் கண்டு அறியாத நான் உடல் குன்றிப் போய்த் தாயிடம் அப்பாவுக்கு என்னம்மா செய்யுது என்று அழுகையை அடக்கிக் கொண்டு கேட்டேன்.
”நெஞ்சை வலிக்கிறது என்று கங்காணி சொன்னார்; அதுதான் அழைத்துக் கொண்டு வந்தோம்;” என்று அவரிடம் வேலை பார்ப்பவர்கள் சொல்லிவிட்டு வேலைக்குப் போய்விட்டார்கள். அப்போதிலிருந்து நெஞ்சை வலிக்கிறது என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லவில்லை. நானும் எனக்குத் தெரிந்த மருந் தையெல்லாம் கொடுத்துப் பார்த்துவிட்டேன்; இன்னும் அப்படியேதான் இருக்கிறது; என்று ஏதோ பெரியவர்களிடம் சொல்வதைப் போல் சொல்லி முடித்தார்.
தந்தையின் நிலையைக் கண்டு ‘அப்பா’ என்று கத்திக்கொண்டே அழுதேன். அப்போது அவர் கையால் என் கண்ணீரைத் துடைத்து ‘அழாதே’ என்று சைகைக் காட்டினார். அதற்குள் என் மூத்த சகோதரர்களும் சகோதரிகளும் வந்துவிட்டார்கள். ‘கங்காணிக்கு உடலுக்கு முடியவில்லையாம்’ என்று சொல்லிக் கொண்டே அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் வந்து கூடிவிட்டார்கள்.
“பேய் அடித்திருக்குமோ? பிசாசு பிடித்திருக்குமோ?” என்று பலரும் பலவிதமாகப் பேசிக் கொண்டார்களே தவிர, என் தந்தைக்கு ‘மாரடைப்பு’ ஏற்பட்டுள்ளது என்று தெரிந்து அதற்கான மருத்துவத்தை யாரும் செய்ய வில்லை. தாங்கமுடியாத வலியால் துடித்த என் தந்தை சற்று நேரத்தில் எங்களை எல்லாம் விட்டு விட்டுப் போய்விட்டார்.
சுமங்கலியாக இருந்த என்னையும் என் பிள்ளைகளையும் இப்படி அனாதையாக விட்டுவிட்டுப் போய் விட்டீர்களே, பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும். நம் பிள்ளைகளின் அன்பையும் அடக்கத்தையும், அறிவையும், ஆற்றலையும் கண்டு சான்றோர் போற்றும்படி ஆக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வந்தீர்களே! நல்ல உத்தியோகத்திற்கு அனுப்பி கை நிறைய சம்பாதிக்க வேண்டும். சொந்த வீடு, வாசல் என்று செல்வத்தோடு வாழ வைக்க வேண்டும்; என்று எவ்வளவோ கற்பனைகளைக் கொண்டிருந்த நீங்கள், இப்படி அம்போ என்று தவிக்க விட்டுவிட்டுப் போய் விட்டீர்களே! என்று தாய் வாயி லும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுத அக்கோரக் காட்சி இன்றும் என் மனத்தில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கவே செய்கிறது.
தமிழர்கள் எந்த நாட்டிற்குக் குடியேறினாலும் அந்த நாட்டைத் தம் சொந்த நாடாகக் கருதி இரவு பகல் பாராது உழைப்பார்கள். இரத்தத்தை வியர்வையாக் கிப் பாடுபடுவார்கள். ஆனால் அந்த நாட்டில் நிலையாகத் தங்க மாட்டார்கள். அந்நாட்டைத் தம் தாய் நாடாக்கிக் கொள்ளமாட்டார்கள். அந்நாட்டோடு தம் வாழ்வும் தாழ்வும் உள்ளது என்று நினைக்க மாட்டார்கள்.
ஏதாவது சிறு சிக்கல் ஏற்பட்டால், சிறிய தொல்லை ஏற்பட்டால் அக்க ணமே உழைத்த உழைப்பை மறந்துவிட்டு, பட்ட பாட்டைப்போட்டு விட்டு இருப்பதை மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிடுவார்கள். ஏதோ அழியாச் செல்வம் குவிந்திருப்பதைப் போல, வாழ்நாள் எல்லாம் செல்வச் சிறப்போட வாழலாம் என்ற நப்பாசையில் உடனே தமிழ் நாட்டிற்குத் திரும்பிச் செல்வதையே பழக்கமாகக் கொண்டுவிட்டார்கள். அந்தத் தொட்டிற் பழக்கம் எங்களையும் சும்மா விட்டுவிடவில்லை.
“இனிமேல் இங்கே நமக்கு யார் துணை இருக்கிறார்கள்? வாங்க நாம் ஊருக்குப் போய் அங்கே நமது தாய் பிள்ளைகளோடு இருப்போம்” என்று எங்களை எல்லாம் அழைத்துக் கொண்டு என் தாய் இலங்கையிலிருந்து தமிழகத்துக்குப் புறப்பட்டார்.
எந்தத் தாய் தம் தாய்பிள்ளைகளை நம்பி ஊருக்கு வந்தாரோ அந்தத் தாய் தன் தாய்பிள்ளைகளைப் படிப்படியாக இழந்தார். ஆம் கொண்டு வந்த செல்வம் குறையக் குறைய உற்றார் உறவினர்களும் கொஞ்சங்கொஞ்சமாக விலகத் தொடங்கினார்கள்.
அதைவிடக் கொடுமை, உடன்பிறந்த என் மூத்த சகோதர சகோதரிகளும் திருமணம் செய்துகொண்ட பின்னர் என்னையும் என் தாயையும் சற்றும் கவனிக்கவே இல்லை. அவரவர் குடும்பத்தைப் பற்றியே கவலைப்பட்டனர். வயதான, கணவனை இழந்த என் தாயைப் பற்றிச் சற்றும் எண்ணிப் பார்க்கவே இல்லை.
பிள்ளைகளின் இந்தப் பண்பற்ற நிகழ்ச்சி என் தாய்க்குத் தாங்கொணாத் துன்பத் தைக் கொடுத்தது. பிள்ளைகளின் பொறுப்பற்ற செய்கையால் மனம் நொந்த என் அன்புத் தாய் என்னைத் தனிமரமாக்கிவிட்டார். தந்தையின் இழப்பை என் தாயின் அன்பு ஈடு செய்தது. அந்தத் தாயும் மறைந்த பின்னர் திக்கற்றவனாகத் திண்டாடினேன்.
சகோதரர்களோ, சகோதரிகளோ என்னைக் கவனிக்கவில்லை. கால் போன போக்கில், மனம் போன போக்கில் சுதந்திரப் பறவையாகச் சுற்றித் திரிந்தேன். அப்போது யார் எதைச் சொன்னாலும் தட்டாமல் செய்து கொடுப்பதே என் வேலையாக இருந்தது. சொன்ன வேலையைச் செய்துவிட்டுச் சோறு போட்டால் சாப்பிட்டுவிட்டுச் சோர்வுற்றால் தூங்கிவிடுவேன்.
ஒருநாள் பக்கத்து ஊருக்கு வண்டி ஓட்டிக் கொண்டு சென்றேன். ஊரை அடைந்ததும் வண்டியில் இருந்த நெல் மூட்டைகளை இறக்கி அடுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். பாசத்துடன் உரையாடினார். மூட்டைகளை இறக்கியபின் ‘வாப்பா தண்ணீர் சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம்’ என்று அன்போடு அழைத்தார்.
எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் அந்தப் பெரியவரும் அவர் குடும்பத்தினரும் காட்டிய அன்பும் பாசமும் என்னையும் அறியாமல் ஏதோ செய்தது. மனந்திறந்து அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது இளமங்கையொருத்தி நீராகாரம் கொண்டு வந்தாள். தலைநிமிர்ந்து பாராது நீராகாரத்தைக் கொடுத்தாள்.
அந்தப் பெண்ணிடம் கண்ட அடக்கமும், பண்பும், அழகும் இதுவரை எந்தப் பெண்ணிடமும் செலுத்தாத பாசம் என்னுள்ளத்திலிருந்து எழுந்தது. நீராகாரத்தைப் பருகிய பின் அவர்களிடமிருந்து பிரியா விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டேன்.
சுதந்திரப் பறவையாகச் சுற்றித் திரிந்த என்னிடத்தில், அந்தப் பெரியவரை யும், அவர் மனைவி, மகளையும் சந்தித்த பின் அவர்களிடத்தில் ஒரு தனிப்பாசமும், பரிவும் எப்படி? ஏன்? ஏற்பட்டது என்று எனக்கே தெரியாமல் இருந்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பின் அவ்வூருக்குச் சென்றால் அவர்கள் வீட்டிற்குச் சென்று வருவது வழக்கமாயிற்று.
மாதங்கள் ஆண்டுகளாயின. குனிந்த நிலையில் கண்ட பெண் நிறைந்த அன்பு செலுத்துவதை உணர்ந்தேன். திருமணத்தைப் பற்றியே எண்ணிப் பார்க் காதிருந்த எனதுள்ளத்தில் அப்பெரியவரின் மகளையே மணக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
எனதூரில் உள்ள பெரியவர் சிலரிடம் அபிப்பிராயத்தைச் சொன்னேன். ‘பொறுப்பில்லாமல் திரிகின்ற உனக்கு ஒரு கால் கட்டைப் போட்டால்தான் பொறுப்பு வரும்’ என்று கூறியவர்கள் அடுத்தநாளே நல்ல நேரம் பார்த்துப் பெண் கேட்கப் புறப்பட்டனர்.
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய எனக்காக என் அன்னை காத்திருந்ததைப் போல பெண் கேட்கச் சென்றவர்களுக்காக நான் காத்திருந்தேன்.புன்னகையோடு வந்தவர்களைப் பார்த்தபோது மன நிம்மதி பெற்றேன்.
மூன்று மா நிலமே என் சொத்து என்பதையும் சிறு குடிசையே என் மாளிகை என்பதையும் அதைத்தவிர உரிமை கொண்டாட வேறு ஏதுமில்லை என்ற உண்மையையும் எனது வருங்கால மாமன் மாமியிடத்தில் கூறினேன்.
சற்று வசதி நிறைந்த அவர்கள் பெண்ணைக் கொடுத்து வாழ்வதற்குத் தேவையான பொருட்களையும் அளித்துத் தெய்வம் போல் காதது வந்தனர். எனது மைத்துனர்கள் மூவரும் எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொடுத்து வந்தனர்.
எனக்கொரு மகன் பிறப்பான்; அவனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று மனக்கோட்டை கட்டினேன். அவ்வாறு ஆசைப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு மகன் பிறந்து அந்த ஆசையைத் தீர்த்துவைத்தான். நடக்கத் தொடங்கிய அவன், தோட்டத்திற்கு வந்து சொன்ன வேலையைச் செய்ய முற்பட்டபின் வறுமையும் வாட்டமும் படிப்படியாக நீங்கத் தொடங்கியது.
‘ஊருக்கு உழைத்துக் கொண்டிருக்கின்ற உனக்கு ஒரு கால்கட்டை போட் டால்தான் பொறுப்போடு வாழ்வாய்’ என்ற பெரியோர்களின் கூற்றுக்கு ஏற்ப மனைவி மக்கள் என்ற பந்தம் ஏற்பட்டபின் குடும்பத்திற்காக அல்லும்பகலும் அரும்பாடு பட்டு உழைத்தேன்.
என்னதான் பாடுபட்டாலும் வானம் பார்த்த அந்தப் பூமியில் மழை பெய்யாவிட்டால் பட்ட பாடெல்லாம் பாழாய்ப் போய் விடுகிறது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது.
மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் விட்டுவிட்டுப் பொருள் தேடு வதற்காகச் சிங்கப்பூருக்கு வந்தேன். சிங்கப்பூரில் எனக்கேற்ற வேலை கிடைக் காததால் பல மாதங்களை வேலை தேடுவதிலேயே கழித்தேன். அற்றைக்கூலி வேலை செய்த என்னை உறவினர்களும் நண்பர்களும் ஜாடை மாடையாகக் கேலி பேசத் தொடங்கினர். அவர்களின் கேலிப் பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ந்தாற் போல் இருந்தது.
மாதங்கள் கடந்து ஆண்டுகளாயின. சேர்ந்திருந்த எனதுள்ளத்தில் ஓர் எண்ணம் உதயமாயிற்று. ஆம் மலாயாவிலிருந்த உறவினர்கள் வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தேன். அப்போதிருந்த என் மனநிலையில் என்னைச் சிங்கப் பூருக்கு அழைத்தவரிடம்கூட சொல்லாமல் திடீரென்று புறப்பட்டு மலாக்காவிற் குச் சென்றேன்.
சற்றும் எதிர்பாராது என்னைச் சந்தித்த உற்றார் அன்போடு வரவேற்று நலம் விசாரித்தார். என் கதையைக் கேட்ட பின் அவர்கள் வேலை செய்த தோட்டத்தில் புல்வெட்டும் இயந்திரத்தை இயக்கும் வேலையை வாங்கிக் கொடுத்தனர். மன நிறைவோடு அவ்வேலையில் ஈடுபட்டுச் செயலாற்றி வந்தேன்.
ஒருநாள் வேலை முடிந்து வீட்டை வந்தடைந்தேன். அங்கே எனக்காக ஒரு மடல் காத்துக்கிடந்தது. எடுத்து ஆவலோடு பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். மடலைப் படிக்க முடியாதபடி கண்ணீர் கண்ணை மறைந்தது. கண்ணைத் துடைத்துக்கொண்டு கடிதத்தை ஒரு வழியாகப் படித்து முடித்தபோது அடக்க முடியாத அழுகை வாய்விட்டு அழச் செய்தது.
எந்த மனைவி மக்களுக்காக மழை வெளியல் என்று பாராது பாடுபட்டுத் தேடிக் கொண்டிருக்கிறேனோ அவர்களிடமிருந்து வந்த மடல்தான் அது. உயிருக்கு உயிராக நேசித்துக் கொண்டிருக்கிற மனைவிதான் கடிதத்தை எழுதியிருக்கிறாள். நீராகாரத்தைக் கொடுத்து என்னை ஆட்கொண்டவள்தான் எழுதியிருக்கிறாள். கனவிலும் நினைவிலும் நீங்காது காட்சி தருகின்ற துணைவிதான் எழுதியிருக்கிறாள். யாருக்காக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறோனோ அவள் தான் எழுதியிருக்கிறாள். இல்லை! எழுதவில்லை!! சொல்லால், வார்த்கையால் சுருக்குச் சுருக்கு என்று குத்தியுள்ளாள்.
”நானும், நான்கு பிள்ளைகளும் ஒரு வேலை உணவுக்கும் உடைக்கும் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அங்கே நீங்கள் யாரோ ஒருத்தியுடன்; கல்யாணம் ஆகாத கன்னியுடன் காதலாம்; மதுவை அவள் ஊற்றிக் கொடுக்க அதை உண்டு களித்துவிட்டுக் கும்மாளமாம்; இப்படி உல்லாச வாழ்கையாம். இது உண்மையா? உண்மையெனில் அது நியாயமா? எங்களை மறந்துவிட்டீர்களா? எங்கள் மீது உண்மையான பாசமிருந்தால் உடனே புறப்பட்டு வந்துவிடுங்கள்”….இப்படித்தான் அவள் கடிதம் தொடர்கிறது.
வயிற்றைக் கட்டி வாயைக் கட்டிச் சம்பாதித்துக் கொண்டிருக்கின்ற எனக்கு என் மனைவி எழுதிய கடிதந்தான் அது. கடிதத்தைப் படித்த பின்னர் என் எண்ணங்கள் பலவாறாகச் சிறகடித்துப் பறந்தன. ஒரு முடிவும் எடுக்க முடியாது தடுமாறிக் கொண்டிருந்தேன்.
அன்றொரு நாள் யாரோ கதவைத் தட்டும் ஒசை கேட்டது. எழுந்து சென்ற கதவைத் திறந்தபோது என் மனைவியின் மூத்த சகோதரர் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டேன். ஒருவாறு சமாளித்துக் கொண்டு மைத்துனரை வரவேற்று அமரச் செய்து உபசரித்தேன். ‘என்ன இப்படித் திடீரென்று வந்திருக்கிறீர்கள்?’ என்று அமைதியாகக் கேட்டேன்.
“நான் ஏதேதோ பல செய்திகளைக் கேள்விப் பட்டேன். அதன் உண்மையை அறிந்து போகவே உடனே புறப்பட்டு வந்தேன். வந்தபின்னர் தான் கேள்விப்பட்ட செய்திகள் எல்லாம் பொய் என்று தெரிந்து கொண்டேன்” என்று சொல்லிய மைத்துனரிடத்தில் மனைவி எழுதிய கடிதத்தைக் கொடுத்தேன்.
“ஒரு பெண் தனியாக இருந்தால் இப்படிப் பலரும் பலவிதமாகப் பேசுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தச் சொல் ஓர் ஆண் தனியாக இருந்தால் கூட உருவாகிறது என்று இப்போதுதான் அறிந்து கொண்டேன். சரி நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும். கூடவோ, குறையவோ நாம் எல்லாரும் ஒரே இடத்தில் இருந்தால் இப்படிப்பட்ட அவச் சொற்கள் வராது, புறப்படுங்கள் நாம் சிங்கப்பூருக்குப் போய்விடுவோம்” என்று அவசரப்படுத்தினார்.
‘வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தை வாங்கிக் கொண்டு தெரிந்த வர்களிடமமும் உறவினர்களிடமும் சொல்லிவிட்டு விரைவில் வருகிறேன்’ என்று கூறியகூற்றை மைத்துனர் ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு வழிஇன்றி அப்போதே புறப்பட்டுச் சிங்கை வந்து சேர்ந்தோம்.
வந்து சேர்ந்த சில நாட்களில் வேலையும் கிடைத்தது. அந்த வேலையைச் செய்துகொண்டிருந்த போது உடன் வேலை செய்தவர் தன் மகனை வரவழைத்த விபரத்தைப் பற்றிக் கூறினார். அதைக் கேட்ட அக்கணமே “ஏன் நானும் என் மகனை வரவழைக்கக்கூடாது?” என்ற கேள்வி அடிக்கடி எழுந்தது. சில நாட்கள் யோசனைக்குப் பின் உன்னை அழைக்க முயற்சி செய்தேன். இப்போது ‘நீயும் சிங்கப்பூருக்கு வந்து விட்டாய்’ என்று தன் கதையை மகனிடம் சொன்னார்.
கதையைக் கேட்டுக் கொண்டிருந்த மகன் ‘அப்பா உங்களின் கதையைக் கேட்கின்ற போது உண்மையிலேயே சோகமாக இருக்கிறது. நீங்கள் நினைக்கின்றபடி நான் வாழ்கிறேன். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள்’; என்று கேட்டுவிட்டுத் தந்தையின் முகத்தை உற்றுக் கவனித்தான்.
தீயை வைத்துக் கொண்டு திருக்கறளையும் படிக்கலாம். அதே தீயைக் கொண்டு ஊரையும் அழிக்கலாம் என்பார்கள். அதைப் போல சிங்கப்பூரும் ஒரே தீதான். முயற்சித்து முன்னேற விரும்புகின்றவர்களுக்குச் சிங்கப்பூர் எல்லா வாய்ப்பு வசதிகளையும் வழங்குகிறது. அதே நேரத்தில் கெட்டு அழிய விரும்புகின்றவர்களுக்கும் வாய்ப்பு வசதிகள் இருக்கவே செய்கின்றன. எனவே ஒருவர் நன்றாக வருவதும் கெட்டுப்போவதும் அவரவர் எண்ணத்தை. செயலைப் பொறுத்தது; என்று ரெத்தின சுருக்கமாக அறிவுரை கூறி முடித்தார்.
‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற பழமொழிக்கு ஏற்ப, மகன் தந்தை சொல்லிய வண்ணம் கேட்டு வந்தான். தந்தை எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாய்வான் என்பதைப் போலப் படித்த காலத்திலேயே உழைத்துச் சம்பாதித்தும் வந்தான். அதனால் உழைப்பின் அருமையையும், அந்த உழைப்பினால் கிட்டிய பணத்தின் அருமையையும் உணர்ந்தே வளர்ந்து வந்தான்.
மகனின் பொறுப்பையும் திறமையையும் மனதிற்குள்ளேயே எண்ணி மகிழ்ந்தார். ஆனால் தேடிய சொத்தையொல்லாம் தமிழ் நாட்டிலிருக்கின்ற மனைவி மக்களுக்கு மறக்காமல் அனுப்புவதிலேயே கவனமாக இருந்தார். அனுப்புகின்ற பணம் எப்படிச் செலவாகின்றது என்பதை எண்ணினாரில்லை. ஆண்டுகள் ஓடிக் கொண்டிருந்தன.
மேலும் மேலும் பொருள் தேட வேண்டும் என்று ஆசை இருந்தாலும் வயதும் உடலும் இடம்கொடுக்க வில்லை. ஆம். அறுபது வயதைக் கடந்ததும் கட்டாய ஓய்வும் கிடைத்தது. மகனிடம் காண்பித்துக் கருத்துக் கேட்டார்.
உழைப்பின் அருமை தெரியாது ஊரில் உள்ளோர் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் பணத்தை உங்கள் பெயரில்போட்டுக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அனுப்புங்கள். அல்லது மொத்தமாக அனுப்ப விரும்பினாலும் அனுப்புங்கள். ஆனால் ஊருக்குப் போக வேண்டாம். இங்கேயே இருங்கள். உங்களை நான் கவனித்துக் கொள்கிறேன் என்று மகன் கூறியதும் தந்தைக்குக் கோபம் வந்துவிட்டது.
யாருடா இவன்? எத்தனை ஆண்டுகளாக மனைவி பிள்ளைகள், பேரப் பிள்ளைகளைப் பார்க்காமல் இங்கேயே இருந்துவிட்டேன். இனிமேல் ஒரு நிமிடம் கூட இங்கே இருக்க முடியாது. பணத்தை எல்லாம் மாற்றிக் கொண்டு வா. அத்துடன் ஊருக்குப் போவதற்கான ஏற்பாடுகளையும் உடனே செய் என்று கண்டிப்பாகக் கூறினார்.
எவ்வளவோ கூறியும் கேட்கவில்லை. வேறு வழி இல்லாத மகன் ‘சரி யப்பா ஊருக்குப் போங்கள். ஆனால் அங்கேயே தங்க வேண்டாம். சீக்கிரமாகச் சிங்கப்பூருக்கு வந்திடுங்கள்’ என்று சொல்லி அனுப்பிவைத்தான்.
தந்தை வருவார்; வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மகனுக்குத் தந்தி ஒன்று வந்தது. வந்த தந்தியை வாங்கிப் படித்தான். ஆனால் அவனால் படிக்க முடியவில்லை. கண்கள் நீருக்குள் மூழ்கிவிட்டன. நீர் சொட்டுச் சொட்டாகக் கொட்டிக் கொண்டிருந்தன. உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. தாங்க முடியாத துயரத்தில் துவண்டு போயிருந்த வேளையிலும் இதயத்தில் ஓர் ஐயம் எழுந்தது.
அன்பூட்டி, அறிவூட்டி ஆளாக்கிய தெய்வத்தை எங்கே அனுப்பினேன்? என்பதே நெஞ்சின் ஆழத்தில் நெருடிக் கொண்டிருந்த வினாவாகும்.
– தனிமரம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1990, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.