“பளார்” எனக் கன்னத்தில் மேலாளர் சந்தானம் அறைந்ததும், ஒரு நிமிடம் கலங்கிப் போனான் சங்கர். அப்படியே வெளியே வந்து தன் இடத்தில் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்துச்சுயநினைவுக்கு வந்தான்.
அடுத்த இரண்டு நாட்கள் அலுவலகம் வரவில்லை. மேலிடத்தில் புகார் செய்யலாமா என்று யோசித்தான் சங்கர். அதனால் தன்னுடைய பதவி உயர்வு பாதிக்கும் எனத் தோன்றியதால்,அடுத்த நாள் ஞாயிறு விடுமுறை என்பதால் மேலாளர் வீட்டில் இருப்பார். நேரில் வீட்டுக்குச் சென்று பேசலாம் என்று முடிவு செய்து தூங்கிப் போனான்.
அடுத்த நாள் சீக்கிரம் எழுந்து மேலாளர் வீட்டுக்குச் சென்றான். சங்கரைக் கண்டதும் வரவேற்ற சந்தானம் தன் மனைவியிடம் காபி எடுத்து வரச் சொன்னார்.
“என்ன சங்கர் இரண்டு நாளா அலுவலகம் வரலை?” என்று கேட்டார் சந்தானம்.
“உங்களுக்குத் தெரியாதா சார்” என்று கேட்டான் சங்கர்.
“அலுவகத்தில் இதெல்லாம் சகஜம் சங்கர்” என்றார் சந்தானம்.
“என் மேல என்னதான் தப்பு பண்ணிருந்தாலும் திட்டி இருக்கலாமே சார். சடார்ன்னு அடிச்சிட்டீங்களே சார்.” என்றான் சங்கர்.
“நீங்கத் தப்பு பண்ணிங்க அதனால கோவம் வந்துடுச்சு அடிச்சேன்.” என்றார் சந்தானம்.
“நான் உங்களுக்குக் கீழ வேலை செய்யுறேன் என்பதற்காக, நான் உங்களுக்கு அடிமையும் இல்லை. எனக்கு மேலதிகாரி என்பதற்காக நீங்கள் கடவுளும் இல்லை என்பதைப் புரிஞ்சுக்கங்க.”என்றான் சங்கர்.
“உண்மைதான், நான் கடவுள் இல்லை, நீங்க அடிமையும் இல்லை. ஏன் அடிச்சதனால என்ன குறைஞ்சு போயிட்டீங்க?” என்றார் சந்தானம்.
“சின்ன வயசுல அடிவாங்குறது பெரிய பாதிப்பு இல்லை. ஆனா, இத்தனை வயசுல அடி வாங்குறது, மனசை ரொம்ப பாதிக்குது. அதைச் சொன்ன புரியாது. அனுபவிச்சா தான் தெரியும் மனசுஎவ்வளவு வலிக்குமுன்னு அப்பதான் தெரியும்.” என்று ஆவேசமாய்ச் சொன்னான் சங்கர்.
“ஓஹோ, அப்படியா? நீங்க சொன்னது எல்லாம் உண்மைதான். உங்களுக்கு மட்டும் தான் வலிக்குமா? மத்தவங்களுக்கு வலிக்காதா?” என்றார் சந்தானம்.
“என்ன சொல்லுறீங்க?” என்றான் சங்கர்.
“உங்களுக்கு மட்டும்தான் வலிக்கும் மத்தவங்களுக்கு வலிக்காது அப்படிதானே.” என்று கேட்டார் சந்தானம்.
“புரியலையே சார்” என்றான் சங்கர்.
“உங்களுக்கு, அடிபட்டது மட்டுமல்ல மனசும் வலிக்கும். நீங்கள் கை நீட்டி அடிக்கும் போது, உங்கள் மனைவிக்கு வலிக்காது.” என்று கேட்டார் சந்தானம்.
“சார்… சார்…” என்று தடதட என்று உளறினான் சங்கர்.
“உங்களுக்கு இப்ப இருப்பது மாதிரித் தானே அவங்களுக்கும் இருந்திருக்கும். ஒரு தடவை அடிச்சதுக்கே உங்களுக்கு இப்படி இருக்கே. நீங்க எத்தனைத் தடவை அடிச்சிருப்பீங்க? எப்படிஎல்லாம் கஷ்டபட்டிருப்பாங்க.
சாதாரணமா கன்னத்தில அடித்ததற்கே இரண்டு நாள் அலுவலகம் வரலை. ஆனா உங்க மனைவியை ரத்தம் வர மாதிரி எல்லாம் அடிச்சிருக்கீங்க.” என்று சொன்னார் சந்தானம்.
“சார்… சார்…” என்று மீண்டும் உளறினான்.
“வீட்டு வேலைச் செய்யும் போது அடிப்பட்ட இடம் எப்படி வலித்திருக்கும், அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு, உங்களுக்குச் சாப்பாடு, உடைகள் என்று எதையும் விடாமல் செய்துஉங்களைப் பாத்துக்கிறாங்களே, அது எவ்வளவு பெரிய கஷ்டமுன்னு புரியுதா?
நிம்மதி இல்லாத என்ன வாழ்க்கை என்று சில சமயங்கள்ல செத்து போயிடலாமான்னு கூடத் தோணியிருக்கும். ஆனாலும் அதை எல்லாம் தாண்டி உயிரைக் கையில பிடிச்சிக்கிட்டுஉங்களோட வாழ்ந்துகிட்டு இருக்காங்கன்னா இது உங்களோட குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மட்டும்தான்.” என்றார் சந்தானம்.
“என்னை மன்னிச்சுடுங்க சார். கை நீட்டி அடிக்கிறது எவ்வளவு பெரிய தப்புன்னு புரிஞ்சிகிட்டேன். இனிமே அடிக்க மாட்டேன்.” என்று சொன்னான் சங்கர்.
அப்போது காபி எடுத்து வந்த சந்தானத்தின் மனைவி வினோதினி, காபி கொடுத்துவிட்டு அருகே அமர்ந்தார்.
“சங்கர் சார், உங்க சாருக்கும் இது போலக் கோவம் வந்து அடிச்சிடுவார். ஒரு முறை வேலைய முடிச்சிட்டு இரவு ரொம்ப தாமதமா வந்தார். ஏன் இவ்வளவு நேரம் கேட்டேன்.
கோவம் வந்து, வேகமா கன்னத்தில “பளார்” ன்னு அடிச்சிட்டார். எனக்குக் காது “கொய்ன்னு” சத்தம், அந்த வலியிலேயே தூங்கிட்டேன். காலையில எழுந்தா அடி விழுந்த காதுல எதுவுமேகேட்கலை. அவசரமா டாக்டர்கிட்ட போன காதோட ஜவ்வு கிழிஞ்சிடுச்சுன்னு சொன்னாங்க.
என்னாச்சின்னு கேட்டாங்க, நான் குழந்தைகள் அடிச்சாங்கன்னு சமாளிச்சேன். ஆனா டாக்டர் கண்டு பிடிச்சிட்டாங்க. அப்புறம் என்னை வெளிய அனுப்பிட்டு டாக்டர் இவங்களுக்கு அறிவுறைசொன்னாங்க.
எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கனும், கை நீட்டி அடிச்சா நஷ்டம் எல்லாருக்கும்தான் என்று சொல்லி மருத்துவம் பார்த்து அனுப்பினாங்க.
அதற்குப் பிறகு எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கோவம் வந்தாலும் இவர் அடிக்க மாட்டார். நானும் விட்டுக் கொடுத்துப் போயிடுவேன். 10 வருடம் கழித்து அதே டாக்டரைப் பார்க்கப்போனப்ப “இதற்கு முன்னாடி வந்திருக்கீங்களா?” என்று கேட்டதற்கு ஏற்கனவே வந்த விசயத்தைச் சொன்னோம்.
“அப்பவும் அடிக்கிறாங்களா?” என்று டாக்டர் கேட்டதற்கு, நீங்க சொன்ன பிறகு இதுவரைக்கும் அடிக்கலை டாக்டர். எதையும் பேசித் தீர்த்துக் கொள்கிறோம். வாழ்க்கை ரொம்ப சந்தோசமாஇருக்கு டாக்டர். என்று சொன்னேன்.
அதற்கு அந்த டாக்டர் எழுந்து நின்று வணக்கம் வச்சாங்க. என்ன டாக்டர் என்று நாங்க பதறிப் போனோம்.
“கிட்டதட்ட 10 வருடமா அடிக்காம இருக்காருல்ல அதற்கு ஒரு டாக்டரா நான் செய்யும் மரியாதை” ன்னு சொன்னாங்க.
ஒரு மனைவியா நான் இவரோ வாழக் கொடுத்து வைத்திருக்கனுன்னு நான் நினைத்து வாழ்கிறேன் பாருங்க அதுதான் வாழ்க்கை.
இப்படி ஒரு வாழ்க்கைய உங்க மனைவிக்குக் கொடுத்துப் பாருங்க. அவங்களுக்கு நீங்க கடவுளாதான் காட்சி அளிப்பீங்க.” என்று முடித்தார் விநோதினி.
“என்னை மன்னிச்சுடுங்க அம்மா இனிமே என்ன கோவம் வந்தாலும் என் மனைவிய அடிக்க மாட்டேன். அவளுக்கு உயிரும் உணர்வும் இருக்குன்னு புரிஞ்சிகிட்டேன்.” என்றான் சங்கர்.
“ரொம்ப சந்தோசம் சங்கர்” என்றார் சந்தானம்.
“ஆமாம் சார், நான் மனைவிய அடிச்சது எப்படித் தெரியும் ?” என்று வியப்போடு கேட்டான் சங்கர்.
“நான் மார்கெட்டுக்கு சென்றபோது ஒரு அம்மா முகத்தைச் சேலையால மூடிக்கிட்டு குழந்தையோட வந்தாங்க, யாருன்னு தெரியலை. அப்புறம் பார்த்த உங்க குழந்தை.
நான் அருகே சென்று என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு அவங்க ஒன்னுமில்லை மேடம்ன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. ஆனா முகத்துல வீக்கம் தெரிஞ்சுது.” என்று சொன்னார் வினோதினி.
“அப்புறம் எப்படி? “ என்று கேட்டான் சங்கர்.
“கொஞ்சத் தூரம் தள்ளி டாக்டர் வீட்டுக்கு உங்க பையனை வெளில உட்கார வைத்து விட்டுப் போனாங்க. நான் உடனே சென்று என்ன ஆச்சு அம்மாவுக்குன்னு கேட்டதும்.
நீங்க அடிச்சது ரத்தம் வந்தது எல்லாம் சொன்னான். அதற்காக டாக்டர்கிட்ட காட்ட வந்திருக்கோம்-ன்னு சொல்லிட்டுக் கூடவே எங்க அப்பா நல்ல அப்பா இல்லை என்று சொன்னான். அதுஉங்க மனைவி எவ்வளவு கஷ்டபடுறாங்க என்பது புரிஞ்சது. அதனாலதான் உங்க சார்கிட்ட சொன்னேன்.” என்று சொன்னார் வினோதினி.
பிள்ளையே வெறுத்துப் போகும் அளவிற்கு நாம் நடந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணித் தலை கவிழ்ந்தபடி விடைபெற்றான் சங்கர். இனி நல்ல கணவனாக, அப்பாவாக இருப்பான்என்று தோன்றியது சந்தானத்திற்கும் வினோதினிக்கும்.
“ரொம்ப நன்றி சார். நான் சொன்னதால அடிச்சி புத்திமதி சொல்லித் திருத்தீட்டிங்க.” என்று சங்கரின் மாமியார் தொலைபேசியில் அழைத்துச் சொன்னார், நெகிழ்வோடு.