கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 5,209 
 

சுந்தா! சுந்தா!

குளியலறையிலிருந்து சரஸ்வதியம்மாள் கத்துகிறாள். எவ்வளவு நேரமாகத்தான் கத்துவது. தொண்டையும் வலிக்கிறது.

இந்த சின்ன பிசாசு எங்கே பொய்ட்டுது? மனுஷன்ட உசுறு போவுது’ மனதிற்குள் வெறுப்பும் கசப்புமாகச் சொல்லிக்கொண்ட சரஸ்வதியம்மாள் “அடியே! நாசமா போறவளே! என்னடி செய்யுராய்? அந்த புது டவுல எடுத்துக் கொண்டு வா…”

சர்ப்பத்தின் சீற்றமாக குரல் பறக்கிறது. சுந்தாவின் சந்தடி இல்லை.

அந்த விசாலமான பங்களாவின் மூலை முடுக்கெல்லாம் புயலென சென்ற சரஸ்வதியம்மாளின் அலறல், எதிரொலியாகத் திரும்பியதே தவிர, சுந்தாவின் பதில் குரலைக் கேட்க முடியவில்லை. முணுமுணுப்பிற்கே ‘ம்மா’ வென அலறியடித்துக் கொண்டு வருவபாளாயிற்றே.

‘பன்னெண்டு வயசாகப் போவுது எவ்வளவு ஏசினாலும் அடிச்சாலும் கழுதைக்கு மானரோஷமில்லை. இதுக இப்படித்தான்.’ மனத்திற்குள் வெஞ்சினத்துடன் புறுபுறுத்துக் கொண்டு மறுபடியும் டவுலைக் கேட்டு கத்துகிறாள்.

தொண்டையைக் கிழித்து குரலை உயர்த்தி கத்தி என்ன புண்ணியம்? அந்த வேலைக்காரச் சிறுமி சுந்தா……

இனியும் பொறுக்கேலாது என்ற நிலையில் ஈர மேனியோடு வெளியில் வந்த சரஸ்வதியம்மாள் ‘மளமள’வென நீர்த் துளிகள் சொரியும் உடலும், சினம் பொங்கும் நெஞ்சும், அக்கினி பறக்கும் கண்களுமாக தட தட’ வென பர்வதமென தரை அதிர நடந்து சமையலறை நோக்கி விரைந்தாள். போகும் வழியில் கிடைத்தவொரு தடியை கையிலெடுத்துக் கொண்டாள்.

‘நாய்! குசினிக்குள் எதையாவது நக்கிக் கொண்டிருக்கும்.’ மனம் கடுகடுப்புடன் கொதிக்கிறது.

சமையலறையில் சிறுமி இல்லை .

வீடு முழுவதிலும் அலசியாகிவிட்டது.

எந்த மூலையிலும் சுந்தா இல்லை.

சரஸ்வதியம்மாள் வாசலுக்கு வந்து வீதியைப் பார்த்தாள். உடலைத் துடைத்து தலையைத் துவட்டி சாறியை அணிந்து கொண்டிருக்கின்ற பொழுதும், மனதிற்குள் லேசான அச்சம் கவ்விக் கொண்டிருக்கவே, முத்து முத்தாக வியர்வை மணிகள் உடலெங்கும் முகிழ்த்து வழிந்தன.

வீதி முன்னால் நீண்டு கிடக்கிறது, சன நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும். நெரிசலடங்கிக் கிடக்கும் மரணித்த நிலை. பங்களாவின் முன்னால், வீதியின்
ஓரமாகவுள்ள முனிசிப்பல் குழாயடியில் நிர்வாணச் சிறுமிகள் கூச்சலும் கும்மாளமுமாகக் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சரஸ்வதியம்மாளின் கண்கள் அங்கே மொய்த்தன. சுந்தாவும் அங்கேதானே குளிப்பாள்.

அங்கேயும் இல்லை.

