வயலுக்குள் நாற்று நட்டு விட்டு எட்டு வைக்க எழுந்த குந்தவைக்கு குறுக்கு புண்ணாக வலித்தது. கண்ணுக்கு எட்டியதூரம் யாரும் தட்டுப்படவில்லை. மாடுகள் மட்டும் காலையில் போட்டு வந்த தட்டின் அடிப்பாகத்தை வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக மென்று திண்பதை கண்டாள்!
‘காலையில் சேவல் கூவ கேட்டதும் எழுந்த மனுசன் குளிக்காமக்கூட அன்றவாருக்கு மேல அழுக்கு வேட்டிய கட்டிட்டு,மொபட்ட தள்ளி ஸ்டார்ட் பண்ணிட்டு போனவர்தான், மதியம் ரெண்டாச்சு காணல. கூடவே எந்திரிச்ச நானும் வீட்டக்கூட்டி,வாசக்கூட்டி,மாட்ல பாலக்கறந்து, குழந்தைய குளிக்கவச்சு,சோறூட்டி, சைக்கிள்ல மூணு மைலு தாண்டி கவர்மெண்ட் பள்ளில குழந்தைய விட்டுட்டு வந்து,மாட்டுக்கு தீண் போட்டுட்டு ,நேத்து கன்னு போட்ட மாட்டுக்கு கஞ்சி காச்சி ஊத்திட்டு,முடமா கிடக்கிற மாமியாருக்கு குளிச்சு சேலைமாத்தி விட்டு, சோறு கொடுத்துட்டு,நானும் மீதம் இருந்த சோறுண்டு வந்து ஒம்பது மணிக்கு வயல்ல இறங்கி, ரெண்டு வயல்ல ஒத்த ஆளா நாத்து நட்டுருக்கேன். கட்டுன மனுசன் குடித்தனத்த மறந்துட்டு குடிக்கிற தனத்த கைல எடுத்துட்டாரு. எங்க ரோட்ல கிடக்கிறாரோ..?’ என எண்ணிய குந்தவைக்கு கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது!
“ஏண்டா உனக்கறிவிருக்கா…? ஒத்த மனுசியா எந்தம்பி பெத்த புள்ள எத்தன பாடு படுது…?பத்து பேரு வேலைய ஒத்தப்புள்ளைய செய்ய வைக்கிறியே, நீ மனுசனா…? உனக்கு படிப்பும் ஏறல. பாடும் படத்தெரியல. உன்ன நெனச்சே உங்கொப்பனும் கண்ண மூடிட்டான். இந்த முண்டச்சி நானு எத்தன நாளைக்கு இருக்கப்போறனோ..? பச்சக்கிளி மாதர படிச்ச பொண்ணு சொந்தம்னு நெனச்சு உன்ன கட்டிக்கிறேன்னு சொன்னதே பெருசுடா. இப்ப ஒரு கொழந்தையும் பொறந்திருச்சு.
இப்பவாவது புத்தி வேண்டாமா…? பத்தாததுக்கு குடிக்க வேண்டான்னு சொன்னா, பொண்டாட்டிய அடிக்கப்போற…?”என்ற குந்தவையின் மாமியார் தன் மகனைத்திட்டினாள்!
குந்தவை படிப்பில் படு சுட்டி. கலெக்டராக வேண்டுமென்பது அவள் கனவு. விவசாயியான தந்தை பூமி சரியாக விளையாமல் போனதால்,பூமியை விற்று செலவழித்து உடல் கெட்டு இறந்து விட்டார். கல்லூரியில் சேர்ந்த தருணத்தில் தாயும் நோய்வாய்பட்டு இறந்து விட ,அத்தை மகன் வந்தியனுக்கு உறவுகள் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்க,அவள் மனதுக்கும் பிடித்துப்போக ,சம்மதித்ததன் பலன் ஏழு வயதில் இரண்டாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை!
தான் ஆசைப்பட்ட படிப்பை தன் மகளையாவது படிக்க வைத்து சாதிக்க வேண்டும் என திட்டமிட்டவளுக்கு கணவனின் குடிப்பழக்கம் வேதனை தந்தது!
இரவு அதிகமாக குடித்துவிட்டு வந்த கணவனோடு சண்டை போட்டாள். சோர்வில் உறங்கிப்போனவள், கண் விழித்த போது,தன் மகள் தனது இடுப்பு அரணாவில் தனது சேலை முந்தானையையும்,தன் தந்தையின் வேட்டி நுனியையும் முடிந்து உறங்குவது கண்டாள். தன் கணவன் அழுது கொண்டு இருப்பதையும் பார்த்து தானும் கண்ணீர் சிந்தினாள்!
என்றைக்கும் மாறாக இன்று தன் தந்தை காலைப்பிடித்து அழுது,அடம்பிடித்து,பள்ளிக்கு அழைத்துச்செல்ல குழந்தை சொல்ல அவரால் மறுக்க முடியவில்லை. குழந்தையை பள்ளியில் விட்டவர் உடனே வீடு திரும்பியது ஆச்சர்யமாகவும்,ஆனந்தமாகவும் இருந்தது குந்தவைக்கு. கணவரது மன மாற்றத்தால் இருவரும் தங்கள் தோட்டத்தில் கடினமாக உழைத்து,நல்ல விளைச்சலும் எடுத்து, அதை விற்று எதிர்காலத்திற்கான சேமிப்பாக வங்கியில் போட்டு விட்டு ,வீடு வந்து கண்ணாடி முன் நின்று பார்த்த போது,தனது லட்சியம் தனது குழந்தை மூலம் நிறைவேறுமென்ற நம்பிக்கை மலர் தன் கண்களில் பூத்திருப்பதை தெரிந்து கொண்டு பூரிப்படைந்தாள் குந்தவை!