கடவுள் என் எதிரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,415 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்றொரு நாள் மாடி அறையில் தன்னந்தனியாக உட்கார்ந்து, நான் மெளனம் சாதித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது முன்பின் தெரியாத பெண் எனக்கு முன்னால் தோன்றி விம்மி விம்மி அழுதாள்.

நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன்.

அவள் அழுகையை நடுவே அடக்கிக் கொண்டு, “சிவபாதம் பிள்ளையின் புதல்வர் நீங்கள்தானே?” என்று கேட்டாள்.

“ஆமாம்.”

“உங்கள் பெயர்?”

“சஞ்சீவி.”

“தயவு செய்து எனக்கொரு உதவி செய்ய வேணும்…”

“என்ன உதவி?”

“என் அண்ணாவை உங்களுக்குத் தெரியுமோ?”

“தெரியாதே”

“சமீபத்தில் வங்காளப் பஞ்ச நிவாரணத்துக்காக இந்தப் பக்கம் நிதி திரட்டிக் கொண்டிருந்தாரே, அவரை உங்களுக்குத் தெரியாதா?”

“யார் அது கிருபாநிதியா?”

“ஆமாம், அவர்தான் என் அண்ணா!”

“ஓஹோ அவரைப் பற்றி இப்பொழுது என்ன?”

“அவர் ஒரு தவறான காரியம் செய்துவிட்டார்….”

“என்ன காரியம்”

“ஒரு நாள் உங்கள் அப்பாவிடம் வந்து அவர் வங்கநிதிக்காக உதவி கோரினார்…”

“ஆமாம் அதில் என்ன தவறு?”

“அதில் ஒன்றும் தவறில்லை. அதற்குப் பிறகுதான் என் அண்ணா தவறு பண்ணிவிட்டார்”

“என்ன தவறு?’’ “உதவி கோரியதற்கு உங்கள் அப்பா ஒரே வாத்தையில் ‘இல்லை’ என்று சொல்லியிருக்கலாம். ஆனால் என் அண்ணாவின் கஷ்ட காலம் அவர் அப்படிச் சொல்லவில்லை. முதலில் உமது பஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளும்; அப்புறம் வங்கப் பஞ்சத்தைத் தீர்க்கப் பாரும்!” என்று என் அண்ணாவின் ஏழ்மை நிலையைப் பற்றி என்னவெல்லாமோ குறை கூறினாராம். அந்த ஆத்திரத்தில் அதி தீவிரவாதியான என் அண்ணா, தன் சகாக்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அன்றிரவே உங்கள் வீட்டுக் கஜானாவில் கையை வைத்துவிட்டார். களவாடிய பணத்தை மேற்படி நிதிக்கும் அனுப்பி வைத்துவிட்டார். இப்பொழுது உங்கள் அப்பா கொடுத்த தகவலின் பேரில் போலீசார் என் அண்ணாவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த நிமிஷத்திலும் அவர்கள் அண்ணாவைக் கைது செய்யலாம். எனக்கோ அவரைப் பிரிந்தால் வேறு நாதி கிடையாது. இதற்கு நீங்கள் நான் ஏதாவது உதவி செய்ய வேணும்.”

ஒரு நிமிஷம் நான் யோசித்துப் பார்த்தேன். அவளுடைய அண்ணா வங்க நிதிக்கு உதவி கோரிய அன்று நானும் அதற்காக என் அப்பாவிடம் உதவி கோரி, வேண்டிய வசவு வாங்கியிருந்தேன். இந்தச் சம்பவம் என் கவனத்துக்கு வந்ததும், அதைக் காரணமாக வைத்துக் கொண்டு நான் அவளுக்கு உதவி செய்வதென்று தீர்மானித்தேன். ஆகவே நான் அவளைப் பார்த்து, “இப்படியே உன் அண்ணாவைத் தலைமறைவாக இன்னும் இரண்டு நாட்கள் இருக்கச் சொல்லு; நான் எப்படியாவது அவரை அந்த ஆபத்திலிருந்து தப்புவிக்கிறேன்” என்றேன்.

“உங்களுக்குக் கோடி புண்ணியமுண்டு” என்று அவள் எனக்குத் தலை வணங்கிவிட்டுத் திரும்பினாள்.

“உன் பெயர்?” என்றேன்.

“கோதை” என்றாள்.

***

கோதை…..கண்டதும் என் உள்ளத்தில் கோயில் கொண்டு விட்டாள். நானும் அந்த நிமிஷமே கற்பனை உலகில் அவளுடன் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டேன்.

அவள் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே ‘ஓடு ஒடு’ என்று ஒடுகிறாள். “கோதை, கோதை” என்று கூவிக்கொண்டே நானும் அவளுக்குப் பின்னால் ஒடுகிறேன்.

கடைசியில் அவள் கரமும் என் கரமும் இணைகின்றன.

அங்கே ஒரு பூந்தோட்டம், எத்தனை விதமான கொடிகள்; எத்தனை விதமான செடிகள்! – மலர்களுக்கு மட்டுமா இயற்கை அழகை அளித்திருக்கிறது? இலைகளுக்குக்கூட அல்லவா அழகை அளித்திருக்கிறது!

ஆஹா அழகைக் கண்டு மயங்காத உயிர் எது? அதிலும் காதலுக்கே புருஷன் செளந்தரிய தேவன் தானே? எனவே அழகுத் தெய்வத்தின் ஆலயம் போல் விளங்கும் அந்தத் தோட்டத்திற்குள் நாங்கள் நுழைகிறோம். பச்சைப் பசேரென்று இருக்கும் புற்றரை எங்களை ‘வா வா’ என்று வருந்தி அழைக்கிறது. நாங்கள் ‘கலகல’ வென்று சிரித்துக் கொண்டே அதில் உட்காருகிறோம்.

உடனே – கொஞ்சல் – குலாவல் – பிணக்கு எல்லாம்!

“இந்த உலகிலேயே நீதான் அழகி” என்று நான் அவளைப் பார்த்துச் சொல்கிறேன். “இந்த உலகிலேயே நீதான் அழகன்” என்று அவள் என்னைப் பார்த்துச் சொல்கிறாள்.

மறுநாள் நினைத்துப் பார்த்தால் சிரிப்புச் சிரிப்பாய் வருமே என்று கூட எண்ணாமல் நாங்கள் அப்பொழுது என்னவெல்லாமோ பிதற்றிக் கொள்கிறோம்.

அதற்குள் பொழுது சாய்ந்துவிடுகிறது. அத்தனை அவசரமாக மேற்குத் திசையில் மறைந்துவிட்ட ஆதவனைச் சபித்துக் கொண்டே நாங்கள் வீடு திரும்புகிறோம். திரும்பும் போது இன்னதென்று சொல்ல முடியாத ஓர் இன்பம்; எதெற்கென்று தெரியாத ஒரு சிரிப்பு. மனதில் தன்னை மறந்த ஒரு மகிழ்ச்சி, அச்சத்திலும் ஒர் ஆனந்தம் – “மது மறைந்துண்டவன் மகிழ்ச்சிபோல்” என்று உவமை சொல்லிய கவி, கள்ளக் காதலை எவ்வளவு தூரம் அனுபவித்திருக்க வேண்டும்?

அப்புறம் கல்யாணப் பேச்சு ஆரம்பமாகிறது; ஜாதகம் பார்க்கிறார்கள்; முகூர்த்தம் குறிக்கிறார்கள்; பத்திரிக்கை போடுகிறார்கள்; பந்து மித்திரர்களுக்கு அனுப்புகிறார்கள்; பந்தலும் போடுகிறார்கள்.

மேளக்காரன் வெளுத்து வாங்குகிறான்; நாதஸ்வரக்காரன் ஜமாய்க்கிறான்; சாப்பாட்டுச் சண்டைக்கு முன்னால் நடக்கும் சம்பந்திச்சண்டைக்கு இடையே நான் அவளுக்கு மாலையிடுகிறேன். “இனிமேல் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போகும் அதிகாரம் – நமக்குக் கிடையாது. அந்த அதிகாரம் எமனுக்குத்தான்” என்று சட்டத்தை நாங்களே சிருஷ்டித்துக் கொண்டு அதை வாழ்க்கையில் பின்பற்றுவது என்றும் தீர்மானித்து விடுகிறோம்.

இத்தனையும் இரண்டே நிமிஷங்களில் என் கற்பனை உலகில் நடந்தேறி விடுகின்றன! அப்புறம் நான் அவளை எப்படி மறப்பது? – அவளுக்காக எதையும் செய்யத் தயாராகி விடுகிறேன்.

அவளுக்காக அவள் அண்ணா செய்த குற்றத்தை நாமே செய்ததாக ஒப்புக் கொள்ள வேண்டும். அப்பாகண்டிப்புக்காரர்தான் என்றாலும் போலீஸ் லாக்-அப்பில் நம்மைப் பார்த்ததும் அவர் மனம் இரங்கி விடும். மன்னித்து விடுவார். அப்புறம் கோதையைப் பற்றி அவரிடம் சொல்ல வேண்டியது. அவளை எப்படியாவது கல்யாணம் செய்து கொண்டு ஜம்மென்று வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியது.

சரி, தீர்மானித்தாகிவிட்டது. இன்றே செய்துவிட வேண்டியது தான்!

அன்றே செய்தும் விட்டேன். ஆனால் என்ன ஏமாற்றம்?

என் அப்பாவைப் பற்றி நான் என்ன நினைத்தேன்? கடைசியில் நீதிமன்றத்தில் நான் நிறுத்தி வைக்கப்பட்ட போது அவர் என்ன சொன்னார்?

“என் பிள்ளையாயிருந்தால் மட்டும் என்ன? அயோக்கியனுக்கு நான் ஒரு போதும் அநுதாபம் காட்டமாட்டேன்”

என்ன ஈரமில்லாத நெஞ்சம்?

முடிவு என்ன? சிறைவாசம் ஏற்றுக்கொண்டேன்; அநுபவித்தேன்.

ஆனால், அப்படி அநுபவித்ததிலும் நான் துன்பத்தைக் காணவில்லை; இன்பத்தைத் தான் கண்டேன்.

அதற்குக் காரணம் கோதை தான் என்று சொல்லவும் வேண்டுமா?

***

அவள் அண்ணா கிருபாநிதி எனக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். அவை யெல்லாம் வெறும் கடிதங்கள் தானா? கிடையவே கிடையாது. அவனுடைய உணர்ச்சி மிகுந்த உள்ளத்தின் படங்கள்!

அவன் எழுதிய கடிதங்களில் ஒரே ஒரு கடிதத்தை மட்டுந்தான் நான் படித்தேன். பாக்கியைப் படிக்கவில்லை…. ஏன் தெரியுமா?

அவற்றைப் படித்தால் என் ஆசைத் தீ அளவில்லாமல் மூண்டுவிடும்; அதை அடக்கச்சக்தியற்று நான் சிறையிலிருந்து தப்பி ஓ ட முயல்வேன்; அதிகாரிகள் என்னைச் சுட்டுக் கொன்றுவிடுவார்கள்; அப்புறம் நான் இந்த ஜன்மத்தில் அவளைக் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா?

அப்பாவைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம்; ஆனால்… அவரைப் பற்றி எனக்கென்னமோ ஒன்றும் சொல்ல மனமில்லாமலிருக்கிறது.

கடைசியில் விடுதலை; விழுந்தடித்துக் கொண்டு என் உயிர் இருக்கும் இடத்தைத் தேடி ஓடி வந்தேன்.

கோதை இன்னதென்று தெரியாத ஒதோ ஒரு வியாதியால் இறந்து விட்டாள் என்று சேதி:

“இதைப்பற்றி எனக்கு ஏன் முன்னமேயே தெரிவிக்கவில்லை?” என்று நான் கிருபாநிதியைக் கேட்டேன்.

“அதனால் உமக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று பயந்தேன்” என்றான் அவன்.

அட, பாவி!

***

அதென்ன வியாதி அன்பே அவளைக் கொன்று விட்டதா?

அப்படியானால் ஆண்டவன் என்ன செய்வான்?

ஆமாம், எனக்காக அவளைக் காப்பாற்றி வைக்காத அவன் என் எதிரிதான்!

அன்று மட்டும் அல்ல; இன்றும்; என்றும்!

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.
– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)