ஈரக்கேசத்தை விரல்களால் கோதிவிட்டுக் கொண்டே இமைகளில் சலனமில்லாமல் சில கணங்கள் யோசனையில் லயித்து நின்றாள் சரஸ்வதியம்மாள்.

அவள் குளிக்கப் போவதற்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்தது. வாசலில் நின்று வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுந்தா.

அவளை உற்றுப் பார்த்த சரஸ்வதியம்மாள் துணுக்குற்றாள்.

“என்னது குளிக்கமாட்டாளா? தலை முடியெல்லாம் சிக்குப் புடிச்சாப் போல பழுப்பு நிறமா இருக்கே. கழுத்துப் பட்டையிலும் காது இடுக்கிலும் ஊத்தையா கெடக்கு. பிச்சைக்காரியள் மாதிரி நாத்தம் வேற. சீச்சீ… என்ட கௌரவம் என்னவாகிறது. ஆராவது வீட்டுக்கு வாரவர் கண்டா …”

“அடியே! சின்னப் பிசாசே! நீ குளிக்கிறது இல்லையா?” சரஸ்வதியம்மாள் கொதிப்படைந்து கத்தினாள்.

சின்ன குள்ளமான உருவம். வட்டமான முகம். அதில் வெளேரென்ற பெரிய கண்கள். அவை கரிச்சட்டி நிறமான முகத்தில் பீதியுடன் உருளும் பொழுது பார்க்கப் பரிதாபமாகவிருக்கும். அசடு வழியும் தோற்றம்.

சுந்தா கைகளைப் பிசைந்து கொண்டு, கண்களை உருட்டிய வண்ணம் மருட்சியுடன் பார்க்கிறாள்.

“என்னடி? சொல்றது காதுல உழுதா, நான் குளிச்சிட்டு வந்த பொறகு போய் குளி”

சரஸ்வதியம்மாள் அதட்டினாள்.

சிறுமி மறுபடியும் உருட்டலும் கைபிசைதலுமாக நிற்கிறாள்.

சரஸ்வதியம்மாள் ஆச்சரியத்துடன் பார்த்தாள். ஏனென்றால் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் இந்த வீட்டில் வாழ்கின்ற பெண் சுந்தா. அவளைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தாள் சரஸ்வதியம்மாள். இந்த எட்டு வருட காலத்தில் எவ்வளவு அடிகள் எத்துணை ஏச்சுகள் அவள் வாங்கியிருப்பாள். ஓர் எருமையைப் போல எப்படிப் பொறுப்பாள். ஒரு லேசான சிணுங்கலை உதிர்த்து விட்டு ஓர் அசட்டுச் சிரிப்பைத்தானே கொட்டுவாள். ஆனால் இன்று…..

திகிலான உணர்ச்சி கண்களில் மின்னலாகக் கோலமிட துக்கம் மண்டிய கண்களுடன் எசமானியம்மாளைப் பார்க்கிறாள்.

“அம்மா! ரெண்டு கெழமையா குளிக்காம மேலெல்லாம் எரியுது. இங்கே குளிக்கட்டுமா?” சிறுமி சன்னமான குரலில் கேட்டாள். அவளுடைய கைவிரல் குளியலறையைச் சுட்டிக்காட்டுகின்றது.

சரஸ்வதியம்மாளின் கண்கள் ஒரு சுழல் சுழன்று வெறித்தன. ”என்னடி நாய்! கொஞ்சமாவது மானமிருக்கா ஒனக்கு. இந்த பைப்புலே குளிச்ச எண்டு அன்னைக்கு எவ்வளவு அடிச்சேன். ஏன் ரோட்டு பைப்பு சும்மாதானே கெடக்கு. போய் குளியன். சவர் பாத் என்ன வேண்டிக் கிடக்கு. சவர்பாத். நான் குளிச்சிட்டு வாரேன். அதற்குப் பிறகு நீ போய் குளி. இல்லையெண்டா ஒரு நிமிஷமாவது நீ இந்த வீட்டிலே இருக்கக் கூடாது.”

நெருப்பென பொரிந்து தள்ளிவிட்டு குளியலறைக்குள் நுழைந்த சரஸ்வதியம்மாள் இடையில் டவுலைக் கேட்டுக் கத்திய பொழுதுதான் சுந்தாவைக் காணவில்லை.

‘எங்கே போய்ட்டாள்? குளிக்காட்டி வீட்டிலே இருக்கக்கூடாது என ஏசுனதுக்கா பொய்ட்டாளா? அவ்வளவு மான ரோஷமெங்கே, எவ்வளவு அடிச்சும் போவதாதது, ஏசுனதற்காக பொய்டுமா? சரி எங்கதான் போறது. நாலு வயசிலே கொண்டு வந்து விட்ட அப்பன், ரெண்டு வருஷந்தான் வந்தான், அப்புறம் ஆளையே காணோம். அவனைத் தேடி இவளெங்க போறது…’

சிந்தனை நீர் வட்டமாக மனதில் சுழல் நின்று கொண்டிருந்த சரஸ்வதியம்மாள் வெயிலில் பளீரென வெளிச்சத்துடன் வாசல் படியேறிய பொழுது திடுக்கிட்டாள். முச்ச நேரமாச்சே என மன சஞ்சலத்துடன் வீட்டிற்குள் சென்று தொலைபேசியை எடுத்து எண்களைச் சுழற்றினாள்.

மறுபக்கம்.

“ஹலோ! எக்கௌண்டன் தம்பித்துரை ஸ்பீக்கிங்!”

”நான்தான் சரஸ்வதி ! சுந்தாவக் காணல்ல அதான்.”

“என்ன காணல்லியா? சரி நான் வாரன்.

”ரிசீவர் வைக்கப்பட்டுவிட்டது.

***

வராண்டாவில் ஈசிசேரில் சாய்ந்த வண்ணம் வீதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் சரஸ்வதியம்மாள். சுந்தாவின் குள்ளமான கறுப்பு உருவமும், வட்டமான முகத்திலுள்ள வெளேரென்ற பெரிய கண்களும், அசட்டுப் பாவமும் அவள் கண்களின் முன் நிழலாடுகின்றன.

இந்த எட்டு வருடங்களில் இந்தச் சிறுமி அடிவாங்காத நாட்களே இல்லை. எனினும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒருநாள் பகல் வேளை அவள் வாங்கிய அடி, அம்மா சரஸ்வதியம்மாளுக்கே உடல் புல்லரித்தது. சரஸ்வதியம்மாள் ஓர் அரக்கியாகத்தான் நடந்துகொண்டாள்.

அவர்களுடைய பங்களாவிற்கு ஒழுங்காக நீர் கிடைப்பதில்லை. அதிலும் இந்த வேனிற் காலத்தில் ஒரு சொட்டு நீரெடுப்பது பெருங்கஷ்டம். எக்கௌண்டன் துரை கிணறுவெட்டி பம்ப் பொருத்தியிருக்கிறார். அவர் அலுவலகம் முடிந்து வருவதற்கு முன்னர் சரஸ்வதியம்மாள் டாங்கியில் நீர் நிறைத்து வைத்து விடுவாள். பகல் சாப்பாட்டின் பின்னர் இந்தக் காரியங்களையெல்லாம் ஒழுங்காகச் செய்துவிட்டு நல்லதொரு தூக்கம் போட்டு எழும்புவதைப் போன்ற சுகம் சரஸ்வதியம்மாளுக்கு வேறு எதுவுமில்லை. இரண்டு பெண்களும் ஒரு பையனும்தான் அவளுடைய பிள்ளைகள். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மூவரும் தங்கிப் படிப்பதால் வீட்டில் பகல் பொழுதில் சுந்தாவும் அவளும்தான்.

ஆழ்ந்த உறக்கம்.

சொப்பனம் போல காதுகளில் சலசலவென நீரோடும் ஒரு மென்மையான ஓசை.

தூக்கம் கலைந்தது. எழுந்து உட்கார்ந்து கண்களை நாலு பக்கமும் சுழற்றிய பொழுது குளியலறையில் நீர்ச் சலசலப்பு கேட்கிறது. எழுந்து ஓடி சாத்திக்கிடக்கும் கதவைப் படபடவெனத் தட்டினாள்.

சுவர்க் கடிகாரம் நான்கு மணியைக் காட்டுகின்றது. இன்னும் கொஞ்ச நேரத்தில் கணவர் வந்துவிடுவார். அதற்கிடையில் யார் சவர்பாத்தைத் திறந்து நீரையெல்லாம் வெளியேற்றுவது? மனதில் பதட்டம். ஆபீசால் வீடு திரும்பிய பின்னர் ஒரு மேல் கழுவல்’ பண்ணவில்லையென்றால் தம்பித்துரைக்கு கோபம் எப்படி பற்றிக்கொண்டு வரும். ‘சள்புள் ளென ஆங்கிலத்தில் அலறுவார். பங்களா அமளிதுமளிப்படும்.

படபடவென கதவை இடித்து தகர்ப்பதைப் போன்று தட்டுகின்றாள் சரஸ்வதியம்மாள்.

கதவு திறப்படுகின்றது.

சுந்தாவின் குள்ளமான உருவம் தெரிகிறது. மேனியெங்கும் நீர் சரமென வழிய, கறுத்த வட்டமான முகத்தில் வெளேரென்ற பெரிய விழிகள் சுழல,

”என்னம்மா?” அசட்டுத்தனமான கேள்வி அவளுடைய சின்ன வாயிலிருந்து புறப்பட்டு வருகின்றது. உடம்பு முழுவதும் ‘திகுதிகு வென கொதிக்க நின்று கொண்டிருந்த சரஸ்வதியம்மாளுக்கு சுந்தா ஒரு சிறுமியாகவே தென்படவில்லை. முழங்காலிலிருந்து கழுத்துவரை உடல் மூடி கட்டப்பட்ட துணியும், ஈரமாக உடலோடு இறுகிக் கிடக்கும் துணியைத் தள்ளிக்கொண்டு நெஞ்சில் நிமிர்ந்து நிற்கும் முகைகளான மார்பகங்களும்…

‘பளா ரென ஓர் அறை விழுந்தது. தலையிலிருந்து கன்னங்கள் வழியாக வழிகின்ற நீர் தெறித்துச் சிதறுகின்றன.

“எத்தின முறை பைப்புத் தண்ணியை நாசமாக்காதே எண்டு அடிச்சிருக்கன். மான ரோசமில்லாத மக்குக் கழுத. இப்ப உனக்கு குளிக்க சவர் பாத்தா வேணும். ரோட்டுப் பைப்புக்குப் போக ஏலாதோ…..!’ அடித்து நொறுக்கி, உதைத்து தலைக்கேசத்தை இழுத்து நாசியில் குத்தி, உதட்டைக் கிழித்து கன்னச் சதைகளைப் பிடுங்கி….. ஆத்திரத்தை எப்படியெல்லாம் கொட்ட முடியுமோ அப்படியெல்லாம் கொட்டித் தீர்த்தாள்.

ஒரு பிரளயமே நடந்து முடிந்தது. என்றாலும் என்ன சொரணையில்லாத கழுத. மானரோஷமில்லாத எருமை. அடிவலி பொறுக்க முடியாமல் கொஞ்சம் ஒப்பாரி வைத்து ‘ஓ’ வென்று அழ… அதுதான் இல்லை . வழக்கம் போல் ஒரு லேசான சிணுக்கம். அப்புறம் அந்த அசட்டுத்தனமான சிரிப்பு……

‘என்ன பெண்ணிவள்? பெண்ணென்றால் பேயாகிவிடும் இந்த உலகில் இவ எப்படி வாழப் போகிறா? பருவம் எய்த இன்றோ நாளையோ என்றிருக்கிறாள்.

குள்ளமாக இருந்தாலும் உடல் கோயில் காள மாதிரி ‘மதமத வென்றிருக்கிறது. அவளைப் பூப்பெய்யாத பெண்ணென்று எவரும் சொல்ல மாட்டார்கள். உடல் வளருகிறது. ஆனால் அந்த மனம் வளரவில்லையோ என்னவோ?

ஆனால் இந்த முறை ஒன்று நடந்தது. பங்களாவிலுள்ள குழாய் நீரை அவள் நாசப்படுத்துவதில்லை. குளிப்பதும் இல்லை. அடியின் வலுவோ அல்லது வீட்டில் சவர்பாத் இருக்க நான் ஏன் ரோட்டோரத்துக் குழாய்க்கு குளிக்கப் போக வேண்டும் என்ற இறுமாப்போ? குளிக்காமலே பிச்சைக்காரிகள் மாதிரி நாறிப் போகிறாளே!

ஆள் சின்னது என்றாலும் நெஞ்சழுத்தக்காரிதான். இல்லையென்றால் பங்களாவிலே குளிக்காதே என்றதற்கு கோபித்துக்கொண்டு போய்விட்டாளே. ஒருவேளை, எட்டு வருடங்கள் இந்த வீட்டில் வாழ்ந்தாயிற்று. எனக்கும் இங்கு உரிமைகள் உண்டு என்ற சுதந்திரப் போராட்டமா? சிறுமியின் நெஞ்சில் என்ன இருக்கிறது? ஏன் போனாள்? எங்கே போனாள்?’

சரஸ்வதியம்மாள் இன்னும் ஈசி சேரில் சாய்ந்து கொண்டு எண்ணக்கடலில் மூழ்கிக் கிடக்கிறாள்.

***

சூரியன் பங்களாவின் மீதாக நடுவானைக் கடந்து கொண்டிருந்தான்.

தம்பித்துரையின் கார் பங்களாவிற்குள் நுழைகிறது.

“எங்கே வந்துட்டாளா?”

“இல்லை ”

“உம். சரி ஒருக்கா பொடி வாஸ் பண்ணிப்போட்டு பிறகு போய் பொலிஸ் ரிப்போர்ட் கொடுக்கிறேன்.” பாத அணிகள் டக் டக்’ கென ஒலியெழுப்ப தம்பித்துரை உள்ளே போகிறார்.

***

“சரசு ! சரசு! இஞ்ச ஓடிவா!” என அக்கௌண்டன் துரையின் அலறல் குளியலறையிலிருந்து பாய்ந்து வருகிறது. சமையலறையில் எலக்ரிக் குக்கரை பொருத்திவிட்டு யோசனையோடு நின்று கொண்டிருந்த சரஸ்வதியம்மாள் கணவனின் அலறலால் ஏதோ , என்னவோ என வெலவெலத்துப் போய் கலவரமுடன் குளியலறை நோக்கிப் பாய்ந்தோடினாள்.

‘மளமள’ வென நீர் கொட்டும் உடலோடு தம்பித்துரை நின்று கொண்டிருக்கிறார். நடுங்கும் அவர் கையில் ஒரு சிறு கடிதம் படபடக்கின்றது.

எடுத்து விரித்துப் படித்த சரஸ்வதியம்மாள், விழிகளைப் பிதுங்கிக்கொண்டு நிற்கிறாள். கடிதத்தில் சிறுமியின் கோணல்மாணலான எழுத்துக்கள்.

“அம்மா !”

ரோட்டுப் பைப்புலே குளிக்கச் சொல்றீங்களே, எப்படி குளிக்கிறது. போறவன் வாரவன் எல்லாம் என் ஒடம்ப உத்து உத்துப் பார்க்கிற நேரத்துலே எனக்கு கொடல் பொரண்டு வாய்க்கு வருது. எதுக்கு இந்த மானங்கெட்ட சீவியம், கடல்ல உழுந்தாவது சாவலாம் இல்லியா? அதுதான் ஊட விட்டு போறன்.

– நூல் தலைப்பு: அன்னையின் நிழல், மணிமேகலைப் பிரசுரம், முதல் பதிப்பு: 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *