ஓ! அந்த இனிமை நினைவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 3,268 
 
 

நினைவுகளே கனவாக. கனவுகளே வாழ்வாக எண்ணியிருந்த பொழுதும் புலர்ந்துவிட்டது.

சுந்தரலிங்கத்துக்கு இந்த வாழ்வு கொடுத்த பரிசு….. நிமிண்டி நிமிண்டி உடலை வளைத்து கணுக்காலுக்கு மேலேயும் காற்புறங்களின் சுற்றாடலிலும் கருகிவிட்ட புண்கள் மறுபடியும் மறுபடியுமாக கொப்புழங்களாக உமிழ்ந்திருந்தன. அவற்றை நகங்களினால் சொறிந்து சொறிந்து கண்ட அற்ப இன்பத்தின் மறுபாதியாக அவை மறுதலித்து எரிந்து கொண்டிருந்தன.

‘ஐயோ! அம்மா எரிகிறதே ! சாந்தி கொஞ்சம் சுடுதண்ணியாச்சும் தாவேன்……’ எங்கோ எப்பொழுதோ எதற்காகவோ அன்பென்ற சொல் கலந்து அவன் அழைத்ததைக் கேட்டு துடித்துப் பதைத்து ஓடி வந்த சாந்தியின் இளமை அவளை விட்டுப் போய் ஆண்டுகள் பலவாகிவிட்டன. இல்லாமையும் இயலாமையும் நிறைந்து விட்ட இந்த வேளையில் தன் இளமையை, செல்வத்தைக் கரைத்துவிட்ட குற்றவாளியாகிய கணவனுக்குப் பணிவிடை என்ற கைங்கரியத்தை அவள் செய்ய வேண்டுமென்ற உந்தலில் இருக்கவில்லை.

பெற்றெடுத்த இரு பெண்களாகிய சாந்தினியையும், சரோஜினியையும் யாரோ பெற்று வளர்த்த இருவர்க்குக் கட்டிக் கொடுத்து ஜீவகடன் முடிந்து விட்டது என்ற முற்றுணர்வில் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் சாந்தி தன் பெண் மக்களை உறவுக்கோ, உதவிக்கோ அழைத்ததில்லை.

அழைத்தாலும் அவர்களை ஆட்கொண்டு விட்ட மருமக்கள் அதனை அனுமதிப்பார்களா என்பது கேள்வியாகவிருந்தது. கேள்விக்குக் கிடைக்கும் விடை எப்படி என்பது தெரியாத சந்தேகத்திலும் பார்க்க அந்தக் கேள்வியையே கேட்காது விட்டு விடுவது எவ்வளவோ மேல். சாந்தியும் அதனையே செய்தாள்.

இப்பொழுது அவள் தனியள். கட்டிலுடன் மெத்தையாக முடங்கிவிட்ட ஆசிரியர் அந்தஸ்திலிருந்து ஓய்வு பெறுவதன் மூலம் அதனையிழந்துவிட்ட இளமை வளமெல்லாம் எங்கோ கேட்ட ஒலியாக மடிந்து முதுமையின் மடியில் சாவின் எல்லையை நோக்கி விட்ட அவள் கணவன் சுந்தரலிங்கத்துக்கு, சிலவற்றில் அவரைப் போன்ற நிலையைப் பெற்றுவிட்ட அவள் தான் என்ன உதவியைச் செய்து விடப் போகிறாள்.

‘உங்களையெல்லோ கேட்கிறான். ஏன் சும்மா ஊளையிட்டுக் கொண்டிருக்கிறியள். கடவுளுக்குப் பாரமாக இருக்கட்டும். கடைசி காலத்திலை மனிசரைக் கொஞ்சம் நித்திரையாவது கொள்ள விடுங்கள்.’

சுடு நீருடன் தள்ளாடித் தள்ளாடி வந்து பக்கத்தில் அமர்ந்து அந்த நீரில் ஒரு துணியைத் தோய்த்துச் சீழ்வடியும் கால்களில் ஒற்றணம் கொடுத்து தன்னை அன்று நோக்கிய காதல் விழிகளால் – கருணை மொழிகளால் தேற்றுவாள் என்ற அந்த இனிய நிவை சுந்தரலிங்கத்தின் மிடறைப் பிடுங்கியவாறு மறைந்து விட்டது.

‘சாந்தீ!’

சுந்தரலிங்கம் தீனமாக அழைத்தார்.

‘அன்றிருந்த என் பெயர் எங்கே? உறவு எங்கே…’

இதயத்தை நசுக்கிய இந்தக் கேள்விகளில் வேதனையைச் சற்றேனும் தீர்க்கலாம் என்ற நப்பாசையில் அவர் மெல்லக் கண்களை மூடினார். கொல்கின்ற இரவு விடிய இன்னும் சில மணித்தியாலங்கள் தான் இருந்தன. அதன் கொடுமைக்கு ஒத்தாசையாக மழை வேறு கொட்டத் தொடங்கியது.

இருந்து இருந்தாற்போல் அவர் படுத்துறங்க முனைந்து கொண்டிருந்த கூடத்தின் கதவுகளை நீவிக் கொண்டு இரண்டு உயிர்கள் உள் நுழைந்தன. ஓரத்தில் மின்னிக் கொண்டிருந்த மின்னொளிக்கற்றையில் அவருடைய சோடி நாய்கள் உள்ளே வருவது தெரிந்தது.

பாதி நனைந்திருந்த அந்த நாய்கள் இரண்டு தம் உறக்கத்தை மறுபடியும் தொடர்ந்து கொண்டிருந்தன.

‘சாந் தீ!’

‘உங்களுக்கு என்ன இழவே பிடிச்சிட்டுது. அறுபது செண்டதும் அறளை குறைவில்லை. அட சிவனே! ஒரு மூன்டு கிழமை எவ்வளவு நிம்மதியாக இருந்தன். இண்டையிலிருந்து பழையபடி சனியன் காலைச் சுத்தியிட்டுது!’

வார்த்தைகளை வரம்பிக்கக் கூறி விட்டு சுந்தரலிங்கத்தின் அருகில் வந்து ‘என்னணை? என்றாள் சாந்தி.

‘சே! சாந்தி என்ற காந்தியப் பெயருக்கேற்றாற் போல் என்னை அறிந்து தெளிந்து காதலித்து மணந்து ஒரு சாந்தியைத் தந்த என் சாந்தியும் மாறுவாளா?’

‘நோய் வந்தால் அதைத் தொடர்ந்து துர்நெடி வந்தால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாதா? ‘எப்படி முடியும்? நீரழிவின் கொடூரத்தை அந்த அசிங்கமான மணத்தை என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்வைலயே சாந்தியால் எப்படி முடியும்?’

சாவிலும் வாழ்விலும், நினைவிலும் கனவிலும், செயலிலும் அனைத்திலுமே நாம் ஒன்று என்ற அந்தக் காதல் வேகமெல்லாம் என்ன ஆயின?

நினைவுகளின் நெகிழ்ச்சியில் தவித்த அவர் திமரென்று சிரித்தார். வெளியே கேட்டுக் கொண்டிருந்த முகிலின் இடியையே நகைப்பதாக இருந்தது அந்தச் சிரிப்பு.

‘இப்பிடிச் சத்தம் போட மனுசனாலை ஏலுது. தானே எழும்பிப் போய் அதிலை தண்ணி வைச்சு காலைக் கழுவ முடியாது.’

அவருக்கு அணித்தாக உறங்குவதற்கு அவரின் காற்புண்ணில் இருந்து எழும் துர் நாற்றத்தைச் சகிக்கின்ற சக்தியற்றே அவள் கூடத்துக்கு அப்பால் உள்ள ஓர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவரின் அலறல்கள் வேறு காதைக் குடையும். இவற்றை இப்பொழுது பொருட்படுத்தாதவளாக அருகில் நின்ற சாந்தி சொன்னாள்.

‘இந்தா! உங்கடை பொன் (புண் என்று அர்த்தம்) னை வைச்சு இஞ்சை கட்டி அழாதையுங்க. வேணுமெண்டால் பேந்தும் ஆஸ்பத்திரிக்கப் போங்கள். அவங்கள் துண்டு வெட்டினா வேறை செல்லச் சந்நிதிகாணப் போய்க் கிடவுங்கள். என்னுடைய கண்ணிலை மட்டும் முழிக்காதீங்க……..’

சாந்தி!’ அழைத்து அவர் மெல்ல சிரித்தார். அதன் மூலமேனும் தன் வேதனையை அகற்ற அந்த இதயம் முனைந்து கொண்டிருந்தது. ‘உனக்கு நினைவிருக்கா…’ என்றபடி நிறுத்தினார் சுந்திரலிங்கம்.

‘எது?’ என்ற கேட்பது போல் அவரைப் பார்த்தபடி ஐஸில் உறையவிட்ட மீன் ஆனாள் சாந்தி. “உன்னை நான் நேசிக்கிறேன் என்ற செய்தி வீட்டாருக்கு எட்டியதும் என்னை வெட்டிப் போடுவது போல வதைத்தார்களே. அந்த வதை பொறுக்காமல் நான் ஹோட்டல்களில் தங்கி பள்ளிக்கூடமே தஞ்சம் எண்டு இருந்த காலம்…உனக்கு நினைவிருக்கிறதோ சாந்தீ!”

அவள் சமைந்து விட்டாள்.

‘அப்பொழுது எனக்கு இருவத்தைஞ்சு வயசு….இப்ப…’ என்று நிறுத்திவிட்டு மறுபடியும் சிரித்தார். சாந்தியின் குரல் கண்கள் சடாரென்று கீழே வீழ்ந்து காற்புண்களையும் நமைந்திருந்த கைகளையும் பார்த்தன. அவர் சொன்னார்…’ இப்ப எனக்கு வயசு அறுபத்தைஞ்சு ஹஹ்ஹ ஹா…நாற்பது வருசம் என்னுடைய நாயகியோடை வாழ்ந்திட்டன். இனி…நடுத்தெருவிலை…நாய்…’

‘அப்ப ஏன் இஞ்சை கிடக்கிறியள்?’ என்ற சாந்தியின் குரல் கேட்டு அவருடைய உடல் நடுங்கத்தான் செய்தது.

‘சாந்தி’ என்னால் எத்தனையோ பிள்ளையள் நல்லா இருக்குதுகள். நான் பெற்றதுக்கள் கூட என்னுடைய வார்த்தையை வேதமாகக் கொண்டு எப்பிடியோ வாழ்க்கையை ஓட்டுக்கள். ஆனால் …….’

ஆனால் எனது இந்தத் தோற்றத்தில், குணத்தில், பேச்சில் அன்று மயங்கி என்னையும் என் குடும்பத்தையும் பிரிச்சு எடுத்து என்னையே கல்யாணமும் செய்து கொண்ட நீ , இப்ப மாறியிட்டியே…… இது தான் வேதனையாயிருக்கு.’

‘சமமாகத் தன்னோடை படிச்சவளை அல்லது வேலை செய்தவளைக் கல்யாணஞ் செய்யிறது ஒரு விதத்தில் ஆபத்தானது. உன்னை நான் காதலிக்க நேர்ந்தது ஒரு விபத்தினாலே தான். ஆனால் ஆபத்தா முடியுமெண்டு நான் கனவிலும் நினைக்கவில்லை.’

‘மனித வாழ்க்கையே நினைக்கிறதை நடப்பாகக் கொண்டதல்ல. அது எனக்கு நல்லாத் தெரியும். இளமைப் பருவத்தில் எதிர் காலத்தின் இன்ப நினைவுகளைக் கனவு கண்டேன். முதுமைக் காலத்தில் கடந்த காலத்தில் நடந்து முடிந்த சில இன்ப நிகழ்ச்சிகளை மீட்டி, மீட்டிப் பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டேன். இதெல்லாம் மனிசனுக்கே பொதுவானதுதான். இது தவறுமல்ல, ஏனேண்டால் மனிதனுடைய வாழ்க்கையே சற்று…’ நிறுத்தினார் சுந்தரலிங்கம்.

சாந்தியும் ஒரு காலத்தில் ஆசிரியையாகப் பணிபுரிந்தவள். அந்நாட்களிலும் இந்நாட்களிலும் தன் சிந்தையில் கருத்துக்களைத் தன் அன்பிலிருந்து விடுபட்டு பந்தம் என்ற போர்வையில் மட்டும் முடங்கிக் கிடக்கும் கணவன் சொல்லும் பொழுது, சற்று கவனத்தைத் திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தாள். தனது நித்திரை அந்த அந்நிய இரவில் குழம்புகின்றதே என்பது தான் அவளுக்கு இப்போதிருந்த வருத்தம்.

சுந்தரலிங்கம் தனது வேதனையை மறப்பதற்காக மேலும், மேலும் பேசிக்கொண்டே போனார்.

அவருடைய குரலில் தள தளப்பும், வெளியே பெய்து கொண்டிருற்த மழையின் வெல வெலப்பும் சேர்ந்து அவரின் உடற் பலஹீனத்தைப் பொட்டிட்டன. ஆனால் சுந்தரலிங்கம் இன்னம் மன உறுதியானவர் என்பது அவருடைய வார்த்தைகளில் தெளிவாகத் தெரிந்தது.

‘சாந்தி …. ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தேவைப்படுவது உடம்பிலே ஏற்படுகிற பசிக்கு எண்டும், அதுதான் காமம் எண்ட கோட்டைக்கு நுழைய முன் உள்ள நடைபாதையான காதலைத் தோற்றுவிக்குது எண்டும் பலபேர் அபிப்பிராயப்படுகிறார்கள். அது தவறு. அந்திய காலங்களில் ஒருத்தருக்கொருதர் துணையாக இருப்பம் எண்டு உறுதி பூண்டு ஏற்படுகித்துகிற பந்தம் தான் கல்யாணம். ஒருத்தனுக்கு கடைசி காலத்திலை ஏதாச்சும் வேணுமெண்டா அவன் மனைவி அவனுக்கு எட்டு, பத்து வயசு இளையவளாயிருக்க வேணும், அல்லது சம வயசு மனைவி எண்டால் அதிகம் பிள்ளைகள் பெற வேண்டும். இந்த இரண்டுமில்லாத என் போல ஆக்களுக்கு……….”

இடையில் தன் பேச்சை நிறுத்தி விட்டுச் சிரித்தார் சுந்தரலிங்கம். அவரின் அந்த வழமையான வேதனைச் சிரிப்பு தன் சிறுமையைத்தானே எள்ளி நகையாடும் பான்மையில் தெரிந்தது.

‘தன்மானம் ஒண்டாவது பிறக்க வேணும்……. அப்பத்தான் மனைவி எண்டவள் மாறாக நடக்க ஆரம்பித்ததும் கூறாமல் தன்னையே கொலை செய்து கொண்டு நிம்மதியாகலாம். உன்னை அடிச்சு உதைச்சு வருத்தப்படுத்த எனக்கு இதயம் இடம் தராது. நான் அப்படிச் செய்யவுமில்லை . செய்யப் போவதுமில்லை . என் வேதனையை நானே சுமக்கிறேன்………. நானே சுமக்கிறேன்;’

சுந்தரலிங்கத்தின் கால்களிலிருந்து வலி பிறக்கிறது என்பதை அவரது முகத்தின் கோணங்கள் முத்திரையிட்டுக் காட்டின. அந்தத் துன்பச் சாய்வின் ஓட்டத்தைச் சமாளித்துத் திரும்பியவர் தன் வார்த்தைகளை அவள் விடும் மூச்சாக மதித்தபடி முன்பாகவுள்ள சாய்மனையில் உறங்கி குறட்டை விடுவதைக் கண்டதும் உண்மையிலே பொறுக்க முடியாதவரானார்.

உடலில் ஏற்படும் வலியைப் போக்க மருந்து வகையைக் கண்டு பிடித்த மனிதன், மனவலிக்கு எதையுமே காணமுடியவில்லையே! அவரின் இடது கை நெஞ்சை அழுத்தியதிலிருந்து இது தெரிந்தது.

சுந்தரலிங்கம் பின் புறமாகக் கழுத்தைப் பெயர்த்துப் பார்த்தார். கண்களின் கோடியில் இனம்புரியாத கசிவை ஏற்படுத்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த தன் கடுவனுக்குப் பக்கத்தில் துணையாகக் கிடந்த அவருடைய பெட்டை நாய் அவரைப் பார்ப்பது தெரிந்தது.

‘வள்ளி’ என்று மெல்ல அழைத்தார் சுந்தரலிங்கம். வாலைக்குகை எழுந்து வந்தது வள்ளி. அவருடைய தோற்பட்டையை நசுக்கிவிடாமல் பாபியபடி நின்ற வள்ளியின் தலையை மெல்ல வருடி விட்டபடி அமைதியானார் கந்தரலிங்கம்.

‘நாய்கள்’

அவரது அதரங்களின் முணுமுணுப்பில் இருந்த சுமைகள் பீறிப் படி வெளியே பொரிந்தன.

வள்ளி தன் பக்கத்தில் இல்லை என்பதை உணர்ந்துவிட்ட கடுவன் சுந்தரலிங்கமும் வள்ளியும் இருந்த கூடத்துப் பக்கமாகச் சோம்பியபடி நடந்து வந்தது.

நேற்று எழுதின காயிதம் சாந்தினிக்குக் கிடைச்சிருக்கும். சரோஜினிதான் கொழும்பிலை இருக்கிறாளே. அவள் தூரத்துத் தண்ணீர். சாந்தினிக்கு இண்டைக்குப் பள்ளிக் கூடமில்லை. கட்டாயம் வருவாள். என்னுடைய மூத்த பெம்பிளைப் பிள்ளை எண்டாலும் இரக்கமுள்ளது. தாயைப் போல நடிக்க மாட்டுது.

சுந்தரலிங்கம் கனவில் திளைத்துக் கொண்டிருந்தார்.

‘சாந்தினி வந்ததும் வராததுமாக என்னுடைய ஈனத்தைப் பார்த்துக் கலங்குவாள். நாங்கள் எல்லாம் மலைபோல இருக்கிற போது, ஏன் நீங்கள் கலங்க வேண்டும்? எண்டு கேட்டு எனக்குப் பக்கத்தில் இருந்து கால்களைச் சுடுதண்ணியாலை கழுவியபடி அழுவாள். நான் அதைத் தேத்துவேன்.’

‘உலகத்திலை ஒண்டு இல்லாட்டி ஒண்டை எண்டாலும் ஆண்டவன் கொடுத்திருக்கிறான்…….’

‘ஆண் நிழலிலை நிண்டு போ! பெண் நிழலிலை இருந்து போ எண்டு அறியாமலே சொல்லுறவங்கள். என்னுடைய சாந்தினி எவ்வளவு ஆறுதலாய் இருப்பாள். இண்டைக்கும் நாளைக்கும் நான் நாளையண்டைக்குப் பேந்தும் ஆஸ்பத்திரிலை போய்க்கிடப்பன்.’

நினைவுச் சுழல்களின் எற்றலில் ஒல்லி போன்று அசைந்த சுந்தரலிங்கம் வெளியே கார்ச் சத்தம் கேட்டதும் தலையை எம்பிப் பார்த்தார். தனது வீட்டுக் கதவு முன்பு அது வந்து நின்றதும், அவருடைய உள்ளம் சிறிது கனிந்தது. எதிர்பார்த்திருக்கும் சேவையை நிறைவேற்றித் தனக்கு ஆறுதலாக இருக்கத்தான் ஆசைக்குப் பெற்ற மகளே வருகிறாள் என்று ஒரு முறை எண்ணியதும் உடலே பூரித்தது. மனித மனத்தின் கண்ணாடியை சுந்தரலிங்கம் பிரதிபலித்தார். தனக்கு இயைந்ததையும் உகந்ததையும் மட்டுமே உவக்கின்ற பலவீனம் மனிதனுக்குச் சொத்தான ஒன்றா? சுந்தரலிங்கத்தின் மகிழ்ச்சி ஆமென்று கூறியது.

அங்கு வந்திருந்த காரிலிருந்து சாந்தினி இறங்கினாள். கைகள் நிறைந்த முட்டாசிப் பொட்டலங்களுடன் மெல்ல நடந்து வந்த அவள், வீட்டின் முன் கூடத்தில் அசையாது கிடந்த சுந்தரலிங்கத்தைக் கவனித்தாளோ தெரியாது. பின்னர் அவருக்குத்தானே சேவை செய்யப் போகிறேன் என்ற நினைப்பில் தாயைத் தேடிய வண்ணம் உள்ளறையை நோக்கி நடந்திருக்க வேண்டும்.

‘அம்மா!’ என்ற சாந்தினியின் குரல் கேட்டு ஒப்பாரியுடன் பதில் கொடுத்தாள் சாந்தி வந்திட்டியாம்மா சாந்தினி! என்னாலை இஞ்சை ஒரு நிமிஷங்கூட இருக்க முடியாது. அறுவது செண்டிட்டால் அறளை எண்டு சொன்னதைக் கேள்விப்பட்டிருக்கிறான். இந்த மனுஷனோடை என்னாலை அண்டலிக்கேலாது. நான் உயிரோடை இருக்க வேண்டுமென்றால் என்னைக் கூட்டிக் கொண்டு போயிடு உம் …… சாந்தி அழுது வடித்தாள்.

சுந்தரலிங்கம் இந்த நிகழ்ச்சியுடன் ஒரு முறை செத்துப் பிழைத்தவரானார். மனைவியும் மகளும் சந்தித்த காட்சியும், சொல்லிய வார்த்தைகளும் அவரைக் குருடாக்கின. உள்ளம் மேலும் ஊனப்பட்டது. இந்த மனுஷனோடை அண்டலிக்க ஏலாது!’ என்ற சாந்தியின் வார்த்தைகள் அவரைக் குழப்பின. கண்களில் என்றுமில்லாத வேதனையில் கீறல்களும், அவற்றால் கசிந்து நீர்மையும் தெளிவாகத் தெரிந்தன. அவர் தான் கிடந்த அந்தச் சாய்மனைக் கட்டிலுடன் மறுபடியும் சிலையானார்.

சாந்தினி சொன்னாள்: அம்மா! உங்களுக்கு ஒண்டு எண்டால் நாங்கள் அதைப் பார்த்தண்டு, சும்மா இருப்பமா? அழாதையுங்கள் ! நான் இஞ்சை நிக்கிறதுக்கு வரயில்லை உடனே உங்களையும் கூட்டிக் கொண்டு போறன். அவரட்டையும் இஞ்சை நடக்கிற அநியாயத்தைப் பற்றிச் சொன்னனான். நீங்கள் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வாருங்கள் அம்மா? நாங்கள் போவம்!

‘சாந்தினி!’

சுந்தரலிங்கம் கிணற்றுள் விழுந்த அவலத்துடன் அழைத்தார்.

‘வாறான்..!’ என்ற சாந்தினியின் குரல் வந்த மூன்று நிமிடங்களின் பின் அவள் அவர் முன் வந்து, இடுப்பில் ஒரு கையிட்டு நின்றாள்.

‘அம்மா சாந்தினி..நீ உங்க அம்மாவை கூட்டிக்கொண்டு போறியா அம்மா ? நான் தண்ணி வென்னி குடிச்சு இரண்டு நாளாச்சுது. உனக்குப் பிரியம் எண்டால் தண்ணி வைச்சுத் தந்திட்டுப் போ! நான் உங்களைத் தடுக்கயில்லை. உங்களுக்குப் பாரமாகவும் இருக்க விரும்பயில்லை. என்னாலை நடக்க ஏலாது. அதாலைதான் கேக்கிறான். எப்பிடி யெண்டாலும் ஆஸ்பத்திரிக்காவது போய் அங்கை கிடக்கப் பார்க்கிறன்?..

அவர் கண்களில் நீர் வழிந்தது.

சாந்தினி உள்ளே சென்று அங்கிருந்த சுடுநீர்ப் போத்தலை எடுத்தபடி வெளியே சென்றாள். சிறிது நேரத்தின் பின் திரும்பி வந்து, ‘டிரைவரை அனுப்பியிருக்கிறேன் அப்பா : இப்ப தேத்தண்ணி வாங்கியந்திடுவான்’ என்றாள்.

‘சரியம்மா’ என்றார் சுந்தரலிங்கம். அவருக்கு வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது. அதைத் தன் மகள் பார்த்து விட கூடாதே என்ற நினைப்பில் மேல் துண்டால் மறைத்து ஒருவாறு அடக்கினார்.

மானிடர் தொடர்பே ஓர் அர்த்தமில்லாத சேர்க்கைதானே? பெற்று வளர்த்ததும் பின்னர் பெயருடனும் புகழுடனும் வாழவைத்ததும் செல்லாக் காசுச் சம்பவங்களா? மரத்துக்கு இட்ட நீர் ஏதோ ஒரு வழியால் கைம்மாறாகக் கிடைக்கும். ஆனால் மனிதனுக்கு இட்டவை யாவும் அன்பு என்ற சொல்லாக வேனும் கிடைக்கமாட்டாவா? சுந்தரலிங்கம் குமுறினார். சாந்தி புறப்பட்டுவிட்டாள் . சாந்தினி அவளை வழி நடத்தி வந்தாள்.

‘அப்பா!’ அம்மா என்னோடை வந்து இருக்கப் போறாவாம். நான் கூட்டிக் கொண்டு போறன். கொஞ்ச நாளைக்குத்தான். நீங்கள் எப்பிடியும் குணமாகியிடுவீங்கள். அடிக்கடி கடிதம் எழுதங்கள் அப்பா!’

அவள் சொல்லி முடித்தாள். சுந்தரலிங்கம் அவளை ஒரேயொரு முறை பார்த்தபடி சரியென்று தலையசைத்தார். கார்ச் சாரதி தேநீருடன் அங்கு வந்தான். அதனை அவனிடமிருந்த பெற்று. அவர் அருகில் வைத்தபடி ‘நான் வாறன் அப்பா’ என்றாள் சாந்தினி. அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.

ஓடமுடியாமற் பழுதுபட்டதும் தன்னை குப்பை ஓடையில் விட்டெறிவார்கள் என்பதை உணரச் சக்தியற்ற அந்த மோட்டார் வண்டி, சுந்தரவிங்கத்தின் செவிகளில் உரமாக ஒருமுறை உறுமியடித்துவிட்டு, ஓடி மறைந்தது.

சுந்தரலிங்கத்துக்கு அவர்கள் பின்னால் செல்ல வேண்டும் – அவர்கள் போவதையே பார்க்க வேண்டும் என்று ஆசை தோன்றியது. சாய்மனையை விட்டு எழுந்தார்.

தோன்றுகின்ற ஒவ்வோர் ஆசைக்கும் ஈடு கொடுத்து நிறைவேற்ற மனிதன் முற்பட்டதனால் தான் மீளாத நட்டமும் மாளாத சோகமும் அவனை அண்டுகின்றன போலும். சுந்தரலிங்கம் எழுந்ததும் எழாததுமாக நிலைகெட்டுவிழுந்தார்.

சீழ் வடிந்து. அழுக்கேறி வலுவிழந்து போன அவருடைய கால்கள் நிலத்தின் உரைபட்டு இரத்ததைப் பீறிடச் செய்தன. வேதனையால் துடித்தார் அவர்.

ஒன்றும் புரியாதவராக சுடுநீர்ப் போத்தலில் இருந்த தேநீரில் மேல் துண்டைத் தோய்த்து கால்களை ஒற்றினார். ஒரு சுகம் தென்பட்டது. பீறிட்ட இரத்தம் வெந்நீரில் மேலும் பெருகத் தொடங்கியது. மயக்கமுறும் நிலை. சாய்மனயின் கால்களை ஒரு கையாலும் தன்காலொன்றை மறுகையாலும் பற்றியபடி கீழே சாய்ந்தார் சுந்தரலிங்கம்.

எங்கோ ஒரு மூலையில் கிடந்து நடப்பவற்றையெல்லாம் கடவுள் போல் பார்த்திருந்த வள்ளியும் கடுவனும் அவரை நெருங்கி வந்தன. கடுவன் அவரை மோந்தது. வள்ளி அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் வாயில் வீழ்நீர் பெய்து கொண்டிருந்தது.

வள்ளி மெதுவாக வந்து சுந்தரலிங்கத்தின் கால்களை நக்கத் தொடங்கியது அந்தக் கால்களில் ஏறியிருந்த மண்ணையும் தூசியையும் அகற்றுவது போல தொடர்ந்தும் நக்கியது. கடுவன் வள்ளி செய்கின்றாற் போலவே தானும் மற்றக் காலை மெல்ல மெல்ல நக்கியது.

சுந்தரலிங்கத்துக்கு இருந்த ஆசையெல்லாம் சாந்தினியும் சாந்தியும் போகின்ற காட்சியைப் பார்க்க வேண்டும் என்பது தான். தன்மீது அவர்கள் கொண்ட காதலும் பாசமும் பக்தியும் இருந்த நிலையை எண்ணியபடி அவர் அவர்கள் பின்பே சென்றுவிட்டார். அவருடனேயே அவருடைய காலத்துப் பசுமை நிறைந்த நினைவுகளும் காய்ந்துவிட்டன.

– அங்கையன் கதைகள் (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு: 2000, அங்கையன் பதிப்பகம், கொழும்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *