ஓவியம் உறங்குகின்றது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 7,116 
 
 

“இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக் காலத்தில் ஓவியங்கள் வரையப்பட்டன” என்ற முதலாம் பக்கத்தில் உள்ள மூன்றாம் பந்தியை வசித்து கொண்டிருக்கும் போது அவனின் தந்தையின் இருமல் சத்தம் கேட்டு புத்தகத்தை மூடி தலையணைக்கு கீழே ஒழித்துவிட்டான் நீயானாகி.

அவனின் பெயர் போன்று அவனும் வித்தியாசமானவன் ஓவியம் வரைதலில் அசாத்திய திறமை படைத்தவன். ஆனால் என்னவோ அவனின் ஓவியங்களை யாரும் ஏறடுத்தும் பார்ப்பதில்லை பார்த்தாலும் பொறாமை வழியும் நாவுகள் கடும் சொற்களை கக்கும். நீயானாகியை இந்த பிரபஞ்சத்திலே வாழ்த்த ஒரு ஜீவன் இருக்குமேயானால் அவன் உயிர் தோழி ஒருத்தி உண்டு அவள் மாத்திரமேதான். அவளும் நீயானாகி போன்று ஓவிய பித்து பிடித்தவள். நீயானாகியின் ஓவியங்களுக்கு கிடைக்கும் மனதை நொறுக்கும் விமர்சனங்களை எண்ணி நீயனகியோடு சேர்ந்து அங்கலாய்ப்பாள்.

ஆனால் அவையோ நீயானாகிக்கு பழகிப்போன பழங்கஞ்சி. நீயனாகியும் அவன் உயிர் தோழியும் ஓவிங்கள் பற்றி அதிகம் பேசி கொள்வார்கள் அவன் தோழி “லியோனார்டோ டா வின்சி” யின் ஓவிங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அதிலும் மோனலிசா ஓவியத்தை விட” இறுதி இராப்போசன விருந்து” தன்னை மிகவும் கவர்ந்தது எனவும் அதில் உட் பொதிந்துள்ள கதை நெஞ்சத்தை பிழிவதாகவும் சொல்லிக்கொள்வாள். ஆனால் நீயானாகிக்க்கோ பிக்காசோவின் ஓவியங்கள் என்றால் பித்து. பிக்காசோ வின் ஓவியங்களில் வயதான கிட்டார் கலைஞர் ஒருவரை சித்தரிக்கும் ஓவியத்தை பார்த்து பிக்காசோவின் தத்ரூபமான வரைத்தலை கண்டு தானும் இதேமாதிரியான ஓவியம் போல் நானும் வரைய வேண்டும் என எண்ணம் கொள்வான். பொது வெளி போன்று அவன்வீட்டு சூழலும் அவன் திறமைக்கு தடையாக இருந்தது. அவன் தந்தைக்கு அவன் ஓவியம் மீது காட்டும் நாட்டம் இம்மியளவும் விருப்பம் இல்லை .

ஒருமுறை நீயானாகி ஓவியம் வரைதலின் நுணுக்கங்கள் பற்றி கூறும் நூல் ஒன்றை வாங்கி வருமாறு தந்தையிடம் வேண்ட தந்தையோ கணித பாடம் சம்பந்தப்பட்ட புத்தகத்தை வாங்கி வந்து நீட்ட ஏமாற்றத்துடன் புத்தகத்தை வாங்கி மேசை மீது போட்டு விட்டு பெருமூச்செறிந்தான். ஒரு முறை நீயானாகி அந்தப்புரத்து அழகிகள் குழுமி நிற்க்கும் ஓவியம் ஒன்றை வரைந்து பள்ளிக்கு எடுத்து சென்று நண்பர்களிடம் காட்டினான். அவனை ஏதோ காமுகனை பார்ப்பது போன்றும் செய்ய தகாத தவறொன்றை செய்த பாவியாக பார்த்தனர். நீயானாகியோ அசுத்தம் நிறைந்த கண்களையுடையர் மத்தியில் வாழ்தல் சாபம் என்று மனதை தேற்றிக் கொண்டான்.

ஓவியக் கலையுலகத்திட்கு தன் ஓவியங்களை கொண்டு சேர்க்க முடியாத ஆற்றாமையை எண்ணி அழுவான். இராக்கால கனாக்கள் தான் அவன் ஆசைகள் நிறைவேறும் உலகமாக காணப்பட்டது.

இன்று நள்ளிரவிலும் நீயானாகி கனா கண்டு கொண்டிருக்கிறான் …..

ஓவியக் கண்காட்சி ஒன்றில் நீயானாகி வரைந்த ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது அவ் ஓவியங்கள் பற்றி பார்வையாளர்களுக்கு நீயானாகி விளங்கப்படுத்தி கொண்டிருக்கிறான் …

மறுகணம் ..

தட தட வென கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது

வெளியிலே அவன் தந்தை ..

“அதிகாலை நேரமாகிவிட்டது இன்னும் என்ன தூக்கம் , எழும்பு தூங்கின போதும் எழும்பி படி ” தந்தையின் கட்டளை தொனி உச்சஸ்தாயில் ஒலிக்கிறது …

என்ன செய்வான் நீயானாகி…

இரவு வரைந்த ஓவியத்தை யாருக்கும் தெரியாமல் தான் தூங்கிய பஞ்சு மெத்தைக்கு கீழே பதுக்கிவிட்டு எழும்பி செல்கிறான் நீயானாகி படிப்பதட்காக …

நீயானாகியின் ஓவியங்கள் பஞ்சு மெத்தைக்கு கீழே நீண்ட துயில் கொள்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *