பல் துலக்கி முகம் கழுவி கண்ணாடியில் முகம் பார்த்து குங்குமம் வைத்த கமலம் அதிர்ந்தாள். ஒரு காதில் கம்மலைக் காணோம். அரைப்பவுனில் புஷ்பராக கம்மல். ராசியான கம்மல் ஒற்றைக் கம்மலின் விலையே பத்தாயிரம் இருக்கும். இரவு படுக்கும் போது கூட நன்கு திருகிவிட்டுத்தான் படுத்தாள். பாத்ரூம் கூட போகவில்லை. ஹாலில் சோபாவில்தான் படுத்து இருந்தாள். அப்படியானால் ஹாலில்தான் விழுந்து இருக்க வேண்டும். ஹாலுக்கு விரைந்தாள். அதற்குள் வேலைக்கார பெண் ராதா ஹாலைப் பெருக்கித் துடைத்துக் கொல்லைப்புறத்தில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.
சோபாவில் கம்மல் இல்லை. மகனையும், மருமகளையும் கேட்டாள். நன்றாக தேடிப்பாருங்கள் என்று அவர்களும் பதட்டத்துடன் வீட்டில் ஒரு இடம் கூட விடாமல் அங்குலம், அங்குலமாக தேடிவிட்டனர். எங்கும் கம்மல் இல்லை. ‘இந்த வேலைக்கார குட்டிதான் எடுத்து இருக்கணும். நேற்று அவ அம்மாவுக்கு உடம்புக்கு முடியல.ஏதோ ஆபரேஷன் பண்ணனும்னு அழுதுகிட்டு இருந்தா’ என்றவளை இடைமறித் தான் கமலத்தின் மகன்.

‘அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதம்மா. இங்கதான் விழுந்திருக்கும். நல்லா தேடிப் பாருங்க’ என்றான்.
‘உங்க ஆபிஸ் ஸ்வீப்பரோட பொண்ணு. நல்லா படிப்பா. இப்ப லீவுல இருக்கிறா. நம்மோட சம்பளம் அவ படிப்பு செலவுக்கு ஆகும்னு நீதான் வேலைல சேர்த்த. அவ, அவ வேலையை காட்டிட்டா. இப்ப நான் என் வேலையை காட்டறேன், என்று ஆவேசத்துடன் விளக்கு மாற்றை எடுத்துக் கொண்டு கொல்லைப்புறம் போனாள் கமலம்.
மகனும், மருமகளும் தடுக்க தடுக்க ஆவேசத்துடன் கொல்லைப்புறம் சென்றவள் அங்கு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமியை ஓங்கி உதைத்தாள்.
‘எங்கடி கம்மல்?’
‘எந்தக் கம்மல்மா?’
‘நீ இப்படியெல்லாம் கேட்டா சரிபட மாட்டா. இதோ இப்பவே போலீசுக்கு போன் பண்றேன்’ என்றபடி முந்தானையை உதறி திரும்ப ‘சிலீங்’ என்ற சப்தத்துடன் கம்மல் முந்தானை மடிப்பிலிருந்து கீழே விழுந்தது.
கூனிக் குறுகினாள் கமலம்.
அதுவரை அழுதுகொண்டிருந்த அந்த சிறுமி, நிமிர்ந்து எழுந்தாள்.
‘இனிமே வேலைக்கு வரமாட்டேம்மா’ என்று நிமிர்வுடன் சொல்லிவிட்டு யாருடைய அழைப்பையும் பொருட்படுத்தாமல் வெளியேறினாள்.