ஓ மீ மக்காய் – சிண்டுவின் சிறு குறிப்புகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 4, 2023
பார்வையிட்டோர்: 2,999 
 
 

“பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப், பிரிவிலா அடியார்க்கு என்றும் வாராத செல்வம் வருவிப்பானை” என்ற ஒதுவாமுர்த்திகளின் குரல் ஒன்றரை பனைமர உயரம் இருந்த மேல கோபுர சாளரங்கள் தாண்டி வீதியில் இறங்கி இடது புறமாய் ஊர்ந்து, வேப்ப மரமும் புங்கை மரங்களும் மறைத்திருந்த வீட்டிலிருந்த அறையில், எழுஞாயிறு கதிரொலியோடு சண்டையிட்டு உள்ளே நுழைந்து, மெத்தையின் மேல் படுத்திருந்த அதன் காதினுள் நுழைந்தது.

அது மெதுவாக அசைந்து, புரண்டு படுத்து படுக்கையை நனைத்தது. அது அம்மாவின் ஆடையையும் ஈரமாக்க, அம்மா எழுந்தாள். அதை வாஞ்சையுடன் பார்த்தாள்.

“பால் கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, வெல்லக் கொழுக்கட்டை, எந்திரிங்க” என்று அம்மா அதை எழுப்பினாள்.

ஒரு வருட, ஒன்றையடிக் கொழுக்கட்டை கண் விழித்தது. சிரித்தது. உதட்டைக் குவித்து கைகளைத் தூக்கிச் சோம்பல் முறித்தது. ஒரு கையால் தன் மேல் மூடியிருந்த துணியைத் தள்ளியது. ஒருக்களித்துப் படுத்து, கையை ஊன்றி எழுந்து நின்றது. தோள்களில் முடிச்சிட்ட, முழங்கால் அளவுள்ள, கோவைப்பழ நிறச் சட்டை பாதி நனைந்து, உடலோடு ஒட்டி இருந்தது.

கட்டிலிலிருந்து இறங்கி அம்மாவிடம் வந்து கால்களுக்கு அருகே குந்திக் கொண்டது. அதன் தலையில் தென்னை மரம் போல கொண்டை போட்டு இருந்தது. கன்னத்தில் நேற்று வைத்த கருப்பு திருஷ்டி பொட்டு தூக்கத்தில் கைகளால் இலுப்பியிருந்தது தெரிந்தது.

கொழுக்கட்டையின் கண்கள், விரிந்து சுருங்கி, கொழுக்கட்டை குறும்புக்கு தயார் என்று சொல்லின. சின்ன இதழ்கள் குவித்து “ஊஊ அய்” என்று சத்தம் எழுப்பியது. அம்மா சிரித்தாள். கொழுக்கட்டை அம்மாவின் முட்டியைப் பிடித்து மடியில் ஏறியது. கழுத்தைக் கைகளால் சுற்றியது. கழுத்தை அவள் தோள்களில் சாய்த்தது. அம்மா தட்டிக் கொடுத்தாள். வலது கையால் கொழுக்கட்டையின் கழுத்தில் கை வைத்துத் தூக்கிக் கீழே விட்டு, இடது கையால் கட்டிலின் தலைப் பகுதியில் இருந்த கூடையைத் திறந்து ஒரு அரக்கு நிற சட்டையை எடுத்து வலது தோளில் போட்டுக்கொண்டு, கழுத்தைச் சாய்த்து, அச்சட்டையைப் பிடித்துக்கொண்டு, கொழுக்கட்டையின் ஈரச் சட்டையை இரண்டு கைகளால் கழற்றி எடுத்து, பருத்தித் துண்டினால் கொழுக்கட்டையின் நெஞ்சு, முதுகு, இடுப்பு, மற்றும் கீழே துடைத்து, தனது தோளிலிருந்த அரக்கு நிற சட்டையை எடுத்து, கொழுக்கட்டையின் தலை வழியாக அணிவித்தாள். பச்சைப் பூப்போட்ட அரையாடை அணிவித்தாள். முத்தமிட்டாள். தரையில் இறக்கி விட்டாள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பட்டதாரியாகி, ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து ஒரு ஆண்டு நிறையும்போது, அப்பா கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தி, செய்தும் வைத்தார். கல்யாணத்திற்கு பிறகு இரண்டு மாதங்களில் வேலைக்கு முயற்சி செய்ய ஆரம்பித்தாள். அப்பொழுது கொழுக்கட்டை உண்டாக, பெற்றுக்கொள்வதா, பணி சேர்வதா என்று கேள்வி வர, இந்த கொழுக்கட்டையே வேண்டும் என்று முடிவாகியது. கொழுக்கட்டை சத்தம் எழுப்ப, நினைவில் இருந்து மீண்டு, அதை பார்த்தாள்.

அது குந்திக்கொண்டு, கட்டிலின் அடியில் ஓடும் எறும்பை பார்த்துக்கொண்டிருந்தது. குட்டிக் கண்களுக்குக் குட்டி விஷயங்கள் தெரியும் என்று மாமி சொன்னது ஞாபகம் வந்தது. எழுந்தாள். அப்படியே கொழுக்கட்டையைத் தூக்கிக் கன்னத்தில் முத்தமிட்டு, இடுப்பில் இருத்தினாள். அறையைத் தாண்டி கூடத்தில் நுழைந்தாள்.

கூடத்தில் கொழுக்கட்டையுடன் நுழைந்த அம்மாவைப் பார்த்து “எழுந்திருச்சா. ஜுர ஊசி போட்டு நேத்தியெல்லாம் அழுகை. இன்னைக்கு வாலுத்தனம் ஆரம்பிச்சிடும். இறக்கி விடு. போய் பாலு, இல்ல செர்லாக் எடுத்துட்டு வா. வெறும் வயிறு. ஒட்டிப் போயிருக்கு பாரு,” என்றாள் பாட்டி.

அம்மா கொழுக்கட்டையை பாட்டியிடம் இறக்கிவிட்டு அடுக்களை சென்றாள். பாட்டி கொழுக்கட்டையை பார்த்து “பட்டுக் குட்டி, ஓடி வாங்க,”

என்று அழைத்தாள்.பட்டுக்குட்டி பாட்டியிடம் மெதுவாக வந்து மடியில் அமர்ந்தது. பாட்டி அழுத்தமாக முத்தமிட்டாள்.

பட்டுக்குட்டி கன்னத்தை துடைத்து சிணுங்கியது. “ஓ, முத்தம் கொடுக்க கூடாதா உனக்கு” என்று குரலை ஏற்ற இறக்கத்தில் சொன்னாள். பட்டுக்குட்டி கண்களை சுருக்கி கழுத்தைச் சாய்த்து “லாலு லூலூ ஸ்ஸ்ஸ்” என்று சண்டை போட ஆரம்பித்தது. பாட்டிக்கு அகம் மலர்ந்தது. சிரித்தாள்.

பட்டுக் குட்டி பிறக்கும் போது, பாட்டிக்குப் பெண் குழந்தை என்று தெரிந்ததும் வருத்தமாக இருந்தது. அதற்கான காரணத்தை அவள் யாரிடமும் சொல்லவில்லை. பேசுவதை தவிர்த்தாள். அவளுடைய அப்பாவுக்கு மூன்று பெண்கள். அப்பா இறக்க, அவளது தாயார் மூவரையும் வளர்த்து கல்யாணம் செய்து வைத்து, கடைசி காலத்தில் யாரிடம் இருப்பது என்பது குழப்பமாகி, இறந்துபோனாள். இந்த நிகழ்வு பெண் குழந்தைகள் மீதான ஆற்றாமையாகி, அவளது மனதை வெகுவாக பாதித்திருந்தது. வருத்தம் கொஞ்ச நாள் தான் இருந்தது. பட்டுக் குட்டியைப் பார்த்தவுடன், அதற்கான சட்டை தைப்பது, தூக்கி கொஞ்சுவது என்று ஒன்றிப் போனாள் பாட்டி.

பாட்டி, கூடத்தில் சாய்விருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த பட்டுக்குட்டியின் அப்பாவைக் கத்தி எழுப்பினாள் – “இங்க பாருடா. உன் பொண்ணு சண்டை போடறா. ” பட்டுக்குட்டி அப்பாவின் அருகில் சென்று லு லு என்று எதோ சொல்லி, கையால் அவனது முகத்தில் தடவி எழுப்பியது. அப்பா கண்கள் திறக்க, பட்டுவின் குரல் ‘தாதுப்புது’ என்று சொல்ல, அப்பா சிரித்து “அம்முலு” “காய்ச்சல் போச்சா,” என்று கேட்டுத் தூக்கினான்.

அம்முலு அதன் மூக்கைக் கசக்கியது. தலையைச் சொறிந்தது. இதே நேரம் அடுத்த வாரம் அம்முலுக்கு முடி எடுத்து காது குத்தியிருப்போம் என்று அப்பா நினைத்தான். “ஏண்டா. தூங்கி அப்படியே குழந்தையைக் கொஞ்சனுமா. பல்ல விளக்கிட்டு பண்ண கூடாதா,” என்றாள் பாட்டி.

“ஏம்மா. இவ விளக்கிட்டாளா,” என்று அம்முலுவைக் கீழே இறக்கி பாட்டியைப் பார்த்து கேட்டான்.

“ஆமாண்டா. விளக்க முப்பத்திரண்டு பல்லு இருக்கு உன் பொண்ணுக்கு பாரு,” என்றாள்.

அம்முலு சிரித்தது. மேலே இரண்டு பற்கள் தெரிந்தன. கீழே ஒன்று முளைத்திருந்தது. “பாரு. அவளைப் பத்தி பேசுறோம்னு தெரியுது,” என்றான் அப்பா.

“ஏண்டா. அது மனுஷ குட்டி டா. எல்லாம் தெரியும். மேல் பல்லு தான் மொதல்ல முளைச்சிருக்கு. உன்ன மாதிரி அடங்கிய புருஷன் வரப்போறான்,” என்று பாட்டி கிண்டலாக சொல்ல, அப்பா முறைத்தான்.

“கன்னுக்குட்டி வாடி இங்க,” என்றாள் பாட்டி.

கன்னுக்குட்டி அப்பாவிடம் இருந்து இறங்கி பாட்டியைக் கடந்து நாற்காலியை பிடித்து தள்ளி கொண்டே சென்றது. கூடம் முழுவதும் குழந்தைக்கு வேண்டிய பொருட்கள் இருந்தன. “பொம்ம இருக்கு பாரு,” என்று அப்பா மெதுவாகக் கத்தினான். கன்னுக்குட்டி ஒரு வினாடி நின்று பொம்மையைப் பார்த்தது. மறுவினாடி கூடத்தைக் கடந்து “ம்மா” என்று அடுக்களையில் நுழைந்தது. அம்மாவின் பின்புறம் சென்று காலைக் கட்டிக் கொண்டது.

அம்மா அடுப்புத் தீயைக் குறைத்து, பக்கத்தில் இருந்த தண்ணீர் குழாயில் கையைக் கழுவி, திரும்பி குழந்தையைத் தூக்கி “புஜ்ஜி குட்டி. பசிக்குதா” என்று கன்னத்தில் முத்தமிட்டாள். புஜ்ஜி கன்னத்தைத் துடைத்துக் கொண்டது. அம்மா குழந்தையை இடுப்பில் வைத்து, சிறு கிண்ணத்தை எடுத்து செர்லாக்கைக் கலந்து கூடத்திற்கு வந்து கீழே அமர்ந்து மடியில் இருத்தி புஜ்ஜிக் குட்டிக்குக் கொடுக்க ஆரம்பித்தாள்.

புஜ்ஜி சப்புக் கொட்ச்டி சாப்பிட்டது. கரண்டியைக் கடித்தது. புஜ்ஜியின் முன்பற்கள் மேசை கரண்டியில் பட்டு சிறிது ஓசை எழுப்ப, அம்மாவிற்கு கூசியது. புஜ்ஜியின் வாயைச் சுற்றி செர்லாக் அப்பியிருந்தது. அம்மா துணியை தேடி துடைப்பதற்குள், புஜ்ஜி கையை வைத்து துடைத்து தனது மூக்கை தொட்டது. அம்மாவின் கன்னத்திலும், நெற்றியிலும் கையை வைத்து செர்லாக்கை இலுப்பியது.

“ஆரம்பிச்சிட்டியா வேலைய,” என்று கோபித்தாள் அம்மா. புஜ்ஜி முறைத்தது. கொஞ்சுவதும் கோபிப்பதும் எவ்வாறு அதற்குத் தெரிகின்றன என்று யோசித்தாள் அம்மா. புஜ்ஜி அம்மாவின் நெற்றியில் உள்ள பொட்டைப் பார்த்தது. அதை எடுத்துத் தனது புருவத்தில் வைத்து கொண்டது. அம்மா சிரித்தாள். புஜ்ஜியும் வெட்கத்துடன் சிரித்தது. புஜ்ஜி அம்மாவின் இடது புறக் காதை இழுத்து, தோட்டை ஆட்டிப் பார்த்தது. அம்மா சத்தத்துடன் “அப்பா கிட்ட சொல்றேன் இரு. ஏங்க குட்டி புஸ்க்குக்குத் தோடு வேணுமா” என்று சன்னமாகக் கத்தினாள். குட்டி புஸ்க்கு அம்மாவின் இடுப்பில் இருந்து இறங்கி கூடம் கடந்து தத்தக புத்தக என்று வீட்டுத் திண்ணைக்கு வந்தது.

மரபெஞ்சில் தாத்தா ஒருக்களித்து, கையை தலையணை ஆக்கித் தூங்கிக் கொண்டிருந்தார். அம்மா ஓடிவந்து “தாத்தாவை எழுப்பாதடி புஸ்க்கு” என்று குழந்தையைத் தடுத்தாள். புஸ்க்கு திமிறிக்கொண்டு தாத்தாவை நோக்கிச் சென்றது. அம்மா புஸ்க்கைத் தூக்கிக் கூடம் வந்தாள். அப்பா கடமைகளை முடித்து வந்து உட்கார, அவனது கைகளில் புஸ்க்கைத் திணித்துவிட்டு அடுக்களைக்கு நகர்ந்தாள். புஸ்க்கு அப்பாவின் மடியில் இருந்து இறங்கி, அவனது கால்களின் குறுக்கே வேட்டியில் உட்கார்ந்து ஊஞ்சல் ஆடியது.

பாட்டி ஒரு டம்ளரோடு வந்து அமர்ந்து, புஸ்க்கை இழுத்து, மடியில் இருத்தி தண்ணீரை கொடுத்தாள். குடித்தவுடன் மீதமிருந்த தண்ணீரால் வாய், முகத்தைத் துடைத்து முத்தமிட்டாள். குட்டி புஸ்க்கு முத்தமிட்ட எச்சிலை துடைத்து பாட்டியின் நரை முடியை இழுத்து அவளது மூக்குத்தியில் மாட்டிவிட்டது. வலியில் பாட்டியின் நெற்றி சுருங்க, புஸ்க்கு கீழே இறங்கியது. திண்ணைக்கு வந்தது.

பாட்டி குரல் கொடுத்தாள் “தாத்தாவ எழுப்புடி செல்லம். இப்ப எழுந்தாதான் பூஜை பண்ணி மதியமாவது சாப்பாடு ஆகும்.”

செல்லம், தாத்தாவின் காதுக்குள் தன் விரலை விட்டது. தாத்தா எழுந்தார். செல்லத்தைப் பார்த்தார். சிரித்தார். எழுந்து உட்கார்ந்தார். செல்லத்தைத் தூக்கினார். தனது அருகில் பெஞ்சினில் அமர்த்தினார். செல்லம் தாத்தாவின் வேட்டியைப் பிடித்து கொண்டு கால்களைத் தொங்கவிட்டு, ஒரு கையால் அவரது துண்டை எடுத்துக் கீழே போட்டது. தாத்தா எடுத்து அதனை மேல வைக்க, செல்லம் மறுபடியும் கீழே தள்ளியது. தாத்தா சளைக்கவில்லை.

விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் போது பாட்டி வந்து “போங்க. முதல்ல உங்க வேலைய பாத்துட்டு, அப்புறம் இதுகூட விளையாடுங்க. அதை விட்டுட்டு எவ்ளோ நேரம் ஆக்கலாமோ அவ்ளோ நேரம் ஆக்கிட்டு சாப்பிடறது. ராத்திரி தூக்கம் வராம முழிச்சிட்டு இருக்கிறது. சீக்கிரம் போய் உங்க வேலைய பாருங்க” என்றாள்.

தாத்தா முறைக்க மீண்டும் பாட்டி சொன்னாள் “உங்களுக்கு பணிவிடை பண்ணிட்டு இருந்தா இவளை யாரு பார்க்கிறது. அவளுக்கு ஒரு நாள் ஊட்டி விடுங்க. அப்புறம் தெரியும், என்ன கஷ்டம்னு.” தாத்தா பேசவில்லை. விளையாட்டு தொடர்ந்தது. தாத்தா செல்லத்திடம் “ஆச்சி. நான் போயிட்டு சீக்கிரம் வரேன்” என்று சொல்லி திண்ணையிலிருந்து வீட்டிற்குள் சென்றார்.

ஆச்சி கீழே இறங்கி திண்ணையில் உள்ள இரும்பு கேட்டைப் பிடித்து ஏறி நின்றது. கேட்டின் தாழ்ப்பாளை விலக்கி, திறந்து, கேட்டின் மேல் ஏறி நின்று, ஊஞ்சல் போல் ஆடியது. வெளியே யாராவது நடமாடினால் “அவ்வு” என்று கூப்பிட்டது. சிலர் திரும்பிப் பார்த்துச் செல்ல, ஒரு தெரிந்த அம்மா, “பாப்பா..ஊஞ்சலா” என்று கேட்டுச் சிரிக்க முறைத்தது. பாப்பா சிறிது நேரத்தில் கீழே இறங்கி உள்ளே ஓடியது.

குளியலறை உள்ளே நுழைந்து தண்ணீர் குழாயைத் திறந்து விட்டு, கையை வைத்துத் தண்ணீரில் விளையாடியது. தண்ணீர் வழியும் சத்தம் கேட்டு அப்பா எட்டிப் பார்த்து, ஓடிவந்து ஆச்சியை தூக்கினான். “நொறுக்கிடுவேன் அணிலு,” என்றான்.

அடுக்களை நுழைந்து அம்மாவிடம் “அணிலு என்ன பண்ணுச்சு தெரியுமா. தண்ணிய தொறந்து விட்டு தண்ணில விளையாட்டு. கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்தி பாத்துக்கணும் இவளை,” என்றான். அம்மா அதை பார்த்து முறைத்தாள் “பித்தக் குட்டி. இறங்குடி. கடிச்சிப் புடுவேன்” என்று அதட்டினாள்.

பீத்தக் குட்டி கீழே இறங்கி சாப்பிடும் பெரிய தட்டை எடுத்து தரையில் கவிழ்த்து வைத்தது. பக்கத்தில் இருந்த பெரிய குழி கரண்டியை எடுத்து கீழே குந்திக்கொண்டு, கரண்டியால் தட்டை தட்டியது. ஓசை எழ, அது முகமும் அதிர, திரும்ப திரும்ப செய்தது. அம்மாவும் அப்பாவும் அதையே சிறிது நேரம் பார்த்தனர்.

அப்பா தட்டைத் தள்ளி வைத்து, கரண்டியைக் கையில் வைத்திருந்த பீத்தக் குட்டியைத் தூக்கி “வாடி குலோப்ஜாம்” என்று கூடம் வந்தான். கீழே அமர்ந்தான். அம்மா வந்து அப்பாவின் அருகில் அமர்ந்து குலோப்ஜாமூனைத் தூக்கி மடியில் படுக்க வைத்து ஈரத்தையும் தூசியையும் துடைத்தாள்.

அம்மாவும் குலாப்ஜாமுனை கொஞ்ச நேரம் தூங்க வைத்தால் வீட்டு வேலையை முடிக்கலாம் என்று நினைத்து, கைகளையும் கால்களையும் பிடித்து “கைய பிடிக்கிற கணக்கு பிள்ளைக்கு மாசம் பத்து ரூபா. காலப் பிடிக்கிற கணக்கு பிள்ளைக்கு மாசம் பத்து ரூபா” என்று பாடினாள்.

பாட்டியும் கூடம் வந்து தொலைக்காட்சியைப் போட்டு சாய் நாற்காலியில் அமர்ந்தாள். தாத்தா திண்ணையின் பெஞ்சுக்கு வந்தார். அம்மா பாடுவதைக் கேட்டு பாட்டி சிரித்தாள். “இது தூங்கும்னு நினைக்கிற? அப்படியே தூங்கினாலும், அது கோழித் தூக்கம் கொசுத் தூக்கம்தான். பத்து நிமிசத்தில வந்து வேலையை காட்டும். நான் பாத்துக்கிறேன். கொஞ்ச நேரம் உக்காந்து, அதற்கு ஏதாவது பேசச் சொல்லிக் கொடு,” என்றாள்.

அம்மா “அம்மா சொல்லு, அப்பா சொல்லு, பாட்டி சொல்லு, தாத்தா சொல்லு ” என்றாள். குலோப்ஜாம் கண்டுகொள்ளவில்லை. திண்ணையில் ஓடிய அணிலை வேடிக்கை பார்த்துச் சிரித்தது. சுவற்றில் உச்சி கொட்டும் பல்லியை பார்க்குமாறு அம்மாவின் முகத்தை திருப்பியது.

அப்பா அருகில் வந்து அமர்ந்தான். “சிண்டு… அபிக்குட்டி” என்று அதன் கன்னத்தை கிள்ளி கொஞ்சினான்.

அபிக்குட்டி அவனை பார்த்தது.

அப்பா மெதுவாக அபிக்குட்டியை பார்த்து “ஓம் நமச்சிவாய சொல்லு” என்றான். அது அவனை பார்த்தது.

அப்பா மீண்டும் சொன்னான் “ஓம் நமச்சிவாய.”

அபிக்குட்டி சத்தமாகச் சொன்னது “ஓ மீ மக்காய்.”

Print Friendly, PDF & Email

1 thought on “ஓ மீ மக்காய் – சிண்டுவின் சிறு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *